Wednesday, May 13, 2009

அன்புள்ள தங்கமணிக்கு...

வாவ்...இந்தப் புடவை எப்போ எடுத்தோம்...இதுல நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா...அப்படியே ஜன்னல் பக்கத்துல வானத்துல காக்காய பார்க்கற மாதிரி கன்னத்துல கைய வெச்சிண்டு ஒரு போஸ் குடு...டக்குன்னு கேமிரால பிடிச்சுடறேன்...என் அடுத்த படத்துக்கு இந்த மாதிரி ஒரு ப்யூட்டிய தான் தேடிண்டு இருந்தேன்....

தேங்ஸ் பட் நோ தேங்க்ஸ்..தெளிவாவே சொல்லிடறேன்...கண்டிப்பா இன்னிக்கு ராத்திரி என்னால சப்பாத்தியும் சன்னா மசாலாவும் பண்ணவே முடியாது...!!!!!!

சே மனுஷன் சன்னா மசாலாவுக்கெல்லாம் பொய் சொல்லி பிச்சை எடுக்க வேண்டியதாப் போச்சு...சனியன் நானும் அத எவ்வளவு வருஷமா பண்ணிப் பார்க்கறேன் ஒரு தரமாவது நல்லா வந்து தொலைய மாட்டேங்குது...நீயும் அடுக்களையில எவ்வளவு தான் கஷ்டப்படற...இதுக்கு தான் ஒரு வெள்ளக்காரிய வீட்டோடு கொண்டு வந்துடறேன்னு சொல்றேன்...அவளும் கூட மாட ஹெல்ப் பண்றதோட அக்கா அக்கான்னு உங்கிட்ட ஆசையா இருப்பா...நீ தான் கேக்க மாட்டேங்கிற

ஏன் அதுக்கு பதிலா நான் ஒரு ஆள கூட்டிண்டு வரேனே ...அவன் கூட தான் உங்கள அண்ணா அண்ணான்னு கூப்பிடறதோட உங்களுக்கும் ஒத்தாசையா இருப்பார்...நம்ம அடுத்த தெரு ஆப்பிரிக்க நண்பர் எப்படி வசதி...?

அடிப்பாவி அந்த ஆள் "கேய்"ன்னு தெரிஞ்சு பழிவாங்குறியா...அவன் ஆள் இருக்கிற சைஸ்சுக்கு...உனக்குள்ள இப்படி ஒரு சொர்னாக்கா இருப்பான்னு நான் நினைக்கவே இல்லை....

என்னடி கெக்கபிக்கன்னு பார்த்துண்டு இருக்க...ஹோம்வொர்க்க எடுத்துண்டு வா. டி.வி.யப் பார்க்காம அந்த சோபால என்ன பார்த்து இப்படி திரும்பி உட்காரு...கான்சென்ட்ரேஷன் இம்ப்ரூவ் ஆகும். இந்தா இந்த டி.வி ரீமோட்ட பக்கத்துல வைச்சிக்கோ...மாடிலேர்ந்து அம்மா கீழ இறங்கி வர்ற சத்தம் கேட்டா டி.விய டக்குன்னு ஆஃப் பண்ணிட்டு ரிமோட்ட உன் பக்கத்துலேயே வெச்சிக்கோ. இல்லைன்னா அப்புறம் டீ.விய பார்த்துண்டே ஹோம்வொர்க் பண்றன்னு உன்ன தான் சத்தம் போடுவா...

அம்மா....டீ.வில பில்லா போடறான்...அப்பா நயன் தாரா பார்க்கறார்....

தாயைப் போல் பிள்ளைன்னு சும்மாவா சொன்னான்...ஒரு மட்டு மரியாதையே தெரியல உனக்கு.....இப்படியா நயன் தாரான்னு மண்டைல அடிச்ச மாதிரி சொல்றது...சித்தின்னு அழகா சொல்லுடா...சரி சரி உக்காரு...உடனே எழுந்து போய் மாடில உங்கம்மா கிட்ட ஊத வேண்டாம்..இன்னிக்கு கோட்டா அல்ரெடி ஓவர்...நாளைக்குப் பார்த்துக்கலாம்...ஹூம்...சோபால பூனைய வைச்சிண்டு சகுனம் பார்த்தேன் பாரு என்ன சொல்லனும்...

டாட் ...ஷீ இஸ் புல்லியிங் மீ....நான் தானே உங்க கடைசிப் பொண்ணு....ஷீ சேஸ் ஷி இஸ் தெ ஒன்

அவ சொன்னா சொல்லட்டும்...கண்டுக்காத...அதெல்லாம் இருக்கட்டும்...இங்க பாருடா செல்லம்...நான் உன்கிட்ட முன்னாடியே நிறைய தரம் சொல்லி இருக்கேன்...நீ என்னோட ரெண்டாவது பொண்ணுன்னு சொல்லிக்கோ ஆனா நீதான் கடைசிப் பொண்ணா இல்லியான்னு நானும் உங்க அம்மாவும் தான் பேசி ஒரு முடிவெடுக்கனும் ஓ.கேவா...

