Sunday, January 23, 2005

ஜெயேந்திரரும் நானும்...

For picture version of this post click here

எனக்குப் பத்து வயது இருக்கும். மடத்துலேர்ந்து பெரியவாலெல்லாம் பத்து நாட்களுக்கு வரா என்று ஊரே அல்லோகலப்பட்டது. விழாக் கமிட்டி அமைக்கப்பட்டது. தெருவடைத்துப் பந்தல்,தோரணம். எல்லோரும் பத்து நாட்களுக்கும் முழு ஒத்துழைப்புத் தர வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. ஊரிலே கல்யாணம் மாரிலே சந்தனம்ங்கிற மாதிரி நண்டு சிண்டுகளுக்கும் பொறுப்புகள் தரப்பட்டது. எனக்கு ரெண்டு நாள் ஸ்கூலுக்கு லீவு போடலாம் என்ற வகையில் ஜோலி இருந்தாலும் ஜாலி. கொடி ஒட்டுவது தோரணம் கட்டுவது எல்லாம் எங்கள் தலையில் வந்து விடிந்தது. . எல்லாருக்கும் அடையாள பேட்ஜ் வழங்கப்பட்டது. அந்த பேட்ஜைக் காட்டி பக்கத்திலிருந்த ஹோட்டலில் ராத்திரி மட்டும் சாப்பிட்டுக் கொள்ளலாம். "கூட ரெண்டு இட்லி வேணா சாப்பிட்டுக்கோ...ஆனா தெம்பா கொடி ஒட்டனும் தெரிஞ்சுதோ.." என்று மேய்ச்சுக் கட்ட இரண்டு மேஸ்திரிகள் மேற்பார்வை. மூக்கு முட்ட இட்லி உள்ள போனதுக்கப்புறம்...மூச்சா போய்ட்டு வரேன்னு காணாமல் போய் கல்தா குடுப்பவரகளெல்லாம் அடுத்த நாள் காலில்விழுந்து கெஞ்சினால் தான் உள்ளே வரமுடியும். மூன்று நாட்கள் இட்லி வடையெல்லாம் ஸ்வாகா செய்து கொடியை நாட்டினோம்.

பூரண கும்ப மரியாதையோடு வரவேற்ப்பு தடபுடலாயிருந்தது. தஸ்குப் புஸ்கென்று டிராயருக்கு மேல் வேஷ்டியெல்லாம் கட்டிக்கொண்டு நானும் போயிருந்தேன். "இந்த மாமா ஏன் ஒட்டடை அடிக்கிற குச்சியை எப்போதும் கையில வைச்சிண்டு இருக்கிறார்" என்பதுதான் மனதில் எழுந்த முதல் கேள்வியாக இருந்தது. நல்ல வேளை...நாயகன் மாதிரி பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்கவில்லை. பத்து நாட்களும் சும்மா பிஸியா இருப்பது மாதிரி அங்கேயும் இங்கேயும்...அலைந்து கொண்டு பிலிம் காட்டிக்கொண்டிருந்தோம். இரண்டு நாட்கள் தான் பள்ளிக்கு லீவு போட முடிந்தது. மற்ற நாட்களெல்லாம் சாயங்கால டிபனுக்குத்தான் வரமுடிந்தது. கடைசி நாள் எல்லோரையும் வரிசையாக க்யூவில் நிற்க வைத்து அறிமுகப் படுத்தினார்கள். காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினோம். மாம்பழமோ, பாதாம் கொட்டையோ, லட்டுவோ பிரசாதமாக கிடைத்தது. எனக்கு பாதாம் கொட்டை கிடைத்தது. மாம்பழம் கிடைக்கவில்லையே என்று வருத்தம். "பாதாம் கொட்டைதான் உடம்புக்கு ரொம்ப சக்தி...எங்க வீட்டுப் புழக்கடையில் பாதாம் மரம் இருக்கிறது..நீ வேணா மாம்பழத்துக்குப் பதிலாக இதை எடுத்துக்கோ" என்று நண்பனிடம் புருடா விட்டு நைஸாக லவட்டிவிட்டேன்.

