Monday, March 29, 2004

நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் - 1

For Picture version of this post (split into two parts) Part 1a -- Part 1b

பஜனை மடம் - எனக்கு போதி மரத்துக்கும் மேலே. விளையாட்டுப் போக்காய் என்னையும் அறியாமல் கற்றுக் கொண்டது அதிகம். இந்தப் பதிவில் கற்றுக்கொண்டதை விட "விளையாட்டுப் போக்கில்" கவனம் செலுத்தி இருக்கிறேன். பஞ்சு மிட்டாய்க்கு ஆசையாய் ஏங்கும் பையன் போல மார்கழியில் ஊருக்குப் போக மாட்டேனா என்று இன்னமும் மனதின் ஓரத்தில் ஒரு ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.

பஜனை மடம் அறிமுகமான போது பத்து வயது. நானும் கச்சேரிக்கு போகிறேன்ங்கிற மாதிரி தான் போக ஆரம்பித்தேன். தெருவில் அது ஒரு கலாச்சாரம். தெருவில் எந்த வீட்டில் எந்த சுண்டல் நன்றாகச் செய்வார்கள் என்று பையன்கள் காரசாரமாக விவாதிக்கும் போது நாமும் கலந்து கொள்ளவேண்டுமே என்று போக ஆரம்பித்தேன்.

பஜனை மடத்திற்கு மிக அருகில் வீடு. அங்கிருந்து பஜனை கோஷ்டி காலை 5 மணிக்கெல்லாம் கிளம்பி ஊரெல்லாம் சுற்றி எங்கள் வீடு வழியாக பஜனை மடத்திற்கு 6:30 மணிக்கு சென்றடையும். பிறகு அங்கு அரை மணி நேரம். 7 மணிக்கு முடியும்.

முதலில் கொஞ்ச நாள் காலையில் எழுந்திருக்க கஷ்டமாயிருந்தது. ரொம்பப் பழக்கம் இல்லாததால் சுண்டல் குடுக்க போகும் போது கரெக்டாக போனால் என்ன சொல்வார்களோ என்று சீக்கிரமே போய் ஜோதியில் ஐக்கியமாகி விடுவேன்.

மிளகு காரத்துடன் சூடாக நெய் மணத்துடன் வெண்பொங்கல்... ஏலக்காய், பச்சை கற்பூரம், முந்திரி பருப்பு,உலர்ந்த திராட்சை போட்டு நெய் ஒழுகக் கை வைக்க முடியாத சூட்டுடன் சர்கரைப் பொங்கல்... கடுகு மிளகாய் பழம் தாளித்து பெருங்காய மணத்துடன் சூடான சுண்டல்...சும்மா சொல்லக் கூடாது, மார்கழி பனியில் சூடாய் அந்த பிரசாதமெல்லாம் திவ்யமாக இருக்கும்.

ப்ரொபேஷன் பீரியட் மாதிரி சில சீனியர் பையன்கள் ராகிங் வேறு நடக்கும். அவர்கள் வீட்டைக் கடக்கும் போது தூக்கக் கலக்கத்தோடு வந்து கையில் பாத்திரத்தை அடுக்குவார்கள்.

"டேய் ...ஒரு வேளை வர லேட்டாயிடுச்சுனா சுண்டல கரெக்டா வாங்கி வை..வந்து கலெக்ட் பண்ணிக்கிறேன்"

சில பேர் சொல்லிட்டு வரவே மாட்டார்கள். டோர் டெலிவரி வேறு செய்ய வேண்டும்.

சில பேர் ட்ரிங்னாமென்ட்ரி மாதிரி கொஞ்சம் குழப்புவார்கள்.

"டேய் சுண்டல் குடுத்தாங்கன்னா இதுல வாங்கு, சர்கரைப் பொங்கல் குடுத்தா இதுல...ரெண்டும் குடுத்தா இதுல சுண்டல் இதுல சர்கரைப் பொங்கல்"

ஒரு நாள் அதிசயமாக சுண்டல், சர்கரைப் பொங்கலுடன் பஞ்சாமிர்தம் வேறு குடுத்தார்கள். இரண்டு பாத்திரம் குடுத்தவர்களுக்கு சர்கரைப் பொங்கலும் பஞ்சாமிர்தமும் ஒரே பாத்திரத்தில் வாங்கினேன்.

"ஏன்டா பிரக்ஸ்பதி ரெண்டையும் குழப்பிட்டையேடா...ஒரு ஆல இலைய நடுவில போட தெரியாது?" - பால பாடம்.

"ஏண்டா அவன் குடுக்குற தக்னூண்டு பொங்கலுக்கு இவ்வளவு பெரிய பாத்திரம் எதுக்குடா" -கொஞ்சம் தைரியம் வந்த காலத்தில் கேள்வி கேட்டேன்.

