Saturday, September 27, 2008

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.4

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3

மினி ப்ராஜெக்டை சொத்து பிரித்ததில் அது மைக்ரோ மினியாகிவிட்டது. எங்க ஊரில் மளிகைக் கடை அண்ணாச்சி காதில் சொருகியிருக்கும் பென்சிலை எடுக்காமலேயே போடும் கணக்கை கம்ப்யூட்டர் படுத்தச் சொல்லியிருந்தார்கள். மளிகைக் கடை பெயரை மட்டும் "ஏடிபி கார்ப்பரேஷன்"ன்னு பந்தா படுத்தியிருந்தார்கள். "என்னா பாஸூ இப்படி சொதப்பறாங்க...இப்படியே மளிகைக் கடை கணக்கெல்லாம் போட்டுக்கிட்டிருந்தா எப்போ தான் சின்ன வயசு குஷ்பூ போட்டாவ குடுத்து கண்டுபிடிக்கச் சொல்லுவாங்க" என்பதே அம்மாபட்டியின் கவலையாக இருந்தது. அதெல்லாம் பைனல் இயர்ல தான்ன்னு அவனைப் பேக்கப் செய்துவிட்டு கிளியோடு ப்ராஜெக்ட் வேலையை ஆரம்பித்தேன். விண்டோஸ் 3.0 அப்போது தான் (என்)ஐ.ஐ.டிக்கு வந்திருந்த காலமது. டாஸ் - பாக்ஸ்ப்ரோவில் தான் இந்த ப்ராஜெக்ட் செய்யவேண்டும் என்று வாத்தியார் சொல்லியிருந்தார்.

ஓப்பனிங் ஸ்கீனில் கம்பெனி பெயரை எங்கே போடலாம், எந்த டிசைனில் எந்த ஃபாண்ட்டில் போடலாம் என்று ப்ராஜெக்ட்டுக்குத் தேவையான மிக முக்கியாமான விஷயங்களில் நான் தீவிரமாக செலுத்தி வந்தேன். கிளியோ கணக்குக்குத் தேவையான அல்காரிதமை தான் முதலில் பார்க்கனும்ன்னு அல்பமான விஷயங்களில் கவனத்தை சிதறவிட்டுக்கொண்டிருந்தது. சரி சரி அதெல்லாம் இடது கையால அசால்ட்டா செய்வோம்லன்னு உதார் விட்டு கம்ப்யூட்டர் ட்ரோமுக்கு போய் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து வேலையை ஆரம்பித்தால் ஆரம்பமே சவாலாக இருந்தது. கிறுக்குப் பயலுங்க ட்ரோமில் வேறெதோ மேக் கீபோர்ட் வைத்திருந்தார்கள். பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு கிலி பிடித்து இங்கே ஐ.ஐ.டியில் செய்த கீ போர்ட் எக்ஸர்சைலாம் மறந்து போய் "ஏ" எங்க இருக்கும் "கே" எங்க இருக்கும்ன்னு உதற ஆரம்பித்து விட்டது. அறுக்கத் தெரியாதவனுக்கு ஆயிரத்தெட்டு அருவாளாம்ன்னு ஜம்பமாக கீபோர்ட்டை வேறு என் பக்கத்தில் வைத்துக்கொண்டிருந்தேன். அப்புறம் மோவாக்கட்டையில் கையை வைத்துக் கொண்டு யோசிக்கிற மாதிரி கிழக்கே ஒரு தரம் பார்த்து மேற்கே ஒருதரம் பார்த்து அப்புறம் கீழே கீப்போர்ட்டை உத்துப் பார்த்து கண்ணால் துளாவி "கே" கண்ணில் தட்டுப்பட்டவுடன் "ஆங்...கரெக்ட் அதான் சரி...இந்த அல்காரிதம் லாஜிக் தான் யோசிச்கிட்டு இருந்தேன்...இப்போ எப்படி பண்ணனும்ன்னு ஒரு ஐடியா கிடைச்சாச்சு"ன்னு சமாளித்து அப்புறம் திங்க்கிங் ப்ராசஸ் தடை படுகிறதென்று கீபோர்ட்டை கிளியிடம் மாற்றிவிட்டேன்.

