Tuesday, November 27, 2007

அம்மா அப்புறம் சினிமா

உங்கள் வருங்கால சந்ததியினருக்கு எந்த தமிழ் சினிமா படங்களைப் பார்க்கும் படி சிபாரிசு செய்வீர்கள் என்று ஒரு தொடர் பதிவை சாம்பார் வடை ஆரம்பித்து நம்மையும் இழுத்து போட்டுவிட்டார்.

ஏற்கனவே என் மகள்கள் பார்க்கவேண்டும் என்று நான் விரும்பும் ஒரு கலக்க்ஷனை வைத்திருக்கிறேன்.இந்த லிஸ்ட்டில் இருக்கும் சில படங்களை இன்னும் தேத்திக் கொண்டிருக்கிறேன்.இதில் சில படங்கள் என் மூத்த மகளுக்கும் பிடிக்கும்.

நெஞ்சைத் தொட்டு உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் இந்த மாதிரி கலெக்க்ஷன் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற எனது ஆர்வத்தை தூண்டிய படம் ஆங்கிலப் படம் "லார்ட் ஆஃப் த ரிங்ஸ்". அதுவரை நல்ல படங்களை பார்த்து சிலாகித்தாலும் துட்டு குடுத்து வாங்கி அலமாரியில் பூட்டி வைத்துக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் தோன்றியதே இல்லை. இந்தப் படத்தைப் பற்றி சில நெருங்கிய வட்டத்தில் மணிக்கணக்கில் ஃபோனில் ப்ளேடு போட்டிருக்கிறேன். சாம்பார்வடை தமிழ் படங்கள் என்று கறாராய் சொல்லிவிட்டதால் எனது லிஸ்டில் இருக்கும் இந்த ஒரே ஆங்கிலப் படத்தை சேர்த்துக் கொள்ளவில்லை.

1. "உன்னால் முடியும் தம்பி" - இந்தப் படம் மசாலா படமாய் இருக்கலாம், லொட்டு லொசுக்கு என்று குற்றங்கள் இருக்கலாம், எல்லாவற்றையும் தாண்டி "உதயமூர்த்தி" பார்த்த மாத்திரத்தில் நாடி நரம்புகளில் ஜிவ்வென்று ஏறிவிட்டார். அதற்கு படமெடுத்த /கதை சொன்ன விதமும் காரணமாய் இருக்கலாம். "உன்னால் முடியும் தம்பி" எனக்குப் பிடித்த தாரக மந்திரமாகிவிட்டது. கமல் ரசிகனாய் ஆனதிற்கு மிக முக்கியமான காரணங்களில் இந்தப் படமும் ஒன்று. இந்தக் படத்தின் கதை எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று.

2. "சலங்கை ஒலி" - ஒரு மிகச்சிறந்த படம் என்ற காரணத்துக்காக நான் கலக்க்ஷணில் வைத்துக்கொண்டிருந்தாலும், அதெல்லாம் சும்மா சால்ஜாப்பு, ஜெயப்பிரதாவுக்காகத் தான் கலெக்க்ஷனில் இருக்கிறது என்று தங்கமணி ஆணித்தரமாக நம்புகிறார்.(இருக்கலாம் :) ) ஒரு படம் எப்படி எடுக்கவேண்டும் என்று நிறைய காட்சிகளில் இந்தப் படத்தில் பாடம் இருப்பதாக நான் நம்புகிறேன். பிண்ணனி இசை என்பது ஒரு படத்திற்கு எவ்வளவு பலம் என்பது இந்தப் படத்தில் பார்க்கலாம். இளையராஜா புகுந்து விளையாடி இருப்பார். கமல் அகில இந்திய விழாவில் ஆடப் போகிறார் என்பதை அவருக்கும் தெரிவிக்கும் காட்சி ஒன்று போதும் இந்த படத்திற்கு! கமல், ஜெயப்பிரதா, இளையராஜா, கே.விஷ்வநாத் நாலு பேரையும் ஒருபோல நிறக வைத்து காலில் விழலாம். நாத விநோதங்கள் பாட்டுக்கு ஆடுவதற்கு நானும் நாலு வருஷமாய் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன், வீட்டில் அம்மாவும் பெண்களும் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

