Wednesday, August 27, 2008

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.2

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1



ஊரில் கொலு என்றால் ஏதோ பேருக்கு ரெண்டு அடுக்கில் நாலு பொம்மை என்றெல்லாம் வைக்கமாட்டார்கள். பெரும்பாலும் பத்து படிகளுக்கு மேல் இருக்கும். படிக்கு பத்து பன்னிரெண்டு பொம்மைகள் அடுக்கி இருப்பார்கள். அந்த கொலு ஸ்டாண்ட் பெரிய பெரிய உத்திரக் கட்டைகளால் முறுக்கப்பட்டிருக்கும். ஸ்டாண்டை ஒன்று சேர்ப்பதற்கே ஒருநாள் பிடிக்கும். அப்புறம் அதில் அந்த வீட்டு மாமாவின் வெளுத்த வேட்டியை கிழிசல் தெரியாமல் மடித்துப் போட்டு அதன் மேல் பொம்மைகள் பளீரென்று அடுக்கப் பட்டிருக்கும். சில வீடுகளில் எலி கடித்த ஜரிகை வேட்டியெல்லாம் போட்டு பிரமாதப் படுத்தியிருப்பார்கள்.

இந்த கொலு ஸ்டாண்டின் அடியில் இரண்டு மெட்ராஸ் ஒன்டிக் குடித்தனம் நடத்தலாம் - அவ்வளவு பெரியதாக இருக்கும். அதில் தான் அந்த வீட்டு மாமி கொடுக்க வைத்திருக்கும் வெத்தலைப் பாக்கு தட்டுகள், ப்ளவுஸ் பீஸ், சுண்டல் விநியோகம் மற்றும் இன்ன பிற சாதனங்கள் வைக்கப்பட்டிருக்கும். முக்கால் வாசி வீட்டு மாமாக்களுக்கு இந்த ஸ்டாண்டின் அடியில்தான் எடுபிடி வேலை. கணகச்சிதமாக உட்கார்ந்து கொண்டு கர்மசிரத்தையாய் வெத்தலையை எண்ணி எண்ணி அடுக்கிக் கொண்டிருப்பார்கள். இந்த வெத்தலையை மட்டும் கூட இரண்டு வைத்துவிட்டால் போதும் "மனசில பெரிய மைசூர் மஹாராஜான்னு நினைப்பு...வெத்தலை விக்கிற விலைக்கு நாலு வைச்சா போறாதா..."ன்னு அடிக்கடி மாமியிடமிருந்து டோஸ் விழும். மைசூர் மஹாராஜா இத்தனை அல்பமாக இப்படி உட்கார்ந்து கொண்டா வெத்தலையை அடுக்கிக் கொண்டிருப்பார் என்று அடிக்கடி எனக்கு டவுட் வரும்.

அன்றைக்கு நாங்கள் போன வீட்டில் நல்லவேளையாக அந்த வீட்டு மாமா ஊரில் இல்லை. சேகர் போன உடனேயே எடுபிடி வேகன்ஸியில் ட்யூட்டி ஜாயின் பண்ணிவிட்டார். எங்களை உள்ளே சரியாக வரக்கூட விடாமல் "டேய் இங்க நிறைய வேலை இருக்கு...மாமிக்கு ஹெல்ப் பண்ணனும், கொலுவ வேற ரீ அரேஞ் பண்ணனும் கொஞ்சம் லேட்டாகும் நீங்க கிளம்புங்க"ன்னு புத்தியைக் காட்டிக்கொண்டிருந்தான். இன்னாடா சோழியன் குடுமி சும்மா ஆடாதேன்னு பார்த்தால் அவனோடு பேவரிட் ஜிகிடி இன்னும் இரண்டு ஜிகிடிகளோடு உட்கார்ந்துகொண்டிருந்தது. அதான் தம்பி, சோலோ சோலையப்பனாக மாற ட்ரை பண்ணுகிறான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கியது. சேகரை சொல்லி குற்றமில்லை, தெருவில் இருந்த பழக்கம் அப்பிடி. பேவரிட் என்று ஏதாவது ஜொள்ளி ஒரு ஜிகிடி மேல் லேசாக அக்கறை காட்டிவிட்டால் போதும், அந்த ஜிகிடி வரும் போது மற்ற வானரங்கள் நம்மை காய்ச்சு காய்சென்று காய்ச்சி நாற அடித்துவிடும். அப்புறம் அந்த ஜிகிடி மருந்துக்கு கூட நம்மை திரும்பி பார்க்காது. சேகரும் அது நடக்கக் கூடாது என்று பிரயத்தனப் பட்டுக்கொண்டிருந்தான்.

