Sunday, July 09, 2006

சாமியாண்டி

"வா சாமியாண்டி, அய்யா உன்னையத் தான் காலையிலேர்ந்து கேட்டுக்கிட்டிருக்காரு"

"பொண்ணுக்கு மாசம்ங்க..பொஞ்சாதிய வுடப் போயிருந்தேனுங்க...இப்பத் தான் சேதி கிடைச்சுது அய்யா கூப்பிடாங்கன்னு அப்பிடியே போட்டுட்டு ஓடியாறேன்"

ஒருமையில் அழைக்கப்பட்ட சாமியாண்டிக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். கண்கள் லேசாக பஞ்சடைய ஆரம்பித்திருந்தது. ஒல்லியான தேகம், கருத்துச் சுருங்கிய ஒட்டாத தோல், நெற்றியில் அழிந்தும் அழியாமலும் காலையில் பூசிய திருநீர். போட்ட கூழைக் கும்பிடு போலீஸ் மீதிருந்த பயத்தையும் மரியாதையும் பறை சாற்றியது.

"சாமியாண்டி பத்து வருஷத்துக்கப்புறம் நம்ம ஜெயிலுல ஒரு தூக்குத் தண்டனை தீர்ப்பாயிருக்கு. நீதான் முன்னாடி இதெல்லாம் பார்த்துக்கிட்டனு ரெக்கார்டு இருக்கு..இதையும் நீ தான் கூட இருந்து முடிச்சு குடுக்கனும் என்ன..."

"பெரிய மனசு பண்ணி சமூகம் என்னை மன்னிக்கனும்...உசுர எடுத்துட்டு வூட்டுல கால் வைக்காதன்னு பொஞ்சாதி கறாரா சொல்லி அந்த தொழில வுட்டு நாளாச்சுங்க..இப்போ திரும்பவும்..எப்படிங்க..அய்யாகிட்ட மாப்பு கேட்டுக்கிறேனுங்க"

"அதெல்லாம் ஒன்னும் பேசக்கூடாது...நீ கூட இருந்து கயிறு போடறத மட்டும் பார்துக்கிடாப் போதும்...மத்ததுக்கெல்லாம் ஆள் இருப்பாங்க.. நாங்கென்ன டெய்லியா கூப்பிட்டுக்கிட்டிருக்கப் போறோம்? எனக்கே என் சர்விஸ்லயே இது தான் முதல் தரம்னா பார்த்துக்கோ...பொஞ்சாதிக்கெல்லாம் சொல்லக்கூட வேண்டாம்... பிரபாகர்...சூப்பரிண்டன்ட் கிட்ட சொல்லி சாமியாண்டிக்கு ஆயிரத்தைநூறுன்னு சொல்லிடுங்க...ஐந்நூறு இப்போ கைல குடுக்கச் சொல்லுங்க, மீதிய விஷயத்த முடிச்சுட்டு வாங்கிக்க,...பேப்பர்ல வேண்டாம் நான் சொன்னேன் சொல்லிடுங்க...சாமியாண்டி...விஷயம் வெளியே போகாது...நீயும் இதப் பத்தி வெளில மூச்சு விட வேண்டாம்..என்ன சரியா...கூட்டிக்கிட்டு போய் ஆகிறதப் பார்க்கச் சொல்லுங்க"

சாமியாண்டியின் சம்மததுக்கெல்லாம் அங்கு யாரும் காத்திருக்கவில்லை. சாமியாண்டி அங்கேயே பென்ஞ்சில் உட்கார்ந்து கொண்டார். மனது மிகவும் குழப்பமாக இருந்தது. வெட்டியானாக இருந்த தனது தந்தையின் தொழிலை தான் ஏற்று நடத்தி..காசுக்காக தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதையும் ஏற்றுக்கொண்டு...அந்த தெம்பெல்லாம் இப்போது மனதில் கொஞ்சம் கூட இல்லை. அத்தோடு நல்லது கெட்டது குழப்பம் வேறு. "செத்து வர்ற பொணம் மாதிரி வேற..உசுரோடு இருக்கறப்பவே .துணியப் போட்டு முவத்த மூடறதுங்கிறது வேற..அவங்க மனசு என்ன பாடு படும்.. போகிற ஆத்மா சாவம் நமக்கு வேணாம்சாமி...இல்ல நீ காசு தான் முக்கியம்ன்னு இந்தப் பொழப்பு பாக்கிறதா இருந்தாச் சொல்லு நானும் என் புள்ளையளும் சுள்ளி பொறுக்கி கஞ்சியாக்கிக்கிறோம்...எங்கள்வுட்ரு சாமி" இசக்கியம்மா சொன்னதற்காக ஊரைவிட்டு ஊர் போய் நாலு வருஷம் இருந்துட்டு எல்லாம் முடிந்தது என்று திரும்ப வந்தால், ஆறு வருடங்களுக்கப் பிறகு இப்போ திரும்பவும் இது.

