Wednesday, June 04, 2014

மயில் ஸ்னேகங்கள்

நான் சொல்ல வருவது ரயில் ஸ்னேங்களின் உல்டா. வாழ்க்கையின் ஏதோ ஒரு காலகட்டத்தில் செந்திலும் கவுண்டமணியுமாய், தளபதியும் மம்மூட்டியுமாய், அப்பாஸும் முஸ்தபாவுமாய், நாக்கு மேல் பல்லைப் போட்டு உரிமையோடு " ஏய் நீ என்ன பெரிய இவனாடா / இவளாடி..." என்று உரிமையோடு தோழனும் தோழியுமாய் ஒரே தட்டில் எச்சில் பரோட்டா தின்று, ஈரக் கையில் ஒட்டிய முடி மாதிரி உறவாடிய நட்பைப் பற்றி. அது தோழனாகவோ தோழியாகவோ இருந்திருக்கலாம். எப்பேற்பட்ட நட்பு என்றால், வேறு யாரவது நடுவில் வந்துவிட்டால் இந்த நட்பு நம்மை பின்னிப் பெடலெடுத்துவிடும். "போ..அங்கயே அப்படியே போய் சாவு..இங்க எதுக்கு வர்ற, நாங்களெல்லாம் இருக்கோம்ன்னு இப்பத் தான் தெரியுதாமா" என்று ஒரு வாரம் பேசாது.  அது ஒன்றும் பெரிய தவறில்லை என்று தெரிந்தாலும் மானம் வெட்கமேயில்லாமல் முதல் மரியாதை சிவாஜி மாதிரி நாமும் முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு பின்னாடியே போய் நாயாய் கெஞ்சும் நட்பு. "இன்னொரு தரம் மட்டும் இப்படி செஞ்ச, பார்க்கவே மாட்டேன் வெட்டியே போட்டுருவேன்..நிஜமா" என்று மிரட்டி மன்னிக்கும் நட்பு. நம்மைப் பற்றி நமக்குத் தெரிந்ததை விட இவர்களுக்குத் தான் அதிகம் தெரிந்திருக்கும். நாளும் கிழமையுமானால் முதல் ஃபோன் இவர்களிடமிருந்து வரவே வராது. அதுவும் பிறந்தநாள் என்றால் சுத்தமாய் மறந்துவிட்ட மாதிரி நடித்து நம்மை வெறுப்பேத்தும். நாமும் வெறுத்துப் போய் "தூ இவ்வளவு தானா நீ.." என்று வசனம் பேச எத்தனிக்கையில் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து புருவத்தை உயர்த்தி சட்டையைப் பிடித்து "என்ன சொல்ல வந்த நீ இப்ப..." என்று தளும்ப வைக்கும்.

எல்லாரும் கூட்டம் கூட்டமாய் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கும் போது "இப்ப நானா அவங்களா" என்று வீ.சேகர் பட க்ளாமாக்ஸ் சீனெல்லாம் கொடுத்து, இப்பேற்பட்ட நட்பால் நமக்கு இவர்களைத் தவிர ஊரில் இருக்கிற ஒரு பயபுள்ளைகளைத் தெரிந்திருக்காது. ஆனாலும் மனது மட்டும் நிறைந்திருக்கும். நன்றாக போய்க்கொண்டிருக்கும் போது எவனாவது வைத்த கொள்ளிக் கண்ணினால் இஞ்சி மொரப்பாவில் சுக்கு போட்ட தகறாரில் பட்டென்று ஒரு நாள் நட்பு தெறித்துவிடும். ஒரு இரண்டு மூன்று வருடங்கள் சில சமயம் பல வருடங்கள் பார்க்காமலே பேசாமலே இருப்போம். ஆனால் காலம் இருக்கே காலம் திடிரென்று பேஸ்புக் ட்விட்டர் என்று எங்கேயாவது கோர்த்துவிட்டு விடும். மௌன ராகம் சீன் மாதிரி நிறைய பேசாமல் , மனதுக்குள் மட்டுமே நிறைய நினைப்போம். அவர்களுக்குத் தெரியாமல் நோட்டம் விடுவோம். பழைய பரோட்டா கடை மேட்டரிலிருந்து எல்லா விஷயங்களும் மயிலிறகால் தடவி விட்ட மாதிரி மனதில் ஓடும். எனக்கும் சில பல மயில் ஸ்னேங்கள் இருக்கின்றன. தற்போது கூட "எப்படி இருக்க" என்பதோடு முடிந்துவிடுகிறது. ஆனால் அந்த நினைவுகள் இருக்கின்றதே - அது அவர்களுக்கே சொந்தமில்லாமல் என்னுடையதாய் எனக்கே எனக்காய் அப்படியே நெஞ்சில் பசுமையாய் இருக்கின்றது - திரும்ப பேசாமல் அப்படியே பத்திரமாய் !

