Monday, August 29, 2005

London Bloggers Meet !

ஒருத்தனைத் தவிர யாரையும் பார்த்தது கூட கிடையாது. மொத்தம் மூன்று நபர்கள் தான் என் ப்ளாகைப் படித்திருக்கக் கூடிய சாத்தியம். மலையாளம், தமிழ், ஹிந்தி என்ன ஒரு கலவை. தூர்தர்ஷனில் சித்தார் வாசிப்பது மாதிரி தான் இருக்கும். "நான் சௌக்கியம் நீங்க சௌக்கியமா" என்று சிரித்த மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு கேட்டுவிட்டு மம்மம் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவேன் என்று நினைத்தேன்.

சும்மா சொல்லக்கூடாது. மீண்டும் காலேஜ் சென்று வந்த மாதிரி இருந்தது. நேர வம்படி தான். ஒருத்தருக்கொருத்தர் மருந்துக்கு கூட மரியாதையுடன் விளிக்கவில்லை.12:30 மணிக்கென்று சொல்லிவிட்டு சக்ரா அண்ட் கோ மட்டும் 1:15 மணிக்கு வந்தது. ஒருத்தர் காலை ஒருத்தர் வாருவது தான் முக்கிய வேலையாக இருந்தது. ட்வின் ஜெமினி ஆனந்த் மட்டும் சமத்தாக அமைதியாக இருந்தார். கூட்டத்தில் பெண்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை (எல்லாருக்கும் கல்யாணம் ஆகிவிட்டருந்தது காரணமாய் இருக்கலாம்). என் நிலமை எவ்வளவோ தேவலை என்று நினைத்துக் கொண்டேன். "மே மாதம்" ஆனந்த் அந்நியன் ஸ்டையிலில் வந்திருந்தார். நீளமான கூந்தலுக்கு நேகா அவரிடம் டிப்ஸ் கேட்டுக்கொண்டிருந்தார். ப்ரவீன் "ஆமிர் கான்" மாதிரி இருப்பதாக எல்லோரையும் நம்பவைக்க ரொம்பவே முயற்சி செய்துகொண்டிருந்தார். நல்ல காமெடியாக இருந்தது. ஆனால் எனக்கு அவர் முகத்தை எங்கேயோ பார்தமாதிரி இருந்தது. அப்புறம் தான் நியாபகம் வந்தது. மீசை வைத்த மன்சூர் அலிகான் மாதிரி இருக்கிறாரென்று. எதுக்கு அவர் மூடைக் கெடுப்பானேன் என்று சொல்லவில்லை. (நீங்கள் வேண்டுமானால் இன்னொருதரம் கீழே இருக்கும் போட்டோவைப் பாருங்கள்). குரு என்னை வம்பில் மாட்டிவிடுவெதென்று கங்கணம் கட்டிக்கொண்டு சக்ராவின் துணையோடு போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். ஜேக் எல்லோருக்கும் நிறைய முந்திரி பருப்புக்கள் போட்ட மிக்ச்சர் பாக்ஸ் கொண்டுவந்திருந்தார். ரொம்ப அருமையாக இருந்தது. சாப்பாடு நன்றாக இருந்தது. என்ன இருந்தாலும் ஓசிச் சாப்பாடு மாதிரி ருசிக்கவில்லை ( தலைக்கு 14 பவுண்டு பழுத்தது)

இனிமேல் அடிக்கடி சந்திக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டு பிரிந்தோம்.

அடுத்த தரமாவது ஓசிச் சாப்பாடு போடுங்கப்பா...


இடமிருந்து வலம் - "இந்தப் பூனையும் பால்குடிக்குமா" குரு, "முகத்த காட்டமாட்டேன் போ" குட்டிப்பையன் ஸ்ரீராம், "கும்பீபாகம்" ஆனந்த், "மிக்ஸர் கொடுத்த வள்ளல்" ஜாக், "மன்சூர் அலிகான்" ப்ரவீன், "உன்னால் முடியும் தம்பி" கமல் (சரி சரி நாந்தேன்) , "கேப்டன்" சக்ரா, "குருவீட்டுத் தங்கமணி" நிஷா, "ப்ரவீன் வீட்டுத் தங்கமணி" ராதிகா

Friday, August 26, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...4

For previous Parts -- >Part 1      Part 2     Part 3

எனக்கு உள்ளூர அக்மார்க் படபடப்பு. அது வரை தள்ளியிருந்து கலாய்த்திருந்தாலும் நேருக்கு நேர் பேசுவதற்கு என்னமோ செய்தது. ஆனால் கிளி கூப்பிட்டது உப்பு இருக்கா பருப்பு இருக்கான்னு சப்பை மேட்டருக்கு. இருந்தாலும் வாய்ப்பை நழுவ விடவில்லை, கடலை சாகுபடிக்கு தேவையான சீதோஷண நிலையைக் கொண்டுவந்திருந்தேன்.

"அண்ணா நீங்க நல்ல க்ரிக்கெட் விளையாடறேள்ன்னு உங்களுக்கு நாங்க ஒரு பேர் வைச்சிருக்கோம்.." - சிறு குழந்தையும் பல் குத்த உதவியது.

"சொல்லாதேன்னு சொன்னேன் இல்ல..." கிளிக்கு அந்தச் சின்னப் பெண் சொல்லிவிட்டாளே என்று வெட்கமாயிருந்தது.

"உங்களுக்கு கபாஸ்கர்ன்னு அக்கா பேர் வைச்சிறுக்கா..நீங்க அவர மாதிரி நன்னா விளையாடறேளாம்" - குழந்தைக்கு "வா"-ன்னா பராது.

"வெல்...இதெல்லாம் ஒன்னுமில்ல..போன மேட்சுல..." என்று நான் மானே தேனே போடுவதற்குள் தூரத்தில் வானரப் படை பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களுக்காக கொஞ்ச நேரம் நல்ல சிரித்துப் பேசுவது மாதிரி படம் போட்டுக் கொண்டிருந்தேன். ஒரு வயத்தெரிச்சல் வானரம் என் வீட்டுக்கு ஓடியது. எதாவது செய்து நான் கடலை போடுவதை வீட்டில் மறைமுகமாக தெரியப்படுத்தும் வழக்கமான நல்லெண்ணம் தான். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியுமாகையால் எதிர் பக்கமாக நழுவினேன்.