அதுக்கப்புறம் ஜெயேந்திரரை..காஞ்சிபுரத்தில் ஒருதடவைப் பார்த்தேன்...அப்புறம் டி.வியில் தான்.

Friday, January 14, 2005

என்ன நடக்குது...

For picture version of this post click here

இன்னிக்கு தேர்தல் நிலவரம் எப்பிடி இருக்குன்னு போய் பார்த்தா...மயக்கமே வருது. டுபுக்கு லீடிங்குல இருக்கு. நண்பர்கள் குழாம், கழக கண்மணிகளும் அவர்கள் ப்ளாகிலும் ஆதரவு குடுத்து பட்டைய கிளப்பியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஆனால் சத்தியமாக எனக்கு மனது கேட்கமாட்டேன்கிறது. டுபுக்கைவிட காசி,பத்ரி, தேசிகன் போன்றோரின் பணி மகத்தானது. டுபுக்கு ஜெயித்தால் அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் அது தவறான உதாரணமாகி விடலாம். நல்லதுக்கு காலம் இல்லாமல் போனதுக்கு உதாரணமாகிவிடும். அதனால் அவர்களில் ஒருவர் ஜெயிப்பது தான் முறை.
(ஐய்யைய்யோ இப்படி டாக்டர் மாதிரி அறிக்கையெல்லாம் விட வேண்டியிருக்கிறதே...)

ஒரு வேளை ..."இதெல்லாம் ஒரு ப்ளாக் இவனெல்லாம் வந்துட்டான்னு".. மக்கள் புகழாரம் சூட்டட்டும்ன்னு பக்கத்து நாடு செய்த சதியா இருக்குமோ??

Tuesday, January 11, 2005

கலி

for picture version of this post click here

மீண்டும் ஒரு நீண்ட இடைவெளி ஆகிவிட்டது. இப்போதெல்லாம் முன்பு மாதிரி நேரம் செலவழிக்க முடியவில்லை. ஏதேதோ...எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்....ஆனா இந்த சோம்பல் தான்...

சமீபத்தில் Indibloggies வழியாக நிறைய பேர் இங்கு வந்திருக்கிறார்கள். என்ன விஷயம் என்று போய்ப் பார்த்தால் அங்கு சிறந்த வலைப்பதிவுகளுக்கான தேர்தல் நடத்துகிறார்கள். தமிழ் வலைப்பதிவுகள் லிஸ்ட்டில் என் பெயரையும் சேர்த்திருக்கிறார்கள். யார் சிபாரிசு செய்தார்கள் தெரியவில்லை. எனக்கே சிரிப்பாக இருந்தாலும்...என்மேல் நம்பிக்கை வைத்து சிபாரிசு செய்த அந்த புண்யாத்மாக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

டுபுக்கைவிட எத்தனையோ சிறந்த வலைப்பதிவுகள் தமிழில் உள்ளன. அருண், பாலாஜி போன்றோரின் வலைப்பதிவுகள் இடம் பெறாதது ஆச்சர்யமாக உள்ளது. பத்ரி, காசி, தேசிகன் போன்ற ஜாம்பவான்களுடன் டுபுக்கு போட்டி போடுவது வலைப்பதிவுகளில் காமெடி டைம். சரிப்பா ...இதமாதிரி ஆட்களுக்கும் இருக்கட்டும்பா..திருஷ்டிக்கு...என்று நினைத்திருப்பார்கள் போல.

நிற்க...இவ்வளவு வாயைக் கிழித்தாலும் நான் ஓட்டுப் போட்டதென்ன்வோ..எனக்குத் தான்.
டெப்பாசிட் போயிருக்கும் என்று நமக்கு நாமே திட்டத்தில் ஓட்டுப் போடலாமென்று போய் பார்த்தால்...அட...நமக்கும் ஓட்டு விழுந்திருக்கிறதய்யா. ஓட்டுப் போட்ட...அத்தனை கழக கண்மணிகளும் வாழ்வில் எனது நன்றியோடு எல்லா வளமும் நலமும் பெறுவார்கள்.

போடுங்கம்மா வோட்டு........