"டேய் ...அவனே தக்னூண்டு தான்டா குடுப்பான்..ஆனா பாத்திரம் பெரிசா இருந்ததுன்னு வெச்சுக்க...இது ரொம்ப கொஞ்சமா தெரியும் ..சோ அவனே மனசு கேக்காம கூட கொஞ்சம் போடுவான்..." - உண்மையிலேயே ஒர்க் அவுட் ஆகிற தொழில் ரகசியம்.

கொஞ்சம் ஆள் வளர வளர கவனம் வேறு திசையில் போக ஆரம்பித்தது. மொத்தம் பத்து செப்பு ஜால்ராக்கள் தான் வைத்து இருப்பார்கள். தாளம் தெரிந்தவர்கள் மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதி. ஜால்ராக்கள் வைத்து இருப்பவர்கள் எல்லாரும் விஷயம் தெரிந்தவர்கள் மாதிரி பந்தா விட்டுக்கொள்வார்கள்.

"இதக் கொஞ்சம் பிடி ..வேஷ்டி அவுந்துருத்து கட்டிக்கிறேன்.." - ஜால்ரா ஸ்டாண்ட் மாதிரி சில மாமாக்கள் உபயோகப்படுத்திக் கொள்வார்கள்.

இருந்தாலும் சந்துல சிந்து பாடிவிடுவேன்..."ஜிங்.."ன்று தப்புத் தாளமாய் எடாகூடமாய் தட்டிவிடுவேன். அவ்வளவு தான் ஸ்டாண்டு உத்தியோகமும் கொஞ்ச நாள் பறி போகும். இதென்னமோ கலெக்டர் உத்தியோகம் மாதிரி ஆலாய் பரப்பான்கள் பையன்கள்.

ட்ராயரிலிருந்து வேஷ்டி கட்டிக் கொள்கிற வயது வந்தவுடன் தான் போனால் போகிறதென்று அவசரத்துக்கு ஒதுங்கும் மாமாக்கள் ஜால்ராவை குடுப்பார்கள். கோலம் போடுகிற பிகருங்க வீட்டில் மட்டும் கொஞ்சம் பலமாகத் தட்டுவேன்.

வயதான மாமாக்கள்லாம் கொஞ்ச நாளில் "ஊரெல்லாம் சுத்தி வர முடியாது...நாங்க பஜனை மடத்திற்கு நேராக வந்துடறோம்..நீங்க இளவட்டங்கள் ஊரெல்லாம் சுத்தி ஜமாய்ங்கோ.." என்று விபரீதம் புரியாமல் வழிவிட்டார்கள்.

இருந்தாலும் சில பெரியவர்கள் விடாமல் வருவார்கள். முழுக்க முழுக்க இளவட்டங்கள் மட்டுமே இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதெல்லாம் செய்தோம்.

சில சமயம் அவர்கள் ஈடு கொடுக்க முடியாத படி வேகமாய் ஓட்டமும் நடையுமாய் போவோம். கடைசியில் ஒன்னு ரெண்டு பேர் மட்டும் மிஞ்சினார்கள்.

"ராதிகா மனோகரா மதனகோபாலா...
தீன வஸ்தலா ஹே ராஜகோபாலா...!!"

ராதிகா, வஸ்தலா மாமி, ராஜகோபாலன் மாமா மூன்று பேர் வீட்டின் முன்பும் முறை வைத்துப் பாடுவோம். "விஸ்வநாதன் வேலை வேண்டும்" ங்கிற ரேஞ்சுக்கு மக்களிடமிருந்து தெம்பாக சத்தம் வரும். சின்னச் சின்ன சில்மிஷங்கள், ஆனால் வரம்பு மீற மாட்டோம்.

மிருதங்கம் வாசிக்க ஆரம்பித்தவுடன்...பெரிய லெவலுக்கு மரியாதை கிடைக்க ஆரம்பித்தது. முதலில் ஆர்வத்துடன் தோளில் கட்டிக் கொண்டு எல்லோரும் பார்க ஊர்வலம் வந்தேன்.

தோள் பட்டை பிஞ்சு வலி எடுத்து ரெண்டு அமிர்தாஞ்சன் பாட்டில் காலி. கூடுதலாய் கொஞ்சம் பொங்கல் கொடுக்கிறார்கள் என்று இந்தக் கூத்தெல்லாம் அடிக்க முடியாதென்று திரும்பவும் ஜால்ரா மாஸ்டரானேன்.

-- தொடரும்

2 comments:

Aadhan Dental Care said...

http://www.flickr.com/photos/rajanna/5341842509/

Erode Nagaraj... said...

மிருதங்கம் யார் சொல்லிக் கொடுத்தார்கள்?

Post a Comment

Related Posts