"அதெல்லாம் மாறியாச்சுடா…இப்போலாம் கவருமெண்டுலயே இதுக்கெல்லாம் ஆள் இருக்காங்க" என்று சாமிநாதப் பிள்ளை சொன்னதெல்லாம் உண்மையில்லையா? இல்ல பேப்பருல வேணாம்ன்னு அய்யா சொன்னது இதத் தானா?
“ தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி.”..சாமியாண்டியின் உதடுகள் அவரையும் அறியாமல் முனுமுனுத்துக் கொண்டிருந்தன

"சாமியாண்டி...வந்து பணத்த வாங்கிக்க...அடுத்த வாரம் புதன்கிழமை..செவ்வா ராவே வந்துறனும். பொஞ்சாதிக்கிட்ட என்ன சொல்லனுமோ சொல்லிக்கோ...காலைக் கருக்கல்லயே போயிடலாம்...என்ன"

"என்னவே டவுண் ஆஸ்பதிரிக்காக பொஞ்சாதிய பொண்ணு வீட்டுலயே வுட்டுட்டு வந்துட்டிராமே நம்மூர் மருத்துவச்சி பாக்காத பிரசவமா?" சோலையப்பன் குரல் கேட்டுத் தான் தன்நினைவே வந்தது சாமியாண்டிக்கு. வீட்டுக்கு எப்படி நடந்து வந்தோம் என்றெல்லாம் நினைவே இல்லை. இரவெல்லாம் தூக்கமில்லாமல் புரண்டு புரண்டு படுத்தார். வயது தான் மனதில் எவ்வளவு மாற்றங்களை கொண்டு வருகிறது. பத்து வருஷத்துக்கு முன்னால் சேதி வந்தால் துள்ளிக் குதித்து காரியங்கள் நடத்தியது என்ன, முன்பணம் வாங்கி சீலை துணிமணி வாங்குவதென்ன...இதோ வாங்கிய பணம் விளக்குப்பிறையில் சீண்டுவாரில்லாமல் காற்றில் தளர்ந்து கிடக்கிறது.

"சாம்பல் பூசிய சிவனான்டி சொரூபம் டா" என்று ஊரில் காத்து கருப்பு அண்டியவர்கள், வயதுக்கு வந்தவர்கள் என்று சாமியாண்டியிடம் தான் திருநீரு போட்டுக்கொள்வார்கள். கௌரவமாய் இருந்திருக்கிறது. ஆனால் இன்று ..? ஜெயில் பொழப்பு கொலை செய்வது மாதிரி இருக்கிறது. நான் என்ன கொலையா செய்கிறேன்...அரசாங்கம் சொல்லித் தான் செய்கிறேன் அத்தோடு தூக்கில போடுறவனெல்லாம் என்ன மகாத்மாவா? வேண்டாமென்று சொன்னால் விட்டுவிடுவார்களா? வட்டாரத்திலேயே அவனை விட்டால் இந்தத் தொழிலுக்கு ஆள் கிடையாது. தெரியாமலா தேடிப் பிடித்துக் கூப்பிட்டிருக்கிறார்கள்.

"அய்யா முட்டை, விளெக்கெண்ணை கொண்டாந்திருக்கேன்...கயிற கொடுத்தீங்கீன்னா..ஊறப் போட்டிருவேன்..முடிச்சு சுளுவா இறுகிடும்...நோவாத காரியம் ஆயிடும்" - சாமியாண்டி திரும்ப ஜெயில்லுக்குப் போன போது தெளிவு இருந்ததாக சொல்லமுடியவில்லை.

"அய்யா அப்பிடியே அந்தாளை கொஞ்சம் பார்க்கலாமுங்களா? மனசு கேக்கமாடேங்குதுங்க ரெண்டு வார்த்தை பேசனுங்க.."