Tuesday, May 20, 2014

மேட் இன் இந்தியா

இந்த முறை இந்தியா பிரயாணத்திற்காக செக்கின் செய்து வெஜிடேரியன் மீல்ஸ் கன்ஃபர்ம் செய்த கையோடு சிப்பந்தியிடம் "அம்மாடி...இந்த தரம் நான் தனியா போறேன், அதுனால பக்கத்துல இளம் பெண்கள் யாருக்கும் சீட்ட போட்டுறாதீங்க" என்று கோரிக்கை வைத்தேன். கஸ்டமரே கண் கண்ட தெய்வம்ன்னு அவர்களும் ப்ளைட்டில் கால் கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் இளம் பெண்கள் யாரையும் போடவில்லை. முன்னால் உட்கார்ந்திருந்த வெள்ளக்கார தாத்தாவிற்கு அபான வாயு பிரச்சனை. அவரும் பிராயணம் முழுக்க கொடியசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடியசைந்ததான்னு பாட்டு பாடிக்கொண்டே வந்தார். ப்ளைட் முதலாளிகளெல்லாம் பிக்காலிப் பயல்களாகிக் கொண்டிருக்கிறார்கள். போன தடவையெல்லாம் ரேஸ்-2வில் தீபிகா படுகோனேவை பார்க்கவிடாமல் காப்பி வேணுமா சூஸ் வேணுமான்னு திரும்பத் திரும்ப படுத்துகோனேவாக இருந்த சிப்பந்திகள், இந்த முறை தண்ணீர் கேட்டாலே கதவைத் திறந்து கடலுக்குள் தள்ளிவிட்டு விடுவார்களோ என்றளவில் பயம் காட்டிக் கொண்டிருந்தார்கள். அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை, நான் அடிச்சுப் பிடிச்சு ஃப்ரீக்வெண்ட் ப்ளையரில் கொஞ்ச ஏர் மைல்ஸ் சேர்த்து வைத்தால் அந்த கம்பேனி திவாலாகிவிடுகிறது, அல்லது குபீர்ர்ர்ன்னு பெரும் கடனாளி ஆகிவிடுகிறது. கிங்பிஷரில் ஒரு ப்ரீ ப்ளைட் அளவிற்கு ஏர்மைல்ஸ் வைத்திருந்தேன். பிஸ்னஸ் க்ளாசிற்கு அப்கிரேட் செய்தால் செவப்பு சொக்கா போட்ட புள்ளங்க நாம தூங்கும் போது பாட்டு பாடி சுகமா தட்டிக் கொடுத்து ஜோ ஜோ பண்ணுவார்கள் என்று எவனோ கிளப்பிய புரளியை நம்பி இன்னும் ஒரு ஆயிரம் மைல் சேர்த்தா டபுள் ஜோ ஜோ தான்னு காத்திருந்தேன். மல்லையா கம்பியை நீட்டி விட்டார். ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் பயமாக இருக்கிறது.