வேலையை முடித்துவிட்டு டெய்லி ட்ரோமில் மத்த பையன்களெல்லாம் யுவதிகளோடு உலக நன்மையைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள், வடநாட்டு கிளி மட்டும் வேலை இருக்கிறதென்று சந்தைக்கு கிளம்பிவிடும். அது சரி நமக்கு இந்தியாவிலேயே முதல் மாணவனாய் வருகிற யோகம் மட்டும் தான் இருக்கு போலவென்று மனதை தேற்றிக் கொண்டு 11இ க்கு நானும் 47டிக்கு அம்மாபட்டியும் தேவுடு காக்க ஆரம்பித்துவிடுவோம். "ஏன் பாஸு நமக்கு மட்டும் செட்டு செட்டாக மாட்டேங்குதுன்னு"ன்னு அம்மாபட்டி 47டி வரும் வரை செட்டு கவலைப் படுவான்.


நான் படித்து வந்த நுங்கம்பாக்கம் ஹை ரோட்டில் இருக்கும் எங்கள் ஐ.ஐ.டி தலமை அலுவலகம் மிக கலர்புல்லான இடம். எனக்கும் அம்மாபட்டிக்கும், ரெமோ பைக்கில் ஸ்டையிலாக சாய்ந்து கொண்டு நிறைய பாடம் எடுத்திருக்கிறான். குழந்தை நட்சத்திரமாக நடித்து பிறகு பின்னாளில் ஹீரோயினான ஷாலினியும் அங்கு தான் படித்தார். அப்போது அவர் ஹீரோயினாகவில்லையாதலால் யாரும் ரொம்ப கண்டுகொள்ள மாட்டார்கள். எனக்கும் அம்மாபட்டிக்கும் ஷாலினியை பார்த்து அவர் நடிப்பைப் பற்றி ரெண்டு வார்த்தை பெருமையாக பேசவேண்டும் என்று கொள்ளை ஆசை. ரெமோ அதற்க்கு தடை போட்டுவிட்டான். "சுத்த காட்டான்களா இருக்கதீங்கடா ரொம்ப ஓவரா ஊத்தினீங்கன்னா யாருமே திரும்பக் கூட பார்க்க மாட்டாங்க"ன்னு ரெமோ சொன்னது அம்மாபட்டிக்கு சமாதானம் ஆகவில்லை. "அதெல்லாம் இல்ல பாஸு அந்தப் புள்ள நம்ம செட்டுல சேர்ந்திருமோன்னு இவனுக்கு பயம்"ன்னு அம்மாபட்டியின் நம்பிக்கை சில நேரங்களில் எனக்கு தலையே சுற்றும்.

நுங்கம்பாக்கம் ஹை ரோடு ஐ.ஐ.டி மூன்று மாடிக் கட்டிடம். நாலாவது மாடி டெரஸில் ரூப் கார்டன் மாதிரி செடியெல்லாம் வைத்து பெஞ்ச் டேபிளெல்லாம் மாணவர்கள் படிக்கட்டும் என்று போட்டிருப்பார்கள். ஆனால் மாணவர்கள் படிக்காமல் மானாவாரியாக கடலை சாகுபடி செய்து கொண்டிருப்பார்கள். எல்லா செட்டும் கலர்புல்லாக இருக்கும். ரெமோ வந்து எங்கள் செட்டில் ஐய்க்கியமாவதற்கு முன்னால் நானும் அம்மாபட்டியும் மட்டும் வெத்தாக "பாஸ் பாஸ்"ன்னு கொஞ்சிக்கொண்டிருப்போம். ரெமோ எங்க செட்டில் ஐய்க்கியமாகி அவனோடு நாலு நண்பிகளை கூட்டிக் கொண்டு வந்ததுக்கப்புறம் தான் நானும் அம்மாபட்டியும் "ஏ...எல்லரும் பார்த்துக்கோங்க நாங்களும் ரவுடி நாங்களும் ரவுடி..நாங்களும் ரவுடின்னு" சவுண்டு விட ஆரம்பித்தோம்,