"கபாஸ்கர்...கபாஸ்கர்...கபாஸ்கர்..." இந்த பெயரும் நன்றாகத் தான் இருந்தது. அங்கே இங்கே சுற்றிவிட்டு வரும் வரை வானரப் படை காத்துக்கொண்டிருந்தது. வயத்தெரிச்சலில் புகை மண்டலம் மண்டிப் போயிருந்தது.

"டேய் கபாஸ்கர் இங்க வாடா" - அதற்குள் சிறுமியைப் பிடித்து இன்டெலிஜ்ன்ஸ் ப்யூரோ விஷயத்தை வாங்கி இருந்தது. டீமில் ஒருத்தனுக்கு கவாஸ்கரை ரொம்பப் பிடிக்கும். அவனும் க்வாஸ்கர் மாதிரி குட்டையாக கொஞ்சம் சதைப்பிடிப்புடன் இருப்பானாகையால் அவனுக்கு தான் தான் கவாஸ்கர் என்று நினைப்பு.

"என்னடா சோலோ சோலையப்பன் மாதிரி அங்கே தனியா கச்சேரி நடத்திட்டு வந்தா எங்களுக்கு விஷயம் தெரியாதா என்ன? கபாஸ்கர்.....க்ர்ர்ர்ர்ர் தூ...எல்லாம் நேரம் டா"

"டேய் நிப்பாட்டுடா...ரொம்ப ஓட்டாதீங்கடா...நான் கவாஸ்கர் மாதிரி ஸ்கொயர் ட்ரைவ் பண்ணறேன்னு அந்தப் பொண்ணு பெயர் வைச்சிருக்கா...உனக்கு வேனும்ன்னா நீயும் நல்ல பவுலிங் போட்டு கபில் தேவ்னு பெயர் வாங்கிக்கோ யாரு வேணாம்ன்னா"

"யாரு ...நீ...கேட்டுக்கோங்கடா கிழிச்ச கோமணம் மாதிரி இருக்கற தெருவுல அய்யா ஸ்கொயர் ட்ரைவ் அடிச்சாராம் ..அவ பார்தாளாம் அதனால கபாஸ்கராம்...அவளுக்கு ஸ்கொயர் ட்ரைவ்ன்னா என்னன்னு தெரியுமாடா?" - கவாஸ்கர் குட்டையனுக்கு ரொம்பவே வயித்தெரிச்சல்.

அப்புறம் அங்கே பார்லிமெண்ட் மாதிரி குழப்பமாகிவிட்டது. கடைசியில் மம்தா பானர்ஜி மாதிரி நானும் பேட்டை வீசி விட்டு வந்து விட்டேன். அடுத்த நாள் அனைத்துக் கட்சி சமாதானக் கூட்டம் நட்ந்து சரிசெய்யப்பட்டது. ஆனால் குட்டையன் மட்டும் கிளி வரும் போது "ஹலோ கபாஸ்கர்..." என்று சத்தமாக கூப்பிட்டு கலாய்ப்பான்.

ஒருநாள் கிளி அவள் மாமியுடன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தது. நாங்கள் வழக்கமாக விளையாடும் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். குட்டையன் தான் பேட்டிங்.

"டேய் கபாஸ்கர்..ஒரிஜினல் கவாஸ்கர் எப்பிடி விளையாடுவார்ன்னு இப்போ காட்டறேன் பார்துக்கோ...எல்லாரையும் பார்த்துக்கச் சொல்லு...டேய் மொக்கை கரெக்டா பாலைப் போடுறா"

குட்டையன் சரியான ஷாட் அடித்தான்...பந்து நேராக கிளியைக் குறி வைத்துப் பறந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கிளியின் டிக்கியில் பதம் பார்த்துவிட்டது. நான் ஃபீல்டிங்கில் இருந்ததால் நான் தான் பந்தைப் பொறுக்கப் போயிருந்தேன். கிளிக்கு கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது. கிளியின் மாமிக்கு அதற்குள் சாமியேறியிருந்தது.

"தெருவுல மனுஷா நடக்கமுடியல...என்ன க்ரிக்கெட்டோ கருமாந்திரமோ...க்ரவுண்டுக்குப் போங்கடான்னு அடிச்சிக்கறோம்...கேட்டாத்தானே...எல்லாம் வானரக் கூட்டமான்னா இருக்கு...யாருடா பந்த அடிச்சது"

இன்னொரு தீவிரவாதி மாமியும் சேர்ந்து கொண்டார். "வயசுப் பொண்ணு வராளேன்னு..குறி பார்த்து அடிச்சிருப்பான்கள்...பையன்கள் மாதிரியா நடந்துக்கறா...எல்லாம் பிசாசுகள்"

கிளிக்கு அடி பட்ட இடத்தில் தேய்த்து விட்டுக்க கூட முடிய்வில்லை. வெட்கமாயிருந்தது.

"மாமி நான் அடிக்கல மாமி...நான் பீல்டிங் தான்...அவன் தான்..." - எங்கே அடிச்ச மறுநிமிடமே இடமே காலியாயிருந்தது. தெரு கிரிக்கெட் விதிமுறைகளின் தலையாய கோட்பாடே இது தான். ஆள் மேல் பட்டுவிட்டால் மறுநிமிடமே எஸ்.வீ.சேகர் ட்ராமாவில் வருவது மாதிரி மறைந்துவிட வேண்டும். விட்டிருந்தார்கள். நான் தான் பேக்கு மாதிரி மாமி சாமி என்று நின்று கொண்டிருந்தேன்.

"ஸாரி மாமி நான் பார்க்கல...இனிமே இப்பிடி..."

