சமூகத்தில் பெண்களுக்கு ஓலை கட்டி சடங்கு செய்வது போல் இல்லாமல், மீசை மட்டுமே ஆணகள் வயசுக்கு வந்துவிட்டதற்கான அறிகுறியாய் இருப்பது பெரிய இம்சை. "ம்ம்ம்..அரும்பு மீசை.. என்னடா வயசுக்கு வந்தாச்சு போல " என்று பக்கத்து வீட்டு அக்கா நண்பனின் கன்னத்தைக் செல்லமாய் கிள்ளும் போது, எனக்கு மட்டும் ஏன் இன்னும் பாலிஷ் போட்ட மொசைக் மாதிரி மழுமழுவென்று இருக்கு என்று சுரண்டிப் பார்த்திருகிறேன். "கட்டிங் மட்டுமா, இல்ல ஷேவிங்குமா தம்பி" என்று நண்பனை மட்டும் நாவிதர் கேட்கும் போது, தினத்தந்திக்குப் பின்னால் "லா லா லா" என்று விக்ரமன் பட நாயகி மாதிரி உருகியிருக்கிறேன். "இங்க பாரு எனக்கு மீசை இல்லாட்டியும் பரு வந்திருச்சு" என்றாலும் உதாசீனப் படுத்தும் சமூகத்தை எண்ணி வெட்கப் பட்டிருக்கிறேன். மயிர் வளம் கொழிக்கும் கேசவர்த்தினி கூட மகசூலைப் பெருக்கவில்லை என்பதை நினைத்து வேதனைப்பட்டிருக்கிறேன்.
"உம்மேல ஆசை வைச்சேன் ; வேறெதுக்கு மீசை வைச்சேன்" என்று சங்க இலக்கியங்களாகட்டும், "நீ மட்டும் மீசை வைச்ச ஆம்பிளையா இருந்தா.." என்று தொடை தட்டி ராஜ்கிரண், விஜய்குமார் சமஸ்தானங்கள் விடும் உதாராகட்டும் - இந்த இழவெடுத்த ஆண்மைக்கும் மீசைக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. இதில் வயசுப் பையன்களுக்கு மீசை இல்லாவிட்டால் ஆயிரத்தெட்டு சங்கடங்கள் வேறு. தே.சீனா நடிகரும் "ந"ன்னா நடிகையும் நடித்த மேட்டர் படம் தான் இதுவரை வந்த நீலக்காவியங்களிலேயே சிறந்தது என்று தெருவில் யாரோ பார்த்ததாக புருடா விடும் அறிவுப்புரட்சி விவாதங்களுக்கு எண்ட்ரி டிக்கெட்டே மீசை தான். இல்லா விட்டால் "யாராவது இந்தப் பக்கம் வந்தா சொல்லு" என்று கபடி போட்டி சப்ஸ்ட்டியூட் மாதிரி வெளியே உட்கார வைத்துவிடுவார்கள். லேசாகவாவது வளர்வது வரைக்கும் "இன்னும் மொளச்சு நாலு இலை விடலை அதுக்குள்ள" என்று போவோர் வருவோர் உள்ளிட்ட சமுதாய அடக்குமுறைகளுக்கு ஆட்பட்டே ஆகவேண்டும்.
"சும்மாவாச்சும்...அடிக்கடி ஒரு தரம் ஷேவ் பண்ணுடா அப்போ தான் வளரும்" என்பது இரண்டும் கெட்டான் பருவத்தின் ஆணித்தரமான ஐதீகம். மாமாவின் ஷேவிங் செட்டை ஆட்டையைப் போட்டு அகல உழாமல் ஆழ உழுது முதல் சவரம் ரத்தம் பார்த்து, ப்ளாஸ்திரி போட்டதாலோ என்னவோ மூக்குக்கு கீழே ரொம்ப நாள் வானம் பார்த்த பூமியாகவே இருந்தது. "கவலப் படாத மச்சி ஒரு நாள் இல்லன்னா ஒரு நாள்...உனக்கும்" என்று சக ஐ.ஏஸ்.எஸ்கள் அட்வைஸ் கொடுக்கும் போது, நல்லதங்காள் ஏன் கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் விழுந்தார் என்பது நன்றாகப் புரியும். ஒரு சுபயோக சுபதினத்தில் மூக்குக்கு கீழே முதல் பூனை முடியைப் பார்த்தது வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள். அதற்கப்புறம் தினமும் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டாலும், தாய்மாமா யாரும் வண்டி பூட்டி நான் வயசுக்கு வந்ததை பாட்டு பாடி கொண்டாததால், மீசை முழுதாக வந்த சரித்திர நாளை குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.