"டேய் ஒத்தையா ரீ அரேஞ்ச் பண்ண முடியாதுடா நாங்களும் ஹெல்ப் பண்றோம்"ன்னு ஒட்டிக்கொண்டோம். "என்னத்த ரீ அரேஞ்ச் பண்ணப் போறேள்....எல்லாம் நல்லாதான் இருக்கு"ன்னு அந்த வீட்டு மாமி வேறு ஜிகிடி கோட்பாடு தெரியாமல் வாரிக்கொண்டிருந்தார். "இல்லை மாமி, சீதா ராமர் பொம்மை இங்கே இருந்தா சிவன் அங்க இருக்கனும், நாய்க்குட்டி இங்க இருக்கனும் பன்னிக்குட்டி படுத்துண்டு இருக்கனும் "ன்னு கொலு அரேஞ்சிங் டெக்னாலஜியில் ஆக்ஸ்போர்ட் ஆர்க்கிடெக்ட் இங்கே அளந்து விட்டுக்கொண்டிருந்தார்.

என் கூட வந்த கன்னுக்குட்டி கணேசனுக்கு கொண்டைக் கடலை சுண்டல் என்றால் உயிர். கொண்டைக் கடலை சுண்டலுக்காக எதையும் தியாகம் செய்வான் - தெரு கிரிக்கெட் பேட்டிங் தவிர. அன்றைக்கு மாமி வீட்டில் கொண்டைக் கடலை சுண்டல். கிட்டத்தட்ட முடிந்துவிடுகிற பதத்தில் அடுக்களையிலிருந்து வந்த சுண்டல் வாசனையை மோப்பம் பிடித்தது முதல் கன்னுக்குட்டி கணேசன் கஞ்சா கணேசனாகிவிட்டான். சேகர் பாடு படு திண்டாடமாகிவிட்டது. சேகர் தனியாக கன்னுக்குட்டியை தள்ளிக்கொண்டு போய் எச்சரித்தும் அவன் கண்டுக்கவே இல்லை.

வேறு வழியில்லாமல் கொலு ஆர்க்கிடெக்ட் ப்ராஜெக்ட் வேலையை ஆரம்பித்து "டேய் இங்க வா இந்த கோபுரத்தை பிடிச்சிக்கோ கீழ போட்டுடாத ஜாக்கிரதை"ன்னு என்னை ஜூனியர் எடுபிடியாய் அப்பாயிண்ட் பண்ணிவிட்டார். ஒரு இத்துப் போன பொம்மையை இரண்டாவது வரிசையிலிருந்து முதல் வரிசைக்கு ஆர்க்கிடெக்ட் மாத்துவார். அப்புறம் ஈசான மூலையில் நின்று கொண்டு "இங்கேர்ந்து பாரு...இப்ப சூப்பரா இருக்கு இல்ல?"ன்னு என்னிடம் கேட்பான், நானும் "ஆமாண்டா கலக்கலா இருக்கு...லேசா ஒரு பத்து டிகிரி திருப்பி வைச்சா இன்னும் ஓஹோன்னு இருக்கும்"ன்னு ஐடியா குடுப்பேன்.

உட்கார்ந்திருக்கும் ஜிகிடிகள் முகத்தில் "இவர்கள் எப்போ கொலுவ ரீ அரேஞ்ச் பண்ணி நாம எப்ப வெத்தலை பாக்கு வாங்கி வீட்டுக்குப் போவது என்று கவலை படர ஆரம்பித்தது.

இதெயெல்லாம் கண்டுக்காமல் செக்கிழுக்கிற மாட்டுக்கு சிவலிங்கம் தெரியுமான்னு கண்ணுக்குட்டி கணேசன் பாட்டுக்கு கொண்டக் கடலை சுண்டலை மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தான். மாமி சுண்டலை பதமாய் இறக்கி சுடச் சுட பாத்திரத்தோடு கொலு ஸ்டாண்ட் அடியில் கொண்டு வந்து வைத்துவிட்டார். அவ்வளவு தான் கணேசனுக்கு ஸ்டாண்டுக்கு அடியில் போவதற்க்கு ஒரு சாக்கு தேவைப்பட்டது.