3.காதலிக்க நேரமில்லை - வீட்டில் எதாவது விசேஷத்திற்கு ஊரில் இருந்து எல்லாரும் வந்திருப்பார்கள். விஷேசம் முடிந்த அன்று வேலை செய்து களைப்பாக இருப்பார்கள். ராத்திரி சாப்பாடு, அரட்டைக் கச்சேரி முடிந்த பிறகு சேர்ந்து உட்கார்ந்து டீ.வியில் பார்ப்பதற்க்கு சூப்பர் படம். இந்தப் படத்திலிருந்து பாலைய்யாவின் காமெடிக்கு பெரும் ரசிகனாக ஆகிவிட்டேன். (அவர் பார்ப்பதற்கு எங்க தாத்தா ஜாடையில் வேறு இருப்பார்) மனுஷன் என்னம்மா கலக்குவார். படத்தில் அந்தக்கால தொய்வுகள் சில இருக்கும் என்றாலும் அதையெல்லாம் தாண்டி கண ஜோராய் இருக்கும். இந்தப் படம் பார்க்கும் போது இந்தக் காலத்தில் நாமும் இருந்திருக்க மாட்டோமா என்று ஒரு ஏக்கம் வரும். ரவிச்சந்திரன் செம ஸ்மார்ட்டாக இருப்பார்.

4.திருவிளையாடல் - ஏ.பி.நாகராஜனுக்கு நிறைய கடமைப் பட்டிருக்கிறோம். இந்த மாதிரி கதைகள் இருப்பதால் சில புராணக் கதைகளை சொல்ல மிக எளிதாக இருக்கிறது. இந்தப் படம் அதற்க்காக மட்டுமில்லை- எனக்கு சின்ன வயதிலும் இப்போதும் மிகவும் பிடிக்கும் படம். இப்பொது டெக்னாலஜி வந்ததற்கப்புறம் சில விஷயங்கள் அல்பமாக தோன்றினாலும் இந்தப் படம் நான் சின்னவயதில் பார்த்த போது, பிரம்மாண்டத்தில் மிரண்டு போயிருக்கிறேன். எத்தனையோ உம்மாச்சி படங்கள் வந்தாலும் இந்தப் படம் தான் அவற்றில் எல்லாம் டாப். இந்தப் படத்தின் ஆடியோ கேசட்டைக் கூட எங்காவது கல்யாணமண்டபத்தில் ஸ்பீக்கரில் ஒலிபரப்ப்பிக் கொண்டிருந்தாலும் வெட்கமே படாமல் நின்று கேட்டிருக்கிறேன். "டுர்ர்ரிங்ங்ங்ங்ங்" என்று காட்சி மாறுவதை குறிக்கும் இசையுடன் ஆடியோ கேசட் சூப்பராய் இருக்கும். பாடல்கள் எல்லாம் பட்டையைக் கிளப்பும் ரகம். வீட்டில் இந்தப் படமும், சரஸ்வதி சபதமும் மகள்களுக்காக நிறையதடவை போட்டிருக்கிறோம். இந்த வயதில் வசனங்கள் புரியாமல் பெரும்பாலும் பாதியிலேயே தூங்கிவிடுவார்கள், நான் மட்டும் முழு படத்தையும் உட்கார்ந்து பார்ப்பேன். தங்கமணி தொந்தரவில்லாமல் கம்ப்யூட்டர் பார்ககவேண்டுமானால் இந்தப் படத்தை போட்டு என்னை உட்காரவைத்துவிட்டு நைஸாக நழுவிவிடுவார்.

5.தில்லுமுல்லு - ரஜினியின் சிறந்த படம் என்று நான் நினைப்பது. கலக்கி எடுத்திருப்பார். பாலசந்தரின் சில இம்சைகளை தவிர்த்து பார்த்தோம் என்றால் சிரித்து மகிழ அற்புதமான படம். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் செய்யும் தில்லாலங்கடி வேலைகள் கலக்கலாய் இருக்கும். ரஜினியின் அலட்டில்லாத நடிப்பு பார்க்கும் போது மனுஷனை இமேஜ் வலையில் பூட்டி அற்புதமான நடிகனை சாகடிச்சிட்டாங்களோன்னு வருத்தமாய் இருக்கும்.

