Friday, December 29, 2006

ரெடி ஸ்டார்ட் கேமரா

நான் முடிவெட்டிக்கொண்டால் எதாவது விசேஷமாக நடக்கும். அதுவும் முடித்திருத்துபவர் ரொம்ப மெனெக்கெட்டு திறமையெல்லாம் காட்டி கரிச்சான் குஞ்சு ரேஞ்சுக்கு கரம்பியிருந்தால் அதிவிசேஷமாக சம்பவங்கள் நடக்கும். ரெகுலராக பஸ்ஸில் வரும் லொட லொட பாட்டிக்குப் பதிலாக அழகான வெள்ளைக்கார குட்டி வந்து ஆட்டையாம்பட்டிக்கு வழி கேட்பாள். "இம்புட்டு நாளா எங்கம்மா போயிருந்த...மண்டைய கரம்பிட்டு வந்தவுடனே கரெக்டா வந்துடறீங்களேம்மா.." என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டே வழியைச் சொல்லுவேன்.

இப்பேற்பட்ட கரம்பின முஹூர்த்ததில் ஒரு நாள் பிரபல ஆங்கில சக ப்ளாகர் பெண்மணியிடமிருந்து தொலைபேசி அழைப்பு. விஷயம் இது தான் அந்த அம்மணி என்னுடைய லண்டன் குண்டுவெடிப்பு சம்பவ அனுபவத்தை ஒரு நிமிட டாக்குமென்டரியாக எடுத்து இங்கிலாந்திலுள்ள ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் போட்டிக்கு அனுப்ப ஆசைப்பட்டார். எனக்கு தலைகால் புரியவில்லை. " டாக்குமென்ட்ரியா?..அதுவும் நான் நான் நானே நடிக்கனுமா...என் ஃபோட்டோவ முன்ன பின்ன பார்த்திருக்கீங்களா??ஓ நாம நேர்லயே பார்த்திருக்கோமா..உங்களுக்கு ஓ.கேவா...என்னது நாளைக்கே ஷூட்டிங்கா..." இந்த முறை கரிச்சான் குஞ்சு யோகம் பலமாகவே இருந்தது. இரண்டு வாரம் டைம் கேட்டால் அதுக்குள்ளயாவது மண்டையில் கொஞ்சம் புல் முளைத்துவிடாதா என்று கேட்ட வாய்தாவெல்லாம் தள்ளுபடியாகிவிட்டது. சரி அவங்க கேமரா குடுத்து வைத்தது அவ்வளவு தான்னு நேரம் காலமெல்லாம் குறித்துதாகிவிட்டது.

இருபத்திநாலு மணிநேரம் போதாதா. வீட்டில் அலம்பல் படலம் ஆரம்பமாகியது. போன் அடித்தால் "அனேகமாக மணிரத்னமாகத் தான் இருக்கும்...இந்த டைரக்டர்ஸ் தொல்லை தாங்கமுடியலை...மனுஷன் எவ்வளவு போன் கால்ஸ் தான் அட்டெண்ட் பண்ணுவான்...நீயே எடுத்து அய்யா வீட்டுல இல்லை அவுட்டோர் ஷூட்டிங் போயிருக்கார்ன்னு சொல்லிடு" -ஆரம்ப கட்ட அலம்பல்களுக்கெல்லாம் தங்கமணி கண்ணாலேயே எரித்துக் கொண்டிருந்தார். எதற்கும் இருக்கட்டும் என்று கண்ணாடி முன்னாடி "ஹலோ ஐ ஆம் சஞ்சய் ராமசாமி" டயலாக் பேசி பழகிய போது, அங்கே ப்யூஸ் புடுங்கி காதில் புகை வர ஆரம்பித்துவிட்டது. "எப்படி இருந்த நான்....இப்படி ஆகிட்டேன்..." அசரீரியாக பதில் தாக்குதல் ஆரம்பித்தது.

"இந்த பாரும்மா...நடிப்புல போட்டி இருக்கலாம் பொறாமை இருக்கக்கூடாது...கவலப்படாதே...எனக்கு கதவை திறந்துவிடற மாதிரி ஒரு லேடி காரெக்டர்க்கு ஆள் தேடிக்கிட்டு இருக்காங்க...உன்ன வேணா ரெக்கமெண்ட் பண்ணறேன்.."
****
ஒரு மாலை இளவெய்யில் நேரம்...
அழகான...இலையுதிர்.காலம்..
****

"தோடா....நீங்க போறதே சார் போஸ்ட்ன்னு முதுகு மட்டும் தெரியற போஸ்ட்மேன் காரெக்டருக்கு இதுல என்ன வேற ரெக்கமெண்டா..வேண்டவே வேண்டாம்..நான் இப்படியே இருந்துட்டு போறேன்..."

"அப்பாடா எங்க ஒத்துக்குவியோன்னு கவலையா இருந்தது. கவலபடாத வேற ஏதாவது நல்ல காரெக்டர் மாட்டிச்சினா சொல்றேன். இதுக்கு கனிகாவ கமிட் பண்ணிக்கிறேன்.

"ஐய்யோ.பாவம் கனிகா.."

"ஒரு உலகக் கலைஞன் வேல்யூ தெரியாம பேசாத...என் திறமைய பார்த்து சப்பான்லேர்ந்து சாக்கிசான் கூப்பிட்டாக...பின்லாந்துலேர்ந்து பீட்டர் ஜாக்ஸன் கூப்பிட்டாக..."

"ஆமா...சொல்லமறந்துட்டேனே...காலைல ஸ்பீல்பெர்க் கூப்பிட்டாக ...டைனோசருக்கு டூப்பா நடிக்கிறதுக்கு ஆள் வேணுமாம் உங்கள கேட்டாக..க்க்ர்ர் தூ.."

ம்ஹூம்...எனக்கு காதில விழலையே, ஒரு நடிகனுக்கு கலையுல வாழ்க்கையில இதெல்லாம் ரொம்ப சகஜம் என்று ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய்விட்டேன். லீவு இல்லாததால் ஆபிஸில் பெர்மிஷன் சொல்லிவிட்டு போயிருந்தேன். ஒன்றுக்கு இரண்டு ப்ளாக் உலக பிரபல பெண்மணிகள் - டைரக்டர்ஸ். "கேரவேனெல்லாம் ரெடியா.." என்று லேசாக அலம்பியதில் இதுக்குத் தான் இந்த மாதிரி கேரக்டரையெல்லாம் கூப்பிடாதேன்னு சொன்னேன் - விழியாலே பேசிக்கொண்டார்கள். கிடச்ச சான்ஸும் கோவிந்தா ஆகிடப் போகுதே என்று அப்புறம் நல்ல பிள்ளையாக அவர்கள் சொல் பேச்சு கேட்க ஆரம்பித்தேன். ஒரு அம்மணி அடிக்கடி தெலுங்கில் மாட்லாடிக் கொண்டிருந்ததில் எனக்கு ஒருவேளை இது தெலுங்கு டப்பிங் படமாக இருக்குமோ என்று டவுட் வந்துவிட்டது. தெலுங்கு டாக்குமென்ட்ரியாக இருந்தாலும் சும்மா பேச்சு துணைக்காச்சு என்று இலியானா..கௌஷா இவங்களெல்லாம் வந்திருக்காங்களா என்று ஒருதரம் ஏமாற்றத்தோடு சுத்திப் பார்த்தேன்.

"இப்ப நாம நீங்க ஆபிஸுக்கு ட்யூப்ல போற மாதிரி எடுக்கப் போறோம். நீங்க அப்பிடியே படியில் இறங்கி வர்றத எடுக்கப்போறோம்...கேஷ்வ்லா அப்பிடியே இறங்கிவாங்க..."

"ஓ இவ்வளவு தானா...இந்த மாதிரி இறங்கி வர்றதெல்லாம் அசால்டா இடது கையாலயே பண்ணுவேன்.." என்னுடைய அலம்பலை அவர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. எனக்கு ஏனோ பாரதிராஜா ஷூட்டிங்கில் பளாரென்று கன்னத்தில் அடிப்பார் என்று படித்ததெல்லாம் நியாபகத்துக்குவந்து... "ஹீ ஹீ சும்மா டமாசு....இருங்க நான் இறங்கி வர்றேன்...கரெக்டா இருக்கா பாருங்க" என்று நல்ல பிள்ளையாக நடிக்க ஆரம்பித்தேன்.

அதுக்கப்புறம் நான் வித விதமான படிக்கட்டுகளில் நடித்தேன் நடித்தேன் நடித்துக் கொண்டே இருந்தேன். ஒரு பெரிய படிகட்டில் நான் மேலிருந்து கீழே நடிப்பதாக ஒரு சீன். பயங்கர சேலஞ்சிங்காக இருந்தது. மேலேருந்து கீழே பாதி வழியில் நான் நடித்துக் கொண்டிருந்த போது ஒரு மாமா நடுவில் நாயைக் கூட்டிக்கொண்டு வந்து விட்டார். கட் சொல்லி திரும்ப படிக்கட்டில் மேலேறி நடிக்கச் சொல்லிவிட்டார்கள். அடுத்த முறை ஒரு ட்ரெயின் வந்து கூட்டம் திபு திபுவென வந்து விட்டது. வேற வழி? திரும்பவும் ரிப்பீட்டு. இப்படியே பத்து டேக் வாங்கி ஓகே ஆன பிறகு அந்த அம்மணி கேமராவில் தப்பான செட்டிங் இருப்பதை கண்டு பிடித்தார். எனக்கோ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. ஆப்புள் ஜூஸ் கேட்டால் அந்த அம்மணிகள் கேமரா மேல் இருந்த கடுப்பில் என்னைக் காட்டிவிடுவார்களோன்னு பயந்து கேட்கவேஇல்லை. லண்டன் அண்டர்கிரவுண்டிலேயே திருப்பதி மலை ஏறுவதாக நினைத்துக் கொண்டு இன்னும் நாலு தரம் படிக்கட்டில் நடித்தேன்.

ஒரு வழியாக கடைசியில் படிக்கட்டு நடிப்பு ஓகே ஆகி நான் பெருமூச்சு விட்ட போது...அவ்ளோ தான் வீட்டுக்குப் போலாம் என்று பேக்கப் சொல்லிவிட்டார்கள். என்னது அவ்ளோதானா..என்னங்க இன்னும் டூயட், ட்ரீம் சீக்வென்ஸ்...இதெல்லாம் எடுக்கவே இல்ல என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அதெல்லாம் க்ராபிக்ஸில் அட்ஜஸ்ட் செய்துவிடுவோம் என்று சொல்லிவிட்டார்கள்.

ஹூம் தமிழ்ப்ளாகர் படமெடுத்திருந்தாலாவது போண்டாவோ சமோசாவோ கிடைத்திருக்கும். மீரா ஜாஸ்மின், கனிகா கால்ஷீட் இருந்தால் சொல்லுங்க...போண்டா கூட வேண்டாம்...சும்மாவே நடிச்சுத் தரேன். தெலுங்கு டப்பிங் படங்களுக்கு முன்னுரிமை குடுக்கப்படும்.


பி.கு - படத்தை நான் பார்த்துவிட்டேன். என்னைத் தவிர படத்தில் எல்லாமே நன்றாக இருக்கிறது. படம் இன்னும் போஸ்ட் புரோடக்க்ஷன் ஸ்டேஜ்ஜில் இருக்கிறது. கிராபிக்ஸில் எப்படியாவது எனது பெர்சனாலிட்டியை ஏத்தமுடியுமா என்று கேட்டிருக்கிறேன். படம் ரிலீஸானவுடன் பகிர்ந்து கொள்கிறேன். படத்தை பார்த்தலிருந்து தங்கமணி "அப்படியே நடிச்சுக்கிட்டே மாடிக்குப் போய் வர்ஷாவோட ட்ரெஸ்ஸ எடுத்துக் கிட்டு வாங்க...அப்படியே நடிச்சிக்கிட்டே கடைக்குப் போய் பால் வாங்கிட்டு வாங்க"ன்னு ஏகப்பட்ட சான்ஸ் குடுக்கிறார். ஒரு உலகக் கலைஞன.....ஹூம் சரி வேணாம் விடுங்க...

Sunday, December 03, 2006

என் இனிய...

சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போய்விட்டேன். இது ஒன்றும் புதிதில்லை என்றாலும் மன்னிக்கவும். அக்டோபர் மாதத்திலிருந்து ஆபிஸ், வீடு, வருத்தப் படாத வாலிபர் சங்கம் என்று எனக்கு திரும்பிய பககமெல்லாம் ஆப்பு தான். இன்னும் வேலைப்பளுவும் மன அழுத்தமும் குறைந்த பாடில்லை. இன்னும் தொடரும் என்று நினைக்கிறேன். அதுவரை இங்கு வழக்கம் போல் வந்து போக முடியாது, அட்டென்டன்ஸ் குறைவாகத் தான் இருக்கும் ஒன்றும் குறைந்துவிடாது! மெயிலிலும் இங்கே பின்னூட்டத்திலும் விசாரித்த அனைவருக்கும் நன்றி. அட்லாஸ் வாலிபர் மாதம் செம ஊத்தல். இதற்கு மேலும் சொதப்ப முடியாத படி சொதப்பிவிட்டேன் என்று நினைக்கிறேன். இதில் ஒரு சயின்ஸ் பிக்க்ஷன் கதை வேறு உள்ளடக்கம். மைக்கும், கேட்பதற்கு நாலு பேரும் கிடைத்துவிட்டால் தியாகராஜ பாகவதர் எங்க தாத்தா தான்னு குஷி பிறப்பது போல இன்னும் என்னவெல்லாமோ எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த்தேன். நேரம் ஓடிவிட்டது, கொஞ்சம் லேட்டாக போய் வாய்பளித்தமைக்கு நன்றி சொல்லப் போனால் "ரொம்ப ஊத்தாத, கிளம்பு காத்து வரட்டும்" என்று லாகினைப் பறித்து விட்டார்கள் :) வாய்ப்புக் கொடுத்த சங்கத்தினருக்கு நன்றியும், சொதப்பியதற்க்கு மன்னிப்பும்.(அதாவது மன்னிப்பு நான் கேட்டுக்கிறேன்)

நடுவில் என்னடா இயந்திரமயமான வாழ்க்கை என்று வெறுத்துவிட்டது. என்னத்தையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆபிஸ், வீடு, வாசல், பணம்,மீரா ஜாஸ்மின் ,பிட்ஸா, பொங்கல், பினாயில் - அடப் போங்கடா எல்லாம் மாயை போதும் என்றாகிவிட்டது. ஏதோ சயன்ஸ் சானலில் இன்னும் டிரில்லியன் ஒளி ஆண்டிற்கு அப்பால் இன்னொரு பால்வெளி (மில்கி வே) இருக்கிறது என்று காட்டினார்கள். இந்த அண்ட வெளியில் நாமெல்லாம் தூசு. வாழப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கும் நூறு ஆண்டுகளில் எத்தனை தேறப் போகிறதோ...இதற்கு இந்த நாய் படாத பாடு...பேசாமல் ஒரு ரெண்டு வருஷத்துக்கு சாமியாராக போய்விட்டு திரும்ப வரலாமா என்று பலமான யோசனை வேறு. அப்புறம் சரவணா பவனில் மிக்ஸட் வெஜிடபள் பராட்டா சாப்பிட்டுவிட்டு, ஸ்வீட் பீடா போட்டுக் கொண்டே பல்லைக் குத்திக் கொண்டிருந்த போது "ஹகூனா மடாடா" (Hakuna Matata) தத்துவம் சித்தித்தது.

இடைப்பட்ட காலத்தில் சில நல்ல படங்களையும் வழக்கம் போல் ஏகப்பட்ட குப்பைகளையும் பார்த்து வைத்தேன். பாலாஜி எஸ் ராஜன் தயவில் "ப்ளாக்" (Black) ஹிந்தி படம் பார்த்தேன். ஹாலிவுடில் சிலபேர்கள் எடுப்பது மாதிரி நம்மாட்கள் நுண்ணிய உணர்வுகளை மையப் படுத்தி எடுக்கவே மாட்டார்களா என்ற ஏக்கத்தை இந்தப் படம் சிறிது போக்கியிருக்கிறது. "ப்ளாக்" பிழியப் பிழிய அழ வைக்கக்கூடிய தன்மை வாய்ந்தது.அட்லீஸ்ட் தொண்டையையாவது அடைக்கும் நான் கியாரண்டி. ராணி முகர்ஜி நடிப்பை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அமிதாப் பச்சன் நடிப்பை இப்போது தான் பார்க்கிறேன் (அவர் படமெல்லாம் ரொம்ப பார்த்ததில்லை). இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். படத்தில் வரும் குடும்பம் தான் கொஞ்சம் செயற்கைத் தனமாக இருக்கிறது ஆனால் இந்த இருவரின் நடிப்புக்காக அதையெல்லாம் மன்னித்துவிடலாம்.


வீட்டில் வேறு கட்டுமான வேலை ஆரம்பித்தாகிவிட்டது. டீ.வி கம்ப்யூட்டர் எல்லாவற்றையும் குப்பயோடு குப்பையாக கட்டி வைத்திருக்கிறோம். கன்னிகா வந்ததிலிருந்து இப்போதான் தங்கவேட்டை பார்க்க ஆரம்பித்தேன்...தக தகவென்று இருக்கிறார்..ஹூம் வீட்டு வேலை முடியும் வரையில் அவர் தொடர்ந்து தங்கவேட்டையில் இருக்கவேண்டும் என்று முருகனுக்கு இரண்டு ரூபாய் முடிந்து வைத்திருக்கிறேன்.

வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் செஞ்சு பார்ன்னு பழமொழியெல்லாம் பிரெஞ்சு காண்டிராக்டரிடம் சொல்லிப் பார்த்தேன், பத்து பைசா கூட குறைக்கமாட்டேன் என்று கறாராக சொல்லி விட்டார். இந்த பழமொழியெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டும் ஏன் கல்யாணம் கட்டிக்கிட்டன்னு நக்கல் வேறு. செங்கல் லோடு இறக்குகிற அன்னிக்கு அவனை தங்கமணி கிட்ட போட்டுக்கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். வீட்டை இடிக்க ஆரம்பித்தைலிருந்து வீடு முழுக்க ஒரே தூசி. எல்லா இடத்திலும் மண் பரவியிருக்கிறது. சாப்பாடு மண்ணு மாதிரி இருக்குன்னு தங்கமணியிடம் தெகிரியமா சொல்ல முடிகிறது.

எல்லா சாமான்களையும் ஒரு பெட்ரூமில் போட்டு பூட்டிவிட்டு இன்னொரு பெட்ரூமில் ஒண்டிக் குடித்தனம் நடத்திக் கொண்டு இருக்கிறோம். இதற்கு நடுவில் டுபுக்கு ஊரை விட்டு ஓடிப் போய் உத்த்மனாய் வாழ ஆரம்பித்துவிட்டார் என்று யாரும் கதை கட்டிவிட்டுவிடக் கூடாதே என்று ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுக்கிறேன்.

கொஞ்ச நாள் வெளிஉலக தொடர்பே இல்லாமல் ப்ளாக் உலகை திரும்ப வந்து பார்த்தால் தமிழ் வலையுலகில் நிறைய மாற்றங்கள். போண்டாவும், பூரிக் கிழங்குமாய் களை கட்டிக்கொண்டிருந்த வலைபதிவர் சந்திப்புகளை போண்டா வேண்டா சங்கம்...கருத்தரங்கம் எல்லாம் நடத்தி கட்சி,சங்கமெல்லாம் உருவாகிவிடுவார்கள் போல இருக்கிறது. அடப்பாவிகளா...அப்போ ஓசி போண்டாவெல்லாம் அவ்வளவு தானா? இது வரைக்கும் ஒரு ஓசி போண்டா கூட தேத்தலையே..கருத்தரங்க தலைப்புகளையெல்லாம் வேறு பார்த்தால் பயமாய் இருக்கிறது.மக்கள் திருந்திருவாங்க போல இருக்கே...

எல்லாம் சரி..நடுவில் நான் ஒரு படத்தில்(சினிமா அல்ல) வேறு நடித்திருக்கிறேன் என்று சொன்னால் நம்புவீர்களா? அடுத்த பதிவில்...விபரமாய் எழுதுகிறேன்.

Tuesday, October 03, 2006

Orkut

ப்ளாக் எழுதுவதை விட வேற வெட்டியான வேலை எதுவும் இருக்கா என்ற எனது நீண்டநாளைய சந்தேகத்துக்கு விடை கிடைத்துவிட்டது. “Orkut” என்ற வலைத்தளத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். என்ன என்று பார்த்ததில்லை. தற்போதைய மெம்பர்கள் யாராவது அழைப்பு அனுப்பித்தால் தான் சேரமுடியும் என்று சொன்னவுடன் ஆர்வம் அதிகரித்துவிட்டது. கையிலவிழுந்து கால்லவிழுந்து கடைசியில் நம்ம வெட்டிபயல் அழைப்பு அனுப்பி, சேர்ந்துவிட்டேன். சரி என்னாடான்னு போய் பார்த்தா...மஹாவெட்டி...பைசாக்கு பிரோஜனம் இல்லை. இப்படியும் பொழுதைப் போக்கமுடியுமா என்று கேவலமாக இருந்தது. இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நமக்கு ரொம்ப பிடிக்குமே என்று நானும் ஜோதியில் ஐய்கியமாகியாச்சு. வெட்டி ஆட்டத்தில் நானெல்லாம் ஜுஜுபி. அவ்வளவு வெட்டிகள் அங்கு இருக்கிறார்கள், ஆஹா நாம கொஞ்சம் பரவாயில்ல போலன்னு சந்தோஷமாக இருந்தது. கொஞ்சம் நோண்டி பார்த்ததில் நம்ம தமிழ் வலைப்பதிவாளர்கள் சிலர் தென்பட்டனர்.