"நான் தான் பார்த்தேனே...கல்யாணி மாமி புள்ள தானே...கல்யாணி வரட்டும் நாங்க சொல்லி இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டறோம்...நீ உன் ஜோலியப் பார்த்துண்டு போடா.." - தீவிரவாதி மாமி கண்கொத்திப் பாம்பாய் பார்த்து வைத்திருந்தாள்.

நல்ல வேளை என் தலை தப்பியது. பந்தைக் கேட்டால் பல்லை உடைத்துவிடுவார்களோ என்று அப்பிடியே ஓடிவிட்டேன். அடுத்த நாள் கிளியை பார்த்து மன்னிப்பு கேட்கலாமென்று போன போது...குட்டையன் என்க்கு முன்னால் ஆஜராகியிருந்தான். என்னமோ சிரித்து சிரித்துப் பசப்பிக் கொண்டிருந்தான். நான் பார்க்கிறேன் என்று ஓவராய் பல்லைக் காட்டிக்கொண்டிருந்தான். அவன் போனதுககப்புறம் நான் பேசினேன். பொதுவாக கால் வலி எப்படி இருக்கென்று விசாரித்தேன். அன்று கிளி வழக்கம்போல் பேசவில்லையோ என்று தோன்றியது. குட்டையன் குட்டையக் கலக்கியிருப்பான் என்று சந்தேகமாக இருந்தது.

"பார்தீல்ல...எப்பிடி சிரிச்சு சிரிச்சு பேசின்னேன்னு...." குட்டையன் சாயங்காலம் கெக்கலித்தான்.

"அவளுக்கு நான் விளையாடற ஸ்டையில் பிடிச்சிருக்காம்...நான் விவியன் ரிச்சர்ட்ஸ் மாதிரி விளையாடறேனாம்...அதனால எனக்கு விவ் ரிச்சர்ட்ஸ்ன்னு பெயர் வைச்சிருக்காளாம்"

"இந்த விஷயம் கிளிக்குத் தெரியுமா?"

"தோடா இவரு மட்டும் கபாஸ்கராம் நாம நம்பனுமாம்...ஆனா இவரு மாட்டாராம்"

அப்புறம் கபில் தேவ், ஸ்ரிகாந், அம்ர்நாத், வால்ஷ் என்று நிறைய பேர் வந்தார்கள். போட்டியும் பலமாக இருந்தது. இரண்டு மாதங்கள் போனதே தெரியவில்லை...அப்புறம் கிளிக்கு ரெக்கை முளைச்சிடுத்து..கிளி கூண்டவிட்டு பறந்து போயிடுத்து...!

--இன்னும் ஜொள்ளுவேன்




Use this Comments(#)

Thursday, August 25, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...3

For previous Parts -- >Part 1      Part 2

விடலைப் பருவம். டீனேஜ் பெண்களைப் போல் ஆண்களுக்கும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும். சிலபேருக்கு தொண்டையில் கோலிக்காய் மாதிரி வந்து குடுகுடுப்பைக்காரன் மாதிரி குரல் உடையும். அதுவரை பரட்டையாய் விட்டிருந்த தலைமுடி மேல் திடீர் அக்கறை வரும். ஸ்டைல் என்று நிறைய கோணாங்கித்தனங்கள் தலைவிரித்தாடும். மீசை வளரவில்லையே தாடி வளரவில்லையே என்று கவலை அரித்துப் பிடுங்கும். சும்மவாச்சும் ஷேவ் செய்து வளர்க்கப் பாடாய்படும். கொஞ்சம் ஆர்ம்ஸ் காட்டினால் தான் நாலுபேர் பார்ப்பார்கள் என்று தோன்றும். வெய்யிலில் அலைந்து கருத்துப் போனால் ஒருத்தருக்கும் தெரியாமல் ஃபேர் அன்ட் லவ்லி பயன்படுத்தி காம்ப்ளெக்க்ஷன் ஏத்த தூண்டும். கடையில் இருக்கும் அத்தனை ஜீன்ஸும் டி.ஷர்ட்டும் நம்மிடம் இருக்கவேண்டும் என்று தோன்றும். ஊரில் உள்ள அத்தனை வயசுப் பொண்ணுகளும் நம்மையே பார்க்கிறார்கள் என்று அடித்துக் கொள்ளும். எப்போ எப்பிடி பந்தா பண்ணலாம் என்று ப்ளான் பண்ணும். ஜிகிடி பக்கத்திலிருந்தால் எம்.ஜி.யார் மாதிரி குழந்தைகளையெல்லாம் கொஞ்சத் தோன்றும். சமூக சேவைகள் செய்யத் தோன்றும். மனதில் வித விதமான டூயட் பாடும். தனியே உட்கார்ந்து கற்பனை செய்து வாய் விட்டு சிரித்து மாட்டிக் கொள்ள வைக்கும். மொத்தத்தில் சுகமான இம்சையாக இருக்கும்.

எனக்கும் இருந்தது. இந்த இம்சையின் போது தான் பக்கத்துவீட்டுக்குப் புதிதாய் ஒரு கிளி வந்தது. கிளிக்கு பதினாறு பதினேழு வயதிருக்கும். ஸம்மர் ஹாலிடேஸுக்கு வந்திருந்தது. கிளி பெங்களூரிலிருந்து வந்திருந்தது. அன்று பெங்களூரைப் பற்றி ஏற்பட்ட நல்லெண்ணம் இன்று வரை மாறவேஇல்லை. இன்னும் ஒருதரம்கூட போகவில்லையே என்று வருத்தம் தான் மேலோங்கி இருக்கிறது.

"கோந்தே...சைக்கிள் பம்ப் வேணுமாம்..பக்கத்தாத்து மாமா கேட்டாராம் எடுத்துக் குடு"

கிளி தான் வாங்கிப் போக வந்திருந்தது. அது தான் முதல் சந்திப்பு.

"மாமி இனிமே என்ன கோந்தேன்னு கூப்பிடாதே"

"ஏன் பெரிய மனுஷனாயிட்டயோ...ரோஷத்தப் பார்"

"இல்ல அவ அப்புறம் சிரிப்பா.."