"யோவ் அதெல்லாம் வழக்கம் கிடையாதுயா...அதுவும் இன்னும் ரெண்டு நாள்ல டேட்ட வைச்சிகிட்டு... ஒன்னுகிடக்க ஒன்னாச்சுன்னா நாங்க பதில் சொல்லி மாளாதுயா..அவன் கிட்ட போய் இன்னா பேசப் போற? வேணும்னா ஒரு நிமிஷம் தான்...தள்ளியிருந்து பார்த்துட்டு கரெக்டா வந்துரனும்...எதாவது சொல்லி கில்லி வைக்காத...அவனே கிலியடிச்சு சோறு வேண்டாம் தண்ணி வேண்டாம்ன்னு கிடக்கான்..பதமா நடந்துக்கோ"

சாமியாண்டி அந்த செல்லை நெருங்கிய போது அவன் விட்டத்தைப் பார்த்த மேனியாக படுத்திருந்தான். கண்களில் பாவை சலனமில்லமால் வெறித்துக் கொண்டிருந்தது. வைத்த சாப்பாடு சீண்டாமல் "ஈ" மொய்த்துக் கொண்டிருந்தது. முப்பத்தைந்து வயதிருக்கலாம். கண்களின் ஓரத்தில் ஈரம் மண்டிப் போயிருந்தது.

"சாமீ..." சாமியாண்டி குரல் கரகரத்தது.

அவன் உடம்பில் அசைவு இல்லை. கண்கள் மட்டும் குரல் வந்த திக்கை நோக்கின.

"சாமீ...இந்தப் பாவப்பட்டவன் தான் புதன்கிழமை உங்களுக்கு...." கம்மலாக வந்த குரலும் அதற்கு மேல் சாமியாண்டிக்கு வரவில்லை.

"சிவன் கோயில் துன்னூறு இருக்கு தரட்டுமா?" திருநீரை எடுத்து தனக்கும் இட்டுக்கொண்டு அவனைப் பார்த்தார். அவனிடம் இன்னமும் சலனமில்லை.

"ஏழப் பொழப்பு…பாவப்பட்ட பொழப்பு...மவ மாசமா கிடக்கா, மூத்தது பொட்டப் புள்ள...தாயில்லா புள்ளையா ஆகிடக்கூடாதுங்க...சாமீ பாவத்துக்கு நாங்க ஆளாகக் கூடாதுங்க..." அவன் எதிர்பார்க்காத தருணத்தில் கம்பிகளுக்கு வெளியே தலைக்கு மேல் கைகளைத் நீட்டித் தூக்கி கும்பிட்டு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் சாமியாண்டி. "திருச்சிற்றம்பலம்...திருச்சிற்றம்பலம்..தரையை முட்டிய நெற்றியுடன் சாமியாண்டியின் குரல் மட்டும் தழுதழுப்பாக வந்துகொண்டிருந்தது. அவன் எழுந்து உட்கார்ந்தான்.அவன் அதை எதிர்பார்க்கவில்லை.

செவ்வாய் இரவு சாமியாண்டிக்குத் தூக்கம் இல்லை. அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் ஜெயிலிலேயே குளித்து திருநீரணிந்து கொண்டு கிழக்கு பார்த்து கும்பிடு போட்டு வணங்கினார். நான்கு மணிக்கெல்லாம் தூக்கு மேடைக்கு போய் எல்லாவற்றையும் ஒரு முறை சரி பார்த்தாகிவிட்டது.

அவனை இரண்டு காவலர்கள் கூட்டி வந்த போது சாமியாண்டிக்கு தொண்டை அடைத்தது. கூட்டி வரும் போது அவன் கால்கள் தள்ளாடிய மாதிரி இருந்தது. அவன் முகத்தில் கருப்புத் துணி போர்த்த அதிகாரி பணித்த போது அவன் கைகள் நடுங்குவதாக சாமியாண்டிக்கு பட்டது. அவன் கண்களில் இப்போதும் சலனமில்லை. துணி போடு மூடும் போது இருவர் விழிகளும் சந்தித்துக் கொண்டன. ஒரு வினாடி தான், அதற்கு மேல் சாமியாண்டியால் அதை நேர் கொள்ள முடியவில்லை. "என்னப்பனே...நோவாம நொடியில இந்த உசிரு பிரிஞ்சிரனும்..அருள் புரியப்பா..." அவர் மனதில் வேண்டிக்கொண்டது அவனுக்கும் கேட்டுக்குமளவுக்கு அவர் இதயத்தில் எதிரொலித்தது. அவன் கைகளை பின்னால் கட்டும் போது அவரையுமறியாமல் ஒரு நொடி ஆதரவாக தடவி பிடித்துக் கொடுத்தார். அவன் கைகள் பதில் சொல்லுவது போல லேசாக அசைந்தது.