சென்னையில் அக்னிநட்சத்திர முஹூர்த்தம். இந்த முறையும் நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டேன். அடக்கம் அமரருள் என்பதெல்லாம் மனப்பாடம் செய்து ஒப்பித்து சின்ன ட்ராபியா பரிசு வாங்கத்தான் உதவும், மத்தபடி வாழ்வியலில் - `அடக்கம்` என்பது கண்ணம்மா பேட்டையில் செய்வது என்பது நன்றாக புரிந்தது. முதல் வாரத்திற்கு அப்புறம் "என் பேரு மாணிக்கம், எனக்கு பம்பாயில இன்னொரு பேரு இருக்கு" என்று மெதுவாக ஆரம்பித்தேன். சில இடங்களில் வொர்க் அவுட் ஆகி பம்மினார்கள். பல இடங்களில் "டேய் உனக்கு பம்பாயில அப்படி என்னடா பேரு"ன்னு எகிறினார்கள். மனிதருள் மாணிக்கம்தாங்க அந்தப் பெயர்ன்னு நானும் பதிலுக்கு பம்ம வேண்டியதாகிவிட்டது. இறங்கும் போதே SUV-ல் இறங்க வேண்டியிருக்கிறது. கேட்டால் கிடைக்கும் ஏன் ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புரிந்தது. சென்னை ஏதோ ஒரு புரியாத வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. Respect for Self and Respect for others போன்ற அடிப்படை விஷயங்கள் சேவை மையங்களில் தொலைந்து கொண்டிருக்கின்றன. மே ஐ ஹெல்ப் யூ என்பது செண்ட்ரலைஸ்ட் ஏசி கார்பரேட்டில் உதட்டளவில் சொல்லும் வாசகம் மட்டுமே. இந்தியா ஒரு நாள் ஃபாரின் மாதிரி இருக்கும் என்ற மெயில்கள் பார்த்திருக்கிறேன், விலைவாசி ஃபாரினையும் மிஞ்சிக் கொண்டிருக்கிறது - பெருமைப் பட வேண்டிய விஷயமா என்பது தெரியவில்லை. மோடிஜி வந்து ரூபாய்க்கு அம்பது டாலர் என்று ஆகிவிட்டால் இந்தியாவில் இருப்பவர்கள் எல்லாம் ப்ளைட் பிடித்து லண்டன் சரவண பவனுக்கு வந்து தான் சாம்பார் இட்லி சாப்பிட வேண்டியிருக்கும்.

ஆழ்வார்பேட்டை பூலோக கைலாசமாக இருக்கிறது. ஆண்டவனைத் தான் பார்க்க முடியவில்லை. ஏதோ பாட்டு ஷூட்டிங்கிற்கு டர்க்கிக்கு போயிருக்கிறார் என்றார்கள். ஆஞ்சநேயர் கோயிலில் சரவண பவனை விட நிறைய கேசரி கொடுக்கிறார்கள். வுட்லண்ட்ஸில் சாப்பாடுக்கு கூட்டம் நாயாய் காவல் காக்கிறது. அரை மணிநேரம் ஆகும் சார் என்று சொல்லி விட்டு அதான் சொன்னேல என்று ஒரு மணிநேரம் காக்க வைக்கிறார்கள். பக்கத்தில் ஒரு ஷெர்வானி கல்யாணம் நடந்து கொண்டிருந்தது. டோப்பாவெல்லாம் வைத்துக் கொண்டு ரசகுல்லா பரிமாறிக்கொண்டிருந்தார்கள். அங்கே புகுந்துவிடலாம் என்று எத்தனிக்கும் போது சார் டேபிள் ரெடி என்று கொத்திக் கொண்டு போய்விட்டார்கள். பீடா ஸ்டால்லாம் வேறு இருந்தது.


டி.வி.யில் வெள்ளைக்கார ஸ்த்ரீகள் சன்னமாய் வஸ்திரம் அணிந்து கொண்டு "எனக்கு இந்திய ஆம்பிளைகளைத் தான் ரொம்பப் பிடிக்கும் அவங்க தான் அம்மாவை பார்த்துப்பாங்க" என்று சம்பந்தமேயில்லாமல் உதட்டை மடித்து கிறங்கிக் கிறங்கி Boat Partyக்கு கூப்பிட்டுக் கொண்டே...இருந்தார்கள். Axe நிறுவனம் ஏற்பாடு போல. முத்தாய்ப்பாய் "Boat Partyக்கு அம்மாவை கூட்டிட்டு வந்துராதீங்க" என்று வேறு அந்தப் பெண் கண்ணடித்து வலியுறுத்திக்கொண்டிருந்தாள். தேதியைப் பார்த்தேன், ரிட்டர்ன் டிக்கெட்டிற்கு அப்புறம் என்று போட்டிருந்தது. ச்சை...சமூகத்தையும், கலாச்சாரத்தையும் கெடுக்க வந்த கோடாலிக் காம்புகள்.