"டேய் என்னடா சொதப்பிக்கிட்டு இருக்கீங்க...அந்த மூனாவது வரிசையில வேஷ்டி சரியா போடலைடா அதான் வரிசையே கோணலா தெரியுது..இரு நான் கொலு ஸ்டாண்ட் அடி வழியா அத சரி பண்றேன் நீங்க மேல கரெக்டா இருக்கான்ன்னு பாருங்கன்னு" உள்ளே புகுந்துவிட்டான். அந்த வரிசையில் செட்டியார் பொம்மை ஒன்று சுத்தி சின்ன சின்ன பாத்திரங்களில் அரிசி, பருப்பு நிரப்பப் பட்டு உண்மையாகவே அழகாக வைக்கப் பட்டிருந்தது. சேகரால் கன்னுக்குட்டியை ஒன்றும் சொல்ல்ல முடியவில்லை.

உள்ளே போன கன்னுக்குட்டி கணேசன் நேராய் போய் அவசர அவசரமாய் ஒரு கரண்டி சுண்டலை வாயில் அள்ளிப் போட்டுக்கொள்ள, இருந்த சூட்டில் வாய் பொள்ளிப் போய்விட்டது. சூடு பட்ட கணேசன் பேருக்கேத்த மாதிரி கன்னுக்குட்டி மாதிரி துள்ள அவன் மண்டை ஸ்டாண்டில் தட்டி பொம்மைகள் குலுகுலுங்க செட்டியார் பொம்மை நங்கென்று தரையில் விழுந்துவிட்டது. நல்ல கணமான பொம்மை என்பதால் நல்ல வேளை நொறுங்கவில்லை. உடைந்திருந்தால் அன்று மாமி எங்களை பின்னிப் பெடலெடுத்து கொலு ஸ்டாண்ட் படிகளாக்கியிருப்பார். பெருமூச்சு விட்டுக் கொண்டே அவசர அவசரமாய் செட்டியார் பொம்மையை நானும் சேகரும் திரும்ப எடுத்த போது தான் பார்த்தோம், கழுத்தில் கீறல் விழுந்து செட்டியார் தலை வேறு உடல் வேறாக ஆகியிருந்தார்.

எனக்கு அந்த மாமியின் தசாவதாரம் பற்றி நன்றாகத் தெரியுமாகையால் கைகால் வெலவெலத்து விட்டது.

"டேய்....!! செட்டியார் மண்டையைப் போட்டுட்டார்டா....."ன்னு நான் பயந்து கொண்டே சொல்லும் போதும் கூட சேகருக்கு ஜிகிடி போதை இறங்கவில்லை.

"டேய் நல்ல நாளும் அதுவுமா இவங்கள்லாம் வெத்தல பாக்கு வாங்கிக்க வந்திருக்கும் போது இப்படி அமங்கலமா சொல்லாதடா...செட்டியார் பொம்மை உடைஞ்சிருச்சுன்னு அழகா சொல்லு"ன்னு ஜிகிடிகள் முன்னால் ஆர்க்கிடெக்ட் எனக்கு அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

எனக்கு கடுப்பாகிவிட்டது. "இப்போ மாமி அடுக்களையிலிருந்து வருவாங்க...நீயே அமங்கலமா இல்லாம இப்ப சொன்ன மாதிரி அழகா விஷயத்தை சொல்லு. எனக்கு சந்தைக்கு போனும் ஆத்தா வையும்"ன்னு திசைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஓடிவிட்டேன்.

நல்ல மாட்டுக்குத் தான் ஒரு சூடு என்று கண்ணுக்குட்டி கணேசனும் சுண்டலுக்கு ஆசைப்பட்டு அங்கு தங்கிவிட்டான். அப்புறம் அடுத்த நாள் தெரு கிரிக்கெட்டில் விஷயம் அரசல் புரசலாய் வெளியே வந்தது. மாமிக்கு செட்டியார் பொம்மை கார்த்திகை வகையாக தமையன் வாங்கிக்கொடுத்த சென்டிமென்ட்டாம். ஜிகிடிகள் முன்னால் சேகருக்கும் கன்னுக்குட்டிக்கும், மாமாக்கு விடும் டோஸைவிட இரண்டு மடங்கு அதிகமாக டபுள் ஸ்ட்ராங் டோஸில் மாமி வறுத்து எடுத்துவிட்டாராம். அத்தனை தடபுடலிலும் கன்னுக்குட்டி கணேசன் இரண்டு கரண்டி கொண்டைக் கடலை சுண்டலை உஷார் பண்ணிவிட்டான்.