அதிகாரி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே கையசைத்தததும், சாமியாண்டி லீவரை இயக்கிவிட்டு கண்களை மூடிக் கொண்டார். உதடு மட்டும் முனுமுனுத்துக் கொண்டிருதது

பரமேது வினைசெயும் பயனேது பதி ஏது
பசுஏது பாசமேது
பக்திஏ தடைகின்ற முத்தியே தருள் ஏது
பாவ புண்யங்கள் ஏது
வரமேது தவமேது விரதமே தொன்றுமில்லை...


******
****
இந்த மாத தேன்கூடு போட்டிக் கதை.
****

64 comments:

துளசி கோபால் said...

யோவ் டுபுக்கு,
கொன்னுட்டீர் ஐய்யா.
அடாடாடா.....கையைக் குடுங்க இப்படி.

வாழ்த்து(க்)கள்.

துளசி கோபால் said...

திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்துட்டேன்:-))))

http://www.desipundit.com/category/tamil/

aruna said...

எப்பவும் தமாசா எழுதற நீங்க இப்படி சீரியஸா எழுதி அசத்தீட்டீங்களே!! வாழ்த்துக்கள் !

Deiva said...

Very wonderful story. I got mesmerised by your narration as if I am watching it. Well done

கோவி.கண்ணன் said...

ஒரு நிகழ்வை படித்தது போன்ற பிரமிப்பு ... நல்ல உயிரோட்டம்.... வெற்றிபெற வாழ்த்துக்கள்

பொன்ஸ்~~Poorna said...

நல்லா வந்திருக்கு டுபுக்கு.. The Green Mile படிச்சிருக்கீங்களா?

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

வழமையாக வேடிக்கையாக எழுதும் உங்களால் இப்படியும் தீவிரமாய் எழுத முடியும் என்று புதிய பரிமாணம் காட்டியிருக்கிறீர்கள். நன்று. நல்ல நடை. இறுதியில் சற்று அவசரமாய் முடித்துவிட்டது போன்ற உணர்வு.

manasu said...

நல்லா இருக்கு டுபுக்கு,நிறையா தகவல் சேகரிச்சிருப்பீங்க போலிருக்கு.

வல்லிசிம்ஹன் said...

டுபுக்கு,
பேருக்கு எற்ற மாதிரித் தூக்கு வாரிப்போடும் நிகழ்ச்சியைப் பதித்து விட்டீர்கள்.
ரொம்ப நல்லா இருக்குனு சொலி ஓட முடியாது.
முற்றிலும் புதிய கோணம்.
கண் முன்னாலே நடந்துவிட்டது.
வெற்றிக்கு வாழ்துக்கள்.

ilavanji said...

அருமையான உயிரோட்டமுள்ள நடை!

மரணிப்பவனை விட மரணம் கொடுப்பனுக்கு இன்னும் துணிவு அதிகம் வேண்டும்போல!

போட்டிக்கான என் வாழ்த்துக்கள் டுபுக்ஸ்.. :)

Unknown said...

ரொம்ப அருமையா எழுதி இருக்கிங்க.

// "என்னப்பனே...நோவாம நொடியில இந்த உசிரு பிரிஞ்சிரனும்..அருள் புரியப்பா..." //

இந்த வரி படிக்கும்போது முதுகுத்தண்டில் ஒரு சிலீர் உணர்வு.

வெற்றிபெற வாழ்த்துகள் சார்.

கொஞ்சம் எழுத்துப்பிழைகள் இருக்கு, பார்த்துக்கோங்க.

Ahsan said...

டுபுக்கு என்னங்க ஆச்சு உங்களுக்கு!? ஏதோ ராவடியா எழுதியிருப்பீங்கன்னு நினைச்சுப் படிச்சா நெஞ்சு அடைச்சுக்கிச்சு முடிக்கிறதுக்குள்ள. பின்னீட்டீங்க.

Deekshanya said...

too good.
loved the piece.
keep up the good work.
anbudan
deekshanya

Anonymous said...

டுபுக்கு எதுவும் கிண்டலா சொல்ல முடியாதபடி எழுதிட்டீங்க, கஷ்டமா இருக்கு படிச்சதுக்கு அப்புறம்.