6. பைவ் ஸ்டார் - படம் மிகப் பிரமாதமான படமாய் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இந்த படத்தில் வரும் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். என்ன படமென்றே தெரியாமல் பார்த்து ரொம்ப பிடித்த படம். கல்யாணமான பிறகும் நட்பு தொடர்கிறது அதுவும் மூன்று ஆண்கள் இரண்டு பெண்கள் காம்பினேஷன் கலக்கலாய் இருக்கும். இதில் அவர்களுடைய கணவர்களும் மனைவிகளும் சேர்ந்து கொள்வது அற்புதமாய் இருக்கும். ஒரு ஃபீல் குட் ரக படம்.

7. வேல் / அழகிய தமிழ் மகன் - புளித்துப் போன தோசைமாவில் ரெண்டு தேக்கரண்டி வினீகர் விட்டு, சோடா உப்பு போட்டு, முட்டைக்கோசு வெந்த தண்ணீர் விட்டு கலந்து, வென்னிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து உப்பு போட்டாமல் போண்டா போட்டால் எப்படி கேவலமாய் வரும் என்பதை செய்யாமல், சாமான்களை வேஸ்ட் செய்யாமல் தெரிந்துகொள்ளவேண்டுமானால் இந்தப் படங்களைப் பார்க்கலாம்.


மனதில் சட்டென்று தோன்றியவற்றை பதிந்திருக்கிறேன். நான் ரொம்ப விரும்பும் சில படங்கள் விட்டுப் போயிருக்கலாம்...நினைவு வந்தால் பின்னூட்டத்தில் சேர்க்கிறேன்.

உங்களுக்கும் இந்த லிஸ்ட் போட ஆசையாயிருந்தால் பிடியுங்கள் என் அழைப்பை...பதியுங்கள் படிக்க ஆர்வமாய் இருக்கிறேன்.

Wednesday, November 21, 2007

சேலஞ்ச் டுபுக்கு

இவனுக்கு வேற வேலையே இல்லைப்பா
இதெல்லாம் சும்மா...பப்ளிசிட்டி ஸ்டண்ட்
வேஸ்ட் ஃபெல்லோப்பா இவன்
இந்த மாதிரி அறிக்கைவிட்டு ஹிட் கவுண்ட ஏத்த பாக்குறான்
கொங்ய்யால...கேடிப்பயடா இவன்...மத்தபடி சேரிட்டின்னு சொல்லி இவனும் பப்ளிசிட்டி தேடிக்கிறான்
பார்போமே சொல்றத செய்யறானான்னு ..இல்லைன்னா முகத்த எங்க கொண்டு வைச்சுக்கறான்னு பார்க்கத்தானே போறோம்.


இந்தப் பதிவை படித்துவிட்டு இப்படியெல்லாம் உங்களுக்கு என்னைப் பற்றி தோன்றலாம். தோன்றினால் தாராளமாக திட்டலாம் தவறே இல்லை. பெரும்பாலானவை அப்பட்டமான உண்மைகளாக இருக்கலாம்.

நயன் தாரா திரும்பவும் ஸ்லிம்மாகியாச்சே அமைச்சரவையில் சான்ஸ் குடுக்கலாமா, "மீ" நடிகைக்கு "மா"ன்னாவோட கல்யாணமாயனமாமே...உண்மையாயிருக்குமா? என்ற சமூக சிந்தனைகள் போக மிச்சம் இருந்த சொச்ச நேரத்தில் வாழ்க்கையை சுவையாக்க (இன்ட்ரெஸ்டிங்காக்க) வெள்ளைக்காரார்கள் கையாளும் சில யுக்திகளைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்து நம்மூரில் எட்டு வருடங்கள் முன் வரை இந்த சேரிட்டி ஃபண்ட் ரெய்சிங் ரொம்ப பிரபலமில்லை. தீபாவளி நேரத்தில் க்ரூப் ஃபோட்டோவுடன் குமுதம், விகடனில் வரும் உதவும் கரங்கள் ஒரு பக்க அட்வர்டைஸ்மண்டை தவிர எதுவும் பார்த்த நியாபகமில்லை. நல்ல மனதுள்ளவர்கள் அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து டொனேஷன் குடுப்பார்கள்.