அதற்கப்புறம் ஜிகிடிகள் வட்டாரத்தில் சீன் போட்டுக்கொண்டிருந்த குல"சேகர்" கொலுசேகர் என்று பெருமையுடன் வழங்கப்பட்டு வந்தார்.

இப்போதும் செட்டியார் பொம்மையைப் பார்த்தால் எனக்கு சேகரின் "செட்டியார் மண்டையைப் போட்ட்டுட்டார்..." அமங்கல அட்வைஸ் தான் நியாபகத்துக்கு வரும்.

--ஜொள்ளிங்ஸ் தொடரும்

Monday, August 25, 2008

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.1

ஜொள்ளித் திரிந்த காலம் - முதல் பாகம் படிக்க --> இங்கே

ரொம்ப நாளாக கையை அரித்துக்கொண்டு இருந்தது. ஜொள்ளித் திரிந்த காலம் முடித்த போது...சே கொஞ்சம் அவசரப்பட்டு முடித்துவிட்டோமோ...கேவலம் பதினொன்று அத்தியாயங்களில் முடித்துவிடுகிற அளவுக்கா ஜொள்ளு விட்டிருக்கிறோம்...வற்றாத ஜீவ நதியை கேவலப் படுத்திவிட்டோமோ. என்றும்..இல்லை இல்லை அலுத்துப் போயிருக்கும் கரெக்டாய் முடித்ததினால் தான் நிறையபேருக்கு பிடித்தது என்று மனசுக்குள் பட்டிமன்றம் ஓடிக்கொண்டிருந்தாலும், ஓரமாய் நெருப்பு எரிந்து கொண்டே இருந்தது. இந்த வலைப்பதிவு மூலமாக வந்த நண்பர்களும் வேறு அதற்கு அப்போ அப்போ நெய் ஊத்திக் கொண்டிருந்தார்கள். அப்பாடா பழியை அவர்கள் மேல் போட்டு விட்டு நைஸாக ஆரம்பித்துவிடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எலியன், தி ரிங், போன்ற sequel பெயிலியர்கள் நினைவுக்கு வந்து பயமுறுகின்றன என்றாலும் மனதில் பட்டதை தான் முக்கால் வாசி இந்த வலைப் பக்கத்தில் எழுதியிருக்கிறேன் அது தான் இதுவரை எனக்கு நிறைய நண்பர்களை ஈட்டிக் கொடுத்திருக்கிறது என்பதால் அவ்வழியையே கடை பிடிக்கிறேன். வாரத்திற்கு ஒரு பதிவாவது போடவேண்டும் என்று கொப்புரானே சத்தியமாய் சொல்கிறேன் நானும் முயன்று பார்க்கிறேன். வரப்பு கட்டனும் வாய்க்கால் வெட்டனும்ன்னு ஏதாவது வேலை வந்து விடுகிறது. அத்தோடு அந்த வேலைகள் சம்பந்தமான டென்ஷன் வேறு. மனது டென்ஷனில்லாமல் சந்தோஷமாக இருந்தால் தான் எழுதுவது இயல்பாக வருகிறது இல்லையென்றால் எழுதிவிட்டு படித்தால் பிடிக்கமாட்டேங்கிறது இதில் அதை வேறு போட்டு உங்களிடமிருந்து வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டுமா?

ஊரில் உள்ளவர்கள், இங்கே படிப்பவர்கள் என்று உங்கள் எல்லார் மேலும் பழியைப் போட்டுவிட்டு ஜொள்ளித் திரிந்த காலத்தை மீண்டும் ஆரம்பிக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். பிடிக்காவிட்டால் வழக்கம் போல் காறித் துப்புவதற்கு தடை ஏதுமில்லை...:)
************************************************************