நம்ம கமெண்ட்ஸ் பொட்டி மாதிரி அங்க ஸ்கிராப் புக் என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. ஆனா எந்த மூதேவி கண்டுபிடித்தானோ.தெரியவில்லை..அந்த விளையாட்டில் ஒருவர் நம் ஸ்கிராப் புக்கில் கேள்வி கேட்டால் நாம் இங்கேயே பதில் சொல்லக்கூடாதாம். அவருடைய ஸ்கிராப் புத்தகத்தில் பதில் சொல்லவேண்டுமாம். இது தெரியாமல் இவங்களெல்லாம் என்ன லூஸா...சம்பந்தமே இல்லாமல் பேசிக்கிறாங்களேன்னு சிலருடைய ஸ்கிராப் புத்தகத்தைப் பார்த்து திரு திருவென முழித்துக்கொண்டிருக்கும் போது வெட்டிப்பயல் திரும்பவும் உதவிக்கு வந்து ஐய்யப்பாட்டை அகற்றினார். ஹூம் இதனால் சுவாரசியமான அரட்டைகளை எல்லாம் பக்கத்தில் போனில் பேசுபவரிடம் ஒட்டு கேட்பது போல் ஒருபக்கமாகத் தான் கேட்கமுடிகிறது. அந்தப் பக்கம் என்ன பதில் சொன்னர்கள் என்பதைப் பார்க்க அங்கு போக வேண்டி இருக்கிறது. அடப் போங்கப்பா…பண்றதே வெட்டி வேலை இதுல என்ன ப்ரொடோகால்? தங்கிலிஷ் பிகர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு, ஆம்பளை கபோதிகளுக்கு சொந்த வீட்டில் மட்டும் தான் சிறப்பு, கல்யாணமான கபோதிகளுக்கு அதுவும் கிடையாதுன்னு ஔவையார் சும்மாவா சொன்னாங்க, ஸ்கிராப் புத்தகத்தில் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

நிற்க. இருக்கிற வெட்டிவேலைகள் போதாதென்று சென்ற வாரம் வேட்டையாடு விளையாடு பார்த்தேன்.கவுத்திட்டாங்க. "காக்க காக்க" ரீமேக்கை கேவலமாகச் செய்திருக்கிறார்கள். இந்த இழவ பார்கறதுக்கு ஒரிஜினல் டி.வி.டிக்காக காத்திருந்தேன். கோலங்கள் விளம்பர இடைவேளையில் பார்தால் போதுமானதாக இருந்திருக்கும். இதை விட ஜி.சி.டி மாணவர்களே பட்டையைக் கிளப்பி இருப்பர்கள். பிரேமலதா அக்கா புண்யத்தில் ஏழு திகில் படங்கள் வேறு பார்த்தேன். "The Forgotten " படம் கிடைத்தால் பாருங்கள். எனக்கு மிக மிக பிடித்தது. வித்யாசமான கதைக் களம், எதிர்பாராத முடிவு. அருமையாக எடுதிருக்கிறார்கள். கிடைத்தால் தவறாமல் பாருங்கள்.

மேலும் நிற்க. எனது சேவையை பாராட்டி (நான் இங்கே ரொம்ப கிழிக்கிறேன்னு வாசிக்கவும்) வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் "அட்லாஸ் வாலிபர்" கவுரவத்தை அளித்து அக்டோபர் மாதம் என்னை அங்கு எழுதச் சொல்லியிருக்கிறார்கள். அங்கு எனது படைப்புகளுக்கு வரும் பின்னூட்டங்களைப் படிக்கவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

(இனிமே உட்கார்ந்துக்கலாம்)

Friday, September 22, 2006

நெல்லை சந்திப்பு விபரங்களும் படங்களும்

மொத்தம் ஆறு பேர் வருவதாகச் சொல்லியிருந்தார்கள். ஞாயிற்றுக் கிழமை காலை ஒன்பது மணிக்கு சந்திப்பதாக பேசிக்கொண்டோம். இதில் வீட்டிலிருந்து தங்கமணியையும் குழந்தைகளையும் வேறு கூட்டி வரச் சொல்லியிருந்தார்கள். கடைசி நேர குழப்பங்களலால் அவர்களை கூட்டிச் செல்ல முடியவில்லை. என்ன ட்ரெஸ் போட்டுக் கொள்ள என்பதிலிருந்து எல்லாமே கொஞ்சம் டென்ஷனாக இருந்தது. எங்கள் வீட்டிலிருந்து ஒரு மணிநேரம் ஆகும் என்று எதற்கும் இருக்கட்டும் என்று ஏழு மணிக்கே கிளம்பிவிட்டேன்.

எல்லோரும் வந்தவுடனே அங்கிருந்து சாப்பிடப் போகலாம் என்று பேசிவைத்திருந்தோம். சந்திப்பிற்கு எட்டு மணிக்கே போய்சேர்ந்துவிட்டேன். என்னைத் தவிர ஒருவரும் வரவில்லை. அதற்குள் பக்கத்தில் நல்ல ஹோட்டல் தேடி போண்டால்லாம் ஸ்டாக் இருக்கா என்று விசாரித்து வைத்தேன். அப்புறம் நேராக சந்திப்பதாக பேசிக் கொண்ட இடத்திற்கே போய்விட்டேன். என்னை அடையாளம் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று மிக நிச்சயமாகத் தெரிந்தது. சுதந்திர தினம் நெருங்கிக் கொண்டிருந்ததால் அங்கங்கே போலீஸ் தலைகளைப் பார்க்க முடிந்தது. முதலில் என்ன பேசுவது என்று ஒத்திகை பார்த்துக்கொண்டேன். நேரம் ஆக ஆக எனக்கு டென்ஷன் அதிகரித்தது. கைத்தொலைபேசி இல்லாததால் ஒருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

தமிழ்மணம் நட்சத்திர முறை சரிதானா, தேன்கூடு போட்டியில் இந்த முறையாவது வெற்றி கிடைக்குமா என்றெல்லாம் பேசவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

சரியாக ஒன்பதேகாலுக்கு நெல்லை எக்ஸ்ப்ரெஸ் ட்ரெயின் வந்தது. இரண்டு அக்காக்கள், அக்கா குழந்தைகள் என்று மொத்தம் சரியாக ஆறு பேர். அக்கா பையன் கூட்டத்தில் ஒளிந்து கொண்டிருந்த என்னை மிகச் சரியாக கண்டுபிடித்து விட்டான். "என்னாங்கடி விளையாடுறீங்களா..ஒரு மனுஷன் எவ்வளவு நேரம் தான் காத்துகிடப்பான்...இன்னமும் உங்களுக்கெல்லாம் பொறுப்பே வரலை போலிருக்கே ஊர்லேர்ந்து வந்த தம்பிய பார்க்க இப்படியா ஆடி அசைஞ்சு வரது? " என்று ஒத்திகை பார்த்த வசனத்தை பேசி வாங்கிக் கட்டிக் கொண்டு ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டு விட்டு வீடு சென்றோம்.

நெல்லை சந்திப்பு புகைப்படம் காண இங்கு சுட்டவும்.


பி.கு - என்ன செய்யறதுங்க...நெல்லைப் சந்திப்ப இப்படித்தான் ஒப்பேற்ற வேண்டியிருக்கிறது. சந்திப்பை அறிவித்த இரண்டு வாரத்துக்கு மருந்துக்கு கூட யாரும் அதைப் பற்றி மெயில் அனுப்பவில்லை. அம்பி வேறு இது தெரியாமல் டோட்டல் டேமேஜ் செய்து கொண்டிருந்தார். கவுண்டமணி பாணியில் "யெப்பா போதும்ப்பா..ப்லிம் அந்து போச்சு..நிப்பாட்டுப்பா..பின்னியெடுத்துட்டாங்க" என்று சொல்லியும் அவர்பாட்டுக்கு சமாளித்துக் கொண்டிருந்தார். இந்த லட்சணத்தில் சிவஞானம்ஜீ வேறு அவர் பங்குக்கு எண்ணையை ஊற்றிக்கொண்டிருந்தார். அட ஏங்க இந்த கொலைவெறி ...இங்க நானே சொந்த செலவுல சூன்யம் வைச்சிக்கிட்டு எடுக்கிறது தெரியாம திண்டாடிக்கிட்டு இருக்கேன் என்று நொந்து போயிருந்த சமயத்தில்.. வலைப்பதிவுகளை வாசிக்கும் நண்பர் சங்கரபாண்டி மட்டும் நான் பதினோராம் தேதி தான் அந்தப்பக்கம் வருவேன் அந்த தேதியில் வைத்துக் கொள்ள முடியுமா? என்று கேட்டிருந்தார். பட்சி சிக்கிக்கிச்சு என்று எனக்கு ஒரே சந்தோஷம். ரொம்ப கஷ்டம்..இருந்தாலும் உங்களுக்காக பெரிய மனது பண்ணி மாற்றுகிறோம் என்று பதிலனுப்பியும் மனுஷன் கடைசி நேரத்தில் கடுக்கா கொடுத்துவிட்டார். ஹூம் கிளிக்கு ரெக்கை முளைச்சிடுத்து ..கிளி பறந்து போயிடுத்தூ... ஒரு வேளை எனக்கு ஜாதகத்துல போண்டா தோஷம் இருக்குமோ??

Tuesday, September 19, 2006

மலையாளக் கரையோரம்

எங்க ஊருக்கு மிகப் பக்கத்திலிருந்தும் இந்த முறை தான் கேரளாவில் காலடி எடுத்துவைத்தேன். சும்மா சொல்லக் கூடாது...நாகர்கோவிலைத் தொடும் போதே வித்தியாசத்தை உணர முடிகிறது. நாகர்கோவிலில் காற்று அள்ளுகிறது. கேரளா பச்சை பசேலென்று ஜிலு ஜிலுவென்று அழகாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் தென்னை மரங்களைப் பார்க்க முடிகிறது. ஆனாலும் இளநி பத்து ரூபாய்க்கு தான் விற்கிறார்கள். பெண்களெல்லாம் அப்போது தான் குளித்த மாதிரி முடியை மழைப் பின்னல் போட்டுக் கொண்டு நெற்றியில் சந்தன தீற்றலுடன் ப்ரெஷ்ஷாக இருக்கிறார்கள். கேரள மக்கள் ரொம்ப கறாராக இருக்கிறார்கள். பேரமெல்லாம் ரொம்ப பேசமுடிவதில்லை. ஆனால் சென்டிமென்டுக்கு மடிகிறார்கள். ஏர்போர்ட்டில் நான் தின்று கொண்டிருந்த வாழைப்பழத்தை அவசரமாக வாயில் ஒதுக்கிக் கொண்டு பேசியதில் மலையாளி என்று நினைத்துக்கொண்டு கொண்டு சம்சாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் பார்த்த மலையாளப் படங்களில் டயாலாக் ஞானம் ரொம்ப இல்லாததால் எல்லாத்துக்கும் முன்னாடியோ பின்னாடியோ ஒரு ஓ பொட்டுக் கொண்டு அஃறினையில் பேசி "கோப்பியோ", "சாயாவோ", "ஓ பத்து ரூபாயோ" "இங்கன வரும்", "அங்கன போகும்" என்று மலையாளி மாதிரி ஆக்ட் கொடுத்தது கொலையாளி லுக்கில் போய் முடிந்தது.
இருந்தாலும் மாமியார் வீட்டு ரசப் பொடி ஏர்போர்ட்டில் மாட்டிக்கொண்ட போது இந்த அரகுறை மலையாளமும் கைகொடுக்கவில்லை. டக்கென்று தங்கமணி முழுகாம இருக்கிறார், மூன்று மாதம், இது பிரசவ லேகியப் பொடி என்று சரடு விட்டது வொர்க் அவுட் ஆகியது. "எந்தப் பொண்ட்டாட்டிய்யா பிரசவம்?" என்று சந்தேகப்படாமல் "எனக்கே இந்த விஷயம் இப்போத் தான் தெரியும்" என்று தங்கமணியும் சமத்தாக முகத்தை வைத்துக் கொண்டு கூட சேர்ந்து ஆக்ட் விட்டதில் ரசப் பொடி தப்பித்து நேற்று கூட வீட்டில் தக்காளி ரசம் பிரமாதமாக வந்தது.

திருநெல்வேலி மாவட்டம் நிறையவே மாறிவிட்டது. எங்க ஊரில் எல்லாரும் வீட்டை இடித்து புதுமாதிரியாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஊரில் நக்கலுக்கு குறைச்சலே இல்லை. உள்ளாடை கடையில் "பத்து பனியன் ஜட்டி குடுப்பா" என்றால் "என்ன சார் துபாயா அமெரிக்காவா " என்று கேட்கிறார்கள். "ஏன் உள்ளூர்ல ஒருதனும் போடறதில்லையா..பனியன் ஜட்டியெல்லாம் எக்ஸ்போர்ட்டுக்கு ஒதுக்கிட்டு எல்லாரும் லங்கோட்டுக்கு மாறிட்டாங்களா?"ன்னு பதிலுக்கு கேட்டால் " நாஙகளெல்லாம் ரெண்ட வாங்கி ரொட்டேஷன்ல விடுவோம்...ஜட்டி விக்கிற விலைக்கு உங்கள மாதிரி பத்து இருபதுன்னு ஹோல்சேல்ல வாங்க மாட்டோம்" என்று அங்காலய்த்தார் விற்பனையாளர். சரிதான் இவன் தங்கமணிக்கு மேல இருப்பான் போல இவன் கிட்ட வாயக் குடுத்து வாங்கிக்கொள்ளக்கூடாது என்று சத்தம் போடாமல் வாங்கி வந்துவிட்டேன்.

நம்ம யோகம், எல்லாம் வாங்கி முடித்த அடுத்த நாள் போத்தீஸில் ரெண்டு வைகிங் ஜட்டி வாங்கினால் ஒரு டின்னர் பவுல் ப்ரீ என்று போட்டிருந்தார்கள். நாம வாங்கின எண்ணிக்கைக்கு டின்னர் செட்டே சேர்த்திருலாமே என்று எனக்கு ஒரே வயத்தெரிச்சல். அவன் பேசின பேச்சுக்கு "பேசாம கலர் மேட்சிங்கா இல்லை" என்று திரும்பக் குடுத்து இத வாங்கிடலாமா என்ற எனது யோசனை என்னமோ தங்கமணிக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை தலையிலடித்துக் கொண்டார். ஹூம் சட்டிக்கு சட்டியுமாச்சு..ஜட்டிக்கு ஜட்டியுமாச்சு..என்று டயலாக் பேசுவதற்கு வாய்ப்பில்லாமல் "இந்த ஆஃபரெல்லாம் ஒரு நாள் முன்னாடி போட மாட்டீர்களா" என்று போத்தீஸ்காரர்களை திட்டிவிட்டு "சட்டி சுட்டதடா...." பாட்டு பாடிக் கொண்டு வந்தேன்.

Thursday, September 14, 2006

பிலிப்ஸ், சூர்யா, ஜி.ஈ, விப்ரோ, ஓஸ்ராம்..

யாரப் பார்த்து என்ன வார்த்தை பேசற....இன்னும் எத்தனை வெள்ளைக்காரி நைட் அவுட் கேக்கறாங்க தெரியுமா? மார்க்கெட் வேல்யூ அப்பிடியே நிக்குது மா...இந்த தரம் ஊருக்குப் போயிருந்த போது கூட எத்தன மாமிகள் என்கிட்ட வந்து ஜாதகத்த கேட்டா தெரியுமா?

ஹ...ஜாதகம் கேட்டாளா...என்னான்னு..?...மாமா உங்காத்து பொண்ணோட ஜாதகம் கிடைக்குமான்னா?

இப்படியே மெகா சிரியல் மாதிரி பேசிக்கிட்டிரு...இந்த தரம் அய்யா டிசம்பர்ல ஊருக்கு தனியா போறேன்...எமிரேட்ஸ்ல புக் பண்ணப் போறேன்...ஏர்ஹோஸ்டஸெல்லாம் சும்மா மைதா மாவு மாதிரி சூப்பரா இருப்பா..ஒருத்திய அப்படியே தள்ளிக்கிட்டு வந்திடறேன்...அக்கா அக்கான்னு உனக்கும் கூட மாட உதவியா இருப்பா...

சான்ஸே இல்லை இதெல்லாம் சும்மா உதார் தான்னு எனக்குத் தெரியும்

அது!!!!...இந்த...இந்த..பதிபக்தி, புருஷன் மேல அசைக்க முடியாத நம்பிக்கை..இதுல தான் என்னை அப்பிடியே கவுத்தறமா ..தீர்க்க சுமங்கலியா இரு...

யோவ் செவாலியே...கொஞ்சம் அடங்கறது...இது உங்கமேல உள்ள நம்பிக்கை இல்லை...மைதா மாவு மேல உள்ள நம்பிக்கை...அவங்களெல்லாம் உங்களை திரும்பி பார்த்து பேசி...வந்ந்ந்துட்டாலும்.. ஹூம்..ஏதோ விதி என் கண்ணை மறைச்சு...ஹ்ரிதிக்கோட போறாத நேரம்...இங்க வந்து குப்பை கொட்டறேன். நுள்ளிக்கிட்டு வறேன்...தள்ளிக்கிட்டு வறேன்னு...பார்த்து...அப்புறம் ப்ளைன்லேர்ந்து தள்ளி விட்டுற போறாங்க.


***
பி.கு: தலைப்பு --> பல்புகள் பலவிதம் :(

Wednesday, August 30, 2006

பம்பாய்

பம்பாய் என்றால் எனக்கு காலேஜ் படிக்கும் காலத்தில் மனீஷா கொய்ராலா தான் நியாபகத்துக்கு வருவார். அப்புறம் ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வந்ததபோது (பம்பாயை) பயம், ஆச்சரியம், திகைப்பு, குதூகலம் எல்லாம் கலந்த கலவையான உணர்ச்சி தான் வந்தது. பம்பாய் இன்னமும் அதே மாயா லோகமாகத் தான் இருக்கிறது. நம் ஊர்களில் கக்கூஸ் கட்டக் கூட போதுமா என்று யோசிக்கும் இடத்தில், அட்டாச்ட் பாத்ரூமுடன் ஹால் கட்டி குடித்தனம் போய், கையை தட்டிக்கொண்டு பஜனை செய்து தீபாராதனை காட்டி பிரசாதம் குடுக்கிறார்கள். என்ன தான் விண்ணை முட்டும் கட்டிடங்கள், சிக்கனமாக உடையணிந்த பெண்கள், சீட்டுக் கட்டு மாதிரி பணம் புரளும் இடமாயிருந்தாலும் ஓரமாய் சாக்கடையும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.

பம்பாய் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாய் இருக்கிறது. பள பளவென்று எந்த நாட்டிலும் பார்க்காத சர்வீஸுட்ன் பட்டயக் கிளப்புகிறார்கள். இமிகிரேஷன் கவுண்டரில் நிற்கும் போதே எங்கேயிருக்கிறது என்று தெரியாத கேமிராவால் படம் பிடித்துவிடுகிறார்கள். எனக்கு பயங்கர பெருமிதம். பின்னால் நின்று கொண்டிருந்த வெள்ளக்கார மொட்டைய தலையில் தட்டி "டேய் மொட்டை பார்த்தியா எங்க ஊர?" என்று சொல்லவேண்டும் போல இருந்தது. "சூப்பர் சர்வீஸ்..கலக்குறீங்க " என்று ஆபிஸர்களிடம் பாராட்டிவிட்டு வந்தேன்.

தங்கமணி முன்னால் ஆட்டோகாரரிடம் தெரிந்த அரைகுறை ஹிந்தியை வைத்துக் கொண்டு பந்தா விட்டதில் கடுப்பாகிவிட்டார் மனுஷன். கடைசியில் எவ்வளவாச்சு என்று சூப்பர் பந்தாவாக கேட்க இருபத்தெட்டு ரூபாய்க்கு ஹிந்தியில் ஏதோ சொன்னார். எனக்கு படிக்கும் போது ஹிந்தி மாமி சொல்லிக்கொடுத்ததெல்லாம் மறந்து போய், மாதுரி தீட்ஷித் "ஏக் தோ தீன்" பாட்டில் சொல்லிக்கொடுத்த பதிமூன்று வரை தான் மண்டையில் நின்றது. அப்புறம் கேவலமாக சமாளித்து அதுவும் வழக்கம் போல் ப்ளாப் ஆகி ஹிந்தியில் "அற்பப் பதரே" எப்படி சொல்வாரகள் என்று தெரிந்து கொண்டுவந்தேன்.

அக்கா பையன் "ஞாயிற்றுக் கிழமைகளில் ட்ரெயினில் கூட்டமே இருக்காது படுத்துக் கொண்டு போகலாம்" என்று சொன்னதை நம்பி ஏமாந்து எலெக்ட்ரிக் ட்ரெயினில் சி.எஸ்.டி போய் ரோட்டுக் கடைகளைப் பார்த்து வந்தேன். ட்ரெயினில் வடநாட்டு கதாநாயகி மாதிரி என்னை கசக்கி பிழிந்துவிட்டார்கள். அரைகுறை ஹிந்தியில் ரோட்டோர டி.வி.டி கடைகளில் வாங்கிய அனுபவம் அலாதியானது. முக்கால் வாசி கடையில் பர்மா பஜார் மாதிரி 'அத வாங்கிக்கோ இத வாங்கிக்கோ என்று ஒரே படுத்தல். ஒரு கடையில் மிக்கி மவுஸ் கலெக்க்ஷனை வாங்கி செல்லும் படி ரொம்பப் படுத்த "இந்தக் கலெக்க்ஷன் எங்க வீட்டுல நிறைய இருக்கு " என்று அக்கா பையன் அழகாக சமாளித்துவிட்டான். நான் தான் கற்பூரமாச்சே உடனே அதே டெக்னிக்கைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டேன். ஆனால் நமக்கு என்று வந்து சேர்வார்களே..அடுத்த கடையில் ஒரு மூதேவி என்னைப் பார்த்து என்ன நினைத்தானோ தெரியவில்லை குசுகுசுவென்று அதுவேண்டுமா இது வேண்டுமா என்று புரியாத ஸ்லாங்கில் கேட்டான். நானும் மிக்கி மவுஸ் தான் என்று நினைத்துக் கொண்டு வழக்கம் போல "அந்த கலெக்க்ஷன் எல்லாம் நிறைய இருக்குப்பா..பார்த்துப் பார்த்து போர் அடிச்சாச்சு" என்று மானே தேனே போட்டு சொல்ல...கடைக்காரனும் அக்கா பையனும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த மூதேவி உடையில்லாமல் நடிக்கும் முழு நீல வண்ணப்படம் வேண்டுமா என்று கேட்டானாம். "போங்கடா நீங்களும் உங்க ஹிந்தியும்" என்று வந்துவிடேன்.

பாவ் பாஜி, பேல் பூரி, ரகடா பேட்டிஸ், சிக்கு மில்க் ஷேக் என்று சகட்டு மேனிக்கு அடித்து நொறுக்கியதில் கார்க் புடுங்கிக் கொள்ளும் படலம் பம்பாயிலிருந்து ஆரம்பித்தது. மழைவேறு. பம்பாயே மிதக்கிற மாதிரி இருந்தது. அதிலும் "சலோ பாய், சலோ பாய்" என்று மும்பைகர்கள் ஓடத் தான் செய்கிறார்கள். வேகமாக ஹிந்தி பேசுகிறார்கள். "ஹிந்தி தெரியாது" என்றால் இன்னும் அதிவேகமாக ஹிந்தியில் பேசுகிறார்கள். பம்பாயில் விலைவாசி எகிறிவிட்டது என்று தோன்றியது. ஹோட்டலில் முப்பது ரூபாய்க்கு வாழ்நாளில் இதுவரை குடித்திராத அருமையான டீ கொடுத்தார்கள்.

வரும் போது இரண்டு நாள் ஹோட்டல் வாசம். வேளா வேளைக்கு ஏசியைப் போட்டுக்கொண்டு தூங்குவது. சாப்பாடு, டிபன் என்று மெனுவைப் பார்த்து ஆர்டர் செய்வது. இருக்கிற இடத்தை விட்டு நகராமல் சாப்பிடுவது, போர் அடித்தால் ஊர் சுற்றுவது என்று திவ்யமாக நேரம் போனதே தெரியவில்லை. வழக்கமாய் அங்காலாய்க்கும் "பேசாமல் நல்ல ஏரோப்பிளேன் கம்பெனி முதலாளி பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கொண்டிருக்கலாம்" என்ற டயலாக்கில் ஏரோப்பிளேன் காரனை தூக்கி விட்டு ஹோட்டல்காரன் பொண்ணுக்கு மாறிவிட்டேன். தங்கமணியும் " கடவுளே அடுத்த ஜென்மத்தில் ஏரோப்ப்ளேன்காரன் பொண்ணா மட்டும் பிறக்கக் கூடாது" என்ற டயலாக்கை ஹோட்டல்காரனுக்கு மாற்றிவிட்டார்.