வெளிநாடுகளில் இந்த மாதிரி சேரிட்டிக்காக பணம் சேர்ப்பதை கொஞ்சம் சுவையாக செய்கிறார்கள். தன்னார்வலர்கள் (ஹப்பாடா நானும் சுத்த தமிழ்ல ஒரு வார்த்தை போட்டாச்சு) எதாவது ஒரு சவாலை ஏற்றுக்கொண்டு அதைச் சொல்லி பணம் சேர்ப்பார்கள். உதாரணத்துக்கு நான் இந்த சேரிட்டிக்காக லண்டண் மராத்தனில் ஓடுகிறேன், நான் ஓடி முடித்தால் நீங்கள் இந்த சேரிட்டிக்கு உங்களால் எவ்வளவு முடியுமோ அதை தருவேன் என்று உறுதி செய்யலாம்(ப்ளெட்ஜ்) என்பது போல. எங்க ஆபீஸில் வித்தியாசமாக செய்கிறேன் பேர்வழி என்று ஏழு பேர் கொண்ட வெள்ளைக்கார கும்பல் ஒன்று இந்த சேரிட்டிக்காக நாங்கள் இரண்டு மாத்த்திற்கு மீசை வளர்க்கிறோம் உங்களால் முடிந்ததைத் தாருங்கள் என்று ஏகப்பட்ட கலாட்டா செய்தார்கள். இதில் ஏற்கனவே ஆப்பிஸில் மீசை உள்ள ஒரே ஆள் நான் மட்டும் தான். நானும் இந்த சேரிட்டியில் இருக்கிறேன் என்று நினைத்த ஆட்களும் உண்டு. கடைசி நாள் ஆபிஸ் விழாவில் இவர்கள் மைக்கில் மீசை வைப்பதில் உள்ள கஷ்டங்களை(??!!) பகிர்ந்து கொண்டார்கள். இதில் சில மூதேவிகள் மைக் கிடைத்ததே என்று ஆபாசமாய் போய் என்னம்மோ டிரிப்பிள் எக்ஸ் படங்களில் நடிப்பவர்கள் தான் மீசை வைத்துக்கொள்வார்கள் என்கிற ரீதியில் கதாகாலேட்சேபம் பண்ணிவிட்டு போய்விட்டார்கள். அதிலிருந்து ஆபிஸிலிருக்கும் சில பெண்கள் என்னை எப்போ பார்தாலும் ஒரு நமுட்டு சிரிப்பு சிரிப்பதாக எனக்குத் தோன்றும். "அடி சண்டாளி...எனக்கு இந்த படியிலேர்ந்து இறங்கற நடிப்பைத்தவிர எதுவும் தெரியாது" என்று சொல்லிவிடலாமா என்று வாய் நமநமக்கும்.

சரி விஷயத்துக்கு வருகிறேன். சரி வாழ்க்கையில் ஏதாவது சுவாரசியமாய் செய்யலாமே, அதையும் எதாவது ஒரு நல்ல காரியத்துடன் இணைத்து செய்யலாமே என்று சில நாளாய் யோசித்துக் கொண்டிருந்தேன். ஐந்து சவால்கள் தோன்றின. இதை மேலும் சுவையாக்க அதில் மூன்றை எடுத்துக் கொண்டு ஒரு வருடத்துக்குள் நிறைவேற்றலாம் என்று ஒரு எண்ணம். இந்த மூன்றில் ஒன்று என்னுடைய சாய்ஸாக அல்ரெடி செலெக்ட் செய்துவிட்டேன்.