Dubukku said...

துளசி- நீங்க பரிச தூக்கி குடுத்ததே ரொம்ப சந்தோஷமாகி போச்சுதுங்க...தேசிபண்டிட்ல இணைப்பா...திருநெல்வேலிக்கே அல்வா தான் :))

Aruna - அப்பப்போ சீரியஸா எழுதலாமான்னு யோசிக்கிறேன் என்ன சொல்றீங்க :)

Deiva - danks. your comments are encouraing

கோவி.கண்ணன் - உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

ennamenathu - மிக்க நன்றி.

பொன்ஸ் - நான் படிச்சதில்ல...அய்யய்யோ...நீங்க சொன்னதுக்கப்புறம் கூகிள்ல பார்த்தா படம் கூட வந்திருக்கு போல...நான் சத்தியமா அதையெல்லாம் பார்க்கலைங்கோ...நீங்க சொன்ன அப்புறம் இந்த பெயரே தெரியும்...கவுத்திராதீங்கோ :)))

Dubukku said...

செல்வராஜ் - மிக்க நன்றி. அப்பப்போ கொஞ்சம் தீவிரமாயும் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டு தான் இருக்கிறேன். நீங்க சொன்னதுக்கப்புறம் திரும்ப வாசித்து பார்த்தால் எனக்கும் நீங்கள் சொன்னது தெரிகிறது. ரொம்ப நீளம் தொய்வை கொடுத்துவிடக் கூடாது என்று எச்சரிக்கையாக இருக்கலாம். நன்றி.

Venkatramani - thanks a lot!! ennaiyum oru aala mathichu pottirukeengale :)) romba nanri!!
(2003/2004 laam kidaiyatha nammakku? :P)

Manasu - நன்றி.ஆமாம். சின்ன வயதில் இது பற்றி படித்த ஒரு கட்டுரை இன்னமும் நியாபகம் இருக்கிறது, அதன் தாக்கமே இந்தக் கதை.

Dubukku said...

Manu - உங்கள் பின்னூட்டம் மிக்க ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது!மிக்க நன்றி.

இளவஞ்சி - நன்றி!!
//மரணிப்பவனை விட மரணம் கொடுப்பனுக்கு இன்னும் துணிவு அதிகம் வேண்டும்போல! //
- அதே அதே...

KVR - நன்றியண்ணே. எழுத்துப் பிழைகள் நிறைய இருக்கா? கண்ணுல தட்டுப் படமாட்டேங்குதே. இருங்க இன்னொரு தரம் படிச்சுப் பார்க்கிறேன்.

Ashan - நன்றி. போட்டிக்கு ராவடியெல்லாம் ஒத்துக்க மாட்டேங்கிறாங்க :))

Deekshanya - danks a lot. Muyarchi seiyaren. PS - Neenga commentlayum anbudannu sign pannara style romba nalla irukku!!

WA - நன்றி. ஹப்பா..நீங்களே ஒன்னும் கிண்டலா சொல்லமுடியலைன்னு சொன்ன அப்புறம் தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு :P

Munimma said...

That was so un"dubukku"! ipdiyellam pannalaama?

ungulukkulley ipdi oru serious mirugam thoongitu irunthathunnu theriyaama pochey!

bayangara "deep"a thathuvama pinniteenga ponga!

நாமக்கல் சிபி said...

இதை படித்தவுடன் ஒரு வேலை "போலி" டுபுக்கோ என்று பயந்துவிட்டேன்.
பரோட்டா சால்னா சாப்பிடலாம்னு வந்தா மணக்க மணக்க வெண் பொங்கல் கொடுத்திருக்கிறீர்கள். பொங்கலும் நல்லாவே இருக்கு.
மரணத்தையே நக்கல் பண்ணுவீங்கன்னு பார்த்தேன்.
இந்த முறை வெற்றி பெறாமல் விடுவதில்லை என்று இருக்கிறீர்கள்.

Anonymous said...

அண்ணாத்தே இது வரைக்கும் தேன்கூட்டில போய் வோட்டெல்லாம் போட்டதில்லை, இந்த தடவை கட்டாயமா போட்டாறேன்.

Syam said...

இந்த தலைப்புக்கு டுபுக்குவோட வழக்கமான காமெடி இருக்க முடியாதுனு தெரியும்...

அசத்திப்புட்டீக அண்ணாச்சி...வாழ்த்துக்கள்...கவல படாதீகவே ஓட்ட போட்டர்ரேன்...