நவராத்திரி வந்தாலே ஊர்ப்பக்கம் கோலாகலம் தான். சாயங்காலம் நாலு மணிக்கே அல்லோலப் பட ஆரம்பித்துவிடும். அரும்பு மல்லீஈஈஈ என்று பூக்காரர் உதிராய் மல்லிகைப் பூவை உழக்கில் அளந்து விற்க ஆரம்பித்துவிடுவார். வயசுப் பெண்கள் இருக்கும் வீட்டிலெல்லாம் உழக்கு உழக்காய் வாங்குவார்கள். அவர்கள் வீட்டில் இருக்கும் அப்பாவி அப்பாவும், உழக்கை விட ஓரடி உசரமாய் இருக்கும் கடைக்குட்டி தம்பியும் தையல்காரர் மாதிரி ஊசி நூல் வைத்துக்கொண்டு பூவைத் தொடுக்க ஆரம்பிப்பார்கள். ஐந்தரை மணிக்கு வயசுப் பெண்களெல்லாம் அழகாக அலங்காரம் செய்து கொண்டு அம்சமான கலரில் பட்டுப்பாவாடை/ பாவாடை தாவணியணிந்து கொண்டு கோவிலுக்கு போவார்கள். சும்மா போக மாட்டார்கள்.

மேற்கு அத்தத்தில்(எல்லையில்) இருக்கும் கோவிலுக்கு போவதற்கு முதலில் ஒரு ஜிகிடி கிழக்குக் கோடிக்கு போய் கோவிலுக்குப் போகலா ரெம்பாவாய் என்று செட் சேர்க்கும். முதலில் போகும் அந்த ஜிகிடி தனியாகப் போகாது, கூடவே ஒரு அல்லக்கை போகும். தெருவில் இருக்கும் வானரங்கள் எல்லாம் ஐந்து மணியோடு தெரு கிரிக்கெட்டை மூட்டை கட்டிவிட்டு ஐந்தரை மணிக்குள் வீட்டில் இருக்கும் பவுடரை கிவுடரை பூசி இல்லாத பெர்ச்னாலிட்டியை ஏத்தி தெருவில் ஸ்டாட்டிஜிக் பொசிஷனில் கூடி இருப்போம். கிங்பெல் சில சமயம் கடமை தவறிவிடுவான். "எண்பத்தி ஏழுல வெஸ்ட் இன்டீஸ் மெட்சில கவாஸ்கர் லாங் ஆன்ல ஒரு வீசு வீசுனார் பாரு"ன்னு என்னம்மோ கவாஸ்கரை கல்யாணம் பண்ணிக்கொள்கிற மாதிரி அவரைப் பற்றி ஸ்லாகித்துப் பேசிக்கொண்டிருப்பான். இதற்க்குள் "டேய் சீக்கிரம் வாடா இதுக்குத் தான் நீ வர வேண்டாம்ன்னு சொன்னேன்"ன்னு கிழக்கே போகும் முதல் ஜிகிடி அல்லக்கையிடம் பேசுவது போல் கடமையை கோடிட்டி காட்டிவிட்டுப் போகும். மெய் வருத்தம் பாரார்,பசி நோக்கார்,கண் துஞ்சார். கருமமே கண்ணாயினார் என்று அப்புறம் எல்லாரும் கடமையில் உஷாராகிவிடுவோம்.

கிழக்கே போன (ஜிகிடி) ரயில், கூட்டம் சேர்ந்து மேற்கில் கோவிலை அடைந்தவுடன் இங்கே கடமை அதீத நிலையை அடையும். "ஓக்கேடா அப்புறம் பார்க்கலாம்...முக்கியமான வேலை இருக்கு...எங்கம்மா டெய்லி சனீஸ்வரனுக்கு அடிப்பிரத்ட்சணம் வைக்கனும்னு சொல்லி இருக்கா" என்று நைஸாக சில வானரங்கள் நழுவப் பார்க்கும். "டேய் சனீஸ்வரனே சனீஸ்வரனுக்கு அடிப்பிரதட்சணம் வைக்கிறத நாங்க பார்த்ததே இல்லைடா நாங்களும் வரோம்"ன்னு கோவிலை நோக்கி படையெடுப்போம். நாலு ஜிகிடிகள் சுத்துவட்டாரத்தில் இருந்தால் போறாதா...சரஸ்வதி சபதம் ஊமை சிவாஜி போல் ஃபீலிங் காட்டி வானரங்கள் மணியடிப்பதும், உதட்டை முனுமுனுத்துக்கொண்டு "சொல்லடி அபிராமி" ரேஞ்சுக்கு பந்தா காட்டுவதும், பக்தி உச்சிக்கேறி கருவரையில் இருக்கும் மூலவரை வேரோடு பிடுங்காமல் விடமாட்டேன் என்று உருக்கி சீன் போடுவதும் என்று சும்மா இருந்த சிரங்கை சொறிந்து விட்டாற் போல் கோவில் ஆகிவிடும். சிலதுகள் அடிப்பிரதட்சணம் வைக்கிறேன் விழுந்து கும்புடுகிறேன் என்று போடும் சீன் இருக்கே...தலையில் ஒரு குடத்தை வைத்தால் மூன்றாம் பிறை கமலஹாசனுக்கு டூப் போட்ட மாதிரி இருக்கும்.