ஆனால் அம்மாபட்டி என்னை விட கில்லாடியாக இருந்தான். ரொம்பவே தேறி கம்ப்யூட்டர் ட்ரொமில் பட்டயைக் கிளப்ப ஆரம்பித்தான். கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட மேகசினெல்லாம் வைத்துக் கொண்டு கம்ப்யூட்டரின் எதிர்காலமெல்லாம் கிளி ஜோஸ்யம் சொல்லுவது மாதிரி சுத்தி நாலு யுவதிகளை வைத்துக் கொண்டு கதை சொல்லுவான். அவன் கூட ப்ராஜெக்ட் பண்ணிக்கொண்டிருத ரெமோவின் நண்பி அம்மாபட்டியுடன் சிரித்து சிரித்து பேசும். எனக்கு வெளியே ஆல் இந்தியா லட்சியம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தாலும் உள்ளே அம்மாபட்டியே கலக்குறானேன்னு புகையும். "பாஸு பார்த்தீங்கள்ல...வடநாட்டு கிளி கூட உங்க செட்டா இருந்தாலும் கண்ணு இங்க தான் என்னை சுத்தி நோட்ட்ம் விடுதுன்னு" அடிக்கடி என்னையும் அலெர்ட்டாக்குவான். போகிற போக்கைப் பார்த்தால் இவன் அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையாவாய் ரெமோவுக்கே டிப்ஸ் குடுப்பான் என்று ரெமோ அவனுக்கு டிப்ஸ் குடுப்பதை நிப்பாட்டி விட்டான்.

ஒரு நாள் கிளி முன்னதாகவே முடித்து விட்டு வெளியில் புதிதாய் யாரோ- வுடன் நின்று பேசிக்கொண்டிருந்தது. நான் வழக்கம் போல மத்த பேக்கப் பார்மலிட்டியை எல்லாம் முடித்துக் கொண்டு வெளியில் வந்தால் "மீட் மை ஹஸ்பண்ட் அபிஜித்"ன்னு என் மண்டயை தூக்கி கல்லில் போட்டுவிட்டாள். அம்மாபட்டி சிவாஜி பாதி ஜே.கே ரித்தீஸ் மீதின்னு என்னல்லாமோ ஃபீலிங்க்ஸ் முகத்தில் காட்டிக் கொண்டிருந்தான்.

ரெமோ பல்லவர் காலத்து மஹாபலிபுர சிலையாய் உறைந்துவிட்டான். அந்தாளை எங்கேயோ பார்த்த மாதிரி எனக்கு இருக்க கேட்டேவிட்டேன். அபிஜித் நல்ல மாதிரி பட் படென்று விஷ்யத்தை தெளிவாகச் சொல்லிவிட்டார். போலிஸ் இன்ஸ்பெக்டர் செலக்க்க்ஷனாகி ட்ரெயினிங்கில் இருப்பதாகவும், நான் இருந்த அதே கே.கே.நகரில் இரண்டு தெரு தள்ளி தான் அவர் அப்பா இருப்பதையும் சொன்னார். அவர் அப்பா ரிட்டையர்ட் போலீஸ் சென்னை எஸ்.பீ. நல்ல வெள்ளியில் பூண் போட்ட ஒரு தடியுடன் நல்ல கொளு கொளு நாயைக் கூட்டிக் கொண்டு டெய்லி வாக்கிங் போவார். நானும் பார்த்திருக்கேன் நல்ல மனிதர் என்று அபிஜித்திடம் சொல்லி எதற்க்கும் ஒரு சேப்டிக்கு இருக்கட்டும்ன்னு ஆல் இந்தியா முதல் மாணவன் மாமாவின் லட்சியத்தையும் அவர் காதில் போட்டுவைத்தேன்.

அப்புறம் கிளி மேடமும் நானும் அப்புறம் அந்த மைக்ரோ பிராஜெட்டை ஒரு வழியாக முடித்தோம். கிளி மேடம் கரெக்ட்டாய் வருவார், சில நாட்களில் மேடமிற்க்கு வேலை இருக்கும். நான் இன்ன இன்ன செய்திருக்கிறேன் என்று சொன்னால் சரி பார்ப்பார்...ப்ரோக்கிராமில் அங்கங்கே மானே தேனே பொன்மானே போட்டு மிச்சத்தை என்னைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கிளம்புவார். அம்மாபட்டி அபிஜித் சாரிடம் ரொம்ப கேட்டதாகச் சொல்லச் சொலுவான், மேடமும் வாஞ்சையாக எங்களைப் பார்த்து சிரிப்பார். "பார்த்தீங்களா பாஸு...மேடமுக்கு நம்ம மேல எப்பவும் ஒரு தனி நட்பு"ன்னு அம்மாபட்டி ஃபீலிங்ஸ் காட்டுவான். நானும் ஆமாம்ன்னு மண்டையை ஆட்டுவேன். ரெமோ வழக்கம் போல தலையிலடித்துக் கொள்வான்.

