Thursday, August 25, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...3

For previous Parts -- >Part 1      Part 2

விடலைப் பருவம். டீனேஜ் பெண்களைப் போல் ஆண்களுக்கும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும். சிலபேருக்கு தொண்டையில் கோலிக்காய் மாதிரி வந்து குடுகுடுப்பைக்காரன் மாதிரி குரல் உடையும். அதுவரை பரட்டையாய் விட்டிருந்த தலைமுடி மேல் திடீர் அக்கறை வரும். ஸ்டைல் என்று நிறைய கோணாங்கித்தனங்கள் தலைவிரித்தாடும். மீசை வளரவில்லையே தாடி வளரவில்லையே என்று கவலை அரித்துப் பிடுங்கும். சும்மவாச்சும் ஷேவ் செய்து வளர்க்கப் பாடாய்படும். கொஞ்சம் ஆர்ம்ஸ் காட்டினால் தான் நாலுபேர் பார்ப்பார்கள் என்று தோன்றும். வெய்யிலில் அலைந்து கருத்துப் போனால் ஒருத்தருக்கும் தெரியாமல் ஃபேர் அன்ட் லவ்லி பயன்படுத்தி காம்ப்ளெக்க்ஷன் ஏத்த தூண்டும். கடையில் இருக்கும் அத்தனை ஜீன்ஸும் டி.ஷர்ட்டும் நம்மிடம் இருக்கவேண்டும் என்று தோன்றும். ஊரில் உள்ள அத்தனை வயசுப் பொண்ணுகளும் நம்மையே பார்க்கிறார்கள் என்று அடித்துக் கொள்ளும். எப்போ எப்பிடி பந்தா பண்ணலாம் என்று ப்ளான் பண்ணும். ஜிகிடி பக்கத்திலிருந்தால் எம்.ஜி.யார் மாதிரி குழந்தைகளையெல்லாம் கொஞ்சத் தோன்றும். சமூக சேவைகள் செய்யத் தோன்றும். மனதில் வித விதமான டூயட் பாடும். தனியே உட்கார்ந்து கற்பனை செய்து வாய் விட்டு சிரித்து மாட்டிக் கொள்ள வைக்கும். மொத்தத்தில் சுகமான இம்சையாக இருக்கும்.

எனக்கும் இருந்தது. இந்த இம்சையின் போது தான் பக்கத்துவீட்டுக்குப் புதிதாய் ஒரு கிளி வந்தது. கிளிக்கு பதினாறு பதினேழு வயதிருக்கும். ஸம்மர் ஹாலிடேஸுக்கு வந்திருந்தது. கிளி பெங்களூரிலிருந்து வந்திருந்தது. அன்று பெங்களூரைப் பற்றி ஏற்பட்ட நல்லெண்ணம் இன்று வரை மாறவேஇல்லை. இன்னும் ஒருதரம்கூட போகவில்லையே என்று வருத்தம் தான் மேலோங்கி இருக்கிறது.

"கோந்தே...சைக்கிள் பம்ப் வேணுமாம்..பக்கத்தாத்து மாமா கேட்டாராம் எடுத்துக் குடு"

கிளி தான் வாங்கிப் போக வந்திருந்தது. அது தான் முதல் சந்திப்பு.

"மாமி இனிமே என்ன கோந்தேன்னு கூப்பிடாதே"

"ஏன் பெரிய மனுஷனாயிட்டயோ...ரோஷத்தப் பார்"

"இல்ல அவ அப்புறம் சிரிப்பா.."

"யாரு அனுவா..அதெல்லாம் சிரிக்கமாட்டா...ரொம்ப நல்ல பொண்னுனா அவள்"

கிளி பேர் அனு என்று தெரிந்தது. ஆனாலும் பேசவில்லை. பசங்களுக்கு நான் தான் பெயர் தகவல் சொன்னேன். ஹார்லிக்ஸ் குடித்த மாதிரி எல்லோர் வாழ்விலும் உற்சாகம் வந்தது. கிரிக்கட் ஸ்டெம்ப் தற்போது நடும் இடத்தில் மேடு பள்ளமாக இருப்பதாகவும், இது விளையாட்டுத் தரத்திற்கு நல்லதல்ல என்று முடிவெடுக்கப்பட்டு பெங்களூர் கிளிவீட்டுப் பக்கத்திற்கு இடம் மாற்றப்பட்டது. விளையாட்டின் தரமும் உயர்ந்தது. கிளியின் கடைக்கண் கதாட்சத்துக்காக விழுந்து விழுந்து பையன்கள் பவுலிங் போடுவார்கள். "ஹௌவ்விஸ்தாட்..." நல்ல காதில் விழும் படியாக தெம்பாக அவுட் கேட்பார்கள்.