சென்னையில் பதிவர் தினேஷ் புண்யத்தில் பதிவர்/பேஸ்புக்கர்/ட்விட்டர் - இதில் ஏதோ ஒரு மீட் ஒன்று ஏற்பாடாகியது. பாவம் தினேஷ் ரொம்பவே திணறிவிட்டார். ரொம்ப நேரம் நானும் அவரும் மட்டுமே பேசிக்கொண்டிருந்தோம். அப்புறம் ரமணா ஸ்டைலில் உங்களுக்கு மூனு சான்ஸ் தர்றேன் யார வேணா கூப்பிட்டுக்கோங்க என்று நான் மிரட்ட, முதலில் கே.என்.சிவராமனுக்கு போனைப் போட்டார். மனுஷன் செம உஷார், ஸ்விச்ட் ஆஃப். நம்பரை ப்ளாக் செய்து விட்டு அடுத்தது எறும்பு ராஜகோபாலுக்கு ஃபோனைப் போட பாவம் அவர் எடுத்து விட்டார். ஆனால் அவரும் அமிதாபச்சனை பார்க்க அமிஞ்சிக்கரை போய்க் கொண்டிருந்ததால் வர இயலவில்லை. மூன்றாவது கே.ஆர்.பிக்குப் போட பட்சி சிக்கிக்கிச்சு. அவரோடு மெட்ராஸ் பவன் சிவக்குமார் வர, அப்புறம் மெதுவாய் ஜாக்கி, கேபிள் சங்கர் என்று களை கட்டியது. வெட்டி அரட்டையாய் இல்லாமல் ப்ளாகை வைத்து மாசம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிப்பது எப்படி என்று கோடிட்டு காட்டினார்கள். அது இது எது என்று நிறைவாய் பேசி, மயிலை கற்பகாம்பாள் மெஸ்ஸில் வாழப்பூ அடை, வெங்காய அடை, ப்ளைன் அடை, கிச்சடி, பாம்பே பூரி, பாதாம் அலவா என ஒரு கட்டு கட்டினோம். எல்லோருக்குமான பில்லை கேபிள் சங்கர் கொடுத்தார்.

Thursday, March 20, 2014

ட்யூஷன்

"கொங்கைன்னா என்ன?.."

கேள்வியைப் போலவே நேரமும் இசகுபிசகாகத் தான் இருந்தது. இருவருமே உஷ்ணமாய் இருந்தார்கள். அவள் தோள்பட்டையில் அவன் மூச்சுக் காற்று அனலாய் அடித்துக் கொண்டிருந்தது. மழைக்கு ஒதுங்கியது போல் இரண்டுக்கு இரண்டில் கெட்டியாக ஒட்டிக் கொண்டிருந்தார்கள்.

"ம்ம்..சொல்லு கொங்கைன்னா..."

"எங்க படிச்ச.."

"எங்கையோ...ப்ச்..இப்ப அதா முக்கியம், சொல்லப் போறியா இல்லியா..."

"ம்ம்ம் சொல்லட்டுட்டுமா ...சொல்லட்டுமா..."

"ம்ம்ம்..."

அவன் சொல்லவில்லை.  "ச்சீ...." அவள் வெட்கப்பட்டு உடையை சரிசெய்து அவனைத் தள்ள முற்பட்டாள். மேம்போக்கான முயற்சி தான். செம்புலப் பெயல் நீராகிக் கொண்டிருந்தார்கள்.

"குற்றாலக் குறவஞ்சில இதெல்லாமா எழுதுவாங்க.."

கன்னத்தோடு கன்னம் இழைத்தான்.

"...அதுக்குள்ள மனப்பாடம் பண்ணிட்டியா..,. நான் செய்யுள் பக்கமெல்லாம் போகவேயில்ல.."

"ஏன் நானும் தான், இந்தப் பாட்டு செலபஸிலயே கிடையாது, எங்கயோ படிச்சேன் ஒட்டிக்கிச்சு.."

"ஒட்டிக்கிச்சா... அப்பநீ  மட்டும் ஒட்டமாட்டேங்கிற...."

அதற்கு மேல் அங்கே ஒட்டுவதற்கு இடம் இருந்ததாய் தெரியவில்லை.

"நான் மாட்டேன்பா... டியுஷன் சார் வந்திருவாரு" வாயளவில் சொன்னாளே தவிர இன்னும் ஒட்டிக் கொண்டாள்.