"யாரு அனுவா..அதெல்லாம் சிரிக்கமாட்டா...ரொம்ப நல்ல பொண்னுனா அவள்"

கிளி பேர் அனு என்று தெரிந்தது. ஆனாலும் பேசவில்லை. பசங்களுக்கு நான் தான் பெயர் தகவல் சொன்னேன். ஹார்லிக்ஸ் குடித்த மாதிரி எல்லோர் வாழ்விலும் உற்சாகம் வந்தது. கிரிக்கட் ஸ்டெம்ப் தற்போது நடும் இடத்தில் மேடு பள்ளமாக இருப்பதாகவும், இது விளையாட்டுத் தரத்திற்கு நல்லதல்ல என்று முடிவெடுக்கப்பட்டு பெங்களூர் கிளிவீட்டுப் பக்கத்திற்கு இடம் மாற்றப்பட்டது. விளையாட்டின் தரமும் உயர்ந்தது. கிளியின் கடைக்கண் கதாட்சத்துக்காக விழுந்து விழுந்து பையன்கள் பவுலிங் போடுவார்கள். "ஹௌவ்விஸ்தாட்..." நல்ல காதில் விழும் படியாக தெம்பாக அவுட் கேட்பார்கள்.

அதோடு பையன்களுக்கு விளையாடும் போது அடிக்கடி தாகம் எடுக்கும். கிளிவீட்டில் தாகசாந்தி நடக்கும். எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான். கிளியின் மாமிக்கு அவ்வளவு பொறுமை கிடையாது.

"எல்லார் ஆமும் பக்கத்துலதானே இருக்கு..எல்லாரும் அவா அவா ஆத்துக்குப் போய் குடிச்சுக்கோங்கோடா. அதோட இனிமே எங்காத்து வாசல்ல இந்த கிரிகெட்டு குச்சியை நடறத நிப்பாட்டுங்கோ...கோலம் போடற வாசல நாசமாக்கிண்டு....இனிமே நட்டேள் அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன் ஆமா" - ஒரே நாளில் கிளியின் மாமி மங்களம் பாடிவிட்டார்.

"டேய் அவங்க வீட்டுல தானே நடக்கூடாது...எதிர்த்தாப்புல இருக்கற மண்டபத்து வாசல்ல நடுவோம்டா...அப்போ காளியாத்தா என்ன சொல்லறான்னு பார்ப்போம்"

"டேய் அதுக்காக காளியாத்தான்னுலாம் சொல்லாதடா..."

"தோடா..நல்லவனப் பாருங்கடா...டேய் நீ புதுசா கிளி வந்திருக்குன்னு தனியாவர்தனம் வாசிக்காதடா...நல்லதுக்கில்ல...எனக்கில்லாட்டாலும் பரவால்ல நேர போய் உன் மேட்டர புட்டுப் புட்டு வைச்சிறுவேன்...அப்புறம் கிளிக்கு ரெக்க முளச்சிடும் கிளி கூட்டவிட்டு பறந்ந்ந்ந்து போயிடும்..நீயே முடிவு பண்ணிக்கோ"

குடும்பமாயிருந்த கூட்டத்தில் கலகமேற்பட்டது. அப்புறம் நாட்டமை பண்ணி "ஜோ ஜீத்தா வோ ஹீ சிக்கந்தர்" (வெற்றி பெறுபவனே வீரன்) மற்றவரெல்லாம் பல்வீந்தர் என்று முடிவு செய்யப்பட்டது. அப்புறம் எல்லாரும் தனித் தனியாக வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரத்தை ஆரம்பித்தார்கள்.

திறமை காட்டும் படலத்தில் அடித்த கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒன்றரையனா சைக்கிளை ஸ்டையிலாய் ஓட்டுவது, ராத்திரி மீட்டிங்கில் மைக் மோகன் மாதிரி பாடுவது, க்ரிகெட்டில் கோல் போடுவதன்று வகை தொகையில்லாமல் திறமையைக் காட்டினார்கள் பையன்கள்.

தெருவில் எதற்கும் உதவுமென்று கொஞ்சம் நல்ல பையன் பெயரெடுத்து வைத்திருந்தேன். மிருதங்கம் வாசிப்பது, சின்னக் குழந்தைகளுடன் அன்பாகப் பழகி உதவுவது, பெரியவர்களுக்கு மரியாதை குடுப்பது மாதிரி நடிப்பது என்று பொறுப்பான சிட்டிஸனாக வாழ்ந்து வந்ததால் நிறைய குழந்தைகளும் மாமிகளும் எனக்குப் பழக்கம்.

அதில் இரண்டு குழந்தைகள் பெங்களூர்க் கிளிக்கு செல்லமானார்கள். ரொம்ப வசதியாய் போனது. வாண்டுகள் கிளியோடு இருக்கும் போது கண்டுக்காமல் செல்வேன். அவர்களும் நான் கண்டுக்காமல் போவதைப் பார்த்து கூப்பிடுவார்கள். நானும் சந்தடி சாக்கில் பராக்கிரமத்தைச் குழந்தைகளுக்குச் சொல்லுவதுபோல் ஒரு பிட்டைப் போடுவேன். இப்பிடி நான் நடத்திய மெகாசீரியல் ஒரு நாள் ஒர்க் அவுட்டானது. கண்டுக்காமல் போன என்னை கூப்பிட்டது குழந்தைகளல்ல...கிளி. ஆம் சும்மா போய் கொண்டிருந்த என்னை கூப்பிட்டது கிளி!