--ஜொள்ளிங்ஸ் தொடரும்

Monday, September 01, 2008

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.3

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2

'ஹேவ் எ ஹாப்பி பீரியட்" என்று மாதவிடாய்க்கு டீ.வி அட்வர்ட்டைசன்மென்ட்டில் பெண்கள் வாழ்த்துச் சொல்லிக்குமளவு முன்னேறாத ஒரு கால கட்டத்தில் நான் சென்னையில் கம்ப்யூட்டர் படிப்பு படித்துக்கொண்டிருந்தேன். சிஸ்டம்ஸ் ஆர்க்கிடெச்சர் அன்ட் மேனேஜ்மென்ட் என்று கொஞ்சம் கவுரதையாக இருக்கும் ஒரு வாக்கியத்தைப் பிடித்துக் கொண்டு, எங்கே படிக்கிறீங்க தம்பி கேள்விக்கு, நௌன்னை பலவிதமாக கூறலாம் என்ற பாலபாடத்தில், ஐ.ஐ.டி என்று என்.ஐ.ஐ.டியில் 'என்'னை சைலண்டாக்கிவிடுவேன்.

அம்பாசமுத்திரம் சிட்டியில் பிறந்து வளர்ந்த எனக்கு சென்னை மாதிரியான கிராமப்புற கலாச்சாரம் கொஞ்சம் புதிது. சென்னையின் தலமை அலுவலகத்தில் மூன்று மாடிக் கட்டிடத்தில் நுனி நாக்க்கு இங்லிபீஸில் புடவையை இப்படியும் கட்டலாம் என்று அறியவைத்த கவுன்சிலர், உன்னை மாதிரி அறிவாளியைப் பார்த்ததில்லை என்று அம்பத்தியையாயிரம் ரூபாயை பொங்கல் வைத்துவிட்டார். பீஸ் கட்டும் போதே தெரிந்துவிட்டது, புடவையை முன் ஆபிஸில் இருக்கும் கவுன்சிலர்கள் மட்டும் தான் கட்டுவார்கள் என்று.

பெண்களுக்கு எப்படியோ தெரியாது, ஆண்களுக்கு வாழ்வில் குறைந்தது மூன்று தருணங்களில் வாழ்க்கையைப் பற்றிய கவலை வரும். ப்ள்ஸ் டூ ரிசல்ட் வருவதற்கு முந்தைய நாள், காலேஜ் பேர்வல் பார்ட்டி முடிந்த அடுத்த நாள் இரவு, முதல் இன்டர்வியூ ஊத்திக் கொண்ட மாலை. எனக்கு மனைவி ரெடி பாண்டியராஜன் மாதிரி காலேஜ் முடித்த காலக்கட்டத்தில் கல்யாணம் வேறு தோராயமாக நிச்சயமாகி விட்டிருந்தது என்பதால் கவலை கிறித்துமஸ், நியூ இயர் பொங்கல் சேல் மாதிரி எக்ஸ்டெண்ட் ஆகிவிட்டது. நிச்சயமானதில் அடியேன் கைங்கர்யம் நிறைய இருந்தாலும், அம்பத்தியையாயிரம் பீஸுக்கு மாமா வேறு என்னம்மோ ரேடியோவில் நியூஸ் வாசிக்கிற மாதிரி "ஆல் இண்டியாவிலேயே" முதல் மாணவனாய் வரனும்ன்னு கண்டிஷன் போட்டிருந்தார்.