Saturday, August 26, 2006

ஆவணி அவிட்டம்

ஒரு நல்லவன் உலக அமைதிக்காக சாமிய வேண்டி உண்மையா தவமிருந்தா, "ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது"ன்னு கண்ட கண்ட ஆங்கிள்ல படம் எடுத்து பெயரக் கெடுக்கிறதுன்னா இது தான். படம் எடுத்தவர் யாருன்னு சொல்லவேண்டியதில்லை திருமதி.டுபுக்கு (ஹூம் நமக்கு எதிரி வீட்டுக்கு வெளியிலயா இருக்கப்போறாங்க)

Wednesday, August 23, 2006

குக்புடு

என்னைப் பொறுத்தவரையில் வெள்ளைக்காரன் விடுமுறைக்கு போவதற்கும் நாம் போவதற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. வெள்ளைக்காரன் ரெஸ்ட் எடுக்க விடுமுறைக்குப் போவான். நாம் விடுமுறைக்குப் போயிட்டு வந்தா ரெஸ்ட் எடுக்கவேண்டும். இந்தியா ட்ரிப் அவ்வளவு அலைச்சல். தொடர்ந்து ரெண்டு நாள் அந்த கால ஜெயமாலினி குலுக்கு டான்ஸ் ஆடிய மாதிரி உடம்பெல்லாம் வலி பின்னுகிறது. இந்த தீவிரவாத மூதேவிகள் புண்ணியத்தில் ஏர்போர்ட்டில் நோண்டி நொங்கெடுத்துவிட்டார்கள். உள்ளூர் ஏர் டெக்கானில், நேரம் காலம் தெரியாமல் மாமியார் வீட்டிலிருந்து வந்திருந்த ரசப் பொடி இருந்த ஒரு கைப்பையை செக்கின் செய்யாமல் கையிலெடுத்துக் கொண்டு சமாளிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. மாமியார் வீட்டிலிருந்து செய்துகொடுத்த பொடியை, கண்ணில் போட்டு ப்ளேனை கடத்துவது மாதிரியான அல்ப விஷயங்களுக்கெல்லாம் வேஸ்ட் செய்தால் வீட்டில் தீவிரவாதி ஆகி என்னைத் தொலைத்துவிடுவார்கள் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

குழந்தைக்கு வைத்திருந்த பாலைக் கூட குடித்துக் காட்டச் சொல்லுகிறார்கள். ஏற்கனவே பால் குடிக்கப் படுத்தும் என் இரண்டாவது பெண் அந்த நேரத்துக்கு பால் குடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்க கடைசியில் நானே பாட்டிலை லேசாக வாயில் வைத்துக் குடித்துக் காட்டினேன். நான் குடிக்கும் நேரம் பார்த்து வந்து சேர்ந்த இன்னொரு பெண் "இன்னுமா நீ பாட்டில் பால் குடிக்கிற?" என்கிற ரீதியில் என்னைப் பார்த்து சிரிக்க..எல்லாம் இந்த தீவிரவாத மூதேவிகளை சொல்லனும்.

இந்த முறை குழந்தைகளுக்கு உடம்புக்கு எதுவும் வராதது ரொம்ப ஆறுதலாக இருந்தது. எனக்குத் தான் வழக்கம் போல் கார்க் புடுங்கிக் கொள்ள..இருந்தாலும் இன்டேக்கை குறைக்காமல் சாப்பிட்டதில் மார்க்கண்டேயன் மாதிரி கூடாமல் குறையாமல் இருந்த வெயிட் நான்கு கிலோ ஏறியிருக்கிறது. இம்சை அரசன் பார்க்க சென்று குழந்தைகளுக்கு தியேட்டர்களை அறிமுகம் செய்தோம். எங்க ஊர் தியேட்டர்களில் இன்னமும் முக்கியமான காட்சிகளுகு சிவப்பு மற்றும் நீலத்தில் விளக்குகள் போட்டு ஸ்பெஷல் எபெக்ட் குடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போல் இன்னமும் செவிப்பறை கிழியும் அளவிற்கு வால்யூம். பாட்டு வந்தால் இன்னமும் கூடுகிறது. இந்த வால்யூமிலும் முன்னாடி இருந்தவர் எப்படி தூங்கினார் என்று ஆச்சரியமாக இருந்தது.

இந்த முறை சென்னை வழியாக இல்லாமல் பம்பாய், திருவனந்தபுரம் மார்க்கம். பம்பாய் அனுபவங்கள், மலையாளக் கரையோரம், நெல்லை சந்திப்பு, பகிர்ந்து கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.சரி சரி எல்லாவற்றையும் ஒரே போஸ்டில் போட்டு முடித்துவிட முடியுமா? பாஸ்டன் பாலா மாதிரி இல்லாட்டியும் ஒரு ரெண்டு போஸ்டாவது படத்தோடு போடவேண்டாமா. மெயில் வேறு குமிந்து கிடக்கிறது. இன்னமும் க்ளியர் செய்து முடிக்கவில்லை. வழக்கமாக காத்துக்கொண்டிருக்கும் அகர்வால் பெண்கள் தவிர இப்பொது ஜெயின், மற்றும் பஞ்சாபி பெண்களும் கல்யாணத்துக்கு மெயிலில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஷாதி க்ரூப் இமெயில் தொல்லை தாங்க முடியவில்லை. தங்கமணி பார்ப்பதற்கு முன்னால் க்ளியர் செய்து விட்டு வருகிறேன். மீதி அடுத்த பதிவில்...:)

Wednesday, July 26, 2006

Help

Please pardon me for this english post. The tamil converters are not working here in this internet cafe. I need some urgent help from people who have acquaintances in San Diago, USA. I need some information. Thanks in advance.

- Dubukku
well and sound from Nellai :)

Tuesday, July 18, 2006

லீவு

நெல்லை செல்ல இருப்பதால் ஒரு மாதத்திற்கு என் தொல்லையிலிருந்து உங்களுக்கெல்லாம் லீவு. இந்தியாவிலிருந்து மீண்டும் ஆகஸ்டு 21ம் திரும்ப வருவேன். அதுவரை இந்த ப்ளாகை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

தேன்கூட்டில் ஓட்டுப்போடுங்கள் என்று என்னுடைய இந்த மாசக் கழுத்தறுப்பு இருக்காது. என்னுடைய ஓட்டையே என்னால் போடமுடியுமா என்று தெரியவில்லை. அனேகமாக முடியாது என்று தான் நினைக்கிறேன். அடுத்தமாத போட்டியிலும் கலந்துகொள்ள முடியாது. அப்புறம் உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள். மீண்டும் அடுத்த மாதம் சந்திப்போம். வணக்கம்.

Thursday, July 13, 2006

The Ring



விடலைப் பருவத்திலிருந்தே திகில்/ பேய்ப் படங்களை பார்ப்பது ரொம்பவும் பிடிக்கும். “பாதி ராத்திரி எக்ஸாசிர்ஸ்ட தனியா பார்த்தோம்ல” என்று பந்தா விட்டுக்கொள்வது படத்தை விட த்ரில்லாக இருக்கும். சமீபத்தில் தி ரிங்க் படத்தின் மேலோட்டமான கதையை கேள்விப் பட்டதிலிருந்தே இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்று ரொம்பவும் ஆர்வமாக இருந்தேன். வீடியோ லைப்ரரியில் டி.வி.டியைப் பார்த்ததும் லபக்கென்று கவ்வி விட்டேன்.

இந்த மாதிரி ஆர்வமான படங்களைப் பார்ப்பதற்கு மனைவி குழந்தைகளை தாஜா காட்டி பேக்கப் செய்துவிட்டு தனியாளாக டுபுக்கு தியேட்டரில் படத்தை ஓடவிடுவது வழக்கம். இந்த படத்துக்கு தாஜா செய்வது அவ்வளவு கஷ்டமாக இல்லை. "பயமா எனக்கா...இந்த ரெண்டு மணி நேர படத்துக்கா?...இங்க நான் குடித்தனமே நடத்திகிட்டு இருக்கேன்.." என்று க்ளீனாக சமாளித்துவிட்டதாக நினைத்துக் கொண்டே மாடிக்குப் போய்விட்டார்கள். சரவுண்ட் சவுண்டெல்லாம் கும்முன்னு ஏத்தி ராத்திரி பதினோரு மணிக்கு ஆரம்பித்தாகிவிட்டது. படத்தின் கரு என்னவென்றால் இரண்டு நிமிடம் ஓடும் ஒரு வீடியோ கேஸட்டைப் பார்த்து முடித்தவுடன், பார்த்தவர்களுக்கு ஒரு போன் வருகிறது. அதில் ஒரு பெண் குரல் "இன்னும் ஒரு வாரம்" என்று டைம் குடுக்கிறது. கரெக்டாக ஒரு வாரத்தில் அவர்கள் (விகாரமாக) இறந்துவிடுகிறார்கள். படத்தின் கதாநாகியின் சொந்தக்கார பெண் இறந்துவிட, அதை துப்பறிகிறேன் பேர்வழி என்று அவரும் அவர் பையனும் பார்த்துவிடுகிறார்கள். அதில் ஆரம்பிகிறது வினை. அது ஏன், எப்படி, நடக்கிறது கதாநாயகி எப்படி தப்புகிறாள் என்பது தான் கதை.

கிங்காங்கில் கொரில்லாவுடன் லவ்ஸ் விட்ட நவோமி தான் கதாநாயகி. படம் நன்றாக எடுத்திருக்கிறார்கள். திகில் ரேட்டிங்கில் ஓகேக்கு அடுத்த மேல் ரகம். வழக்கமாக பேய்ப் படங்களில் வரும் ரத்தம், விகாரமாக சிதைந்த முகம் இதையெல்லாம் மட்டும் நம்பாமல் கதையில் "பேய் வருது பேய் வருது" என்று பீதியைக் கிளப்பி, நம்மை திகிலைடைய வைத்திருக்கிறார்கள். கதாநாயகியும் , அவர் பையனும் எப்படி தப்புகிறார்கள் என்ற முடிவு ஹாலிவுட் ரகம். ஆனால் அதை சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது. அப்படி என்ன அந்த வீடியோ டேப்பில் இருக்கு என்று ஆர்வம் கொப்பளிக்க, படத்தில் முதல் முக்கால் மணி நேரத்திலேயே காட்டி விடுகிறார்கள். கரெக்டாக அதைப் பார்த்து முடித்ததும் எதற்கும் இருக்கட்டும் என்று நான் எங்கள் வீட்டுப் தொலைபேசியை ஆஃப் செய்துவிட்டேன். இருந்தாலும் அடுத்த வீட்டில் இருக்கும் அம்மணி பாதி ராத்திரிக்கு மேல் பெருச்சாளி குடைவது மாதிரி குடைந்து பாத்திரங்களை தட தட வென்று கீழே போட்டு அவர் பங்குக்கு ஸ்பெஷல் எஃபெக்ட் குடுதத போது சரவுண்ட் சவுண்டை ஆஃப் செய்துவிட்டேன்.

பொதுவாக பேய்ப் படங்களில் பேயைக் காட்டும் வரை தான் பேச்சுலர் மாதிரி பயமாக இருக்கும். அப்புறம் பழகிவிடும். அதனால் தானோ என்னவோ இந்தப் படத்தில் கடைசியில் தான் பேயைக் காட்டுகிறார்கள். படத்தில் "ரிங்" என்றால் என்ன என்பதில் முக்கியமான கதை முடிச்சை வைத்திருக்கிறார்கள்.(ஆனால் இந்த ரிங் மேட்டரில் கொஞ்சம் டெக்னிக்கல் ஓட்டை இருக்கிறது. படம் பார்த்துவிட்டு ஐஎம்டிபியில் போய் பார்த்தீர்களானால் நான் சொல்லுவது புரியும். எதற்கு சஸ்பென்ஸை உடைப்பானேன்?)

திகில் படங்களில் பின்ணனி இசைக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தப் படத்தில் அது ஓ.கே ரகம் தான். இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமோ என்று தோன்றியது. திரைக்கதை நன்றாக இருந்தது. முன்னர் சொன்னமாதிரி சஸ்பென்ஸை மெதுவாக உடைத்து நம்மையும் ஆர்வத்தோடு எதிர்பார்க்க வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்தப் பேய் எதற்காக இவ்வாறு செய்கிறது என்பதையெல்லாம் விளக்கவில்லை. ரிங் 2வில் சொல்லியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இப்பொது ரிங் 2 வைத் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அது முதல் படம் மாதிரி அவ்வளவு நன்றாக இல்லை என்று கேள்விப்பட்டேன். வேறு உங்களுக்குப் பிடித்த நல்ல பேய்/திகில் படங்கள் இருந்தாலும் பின்னூட்டத்தில் சொல்லுஙகளேன். தேர்ந்தெடுத்துப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். நன்றி.

Sunday, July 09, 2006

சாமியாண்டி

"வா சாமியாண்டி, அய்யா உன்னையத் தான் காலையிலேர்ந்து கேட்டுக்கிட்டிருக்காரு"

"பொண்ணுக்கு மாசம்ங்க..பொஞ்சாதிய வுடப் போயிருந்தேனுங்க...இப்பத் தான் சேதி கிடைச்சுது அய்யா கூப்பிடாங்கன்னு அப்பிடியே போட்டுட்டு ஓடியாறேன்"

ஒருமையில் அழைக்கப்பட்ட சாமியாண்டிக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். கண்கள் லேசாக பஞ்சடைய ஆரம்பித்திருந்தது. ஒல்லியான தேகம், கருத்துச் சுருங்கிய ஒட்டாத தோல், நெற்றியில் அழிந்தும் அழியாமலும் காலையில் பூசிய திருநீர். போட்ட கூழைக் கும்பிடு போலீஸ் மீதிருந்த பயத்தையும் மரியாதையும் பறை சாற்றியது.

"சாமியாண்டி பத்து வருஷத்துக்கப்புறம் நம்ம ஜெயிலுல ஒரு தூக்குத் தண்டனை தீர்ப்பாயிருக்கு. நீதான் முன்னாடி இதெல்லாம் பார்த்துக்கிட்டனு ரெக்கார்டு இருக்கு..இதையும் நீ தான் கூட இருந்து முடிச்சு குடுக்கனும் என்ன..."

"பெரிய மனசு பண்ணி சமூகம் என்னை மன்னிக்கனும்...உசுர எடுத்துட்டு வூட்டுல கால் வைக்காதன்னு பொஞ்சாதி கறாரா சொல்லி அந்த தொழில வுட்டு நாளாச்சுங்க..இப்போ திரும்பவும்..எப்படிங்க..அய்யாகிட்ட மாப்பு கேட்டுக்கிறேனுங்க"

"அதெல்லாம் ஒன்னும் பேசக்கூடாது...நீ கூட இருந்து கயிறு போடறத மட்டும் பார்துக்கிடாப் போதும்...மத்ததுக்கெல்லாம் ஆள் இருப்பாங்க.. நாங்கென்ன டெய்லியா கூப்பிட்டுக்கிட்டிருக்கப் போறோம்? எனக்கே என் சர்விஸ்லயே இது தான் முதல் தரம்னா பார்த்துக்கோ...பொஞ்சாதிக்கெல்லாம் சொல்லக்கூட வேண்டாம்... பிரபாகர்...சூப்பரிண்டன்ட் கிட்ட சொல்லி சாமியாண்டிக்கு ஆயிரத்தைநூறுன்னு சொல்லிடுங்க...ஐந்நூறு இப்போ கைல குடுக்கச் சொல்லுங்க, மீதிய விஷயத்த முடிச்சுட்டு வாங்கிக்க,...பேப்பர்ல வேண்டாம் நான் சொன்னேன் சொல்லிடுங்க...சாமியாண்டி...விஷயம் வெளியே போகாது...நீயும் இதப் பத்தி வெளில மூச்சு விட வேண்டாம்..என்ன சரியா...கூட்டிக்கிட்டு போய் ஆகிறதப் பார்க்கச் சொல்லுங்க"

சாமியாண்டியின் சம்மததுக்கெல்லாம் அங்கு யாரும் காத்திருக்கவில்லை. சாமியாண்டி அங்கேயே பென்ஞ்சில் உட்கார்ந்து கொண்டார். மனது மிகவும் குழப்பமாக இருந்தது. வெட்டியானாக இருந்த தனது தந்தையின் தொழிலை தான் ஏற்று நடத்தி..காசுக்காக தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதையும் ஏற்றுக்கொண்டு...அந்த தெம்பெல்லாம் இப்போது மனதில் கொஞ்சம் கூட இல்லை. அத்தோடு நல்லது கெட்டது குழப்பம் வேறு. "செத்து வர்ற பொணம் மாதிரி வேற..உசுரோடு இருக்கறப்பவே .துணியப் போட்டு முவத்த மூடறதுங்கிறது வேற..அவங்க மனசு என்ன பாடு படும்.. போகிற ஆத்மா சாவம் நமக்கு வேணாம்சாமி...இல்ல நீ காசு தான் முக்கியம்ன்னு இந்தப் பொழப்பு பாக்கிறதா இருந்தாச் சொல்லு நானும் என் புள்ளையளும் சுள்ளி பொறுக்கி கஞ்சியாக்கிக்கிறோம்...எங்கள்வுட்ரு சாமி" இசக்கியம்மா சொன்னதற்காக ஊரைவிட்டு ஊர் போய் நாலு வருஷம் இருந்துட்டு எல்லாம் முடிந்தது என்று திரும்ப வந்தால், ஆறு வருடங்களுக்கப் பிறகு இப்போ திரும்பவும் இது.

"அதெல்லாம் மாறியாச்சுடா…இப்போலாம் கவருமெண்டுலயே இதுக்கெல்லாம் ஆள் இருக்காங்க" என்று சாமிநாதப் பிள்ளை சொன்னதெல்லாம் உண்மையில்லையா? இல்ல பேப்பருல வேணாம்ன்னு அய்யா சொன்னது இதத் தானா?
“ தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி.”..சாமியாண்டியின் உதடுகள் அவரையும் அறியாமல் முனுமுனுத்துக் கொண்டிருந்தன

"சாமியாண்டி...வந்து பணத்த வாங்கிக்க...அடுத்த வாரம் புதன்கிழமை..செவ்வா ராவே வந்துறனும். பொஞ்சாதிக்கிட்ட என்ன சொல்லனுமோ சொல்லிக்கோ...காலைக் கருக்கல்லயே போயிடலாம்...என்ன"

"என்னவே டவுண் ஆஸ்பதிரிக்காக பொஞ்சாதிய பொண்ணு வீட்டுலயே வுட்டுட்டு வந்துட்டிராமே நம்மூர் மருத்துவச்சி பாக்காத பிரசவமா?" சோலையப்பன் குரல் கேட்டுத் தான் தன்நினைவே வந்தது சாமியாண்டிக்கு. வீட்டுக்கு எப்படி நடந்து வந்தோம் என்றெல்லாம் நினைவே இல்லை. இரவெல்லாம் தூக்கமில்லாமல் புரண்டு புரண்டு படுத்தார். வயது தான் மனதில் எவ்வளவு மாற்றங்களை கொண்டு வருகிறது. பத்து வருஷத்துக்கு முன்னால் சேதி வந்தால் துள்ளிக் குதித்து காரியங்கள் நடத்தியது என்ன, முன்பணம் வாங்கி சீலை துணிமணி வாங்குவதென்ன...இதோ வாங்கிய பணம் விளக்குப்பிறையில் சீண்டுவாரில்லாமல் காற்றில் தளர்ந்து கிடக்கிறது.

"சாம்பல் பூசிய சிவனான்டி சொரூபம் டா" என்று ஊரில் காத்து கருப்பு அண்டியவர்கள், வயதுக்கு வந்தவர்கள் என்று சாமியாண்டியிடம் தான் திருநீரு போட்டுக்கொள்வார்கள். கௌரவமாய் இருந்திருக்கிறது. ஆனால் இன்று ..? ஜெயில் பொழப்பு கொலை செய்வது மாதிரி இருக்கிறது. நான் என்ன கொலையா செய்கிறேன்...அரசாங்கம் சொல்லித் தான் செய்கிறேன் அத்தோடு தூக்கில போடுறவனெல்லாம் என்ன மகாத்மாவா? வேண்டாமென்று சொன்னால் விட்டுவிடுவார்களா? வட்டாரத்திலேயே அவனை விட்டால் இந்தத் தொழிலுக்கு ஆள் கிடையாது. தெரியாமலா தேடிப் பிடித்துக் கூப்பிட்டிருக்கிறார்கள்.

"அய்யா முட்டை, விளெக்கெண்ணை கொண்டாந்திருக்கேன்...கயிற கொடுத்தீங்கீன்னா..ஊறப் போட்டிருவேன்..முடிச்சு சுளுவா இறுகிடும்...நோவாத காரியம் ஆயிடும்" - சாமியாண்டி திரும்ப ஜெயில்லுக்குப் போன போது தெளிவு இருந்ததாக சொல்லமுடியவில்லை.

"அய்யா அப்பிடியே அந்தாளை கொஞ்சம் பார்க்கலாமுங்களா? மனசு கேக்கமாடேங்குதுங்க ரெண்டு வார்த்தை பேசனுங்க.."

"யோவ் அதெல்லாம் வழக்கம் கிடையாதுயா...அதுவும் இன்னும் ரெண்டு நாள்ல டேட்ட வைச்சிகிட்டு... ஒன்னுகிடக்க ஒன்னாச்சுன்னா நாங்க பதில் சொல்லி மாளாதுயா..அவன் கிட்ட போய் இன்னா பேசப் போற? வேணும்னா ஒரு நிமிஷம் தான்...தள்ளியிருந்து பார்த்துட்டு கரெக்டா வந்துரனும்...எதாவது சொல்லி கில்லி வைக்காத...அவனே கிலியடிச்சு சோறு வேண்டாம் தண்ணி வேண்டாம்ன்னு கிடக்கான்..பதமா நடந்துக்கோ"

சாமியாண்டி அந்த செல்லை நெருங்கிய போது அவன் விட்டத்தைப் பார்த்த மேனியாக படுத்திருந்தான். கண்களில் பாவை சலனமில்லமால் வெறித்துக் கொண்டிருந்தது. வைத்த சாப்பாடு சீண்டாமல் "ஈ" மொய்த்துக் கொண்டிருந்தது. முப்பத்தைந்து வயதிருக்கலாம். கண்களின் ஓரத்தில் ஈரம் மண்டிப் போயிருந்தது.

"சாமீ..." சாமியாண்டி குரல் கரகரத்தது.

அவன் உடம்பில் அசைவு இல்லை. கண்கள் மட்டும் குரல் வந்த திக்கை நோக்கின.

"சாமீ...இந்தப் பாவப்பட்டவன் தான் புதன்கிழமை உங்களுக்கு...." கம்மலாக வந்த குரலும் அதற்கு மேல் சாமியாண்டிக்கு வரவில்லை.

