Thursday, July 28, 2005

எப்பிடி இருந்த நான்...

இங்கே பாம் வெடித்த விஷயத்திலிருந்து தப்பிப் பிழைத்த விஷயம் ஜுனியர் விகடனில் பேட்டியாக வந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.(ஹி ஹி ..நல்ல சிரிச்சுண்டு போஸ் குடுத்த போட்டோல்லாம் வந்திருக்கு). விஷயம் நடந்த அன்று சக்ராவின் ப்ளாகைப் பார்த்த ஒரு நண்பர் மூலமாக ஜு.விக்கு எழுதும் இன்னொரு நண்பர் தொடர்பு கொண்டு அதன் மூலமாக ஜூ.வியில் பேட்டி வந்தது.

"விகடன் பேட்டிக்கு தயாராகனும்"ன்னு உதாரெல்லாம் விட்டதில் ராத்திரிக்கு தோசை இருந்த இடத்திலெயே கையில் கிடைத்தது.

"இன்னும் பேட்டி வேலை நிறைய இருக்கு தட்டிலேயே கையைக் கழுவிடறேன்"

"ஏன் கையில கால்ல அடி பட்டிருந்தா சன் டீவியில வந்து பேட்டி எடுப்பாளே..நான் வேணா ஏற்பாடு பண்ணட்டுமா.." - வழக்கம் போல் இல்லாமல் நேரடியாகவே தலமைச்செயலகத்திலிருந்து எச்சரிக்கை வந்தது. (அப்புறமென்ன வழக்கம் போல் நானும் நல்ல பையனாகிவிட்டேன்)


பேட்டியெல்லாம் முடித்த பிறகு நண்பர் சொன்னார் "இத அங்க ஆபீஸ்ல அவங்க பார்த்து தவறு இருந்தால் திருத்திக் கொள்வார்கள்."

பேட்டி தானே... மானே தேனே பொன்மானே போட்டு எழுதுவார்கள் என்று நினைத்தேன், ஆனால் கொஞ்சம் பல்லவியையே மாற்றிவிட்டார்கள்.(ஆனால் மானே தேனே மேட்டருக்கு இந்த நண்பர் காரணமில்லை) இந்த வாய்பினால் நாங்கள் மிகவும் நல்ல நண்பர்களாகி எனக்கு சென்னை தோசாவில் ஓ.ஸி தோசையெல்லாம் கிடைத்தது என்பது வேறு விஷயம்.

ஆனாலும் ஜாலியாகத் தான் இருந்தது. நண்பர்கள் வழக்கம் போல் கலாய்த்தார்கள். மனைவிக்கு வேற போட்டோ குடுத்திருக்கலாம்ன்னு அபிப்ராயம். தப்பிப் பிழைத்ததை தங்களிடம் சொல்லவில்லையே என்று சில பேருக்கு குறை. மஹாலெக்ஷ்மி கோவில் அர்சகர் பத்திரிக்கையில் வந்திருக்கும் போட்டோ என்னுடையது தானா என்று கன்பர்ம் செய்துகொண்டு...சக அர்சகர்களிடம் நான் தப்பிப் பிழைத்ததைப் பற்றி ஸ்லாகித்து பிரசாதத்துடன் ஆப்பிளும் குடுத்தார்.

ஊரில் வீட்டில் சமாதானம் செய்வது தான் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது.

"ஏண்டா எங்ககிட்டயெல்லாம் விஷயத்தை மறைச்சுட்டியே...நீ வந்த டிரெயினிலேயே குண்டு வெடிச்சுடுத்தாமே "

"**ஆமாம் எனக்கே இந்த விஷயம் பத்திரிக்கையில வந்த அப்புறம் தான் தெரியும்**"

"எத்தனையோ கடல் தாண்டி இருக்கே...பார்த்து ஜாக்கிரதையா இருங்கோப்பா... எங்களுக்கு இங்கே வயத்துல புளியைக் கரைக்கிறது"

"அதெல்லாம் ஒன்னுமில்லை..கவலப்படாதீங்கோ..நாங்க இருக்கிற ஏரியாலலாம் ஒன்னும் பயமில்லை "-என்னம்மோ சமாதானம் என்ற பேரில் உளறினேன்.