இதில் பெரிய இம்சை என்னவென்றால் போட்ட சீன் வொர்க்கவுட் ஆச்சான்னு சீன் போடுகிற வானரம் அடுத்தவர்களிடம் கேட்டுத் தான் விபரம் தெரிந்து கொள்ளமுடியும். அவ்வளவு டெடிகேஷனோடு சீன் போட்டுக்கொண்டிருக்கும். ஒரு வேளை போட்ட சீன் வொர்கவுட் ஆனாலும் ஒருத்தரும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். "டேய் அவ இன்னிக்கு என்ன பார்த்தாடா...எனக்கு கண்டிப்பா தெரியும்"ன்னு சாதித்தாலும் நடக்காது. "ஆமாண்டா பார்திருப்பா பார்த்திருப்பா நீ கழுத்துல அப்பிண்டிருக்கிற வீபூதியைப் பார்த்து அனுமாருக்கு வெண்ணைக் காப்பு சாத்திருக்கோன்னு அவளுக்கு சந்தேகம் வந்திருக்கும், கண்டிப்பா பார்த்திருப்பா" - வசிஸ்டர் வாயால் பிரம்ம ரிஷி கேஸ் தான்.

இதையெல்லாம் மீறி ஒருவேளை அம்பாள் வரம் குடுத்தாலும் பூசாரி வரம் குடுக்கமாட்டார். "மணியடிச்சா கரெக்ட்டா வந்துருவேளே....சுண்டலுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்! எல்லாம் பூஜையெல்லாம் முடிஞ்ச அப்புறம் தான்" என்று நேரம் பார்த்து மானத்தை வாங்கிவிடுவார். தெருவில் வானர கூட்டத்தின் ரெப்யூடேஷன் அப்படி. நவராத்திரி மற்றும் விசேஷமான காலங்களில் தெருவில் இருக்கும் பெண்மணிகள் எல்லாரும் சேர்ந்து நிறைய ஸ்லோகங்கள் ராகத்தோடு சொல்லுவார்கள். "டேய் நாமளும் அவங்களோடு சேர்ந்து கூட உட்கார்ந்து புஸ்தகத்தை பார்த்து ஸ்லோகம் சொல்லி அசத்தினோம்ன்னு வெச்சிக்கோயேன்... நம்ம பக்திய மெச்சி நாளைக்கு உங்க வீட்டிலயும் நாளக்கழிச்சி எங்க வீட்டுலயும் பொண்ணு குடுக்க வரிசையில நிப்பாங்க"ன்னு முப்பது நாளில் மாப்பிள்ளை ஆவதற்க்கு ஒரு தரம் கூட இருந்த குரங்கு ஒன்று ஐடியா குடுத்தது. ஆஹா சூப்பர் ஐடியா என்று உட்கார்ந்தால் நம்ம நேரம் - அன்று பார்த்து கொஞ்ச நேரத்திலேயே ஜிகிடிகள் கூட்டம் பொறுப்பாய் படிக்க எழுந்து போய் விட்டது.

சரி இப்ப முடிந்துவிடும் நாமும் கிளம்பிவிடலாமென்று பார்த்தால் இங்கே மாமிகள் முடிக்கிற வழியக் காணும். இந்த ஸ்லோகம் இந்த ஸ்லோகம் என்று இழுத்துக் கொண்டே இருக்கிறார்கள். எங்கள் பக்கதிலிருந்த கிங்க் காங்க் மாமி வேறு சந்தேகத்தோடு அடிக்கடி பார்க்கிறாரென்று கூட இருந்த குரங்கு மண்டயை ஆட்டி ஆட்டி சீனாக்காரனுக்கு புரையேறிய மாதிரி மந்திரம் சொல்லி நடித்துக் கொண்டிருந்தது. நானும் அவ்வை ஷண்முகி நாசர் காய்த்த்ரீ மந்திரம் சொல்வது மாதிரி ஏதோ ஆக்ட் குடுத்து நழுவ ஆரம்பிக்கும் போது கரெக்டாய் சீனாதானா மாமா எங்கிருந்தோ வந்துவிட்டார். "ம்ம்ம் அப்படித்தான் ...மந்திரமெல்லாம் நல்ல ஸ்பஷ்டமாய் சொல்லனும்" என்று அவர் க்ளாஸ் எடுக்க ஆரம்பித்து நாங்கள் அன்று சொன்ன மந்திரத்தில் தெருவுக்கே கல்யாணம் பண்ணியிருக்கலாம்.