"சிவன் கோயில் துன்னூறு இருக்கு தரட்டுமா?" திருநீரை எடுத்து தனக்கும் இட்டுக்கொண்டு அவனைப் பார்த்தார். அவனிடம் இன்னமும் சலனமில்லை.

"ஏழப் பொழப்பு…பாவப்பட்ட பொழப்பு...மவ மாசமா கிடக்கா, மூத்தது பொட்டப் புள்ள...தாயில்லா புள்ளையா ஆகிடக்கூடாதுங்க...சாமீ பாவத்துக்கு நாங்க ஆளாகக் கூடாதுங்க..." அவன் எதிர்பார்க்காத தருணத்தில் கம்பிகளுக்கு வெளியே தலைக்கு மேல் கைகளைத் நீட்டித் தூக்கி கும்பிட்டு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் சாமியாண்டி. "திருச்சிற்றம்பலம்...திருச்சிற்றம்பலம்..தரையை முட்டிய நெற்றியுடன் சாமியாண்டியின் குரல் மட்டும் தழுதழுப்பாக வந்துகொண்டிருந்தது. அவன் எழுந்து உட்கார்ந்தான்.அவன் அதை எதிர்பார்க்கவில்லை.

செவ்வாய் இரவு சாமியாண்டிக்குத் தூக்கம் இல்லை. அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் ஜெயிலிலேயே குளித்து திருநீரணிந்து கொண்டு கிழக்கு பார்த்து கும்பிடு போட்டு வணங்கினார். நான்கு மணிக்கெல்லாம் தூக்கு மேடைக்கு போய் எல்லாவற்றையும் ஒரு முறை சரி பார்த்தாகிவிட்டது.

அவனை இரண்டு காவலர்கள் கூட்டி வந்த போது சாமியாண்டிக்கு தொண்டை அடைத்தது. கூட்டி வரும் போது அவன் கால்கள் தள்ளாடிய மாதிரி இருந்தது. அவன் முகத்தில் கருப்புத் துணி போர்த்த அதிகாரி பணித்த போது அவன் கைகள் நடுங்குவதாக சாமியாண்டிக்கு பட்டது. அவன் கண்களில் இப்போதும் சலனமில்லை. துணி போடு மூடும் போது இருவர் விழிகளும் சந்தித்துக் கொண்டன. ஒரு வினாடி தான், அதற்கு மேல் சாமியாண்டியால் அதை நேர் கொள்ள முடியவில்லை. "என்னப்பனே...நோவாம நொடியில இந்த உசிரு பிரிஞ்சிரனும்..அருள் புரியப்பா..." அவர் மனதில் வேண்டிக்கொண்டது அவனுக்கும் கேட்டுக்குமளவுக்கு அவர் இதயத்தில் எதிரொலித்தது. அவன் கைகளை பின்னால் கட்டும் போது அவரையுமறியாமல் ஒரு நொடி ஆதரவாக தடவி பிடித்துக் கொடுத்தார். அவன் கைகள் பதில் சொல்லுவது போல லேசாக அசைந்தது.

அதிகாரி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே கையசைத்தததும், சாமியாண்டி லீவரை இயக்கிவிட்டு கண்களை மூடிக் கொண்டார். உதடு மட்டும் முனுமுனுத்துக் கொண்டிருதது

பரமேது வினைசெயும் பயனேது பதி ஏது
பசுஏது பாசமேது
பக்திஏ தடைகின்ற முத்தியே தருள் ஏது
பாவ புண்யங்கள் ஏது
வரமேது தவமேது விரதமே தொன்றுமில்லை...


******
****
இந்த மாத தேன்கூடு போட்டிக் கதை.
****

Friday, July 07, 2006

நெல்லையில் வலைப்பதிவர் சந்திப்பு

அன்பான வலைப்பதிவாளர்களே! வரும் ஆகஸ்டு மாதம் ஐந்தாம் தேதியோ ஆறாம் தேதியோ நெல்லையில் ஒரு வலைப்பதிவாளர் சந்திப்பு நடக்க இருக்கிறது. இந்த சந்திப்பு மிக மிக விஷேஷமானது. மற்ற அகில இந்திய/ இன்டர்நேஷனல் வலைப்பதிவர் சந்திப்புகள் மாதிரி நீங்கள் சாப்பிடும் போண்டாவுக்கு நீங்களே காசு கொடுக்கவேண்டாம். சந்திப்புக்கு வரும் வலைப்பதிவர்களுக்கு இலவச சைவ ரொட்டிசால்னா ஏற்பாடு செய்யப்படும். இந்த அறிவிப்பை உபயோகப்படுத்தி சில விஷமிகள் மாமா,மச்சான், மாப்ள கூட்டத்தைக் கூட்டி வந்து இலவச ரொட்டிதானம் நடத்திவிடுவார்கள் என்பதால் வலைப்பதிவர் சந்திப்புக்கு வருபவர்கள் முன்னமே தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன். அடையாள அட்டை தயாரிப்பதற்கு உபயோகமாக இருக்கும். நெல்லை மைந்தர்கள் வலைபதிவுலகத்தில் நிறைய இருந்தாலும் எத்தனை பேர் நெல்லைக்கு வரமுடியும் என்று தெரியாததால்..தயவு செய்து பின்னூட்டத்திலோ, r_ramn at yahoo dot com என்ற மின்ன்ஞ்சலிலோ தொடர்பு கொள்ள தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூட்டம் மட்டும் கூரையைப் பிய்த்துக் கொண்டு வந்தால் இதையே முப்பெரும் விழாவாக மாத்திவிடுவோம்.

என்னைத் தவிர ஒருதருமே வராவிட்டாலும் இந்த வலைப்பதிவர் சந்திப்பு எங்க வீட்டு அடுக்களையில்(ரொட்டி சால்னா தவிர்தலாக) கண்டிப்பாக நடந்தே தீரும் என்று உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.

கடலென புறப்பட்டு ஆதரவு தாரீர்.

Wednesday, July 05, 2006

ஆத்தங்கரை மரமே...2

Previous Parts --> Part 1

ஆத்தங்கரை பாதையின் ஆரம்பத்தில் ஒரு அரசாங்க ஆஸ்பத்திரி இருக்கிறது. அதற்கு எதிரிலே பிள்ளையார் கோயில் ஒன்று உண்டு. மிகவும் பிரசித்தமான கோயில். அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அடுத்து ஒரு வாய்க்கால் உண்டு. பயிர் பாசனத்திற்காக ஓடும் இந்த வாய்க்கால், ஊரில் இருக்கும் எல்லா ஆஸ்பத்திரிகளையும் தொட்டுக் கொண்டு ஓடும். எல்லா ஆஸ்பத்திரி மருந்துக் கழிவுகளும் இந்த வாய்க்காலில் தான் கலக்கும். இதனாலேயே உள்ளூர் டாக்டர்கள் ஏதாவது வியாதியை தீர்க்க முடியாமல் திணறினால் இந்த வாய்காலிலிருந்து ஒரு அவுன்ஸ் தண்ணீரை மருந்தாக குடுத்துவிடுவார்கள், எல்லா ஆஸ்பத்திரி மருந்தும் இதில் கலந்திருப்பதால் தீராத வியாதியும் உடனே குணமாகிவிடும் என்று ஊரிலே ஒரு பலத்த நம்பிக்கை உண்டு.

சர்வரோக நிவாரணி தவிர ஆஸ்பத்திரிக்கு வரும் விசிட்டர் கூட்டத்திற்கு காலைக் கடன் சேவையும் இந்த வாய்க்கால் தான். காலை ஆறு டூ ஏழு காலைக் கடன் மற்றும் இலவச "திவ்ய தரிசன" சர்விஸ். மேற்சொன்ன காரணங்களினால் இந்த வாய்க்கால் சில இடங்களில் கூவத்திற்கு கூவிக் கூவி சவால் விடும். வானரப் படையின் சேட்டை இங்கேயே ஆரம்பித்துவிடும். ஆஸ்பத்திரி வந்ததுமே...பரபரவென்று ஆகிவிடுவார்கள். காலைக் கடன் பார்ட்டிகள் மறைவாக "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல் வருமா" என்று அக்கடா என்று உட்கார்ந்திருப்பார்கள். அது வானரப் படைக்குப் பொறுக்காது. வெறி நாய் மாதிரி கத்திக் கொண்டே அரக்கப் பரக்க ஓடிப் போவார்கள். காலைக் கடன் பார்ட்டி எதோ நாய் தான் தறிகெட்டு வருகிறது போல என்று அடித்துப் பிடித்து எழுந்திருப்பார்கள். வானரப் படை அவர்கள் பக்கத்தில் ஓடிப் போய் "வள்" என்று குலைத்து விட்டு பாதுகாப்பான தூரத்திலிருந்து சிரித்து மகிழும்.

பார்ட்டிக்கு மட்டும் கொஞ்சம் அவசரமாயிருந்து பூஜையில் கரடி மாதிரி புகுந்திருந்தோம் என்றால் அவ்வளவு தான். "வெரவாக்கிலம் கெட்ட நாய்களா...மனுஷன நிம்மதியா போகக் கூட விடமாடேங்கிறேங்களேடா.." என்று சொறிநாயை கல்லெடுத்து அடிப்பது மாதிரி விரட்ட ஆரம்பித்து விடுவார்கள். கல்லடியிலிருந்து தப்பிக்க நிறைய தரம் தலைதெறிக்க ஓடியிருக்கிறோம். சில மரத்தடி மகானுபாவர்கள் பாதி பூஜையில் தவத்தைக் கலைக்க முடியாது என்பதால் "இந்த பாவத்துக்கு நீங்களெல்லாம் மலச்சிக்கல் வந்து முக்கி மண்டைவெடிச்சுத் தான் போகப்போறீங்கன்னு" ரேஞ்சுக்கு இந்தா பிடி சாபமெல்லாம் குடுப்பார்கள்.

எங்க ஊர் ஆற்றங்கரையில் இரண்டு துறைகள் உண்டு. கல்துறை மற்றும் மண் துறை. கல் துறையில் தண்ணீரின் வேகம் ஜாஸ்தியாக இருக்கும். தண்ணீருக்கடியில் மணலில்லாமல் கருங்கல்லும் பாறைகள் இருக்கும். இந்த துறையில் குளிப்பதற்கு கொஞ்சம் பழக்கம் வேண்டும். இல்லாவிட்டால் அடி பட்டு தண்ணீர் அடித்துக் கொண்டு போய்விடும். மணல் துறையில் சுகமாக இருக்கும். கடற்கரை மாதிரி தண்ணீருக்கடியில் மணல் இருப்பதால் அடிபடாது. ஆனால் மணலாற்றங்கரையிலும் இழுப்பு இருக்கும். இட்லி பாறை, தோசை பாறை என்று இரண்டு பெரிய பாறைகள் உண்டு. இட்லி மாதிரியும், தோசை மாதிரியும் இருப்பதால் காரணப் பெயர். இது போக சிவன் பாறை ஒன்று உண்டு. அது ஒரு மினி குன்று மாதிரி இருக்கும். மேலே பாறையில் ஒரு அழகான சிவலிங்கம் ஒன்று இருக்கும். சிவன் பாறைக்கு கீழே ஆழம் மிகவும் அதிகம். அதனால் இட்லி பாறை, தோசை பாறையில் எக்ஸ்பீரியன்ஸ் போட்டவர்கள் மட்டும் தான் சிவன் பாறைக்கு பிரமோஷன் வாங்கிப் போவார்கள். மற்றவர்களெல்லாம் அங்கிருந்து குதித்தால் சிவலோகப் பிரமோஷன் தான் என்று பயமுறுத்தி வைத்திருந்ததால் நாங்கள் முதலில் அந்தப் பக்கம் போக மாட்டோம். வெறும் இட்லி, தோசை பாறைகளோடு சாகசங்களை நிறுத்திக் கொள்வோம்.

குளிக்கும் போது இட்லி பாறைக்கும் தோசைப் பாறைக்கும் நடுவில் நீச்சல் அடித்து தொட்டுப் பிடித்து விளையாடுவது மிக சுவாரசியமாக இருக்கும். நீச்சல் தெரியாமல் இதற்கெல்லாம் பயந்தால் "பேசாமல் போய் கல்லிடைக்குறிச்சியில் குளிக்கப் போ" என்று விரட்டிவிடுவோம்.

கோவில் இருக்கிற ஊர்ல எல்லாரும் கோவிலுக்குப் போகிறார்களா என்ன? அது மாதிரி எங்க ஊர்லயும் ஆத்தங்கரைக்கு வராத சில ஜென்மங்கள் உண்டு. எங்கள் தெருவிலும் ஒரு பிரகஸ்பதி இருந்தான். அவனைப் பொறுத்த மட்டில் "குளிப்பது" என்பது சினிமாவில் நாயகர்கள் முன்னால் கதாநாயகிகள் புடவை உடுத்திக் கொண்டு உதட்டைக் கடித்துக் கொண்டு மிட் நைட் மசாலாவில் வருவது. "டேய் குளிச்சியாடா" என்றால் "ஓ...முந்தாநேத்திக்கே குளிச்சாச்சு" என்று கூசாமல் பதில் சொல்லுவான். என் போறாத வேளை, "உன்னால் முடியும் தம்பி" கமல் மாதிரி நான் சும்மா இராமல் குளிப்பதினால் வரும் நன்மைகளை எடுத்துச் சொல்லி அவனை ஒரு நாள் ஆத்தங்கரைக்கு கூட்டிப் போனேன்.

-இன்னும் வரும்

Tuesday, June 27, 2006

ஆத்தங்கரை மரமே...

இதுவும் அம்மபாட்டுத் தேங்....:)
தாமிரபரணி, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி இல்லை பக்கத்தூர்களின் பெயர்களைக் கேட்டாலே உடம்பெங்கும் பரவசம் பரவும் எனக்கு. இருக்காதா பின்ன? பிறந்து வளர்ந்து இருபது ஆண்டுகள் அடித்த கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமா? இதில் தாமிரபரணியின் சிறப்புகள் என்னவென்று முன்னால் ஒரு பதிவிலேயே (ஆறு) சொல்லிவிட்டேன். இதற்குமேலும் பிற ஜில்லாக்காரர்களின் பேரன்பை தாங்க முடியாது என்பதால் அதை விட்டுவிடுகிறேன். பொதிகை மலையில் உருவாகி பிரவாகமாக ஓடும் தாமிரபரணி பாபநாச மலயடிவாரத்தில் ஆரவாரமாக ஓடுவதைப் பார்ப்பதற்கு புண்ணியம் செய்திருக்கவேண்டும். இதில் தாமிரச் சத்து அதிகமிருப்பதால் இந்தப் பெயர் என்று ஒரு வழக்கும் உண்டு. தாமிரச் சத்து அதிகமாய் இருபதனால் இதில் குளித்தால் தோல் கொஞ்சம் கருக்கும் என்றும் நீச்சல் தெரியாத கூட்டம் சரடு விடும்.

இந்த வற்றாத ஜீவநதியின் தண்ணிரில் விழும் பொதிகை மலை அகத்தியர் அருவியும் ஜில்லாவில் மிகவும் பிரசித்தம். குற்றால அருவிகள் மாதிரி அகத்தியர் அருவிக்கு உயரம் கிடையாது. ஆனால் பொதிகை மலையில் நிறைந்திருக்கும் "சித்த வேர்களின்" குணங்களைத் தாங்கி வருவதால் இதில் குளித்தால் ஹெர்பல் பாத்துக்கு சமம் என்று சொல்லுவார்கள். உணமை தானா என்று மலைக்கு மேல் ஏறி அந்த சித்த வேர்களின் வாசத்தை முகர்ந்து பார்த்துவிடுவது என்று சோதிக்க கிளம்பி, வழியில் வழுக்கி விழுந்து வேறு ஏதோ ஒரு சித்த புருஷர் விட்டுச் சென்ற சாயம் போன அண்டர் வேரைப் பார்த்துவிட்டு வேரைப் பார்த்தது போதும் என்று நொண்டிக் கொண்டே திரும்பி வந்துவிட்டேன். அதிலிருந்து நானும் இதே மாதிரி சித்த வேர், பித்த தேர் என்று சங்கு ஊதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கப்புறம் அகத்தியர் அருவியில் உண்மையான சித்த வேர் சமாச்சாரம் இருக்கிறதா என்று நான் ரொம்ப ஆராய்ச்சி செய்யவில்லை. நான் வழுக்கிவிழுந்த இடத்துக்கு மேலே காட்டில் இருக்கலாம்...நக்கல் விட்டாலும் இந்த அருவில் குளித்தால் புத்துணர்ச்சியாய் இருக்கும். அருவியிலிருந்து வெளியே வரவே மனசு வராது.

ஓவ்வொரு ஊர் தண்ணிக்கும் ஒரு பெருமை இருக்கு என்று அந்தந்த ஊர்காரர்கள் மார்தட்டிக் கொள்வது மாதிரி எங்க ஊர் தண்ணியக் குடிச்சா வீரம் வரும் என்று சீவலப்பேரி பாண்டியில் நெப்போலிய சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். எல்லா ஊர் தண்ணிக்கும் இந்த மாதிரி "இந்தத் தண்ணியக் குடிச்சா வீரம் வரும். ஞானம் வரும், குசும்பு வரும்" என்று உசுப்பேத்துற வசனங்கள் நிறைய இருக்கும். விஜய்குமார் தாலி, தாய் மாமா, சீர் பெருமைகளை பேசாத சமயத்தில் இந்த மாதிரி ட்யலாக் நிறைய பேசுவார். விஜய்காந்தும் நிறைய படங்களில் பேசியிருக்கிறார். நானும் இவர்களையெல்லாம் நம்பி, ஊறவைத்த கொண்டக் கடலையை மென்று, கர்லா கட்டையை சுத்தி எக்சர்சைஸ் செய்து ப்ரொபைல் ஏத்தி, நிறைய தண்ணி குடித்திருக்கிறேன். வீரம் வந்ததா தெரியாது ஆனால் நிறைய தண்ணி குடித்ததின் பலனாக அன்றெல்லாம் வேறொன்று நிறைய வந்தது.

ஆண்டாளுக்கு மார்கழி மாதிரி எங்களுக்கு ஏப்ரல் மே, ஜூன். காலை ஆறு மணிக்கே "நீராடப்போதுவீர், போதுமினோ, நேரிழையீர்" என்று கிளம்பி விடுவோம். ஆறு மணிக்கு கிளம்பி ஆறேமுக்கால் வரை குற்றாலத் துண்டு, சோப்புப் பெட்டி சகிதமாக தெரு முக்கில் வானரப் படையுடன் ஒரு அரட்டையைப் போடுவது, ஏப்ரல் மே சூடுக்கு காலை குளிர்ந்த நீரில் கால் வைக்கும் போது ஏற்படும் ஜில்லிப்பு இவற்றின் சுகமே தனி. நான் சொல்லும் இந்த ஆற்றங்கரையை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். புது நெல்லு புது நாத்து, ஜென்டில்மேன், டும் டும் டும், சாமி மற்றும் இன்ன பிற நாற்பது சொச்ச படஙகளில் விஸ்தீரணமாக காட்டிவிட்டார்கள்.திவ்ய பாரதி, பானுப் ப்ரியா, த்ரிஷா போன்றோர் நீராடிய புண்ய ஸ்தலம்.

மலையடிவாரத்தில் பச்சைப் பசேலென்று வயல் சூழ இருபக்கமும் ஆலமரம் தழைத்து வளர்ந்து, ஜிலு ஜிலுவென்று காற்றில் ஆற்றங்கரைக்கு போகும் பாதையே ரொம்ப ரம்மியமாக இருக்கும். டும் டும் டும்-ல் விவேக் அன்ட் கோ மாதவன் கல்யாணத்திற்கு பஸ்ஸிலிருந்து வந்திறங்குமே அந்தப் பாதை தான் இது. முதல்வனில் அர்ஜுன் மாறுவேஷத்தில் மணிஷா மாமியைப் பார்க்கப் போகும் போது பூ வாங்குவாரே அதே பாதை தான் இது. ஜலக்கிரீடை செய்யப் புறப்படும் குரங்குகளின் அட்டகாசம் இந்தப் பாதையில் காலடி எடுத்து வைத்தவுடனேயே ஆரம்பமாகிவிடும்.

-இன்னும் வரும்

Monday, June 26, 2006

நன்றி

தேன்கூட்டில் எனக்கு வோட்டுப் போட்ட பதினெட்டுப் பட்டி சனங்களுக்கும் நன்றி. (அதில ஒரு வோட்டு என்னோடது).எல்லோருக்கும் நாகில் சனின்னா நமக்கு டைப் அடிக்கிற விரல்ல சனி. ஏற்கனவே தமிழ்வாத்தியாரை இந்த தரம் ஊருக்குப் போகும் போது பார்க்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். போட்டிப் பதிவுகளை விமர்சனம் பண்ணுகிறேன் பேர்வழி என்று இல்லாத சந்தேகத்தைக் கிளப்பிவிட்டு, ஊருக்கு போய் பார்த்து அவருக்கு பெண் இல்லை என்று கன்பர்ம் செய்தால் தான் வோட்டு என்று வீட்டிலேயே இந்த தரம் வோட்டு கிடைக்கவில்லை.

போட்டியில ஜெயிச்சவங்களுக்குப் போய் வாழ்த்துச் சொல்லாம "என்ன போட்டில (இந்த தரமும்) தோத்துப் போயிட்டீங்க போல இருக்கு...வாழ்த்துக்கள்" என்று தோற்றதுக்கு முதல் ஆளாய் ஓடி வந்து வாழ்த்துச் சொல்லும் இந்தப் பாசக்கார பயலுவ கூட்டம் - நான் ப்ளாக் எழுதி சமபாதித்திருக்கும் மிகப் பெரிய சொத்து. மெய்சிலிர்க்கிறது எனக்கு.

சும்மா மேம்போக்காய் எழுதுவது ப்ளாக்குக்கு வேணா ஒத்துவரும் போட்டிக்குப் போனா பிரிச்சு மேய்ஞ்சிருவாங்கன்னு நன்றாகவே உரைத்திருக்கிறது. ரூம் போட்டு யோசிச்சு அடுத்த தரம் "தரம்" ட்ரை பண்ணுகிறேன். நெக்ஸ்டு மீட் பண்றேன்.