--இன்னும் ஜொள்ளுவேன்




Use this Comments(#)

Tuesday, August 23, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...2

For previous Parts -- >Part 1

கிட்டப்பா...சற்றே குள்ளம். சற்று சிவப்பான தேகம். ஒல்லியுமில்லாமல் குண்டுமில்லாமல் உடல்வாகு. குரல் தான் கொஞசம் உடைந்து பெண்மை கலந்திருக்கும். காலேஜில் முதன் முதலில் அவனைப் பார்த்த போது பரம சாது என்று தான் தோன்றியது. ஆனால் கொஞ்சம் பிடிவாதம். எல்லோருக்கும் தான் பிடித்த முயலுக்கு மூனு கால் என்றால் இவனுக்குத் தான் பிடித்த முயலுக்கு மட்டும் தான் நாலு கால். சில சமயம் அவன் வாதம் செய்ய ஆரம்பித்தாலே போதும் பையன்கள் பிடித்து அமுக்கி உட்காரவைத்துவிடுவார்கள். ஆனாலும் ஆபத்தானவன் அல்ல. "ஜீன்ஸ்" படத்தில் ப்ரஷாந்த் ரோலில் நடிப்பதை விட லெக்ஷ்மீ காரெக்டரில் நடித்தால் ஐஷ்வர்யாராயுடன் இன்னும் கொஞ்சம் அன்யோன்யமாக நடிக்கலாமே என்று நினைக்கும் அல்ப சந்தோஷி.

இங்கே எங்கள் கல்லூரியைப் பற்றி சொல்லிவிட வேண்டும். ஆரம்பித்த காலத்திலிருந்து பெண்கள் வாடையே மருந்த்துக்குக் கூடப் படாத பாரம்பரியம் வாய்ந்த பிரம்மச்சாரி ஆண்கள் கல்லூரி. எனக்குப் பெண்கள் வாடையே பிடிக்காதென்று (?!) எப்பிடியோ தெரிந்து கொண்டு நாங்கள் சேர்ந்த வருஷத்திலிருந்து பெண்களையும் சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். இரண்டாம் வருடம் மூன்றாவது வருடமெல்லாம் ஆண்கள் மட்டும் தான் . எங்கள் க்ளாஸில் மட்டும் பெண்கள். சீனியர்கள் எல்லாரும் உரிமையோடு க்ளாசுக்கு வந்து அக்கறையாகப் பேசுவார்கள்.
"டேய் ஒழுங்கா படிக்கனும். அப்போ தான் முன்னேற முடியும் என்ன டவுட் இருந்தாலும் வந்து கேளு. நோட்ஸ் குடுக்கறேன்...பார்த்துப் படிச்சுக்கோ என்ன...ஆமா அந்த பச்சை கலர் பேர் என்ன..?

கிட்டப்பாவும் ஒழுங்காய் தான் இருந்தான் எங்களை மாதிரி முதல் கொஞ்ச நாள். பெண்கள் பக்கமே திரும்ப மாட்டான். அப்புறம் மெதுவாக தலையெடுக்க ஆரம்பித்தான். க்ளாசுக்கு ப்ரொபசர் வருவதற்கு லேட்டானால் சும்மா இருக்கமாட்டான். குடுகுடுவென ஓடிப்போய் என்ன ஏதென்று விபரம் கேட்டு வருவான். பொறுப்பாக காத்திருக்கும் ஜிகிடிகளுக்குப் பொறுமையாக விளக்கம் சொல்லுவான். முதலில் சமூக சேவைதான் செய்கிறான் என்று நினைத்தோம். ஆனால் நாளுக்கு நாள் சேவைகள் அதிகமாகி பாரத ரத்னா வாங்குமளவுக்கு முன்னேறியது. ஒழுங்காக நோட்ஸ் எடுத்து, அவதிப் படும் அம்மணிகளுக்கு குடுத்து உதவுவது, ஜெராக்ஸ் காப்பி எடுப்பது...ப்ரொபஸர் வராவிட்டாலும் வேறுயாரையாவது கூட்டி வந்து க்ளாஸ் எடுக்கச் சொல்லி நல்ல பிள்ளையாக நடிப்பது இன்ன பிற என்று நடமாடும் சேவா சங்கமாக மாறினான். கேட்டால் "சின்னத் தம்பி" பிரபு மாதிரி ஒன்னுமே தெரியாத மாதிரி முழிப்பான். வட்டாரத்தில் ஜிகிடி வாடை அடித்தால் போதும்...உடைந்த குரலில் அட்வைஸ் பண்ண ஆரம்பித்துவிடுவான்.

அப்புறம் பையன்கள் வேறுமாதிரி விளையாட ஆரம்பித்தார்கள்.
"என்ன கிட்டப்பா..இன்னிக்கு உங்காளு பயங்கர இம்ப்ரெஸ் போல அசத்திட்ட போ!" - சும்மா தூண்டில் போட்டா விக்கோ வஜுர்தந்தி க்ரீம் மணப்பெண் போல் ரொம்பவும் வெட்கப்படுவான். பையன்களுக்கு சந்தேகம் வலுத்தது.

"பையன் ப்ளாட்டுடா... ஆனா யாருன்னு தான் தெரியல யாராவது ஒருத்தருக்கு சேவை செஞ்சா பரவால்ல கண்டுபிடிச்சுடலாம் ஆனா இவன் எல்லாரையும் மேய்கிறானே...அடிக்கடி டைம் கேட்பானே அவளா இருக்குமோ " - பையன்கள் தலையைப் பிய்த்துக் கொண்டார்கள். கிட்டப்பா திறமையாக விளையாடினான். கண்டுபிடிக்கமுடியவிலை.

அப்போது தான் கல்லூரியில் எலெக்க்ஷன் வந்தது. சேர்மன், செகரட்டரி, கமிட்டி மெம்பர்கள் தேர்ந்தெடுப்பதற்கான எலெக்ஷன். இது போக யாரையாவது க்ளாஸ் ரெப்பாக போடுவார்கள். பொதுவாக ஹாஸ்டல் பையன் யாரவது தான் பெயர் கொடுப்பார்கள். எங்கள் வகுப்பிலும் ஒரு நண்பனின் பெயரைக் குடுத்திருந்தார்கள். ஆனால் மரத்தடி மீட்டிங்கில் சதித்திட்டம் தீட்டி கிட்டப்பாவையும் கோதவாவில் இறக்கத் தீர்மானித்தார்கள். இதற்காக ஸ்பெஷல் ஸ்டியரிங் கமிட்டி வேறு உருவானது.