"அதெல்லாம் வர மாட்டாரு..இன்னும் பதினைஞ்சு நிமிஷம் இருக்கு...கோயில்ல ஆறேகாலுக்குத் தான் தீபம் காட்டுவாங்க அதுக்கப்புறம் பத்து நிமிஷம் ஆகும். மணியடிச்சா கேக்கும்"

"இதுலெல்லாம் நல்ல வெவரம் தான்"

"இது சாம்பிள் தான் இன்னும் விவரம் நிறைய இருக்கு,.." கண்ணடித்தான்.

"ஏன் கன்னமெல்லாம் சொர சொரன்னு இருக்கு ஷேவ் செஞ்சியா.."

"பின்ன பசங்கன்னா மாட்டாங்களா.., ப்ரெஞ்ச் பேர்ட் வைக்கலாமான்னு இருக்கேன்

"...ம்ம் வைச்சிக்கோ."

"மீரா சீயக்காயா..." கூந்தலில் வாசம் பிடித்தான்.

"லூசு இது நிஜ செம்பருத்திப்பூ..."

கிறக்கியது. கை அளவளாவியது.

"போன வாரத்துக்கு இப்ப சதை போட்டிருக்க.."

அவள் "ச்சீ..." என்று அவன் கையை தட்டி வெட்கப்பட்ட போது ட்யூஷன் சார் வந்திருந்தார். அவசர கதியில் பிரிய எத்தனிக்கும் போது அவள் கூந்தல் இவன் சட்டை பட்டனில் சிக்கி, பதட்டத்தில் அவன் பிரிக்க இவள் இழுக்க மொத்தமும் சிக்கலாகிப் போனது. முழுதாய் ஒரு நிமிடமாயிற்று.

உட்கார்ந்த போது மூவரும் புத்தகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாடம் நடக்கவில்லை.

*************
"யமுனாம்மா, கணேசன் சார் டியூஷன் செண்டர் எப்படி இருக்காம், நல்லா சொல்லிக்குடுக்கிறாங்களாமா? இவளுக்கு ராஜன்சார் சொல்லிக் குடுக்கறது புரியவே இல்லைங்கிறா. அடிக்கடி கோச்சிக்கிறார்ன்னு வேற சொல்லுறா.. மார்க் குறைஞ்சிரும் டியூஷன் மாத்தனுங்கிறா. கொஞ்சம் யமுனா வந்தா பேசச் சொல்லுங்களேன்"

"இல்ல மச்சான், அங்க டைம் வேஸ்டாகுதுடா, அவரு வேற ரொம்ப ஸ்லோவா சொல்லிக்குடுக்குறாரா, நமக்கு ஸ்பீடா ஃபினிஷ் பண்ணாத் தானே ரிவைஸ் பண்ண முடியும் அதான்..உங்க செண்டர்ல சேரலாம்னு இருக்கேன், கோ எட் இல்ல"

"இல்லீங்க, ரொம்ப சாரி, எனக்கு ஸ்பைனல் கார்ட்ல கீழ நுனில ரப்சர்ங்கிறார் டாக்டர், சவுகரியமா உட்கார முடியல. அப்படி இப்படித் தான் உட்கார முடியுது. வயசுக்கு வந்த பொண்ணுங்க இருந்தா தோதா இருக்காதில்ல அதான் பசங்க மட்டும் தான்னு மாத்திட்டேன். தேர்ட் க்ராஸ் சாந்தி டீச்சர ட்ரை பண்ணுங்களேன், எக்ஸ்பீரன்யஸ்ட் ஹாண்ட், பொண்ணுங்க மட்டும் தான் அங்க, ஐ வுட் ஸ்ட்ராங்லி ரெக்கெமெண்ட் தேர்"

"போடி எப்டி சொல்றதுன்னு தெரியல, அங்க என்னமோ ஒரு மாதிரி சரியில்ல ...அதான் மாறிட்டேன்"

"அவருக்கு பொண்ணுங்கன்னா வீக்னெஸ்ஸாம், மின்னாடிலாம் எடுத்துக்கினு இருந்தாரு, எங்க என்ன ஆச்சோ.. எல்லாரும் பார்த்துக்கினு இருப்பாங்களா இப்போ பசங்க மட்டுந்தான்"

Thursday, March 13, 2014

மாமா

இங்கே பல்வேறு இடுகைகளில் நான் குறிப்பிட்ட,  எனக்கு அப்பாவாக இருந்த மாமா போன மாதம் இறைவனடி சேர்ந்துவிட்டார். இதைப் பற்றி எழுதவே வேண்டாம் என்று தான் இருந்தேன். ஆனால் ஏனோ மனதில் இருக்கும் இறுக்கம் எழுதாவிட்டால் அகலாதோ என்று தோன்றுகிறது.