முடிப்பதற்கு முன்னால் "ஜெயிக்கிறதா முக்கியம்...இன்டிப்ளாகீஸாகட்டும், தேன்கூடு போட்டியாகட்டும்...போட்டி போட்டியா போய் பதிவெழுதி அடிபட்டு, கடிபட்டு வருஷா வருஷம் தோத்து மாவீரனா நிக்கிறான் பாரு அவந்தான்டா மனுஷன்...அவனுக்குத் தான்டா கப்பு" என்று தல பாணியில் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

Wednesday, June 21, 2006

ஆறு

நண்பர் சிலந்திவலை ரமணி “ஆறு” விளையாட்டுக்கு அழைத்திருந்தார். அது சமபந்த்தப்பட்ட பதிவு இது. ஒன்று, இரண்டு, மூன்று… என்று ஆறு வரை எழுதவேண்டும். (நம்மைப் பற்றித் தான் எழுதவேண்டும் என்று எங்குமே சொல்லலையே ரமணி...அதான் ஜல்லியடித்துவிட்டேன் :) )

ஒன்று, இரண்டு - இந்த நம்பர்களை தமிழர்கள் உபயோகப்படுத்துவது மாதிரி யாருமே உபயோகப்படுத்தி இருக்க மாட்டார்கள்.இதை இப்போது நினைக்கும் போதெல்லாம் இதற்கு எப்படி இந்த உபயோகம் வந்திருக்கும் என்று அளவில்லாத வியப்பு வரும். ஒன்றுக்கு போய் விட்டு வருகிறேன். இரண்டிற்கு போய்விட்டு வருகிறேன் என்று விரலில் சின்ன வயதில் ஸ்கூலில் நிறைய சைகை பாஷை பேசி இருக்கிறேன். அதிலும் விரலை கொக்கி மாதிரி வைத்துக்கொண்டு சைகை காட்டினால் ரொம்ப அவசரம் என்று அர்த்தம். போரடிக்கும் க்ளாசிலிருந்து தப்பிக்க பையன்கள் அடிக்கடி கொக்கி குமாராகிவிடுவார்கள். ஆனால் இதிலும் சில டீச்சர்கள் ரொம்ப ஸ்ட்ரிக்ட். மணியடித்தால் சோறு என்பது போல் மணியடித்தால் தான் ஒன்றும் இரண்டும். அவர்களை ஏமாற்ற கண்ணைச் சுறுக்கிக் கொண்டு லேசாக குதித்துக் கொண்டே கொக்கி குமாராக வேண்டும்.அப்போ தான் கருணை பிறக்கும். இப்படியாவது ஏமாற்றி அங்கே போய் சுத்திப் பார்த்துவிட்டு வருவதிலும் ஒரு த்ரில் இருக்கத்தான் செய்தது. இப்போது உள்ள கான்வென்ட் குழந்தைகளுக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை. குழந்தைகள் ரொம்பத் தான் மிஸ் பண்ணுகிறார்கள். இப்பொதெல்லாம் இதற்கு வெவ்வேறு வழக்குச் சொல் வழங்கப்பட்டு வருகிறது என்று நினைக்கிறேன். எங்க வூட்டுக்காரி சொந்தக்கார வட்டதில் இதற்கு "லண்டன்" என்று நாமகரணம் செய்திருக்கிறார்கள். ஒரு தரம் இந்தியா போயிருந்த போது அந்த வீட்டுப் பெரியவர் "மாப்பிள்ளை எந்த ஊரில் வேலை பார்க்கிறார்" என்று கேட்க, நான் ரொம்பப் பெருமையாக "லண்டனில் வேலை பார்க்கிறேன்" என்று சொல்ல...அந்த விட்டுக் குழந்தைகள் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தன.

மூன்று - திருநெல்வேலி பக்கம் "முக்கா முக்கா மூனு தரம்" என்று ஒன்று உண்டு. சாட் பூட் திரீ(அப்பிடின்னா என்னான்னு தெரியுமா உங்களுக்கு?), க்விஸில் கேள்விக்கு பதில் சொல்வதாகட்டும், சீட்டு குலுக்கி போட்டு பார்ப்பது வரை நினைத்தது வரவில்லை என்றால் இந்த ரூலை உபயோகப் படுத்தி விடுவோம். திருநெல்வேலிக் காரர்களாக இருந்தால் விஷயம் தெரிந்து கொஞ்சம் உஷாராகிவிடுவார்கள். மற்ற ஜில்லாக்காரர்கள் "அப்படீன்னா?" என்று முழிப்பார்கள். கிரிக்கெட் டாஸ் போடும் போது "எங்க ஜில்லாவில மூனாவது தரம் தான்" என்று இந்தப் பழமொழியை மேற்கோள் கட்டி கதை விட்டு நிறைய தரம் மெட்ராஸ்காரர்களை ஏமாற்றி இருக்கிறேன். மூன்றாவது தரமும் நினைத்தது வரவில்லை என்றால்....???? வேறென்ன வேறெதாவது டகால்டி வேலை தான்.

நாலு - "எதுக்கும் ஒன்னுக்கு நாலு தரம் யோசிச்சு சொல்லு என்கிறார்களே"...எதற்காக? முதல் மூன்று தரம் பிடிபடாதது நாலாவது தரம் யோசித்தால் வந்துவிடுமா? நாலாவது தடவையா யோசிப்பது தான் கரெக்டாக இருக்குமா? யாமறியேன் பராபரமே. ஆனால் இப்படி சொல்லும் போதெல்லாம் நாலாவது தடவை நிறைய குழம்பியிருக்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் ரொம்ப குழப்பமாக இருந்தால் விஷயத்தை அப்படியே மூடிவிட்டு ஒரு தூக்கமோ வேறு வேலையோ பார்க்க போய்விடுவேன். அப்புறம் திரும்ப வந்து பார்க்கும் போது ஒரு தெளிர்ச்சி கிடைத்திருக்கும்.

ஐந்து - உளவு பார்ப்பவர்களை ஐந்தாம் படை வேலை என்றிகிறார்களே..ஏன்? இது ஏதாவது குறிச் சொல்லா? தெரிந்தவர்கள் கூறுங்களேன். இதுவும் ரொம்ப நாளாக மண்டையின் ஓரத்தில் குடைந்து கொண்டிருக்கிறது. (ஹீ ஹீ ஐந்துக்கு எதுவும் உருப்படியா தோன்றவில்லை பையன் சமாளிக்கிறான் என்றி நீங்கள் நினைக்கலாம்... தப்பே இல்லை)

"ஆறு" - ஆறு என்றால் தமிழகத்தில் அது தாமிரபரணி தான் அடிச்சுக்க ஆளே இல்லை. காவிரி, வைகைன்னு சொல்றவங்களெல்லாம் மே மாசம் உங்க ஊர்ல ஓடுகிற மணலாற்றை ஒரு தரம் சுத்தி பார்த்துவிட்டு அப்படியே ஓடிப்போயிடுங்க. தாமிரபரணிக்கு எப்போ வேண்டுமானாலும் வாங்க நல்லா தண்ணி காட்டுறோம். "வற்றாத ஜீவ நதி"ங்கிறதையும் தாமிரபரணிக்கு மட்டும் தான் என்று பட்டயம் போட்டு வைக்கனும். லீவு நாட்களில் காலை ஆறு மணிக்கு எழுந்து நண்பர்களோடு கூட்டமாக போனால் பத்து பதினோறு மனிக்கு வீட்டிலிருந்து கம்போடு ஆள் வரும். பயங்கரமாக ஆட்டம் போட்டிருக்கிறேன். அது பற்றி தனிப் பதிவு போடவேண்டும். மழைத் தண்ணி தேங்கியிருக்கிற மாதிரியான ஆறில்லை தாமிரபரணி...காட்டாறு..அதுவும் பொதிகை மலை அடிவாரம் என்பதால் என்ன வேகத்தில் ஓடும் என்று சொல்ல வேண்டியதில்லை. சுழலுடன் ஓடும் நதியில் நண்பர்களோடு தொட்டு பிடிக்கும் போட்டி விளையாடுவதென்பது தனி சுகம். இந்த முறை இந்தியா போகும் போது கண்டிப்பாக மகள்களை அழைத்துப் போவதாக சொல்லியிருக்கிறேன்.

ஆர்வமிருக்கும் நண்பர்கள் இந்த ஆறு விளையாட்டை தொடரலாம்.

Update - ஐய்யைய்யோ...சொல்ல மறந்துட்டேனே....தேன்கூட்டில் வாக்களிப்பு ஆரம்பிச்சாச்சு....ஒட்டக் குத்துறவங்களும் முதுகுல குத்துறவங்களும் குத்தலாம்....அங்கே மேலேயே "வாக்களிக்க இங்கு சுட்டுங்கள்..."ன்னு லிங்க் இருக்கும்.

Sunday, June 18, 2006

தி டாவின்சி கோட்

பொதுவாக நல்ல படங்கள் என பேசப்படும் படங்களைப் பார்ப்பதற்கு முன் விமர்சனஙகள் எதையும் படிக்க மாட்டேன். கதை தெரிந்துவிடும் அபாயம் இருந்தால் அந்தப் பக்கமே தலைவைக்க மாட்டேன். "நல்ல பிரிண்ட் தானா?? கொஞ்சம் போட்டுக் காடுங்க" என்று வழக்கமாக தொனதொனக்கும் நச்சரிப்பு இந்தப் படங்களுக்கு இருக்காது. இந்தப் படத்துக்கு இதையெல்லாம் சமாளிப்பது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் சமாளித்துவிட்டேன். யேசுவுக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதைத் தவிர ரொம்ப விஷயம் தெரியாமல் பார்க்க ஆரம்பித்தேன்.


கிறுத்துவர்களையும், கத்தோலிக்க குருமார்களையும் பற்றி இந்த கதைக் கரு அவதூறு பரப்புகிறது என்ற சீரியஸான வாதங்களுக்குள் போகாமல் அண்ட்ராயர் தெரிய லுங்கி கட்டிக் கொண்டு பீடி வலித்துக் கொண்டு ஃபீலீங்காய் படம் பார்க்கும் சராசரி "C" சென்டர் குடிமகனாகவே எனது விமர்சனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக வெகுசில கதைக் களம் மற்றும் முடிச்சுக்களே (ஸ்டோரி நாட்) "அட இன்னமா யோசிச்சிருக்கான்பா" என்று சொல்ல வைக்கும். இந்த கதையும் என்னைப் பொறுத்த வரை அந்த ரகம். பொய் சொன்னாலும் கிரியேட்டிவிட்டியோடு சொன்னால் தான் ரசிக்க முடியும். அதில் கதாசிரியர் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால் சில இடங்களில் அதுவே சறுக்கியதாகவும் உணர்ந்தேன். மேரி மெடலினின் தொடர்புகளை நம்ப வைப்பதற்காக காட்டும் ஆதாரங்களும் சம்பவங்களும் எனக்கு அத்தனை கன்வின்ஸிங்காக இல்லை. ஆனால் இவை கதையை தொய்யவிடாமல் திரைக்கதையை நன்றாக அமைத்திருக்கிறார்கள். டாம் ஹேன்க்ஸின் நடிப்பு பற்றி சொல்லவேண்டியதே இல்லை. மனுஷன் வழக்கம் போல் படம் நெடுக கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். படத்தில் எனக்கு ஒளியமைப்பும் மிகவும் பிடித்தது. ஒளியமைப்பு காட்சிகளுக்கு கூடுதல் வெயிட் தருகிறது.(நோண்டி நொங்கெடுக்கும் சங்கம் மன்னிக்கவும்.. இப்படி எதாவது சொன்னாத் தான் பந்தாவா இருக்கும்).

டேன் ப்ரவுன் கதை எழுதும் போதே ஹாலிவுட்டுக்கு என்று மனதில் நினைத்திருப்பார் என்று நினைக்கிறேன். உதவுதாக நடிக்கும் இயன் மெக்லீனும் அவரது கையாளும் அக்மார்க் ஹாலிவுட் ரகம். படத்தில் முதலில் ஹூட் எல்லாம் போட்டுக்கொண்டு கொலையெல்லாம் செய்யும் சிலாஸ் வெறும் திகில் பங்களிப்புக்காவே கதை முழுவதும் வருகிறார். கேப்டனாக வரும் ஜீன் ரெனோவின் நடிப்பு எனக்கு பிடிக்கும் (காட்ஸில்லா). ஆனால் அவர் நடிப்புக்கு இந்தப் படத்தில் ரொம்ப தீனியில்லை.

டேன் ப்ரவுனின் நாவலை இன்னும் படிக்கவில்லை ஆனால் முடிவு ஆரம்பத்திலேயே புரிந்து விட்டது. அது தான் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. சோபி தான் அந்த ஆதாரம் என்று சொல்லும் போது ஆச்சரியத்துக்கு பதில் தஙவேலு பட "அதான் எனக்குத் தெரியுமே" டயலாக் தான் வருகிறது. திரைகதையில் உள்ள மிகப் பெரிய ஓட்டை அதற்கப்புறம் வரும் மேரியின் சடலம் எங்கிருக்கிறது என்ற கடைசிக் காட்சி. சில விஷயங்களை என் பெண்டாட்டி பாத்திரம் தேய்ப்பது போல் ஓவராய் தேய்க்கக் கூடாது, என்னைப் போல் மேம்போக்காய் தேய்த்து விட்டு மீதியை பார்ப்பவர்களின் கற்பனைக்கு விட்டு விட வேண்டும். "நட்சத்திர கூரையின் கீழே" என்று உணர்ந்து டாம் கீழே பார்ப்பதாக முடித்திருந்திருக்கலாம்...அதை விடுத்து கிராபிக்ஸை தினித்து...ஹார்பிக் விளம்பரம் மாதிரி கீழே இருக்கும் பிரமிட்டுக்குள் நுழைந்து...அது சரி படத்துக்கு கொஞ்சம் திருஷ்டி வேண்டாமா?

நாவலை இன்னும் படிக்கவில்லை. படத்துக்காகவும் ஓஸி பார்ட்டிக்காவும் காத்திருந்தேன்..இனிமேல் கூடிய சீக்கிரம் படித்துவிடுவேன்.

Tuesday, June 13, 2006

அன்புள்ள டைரி

அடுத்தவர் டைரியைப் படிப்பது தப்பு. என்னைத் தவிர என் அனுமதி இல்லாமல் இந்த டைரியைப் படிப்பவர்கள் நூறு வருடம் நரகத்தில் எண்ணைக் கொப்பரையில் காய வேண்டும்.

அன்புள்ள டைரி,
இன்று பூனே மாமா வந்திருந்தார். இந்தப் பேனா பரிசாக கிடைத்தது. இதில் வாட்ச் வேறு இருக்கிறது. ஆனால் எழுதிக் கொண்டே நேரம் பார்ப்பது சிரமமாக இருக்கிறது. போகப் போக பழகிவிடும் என்று நினைக்கிறேன். ஆனால் பேனா நன்றாக எழுதுகிறது. இந்தப் பேனாவை டைரி எழுத மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். ஓகே டைமாச்சு தூங்கப் போகனும் சி.யூ. பை

அன்புள்ள டைரி,
சாரி நேற்று நேரம் கிடைக்கவில்லை அதான் எழுதவில்லை. பூனே மாமா இன்று ஊருக்குப் போகிறார். மிச்சத்தை நாளைக்கு எழுதுகிறேன்.

அன்புள்ள டைரி,
நான் ரொம்ப மோசம். எனக்குத் தெரியும் ஒருவாரமாக டைரி எழுதவில்லை. இனிமேல் ஒழுங்காக எழுதுகிறேன். இன்று ஸ்கூல் திறந்தது. எங்க க்ளாஸில் புதிதாக நிறைய பேர் இருக்கிறார்கள். இன்னும் ரொம்ப பழகவில்லை. கேசவன் ரொம்ப பிகு பண்ணுகிறான். புது பையன்களை வைத்துக் கொண்டு நானே புதுசா செட் ஆரம்பிக்கலாமென்று இருக்கிறேன். என்னுடைய பிறந்தநாள் இந்த மாதம் வருகிறது. எப்போ என்று தெரியுமா? சொல்லு பார்ப்போம்.

அன்புள்ள டைரி,
இன்று எனக்குப் பிறந்தநாள். ஹேப்பி பர்த் டே டூ மீ. இன்றிலிருந்து நான் டீன் ஏஜாம். "நிறைய சுவரசியமாய் இருக்கும் மனச ரொம்ப குழப்பிக்காம என்ஞ்சாய் பண்ணு" என்று சித்ராக்கா சொன்னார்கள். சரி என்று சொல்லியிருக்கிறேன். இனிமேல் மனதை குழப்பிக் கொள்ளமாட்டேன். சித்ராக்கா அப்பா நிறைய சாக்லேட் அள்ளிவிட்டார். கணேஷுக்கு குடுக்க முடியவில்லை. பை ஸ்டார் வாங்கித் தரேன்னு சொல்லியிருக்கேன்.

அன்புள்ள டைரி,
இப்போவெல்லாம் தொடர்ந்து எழுதமுடியவில்லை. மன்னிச்சுக்கோ. உன்கிட்ட மட்டும் தான் நான் மனம் விட்டுப் பேசறேன். எங்கள் ஸ்கூலில் நேற்று ஸ்போர்ட்ஸ் டே. சந்துரு சைட் அடிக்க சொல்லிக் கொடுத்தான். நானும் சந்துருவும் சேர்ந்து சைட் அடித்தோம். இன்னும் கொஞ்ச நாளில் நானும் சைட் அடிப்பதில் தேறிவிடுவேன் என்று சந்துரு சொன்னான். எனக்கு சந்தோஷமாக இருந்தது. சந்தியா தான் என் ஆள் என்று முடிவு கட்டி விட்டேன்.

அன்புள்ள டைரி,
ராஜேஷும் சந்தியாவை டாவடிக்கிறான். ஆனால் சந்தியா என்னைப் பார்த்து தான் அடிக்கடி சிரிக்கிற மாதிரி இருக்கிறது. ஸ்கூல் டேயில் சந்தியா டேன்ஸ் ஆடப் போகிறாள். நான் நாடகத்தில் உண்டு. இனிமேல் நிறைய கோட்வேர்ட் யூஸ் செய்யவேண்டும் வீட்டில் யாராவது படித்துவிட்டால் அவ்வளவு தான்.இன்று ஜ்fஇச்ஜ்fச்ட். நாளையிலிருந்து மிட் டேர்ம் ஆர்ம்பிக்கிறது. சோ படிக்கப் போகிறேன்...பை

அன்புள்ள டைரி
பரீட்சை நன்றாக எழுதியிருக்கிறேன். ஹே...! இன்றைக்கு யாருமில்லாத போது அப்பாவுடைய ஷேவிங் செட் எடுத்து ஷேவ் செய்து பார்த்தேன். ஆனால் முகத்தைப் பார்த்து அப்பா கண்டுபிடித்துவிட்டார். அதுக்குள்ள என்ன அவசரம் என்று ரொம்ப சத்தம் போட்டார். ஒரு தரம் ஷேவ் செய்தால் அப்புறம் வளர ஆரம்பித்துவிடுமாம்.ஹீ ஹீ அதுக்கு தானே ஷேவ் செய்ததே.

அன்புள்ள டைரி
ஸ்கூல் கிரிக்கெட் டீமில் நான் தான் கீப்பர். அடுத்த வாரத்திலிருந்து டோர்னமென்ட் இருக்கு. இனிமேல் டெய்லி ப்ராக்டிஸ் போகனும். உடம்பு பெண்ட் எடுக்குது. சந்தியா இன்று ஹாஸ்டலுக்குப் போகும் போது நான் கீப்பிங் செய்ய்வதைப் பார்த்தாள். எனக்கு சந்தோஷமாக இருந்தது. இனிமேல் அவளை இம்ப்ரெஸ் செய்வது ஈ.ஸி என்று நினைக்கிறேன். நீ தான் ஹெல்ப் பண்ணனும். ஹி ஹி இதை ஏன் உன்னிடம் கேட்கிறேன்? தெரியலை...

அன்புள்ள டைரி
டோர்னமென்டில் சொதப்பி விட்டோம். எங்க பவுலிங் சரியில்லை. விளாசிவிட்டார்கள். நான் மூனு ஸ்டெம்பிங். ஒரு மேன் ஆப் த மேட்ச். ஸ்கூலில் ப்ரேயரில் வைத்து கொடுப்பார்கள். சந்தியா கண்டிப்பாக பார்ப்பாள். இன்று க்ளாசிலிருந்து அக்னி நட்சத்திரம் போனோம். செம கூட்டம். படம் சூப்பராக இருந்தது. எல்லோருக்கும் நிரோஷா பிடித்தது ஆனால் எனக்கு அமலா தான் பிடித்தது. சந்தியாவிற்கு கொஞ்சம் கொஞ்சம் அமலா ஜாடை இருக்கிறது.

அன்புள்ள டைரி
நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். சந்தியா என்னுடன் பேச ஆரம்பித்துவிட்டாள். ஸ்கூல் டேயில் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம். க்ளாசில் எல்லாப் பையன்கள் காதிலும் ஒரே புகை. சந்தியாவின் அப்பா எங்க ஸ்கூலில் தமிழ் எடுக்க சேரப் போகிறாராம். அனேகமாக எங்க க்ளாசுக்கு எடுப்பாராம். எப்படியாவது அவரையும் இம்ப்ரெஸ் செய்யவேண்டும். ஸ்கூல் டேயில் நாடகத்தில் தூள் கிளப்பிவிட்டேன். சந்தியா ரொம்ப பாராட்டினாள்.

அன்புள்ள டைரி
முகத்தில் நிறைய பரு வருகிறது. யாருக்கும் தெரியாமல் விக்கோ டர்மரிக் தடவிக்கொள்கிறேன். சே என் பொழப்ப பார்த்தியா. சித்ராக்கா ரொம்ப சைட் அடிக்காதடா என்று கேலி செய்கிறார்கள். சந்தியாவைப் பற்றி சித்ராக்காவிடம் சொல்லலாம என்று நினைக்கிறேன். குழப்பமாக இருக்கு. இப்போதைக்கு வேண்டாம்..அப்புறம் பார்ப்போம்.

அன்புள்ள டைரி
இன்றைக்கு கிங்பெல் ஒரு புத்தகம் கொடுத்தான். என்ன புக் என்று சொல்லமாட்டேன். நீயே புரிஞ்சுக்கோ. அடப் பாவிங்களா க்ரூப் ஸ்டடின்னு சதீஷ், சங்கர் எல்லாரும் இதைத் தான் படித்திருக்கிறார்கள். ரொம்ப தைரியம் கிங்பெல்லுக்கு. பக்கத்தூருக்குப் போய் வாங்கி வருகிறான். என்னிடமே விஷயத்தை மறைத்துவிட்டார்கள். இன்று தான் கிங்பெல் படிச்சுட்டு பெரியமனுஷனாகு என்று கொடுத்தான். நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் ஆனால் எனக்குப் பிடிக்கலை. இனிமேல் படிக்க மாட்டேன் சத்தியம்.

அன்புள்ள டைரி
சந்தியாவும் நானும் அடிக்கடி ரொம்ப நேரம் பேசுகிறோம். அவ அப்பா என்னுடைய தமிழ் வாத்தியார். கொஞ்சம் கோபப்படுகிறார். வாத்தியார் என்றால் கோபம் வரத் தானே செய்யும். சந்தியாவிடம் காதலிக்கிறேன் என்று சொல்லிவிடலாமா என்று நினைக்கிறேன். ஆனால் பயமா இருக்கு. என்ன செய்ய? அவ மட்டும் என்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டால் பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டிக்கொண்டிருக்கிறேன். உனக்கு கல்யாணம் ஆகலங்கிற வருத்ததில என்னோட மேட்டர கவுத்திராத பிள்ளையாரப்பா. மேத்ஸ் கொஞ்சம் வீக்கா இருக்கு என்று நானும் க்ரூப் ஸ்டடி போய் வருகிறேன். இப்போ தமிழ் பேச்சுப்போட்டியில் எல்லாம் கலந்து கொள்கிறேன். வாத்தியார இம்ப்ரெஸ் பண்ணனும்ல...அடுத்து கவிதை எழுத ஆரம்பிக்கனும். "மாமா உன் பொண்ணக் குடுன்னு" பாட்டு எழுதினா பிச்சிப்புடுவார்...வேற எதாவது எழுதனும்.