"கிட்டப்பா...நீ நில்லுடா..உன்ன அடிச்சுக்க ஆளே இல்ல...நீ தான்டா இதுக்கு சரியான ஆள்..."

"டேய் கேர்ல்ஸ் சப்போர்ட் புல்லா உனக்குத் தான்...நீ தான் எலெக்க்ஷனில் நிக்கனும்டா...உனக்காக உயிரையே குடுப்பேன்டா"

"டேய் நீ எலக்க்ஷன்ல நிக்கலயேன்னு உங்காளுக்கு வருத்தம்டா...அவ கண்னுல சோகம் தெரியுதுடா..இதுக்காவாவது நீ நிக்கனும்டா..."

ம்ஹூம்....கிட்டப்பா மசியவே இல்லை. அடுத்த நாள் "வோட் ஃபார் " என்று அவன் பெயரை எல்லா ஜிகிடிகளின் டெஸ்கிலும் எழுதி வைத்தார்கள்...

"கிட்டப்பா நீங்க எலெக்க்ஷனில் நிக்கீறீங்களா..?" - ஒரு ஜிகிடி வாய்விட்டு வாஞ்சையோடு கேட்டுவிட்டது.

அவ்வளவு தான் கிட்டப்பாவிற்குள் தூங்கிக் கொண்டிருந்த மிருகம் முழித்துக் கொண்டுவிட்டது. அரைகுறையாக முழித்துக் கொண்டிருந்தவனை ஸ்டியரிங் கமிட்டி வேப்பிலை அடித்து ஒரு வழியாக சம்மதிக்க வைத்தது. கெடு நேரத்துக்கு முன்னாடி நல்லவர்கள் படை சூழ சென்று பெயரையும் குடுத்தான்.

இரண்டு பேர் க்ளாஸ் ரெப்புக்கு பெயர் குடுத்திருந்ததால் அதற்கும் எலெக்ஷன் என்று ஆபிஸில் முடிவு செய்தார்கள்.

"டேய் ஏண்டா இப்பிடி காலெஜ் மானதத வாங்குறீங்க? க்ளாஸ் ரெப் போஸ்டெயெல்லாம் ஏன்டா எலெக்க்ஷன் வரைக்கும் கொண்டு வர்றீங்க வெட்கமாயில்ல உங்களுக்கு? தூ...?" சீனியர்களெல்லாம் தேடி வந்து வாழ்த்திவிட்டு போனார்கள். கெடு முடிந்துவிட்டதால் யாரும் வாபஸ் பெற முடியாத நிலை.

மொத்த காலேஜும் வாயையும் அதையும் பொத்திக் கொண்டு சிரித்தது. ஆனாலும் நாங்கள் அடங்கவில்லை. கிட்டப்பாவின் தேர்தல் விளம்பரங்களுக்கு ஸ்டியரிங் கமிட்டி பொறுப்பெடுத்துக் கொண்டு வேலை செய்தது.

க்ளாஸ் இரண்டாக பிரிந்தது. கிட்டப்பாவிற்கு ஓட்டு கேட்பதாக சொல்லிக் கொண்டு கடலை போட்ட பார்டிகளில் அடியேனும் உண்டு. கிட்டப்பாவின் தேர்தல் விளம்பரங்கள் சேர்மன் போஸ்ட் விளம்பரங்களைத் தூக்கி சாப்பிட்டது.

"டேய் உங்க கொசுக்கடி தாங்க முடியலைடா..க்ளாஸ் ரெப் போஸ்டுக்கெல்லாம் ஒரு எலெக்ஷன் இந்த அலம்பல் ..இதெல்லாம் ரொம்ப ஓவர்டா " - சீனியர்கள் புலம்ப ஆரம்பித்தார்கள்.

கிட்டப்பாவின் சேவைகள் பாரத ரத்னாவிலிந்து நோபல் லெவலுக்கு தாவின. யாருமில்லா சமயம், சட்டையில் எலியைப் பிடித்து விட்ட மாதிரி நெளிந்து கொண்டே ஜிகிடிகளிடம் கடலை போடுவான்.

"டேய் இது உனக்கே நியாமாக இருக்கா? யாருன்னு சொன்னா...அண்ணிய தெரிஞ்சுப்போம்ல்.."

ம்ஹூம்..."பாட்டு கேட்டேன் ஓட்டு கேட்டேன்னு " ரெடியா பதில் வைத்திருப்பான். ஆனால் கடலை மட்டும் வழக்கம் போல மானாவாரியாக சாகுபடி ஆகிக்கொண்டே இருக்கும்.

தேர்தல் நெருங்க நெருங்க எல்லாரும் நமுட்டுச் சிரிப்பு சிரிக்க ஆரம்பித்தார்கள். தேர்தல் நடந்து முடிவும் வெளியானது....நல்லவர்கள் புத்தியை காட்டி இருந்தார்கள். கிட்டப்பாவிற்கு மொத்தம் ஏழு வோட்டுக்கள் தான். பெரும் தோல்வி.

கணக்கெடுத்ததில் ஏழுமே ஆண்கள் பக்கதிலிருந்து என்னையும் சேர்த்து. கிட்டப்பாவிடம் ஆறுக்கு மட்டும் கணக்கு சொன்னோம். மீதி ஒன்று அவன் ஆளாகத் தான் இருக்குமென்று ஐய்யோ பாவம் நம்பினான். அவனுக்கு அது மட்டுமே ஆறுதலாக இருந்தது. அந்த நம்பிக்கையிலேயே மிதி வருடங்களிலும் கிட்டப்பா சேவா சமாஜ் தனது சேவைகளைத் தொடர்ந்தது.

--இன்னும் ஜொள்ளுவேன்

Friday, August 19, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...1

ஜொள்ள ஜொள்ள இனிக்குதைய்யா

விடலைப் பருவத்திற்கு "ஜொள்ளுவதோ இளமை" என்று பெரியோர்கள் அருளியிருக்கிறார்கள். அடியேனும் அதற்கு அப்பாற்பட்டவன் அல்ல. இங்கே ஜொள்ளுக்கு விளக்கம் குடுத்துவிடுவது நலம் பயக்கும்.