எனக்குத் தாய் மாமா. அவருக்கு குழந்தை இல்லாததால் பத்து வயதில் அங்கே வளர ஆரம்பித்தேன். அம்மா அப்பா அடுத்த தெரு தான்.  எனக்கு இரண்டு அம்மா அப்பா என்று சொல்லுவதில் வரும் பெருமையை விட அடுத்தவர்களுக்கு வரும் ஆர்வக் கோளாறில் தான் ஈர்ப்பு அதிகம். சொல்லிக் கொஞ்சமும், சொல்லாமல் நிறையவும் கற்றுக் கொடுத்திருக்கிறார். முக்கியமாக பணத்தை எப்படி சேர்க்கவேண்டும், செலவு செய்யவேண்டும், போஷிக்க வேண்டும் என்று. விசில் அடித்தால் அறவே பிடிக்காது. நிறைய திட்டு வாங்கியிருக்கிறேன். "லஷ்மி ஊதினாப்புல பறந்து போய்டுவா, செல்வம் செல்வோம்ன்னு போய்டும்" போன்ற போதனைகள். சின்ன வயதில் சன்னமாய் ஏதோ பாட்டை விசில் அடித்து செமத்தியாய் திட்டு வாங்கியிருக்கிறேன். "காலிப் பயல்கள் தான் விசில் அடிப்பா...காலிப் பயலா நீ..?" ஆனால் அதே விசிலை அவர் பேத்தி சமீபத்தில் ஊரில் அடித்த போது கண்டுகொள்ளவில்லை. காது கேட்கவில்லையா தெரியவில்லை. "நம்ம காலேஜ்லயே நீதாண்டா செமையா காது கிழியற மாதிரி விசில் அடிக்கிற" என்று பட்டம் வாங்கும் போதும் சரி, இங்கே யூ.கேவிலும் இப்ப வரையிலும் காது கிழியற மாதிரி சத்தத்துடன் விசில் அடித்து பாராட்டுப் பட்டயம் வாங்கும் போதும் சரி மாமா நினைவில் வராத நாளே கிடையாது.

ஐஸ் பெட்டியில் கிடத்தியிருந்தார்கள். "அவர் ஒன்னும் இல்லைன்னு தான் சொல்றார், ஆனா எனக்கு என்னம்மோ மூச்சு வாங்குற மாதிரி இருக்கு, எதுக்கும் ஸ்கேன் உள்பட எல்லா டெஸ்டும் எடுத்துடுங்கோ ப்ளீஸ், முடிஞ்சா டாக்டர் கன்சல்ட்டிங் போது மிஸ்ட் கால் குடுங்கோ நான் ஃபோன் பண்ணி அவர்ட்ட ஒரு ஒப்பீனியன் கேட்டுக்கறேனே" சொல்லி வைத்திருந்தேன். கால் வந்தது...."சாரி செக்கப்புக்கு போற போது மாமா கார்ல அப்பிடியே. தூங்கினாப்புலயே.... முழிக்கலை ரொம்ப சாரி".

இவ்வளவு அழுவேன் என்று நினைக்கவில்லை. நல்ல ஜரிகை வேஷ்டி உடுத்தி ஜம்முன்னு கிடத்தியிருந்தார்கள். கை காலெல்லாம் ஜில்லிட்டு இருந்தது. தூக்கும் போது உடைந்துவிடுவாரோ என்று பயமாய் இருந்தது. "ஒரு வாய் காப்பியாவது குடி இனிமே தான் காரியம் இருக்கு தொலைவுலெர்ந்து வந்திருக்க உடம்புல தெம்பு வேணும்" ம்ஹும் இறங்கவில்லை."நேத்திக்கு உன்னைப் பத்தி தான் பேசிண்டு இருந்தோம், நமக்கு சொந்தப் பையன் இருந்தாக் கூட இவ்ளோ பாசமா இருந்திருப்பானான்னு" போன வாரம் ஃபோனில் சொன்னதை யாரிடமும் சொல்லக் கூடத் தோன்றவில்லை. தலை வலித்தது. கண்ணீர் வற்றிக் கொஞ்ச நேரத்தில் அழுகை நின்ற போது யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றிப் பார்க்கத் தான் தோன்றியது. இன்னும் கொஞ்சம் அழ வேண்டுமோ.?

