Thursday, July 15, 2010

ஊரிங் டூரிங்

இந்தியாவிற்க்கு லீவிற்க்கு அடுத்த வாரம் கிளம்புகிறோம். தங்கமணி மும்முரமாக பொட்டியைக் கட்டிக் கொண்டிருக்கிறார். நான் சில பல கடமைகளில் சிக்கி பிஸியாய் இருப்பது மாதிரி நடித்துக்கொண்டு பொட்டி கட்டும் வேலையிலிருந்து ஓ.பி அடித்துகொண்டிருக்கிறேன். வரும் வழியில் மும்பாயில் அரை நாள் தேவுடு காக்க வேண்டும். கிங்பிஷரில் சர்வீஸும் (ஏர் ஹோஸ்டஸும்) நன்றாக இருக்கும் என்று நாலு நல்லவர்கள் சொன்னதை நம்பி வானத்தில் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறேன். பார்ப்போம்.

ஊருக்கு போக முடியாமல் இருக்கும் போதெல்லாம் ஊரில் கல்யாணம், காது குத்துன்னு பத்து நாளுக்கு ஒருதரம் சொந்தத்திலிருந்து அழைப்பு வரும். நாங்களும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு விசேஷ நாள் அன்று போன் போட்டால் சுத்த பத்தமெல்லாம் சாப்பாடு பந்தியில் இலையை வழிச்சு வாரி ஒரு கட்டு கட்டிக்கொண்டிருக்கும். இருக்கட்டும் இருக்கட்டும் நமீதாக்கு ஒரு காலம் வந்தா நயந்தாராக்கு ஒரு காலம் வரமலயா போயிடும்ன்னு கருவிக் கொண்டிருப்பேன்.

இப்போ ஊருக்கு வருகிறோம் யாராவது கல்யாணம் வைங்கப்பான்னு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சிப் பார்க்கிறேன் ஹூம் எல்லாரும் கையை விரித்து விட்டார்கள். "ஏண்டி கல்யாணம்னா தாய்மாமா வர வேண்டாமா..ஊருக்கு வர்றதுக்கு எவ்வளவு செலவு ஆகுகிறது...எனக்கு வேற ஆபிஸ்ல பொறுப்பு கூடிக்கிட்டே போகுது இத விட்டா இன்னும் பத்து வருஷத்துக்கு லீவு எடுக்கமுடியாது பேசாம உன் பையனுக்கு ஆகஸ்டுல கல்யாணத்த வைச்சிடுன்னு அக்காவிடம் மன்றாடிப் பார்த்தேன். பத்தாவது படிக்கிற பையனுக்கு கல்யாணம் பண்ணக் கூடாதாம்... கறாராய் சொல்லிவிட்டார். சரி அவனுக்கு காதாவது குத்து என்று சொல்லிப்பார்த்தேன். கலிகால்ம்....தாய்மாமாவுக்கு மரியாதையே இல்லை. போகும் போது விஜய்குமார் டிவிடி ரெண்டு எடுத்துப் போய் போட்டுக் காட்டவேண்டும்.

என்னங்க ஒரு விக்கெட் கூட விழமாட்டேங்குதுன்னு தங்கமணிக்கும் ஒரே கவலை. இப்போதைய நிலவரப்படி நானே இன்னொரு கல்யாணம் செய்துகொண்டால் தான் உண்டு போல இருக்கு. முத தரம் பண்றது  தான் ஆக்சிடெண்ட் ரெண்டாவது தரம் அது சூயிசைட்ன்னு கெட்டியாய் இருக்கிறேன். ஆகையால் வலைமக்களே ஆகஸ்டு மூன்றாம் வாரம் வரை ஏதாவது கல்யாணம் நடந்தால் சொல்லவும், அஜந்தா வால் க்ளாக் ஒன்றை வாங்கிக் கொண்டு தவறாமல் சாப்பாடுக்கு வந்து விடுகிறேன். (இப்பவும் இந்த கல்யாண கிப்டா குடுக்குறாங்களா?). சேட்டுக்கள் ஆடி மாதம் பார்ப்பார்களா தெரியவில்லை. இல்லாவிட்டால் அதே கடிகாரத்தை வாங்கிக் கொண்டு , சௌகார்பேட் பக்கமா ஒதுங்கி, எனக்கு ரொம்பப் பிடிக்கும் நார்த் இன்டியன் புஃபே சாப்பிடலாம் என்று பிரயாசை.

பெரும்பாலும் அம்பாசமுத்திரத்தில் பெற்றோருடனும், சென்னையில் கொஞ்ச நாட்களும் இருக்கப்போவதாய் ப்ளான்.  வலைமக்கள் சந்திப்பு எதாவது நடந்தால் சொல்லவும். அந்த சமயம் ஊரில் இருந்தால் வந்து ஜோதியில் ஐக்கியமாகிக் கொள்கிறேன்.