குணா கமல் மாதிரி லூஸாக அலைவது, இதயம் முரளி மாதிரி உருகி உருகி ஓடாய் தேய்வது,கல்யாணம் நிச்சயமான பெண்ணை ரூட்டு விடுவது, அதிமுக உறுப்பினர் மாதிரி நாக்கை அறுத்துக் கொள்வது எல்லாம் மோகத்திலே மூன்றாம் நிலை...காதலாகி கசிந்துருகி வகையாறா. சக்ஸஸ் என்றால் "சகியே..." என்று பாட்டுப் பாடி விட்டு சண்டை போட்டுக் கொள்ளலாம். தோல்வி என்றால் "ஆடிக்குப் பின்னால் ஆவணி..என் தாடிக்குப் பின்னால் ஒரு தாவணி " என்று பத்திரிக்கையில் குருவாச்சிக் காவியம் எழுதலாம். முடியாவிட்டால் ஒரு ப்ளாக் ஆரம்பித்து மானே தேனே போட்டு ஃபீலிங்காய் கவிதை எழுதினால் நாலு பேர் வந்து காறித் துப்பிவிட்டுப் போவதற்கு எதுவாக இருக்கும். ஒரு வேளை லூஸாகிவிட்டால் கதையை உல்டா பண்ணி சினிமாவில் போட்டு அவர்கள் காசு பாத்துவிட்டு கடைசியில் சின்னதாக உங்கள் பெயரையோ, உங்கள் காதலியின் ஆத்துக்காரரின் பெயரையோ நன்றியோடு போடுவார்கள்.

கூட்டமான இடங்களில் கார்த்திகை மாசத்து நாய் மாதிரி ஊளையிடுவது உரசித் தள்ளுவது போன்றவை காம வைகையாறா. இவர்களையெல்லம் கும்பீபாகம் படித்துவிட்டு ஜடை முடிந்து விக்ரம் எருமைமாட்டு மேல் வந்து கவனித்துக் கொள்வார். இல்லாவிட்டால் பிரதி மாதம் கரூர் - 10ம் தேதி, சேலம் - 15ம் தேதி, சென்னை 18- 22 லாட்ஜில் ரூம் போட்டு ஐந்து தலைமுறையாக சொப்ன லிகிதம் போன்ற வியாதிகளுக்கு வைத்தியம் பார்க்கும் சித்த சம்பூஷணம் கைராசி டாக்டர் முருகேசன் பார்த்துக் கொள்வார்.

நான் சொல்லும் ஜொள்ளு எனப்படுவது யாதெனின், அகலாது அனுகாது, மனதைப் புண்படுத்தாமல், அப்புறம் நினைத்துப் பார்க்கும் போது உதட்டின் ஓரத்திலோ, மனதின் ஓரத்திலோ சம்பந்தப்பட்ட பெண்மணி உட்பட எல்லாருக்குமே ஒரு புன்முறுவல் வரவைக்குமே...அது..அந்த குறும்பு, சேட்டை, ஃபீலீங்...அதே தான். இந்த சேட்டை சில நேரங்களில் காதலாக டெவலப் ஆகி சில அபாக்யவான்களுக்கு கல்யாணத்தில் முடிந்திருக்கிறது.

நான் சொல்ல நினைத்திருக்கும் இந்த சேட்டைகள் என்னுடையதும், என்னைச் சேர்ந்த வானரப் படை செய்தவையும். அஸ்வினி ஆயில் விளம்பரம் மாதிரி பெயர் விலாசம் போடாவிட்டாலும், சம்பந்தபட்டவர்களின் அடையாளங்களைப் பற்றி சின்ன க்ளு குடுத்தாலும் லண்டனுக்கு ஆட்டோ அனுப்பி ஊருக்கு கூட்டி வந்து மரியாதை செய்வதற்கு க்யாரண்டி இருப்பதால், அவற்றைத் தவிர்த்துவிடுகிறேன்.

மற்றபடி வாரம் ஒரு வானரம்...என்று ஜொள்ளலாமென்று இருக்கிறேன்.

--இன்னும் ஜொள்ளுவேன்

அன்புள்ள ஆத்துக்காரிக்கு - தலைப்பு கடந்த காலத்தில் ஒலிப்பது பற்றி உனக்கு ஆட்சேபணை இருக்கலாம் (இப்ப மட்டும் என்ன வாழுதாம்?). ஜொள்ளு விட்டதை நானும் "ஆட்டோகிராஃப்", "போட்டோகிராஃப்" என்று ஜல்லியடிக்கலாம் என்று தான் நினைத்தேன். எதுக்கு என்று தான் தான் இப்பிடி... இதை நாம் அடுத்தமுறை இந்தியா போகும் போது நல்லி குப்புசாமி செட்டியார் கடையிலோ, ஜி.ஆர்.டி தங்கமாளிகயிலோ பேசித் தீர்த்துக்கொள்ளலாம்.

Wednesday, August 17, 2005

லண்டனில் Bloggers Meet

ரொம்ப நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்று ஒருவழியாக சக்ரா புண்ணியத்தில் நடக்கப் போகிறது. மேலும் விபரங்களுக்கு சக்ராவின் பதிவில் பார்க்கவும். இதுவரை "உள்ளேன் ஐயா" சொல்லியிருப்பவர்களில் யாரையும் பழக்கமில்லை. (எல்லாரும் பீட்டர் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் போல தெரிகிறது) உங்களுக்கு சௌகரியப்படுமானால் வாருங்கள், சந்திக்க ஆவலாய் இருக்கிறேன். அதோடு ஒரு வார்த்தை சக்ராவிற்கு தெரிவியுங்கள். (தொடர்பு கொள்ள முடியாவிட்டால் எனக்கு ஒரு வரி எழுதுங்கள் ப்ராக்ஸி கொடுத்துவிடுகிறேன்).

Sunday, August 14, 2005

நக்கீரா..!