அன்புள்ள டைரி,
சந்தியாவிடம் எப்படி சொல்ல எப்போது சொல்ல...பயமாய் இருக்கிறது. பப்ளிக் எக்ஸாம் வருகிறது அதற்கப்புறம் சொல்லவா? முன்னாடி சொல்லவா? அப்பா கூப்பிடுகிறார்..அப்புறம் எழுதுகிறேன் பை...


அதற்கப்புறம் டைரியில் வெத்துப் பக்கங்களே இருந்தன. எவ்வளவு முதிர்ச்சி இல்லாமல் எழுதியிருக்கிறேன் என்று இப்பொழுது படித்து பார்த்த போது சிரிப்பு வந்தது. சந்தியா பிறந்தநாளைக்கு அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்து இதே மேஜையில் ட்ராவின் அடியில் இடுக்கில் ஒளித்து வைத்திருந்தேன். டைரியை பழைய படி ஒளித்துவைத்துவிட்டு வாழ்த்தட்டையை தேடிப் பார்த்ததில் கிடைத்தது. “நேசமுடன் சஞ்சு” என்று கையெழுத்திட்டிருந்தாள். "நேசமுடன்" என்பதற்கு என்ன அர்த்தம் என்று எவ்வளவு ராத்திரி தூக்கமில்லமல் குழம்பி இருப்பேன்?

"என்னங்க...அங்க ஹாலில் எல்லோரும் வந்திருக்காங்க...எப்பவோ ஒரு தரம் ஊருக்கு வர்றோம்...அவங்க கூட பேசாம இங்க என்னத்த மேஜைல குடைஞ்சுகிட்டு இருக்கீங்க?"

"ஒன்னுமில்லமா சும்மா நோண்டிப் பார்த்துகிட்டு இருக்கேன்...இதோ வர்றேன்"

"...சுமி, என் தமிழ் வாத்தியார் இங்க பக்கத்தூர்ல தான் இருக்கார்...இந்த தரம் போய் பார்த்துட்டு வரலாம்"

"என்ன திடீர்ன்னு இவ்ளோ நாளில்லாமல அவர் நியாபகம்..."

"ரொம்ப நல்ல வாத்தியார்மா...அவர் எடுத்த பாடத்துல தான் நான் இன்னிக்கு கதை கவிதைன்னு எழுதிகிட்டு இருக்கேன்...ஒரு நடை போய் எப்படி இருக்கார்ன்னு பார்த்துட்டு வரலாம்"

***************
பின்குறிப்பு - "வளர்சிதை மாற்றம்" - தேன்கூடு இந்த மாதப் போட்டிக்கான பதிவு இது. வழக்கம் போல் ஓட்டுப் போடாம கவுத்துங்க...நானும் "தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விகரமாதித்தன் வேதாளத்தைத் தேடி முருங்கைமரத்தின்...."

Wednesday, June 07, 2006

ஒரு பிரச்சனை

ஒரு வாரமாக இந்தப் பிரச்சனை. வெளியே சொல்ல வெட்கமாயிருந்தது. இங்கு அடிக்கடி எழுதாததற்கு கூட அது தான் உண்மையான காரணம். யாரிடமாவது சொல்லி அழலாம் என்றால் பெயர் கெட்டுவிடுமோ என்ற தன்மான உணர்ச்சி தடை போட்டுவிட்டது. தமிழ் ப்ளாகில் கொஞ்சம் நோண்டி நொங்கெடுத்தீர்களானால் நிறைய பேர், ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் இந்தப் பிரச்சனையை சந்தித்திருப்பார்கள். இப்போ கொஞ்ச நாளாக எனக்கும் இந்த தொந்தரவு ஆரம்பித்து இருக்கிறது. சிலபேர் வெளியே வெளிப்படைசொல்லியிருப்பார்கள், சிலபேர் மனதுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்திருப்பார்கள். ஊர், பெயரைத் தெரியாமல் வைத்திருந்தாலாவது பெரிய சேதமிருக்காது. என் கதையில் அதுவும் இல்லை, இனி ஒன்றும் செய்யமுடியாது. ஒருவேளை நீங்கள் வலைப்பதிவராயிருந்து உங்களுக்கு இந்தப் பிரச்சனை இதுவரை வரவில்லையென்றால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். ஆனாலும் கொஞ்சம் உஷாராக இருங்கள்.

நீங்கள் தமிழ்வலைப்பதிவுகளை படித்துவருபவரானால் நான் எதைப் பற்றி சொல்லவருகிறேன் என்று இதற்குள் யூகித்திருப்பீர்கள். ப்ளாக் ஆரம்பித்தாலே இந்த மாதிரியான தொல்லைகளெல்லாம் வரும் என்று தெரிந்திருந்தாலும் நமக்கு வரும் போது தான் உரைக்கிறது. எப்படியாவது இதை சமாளித்து விடலாம் என்று நானும் ஒரு வாராமாக யோசித்து வருகிறேன், மண்டைக் குடைச்சல் தான் ஜாஸ்தியாகிறதே தவிர ஒரு வழியும் தெரியவில்லை. வலைப்பதிவுலகில் நண்பர்கள் இதே பிரச்சனையை சந்தித்த போது மக்கள் பின்னூட்டங்களில் நிறைய அறிவுரைகள் சொல்லியிருந்தார்கள். அவற்றையெல்லாம் நியாபகப் படுத்திப் பார்க்கிறேன்.ப்ளாக் உலகம் எனக்கு எவ்வளவோ அனுபவங்களை, படிப்பினைத் தந்து இருக்கிறது.

பேசாமல் ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக் கொண்டு கொஞ்ச நாள் கழித்து எழுத ஆரம்பிக்கலாமா என்று கூட யோசித்தேன். ஆனால் அதனால் பிரச்சனை ஓயுமா? சந்தேகமே. நான் திரும்ப எழுத ஆரம்பித்த பிறகு இதே பிரச்சனை வராது என்பது என்ன நிச்சயம்?

இந்தப் பிரச்சனைக்கெல்லாம் துவண்டால் அப்புறம் ப்ளாக் எழுதவே வந்திருக்ககூடாது என்று வீட்டில் அறிவுரை.இனியும் சும்மாயிருந்தால் பிரச்சனை ஒழியாது. பிரச்சனையை நாமே கையில் எடுத்துக் கொண்டு காரியத்தில் இறங்க வேண்டியது தான் என்று இந்தப் பதிவை எழுத ஆரம்பித்து விட்டேன்.

அப்படியென்ன ப்ளாக் எழுத முடியாமல் பிரச்சனை என்று கேட்பீர்கள் ...அதான் பிரச்சனையே...எதைப் பற்றி ப்ளாகில் எழுத என்று நானும் யோசித்து யோசித்து பார்க்கிறேன்...ஒரு டாப்பிக்கும் மண்டையில் உரைக்க மாட்டேன்கிறது.இதைப் பற்றி எழுதலாமா அதைப் பற்றி எழுதலாமா என்று எவ்வளவு நேரம் தான் மனுஷன் யோசிப்பது? வெளியே சொன்னால் வெட்கக்கேடு அல்லவா? உங்களில் நிறைய பேர் இதே பிரச்சனையை சந்தித்திருக்கிறீர்கள் தானே? ஹப்ப்பா...நான் சொல்லிட்டேன்...பதிவும் போட்டாச்சு :)) இப்போ தான் ஒருவழியா பிரச்சனை சால்வ் ஆச்சுப்பா...


பி.கு- இன்று தேன்கூட்டில் "இன்றைய வலைப்பதிவு" பகுதியில் டுபுக்கு வல்லவர் நல்லவர் நாலும் தெரிஞ்சவர் என்று அங்கங்கே மானே தேனே பொன்மானே போட்டு போட்டோவுடன் போட்டிருக்கிறார்கள். தேன் குடித்த மாதிரி இருந்தது. தேன்கூட்டிற்கும், என்னைப் பற்றி நாலு வரி எழுதிய மானே தேனே மகராசனுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, June 05, 2006

புதுப்பேட்டை

நாராயணின் நிழலுகக்த்தைப் பற்றிய பதிவைப் படித்ததிலிருந்தே "புதுப்பேட்டை" படத்தை ரொம்ப எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். செல்வராகவனின் ஸ்கிரீன் ப்ளே அலுக்காமல் இருக்கும் என்ற நம்பிக்கை வேறு. ஒரு படம் பார்ப்பதற்குண்டான எந்த ஆம்பியன்ஸும் இல்லாமல் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு பஸ்ஸில் போகும் போது பார்ப்பது மாதிரி பார்த்துத் தொலைத்தேன். நல்ல படங்களையெல்லாம் ஒரிஜினல் டி.வி.டியில் தான் பார்ப்பது என்ற கொள்கையை காலி செய்து, சொத்தை டி.வி.டியில் பார்த்தது அடுத்த தப்பு. எனக்குப் படம் பார்க்கும் போது காட்சியில் பேக்கிரவுண்டில் கூடையில் காய்கறி விக்கும் அம்மணி முதற்கொண்டு எல்லோரும் என்ன சொன்னார்கள் என்று புரிந்து பார்க்கவேண்டும் இல்லாவிட்டால் ர்ரிப்பீட்டு தான். இதனாலேயே இரண்டு மணி நேர படம் மூனேமுக்கால் மணி நேரம் ஓடும் எங்கள் வீட்டில். என் நேரம் இந்த டி.விடியில் ரீவைண்ட் வேலை செய்யவில்லை.

நல்ல படமா, சரி போடுங்கள் பார்ப்போம் என்று தங்கமணி மிக்ஸியில் தோசைக்கு அரைக்கப் போய்விட்டார். பேக்கிரவுண்டில் மிக்ஸி சத்தத்தில் வீட்டிலிருந்த வாண்டுகள் குறுக்கேயும் நெடுக்கேயும் ஓட குடும்பஸ்தனாய் படம் பார்ப்பதே சூப்பர் அனுபவம். நல்ல படமும் வெறுத்து போய்விடும். நடு நடுவே போய் சாம்பாருக்கு உப்பு பார்ப்பது, கேஸை அணைத்துவிட்டு வருவது, துணி காயப் போட்டிருப்பதால் மழை வருதா என்று அடிக்கடி ஒரு லுக்கு விடுவது, குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விடுவது என்று ஏகப்பட்ட அடிஷனல் டியூட்டிகளை எடுத்துக் கொண்டு படம் பார்ப்பது இன்னும் விசேஷம்.

ஸ்கெட்சு போடுவது, போட்டுத் தள்ளுவது, மற்றும் இன்ன பிற தாத்பரியங்களை நாராயணின் பதிவிலிருந்து புரிந்து கொண்டு பார்த்ததால் இத்தனை இம்சைகளுக்கும் நடுவில் விஷயங்கள் முதலிலிருந்தே புரிந்தது. கதையை எதார்த்தமாக ஆரம்பித்து கொண்டு செல்வதே நன்றாக இருந்தது. ஸ்க்ரீன்ப்ளே நன்றாக இருந்தாலும் கொஞ்சம் ஓவர் காரமாக இருந்தமாதிரி தோன்றியது -அல்லது அது பட்டியல், தலைநகரம், சித்திரம் பேசுதடி என்று ஒரே ரவுடிகளைப் பற்றிய படமாய் பார்த்ததினால் வந்த அலுப்பாக இருக்கலாம். யுவன் வழக்கம் போல் தூள் கிளப்பியிருக்கிறார். படத்தை விட பாடல்கள் தான் மிகப் பிடித்தது. ஒரே ஒரு பாட்டில் மட்டும் "காசு மேலே காசு வந்து" சாயல் லேசாக வருகிறது. பாதி வரை படம் எப்படி போகும் என்று ஈ.ஸியாக ஊகிக்க முடிகிறது. எதிர் கோஷ்டியாயிருந்தாலும் ரவுடிகள் எல்லோரும் ஹோல்சேலில் கத்தி வாங்கி வந்தமாதிரி எல்லோரும் ஒரே விதமான கத்தியை வைத்துக் கொண்டிருப்பது...ராஜா கால சண்டையில் வருவது மாதிரி இருக்கிறது. தனுஷ் ரொம்ப மெனக்கெட்டிருக்கிறார். "தொண்டையில் ஆப்ரேஷன் காசு கொடு" என்று சொல்வது கலக்கல் :)

ஸ்னேகா கலக்கியிருப்பார் என்று ரொம்ப எதிர்பார்த்தேன். வரும் நாலைந்துக் காட்சியில் சும்மா பல்லைக் கடித்துக் கொண்டு அழுகிறார். சே இவ்வளவு தானா என்று அலுத்துக் கொள்ளும் போது சோனியா அகர்வால் நுழைகிறார். சும்மாவே சோனியா சிரிக்க மாட்டார் அதுவும் செல்வராகவன் படத்தில் சிரிக்கவா போகிறார் என்று நினைத்தது தப்பவே இல்லை. இரண்டு பேரும் என் இரண்டாவது பெண் சாப்பிட அழுவதைவிட அழுகிறார்கள்.

அடப் போங்கடா நானே பெரிய ரவுடி நிறையபோட்டுத் தள்ளியிருக்கேன் என்று ரவுசு விட்டதில் சாயங்காலம் வாஷிங் மிஷினில் நிறைய போட்டுத் தள்ளவேண்டிய டியூட்டி சேர்ந்து கொண்டது தான் மிச்சம். படம் ஓ.கே. ரகம். நான் எதிர்பார்த்த அளவு தீனியில்லை. இப்போதைய திரைப்பட ட்ரெண்டின் படி கடைசியில் ரவுடியைப் போட்டுத் தள்ளிவிடப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அந்த ரவுடி இப்போது நிறைய கல்வி நிறுவனங்களை நடத்திவருகிறார் என்று ஸ்லைடு போடுகிறார்கள். நாராயணன் சொன்ன ஆள் தானா அது?

Wednesday, May 31, 2006

B.T

ஒரு வாரமாய் B.T-ல் படுத்தி எடுத்துவிட்டார்கள். நான் கீழ்ஸ்தாயில் "சாமஜ வரகமனா" பாடும் போது லேசாக வரும் கரகர சத்தம், எங்க ஊர் மாரியம்மன் கொடை விழாவில் போடும் ஸ்பீக்கரில் போட்ட மாதிரி ஒரு வாரமாக போனில் வந்து கொண்டிருந்தது. இன்கம்மிங் காலை எல்லாம் உத்தேசமாக இன்னார் பேசுகிறார் என்று அனுமானித்து மொபைலில் கால் பண்ணுங்கய்யா என்று சொல்ல வேண்டி இருந்தது. வழக்கமாக "இன்னொரு செல் போன் வாங்கிக்கோங்க" என்று கொஞ்சி கொஞ்சி பேசும் ஸ்பெயின் நாட்டுக் கிளி போன் பண்ணினாளா தெரியவில்லை கவலையாக இருக்கிறது.

B.T.க்கு போன் செய்து தகவல் சொன்னால், பழைய படங்களில் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே சொல்லும் டாக்டர் மாதிரி "எதாயிருந்தாலும் நாற்பத்தெட்டு மணி நேரம் கழிஞ்சாத் தான் சொல்லமுடியும்" என்று சொல்லி விட்டான். "அப்பாடா ஒருவழியாக ஒழிந்தது ப்ளாக் தொல்லை..இனிமேலாவது கொஞ்சம் குடும்பம், குழந்தை குட்டிகளை கவனியுங்கள்" என்று வீட்டில் ஏகப்பட்ட சந்தோஷம். வீட்டம்மா சொல்லிவிட்டர்களே என்று சிரமேற்கொண்டு குட்டிகளையெல்லாம் கவனிப்பது ஆகாது என்பதால் ஒருவாரமாக குழந்தை மட்டும் சமத்தாக கவனித்துக் கொண்டிருந்தேன்.

நாற்பத்தெட்டுமணி நேரம் கழிந்தும் ஒருத்தனையும் வருகிற வழியக் காணோம், போனில் வெறும் காத்து தான் வந்து கொண்டிருந்தது. கலர் டீவியை ப்ளாக் அண்ட் ஒயிட் டீவியாக மாற்றிய என்னுடைய மெக்கானிக் திறமையைப் பார்த்ததில் வீட்டில் ஸ்க்ரூட்ரைவரை ஒளித்து வைத்துவிட்டார்கள். "டேய் இன்னாங்கடா நினைச்சிக்கிட்டு இருக்கீங்க...அண்ணன் யாரு தெரியுமா...நாலு நாளா ப்ளாக் படிக்காம கைக் காலெல்லாம் இஸ்துகினு இருக்கு" என்று வீட்டில் காட்டமுடியாத கோபத்தையெல்லாம் சேர்த்து B.Tயை எகிறிய பிறகு தான் "தோ ஆள அனுப்பிட்டோம் ஆபீஸர்…வந்துகிட்டே இருக்காங்க..ஆபீஸர்" என்று வழிக்கு வந்தார்கள். ஒரு ப்ளாகரோடு கஷ்டம் இன்னொரு ப்ளாகருக்குத் தான் புரியும்ன்னு சும்மாவா சொன்னாங்க...பி.டியிலிருந்து அனுப்பிய மூதேவி “எங்கேயோ வேறு வேலை வந்து விட்டது நேரமாகிவிட்டது இனிமே நாளைக்குத் தான்" என்று கடையை மூடிவிட்டான். ஒருவழியாக நேற்று வந்து சரிசெய்து விட்டுபோயிருக்கிறார்கள்.

போன் வேலை செய்யாததால் எங்களால் குளிக்க முடியவில்லை..குதிரையைக் குளிப்பாட்ட முடியவில்லை சாப்பிட முடியவில்லை வீட்டோடு எல்லோரும் ஒரு வாரமாக பட்னி என்று பஞ்சப் பாட்டு பாடி நஷ்ட ஈடு கேட்டுக்கொண்டிருக்கிறேன். இல்லாவிட்டால் அகில உலக பளாகர் சங்கத்தில் சொல்லி மானநஷ்ட வழக்கு தொடரலாம் என்று இருக்கிறேன்.

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்...ஒரு வாரமாய் காணாமல் போனதற்கு B.T. தான் காரணம்.

(தேன் கூடு போட்டியில் வழக்கம் போல் வோட்டுப் போட்டு கவுத்தி மங்களம் பாடி விட்டீர்கள். நன்றி ஹை. பதிவு போடாவிட்டால் சோம்பேறி என்றெல்லாம் வாழ்த்து மடல் பாடுகிறார்கள்...ஓட்டுப் போடச் சொன்னால் தான் சப்ஸ்கிருப்ஷன் பீஸ் கேட்ட மாதிரி காணாமல் போய்விடுகிறார்கள்..இவங்க கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலையே முருகா....)

Wednesday, May 24, 2006

டைட்டானிக் - தமிழில்

டைட்டானிக்கை தமிழில் எடுப்பதற்கு பதிலாக தமிழ்ப்படுத்தி எடுத்தால் எப்படி இருக்கும் என்று திறமையாக சிந்தித்து உல்டா செய்திருக்கிறார்கள். சரி காமெடியாக இருக்கிறது. மொத்தம் பதிமூன்று நிமிடங்கள். மிஸ் செய்யக் கூடாத படம் :)
எச்சி துப்பும் போட்டியை நக்கல் விட்டிருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்...விட்டுவிட்டார்கள்.

இந்த படத்தின் படைப்பாளி/கள் யார் என்று தெரியவில்லை....மனமார்ந்த பாராட்டுக்கள்!! நல்ல் எதிர்காலம் இருக்கிறது உங்களுக்கு...கொஞ்சம் முயற்சி செய்யுங்கள், தமிழ் திரையுலகத்தில் நீங்கள் ஜொலிக்கலாம்.

Monday, May 22, 2006

ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்...














ஹப்பா....பார்ட்டி மிக நன்றாக கழிந்த்து. இந்தப் பார்ட்டியின் ஹைலைட்டே என்னைப் பொறுத்தவரையில் சாப்பாடு தான். அல்வா, சப்பாத்தி, குருமா,தால், சாம்பார், ரசம், கோவைக்காய் கறி, அவியல், எண்ணைக் கத்தரிக்காய் குழம்பு, அப்பளம், ஊறுகாய், பச்சை மிளாகாய் கறிவேப்பிலை பெருங்காயம் போட்டு தரமான மோர். திருநெல்வேலிக் காரன் என்ற முறையில் அல்வா எப்படியிருக்குமோ என்று கவலையாய் இருந்தது. தூள் கிளப்பியிருந்தார்கள்.

இனிமேல் பார்ட்டி நடத்த வேண்டுமானால் எந்த பொறுப்பை முக்கியமாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று நன்றாகத் தெரிந்துவிட்டது. இந்த முறை பைசாவை சேமிக்க வேண்டும் என்று சாப்பாட்டை எனது காரிலேயே பிக்கப் செய்து கொண்டு வருவதாக ஏற்பாடு. வீட்டில் இருக்கும் அரை டிக்கட், கால்ரைக்கா டிக்கட் மற்றும் முக்கியமான டிக்கடோடு எக்ஸ்ட்ரா டிக்கெட்டாக நண்பர் பழனியப்பன் எல்லோரையும் ஏற்றிக் கொண்டு சப்பாட்டையெல்லாம் கார் பூட்டிலும்(டிக்கி) பழனியப்பன் மடியிலும் போட்டு கிளம்பினால் மோட்டர்வேயில் ட்ராபிக் ஜாம். ம்ஹூம்...கவலையே படலையே...பார்ட்டி மதியம் ஆரம்பிப்பதால் முதலில் சாப்பாடு தான். சாப்பாடு இங்கே இருப்பதால் நாம் போனால் தான் பார்ட்டி ஆரம்பிப்பார்கள் என்று தெளிவாகத் தெரிந்ததால் நிதானமாக "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா" பாட்டு பாடிக்கொண்டு போனோம். ரொம்ப முடியாவிட்டால் "நாங்கள் பார்ட்டி இடத்தை மாற்றி விட்டோம் நீங்கள் எல்லோரும் இங்கே வாருங்கள் என்று சொல்லக் கூடிய தைரியமும் கார் பூட்டில்(டிக்கியில்) இருந்தது. நல்லவேளை பழனியப்பன் கேட்ட மாதிரி வடை பெட்டியை அவர் கையில் குடுக்காததால் வடைக்கு எந்த சேதமுமில்லாமல் 15 நிமிஷம் லேட்டாக முதல் பத்து பேருக்குள் வந்து சேர்ந்துவிட்டோம்.