மீதி இரண்டை உங்கள் வோட்டுக்கு விட்டு இருக்கிறேன். மேலே சேர்த்திருக்கும் தேர்தல் பொட்டியில் இருந்து எனக்காக ஒன்றை டிசம்பர் இரண்டாம் தேதிக்குள் தேர்ந்தெடுங்கள். (ஒருத்தருமே வோட்டு போடலைன்னா நானே கள்ளவோட்டு போட்டு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுத்துவிடுவேன்) அதிக வோட்டுக்க்ள் பெறும் இரண்டை நான் சவாலாக எடுத்துக்கொள்கிறேன். நான் ஏற்கனவே எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு சவாலோடு சேர்த்து எடுத்துக்கொள்ளும் மூன்று சவால்களையும் நான் முடிக்கும் பட்சத்தில் நீங்களும் என்னுடன் சேர்ந்து சேரிட்டிக்கு எதாவது பணம் தர விரும்பினால் அதையும் எனக்கு தெரியப் படுத்தலாம்.(கட்டாயமில்லை) இது போக நானும் ஓவ்வொரு சவாலுக்கும் இவ்வளவு என்று ஒரு தொகையை ஒதுக்கி இருக்கிறேன். சவால்கள் கடுமையானதாக இருக்குமென்று நான் நம்புவதாலும், நான் இருக்கும் இடம் கருதியும் ஒரு வருடத்திற்குள் முடிக்கப் பார்க்கலாம் என்று இருக்கிறேன். விபரங்கள் அடுத்த பதிவில். இதெல்லாம் கிடையாது நான்வுடறேன்டா சவால்ன்னு குரல் குடுத்தாலும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். என் உடம்பு எவ்வளவு அடிவாங்க முடியும் என்பதை கணக்கில் கொண்டு ஒரு வேளை அந்த சவாலையும் நான் எடுத்துக்கொள்ளலாம். ரெடி ஸ்டார்ட் மீஜிக்.

Thursday, November 15, 2007

ப்ளாக் பார் டம்மீஸ்

ஐல் ஆஃப் வைட் சென்றிருந்த போது வந்த நண்பரை சமீபத்தில் சந்தித்தேன். ஐல் ஆஃப் வைட் பிரயாணத்தின் போது தான் நண்பர் அறிமுகம். அந்த மூன்று நாள் கேம்பில் மொத்தம் இருந்த ஒன்பது பேரில் மூன்று பேர் வலைப்பதிவர்கள். நாங்கள் மூவரும் அவ்வப்போது வலைப்பதிவுகள் பற்றி பேசி (மற்றவர்களை கடுப்பேத்திக்) கொண்டிருந்தோம்.

சமீபத்தில் நண்பரைச் சந்தித்த போது இன்னொரு நண்பரும் கூட இருந்தார். இந்த இன்னொரு நண்பர் கொஞ்சம் அப்பிராணி சமீபத்தில் தான் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார் என்பதால் அப்படி ஆக்ட் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

"அப்புறம் டுபுக்கு சொல்லுங்க உங்க ப்ளாக் வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு?"

"ஏதோ உங்க புண்யத்தில ஓடிக்கிட்டு இருக்கு"

"ப்ளாக்ன்னா என்னாங்க?"- இன்னொரு நண்பர்க்கு ப்ளாக் பரிச்சியமில்லை.

"அவர் சொல்றத விட நான் சொல்றேன்" என்று ஆரம்பித்தார் நண்பர்.

"முன்னாடியெல்லாம் இந்த ஐ.டி பசங்க வெட்டிக்கா சம்பளம் வாங்கிட்டு மெயில்- சாட் போக, பிரெண்ட்ஷிப் டே, அம்மாவாசை டே, பௌர்ணமி டேன்னு உலகத்துல இருக்கிற உருப்படாத 'டே'க்கெல்லாம் ஒரு நாய்க்குட்டி படமொ, பூனைக்குட்டி படமோ போட்டு க்ராபிக்ஸ் வேலையெல்லாம் காட்டி செண்டி தாக்கி, என்ன மாதிரி நீயும் வெட்டியா இருந்தா இத இன்னும் பத்து வெட்டிங்களுக்கு அனுப்புன்னு இல்லைன்னா இன்னும் பட்து நாளைக்குள்ள மென்னியப் பிடிக்கிற மாதிரி ஆணி பிடுங்கற வேலை வந்திரும்ன்னு மிரட்டி மெயில் தட்டி விடுவாங்க, இதுல எவனோ ஆரம்பிச்சுவைச்ச ஐடியா ப்ளாக்"

"ஓசில குடுக்கறானேன்னு இவனுங்களா தலைக்கு ரெண்டு மூனு பளாக் ஆரம்பிச்சு அதுல கன்னா பின்னான்னு தோணினதையெல்லாம் எழுதுவாங்க"

"என்னத்த பத்தி எழுதுவாங்க?"