SLN said...

இப்பதான் award வாங்கறா மாதிரி கதை எழுதறீங்க. நல்வாழ்த்துக்கள்

கவலைப்படாதீங்க, Green Mile வேறு கதை. மரண தண்டனை கைதி related என்பதைத் தவிர வேறு ஒற்றுமையில்லை.

Cheers
SLN

Anonymous said...

simply superb.. kadaisiya potirukeengale antha 4 vari poem, enna paatu/thoguthi athu?

keep it up!
--Sarvanan

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

கேவிஆர் இடம் கேட்டதற்கு பதில்: என் கண்ணில் பட்ட இரு பிழைகள்...

>>சாமியாண்டி அந்த செல்லை நெருங்கிய போது அவன் ***விட்டதைப்*** பார்த்த மேனியாக படுத்திருந்தான். கண்களில் ***பாவை*** சலனமில்லமால்
>>

ambi said...

ஆகா! ரொம்ப நல்லா இருந்தது அண்ணாச்சி! அந்த கைதியை கொஞ்சம் ஒரு நிமிஷம் பேச விட்டிருக்கலாம். இந்த தடவை கொஞ்சம் Homework பண்ணி இருப்பீங்க போலிருக்கு! :)
இந்த தடவை கப்பு உங்களுக்கு தான்! ( நம்ம மக்கள் வழக்கம் போல வாராம இருந்தா!)

Jeevan said...

haha ennaya feel panna vachitengala, nalla eluthirukkenga. Samiyandinu paru vachiketu, usura eadukura valai seirathu romba kastam. August'la India varingala Dubukku?

நெல்லைக் கிறுக்கன் said...

மிக அருமையான பதிவு வே. இந்த தடவ நீரு தான் ஜெயிப்பீரு...

murali said...

"அய்யா முட்டை, விளெக்கெண்ணை கொண்டாந்திருக்கேன்...கயிற கொடுத்தீங்கீன்னா..ஊறப் போட்டிருவேன்..முடிச்சு சுளுவா இறுகிடும்...நோவாத காரியம் ஆயிடும்" -

இப்படி எல்லாம் கயிற தயார் பன்னுவாங்கங்கற விஷயமெல்லாம் எங்கேருந்துங்கோ படிச்சிங்கோ.( நிச்சயமா அனுபவமா இருக்க முடியாது. சரிதானே!. ).
ஓரு தூக்கு மேடையை கண் முன் கொனர்ந்தீர். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Rajavel said...

Dubukku

thanks for the unending entertainment ! have been visiting your blogregularly for quiet some time now !!! you range incredible.

PS : is there a website where it describes how one can blog / write in Tamil ?

கைப்புள்ள said...

சாமியாண்டி I.U.S - An episode from an Undertaker's life.

அண்ணாத்தே! வெயிட்டு காட்டுறீங்க. காமெடியில பின்னற மாதிரி சீரியஸாவும் பின்னி எடுத்திட்டீங்க. நடையும் கதையும் ரெண்டுமே ரொம்ப நல்லாருக்கு. வாழ்த்துகள்.

அன்புடன்
கைப்புள்ள
(உங்களுக்குப் பிடிக்குதே...அதனால தான் :)) )

Anonymous said...

Hi Dubukku,

Itz really wonderful. Keep it up.
Advance wishes for ur success.

SweetVoice.

Anonymous said...

unamaiyileye mei silirkka vaitha nimidangal....

vaazhthukkal

naanum kathai eluthi ullen...

padichitu comment sollungalen

karthik

Dubukku said...

Munimaa - மிருகமெல்லாம் இல்லை. கொஞ்சம் சீரியஸா எழுதிப் பார்க்கலாமேன்னு ஒரு ஆசை:) நன்றி. இந்த மாசம் ஊருக்குப் போகிறோம். கிருஷ்ணாவரம் போவோம். ராஜு சார் கிட்ட உஙகளப் பத்தி கேக்கிறேன்.ஆனா முனிம்மான்னா தெரியுமா அவருக்கு? :P

வெட்டிப்பயல் - யோவ் போலி கீலின்னு எதயாவது கிளப்பிவிடாதீங்கய்யா? வெற்றியா...ஹீ ஹீ இந்த முறை நானே என் வோட்டப் போடமுடியாதுன்னு நினைக்கிறேன்.

WA - யக்கா ரொம்ப நன்றிங்கோவ்...ஆனா நானே என் வோட்டப் போடமுடியாதுன்னு நினைக்கிறேன் இந்த தரம்.