ஒருவழியாக எல்லோரும் வந்து சேர்ந்து சாப்பாடு முடிந்து 12 மணிக்கு ஆரம்பிக்கவேண்டிய பார்ட்டியை இந்திய வழக்கப் படி கரெக்ட்டாக 2:30க்கு ஆரம்பித்துவிட்டோம். முதலில் ஸ்லோகம் என்று எல்லோரையும் எழுந்து நிற்கச் சொல்லி எல்லோரும் பக்திப் பழமாக..ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்க "வாள மீனுக்கும் வெலாங்கு மீனுக்கும் கல்யாணம் " என்று கானா உலகநாதனின் ஸ்லோகததைப் போட்டுக் கலாச...என்னை ஆள் வைத்து அடிக்க சதி தீட்ட ஆரம்பித்து விட்டார்கள். அப்புறம் உணமையான ஸ்லோகம் பாடச் சொல்லி வழக்கமான விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பித்தோம். உற்சாகம் வழக்கம் போல் கரைபுரண்டு ஓடியது. மிஸ்டர் யு.கே.மக்கள் போட்டியில் நம்ம பாலாஜி வெற்றி பெற்றார். கிரீடத்தை வைத்துக் கொண்டு மனுஷன் செய்த ஆண்கள் மற்றும் பெண்கள் கேட்வாக் கலாசல் ரகம். கடைசியில் நாலுகாலில் ஒரிஜினல் கேட் மாதிரி நடந்து அவர் வீட்டம்மணியைப் பார்த்து ஒரு சலாம் போட்டார் பாருங்கள் காணக் கண் கோடி வேண்டும்.

சிறுவர் சிறுமியர்கள் மேடைகளில் தத்தம் திறமையைக் காட்ட, சில குழந்தைகள் மைக்கைப் பார்த்ததும் பயந்து அம்மா புடவைக்குள் போய் ஒளிந்து கொண்டது...கவித்துவமாக கொள்ளை அழகாகயிருந்தது.

பாட்டுக்குப் பாட்டு, மற்றும் பாட்டு க்விஸ்களுக்கு நடத்திக் கொண்டிருக்கும் போதே மணி ஐந்தாகிவிட திரும்பவும் பசியாற சென்றோம். சமையல் போட்டியில் வடை, குலாப் ஜாமூன், முறுக்கு, சுகியம், தட்டை, வீட்டில் செய்த பிஸ்கெட்டுகள், ஓலை பக்கோடா, சிக்கன் பக்கோடா, ராஜ்மா சுண்டல், மசாலா அவல் என்று கலக்கி விட்டார்கள். "சோறே சொர்கம்" என்று எனக்கு ஞானம் பிறந்தது இந்தப் பார்ட்டியில் தான். எங்கவூட்டு அம்மணி செய்த குலோப் ஜாமூன் அதிக வாக்குகளைப் பெற்று வென்றது என்பதை நான் இங்கு எழுதாவிட்டால் என்ன நடக்கும் என்பது கல்யாணமான ஆண்களுக்குத் தெரியும்.

திரும்ப வந்து "டம்ப் சேரட்ஸ்" மற்ற்ம் "ஹவுஸி" போட்டிகளை நடத்தி பார்ட்டியை இனிதே நிறைவு செய்தோம். நேரமின்மை மற்றும் டெக்னிகல் பிரச்சனைகளால் குத்தாட்டத்தை ரொம்ப விமரிசையாக நடத்த முடியவில்லை ஆனாலும் மக்கள் குத்தில் செம கிளப்பு கிளப்பிவிட்டார்கள். போட்டியில்லாத இடத்தில் திறமையைக் காட்டக் கூடாதென்று என்னுடைய சலங்கை ஒலி ஆட்டத்தை அடுத்த பார்டிக்கு இருக்கட்டும் என்று ஒத்தி வைத்துவிட்டேன். விழா ஏற்பாடுகளை பிரேமலதா பாலன் தம்பதியினர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்கள்.

பிரேமலதா, அம்மணி, மும்பை கேர்ல், பாலாஜி, தாதோஜி,எஸ்.எல்.என் என்று ப்ளாக் உலக கூட்டமும் வந்திருந்தது. அம்மணியிடமிருந்து கூடிய சீக்கிரம் ஒரு Quick Tale வந்தாலும் வரலாம் :)

யூ.கே.மக்கள் குழுமத்தில் அடுத்த முறை எங்காவது வெளியூருக்கு போய் கேம்ப் போட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். வர்றீங்களா?


பின்குறிப்பு - தேன்கூட்டில் "தேர்தல் 2060"க்கு வாக்குப் பதிவு ஆரம்பித்துவிட்டார்கள். படித்துப் பார்த்து உங்களுக்குப் பிடித்த ஆக்கத்திற்கு வோட்டக் குத்தி கவுத்துங்கப்பூ

Thursday, May 18, 2006

பேஷன்

பேஷன் என்றால் வெத்தலப் பாக்கு வைத்துக் கொடுக்கும் தட்டு என்று தான் சின்னவயதில் ரொம்ப நாள் வரை எனக்குத் தெரியும். நண்பன் ஒருவனுக்கு மெட்ராஸ் வரை உறவு. ஐந்தாவது படிக்கும் போதோ என்னமோ...ஒரு நாள் காலரை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு வந்தான். கேட்டதற்கு "இதான் இப்போ மெட்ராஸில் பேஷன்" என்று சொன்னபோது தான் வெத்தலப் பாக்குக்கு அப்பாற்பட்ட ஒரு சமாச்சாரம் இருக்கிறது என்று தெரியவந்தது. "ஆமாமா எங்க சித்தப்பா பையனும் அப்படித் தான் சொன்னான்" என்று இல்லாத சித்தப்பாவை மேற்கோள் காட்டி விட்டு அந்த நண்பனையே என்னுடைய பேஷன் குருவாக ஏற்றுக்கொண்டேன்.

ஆனால் வீட்டில் பேஷன் ஞானம் ரொம்பக் கம்மி. பள்ளி யூனிபார்மிலிருந்து விசேஷங்களுக்கு வாங்கும் கலர் துணி வரை எல்லாவற்றிலும் மிடில் க்ளாஸ் பேஷன் தான் தலையோங்கித் தழைக்கும். ஒட்டடைக் குச்சி மாதிரி இருந்தாலும் வளர்ற பையன் என்ற பட்டம் துணி தைக்க டெய்லர் கடைக்குப் போகும் போது கண்டிப்பாக கிடைக்கும். "வளர்ற பையன்..டிராயர் ரெண்டு ஹெம்மிங் உள்ளே மடிச்சுத் தைச்சு..நல்ல பெரிசாத் தைச்சிடு மணி...தைக்கிறதெல்லாம் சீக்கிரமே சின்னதாய் போயிடறது"- மாமா சங்கு ஊதாமல் டெய்லர் மணி அளவு எடுக்கவே முடியாது. மணிக்கு ஏற்கனவே தாராள மனசு..மாமாவின் கோரிக்கையும் சேர்ந்து பாவடைக்கு கொஞ்சம் நீளம் கம்மியாக டிராயரைத் தைத்துவிடுவார். குலேபகாவல்லி எம்.ஜியார் மாதிரி ரொம்பவே தாராளமாக இருக்கும். அளவு எடுக்கும் போது "ப்ளீஸ் டைட்டாக தையுங்க" என்று மாமாக்கு தெரியாமல் என்ன தான் கெஞ்சினாலும் மணி கண்டுகொள்ளவே மாட்டார். டைட்டாக தைத்தால் தானே சீக்கிரம் சின்னதாகப் போகும் அடுத்த துணி தைக்க வருவார்கள் என்று மணிக்குப் பொழைக்கவே தெரியாது. மணி காட்டும் கைவண்ணத்தில் தயிர்வடை தேசிகன் மாதிரி இருக்கும் என் பெர்சனாலிட்டி ஓமக் குச்சி நரசிம்மனுக்கு அப்கிரேட் ஆகிவிடும். ஊரில் ஒரு குசும்பு பிடித்த மாமி "டேய் உன் டிராயரக் கொஞ்சம் தாயேன் எங்காத்து நிம்மிக்கு பாவாடை தைக்க டெய்லர் அளவு துணி கேக்கறான்" என்று ரவுசு விடும்போதெல்லாம்...மணி சீகிரம் கடையை மூட வேண்டும் என்று மனதில் கோபம் வரும். அந்த மாதிரி டவுசரெல்லாம் காலத்தாலும் அழியாது என்பதால் வேண்டுமென்றே சிமிண்ட் தரையில் பிட்டியைத் தேய்த்துக் கிழித்து விடுவேன். "மீட்டர் அறுபது ரூபாய் குடுத்து விமல் சூட்டிங்ஸ்ல எடுத்தால் அடியில அருவாமனை வைச்சுண்டிருக்கிற மாதிரி எப்பிடித் தான் கிழிக்கிறயோ..." என்று மாமி அய்யோப் பாவமாய் புலம்புவார்.

துணி தைக்க மாமா வரமுடியாமல் மாமி அளவு கொடுக்க கூட வந்தால் கொஞ்சம் தப்பிக்கலாம். மாமி ரொம்ப அப்பிராணி. மணிக்கு ஒரு அஸிஸ்டென்ட் உண்டு. இளைஞன். அவனிடம் தான் கடையில் இருக்கும் புஸ்தகத்திலுள்ள மீசையில்லா ஹிந்திப் பட மைனர்களைக் காட்டி சிலாகித்துக் கொண்டிருப்பேன். ஒரு தரம் அவனோடு பார்ட்னர்ஷிப் போட்டுக் காட்டிய டகால்டி வேலையில் தீபாவளிப் பேண்ட் சீக்கிரமே சின்னதாகப் போய்விட்டது. அன்றைக்கு என் புண்ணியத்தில் மணிக்கு வீட்டில் ஸ்பெஷல் அர்சனை டிக்கட்.

தொளதொளவென்று தைக்காமல் டைட்டாக இருக்கும் டைட்ஸ் கொஞ்ச நாள் தான் இருந்தது. அப்புறம் என் பேஷன் குரு "இப்போ லேட்டஸ்ட் பேஷன் பேகி பேண்ட் தான்" என்று மெட்ராஸ் பேஷனை இறக்குமதி செய்துவிட்டான். அதுவரை டைட்டாகத் தைக்கச் சொல்லி கழுத்தறுத்த மணியிடம் லூஸாகத் தைக்கச் சொல்லி பல்லவியை மாற்றியதில் மணி தான் கொஞ்சம் லூஸாகி விட்டார். பேகியில் பாக்கெட் பக்கத்தில் எத்தனை ப்ளீட்ஸ் இருக்கு என்பது மிக முக்கியம். பையன்கள் அதைத் தான் முதலில் பார்ப்பார்கள். "பொம்பளங்க புடவை கட்டுற மாதிரி...இதெல்லாம் எதுக்குப்பா" என்று மணி ரொம்பவே புலம்புவார். ஏழு ப்ளீட்ஸும் பயங்கர லூஸாக பேகியும் போட்டுக்கொண்டு கண்ணாடியில் ஸ்டைலாகப் பார்த்துக் கொண்டு தெருவில் நடந்தால் "ஸூலேர்ந்து தப்பிச்சு வந்த தேவாங்கு மாதிரி இருக்கு...இருக்கிற உடம்புக்கு இது ஒன்னு தான் குறைச்சல்...பார்த்துடா கூண்டுல பிடிச்சிண்டு போயிடப் போறான்" - ஏகப்பட்ட திருஷ்டி கழியும்.

அப்புறம் அஞ்சலி படத்தில் அந்தப் பையன்கள் எல்லோரும் சஸ்பென்டர் பெல்ட் வைத்து போட்டு வந்த ட்ரெஸ் ரொம்ப பிரபலமாயிற்று. மணியிடம் அதை விளக்குவதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. மணியிடம் ஒரு குணாதிசயம் உண்டு. விஷயம் தெரியவில்லை என்று மட்டும் சொல்லவே மாட்டார். என்னை மாமா முன்னாடி எப்படி மடக்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். "இந்த சஸ்பென்டர் கிஸ்பென்டர் இதெல்லாம் மூக்கு ஒழுகிற சின்னப் பசங்க டவுசர் அவுந்திரக் கூடாதுன்னு ஒரு பெல்ட பொட்டு வைச்சு தைக்கிறது...வளர்ந்த புள்ளங்க உங்களுக்கு எதுக்குப்பா...சரி எனக்கென்ன...ஆனா அதுக்கு இருபது ரூபாய் கூட ஆகும்.." என்று கரெக்டாக கத்தரி போட்டுவிடுவார். அதைக் கேட்ட மாத்திரத்தில் மாமாக்கு சஸ்பென்டர் பிடிக்காமல் போய்விடும். "அதான் இடுப்புக்கு ஜோரா பெல்ட் வாங்கிக் குடுத்திருக்கிறேனே இப்போ அதப் போட்டுக்கோ போறும் ...இதெல்லாம் அடுத்த தரம் பார்த்துக்கலாம்" என்று ஒரே போடாக போட்டுவிடுவார். "நாட்டாமை தீர்ப்ப மாத்திச் சொல்லு" என்று எனக்கு கத்தவேண்டும் போல இருக்கும்.."சரி மாமா" என்று தலையாட்டிவிட்டு அடுத்த தரம் வருவதற்குள் சஸ்பென்டர் பேஷன் மாறி இருக்கும்.

ஜீன்ஸ் வந்த போது அது வித்த விலைக்கு வீட்டில் சமாளிப்பது பிரம்மப் பிரயத்தனமாகிவிட்டது. "சாயம் போன சாக்குத் துணிய இவ்வளவு விலை குடுத்து எவனாவது வாங்குவானா?" என்று ரொம்ப நாளாக கிடைக்கவேஇல்லை. ஊரிலிருந்து வரும் போது யாராவது வாங்கிக் கொடுத்தால் தான் உண்டு. எனக்கு பிடித்த பேஷன் மாறுதல்களிலேயே ஜீன்ஸுக்குத் தான் முதலிடம். அடிக்கடி தோய்க்க வேண்டாம், சீகிரம் அழுக்காகாது, ஆனாலும் தெரியாது, எந்த சட்டையோடு வேண்டுமானலும் போட்டுக் கொள்ளலாம். ஆனால் எலி செத்த வாடை வந்தாலே எங்கள் வீட்டில் என் ஜீன்ஸை தோய்க்கப் போட்டுவிடுவார்கள். ஆனால் இந்தக் கிழித்து விட்டுக் கொண்ட ஜீன்ஸெல்லாம் பிடிக்காது.

ஜீன்ஸ், ரெடிமேட் என்று வந்த பிறகு கொஞ்சம் தைரியமாகி அப்புறம் மணி கடைக்குப் போவதை நிறுத்தி விட்டேன்.

சின்ன வயதில் பேஷன் பேஷன் என்று அவ்வளவு அலைந்ததற்கு..இப்பொழுது அவ்வளவு நாட்டமில்லை. "உங்களுக்கு பேஷன் சென்ஸ் சுத்தமா இல்லை" என்று தலமைச் செயலகம் சொல்லி துணியெடுக்கப் புறப்படும் போதெல்லாம்..."யாரு எனக்கா...ஹ... மணி கடையில கேட்டுப் பாரு நம்ம பேஷன் சென்ஸ" என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

Tuesday, May 16, 2006

தேர்தல் 2060 - சிறுகதை

தேன்கூடு நடத்தும் போட்டிக்கு எனது ஆக்கம். இந்தக் கதையில் உங்களுக்கு சுஜாதாவின் தாக்கம் தெரியுமானால் அது என் தவறில்லை. இந்த மாதிரி கதைகளில் அவ்வளவு பெரிய பாதிப்பை உண்டு பண்ணியிருக்கிறார் மனுஷன். முற்றிலும் மாறுபட்ட களத்தில் இன்னொரு கதையையும் யோசித்தேன். கடைசியில் இதே இருகட்டும் என்று இதை முதலில் எழுதிவிட்டேன். அதக் கதையையும் முடிந்தால் இங்கே பதிகிறேன்.
********************
தேர்தல் 2060

"இவர் தான் பிஜு, ‘அவிஷ்கா’ மாட்யூலின் சீஃப் டெக்னிகல் ஆர்கிடெக்ட்" நிர்வாக இயக்குனர் என்னை வீடியோ கான்பரன்ஸில் அறிமுகப் படுத்திய போது ஒரு அழுத்தமான அமைதி அங்கு நிலவிக்கொண்டிருந்தது. டெக்னிகல் டைரக்டர் உட்பட எல்லா பெரிய தலைகளும் ஆஜராகியிருந்தார்கள்.

"பிஜுவிற்கு ‘அவிஷ்கா’ மாட்யுலில் தெரியாத விஷயமே கிடையாது நூற்றி அறுபது பேர் கொண்ட டீமின் மொத்த மூளையும் பிஜு தான்" - டைரக்டர் அளவுக்கு அதிகமாக என்னைப் புகழ்ந்து கொண்டிருந்தார்.

நடக்கும் 2060-ம் வருஷ தேர்தலின் மூளை, முதுகெலும்பு, நரம்பு, கிட்னி எல்லாமே இந்த “அவிஷ்கா” மாட்யூல் தான். வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களின் விபரங்கள், வாக்கு சேகரிக்கும் முறை, தேர்தலை நடத்துவது என்று சகலத்தையும் அடக்கி வைத்திருக்கிறது. கள்ள வோட்டு என்பதை சரித்திர கால தொடராக்கிய விஞ்ஞான வஸ்து. கி.பி.2010 வரை புழங்கிக் கொண்டிருந்த வாக்காளர் அட்டை, வாக்குச்சாவடி என்று சாவடிக்காமல் 2060ன் விஞ்ஞான வளர்ச்சியின் அததாட்சி. நேனோ சேனலில் ஒளிபரப்பாகும் "கோலங்கள்" தொடரில் சிபியும் அவ பாட்டி அபியும் டயலாக் பேசி முடிப்பதற்குள் மொத்த தேர்தலையும் நடத்தி முடித்துவிடும். இந்த முறை தேர்தலை நடத்த எங்கள் ‘அவிஷ்கா’ மாட்யூலை எலெக்க்ஷன் கமிஷன் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த தேர்தல் ஓத்திகைகளுக்காகத் தான் ராப்பகலாக என் டீம் உழைத்துக் கொண்டு இருக்கிறது.

தேர்தல் நடத்தப் போகும் முறை பற்றி போட்டியிடும் கட்சி தலைவர்களுக்கு நிர்வாக இயக்குனர் விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாக் கட்சித் தலைவர்களும் லாகின் செய்திருந்தார்கள். ஒருத்தருக்காவது இந்த டெக்னாலஜி விஷயங்கள் பிடிபடுமா என்று எனக்கு ரொம்ப சந்தேகமாக இருந்தது. இந்த மாதிரி மீட்டிங்குகளில் நான் பொதுவாக கலந்துகொள்ளமாட்டேன். வளவளவென்று பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் இன்று என்னுடைய மாட்யூல் என்பதால் ஒருவேளை எதாவது டெக்னிகல் கேள்விகள் வந்தால் விளக்கம் கூற வர வேண்டிய நிர்பந்தம்.

கட்சி தலைவர்கள் அறிமுகப் படுத்திக் கொண்டு கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். நான் கூட்டத்தை நோட்டம் விட ஆரம்பித்தேன். முப்பதிரண்டாம் திரையில் தெரிந்த நபரை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. அவன் பக்கதில் உட்கார்ந்திருந்த பெண் நான் பார்ப்பதைப் பார்த்து நட்புடன் சிரித்தாள். அவளைத் தொடர்ந்து அவனும் புன்முறுவல் பூத்தான். கண்டிப்பாய் அவனை எங்கோ பார்த்திருக்கிறேன். எங்கே என்று தான் பிடிபடவில்லை. எங்கு பார்திருக்கிறேன் என்று புருவத்தை நெருக்கி யோசித்துக் கொண்டிருந்ததில் டிஜிட்டல் முன்னேற்றக் கழகத் தலைவர் கேட்ட அபத்தமான கேள்வியைக் கோட்டை விட்டு அப்புறம் சமாளித்து பதில் சொல்ல வேண்டியதாயிற்று.

"என்னைத் தெரிகிறதா?" - திடீரென்று என் திரையில் ப்ரைவேட் மெசேஜ் பளிச்சிட்டது. அவனிடமிருந்து தான். யோசிப்பது மாதிரி பாவ்லா காட்டிக் கொண்டே இல்லை என்று தலையை ஆட்டிக் காட்டினேன். எதிர்பார்த்தவன் போல்...சகஜமாக நோட்டம் விட்டுக் கொண்டே மெதுவாக ஆப்டிகல் மார்க்கரை மூக்குக்கு கீழே மீசை மாதிரி வைத்துக் காட்டினான்.

இப்போது பிடிபட்டு விட்டது...மிஸ்ரா...என்னுடைய யுனிவர்ஸிட்டியில் இரண்டு ஆண்டுகள் சீனியர். யூனிவர்சிட்டி முழுவதும் அவனுடைய அறிவு பிரபலம். ஏதோ பெரிய கம்பெனியில் வெளிகிரகத்தில் செட்டிலாகி மார்ஸுக்கும், ப்ளூட்டோவிற்கும் பறந்துகொண்டிருப்பான் என்று நினைதவன்...நியூட்ரான் சமாஜ் கட்சித் தலைவனா? என்னால் நம்பவே முடியவில்லை. "என்ன இப்படி.." என்று மெசேஜ் அடித்தே விட்டேன்.

"இப்போ அரசியல் ஒரே ஊழலாகிவிட்டது படித்தவர்கள் களம் இறங்கினால் தான் களையெடுக்க முடியும்" ரொம்பத் தீவிரமாக பதில் அனுப்பியிருந்தான்.

எனக்கும் ரொம்ப அவசியம் என்று தான் பட்டது. அவ்வளவு ஊழல் மண்டிப் போயிருந்தது. சந்திரன், நவீன் எல்லோரும் அவனுடன் கட்சியில் இருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொண்டேன். பக்கத்திலிருந்தது அவன் செட் காவ்யா மாதிரி இருந்தது. கேட்கவில்லை. அவள் பின்னாடி ஒரு பெரிய கூட்டமே யுனிவர்ஸிட்டியில் அலைந்து கொண்டிருக்கும்.

மீட்டிங் முடிந்து பேசலாம் என்று கவனிப்பது போல் தீவிரமாகிவிட்டேன். காவ்யா அவன் பக்கதிலிருந்த அன்யோன்யத்தைப் பார்த்தால் காதலிக்கிறார்கள் என்றே தோன்றியது. கை கோர்த்து உட்கார்ந்திருக்கிறார்களா என்று திரையில் தெரியவில்லை.

மீட்டிங் முடிந்து மிஸ்ராவுடன் "சேட்"டிக் கொண்டிருந்த போது அது காவ்யா தான் என்று ஊர்ஜிதமாயிற்று.

"பிஜூ நீ படித்த துறையிலேயே பெரிய வேலையில் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. நான் டெக்னாலஜி பக்கம் திரும்பி வெகுநாட்களாகிவிட்டது " - மிஸ்ராவின் ஆதங்கம் எனக்குப் புரிந்தது. அவனும் நான் படித்த துறையில் கில்லாடி தான். அதற்கப்புறம் கொஞ்ச நேரம் டெக்னிக்கலாக உரையாடிக் கொண்டிருந்தோம். நான் மிக புத்திசாலித்தனமாக ‘அவிஷ்கா’-வை வடிவமைதிருப்பதாக மிஸ்ரா புளகாங்கிதமடைந்தான். இந்த மாதிரி டெக்னிகல் விஷயங்களைப் பேசுவதற்காகவாது நாம் இனிமேல் அடிக்கடி சந்திக்க வேண்டும் என்று உணர்ச்சி வசப்பட்டான். நேரமாகிவிட்டது அப்புறம் சந்திக்கலாம் என்று பரஸ்பரம் விடைபெற்றுக் கொண்ட போது தான் அதைக் கேட்டான்

" தப்பாக எடுத்துக் கொள்ளாதே...பிஜூ...ஈசி784பியில் ஒரு சின்ன சித்து விளையாட்டு காட்டினால் விழும் ஓட்டுகளில் ஓவ்வொரு நாலாவது வோட்டும் எங்கள் கட்சிக்கு விழுமாறு செய்யமுடியும்...கடைசி வோட்டில் அந்த ட்ரோஜனை தானே அழிந்து போகும் படியும் செய்யலாம்..எந்தத் தடயமும் இருக்காது...எனக்காக, நம் யுனிவர்சிட்டியில் படித்த இளைஞர் பட்டாளத்திற்காக இதைச் செய்யமுடியுமா? நான் மட்டும் வந்துவிட்டால் உன்னை இந்த கம்பெனியின் இயக்குனாரக ஆக்கவேண்டியது என் பொறுப்பு.. என்ன சொல்ற"

எனக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது.