"எல்லாத்தையும் பத்தி தான். ஜார்ஜ் புஷ்ஷே மன்னிப்பு கேள் என்பதில் தொடங்கி, ஐ.நா சபை அடுத்து செய்யவேண்டிய பத்து விஷயங்கள் வரை எல்லாத்தையும் கவர் செஞ்சிருவாங்க. இதுல நடுநடுவில கதை கருமாந்திரம், வெங்காயம் போடாமல் வெங்காய பக்கோடா செய்வது எப்படி, பின்நவினத்துவமும் பாரிஸ் ஹில்டனும், சிங்கப்பூரில் சூச்சா போன அனுபவம்ன்னு வகை தொகை இல்லாம எழுதுவாங்க"

"ஆஹா பெரிய எழுத்தாளர்கள் ரேஞ்சுன்னு சொல்லுங்க.."

"ஆமாமா அப்பிடித் தான் நினைப்பு இவங்களுக்கெல்லாம். இந்த வெட்டி வேலைய படிச்சிட்டு ஊர்ல இருக்கிற மத்த வெட்டிங்களெல்லாம் "ஆஹா சூப்பர் பிரமாதம் பட்டயைக் கிளப்பிட்டீங்கண்ணே, லவங்கத்தை லவட்டிட்டீங்கண்ணேன்னு இவங்களுக்கு கமெண்டு போடுவாங்க. உடனே இவங்களும் அவங்க வைச்சிருக்கிற ப்ளாக்குக்கு போய் நீங்களும் 'நிக்கிறீங்கண்ணே'ன்னு பதில் மரியாதை செஞ்சிருவாங்க"

"அடடே பரவாயில்லையே.."

"ஆமா இப்படியே இவங்களுக்குள்ளயே ஒருதர ஒருதர் நெஞ்ச நக்கி பதிவர் வட்டம், சதுரம்ன்னு ஒரு க்ரூப் ஃபார்ம் பண்ணிருவாங்க"

"அப்புறம்?"

"அப்புறமென்ன..ஆபிஸ்ல மிச்சப் பொழுதும் போக வேணாமா...அதுக்கு சாதி, மதம், ஆணியம், பெண்ணியம் ,பெருங்காயம்ன்னு ஆரம்பிச்சிருவாங்க. அது அடிதடியாகி போகப் போக வடிவேலுக்கு ஃபோன் வந்த கதையா உங்கம்மா உங்கக்கான்னு போய் படிக்கிறதுக்கே காதப் பொத்திக்க வேண்டியிருக்கும்.."

"ஐய்யையோ ச்சீ ச்சீ...எப்பிடிங்க இதெல்லாம் செய்ய்றாங்க"

"அட நீங்க வேற...இதையெல்லாம் சொந்த பேர்ல செய்யமாட்டாங்க...எதுக்கு ஆபிஸல டெக்னாலஜி இன்வெஸ்ட்மண்ட் பண்ணி சம்பளத்துக்கு உட்கார்த்திருக்கான்...ஆபிஸ் தொழில் நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி வெவ்வேறு பெயர்ல, இன்டர்போலே ரூம் போட்டு உட்கார்ந்து யோசிச்சாலும் கண்டுபிடிக்க முடியாத லெவெல்ல் டெக்னாலஜி லெவல் காட்டுவாங்கல்ல.."

"ஓகோ"

"இந்த சண்டையில ஒரே சுருதியில் சிங்கியடிக்கிறவனுங்களெல்லாம் ஒரு க்ரூப் ஃபார்ம் பண்ணிருவாங்க.."

"ம்ம்ம்..அப்புறம்"

"எங்கயாவது போற வழியில ரெண்டு பேர் தெரியாம மோதிக்கிட்டாங்கன்னா...உடனே ஹோட்டலுக்கு போய் போண்டாவோ பஜ்ஜியோ தின்னு கொண்டாடி...அங்கயிருக்கிற கூட்டத்தையும் சேர்த்து கவர் பண்ணி போட்டோ எடுத்து...மாபெரும் வலைபதிவர் மாநாடுன்னு சொல்லி...அதையும் ப்ளாக்ல போட்டிருவாங்க."


"என்ன டுபுக்கு ஒன்னும் சொல்ல மாட்டீங்கிறீங்க...சைலண்ட்டா கேட்டுக்கிட்ருக்கீங்க"

"ஹீ ஹீ நாளைக்கு உங்க புண்யத்துல இதையும் ஒரு போஸ்டா போட்டிருவேன்ல :))"

நணபர் எனக்குத் தெரியாமல் அடக் கருமாந்திரமேன்னு தலையிலடித்துக் கொண்டிருக்கலாம்.