குழந்தை கிட்ட என்ன பேசறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா...அன்னிக்கு அவ ஸ்கூல்ல இன்னொரு பெண்ணும் இதே மாதிரி அவ வீட்டுல அவ தான் கடைசிப் பொண்ணுன்னு சொல்லியிருக்கா...இவ உடனே நீங்க சொன்னத அவ கிட்ட சொல்லி...நீ கடைசி பொண்ணா இல்லையாங்கிறத எங்கப்பா தான் முடிவு பண்ணனும்ன்னு சொல்லியிருக்கா..அந்த பொண்ணு அவ வீட்டுல அனேகமா சொல்லி இருக்கும்...அந்த தெரு பக்கம் போன இருக்கு உங்களுக்கு.

நீங்க வாழ்க்கையில எடுத்த ரெண்டாவது கரெக்ட் முடிவு காமிராக்கு பின்னாடி நிக்கனும்ன்னு எடுத்த முடிவு தான்....

என்ன இருந்தாலும் நீ செம ஷார்ப்டி...பயங்கர புத்திசாலி....உன்னளவுக்கு நான் போறாது...

என்னாச்சு இன்னிக்கு உண்மையெல்லாம் பயங்கரமா ஒத்துக்கறீங்க...?

ஆமா பின்ன உண்மை என்னைக்காவது உரைச்சுத் தானே ஆகனும்...நீ என்ன செலெக்ட் பண்ணின நான் உன்ன செலக்ட் பண்ணினேன்...இப்பவும் சொல்றேன் நீ பயங்கர ஷார்ப்மா...


அன்புள்ள தங்கமணிக்கு...தந்தை மகளுக்கு எழுதிய கடிதம், மகள் தந்தைக்கு எழுதிய கடிதம் வரிசையில் புருஷன் பெண்டாட்டிக்கு எழுதிய கடிதமாக இந்நேரம் இநத பதிவு மூலம் சரித்திரத்தில் இடம் பிடித்திருப்போம் (ஹீ ஹீ) . நம் மணவாழ்க்கையில் அஃபீஷியலாக பத்து வருடம் ஓடியே விட்டது. திரும்பிப் பார்க்கிறேன், ஓரமாய் நின்று பார்க்கிறேன் ஒன்றரைக் கண் விட்டுப் பார்க்கிறேன் என்று போரடிக்காமல் நேர விஷயத்திற்கு வருகிறேன். எத்தனையோ தரம் நீ சொல்லி நான் மறுத்திருந்தாலும்.....தஙகமணியில்லையேல் டுபுக்கில்லை என்று இன்று ஒத்துக்கிறேன். எனது வாழ்வில் நகைச்சுவையை மேம்படுத்தியது நீ தான் என்று ஒத்துக்கொள்கிறேன். எதைச் சொல்வேன் கண்மணி...தெள்ளிய நீரோடையில் வெள்ளியென..என்று ப்ளாக் கிடைத்ததே என்று ஓவராய் ஃபிலிம் காட்டாமல் "காக்க காக்க" ஜோதிகா மாதிரி (நினைப்பில்) நீ நம் வீட்டு கர்டன்களை திறந்துவிட்டு என்னைப் பார்த்து பேசும் டயலாக்கிற்கு அதில் என்றும் ஒரு சிறப்பிடம் என்ற ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

சொந்தக் கவிதை எழுதி டார்ச்சர் பண்ணாமல்...சமீபத்தில் நான் மிகவும் ரசித்த, நமக்கு மிகவும் பொருந்தும் சினிமா பாட்டையே போட்டுவிடுகிறேன்

நீ கோபப் பட்டால்...நானும் கோபப்படுவேன்
நீ பார்க்காவிட்டால்...நானும் பார்க்கமாட்டேன்
நீ திட்டி முறைத்தால்...நானும் திட்டி முறைப்பேன்
நீ சண்டை பிடித்தால்...நானும் சண்டை பிடிப்பேன்
நீ பேசாவிட்டால்...நானும் பேசமாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும்....உயிரை விடுவேன் (சும்மா உல்லாகட்டிக்கு)
நீ கேக்காமல் போனாலும்...கத்தி சொல்லுவேன்...பேபி ஐ...லவ்..யூ (பேபி யாருன்னு கேக்கப்பிடாது சொல்லிட்டேன் ஆமா)


எனக்குத் தெரியும் என்ன தான் வில்லு படத்திலேர்ந்து பாட்டெல்லாம் சுட்டுப் போட்டாலும் நீ சென்டி ஆக மாட்ட....அதே தான் கரெக்ட்...இந்த வாரம் சப்பாத்தி சன்னா மசாலா...அதே தான்...ப்ளீஸ்...சினிமாலேர்ந்து பாட்டெல்லாம் மேற்கோள் காட்டி போட்டிருக்கேன்....ஏதோ பார்த்து செய்யுங்க மேடம்...