இனி ஒரு விதி செய்வோம்!

லோக் பரித்ரன் கட்சி உடைந்தது.


“We left Lok Paritran on Sunday in disgust after witnessing the favouritism shown to the Mylapore candidate Santhanagopalan, who was given all the financial support and workforce for the campaign. We got nothing by way of support. On the other hand, we were abused, humiliated and even threatened by our national leadership,” said K. Rajamany, the Anna Nagar candidate and an engineering consultant.


இனி ஒரு விதி செய்வோம்!
"அரசியல் என்பது சாக்கடை என்ற சித்தாந்தம் அடிமனதில் ஊன்றியிருக்கிறது. "ஆயுத எழுத்து" பார்த்து மணிரத்தினத்தை நினைத்து புன்முறுவலுடன் உதட்டைப் பிதுக்கி இருக்கிறேன். பெட்டிகளும், சீட்டுகளும் தீர்மாணிக்கும் கொள்கைகளுக்கும், கடைசி நேர தேர்தல் நேர கூட்டணிகளுக்கும் வரிசையில் நின்று ஓட்டுப் போடுவைதை விட பால்கோவா சாப்பிட்டுவிட்டு பல்லைக் குத்திக் கொண்டிருக்கலாம் என்று ஒரு தரம் கூட வோட்டுப் போடாமல் இருந்திருக்கிறேன். ஏதோ.ஒரு.மு.க ஆட்சிக்கு வரும் போது "கிழிச்சுருப் போறாங்க" என்பதை பெருசுகள் பேசட்டும் என்று புறந்தள்ளியிருக்கிறேன்."அப்துல் கலாம்" ஜனாதிபதியானாலும் அடுத்தது யார் என்ற நெருடல் இருந்திருக்கிறது. வோட்டு போட்டவில்லை என்பது பெரிய குற்றவுணர்ச்சியாக இல்லாமல் இருந்திருக்கிறது"

அட போங்கப்பா....அப்பிடியே இருந்துட்டு போறேன்...!!!

Friday, May 12, 2006

Hemel Pary Curtain Raiser

உங்கள விட்டா எனக்கு வேற யாரு இருக்காங்க..நீங்களே காறித் துப்பலைன்னா வேற யாரு துப்புவாங்க...

ராத்திரி கண்ணு முழிச்சு ஏதோ செஞ்சிருக்கேன்....கொஞ்சம் பார்த்து பெரிய மனசு பண்ணுங்கண்ணா /பண்ணுங்கக்கா

****
Hi All,
A curtain raiser presentation is now available now. Don't miss this presentation with Audio.

Follow the instructions below to see and enjoy it.

Download the zip file. Extract the contents to root c:\ (The presentation will not work if you extract to any other location i.e. the mp3 file needs to be in c:\ else audio will be lost ).


Click here to download the presentation
(if the link does not work then cut and paste http://www.dubukkuworld.com/Hemel/HemelCurtainRaiser.zip in Internet explorer).

Turn your speakers on and Double click Hemel_Invitation.pps.

Sit back and enjoy(?!!??!) the presentation with audio .
*********

Wednesday, May 10, 2006

"தண்ணி" பார்ட்டி

உலகில் என்னை மாதிரி தண்ணியடிக்காத தறுதலைகளுக்கெல்லாம் கஷ்டமான காரியங்களில் ஒன்று தண்ணிப் பார்டிக்குப் போவது. இதில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லையென்றால் இன்னும் விசேஷம். தீர்த்தம் சாப்பிடும் மஹானுபாவர்களின் குஷியை இந்த மாதிரி பார்ட்டிக்குப் போகும் போது பார்க்கவேண்டுமே. சும்மா தேமேன்னு இருந்தாலும் விடமாட்டார்கள். "சும்மா வாடா, அங்க அவனவன் வாயில ஃபனல வச்சு ஊத்திக்கிறத பாரு கண்கொள்ளாக் காட்சியா இருக்கும்" என்று சும்மா இருக்க விடமாட்டான். முதலில் ரெண்டு மூனு தரம் இப்படி ஏமாந்து போயிருக்கிறேன். வாயில் ஃபனலை வைத்து கொண்டு ஊத்திக் கொள்வதெல்லாம் உண்மை தான். ஆனால் அன்ட்ராயர் அவிழ்ந்தது கூடத் தெரியாமல் ஊத்திக் கொள்ளுவதெல்லாம் எனக்கு என்னமோ கண்கொள்ளாக் காட்சியாகப் படவில்லை. ஒழுங்காய் பேசிக் கொண்டிருப்பவர்களெல்லாம் ரெண்டு ரவுண்டு உள்ளே போனவுடன் கார்ல் மார்க்ஸாகி விடுவார்கள். வாழ்க்கை என்றால் என்ன, இன்பம் என்றால் என்ன துன்பம் என்றால் என்ன என்று தத்துவங்கள் எடுத்து விடுவார்கள் பாருங்கள்...காதில் ரத்தம் வந்துவிடும். சிலர் வள்ளலார் மாதிரி கருணைக் கடலாகி விடுவார்கள். உலகில் ஏழைகளே இருக்கக் கூடாதுடா என்று ஆரம்பித்து கருணை உணர்ச்சி பொங்கும். ஒரு நண்பன் தண்ணியடித்துவிட்டு சிக்கனை மென்று கொண்டே எறும்புகள் வாழ்கையில் எப்பிடி கஷ்டப்படுகின்றன, மழை பெய்தால் எவ்வளவு கஷ்டம் அதற்கு உடம்பு சரியில்லாமல் போனாலும் யார் உதவுவார்கள் என்றெல்லாம் ஃபீல் பண்ணி குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறான். நமக்கு சிரிப்பு வந்தாலும் சிரிக்க முடியாது. மற்ற தண்ணியடித்த தொண்டரடிப் பொடியாழ்வார்கள் கோவித்துக் கொண்டுவிடுவார்கள். அதற்கப்புறம் அடுத்த நாள் இதைப் பற்றி சொல்லிச் சொல்லி நான் ஓட்டின ஓட்டில் அவன் ஓடியே போய்விட்டான்.

கூட்டமாய் போனாலும் பரவாயில்லை. தண்ணியடிக்கும் நண்பனுக்கு கம்பெனி குடுக்க தனியாய் போய் மாட்டிக் கொண்டால் அவ்வளவு தான். அதிலும் லவுஸ் விடும் நண்பனாய் இருந்தால் கிழிஞ்சுது கிருஷ்ணகிரி. விட்டத்தைப் பார்த்துக் கொண்டு சிகிரெட் புகையை ஊதிக்கொண்டு "அன்னிக்கு அவ என்னை ஒரு பார்வை பார்த்தா பாரு" என்று ஃபீலிங் காட்டுவார்கள் பாருங்கள், சினிமாவில் ஒரு தாடி வைத்த தாத்தா கம்பளி போர்வையை போர்ர்திக் கொண்டு பின்னால் புகை வர கைய்யில் ஒரு வட்டமான கொட்டைத் தட்டிக் கொண்டு ஒருத்தருமே இல்லாத ஊரில் தெருத் தெருவாக ஒரு நாயைக் கூட்டிக் கொண்டு போய் யாருக்காகவோ பாடுவாரே அதெல்லாம் தோத்துவிடும். பீலிங் படலத்திற்கு பிறகு வாயிலெடுத்து வழித்துக் கொட்டும் வைபவமும் இருக்கும். என்னைப் பொறுத்த வரை தண்ணியடிப்பவர்களுக்கு கோபம், தாபம், பாசம்,சுயமரியாதை, உலக அக்கறை என்று எல்லா உணர்ச்சிகளுமே மேலோங்கி இருக்கும். சொந்தக்கார வட்டத்தில் இரண்டு பேர் தண்ணியடித்து விட்டு ராத்திரி டி.வி.யெஸ் 50ல் வந்துகொண்டிருக்க, ஒரு (உண்மையான) கழுதை குறுக்கே ஓடி வந்து வண்டியிலிருந்து விழுந்துவிட்டார்கள். ஒரு நண்பனுக்கு கொஞ்சம் அடிபட்டு முட்டியில் ரத்தம் வந்து விட்டது. அதைப் பார்த்த இன்னொரு நண்பனுக்கு கோபம் தலைக்கேறி பழிவாங்கும் உணர்ச்சி மேலோங்க கழுதையை அடிக்க ரோடு முழுக்க துரத்திய கதை இன்னமும் குடும்பத்தில் பிரசித்தம். " அது எதுக்குடா கழுதைய அந்த துரத்து துரத்தின" என்று ஒவ்வொரு தரமும் என் வீட்டுக்காரி என்முன்னால் அவர் மானத்தை வாங்குவார்.சில கேஸ்கள் நேர் உல்டா. ரெண்டு ரவுண்டுக்கு அப்புறம் வாயே திறக்க மாட்டார்கள். கடப்பாறையை போட்டு நிமிண்டினால் தான் ஒரு வார்த்தை சாஸ்திரத்துக்குப் பேசுவார்கள்.

ஒருதரம் சென்னையில் ராம்கோவில் சிஸ்டம்ஸில் இருந்த போது நண்பர் ஒருவருக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தைக் காரணம் காட்டி அவருக்கு மொட்டை போட நண்பர் குழாம் முடிவு செய்தது. வழக்கமாக அடையாறில் வெட்டுகிற இடங்களை எல்லாம் விட்டு விட்டு தரமணி டாக்கீஸ் என்று தண்ணியடிக்கும் தர்மவான்கள் முடிவு செய்தார்கள். அங்கே தண்ணியும் உண்டு நல்ல சப்பாடும் உண்டு என்று சதிவலை பின்னப்பட்டதில், நானும் இன்னொரு அப்பாவியும், சாப்பாடு கிடைக்கும் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு போனோம். தியேட்டர் மாதிரி திரையெல்லாம் வைத்து நல்ல ஜோராகத் தான் இருந்தது. "என்ன வேண்டும்" என்று கேட்டு பேரர் விருந்தோம்பாமல் பாருக்குப் போனால் தான் சைட் டிஷ் இலவசம் இங்கே தீர்த்தம் சப்பிட்டால் சைட் டிஷ்க்கும் படியளக்கவேண்டும் என்று சொல்ல, கும்பல் பாருக்கு குடிபெயர்ந்தது. ஜூஸெல்லாம் குடித்தால் சாப்பிட சாப்பாடு அளவு குறைந்துவிடும் என்று நான் ஜூஸை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஏழு மணிக்கு ஆரம்பித்த பார்ட்டி, பத்து மணி வரை தண்ணியிலேயே மிதந்து கொண்டிருந்தது. நானும் அந்த அப்பாவியும் வந்து கொண்டிருந்த சுண்டலை மட்டும் நொசுக்கிக் கொண்டிருந்தோம். திடிரென்று பத்து மணிக்கு பார்ட்டி கொடுப்பவர் "தம்பிகளா...இந்தப் பார்டிக்கு என்னோட பட்ஜெட் இவ்வளவு தான் " என்று கையை விரித்து விட்டார்.முன்னாடியே சொல்லியிருந்தால் வந்த சுண்டலையாவது கூடக் கொஞ்சம் நொசுக்கி இருப்பேன் என்று எனக்கு ஒரே வருத்தம். பார்ட்டிக்குப் போய் வெற்று வயிற்றுடன் வந்ததற்கப்புறம் இந்தியாவில் இனி தண்ணிப் பார்டிக்கே போகக் கூடாதென்று முடிவு செய்திருந்தேன்.

இங்கே வெள்ளைக்கார தண்ணிப் பார்ட்டியில் இம்சை வேறு மாதிரி. எதிராளி கைய்யில் க்ளாஸ் வைத்திக்கொண்டிருக்கும் போது நாம் வைத்துக் கொள்ளாவிட்டால் மரியாதை குறைச்சல். இதற்காக ஆரஞ்சு ஜூஸாவது வைத்துக் கொள்ளவேண்டும். ஆனால் துரை ஒரு க்ளாஸ் பியரையோ, காக்டெயிலையோ ஒருமணி நேரமாய் வைத்துக் கொண்டிருப்பார். நானெல்லாம் ஊரில் ஆரஞ்சு ஜூஸ் குடுத்தால் 2 H.P மோட்டார் போட்டு உறிகிற மாதிரி ஒரே உறிஞ்சாக உறிஞ்சி காலியாக்கி விட்டுத்தான் க்ளாஸை கீழே வைப்பேன். மருந்து குடிக்கிற மாதிரி சின்னச் சின்ன சீப்பியாக குடிப்பதற்கு ரொம்பவே முதலில் கஷ்டப் பட்டேன். இப்பொழுது கொஞ்சம் பழகிவிட்டது. இதோடு இன்னொரு கஷ்டம் வேறு இங்கே உண்டு. வந்த புதிதில் துரைமார் பேசுவது வழவழ கொழகொழவென்று ஏற்கனவே ஒரு இழவும் புரியாது, இதில் தண்ணியடித்து விட்டுப் பேசச் சொன்னால் சுத்தம். அத்தோடு இங்கே இருக்கிற பப்புகளில் மாரியம்மன் கோவில் கொடை விழா மாதிரி பாட்டை வேறு அலறவிட்டு விடுவார்கள். குத்து மதிப்பாக "யா யா", "அப்கோர்ஸ்", "கிரேட்", "ஈஸிட்?" "ஓ ரியலி" என்று வரிசைகிரமம் வைத்து சிரித்துக் கொண்டே சொல்லிவிடுவேன். இந்த லட்சணத்தில் துரை நான் பேசுவது புரியவில்லை என்பார். எல்லாம் நேரக் கொடுமைடா...என்று நினைத்துக் கொண்டு "சந்தைக்குப் போனும் ஆத்தா வையும்" என்று கம்பி நீட்டிவிடுவேன்.

இந்த மாதிரி கொடுமைக்காவது தண்ணியடிக்க கத்துக்கனும் என்று ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டு இருக்கிறேன். புது வருஷ கொள்கைகள் மாதிரி அதற்கும் இன்னும் வேளை வரவில்லை.

Wednesday, May 03, 2006

Party again in London(Hemel Hempstead)

லண்டனில் மீண்டும் பார்ட்டி. இந்த முறை charityக்காக fund raising event-ஆக நடக்க இருக்கிறது. பார்ட்டியில் குத்தாட்டம்,பாம்பு டான்ஸ், பல்லி டான்ஸ் என்று வழக்கமான கலக்கல்களைத் தவிர மேலும் சில ஸ்டால்கள், ஏலம் என்று களை கட்டப்போகிறது. போன தடவை சுஜாதா அம்மணி தலைமையில் பெண்களெல்லாம் சூப்பராக ஆடி ஆண்கள் நடனத்தையெல்லாம் ஒன்றுமே இல்லை என்று ஊதித் தள்ளிவிட்டார்கள். இந்த முறை ஒரு கைப்பார்த்துவிட வேண்டும் என்று "பத்தே நாளில் ப்ரேக் டான்ஸ்" க்ளாஸ் சேர்ந்திருக்கிறேன். இதோடு கும்மியும் குத்தாட்டமும் கொசுறாக சொல்லித் தருகிறார்கள். பார்ட்டி நுழைவு கட்டணம் தலைக்கு £12. அருமையான சாப்பாடு உண்டு. பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ப்ரீ. என்னைப் போன்ற குழந்தை மனது கொண்டவர்களுக்கும் £12 தான் என்று சொல்லிவிட்டார்கள்.

இந்த முறை சங்கராபரணம் டான்ஸ் ஆடலாமா சலங்கை ஒலி டான்ஸ் ஆடலாமா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்கு. எது ஆடினாலும் சந்திரமுகி ஜோதிகா டான்ஸை விட கேவலமாகத் தான் இருக்கும் என்று வீட்டு அம்மணி க்யாரண்ட்டி தருகிறார். சலங்கை ஒலி கமல் மாதிரி மனதில் வேகமெல்லாம் இருக்கிறது ஆனால் அதை அபிநயமாக மாற்றும் போது தான் எங்கேயோ மிஸ்ஸாகிறது (ஜெயப்பிரதா கூட ஆடினால் தான் ஆட்டமெல்லாம் கரெக்டாக வரும் என்று சொல்லி திரும்பவும் பட்டினி கிடக்க என்னால முடியாதுப்பா)

லண்டன் அருகிலுள்ள Hemel Hempstead-ல் மே இருபதாம் தேதி நடக்க இருக்கிறது. விழா பொறுப்புக்களை "பாட்ஷா" பாலன் கவனிக்கிறார். எதாவது தேறுமா என்று "உன்னால் முடியும் தம்பி" அடியேனும் உதவுகிற மாதிரி நடித்துவருகிறேன். வலைப்பதிபவர்கள் தான் என்று இல்லை, இதில் யார்வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். r_ramn அட் யாகூ.டாட்.காம்-ல் விருப்பமிருப்பவர்கள் தொடர்பு கொண்டால் மேலும் விபரங்களைத் தருகிறேன்.

Friday, April 28, 2006

கிரிப்டிக் கதைகள் - காதல் கதை

முன்குறிப்பு - தமிழ் கூறும் நல்லுகம் இதற்கு என்ன பெயர் வைத்திருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த மாதிரி கதைகளில் ஒரு சின்ன க்ளூ கதையில் இருக்கும். அதைப் பிடித்துவிட்டீர்கள் என்றால் அதற்கப்புறம் கதையை நீங்களே சொல்லிவிடலாம். கதை என்று ஒன்று ரொம்ப இருக்காது ஆனால் சொல்லும் விதத்தில் தான் எல்லாம் இருக்கிறது. இதை ரொம்ப நாளாக ட்ரை செய்யவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். முதல் முயற்சி. கேவலமாக இருந்தால் வழக்கம் போல் பின்னூட்டத்தில் காறித் துப்பவும்.
*****************************************

எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. அவள் காதலைச் சொன்னதிலிருந்தே இப்படித் தான். மஹாதேவனிடம் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறேன்.அவள் ரொம்ப பெரிய இடம். அவ அப்பா மத்திய அமைச்சர். எனக்கு அதை நினைத்தாலே உதறும். மஹாதேவனிடம் சொன்னால் எனக்கு பித்துப் பிடித்திருக்கிறது, இந்த பயம் அனாவசியம் என்பான். ஆனால் எனகுத் தான் தெரியும் அண்ட்ராயர் தெரிய ஆறு தடியன்கள் அவள் வீட்டில் எப்போதும் காவலுக்கு இருப்பார்கள். கம்ப்யூட்டர் க்ளாசில் சேர்ந்து நான் காதலைப் படிப்பேன் என்று நினைக்கவே இல்லை. முதல் தரம் அவள் என்மீது தெரியாமல் மோதிய போதே அந்த தடியன்கள் முறைத்தார்கள். மஹாதேவனிடம் சொன்னதற்கு உலகமே இப்பிடித் தான் இதுக்கெல்லாம் பயந்தா எப்பிடிடா சினிமால்லாம் பார்த்ததில்லையான்னு கிண்டல் செய்தான். அப்புறம் ப்ராஜெக்ட் வொர்க் உன்கூட செய்யலாமா என்று அவள் கேட்ட போது என்னால் ஏனோ மறுக்கமுடியவில்லை.

அப்புறம் நீ ஏன் ப்ரெஞ்ச் குறுந்தாடி வைத்துக் கொள்ளவில்லை என்று கேட்டாள். சத்யமில் இங்கிலீஷ் படம் பார்க்கும் போது கன்னத்தோடு கன்னம் உரசி உன் குறுந்தாடி குறு குறுவென்கிறது எடுத்துடு என்றாள். நீ என்னை உண்மையிலேயெ காதலிக்கிறாயா என்று கேட்டால் முத்தம் தருவாள். மூன்றாவது தரமாய் வேறொரு நாள் கேட்ட போது முத்தத்துக்குப் பதிலாக கெட்டவார்த்தையில் திட்டினாள். உங்கப்பாவுக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்று நான் முகத்தை தொங்கப்போட்டதற்கு திரும்பவும் முத்தம் கொடுத்தாள். துப்பட்டாவை முக்காடு போட்டுக்கொண்டு பைக்கில் பின்னாடி ஒட்டிக் கொண்டு ரோட்டுக் கடையில் பரோட்டா வாங்கித் தா என்பாள். இப்படி ஒரு நாள் பரோட்டா சாப்பிடும் போது தான் ஒரு அண்ட்ராயர் தடியன் எங்களைப் பார்த்துவிட்டான்.

அதுக்கப்புறம் அவ அப்பா அவசரக் கல்யாணம் ஏற்பாடு செய்தார். கல்யாணமானாலும் இப்பவும் என்னைப் பார்ப்பதற்கு டெய்லி வீட்டுக்கே வந்து விடுவாள். தோளில் சாய்ந்து கொண்டு என்னிடம் பேசாமல் இருக்கமுடியாது அவளால். எனக்குத் தான் இன்னும் பயமாய் இருக்கும். எங்கள் விட்டில் எங்களை கண்டுகொள்ள மாட்டார்கள் ஆனால் அந்தத் தடியன்கள் பார்த்துவிட்டால்? மஹாதேவனிடம் சொன்னால் எல்லாம் நான் பார்த்துக்கிறேன் கவலைப் படாதே என்பான்.

வாசல் பெல் அடிக்கிறது. மஹாதேவன் தான். "அப்பா கதவைத் திறங்கோ மஹாதேவன் வந்தாச்சு"

என்ன...பையன் என்ன சொல்றான். எதாவது இம்ப்ரூவ்மென்ட் இருக்கா?

மஹாதேவனே தான். என்னப் பார்த்து என் காதல் கதையைக் கேட்காமல் இருக்கவே முடியாது அவனால்

இல்லை டாக்டர் அப்பிடியேத் தான் இருக்கான். இன்னும் அந்தப் பொண்ணையே நினைச்சுண்டு இருக்கான். அந்த மினிஸ்டர் கட்டையில போக...எம் புள்ளைய ஆள வைச்சு அடிச்சு இப்பிடி பைத்தியமா அலையவிட்டுட்டானே..உருப்புடுவானா அவன்...

அப்பா எப்பவுமே இப்படித் தான் மஹாதேவனைப் பார்த்தா புலம்ப ஆரம்பித்துவிடுவார். அவர் கவலை அவருக்கு. ஓ.கே மஹாதேவன் கிட்ட இன்னிக்கு அவ என்ன சொன்னான்னு சொல்லனும். உங்களை அப்புறமா பார்க்கறேன். டேக் கேர்.