பிகு - நண்பர் சொன்னதோடு நானும் கொஞ்சம் மானே தேனே பொன்மானே போட்டு பாடியிருக்கிறேன் :))

Tuesday, November 06, 2007

காய்ச்சல்

எந்த நேரத்தில் போன பதிவில் காய்ச்சலைப் பற்றி எழுதினேனோ தெரியவில்லை ஒரு வாரமாய் உடம்பு சரியில்லை. காய்ச்சல் அண்ட் ஜலதோஷம். அதான் சொன்ன மாதிரி பதிவு போடமுடியலை. அஜீஸ் டாக்டர் ஆஸ்பத்ரியை நினைத்தாலே காய்ச்சல் வந்துவிடும் போல இருக்கிறது. இப்பொழுது காய்ச்சல் விட்டாயிற்று ஜலதோஷம் மண்டையில் உட்கார்ந்து கொண்டு ஒரே தலைவலி. கம்ப்யூட்டர் மானிட்டரைக் கூட பார்க்கமுடியவில்லை. இந்த மாதிரி தலைவலிக்கெல்லாம் விக்ஸைத் தடவிக்கொண்டு டி.வி.யில் குருவி பாட்டு பாடிக்கொண்டு ஆடும் அண்ணாச்சி நகைக் கடை டேன்ஸ் விளம்பரங்களைப் பார்த்தால் சொஸ்தமாகிவிடும் என்று டி.நகர் ராஜூ டாக்டர் சொன்னாரே என்று பார்த்ததில் தலைவலி கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை. (கூலிங் க்ளாஸ் போட்டுக்கொண்டு பார்க்கச் சொன்னாரா என்று மறந்து போய்விட்டது)

எல்லாம் வாசிம் கான் வேலையாகத் தான் இருக்கும். வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கா வந்து இப்போது கடைசியில் என்னோட முறை. இதுவே எங்க ஊராக இருந்தால் "டாக்டர்ர்ர்ர்ர் எனக்கு காய்ச்சல் மூனு வேளையும் சாப்பிட ரோஸ் கலர் மாத்திரையும், பிட்டியில் பி.12ஒ..பென்சிலினோ போட்டு அனுப்புங்க சார்" என்றால் வாயில் தெர்மாமிட்டரை சொருகி, உட்காரவைத்து, கழுதை வயசுக்கெல்லாம் கைல போட்டா போதும்ன்னு ஒரு குத்து குத்தி வீட்டுக்க அனுப்பிவிடுவார். ஊசி போடாமல் அனுப்பிவிட்டால் மாமா இரண்டு நாள் தான் பொறுப்பார்..அப்புறமும் காய்ச்சல் குறையாவிட்டால் "ஒரு பென்சிலின் போட்ருங்கோ அப்போதான் கேக்கும்" என்று டாக்டருக்கு ப்ராக்ஸி குடுத்து ROI பார்த்துவிடுவார். பீ.12-ஓ வேற எதுவோ ஒரு ஊசி மட்டும் பயங்கரமாக கடுக்கும். அதை மட்டும் இடுப்பில் தான் போடுவார்கள். இது தெரியாமல் பதினோரு வயது பாலகனாய் இருந்தபோது நர்ஸ் நக்க்லடிப்பாரே என்று சட்டையைக் கழட்டி ஓம்க்குச்சி ஸ்வாஸ்னீகர் ஆர்ம்ஸ் காட்டி "எல்லாம் இங்க போட்டா போதும்"ன்னு அடம் பிடிக்க...நர்ஸ் இது எலும்புலலாம் போட முடியாது...கொஞ்சமாவது சதைப் பற்று இருக்கனும்ன்னு அதோட இது வலிக்கும்ன்னு அக்கறையா சொல்ல...அவர் என்னமோ விஜய் மாதிரியும் நான் என்னவோ ரம்பா மாதிரியும் என் இடுப்பிலிருக்கும் மச்சத்தை பார்த்துவிடுவாரோன்னு ஓவராய் அடம் பிடித்து கையில் போட்டுக் கொண்டு....அப்புறம் பிதாமகன் விக்ரம் மாதிரி பல்லைக் கடித்துக்கொண்டு முக்கிக் கொண்டே கர்ஜிக்கிறமாதிரி சவுண்டு விட்டதில் "குழந்தை தேரடியில் எதையோ பார்த்து பயந்திருக்கான்...அதான்..." என்று மாமி முத்தம்மாவைக் கொண்டு வீபூதி போடச்சொல்லி, முத்தம்மா பை ஒன் கெட் ஒன் ஃப்ரீ ஆஃபரில் விபூதி போட்டோதோடு நில்லாமல் ஒரு சொம்பில் தண்ணி வாங்கி மந்திரித்து என் மூஞ்சியில் பொளிச் பொளிச்சென்று ரெண்டு அப்பு அப்பிவிட்டார். அப்புறம் என்னைப் பர்த்தாலே "என்ன அம்பி இந்த தரமும் கைலயே போட்டுருவோமா " என்று நக்கல் விடும் நர்ஸைப் பார்க்கும் போதெல்லாம் முத்தம்மாவுக்கு காசு குடுத்து இவள் முகத்துலையும் ரெண்டு அப்பு அப்பச் சொல்லவேண்டும் என்று வைராக்கியம் பிறக்கும்.