"இல்லையே லண்டன் முச்சூடும்னா குண்டு வெடிக்கிறதாம்...பேப்பர்ல போட்டிருக்கு சன் டிவீயிலயும் சொன்னாளே ஜாக்கிரதையா இருங்கோ"

"சரி ஜாக்கிரதையா இருக்கோம் " - முதல்லயே சொல்லியிருக்கனும்.

"சரி லேட்டஸ்ட் போட்டோ அனுப்பு அனுப்புன்னு சொல்லிண்டு இருந்தேளே...அதான் பத்திரிக்கைல வந்திருக்கே...பார்த்துக்கோங்கோ"

"உன்க்கு எப்பவும் விளையாட்டுத் தான் குழந்தகளோட போட்டோவ அனுப்பு"

**"இதுக்குத் தான் நாங்களும் சேர்ந்து இருக்கற குடும்ப போட்டோவ போடுங்கோன்னு சொன்னேன்..எங்கம்மாவும் பார்த்திருப்பா இல்லையா" - திருமதி ஒரு வெகுமதி
அடாடா..கொஞ்சம் பிரபலமானாலே மனுஷனுக்கு எத்தன பேர சமாளிக்கவேண்டியிருக்கு ***

இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் குண்டு வெடிக்க முயற்சி என்றவுடன் டான் டானென்று போன் வந்தது.

"உங்களுக்கு ஒன்னுமில்லையே..." - ஊரிலிருந்து போன்.

"ஏன்டா இந்த தரம் உனக்கு ஒன்னும் ஆகலையா" - நண்பர்கள்.

வழக்கம் போல் இந்த முறையும் சன் டீவி பேட்டி மிஸ்ஸாகிவிட்டதாக வூடுக்காரி நக்கல்.

ஊரில குண்டு வெடிச்சா நம்ம தலையில தான் விடியுமா என்ன?

Thursday, July 07, 2005

அந்த இரண்டு மணி நேரம்...

எங்க வீட்டுக்குப் பின்னால் 2012ல் ஒலிம்பிக்ஸ் கொண்டாட முடிவெடுத்திருப்பதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். வீட்டில் இரண்டாம் மாடி கட்டி ஸ்பெஷல் டிகெட்டிற்கு விடலாமென்று இருந்தேன். யாரோ வயத்தெரிச்சல் பொறுக்காமல் இன்று குண்டு போட்டுவிட்டார்கள். தலை தப்பியது தாம்பிரான் புண்ணியம். 8:10 பாதாள ரயிலைப் பிடிக்க வீட்டிலிருந்து வழக்கம் போல 8:11 கிளம்பியதால் பிடிக்க முடியவில்லை. வேறு ரூட் டிரெயினைப் பிடிப்பதற்கு முன்னால் அடுத்த 8:27 வண்டி வந்துவிட்டது. சரி இதிலேயே போய்விடலாமென்று பேப்பரோடு ஏறி உட்கார்ந்துவிட்டேன். செய்திகளைப் படித்து முடிந்து கண் சொக்கிக் கொண்டிருந்த நேரம்... "டும்ம்.." பெருத்த சத்தம். எல்லோருக்கும் தூக்கிவாரிப் போட்டது.
"பாமா...பாம் போட்டுவிட்டார்களா?" பக்கத்திலிருந்த வெள்ளைக்கார இளைஞன் பதறிவிட்டான்.
எனக்கு முதலில் சிரிப்புத் தான் வந்தது. தம்பி ரொம்ப பயந்த சுபாவம் போல இருக்கு அதான் இப்பிடி பயந்துவிட்டான் என்று நினைதேன். சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் பாம் என்று எனக்கு நினைக்கவே தோன்றவில்லை. வெளியில் விளக்குகள் எல்லாம் போய்விட்டன. ரயிலின் உள்ளே விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