Dubukku said...

Syam -நன்றிங்க...மறந்துராதீங்க...0 வோட்டுன்னு வந்தா அவ்வளவு நல்லா இருக்காது அதான்

SLN - அவார்ட்டு குடுக்கப்போறீங்களா இந்தக் கதைக்கு...கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. Green Mile நல்ல வேளை வயத்துல பால வார்த்தீங்க

Saravanan -romba danks.அது ராமலிங்க அடிகளின் திருவருட்பாவில வருது

Dubukku said...

செல்வராஜ் - நன்றி செல்வராஜ். முதல் பிழையை திருத்துவிட்டேன். இரண்டாவது கண்ணின் பாவையை (கருவிழி) பற்றி சொன்னேன். பார்வை அல்ல. திருநீரா இல்லை திருநீறா என்று குழப்பமாக இருந்தது. செய்யுளில் திருநீறு என்று பார்த்த மாதிரி நியாபகம். எது சரி??

Ambi - நன்றி தம்பி.கப்பு வாங்குறதுக்கெல்லாம் அஞ்சமாட்டான் இந்த டுபுக்கு :))

Jeevan - danks. yes July end augustla varen. But indha tharam madras varala illana ungala meet panni iruppen.

நெல்லைகிறுக்கன்- அப்பிடீங்கிறீங்க?...பார்ப்போம். உம்ம நம்பிக்கைக்கு ரொம்ப நன்றிவே.

Dubukku said...

முரளிதரன் - மிக்க நன்றி. இதப் பத்தி ஒரு கட்டுரை ரொம்ப நாள் முன்னாடி படிச்சேன். இன்னும் நிறைய மேட்டர் இருக்கு இதுல. ஆனா அதையெல்லம் ரொம்ப யூஸ் செய்தா மெகா சீரியல் மாதிரி ஆகிடும்ன்னு அதையெல்லாம் எழுதல.

Cheti - danks a lot. Glad that you are enjoying my blog. Tamizmanam Kasi had written an article on tamil blogging fundas. Check this out. Hope this helps

http://kasi.thamizmanam.com/wiki/doku.php?id=tamil_blogging

Dubukku said...

கைப்புள்ள - வாங்கைய்யா...மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு.

//உங்களுக்குப் பிடிக்குதே...அதனால தான்//
நக்கலு..ஆங்??...அன்புடன்ன்னு கமெண்டுலய் போடறது நல்லா இருக்குன்னு ஒரு எதார்த்தமா சொன்னேன்...உடனே நக்கல் விட ஆரம்பிச்சிருவீங்களே??:))

Dubukku said...

Sweetvoice- danks very much. Success aaa...fingers crossed. Indha tharam competition romba jaasthiya irukku

Karthik - romba danks. Oh yes vandhu parthu angaye comment podaren

Anonymous said...

திருநீறு. மந்திரமாவது நீறுன்னு படிச்சதா தான் ஞாபகம்.

Harish said...

kalakeetenga

Jag said...

Hi Dubukku, long time, hope you are well. Just thought I'd let you know that Shobha has reported in OK. Best regards - Jag

Munimma said...

kaduthaasi pottirukken, paarunga

குமரன் (Kumaran) said...

அருமையான கதை ஐயா. உள்ளத்தை உருக்கிவிட்டது. ஆங்காங்கே கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன.

Geetha Sambasivam said...

டுபுக்கு,
இப்படி எல்லாம் கூட உங்களுக்கு எழுத வருமா? அம்பியின் பதிவைப் பார்த்ததும் ஏதோ விளையாடுகிறார் என்று நினைத்து வந்தால் அருமையாக வந்திருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ILA (a) இளா said...

நல்ல கதை, போட்டிக்கான வாழ்த்துக்கள்

கவிதா | Kavitha said...

நகைசுவையாத்தான் எழுதுவீங்கன்னு பார்த்தா.. இப்படி சூப்பர் கதையெல்லாம் எழுதி.. ரொம்ப நல்லாயிருக்கு ..வாழ்த்துக்கள்

Dubukku said...

WA- நானும் திருநீறுன்னு பார்த்த மாதிரி தான் ஞாபகம். ஆனாலும் இந்தக் கதையை டைப் அடிக்கும் போது சந்தேகம் வந்திரிச்சு.

Harish - danks very much

Jag - Yes I am fine. How are you? Many thanks for letting me know. Regards!