நவராத்திரியில் கோவில் சின்ன அத்தியாயம் தான். தெருவில் முக்கால் வாசி வீட்டில் கொலு வைத்திருப்பார்கள். கொலு வைத்தவர்கள் வீட்டில் இந்த நாளில் இன்னார் என்று எல்லாரையும் நாள் விகிதமாக வெத்தலைபாக்கு வாங்கிக் கொள்ள தெரு முழுவதும் கூப்பிட்டிருப்பார்கள். அப்படி கூப்பிட்ட வீடுகளுக்கு ஜிகிடிகளும் அவர்கள் அம்மாக்களும் போவார்கள். ரொம்ப சின்னப் பையன்களுக்கெல்லாம் இந்த இன்விடேஷன் தேவையில்லை "மாமி கொலு இருக்கா"ன்னு கேட்டுக்கொண்டே உள்ளே போனால் சுண்டல் தருவார்கள். ஆனால் வயதுப் பையன்களுக்கு இதெல்லாம் மானப் பிரச்சனை. கூப்பிடாமல் போக முடியாது. ஆனால் ரொம்ப தெரிந்த மாமியாக இருந்தால் ஏதாவது சாக்கு போக்கு சொல்லிவிட்டு ஜிகிடி போன சமயமாய் உள்ளே கேஷுவல் விசிட் அடிக்கலாம்.

தெருவில் எல்லா மாமிகளுக்கும் ஒரு வம்பான பழக்கம் உண்டு. ஜிகிடிகள் யாராவது வெத்தலைபாக்கு வாங்க வந்தால் பாட்டு பாடினால் தான் உண்டு என்று பிடிவாதம் பிடிப்பார்கள். அதுவும் பாட்டு கற்றுக் கொள்ளும் பெண் என்று தெரிந்துவிட்டால் போதும் பாடினால் தான் எல்லாருக்கும் சுண்டல் கிடைக்கும் அதுவரைக்கும் கொலுவையும் சுண்டலையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கனும். அதிலும் சில மாமிகள் "அலை பாயுதே" பாடுடீன்னு நேயர் விருப்பமெல்லாம் வேறு வைப்பார்கள். சில ஜிகிடிகள் நன்றாக பாடும் சிலதுகள் சுமாராய் பாடும், சிலதுகள் பாடினால் கொலை பாயுதே தான். இருந்தாலும் அந்த வீட்டு மாமி "நிம்மி எங்காத்துல நேத்திக்கு பாடினா பாருங்கோ இடமே தேவலோகமாய் ஆயிடுத்து"ன்னு வீண் ஜம்பம் விடுவார், அப்புறம் நிம்மியின் கொலைபாயுதே கானமழை தெருவெல்லாம் எல்லார் வீட்டிலும் பொழியும்.

மேலே சொன்ன மாதிரி கொஞ்சம் நல்ல பழக்கமான மாமி வீடு என்றால் ஜிகிடிகள் உள்ளே போன ஐந்தாவது நிமிஷத்தில் "கொஞ்சம் தண்ணி தாங்கோ மாமி ...அட உங்காத்துல கொலு வைச்சிருக்கேளா"ன்னு ஏதாவது சாக்கு போக்கு சொல்லி முதல் வானரம் நைஸா இடத்தைப் பிடிக்கும். பின்னாடியே "சேகர் இங்கே வந்தானா.."ன்னு கேட்டுக்கொண்டே அடுத்த இரண்டாவது நிமிஷத்தில் மற்ற வானரங்கள் மடத்தை பிடிக்கும்.

இப்படி ஒருதரம் சேகரை தேடிக்கொண்டு நானும் கன்னுக்குட்டி கணேசனும் போன போது உள்ளே சேகர் ஓவராய் பிலிம் போட்டுக்கொண்டிருந்தார்.

--ஜொள்ளிங்ஸ் தொடரும்