வண்டி ஓட்டுனர் ஒலிபெருக்கியில் பேசினார். " நான் தான் ஓட்டுனர் பேசுகிறேன். ரயில் தளவாடங்களில் மின்சாரம் வரவில்லை (இங்கே கீழே தனி தளவாடங்களில் தான் மின்சாரம் வரும். நம்மூர் மாதிரி மேலே கம்பிகளில் வராது) கொஞ்சம் முன்னே உங்களுக்கும் அந்த சத்தம் கேட்டிருக்கும் உங்களை மாதிரி எனக்கும் அதைப் பற்றித் தெரியவில்லை. ஆனால் மின்சார பீஸ் பொட்டி வெடித்திருக்குமென்று நினைக்கிறேன். தகவல் தெரிந்ததும் சொல்கிறேன். மின்சாரம் வரும் வரை நம்மால் நகர முடியாது. கொஞ்சம் பொறுமையாக இருக்கவும். உங்களுக்கேற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறேன். "

எல்லோரும் "உச்ச" கொட்டினோம். பக்கத்திலிருந்த இன்னொரு பாட்டிக்கும் அந்த இளைஞன் சொன்னதிலிருந்து சந்தேகம். மொபைலில் சிக்னல் வராவிட்டாலும் வருகிறதா என்று கையில் மொபைலை வைத்துக்கொண்டு மோப்பம் பிடித்துக்கொண்டிருந்தார்.

"அனேகமாக பிரன்ஞ் நாட்டுக்காரகளின் சதியாகத் தான் இருக்கும்..நாம் ஒலிம்பிக்ஸை வென்று விட்டோமென்று அவர்களுக்கு வயிற்றெரிச்சல்..." இன்னொரு மாமா ஜோக்கடித்தார்.

15 நிமிடங்கள் ஆகியிருக்கும்...

"நான் சென்ட்ரல் ரெயிலுக்காக காத்துக்கொண்டிருந்தேன். இது வந்துதே என்று ஏறிவிட்டேன். பெருத்த தவறு செய்துவிட்டேன் " அடுத்து உட்கார்திருந்த பாட்டி நான் நினத்ததையே புலம்பினார்.

மொபைல் சிக்னலுக்கு மோப்பம் பிடித்துக் கொண்டிருந்த பாட்டிக்கு வெற்றி. யார் யாருக்கோ போன் போட்டு ஆபிஸுக்கு வருவதற்கு லேட்டாகும் என்பதிலிருந்து நாய் குட்டியை பத்திரமாய் பார்த்துக்கொள்வது வரை எல்லாம் பேசினார்.

30 நிமிடங்கள் ஆயிற்று
டிரைவர் திரும்பவும் பேசினார். அவருக்கும் எதுவும் தெரியவில்லை என்றும் ஆனால் என்ன பிரச்சனை என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்களென்றும் சொன்னார்.

வண்டியில் அனேகமாக எல்லாரும் மொபைலை வைத்துக் கொண்டு சிக்னலுக்கு மோப்பம் பிடிக்க ஆரம்பித்தார்கள். சில புண்யாத்மாக்களுக்கு மட்டும் சிக்னல் கிடைத்தது. அவர்களிடமிருந்து கடன் வாங்கி சில பேர்கள் பேசினார்கள்.

1 மணி நேரம் ஆயிற்று...
டிரைவர் திரும்பவும் பேசினார். நாங்கள் இங்கே புலம்பியதை அவர் மைக்கில் புலம்பினார். இதற்குள் ஒரு அம்மணீக்கு மூச்சு முட்ட ஆரம்பித்தது. அவரை சீட்டில் உட்கார வைத்து தண்ணி கொடுத்து ஆசுவாசப்படுத்தினோம்.

1 மணி நேரம் 30 நிமிடங்கள்.