காய்ச்சல் வேளைகளில் மாமவின் மேற்பார்வையில் வயிராற சாப்பிடுவதற்கு மூன்று வேளையும் கடுங்காப்பி தவிர சுத்தமான வெந்நீர் மட்டுமே கிடைக்கும். அவர் குளிக்கப் போயிருக்கும் வேளையில் மாமி நைசாக வெந்நீரில் ஒரு ஸ்பூன் ஹார்லிக்ஸ் போட்டு தருவார். அதையும் குடித்து கொஞ்ச நேரத்தில் வயிற்றைப் புரட்டி வாயிலெடுக்கும் போது மாமா கண்டுபிடித்துவிடுவார். அதனால் தான் காய்ச்சல் குறையவில்லை என்று மாமி அப்புறம் அதையும் நிப்பாட்டி விடுவார். அப்புறம் தெருவில் இருக்கும் கல்யாணி பாட்டி எம்.டி, டி.சி.ஹெச் - துளசி, தூதுவளை இத்யாதிகளைப் போட்டு ஒரு கஷாயம் பிரிஷ்கிர்ப்ஷன் கொடுப்பார். அதையும் குடித்து வாயிலெடுத்தால் மாமாவின் ஆப்த நண்பர் சீனாதானா மாமா வந்து "என்ன ஓய் என்ன மாத்திரைக் கொடுத்திருக்கிறார் டாக்டர்? காட்டும் பார்க்கட்டும்"ன்னு மிரட்டுவார். சீனாதானா மாமாவிடம் மூனாவது வரை படித்த ஒரு பையன் அப்புறம் தேறி டாக்டராகிவிட்டதால் அவருக்கு மெடிகல் காலேஜ் டீன் என்று நினைப்பு. "இந்த மருந்தெல்லாம் சின்னப் பிள்ளைகளுக்கு குடுக்கவே கூடாது தெரியுமா...? எருமைமாட்டுக்கு குடுத்தா கூட ரெண்டே நாள்ல சுருண்டு படுத்துரும்...நான் சொல்றதக் கேளும்..." என்று அவர் ஒரு பிரிஸ்கிர்ப்ஷன் குடுப்பார். இதெல்லாம் கேட்கவில்லையானால் மாமா "லங்கணம் பரம ஔஷதம்"ன்னு கடுங்காப்பிக்கும் ஆப்பு வைப்பார். இதற்க்குள் காய்ச்சலே ஐய்யோ பாவம்ன்னு ஓடி போயிடும். அப்புறம் வெறும் இட்லியிலிருந்து ஆரம்பித்து..தயிர் சேர்ப்பதற்குள் இரண்டு வாரம் ஓடிவிடும்.

ஹூம் இப்போல்லாம் காய்ச்சல் வந்தா சப்பாட்டில் கைவைப்பதே இல்லை. என் மகள்கள் என்னடாவென்றால் காய்ச்சல் போது தான் தினுசு தினுசாக கொறிப்பதற்கு கேட்கிறார்கள்..சரி எதாவது வயத்துக்குள் போச்சுன்னா சரின்னு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.