Munimma - parthutten :) nanRi.

Kumaran - மிக்க நன்றி.
//ஆங்காங்கே கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன//
இந்தக் கதைக்கு கிடைத்த உண்மையான அங்கீகாரமாக எடுத்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.

Dubukku said...

கீதா - ஏதோ முயற்சி செய்திருக்கிறேன். மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு!!

இளா - மிக்க நன்றி இளா!!

கவிதா - மிக்க நன்றி. அனில் குட்டி என்ன சொல்லுதுன்னு சொல்லலையே...அனில் குட்டியையும் வந்து போகச்சொல்லுங்க :)

Unknown said...

//(2003/2004 laam kidaiyatha nammakku? :P)//

i saw this only now. you have a lot of english posts in 2003/2004. that's why i haven't added to showcase. but you can always use the archive browser to browse those.

http://www.anniyalogam.com/scripts/browser.php

கப்பி | Kappi said...

அருமையான கதை...வாழ்த்துக்கள்..

நிலா said...

டுபுக்கு

ரொம்ப வித்தியாசமான கோணம்.

வாழ்த்துக்கள்

மா சிவகுமார் said...

ஐயா டுபுக்கு,

எங்கெங்கோ உங்கள் கதையைப் பற்றிக் கேள்வி பட்டு இன்றைக்குத்தான் விதித்துப் படித்தேன். நேரில் இருந்து பார்த்தது போல எழுதி எங்களையும் சாமியாண்டியோடு சேர்ந்து பதைக்க வைத்து விட்டீர்கள். விரல் விட்டு எண்ணும் பாத்திரங்களில், ஒரு வாழ்க்கையின் - மரணத்தின் - பல இடுக்குகளைத் துழாவிப் பார்த்து நெஞ்சைக் கனக்க வைத்து விட்ட கதை.

அன்புடன்,

மா சிவகுமார்

Dubukku said...

Venkatramani - thanks will use that :)

கப்பி பய/ நிலா - ரொம்ப நன்றிங்க


மா.சிவக்குமார்- ரொம்ப நன்றிங்க. எங்கெங்கோ கேள்விப்பட்டீர்களா? அப்படி எங்கெல்லாம் கேள்விப்பட்டீர்கள்?? புளகாங்கிதமடைய ஒரு நப்பி ஆசைதான். :)

Uma - danks very much. Vote marandhuratheenga.. :)

MSV Muthu said...

சற்றும் தொய்வில்லாத நடை. மனதை இறுக்கும் வரிகள்.

//அவர் மனதில் வேண்டிக்கொண்டது அவனுக்கும் கேட்டுக்குமளவுக்கு அவர் இதயத்தில் எதிரொலித்தது.

கதை நன்றாக இருந்தது.

மனதின் ஓசை said...

மனதை தைத்த ஒரு கதை...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
என் வொட்டு உங்களுக்கு உண்டு..

Anonymous said...

போட்டியில் ஐந்தாவது இடத்தைப் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

- ட்ட்ட்டப்பூ.

மெட்ராஸ்காரன் (Madrasi) said...

Sir,

I always thought you are a comedy writer. I never know that you could write such a serious sensible story. Probably, one of the few stories that I have read which made me heavy. Quite a different plot to think. Congrats! Looking forward to more such stories.

-Madraskaran

Anonymous said...

very nice
just 2 days b4 i started learning of ur blog

its very nice really the non blog readers missing something can u come to writing on books tooo
-- Arun

வள்ளி நாயகம் said...

Its really very touching.... Keep it up.

Natty said...

மேல இருக்க எல்லா கமெண்டையும் படிச்சிட்டு, என்னுடைய கமெண்டும்.. ரிபீட்டு...

swami said...

Urukkamana kadhai ...sirandha vaazhviyal padhivugal ...ungal muyarchi melum sirakka vazzhthukkal ...

Anonymous said...

மேல இருக்க எல்லா கமெண்டையும் படிச்சிட்டு, என்னுடைய கமெண்டும்.. ரிபீட்டு
என்னுடையது றீரிபீட்டு

Saraswathi said...

Serious topic
seriously very good
did u win?

Unknown said...

I have recently seen actor nageshs films NEERKUMIZY
I WAS under the impression that he could act comedy roles only. but his pathetic role in neerkumizhi... no words.
similarly i did never expect such a sad story from you...
keep it up...

Post a Comment

Related Posts