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பெரும்பாலானோர் இந்த பிரச்சனையை சந்தித்து இருப்பார்கள் நினைக்கிறேன். வெளிநாட்டவருடன் கூட்டமாக அரட்டை அடிக்கும் போது அடிக்கடி பேசப்படும் ஒரு டாபிக் சுற்றுலா, மற்றும் நாடுகளைப் பற்றி. அவரவர் சென்று வந்த நாடுகளைப் பற்றி அளந்து விட்டுக் கொண்டிருப்பார்கள். சிலர் அங்குள்ள குறை நிறைகளைப் பிரித்து மேய்வார்கள். நான் பழகிய வெள்ளைக்காரர்கள் பெரும்பாலானோர் பண்பானவர்கள். குறைகளைப் பற்றிப் பேசும் போது அந்த நாட்டுக்காரர்கள் மனம் புண்படாத படி அழகாக கூறுவார்கள். ஆனால் சில பேர்களுக்கு
அடுத்தவர்களுக்கு எரிச்சல் வராமல் பேசுவது என்பது சுட்டுப் போட்டாலும் வராது. கடந்த வாரம் முழுவதும் டெக்னிகல் ட்ரையினிங்காக ஒரு இடத்துக்குப் போயிருந்தேன். பல்வேறு நாடுகளிலிருந்து நிறைய பேர் வந்திருந்தார்கள். ஐரோப்பாவிலிருந்த ஒரு நாட்டிலிருந்து (டச் என்று நினைக்கிறேன்) ஒரு ப்ரகஸ்பதி சகஜமாக பேச அரம்பித்தார். எங்களுடன் இன்னொரு நாட்டுக்காரரும் சேர்ந்து கொண்டார். அவர் ஆலுவலகத்தில் இருந்த சாப்ட்வேர் வேலையை இந்தியாவிற்கு மாற்றிவிட்டதாகவும் இந்தியாவிலிருந்து அந்த வேலையை எடுத்துக் கொள்ள வந்தவர்கள் மக்கு ப்ளாஸ்திரிகளாக இருந்தார்களென்றும் இவர் தான் அவர்களுக்கு "அ"ன்னா ஆவன்னா சொல்லிக் கொடுத்த மாதிரியும் எடுத்த எடுப்பிலேயே புகழாரம் சூட்ட ஆரம்பித்தார். இதே பாணியில் அவர் பேசிக்கொண்டு போகவே கூட இருந்த இன்னொரு நண்பர் அவர்களுக்கு ஒருவேளை இவர் பேசிய ஆக்ஸென்ட் புரிந்திருக்காதென்று அதனால் வந்த பிரச்சனையாக கூட இருக்கலாமென்று ஸ்பீட் பிரேக்கர் போட்டார். நக்கீரர் மேலும் தொடர்வதற்குள் இந்த நண்பர் தாம் பல்வேறு இந்தியர்களுடன் வேலை செய்திருப்பதாகவும் அவர்கள் எல்லாரும் மிகவும் புத்திசாலிகளாக இருந்ததாகவும் கூறினார். நக்கீரரால் மேலும் தொடரமுடியவில்லை. பேச்சு வேறு விஷயங்களுக்குப் போய்விட்டு ஊர்களைப் பற்றி திரும்பியது. நக்கீரர் தாம் அந்த சாப்ட்வேர் வேலையை ஒப்படைப்பதற்கு இந்தியாவில் மும்பைக்கு சென்றதாகவும் ஒரு சில இடங்களைத் தவிர மிச்ச இடங்களில் மிகவும் மோசமாக இருக்கிறதென்றும் மீண்டும் ஆரம்பித்தார். "யுவர் ஆனர்" என்று ஆரம்பித்து நானும் என் தரப்பு வாதங்களை வைதேன். நக்கீரர் முடிவோடு தான் வந்திருந்தார். குடி தண்ணீர் தரம் போன்றவற்றைக் காட்டி இந்தியாவில் நிறைய பேருக்கு அடிப்படை சுத்தம், சுகாதாரம் பற்றித் தெரியவில்லை என்று ஆணித்தரமாக முடித்தார். அவர் கூறிய சில விஷயங்களில் உண்மை இருந்தாலும் நோக்கம் என்னைச் சங்கடத்தில் ஆழ்த்துவது தான் என்பது தெரிந்தது. கூட இருந்த நண்பருக்கு அவர் பேசும் விதத்தால் சங்கடமாகப் போயிற்று. நானும் லெஷ்மி, ராதிகா, சிவாஜி போன்ற சினிமா வக்கீல்களை மனதில் பிரார்த்தனை செய்து கொண்டு பதில் வாதங்களை எடுத்து வைத்தேன். கடைசியாக ப்ரமாஸ்திரமாக அந்த கேள்வியைக் கேட்பதற்கு முன்னால் ட்ரெயினிங் ஆரம்பித்து வாதம் பாதியில் முடிந்து விட்டது. கடைசி நாள் ஆகையால் திரும்பவும் அவரை பிடித்து அந்த கேள்வியைக் கேட்கமுடியவில்லை.

ஆனால் கேள்வி இது தான்..

"ஆமாம் இம்புட்டு சுத்த பத்தத்தைப் பற்றி பேசுகிறீகளே...நீங்களெல்லாம் ஆய் போனால் மட்டும் அலம்பிக்காம பேப்பரால துடச்சுக்கறேளே..ஏன்..அதெல்லாம் இதில் சேர்த்தி இல்லையா?"

இதுல காமெடி என்னன்னா...(எங்கேயோ படிச்சது) ஒரு காலத்துல டாயிலெட் டிஸ்யூ தட்டுப்பாடு வந்த போதும் இவர்களெல்லாம் எல்லோ பேஜஸ், டெலிபோன் டரக்டரி பேப்பர்களை உபயோகப் படுத்தினார்களே ஒழிய தண்ணீர் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லையாம்.

கேள்வியை கேட்டிருந்தால் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். வேறு யாரிடமாவது சந்தர்ப்பம் கிடைக்கும் போது கேட்க வேண்டும்.