"திஸ் இஸ் மை சன், ஹீ இஸ் மேனேஜர் ஃப்ரம் இங்கிலாண்ட், ஐ ஆம் ஃபாதர்" போத்தீஸ் கடை சிப்பந்தியிடம் முதல் முறை பேண்ட் மாட்டி அழகு பார்த்தபோது காட்டிய இங்கிலீஷ் பெருமை நெஞ்சை விட்டு அகலாது. "பேண்ட் போட்டாத் தான் ப்ளைட்ல ஏத்துவான், பாஸ்போர்ட் வாங்கிட்டு நீங்க பாட்டுக்கு வரலைன்னா எனக்கு அங்க வேலைக்குப் பிரச்சனை வரும், அப்புறம் என்னை ஊருக்குக்கு திரும்ப அனுப்பிடுவா" நிறைய புளுகியிருக்கிறேன். "உங்கப்பா எப்படிப் படிப்பான் தெரியுமா, உட்காருன்னா உட்காருவான் நில்லுன்னா நிப்பான் ஒரு வார்த்த மீறிப் பேச மாட்டான், ஹிந்தி எல்லா பரிட்சையும் பர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணியிருக்கான், டெல்லி, பாம்பேன்னு சரளமா பேசுவான், ஆல் இந்தியா லெவல்ல மிருத்தங்கத்துல ப்ரைஸ் வாங்கியிருக்கான்". "மாமா...அது ஆல் இந்தியா இல்லை ரிஜினல் லெவல்ல திருச்சி வரைக்கும் தான்.. மத்யமாக்கு அப்புறம் எல்லாம் செகண்ட் க்ளாஸ் தான்"  "இருக்கட்டுமே குறுக்கப் பேசாத,,, திருச்சியும் இந்தியால தானே இருக்கு, தக்‌ஷிண பாரத பிரசார் சபாலேர்ந்து ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட்ல ரிசல்ட் கார்டு அனுப்பலையா..". அவரும் என் மகள்களிடம் நிறைய புளுகியிருக்கிறார். இங்கே லண்டனில் வீட்டைப் பார்த்து எதுவும் சொல்லாமல் புன்னகையுடன் உணர்ச்சிவசப் பட்டு தோளில் தட்டிக் கொடுத்தார். நான் செய்யும் எல்லாம் ஏ க்ளாஸ் தான். ப்ளைட் சிப்பந்தியிடம் சொல்லி நான் ஒரு க்ளாஸ் ஜூஸ் வாங்கிக் கொடுத்தது அவ்வளவு ஆச்சரியம். "எப்படி பேசி வாங்கிக் கொடுத்தான் பார்த்தியா" என்று மாமியைப் பார்த்தார். ஒவ்வொரு தடவையும் இங்கிலாந்திலிருந்து ஹாலந்து எவ்வளவு தூரம் என்பதை மட்டும் ஏனோ கேட்ப்பார். அவரிடம் அந்தக் கால ஹாலந்து மனோரஞ்சித செண்ட் ஒன்று இருந்ததால் இருக்கலாம் என்று நினைத்துக் கொள்வேன்.