அதோடு பையன்களுக்கு விளையாடும் போது அடிக்கடி தாகம் எடுக்கும். கிளிவீட்டில் தாகசாந்தி நடக்கும். எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான். கிளியின் மாமிக்கு அவ்வளவு பொறுமை கிடையாது.

"எல்லார் ஆமும் பக்கத்துலதானே இருக்கு..எல்லாரும் அவா அவா ஆத்துக்குப் போய் குடிச்சுக்கோங்கோடா. அதோட இனிமே எங்காத்து வாசல்ல இந்த கிரிகெட்டு குச்சியை நடறத நிப்பாட்டுங்கோ...கோலம் போடற வாசல நாசமாக்கிண்டு....இனிமே நட்டேள் அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன் ஆமா" - ஒரே நாளில் கிளியின் மாமி மங்களம் பாடிவிட்டார்.

"டேய் அவங்க வீட்டுல தானே நடக்கூடாது...எதிர்த்தாப்புல இருக்கற மண்டபத்து வாசல்ல நடுவோம்டா...அப்போ காளியாத்தா என்ன சொல்லறான்னு பார்ப்போம்"

"டேய் அதுக்காக காளியாத்தான்னுலாம் சொல்லாதடா..."

"தோடா..நல்லவனப் பாருங்கடா...டேய் நீ புதுசா கிளி வந்திருக்குன்னு தனியாவர்தனம் வாசிக்காதடா...நல்லதுக்கில்ல...எனக்கில்லாட்டாலும் பரவால்ல நேர போய் உன் மேட்டர புட்டுப் புட்டு வைச்சிறுவேன்...அப்புறம் கிளிக்கு ரெக்க முளச்சிடும் கிளி கூட்டவிட்டு பறந்ந்ந்ந்து போயிடும்..நீயே முடிவு பண்ணிக்கோ"

குடும்பமாயிருந்த கூட்டத்தில் கலகமேற்பட்டது. அப்புறம் நாட்டமை பண்ணி "ஜோ ஜீத்தா வோ ஹீ சிக்கந்தர்" (வெற்றி பெறுபவனே வீரன்) மற்றவரெல்லாம் பல்வீந்தர் என்று முடிவு செய்யப்பட்டது. அப்புறம் எல்லாரும் தனித் தனியாக வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரத்தை ஆரம்பித்தார்கள்.

திறமை காட்டும் படலத்தில் அடித்த கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒன்றரையனா சைக்கிளை ஸ்டையிலாய் ஓட்டுவது, ராத்திரி மீட்டிங்கில் மைக் மோகன் மாதிரி பாடுவது, க்ரிகெட்டில் கோல் போடுவதன்று வகை தொகையில்லாமல் திறமையைக் காட்டினார்கள் பையன்கள்.

தெருவில் எதற்கும் உதவுமென்று கொஞ்சம் நல்ல பையன் பெயரெடுத்து வைத்திருந்தேன். மிருதங்கம் வாசிப்பது, சின்னக் குழந்தைகளுடன் அன்பாகப் பழகி உதவுவது, பெரியவர்களுக்கு மரியாதை குடுப்பது மாதிரி நடிப்பது என்று பொறுப்பான சிட்டிஸனாக வாழ்ந்து வந்ததால் நிறைய குழந்தைகளும் மாமிகளும் எனக்குப் பழக்கம்.

அதில் இரண்டு குழந்தைகள் பெங்களூர்க் கிளிக்கு செல்லமானார்கள். ரொம்ப வசதியாய் போனது. வாண்டுகள் கிளியோடு இருக்கும் போது கண்டுக்காமல் செல்வேன். அவர்களும் நான் கண்டுக்காமல் போவதைப் பார்த்து கூப்பிடுவார்கள். நானும் சந்தடி சாக்கில் பராக்கிரமத்தைச் குழந்தைகளுக்குச் சொல்லுவதுபோல் ஒரு பிட்டைப் போடுவேன். இப்பிடி நான் நடத்திய மெகாசீரியல் ஒரு நாள் ஒர்க் அவுட்டானது. கண்டுக்காமல் போன என்னை கூப்பிட்டது குழந்தைகளல்ல...கிளி. ஆம் சும்மா போய் கொண்டிருந்த என்னை கூப்பிட்டது கிளி!


--இன்னும் ஜொள்ளுவேன்




Use this Comments(#)

No comments:

Post a Comment

Related Posts