டிரைவர் திரும்பவும் பேசினார். இந்த முறை பிரச்சனையப் பற்றி பேசவில்லை. உதவிக்கு சொல்லி இருப்பதாகவும், வந்து கொண்டிருப்பதாகவும் சொன்னார். மக்கள் லேசாக பீதியடைய ஆரம்பித்தார்கள். மொபைல் போன்கள் சிக்னல்கள் இருந்த்தும் நம்பர்கள் போகவில்லை.

1 மணி நேரம் 40 நிமிடங்கள்
போலீஸ் மற்றும் மீட்பு பணியாளர்கள் ஏணி வைத்து ஏறி டிரெயினின் பின் கதவுகளை திறந்து கொண்டு வந்தார்கள். எல்லோரையும் அழைத்துப் போக வந்திருப்பதாகவும், எல்லோரும் பதட்டப் படாமல் பின்புற கதவு வழியாக இறங்கி செல்லவேண்டுமென்றும் கூறினார்கள். டனல் பாதையில் டார்ச்சு விளக்குளுடன் நிறைய மீட்புப் பணியினர் இருந்தார்கள். மிகவும் பாதுகாப்பாக வழி காட்டினார்கள். என்ன நடந்தது என்று கேட்டோம். பெரும்பாலானோர் ஒன்றும் தெரியாது என்று கூறினாலும் ஒருவர் மட்டும் ரகஸியமாக தொடர் வெடிகுண்டுகள் லண்டனில் வெடிப்பாதகவும் இதுவரை நான்கு இடங்களில் வெடித்துவிட்டதாகவும், எங்களுக்கு முன்னால் சென்ற வண்டியில் குண்டு வெடித்ததாகவும், நாங்கள் நூலிழையில் தப்பியதாகவும் கூறினார். எல்லோருக்கும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

நடந்து பக்கத்து ஸ்டேஸனில் வந்து சேர்ந்தோம். தண்ணீர் பாட்டில்கள் குடுத்தார்கள். வெளியில் வந்தால் ஹாலிவுட் படத்தில் வருவது போல் போர்களமாக் இருந்தது. போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகளைத் தவிர ஈ காக்காயைக் காணவில்லை. நானும் ஹாலிவுட் ஹீரோ மாதிரி எதாவது ஒரு வெள்ளக்கார குட்டியுடன் (சும்மா நட்பாக) ஓட்டம் பிடித்து மாடியெல்லாம் ஏறி குதித்து தீவிரவாதிகளை கண்டுபிடிக்கலாமா என்று யோசித்தேன். ஆனால் ஒரு குண்டு போலீஸ்கார மாமா விடவில்லை. பஸ்ஸில் எல்லோரையும் ஏற்றிக் கொண்டு போய் பேர், ஊர் விபரங்களையெல்லாம் எழுதி வாங்கிக் கொண்டார்கள். சரி நம்ம விஜய்காந்த் அங்கிள் மாதிரி அப்புறம் புலன்விசாரணை கோட்டெலாம் போட்டுக்கொண்டு ஒரு கை பார்த்துக் கொள்ளலாமென்று விட்டுவிட்டேன்.

இந்த அனுபவத்தில் இவர்களிடம் பிடித்தது
1.இவ்வளவு களேபரத்திலும் தையத் தக்காவென்று குதிக்காமல் அமைதியாக கையாண்டார்கள்.
2. மக்களை பீதியடையாமல் பார்த்துக்கொண்டார்கள். டிரயினிலிருந்து இறங்கும் போது தான் ஒருவர் சொன்னாரே ஒழிய, டிரைவரோ போலீஸ்காரர்களோ சொல்லவே இல்லை. பெயர் எழுதி வாங்கும் போதும் எங்களுக்கு தெரிந்திருந்தும் கூட அந்தப் போலிஸ்காரர் தனக்கு எதும் தெரியாதென்று தான் சாதித்தார்.(ந்மப முடியவில்லை என்பது வேறு விஷயம்)