அரவிந்சாமி, அஜீத், போன்றவர்களைத் தானே பொண்ணுங்களுக்கு பிடிக்கிறது என்று மீசை வளர்வதற்கு முன் செய்த முதல் சவரமே கடைசி சவரமாய் முடிந்து, அதற்கப்புறம் இன்று வரையிலும் மீசையை எடுத்ததே இல்லை. ஆரம்பத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கோடு மாதிரி நடுவில் மட்டும் ஒரு சின்ன gap இருந்தது . இரண்டு பக்க மீசைக்கும் நடுவில் இடைவெளி இருக்கிறதே இதனால் பின்னாடி தாம்பத்யத்தில் ஏதாவது பிரச்சினை வருமா என்று "அன்புள்ள சினேகிதனே"க்கு எழுதிப் போடுவதற்குள் அதுவே வளர்ந்துவிட்டது. என்னுடைய வாழ்க்கை இலட்சியத்தைப் போலவே நெல்லை எக்ஸ்பிரஸ் ஸ்டையில், கரடியாண்டி ஸ்டைல் என்று காலத்திற்கேற்ப மீசை பல்வேறு வடிவங்களைப் பார்த்திருக்கிறது.
ஆனால் இந்த மீசையின் அருமை பெருமை அறியாமல் இதை மேற்கத்தியர்களைப் போல் யாரும் பழிக்க முடியாது. சேரிட்டிக்கு பணம் பிரிப்பவர்கள் அதை சுவாரசியமாக்க பல கோமாளித்தனம் செய்வார்கள். அதில் தலையாயது மீசை வளர்க்கிறேன் பேர்வழி என்று வளர்த்துக்கொள்வார்கள். போகட்டும்,. ஆனால் அதற்காக மீசை வளர்த்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் சாக்ஸ் மட்டும் அணிந்து கொண்டு நடிக்கும் நீலப் பட நடிகர்கள் என சித்தரிப்பதை என்னவென்று சொல்வது. அதிலும் ஆபிஸில் எல்லா பெண்களும் இவர்களிடம் இதையே "யூ லுக் லைக் அ போர்ன் ஸ்டார்" என்று கொஞ்சிக் கொஞ்சி சொல்வது இன்னமும் கொடுமை. ஒருவன் என்னிடம் வந்து "நீ வருடம் பூராவும் மீசை வைத்துக்கொண்டிருக்கிறாயே" என்று ஆரம்பித்தான். "அது ஒன்று தான் பாக்கி, இன்னமும் கொடுப்பினை இல்லை, நடிச்சு ரிலீசானா சொல்றேன், போயிட்டு வா ராசா" என்று அனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. கலாய்க்கிறாராமாம்.
காலையில் இந்த மீசையை ஒரு தேர்ந்த சிற்பியைப் போல் செதுக்குவதற்கு இதுவரை என் வாழ்நாளில் செலவழித்த நேரத்தைக் கணக்கிட்டால்... நடித்து பல ஆஸ்கர்கள் வாங்கியிருக்கலாம். ஆனால் இந்த பெண்கள் இருக்கிறார்களே பெண்கள் இவர்களைப் புரிந்து கொள்ளவே முடியாது. "ஒரு மீசை வளர்பதற்கு அடேய் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும்" யோசித்துப் பார்க்கிறார்களா? அஜீத்தை பிடிக்கிறவர்கள் திடீரென்று மேடி, சித்தார்த், என்று மீசையில்லா பக்கமாய் சரிந்துவிடுகிறார்கள். கூட இருக்கும் சக ஐ.ஏ.எஸ்களும் கன்வேர்ட்டட் மேடியாய் மாறிவிடுகிறார்கள். என்னை மாதிரி இதுவரை ஒரு முறை கூட ஷேவ் செய்யாத வெர்ஜின் மீசைக்காரர்கள் மட்டும் பழைய பாக்யராஜ் பட நாயகி மாதிரி "மீசை எடுத்தா என்னமோ மாதிரி இருக்கு" என்று நிலம் பார்த்து வெட்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
சமீபத்தில் என்னை மாதிரி வெர்ஜின் மீசை நணபன் ஒருவனுடைய மீசை திடீரென்று ஒரு நாள் காணோம். என்ன ஏதென்று பதறிப் போய் கேட்டால், "இல்ல மச்சி, மீசை இருந்தா மதிக்க மாட்டேங்கிறாய்ங்க. பெரிய போஸ்டுக்கெல்லாம் போகனும்னா மீசையை எடுத்தா தான் கன்சிடரே பண்ணுவாங்களாம்" என்ற போது ங்கொய்யால வீரப்பன இப்படி அநியாயமா சுட்டுக் கொண்ணுட்டீங்களேடா என்று வருத்தப் பட்டேன். திடீரென்று ஏதாவது கம்பேனி சி.ஈ.ஓ ஆகவேண்டிய கட்டாயம் வந்தால் என்று, ஃபோட்டோ ஷாப்பில் மீசையை எடுத்துப் பார்த்தேன். தங்கமணி ப்ளாக் அண்ட் வொயிட் பட கதாநாயகி மாதிரி புறங்கையை கடித்துக் கொண்டு வீல்ல்ல்ல்ல் என்று அலறி ஓட்டம் எடுத்துவிட்டார். சே...அப்பவே மீசையை எடுத்து ஹிரிதிக் ரோஷனா அப்கிரேட் ஆகியிருக்கணும். "என்னத்துக்கு இதைப் போய் வளர்த்து..பேசாம மழிச்சிடேன்" என்று அப்பா சொன்னபோது கேக்கலை, ஹும்ம்ம்ம்ம் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.
சும்மா ஒரு ரெபரென்ஸுக்கு :) |