முதல் நாள் க்ளாசுக்கு போனால் கே.டி.குஞ்சுமோன் செட்டுக்குள் நுழைந்தது மாதிரி இருந்தது. வெள்ளக்கார துரையோடு பேத்திகளும் பேரன்களும் ஏகத்துக்கு நுனிநாக்கில் படம் காட்டிக் கொண்டிருந்தார்கள். கொட்டாம்பட்டி ரயிலு எத்தனை மணிக்கு வரும்ன்னு கேட்டுவிட்டு ஓரமாய் உட்கார்ந்துகொண்டேன். திக்குத் தெரியாத காட்டில் தொலைந்துகொண்டிருந்த போது அம்மாபட்டிக்கு அட்ரெஸ் கேட்டுவிட்டு இன்னொரு சக 'சிட்டி'சன் பக்கத்தில் வந்து அமர்ந்தார். ஆஹா புடவையாத்தா உனக்கும் பொங்கல் வெச்சிட்டாளான்னு குசலம் விசாரித்துக்கொண்டதில் கொஞ்சம் நிம்மதி பிறந்தது. நானே தேவலை, நானாவது விக்ரம் படத்தில் "மீண்டும் மீண்டும் வா" டிம்பிள் கபாடியா பாட்டுக்கு அப்புறம் கம்ப்யூட்டரில் ராக்கெட் விடுவது எப்படி, ரோசா படத்தில் "ருக்குமணி ருக்குமணி" பாட்டுக்கப்புறம் அரவிந்த்சாமி மாதிரி கம்ப்யூட்டரில் ஹெட்போனைப் சொருகி பாகிஸ்தான் தீவராதிகள் பேசுவதைக் கேட்பது எப்படி என்று கம்ப்யூட்டர் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தேன், அம்மாபட்டி சிட்டிசனுக்கு அதுவும் தெரியவில்லை. வாத்தியார் மானிட்டர் பத்தி தெரியுமான்னு கேட்டால் "ஏழாவது படிக்கும் போது ஒரு தரம் இருந்திருக்கேன்" என்று சொதப்பிக் கொண்டிருந்தான். அப்புறம் அவன் மண்டையில் தட்டி..."அண்ணா அது ஸ்கூல் மானிட்டர் இல்லைல்ங்கண்ணா...இது கேப்டன் படத்துல தீவிரவியாதி எங்க குண்டு வைத்திருக்கிறார் எத்தனை மணிக்கு வெடிக்கும்ன்னு கோடு போட்டு காண்பிக்குமே டி.வி பொட்டி...அது" என்று வாத்தியார் புரியவைத்தார்.

ஆனால் சிட்டிசன் படு தெகிரியமாய் இருந்தார். கொள்ளக்கூட்ட மொட்டை மாதிரி எல்லாரையும் பாஸ் பாஸ்ன்னு தெம்பாய் கூப்பிட்டார்." கவலைப் படாத பாஸ்..இங்கே சேர்ந்துட்டோம்ல இனிமே ராக்கெட் விடுவதிலிருந்து குஷ்பூ சின்ன வயசில எப்படி இருந்திருப்பார்ன்னு கம்ப்யூட்டரில் கண்டுபிடிப்பது வரை எல்லாமே சொல்லிக் குடுப்பாங்க...அம்பத்தைஞ்சாயிரம் குடுத்திருகோம்ல.."ன்னு எனக்கும் சேர்த்து ஆறுதல் சொன்னான்.

க்ளாஸ் ஒருவாரம் ஓடியிருக்கும், எங்களாலே நம்பவே முடியவில்லை...ஒரு வடநாட்டு கிளி ஒன்று எங்கள் சிட்டிசன் வரிசையில் வந்து அமர்ந்தது. வடநாட்டு கிளி என்றால் இந்த வடகத்திய ஹீரோக்கள்லாம் கல்யாணம் நிச்சயமான பொண்ணுக்கு ரூட் விடுவார்களே சினிமாவில் அந்த அழகு. ஒரு வேளை நாமளும் கொஞ்சம் பெர்ச்னாலிட்டியாகத் தான் இருக்கோமோ என்று எங்களுக்கே டவுட் வந்துவிட்டது. வாயைத் திறந்தால் ஊத்திக்குமே என்று கொஞ்ச நாள் ஹலோ ஹலோ என்று ஓடியது. இந்த சமயத்தில் தியரி எல்லாம் முடிஞ்சாச்சு இனிமேலிருந்து ப்ராக்டிகல்ஸ் என்று இரண்டு பேருக்கு ஒரு கம்ப்யூட்டர் என்று குடுத்துவிட்டார்கள். வடநாட்டு கிளியும் நானும் ஒரு செட்ன்னு வரும், ஐ ஆம் சாரி நான் ஏற்கன்வே கமிட் ஆகிட்டேன், அத்தோட நான் ஆல் இந்தியாவிலேயே முதல் மாணவனா வரனும்ன்னு எங்க மாமாக்கு லட்சியம் இருக்குன்னு டயலாக்கை எல்லாம் ரெடி பண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் விதி - காசிக்குப் போனாலும் கருமம் தொலையாதுன்னு அம்மாப் பட்டி சிட்டிசன் "பாஸ் நானும் நீயும் ஒரு செட்" என்று ஒட்டிக் கொண்டான். ஆமா பெரிய செட்டு ஷேவிங் செட்டுன்னு கவுண்டமணி கடுப்பில் "டேய் ஒழுங்கா படிச்சு காம்பஸ்ஸுல வேலைய தேத்தப் பாருடா"ன்னு ரெண்டு ஓசி அட்வைஸ் குடுத்தேன்.