சின்ன வயதில் கையைப் பிடித்துக் கொண்டு ஆறு மணிக்கு குளிக்க ஆத்தங்கரைக்கு நிறைய போயிருக்கிறேன். "தீயினால் சுட்ட புண், அகலாது அணுகாது" இதெல்லாம் அவருக்கு மிகவும் பிடித்த குறள்கள். கர்னாடக சங்கீதம் என்றால் உயிர். மெட்ராஸ் டிசம்பர் சீசனுக்கு ஒருமுறை கூட்டிப் போய் முதல் வரிசையில் உட்கார வைக்கவேண்டும் என்று ஆசைப் பட்டுக்கொண்டிருந்தேன். ஆசை மட்டுமே பட்டேன் - முயற்சி எடுக்கவே இல்லை. எண்பதாவது ஆண்டு நிறைவில் சரி கட்டவேண்டும் என்று நினைத்திருந்தேன். "ஆகஸ்ட்ல சதாபிஷேகம் பண்ணவேண்டும், மண்டபம் புக் செய்ய வேண்டாமா நாள் குறிக்கணும்..காண்ட்ராக்ட் விட்டுடலாம்..பெரிய கச்சேரி ஏற்பாடு பண்ணப் போறேன் ஆனா யாருன்னு சொல்ல மாட்டேன்....சர்ப்ரைஸ்..." விசாகா ஹரி கதா காலட்சேபம் என்று உடைக்கும் போது அவரிடம் என்ன ரியாக்க்ஷன் என்பதைப் பார்க்க ஆவலாய் இருந்தேன். அவர் அலட்டிக் கொள்ளவே இல்லை. "எல்லாம் அடுத்த வாரம் வர்றியே நேர்ல பேசிக்கலாம்". விசாகா ஹரி என்று ஃபோனிலேயே சொல்லியிருக்கலாம். அவ்வை சண்முகி சினிமா கூட்டிப் போய் மிக ரசித்தது மட்டுமே மிச்சம். "ஓ...கமலஹாசன் ..அப்பிடியே பொம்மனாட்டி மாதிரியே..." என்று பொக்கைவாயைக் காட்டிக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தார்.

பிடிவாதம் ஜாஸ்தி "இப்ப கடைக்கு எதுக்கு நடந்து போகனும், ஆட்டோவாவது வைச்சுக்க கூடாதா" என்று கெஞ்சியிருக்கிறேன். "படிச்சுப் படிச்சு சொல்லியிருக்கிறேன், நடந்து போய் விழுந்துட்டு வந்திருக்கிறேள் வர வர சொன்ன பேச்சு கேக்கிறதே கிடையாது.. நான் தான் அல்லாடிண்டு இருக்கேன்" நிறைய கோவித்துக் கொண்டிருக்கிறேன். "நீ ரெண்டு பெண் குழந்தைகள வைச்சிண்டு இருக்க, கல்யாணம் பணணனும்" - அடிக்கடி சொல்லுவார். "சின்னவ இப்பத்தான் அஞ்சாவது போறா..உங்கள என்ன சொல்லி புரிய வைக்கிறது எல்லாம் பிடிவாதம்" - கத்தியிருக்கிறேன். கடைசி வரையில் எளிமை.

மயானத்தில் வாய்க்கரிசி போடுவது என்பது ரொம்பக் கொடுமையான விஷயம். ராஜ்கிரணும் சினிமாவும் சொல்ல முடியாதது. செருப்பு போடாமல் தார் ரோட்டில் நடக்கும் போது உச்சி வெய்யில் கூட சொல்ல முடியாதது. ஆனால் வாழ்வு பற்றிய எல்லா மாயைகளையும் அடித்து தூள் தூளாக்க வல்லது. நான் ப்ளான் பண்ணி வீடு வாங்கினேன், நான் பளான் பண்ணி கல்யாணம் பண்ணினேன், ஃபாரின் போய் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு சேர்த்து வைச்சிருக்கிறேன் - ஃப்யூட்சர்ல எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது. ப்ளான் எவ்ரிதிங்க் அதான் சேஃப்டி நாளைக்கு ஒரு பய அசைச்சுக்க முடியாது. ப்ளான் ப்ளான் நான் நான் நான்

காரியம் செய்து மழித்து, குளித்து வீட்டுக்கு வந்து கூட சாப்பிடப் பிடிக்கவில்லை. ஃபோட்டோ ப்ளோ அப் பண்ணி மாலை போட வேண்டும். பத்து நாள் காரியங்களுக்கு ஏற்பாடு செய்யவேண்டும், வாழக்காய் வாங்க வேண்டும், தண்ணி கேன் சொல்ல வேண்டும். சாஸ்திரிகளுக்கு அமௌண்ட் பேச வேண்டும். அலைந்து திரிந்து ஏற்பாடு செய்துவிட்டு வந்த போது ராத்திரி எட்டு மணி. கப கபவென்று  பசித்தது. தக்காளிச் சட்னியோடு இட்லி சாப்பிட வேண்டும் போல இருந்தது.