Wednesday, June 04, 2014

மயில் ஸ்னேகங்கள்

நான் சொல்ல வருவது ரயில் ஸ்னேங்களின் உல்டா. வாழ்க்கையின் ஏதோ ஒரு காலகட்டத்தில் செந்திலும் கவுண்டமணியுமாய், தளபதியும் மம்மூட்டியுமாய், அப்பாஸும் முஸ்தபாவுமாய், நாக்கு மேல் பல்லைப் போட்டு உரிமையோடு " ஏய் நீ என்ன பெரிய இவனாடா / இவளாடி..." என்று உரிமையோடு தோழனும் தோழியுமாய் ஒரே தட்டில் எச்சில் பரோட்டா தின்று, ஈரக் கையில் ஒட்டிய முடி மாதிரி உறவாடிய நட்பைப் பற்றி. அது தோழனாகவோ தோழியாகவோ இருந்திருக்கலாம். எப்பேற்பட்ட நட்பு என்றால், வேறு யாரவது நடுவில் வந்துவிட்டால் இந்த நட்பு நம்மை பின்னிப் பெடலெடுத்துவிடும். "போ..அங்கயே அப்படியே போய் சாவு..இங்க எதுக்கு வர்ற, நாங்களெல்லாம் இருக்கோம்ன்னு இப்பத் தான் தெரியுதாமா" என்று ஒரு வாரம் பேசாது.  அது ஒன்றும் பெரிய தவறில்லை என்று தெரிந்தாலும் மானம் வெட்கமேயில்லாமல் முதல் மரியாதை சிவாஜி மாதிரி நாமும் முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு பின்னாடியே போய் நாயாய் கெஞ்சும் நட்பு. "இன்னொரு தரம் மட்டும் இப்படி செஞ்ச, பார்க்கவே மாட்டேன் வெட்டியே போட்டுருவேன்..நிஜமா" என்று மிரட்டி மன்னிக்கும் நட்பு. நம்மைப் பற்றி நமக்குத் தெரிந்ததை விட இவர்களுக்குத் தான் அதிகம் தெரிந்திருக்கும். நாளும் கிழமையுமானால் முதல் ஃபோன் இவர்களிடமிருந்து வரவே வராது. அதுவும் பிறந்தநாள் என்றால் சுத்தமாய் மறந்துவிட்ட மாதிரி நடித்து நம்மை வெறுப்பேத்தும். நாமும் வெறுத்துப் போய் "தூ இவ்வளவு தானா நீ.." என்று வசனம் பேச எத்தனிக்கையில் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து புருவத்தை உயர்த்தி சட்டையைப் பிடித்து "என்ன சொல்ல வந்த நீ இப்ப..." என்று தளும்ப வைக்கும்.

எல்லாரும் கூட்டம் கூட்டமாய் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கும் போது "இப்ப நானா அவங்களா" என்று வீ.சேகர் பட க்ளாமாக்ஸ் சீனெல்லாம் கொடுத்து, இப்பேற்பட்ட நட்பால் நமக்கு இவர்களைத் தவிர ஊரில் இருக்கிற ஒரு பயபுள்ளைகளைத் தெரிந்திருக்காது. ஆனாலும் மனது மட்டும் நிறைந்திருக்கும். நன்றாக போய்க்கொண்டிருக்கும் போது எவனாவது வைத்த கொள்ளிக் கண்ணினால் இஞ்சி மொரப்பாவில் சுக்கு போட்ட தகறாரில் பட்டென்று ஒரு நாள் நட்பு தெறித்துவிடும். ஒரு இரண்டு மூன்று வருடங்கள் சில சமயம் பல வருடங்கள் பார்க்காமலே பேசாமலே இருப்போம். ஆனால் காலம் இருக்கே காலம் திடிரென்று பேஸ்புக் ட்விட்டர் என்று எங்கேயாவது கோர்த்துவிட்டு விடும். மௌன ராகம் சீன் மாதிரி நிறைய பேசாமல் , மனதுக்குள் மட்டுமே நிறைய நினைப்போம். அவர்களுக்குத் தெரியாமல் நோட்டம் விடுவோம். பழைய பரோட்டா கடை மேட்டரிலிருந்து எல்லா விஷயங்களும் மயிலிறகால் தடவி விட்ட மாதிரி மனதில் ஓடும். எனக்கும் சில பல மயில் ஸ்னேங்கள் இருக்கின்றன. தற்போது கூட "எப்படி இருக்க" என்பதோடு முடிந்துவிடுகிறது. ஆனால் அந்த நினைவுகள் இருக்கின்றதே - அது அவர்களுக்கே சொந்தமில்லாமல் என்னுடையதாய் எனக்கே எனக்காய் அப்படியே நெஞ்சில் பசுமையாய் இருக்கின்றது - திரும்ப பேசாமல் அப்படியே பத்திரமாய் !