ஆனால் ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும் என்பார்களே அது நிஜமாகி தனியாக இருந்த வடநாட்டு கிளியின் கம்ப்யூட்டர் ஏதோ காரணத்தால் பூட் ஆகவில்லை. அதனால் வடநாட்டு கிளி எங்களுடன் வந்து உட்கார்ந்து கொண்டது. முதல் லேப்பில் கீப்போர்ட் பழக வேண்டும் என்று சின்னத்தனமாக ஏதோ ப்ரோக்கிராம் ஓடிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு எழுத்தாக மானிட்டரின் மேல் மூலையிலிருந்து விழ ஆரம்பிக்கும் அது கீழே விழுவதற்க்குள் அந்த எழுத்தை கீபோர்ட்டில் அழுத்த வேண்டும்.கம்ப்யூட்டர் வெல்டன் சொல்லும். இது தான் பயிற்சி. க்ளாசில் என்னையும் அம்மாபட்டி சிட்டிசனையும் தவிர யாரும் இந்த ப்ரோக்கிராமை மதிக்கவே இல்லை. வேறேதோ செய்து லெவல் காட்டிக்கொண்டிருந்தார்கள். "பாஸ் இப்ப என் டர்ன்...நான் உங்கள விட ஒரு செகென்ட் முன்னாடியே பிடிச்சிருவேன் பாருங்க"ன்னு சீட்டிசனும் நானும் போட்டிபோட்டுக் கொண்டு கீபோர்ட்டில் லெவல் காட்டிக்கொண்டிருந்ததை கிளி ஆவென்று பார்த்துக்கொண்டிருந்தது. அன்றைக்கு இருந்த மப்பில் கிளி இம்பெரெஸாகிப் பார்த்துகொண்டிருந்தது என்று நினைத்தோம்...இன்று யோசித்தால் சின்னத்தம்பி பிரபு மாதிரி நினைத்திருக்குமோன்னு என்று டவுட் வருகிறது.

ஆனாலும் ஒன்று சொல்ல்வேண்டும் கிளி ரொம்ப நல்ல பெண். எங்கள் கெக்கெபிக்கேதனத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சகஜமாய் பழகினாள். "நம்ம ரெண்டு பேர்ல யாரோ ஒருதர் மேல அதுக்கு ஒரு இது பாஸ்"ன்னு அம்மாபட்டிக்கு ஒரே கிளுகிளுப்பு...சரி சரி எனக்கும் தான். இதற்கு நடுவில் ஒரு மினி ப்ராஜெக்ட் என்று குடுத்து டீம் பிரித்தார்கள். மவுண்ட் ரோட்டில் இருந்த கம்ப்யூட்டர் ட்ரோமில் போய் நாமே முனைந்து செய்யவேண்டும். ஒரு மினி ப்ராஜெக்ட்டுக்கு மூன்று டீம். ஒரு டீமிற்கு இரண்டு பேர் என்று ஆக மொத்தம் ஆறு பேர். அப்போது தான் ரெமோ எங்கள் கூட்டத்தில் வந்து ஐய்க்கியமானான். ரெமோ என்றால் அதே ரெமோ. ஏதோ சுமாரான ஸ்டையிலொடு இருந்தாலும் பெண்கள் கூட்டத்தின் நடுவில் தான் இருப்பான். அவன் பெண்களோடு இல்லாமல் பார்ப்பதற்க்கான வாய்ப்பு...மல்லிகா ஷெராவத் பதினெட்டு முழப் புடவையை தழைய தழைய கட்டிக்கொண்டு வருவதற்கான ப்ராபபிலிட்டி தான்.

ரெமோவுடன் அவன் நண்பிகள் இரண்டு பேரும் என்று எங்கள் டீம் மூன்று மூன்று என்று சம சகிதமாகிவிட்டது. எல்லோருக்கும் ப்ரோக்கிராமில் சந்தேகம் வந்தால் எங்களுக்கு கீபோர்ர்டில் சந்தேகம் வரும் என்று அம்மாபட்டியும் நானுமாயிருந்த ஷேவிங் செட் கலைக்கப்பட்டு, கிளியும் நானும், அம்மாபட்டியும் இன்னொரு பெண்ணும், ரெமோவும் அவன் நண்பியும் என்று தீர்ப்பு சொல்லப்பட்டது.

--ஜொள்ளிங்ஸ் தொடரும்