வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பெரும்பாலானோர் இந்த பிரச்சனையை சந்தித்து இருப்பார்கள் நினைக்கிறேன். வெளிநாட்டவருடன் கூட்டமாக அரட்டை அடிக்கும் போது அடிக்கடி பேசப்படும் ஒரு டாபிக் சுற்றுலா, மற்றும் நாடுகளைப் பற்றி. அவரவர் சென்று வந்த நாடுகளைப் பற்றி அளந்து விட்டுக் கொண்டிருப்பார்கள். சிலர் அங்குள்ள குறை நிறைகளைப் பிரித்து மேய்வார்கள். நான் பழகிய வெள்ளைக்காரர்கள் பெரும்பாலானோர் பண்பானவர்கள். குறைகளைப் பற்றிப் பேசும் போது அந்த நாட்டுக்காரர்கள் மனம் புண்படாத படி அழகாக கூறுவார்கள். ஆனால் சில பேர்களுக்கு
அடுத்தவர்களுக்கு எரிச்சல் வராமல் பேசுவது என்பது சுட்டுப் போட்டாலும் வராது. கடந்த வாரம் முழுவதும் டெக்னிகல் ட்ரையினிங்காக ஒரு இடத்துக்குப் போயிருந்தேன். பல்வேறு நாடுகளிலிருந்து நிறைய பேர் வந்திருந்தார்கள். ஐரோப்பாவிலிருந்த ஒரு நாட்டிலிருந்து (டச் என்று நினைக்கிறேன்) ஒரு ப்ரகஸ்பதி சகஜமாக பேச அரம்பித்தார். எங்களுடன் இன்னொரு நாட்டுக்காரரும் சேர்ந்து கொண்டார். அவர் ஆலுவலகத்தில் இருந்த சாப்ட்வேர் வேலையை இந்தியாவிற்கு மாற்றிவிட்டதாகவும் இந்தியாவிலிருந்து அந்த வேலையை எடுத்துக் கொள்ள வந்தவர்கள் மக்கு ப்ளாஸ்திரிகளாக இருந்தார்களென்றும் இவர் தான் அவர்களுக்கு "அ"ன்னா ஆவன்னா சொல்லிக் கொடுத்த மாதிரியும் எடுத்த எடுப்பிலேயே புகழாரம் சூட்ட ஆரம்பித்தார். இதே பாணியில் அவர் பேசிக்கொண்டு போகவே கூட இருந்த இன்னொரு நண்பர் அவர்களுக்கு ஒருவேளை இவர் பேசிய ஆக்ஸென்ட் புரிந்திருக்காதென்று அதனால் வந்த பிரச்சனையாக கூட இருக்கலாமென்று ஸ்பீட் பிரேக்கர் போட்டார். நக்கீரர் மேலும் தொடர்வதற்குள் இந்த நண்பர் தாம் பல்வேறு இந்தியர்களுடன் வேலை செய்திருப்பதாகவும் அவர்கள் எல்லாரும் மிகவும் புத்திசாலிகளாக இருந்ததாகவும் கூறினார். நக்கீரரால் மேலும் தொடரமுடியவில்லை. பேச்சு வேறு விஷயங்களுக்குப் போய்விட்டு ஊர்களைப் பற்றி திரும்பியது. நக்கீரர் தாம் அந்த சாப்ட்வேர் வேலையை ஒப்படைப்பதற்கு இந்தியாவில் மும்பைக்கு சென்றதாகவும் ஒரு சில இடங்களைத் தவிர மிச்ச இடங்களில் மிகவும் மோசமாக இருக்கிறதென்றும் மீண்டும் ஆரம்பித்தார். "யுவர் ஆனர்" என்று ஆரம்பித்து நானும் என் தரப்பு வாதங்களை வைதேன். நக்கீரர் முடிவோடு தான் வந்திருந்தார். குடி தண்ணீர் தரம் போன்றவற்றைக் காட்டி இந்தியாவில் நிறைய பேருக்கு அடிப்படை சுத்தம், சுகாதாரம் பற்றித் தெரியவில்லை என்று ஆணித்தரமாக முடித்தார். அவர் கூறிய சில விஷயங்களில் உண்மை இருந்தாலும் நோக்கம் என்னைச் சங்கடத்தில் ஆழ்த்துவது தான் என்பது தெரிந்தது. கூட இருந்த நண்பருக்கு அவர் பேசும் விதத்தால் சங்கடமாகப் போயிற்று. நானும் லெஷ்மி, ராதிகா, சிவாஜி போன்ற சினிமா வக்கீல்களை மனதில் பிரார்த்தனை செய்து கொண்டு பதில் வாதங்களை எடுத்து வைத்தேன். கடைசியாக ப்ரமாஸ்திரமாக அந்த கேள்வியைக் கேட்பதற்கு முன்னால் ட்ரெயினிங் ஆரம்பித்து வாதம் பாதியில் முடிந்து விட்டது. கடைசி நாள் ஆகையால் திரும்பவும் அவரை பிடித்து அந்த கேள்வியைக் கேட்கமுடியவில்லை.
ஆனால் கேள்வி இது தான்..
"ஆமாம் இம்புட்டு சுத்த பத்தத்தைப் பற்றி பேசுகிறீகளே...நீங்களெல்லாம் ஆய் போனால் மட்டும் அலம்பிக்காம பேப்பரால துடச்சுக்கறேளே..ஏன்..அதெல்லாம் இதில் சேர்த்தி இல்லையா?"
இதுல காமெடி என்னன்னா...(எங்கேயோ படிச்சது) ஒரு காலத்துல டாயிலெட் டிஸ்யூ தட்டுப்பாடு வந்த போதும் இவர்களெல்லாம் எல்லோ பேஜஸ், டெலிபோன் டரக்டரி பேப்பர்களை உபயோகப் படுத்தினார்களே ஒழிய தண்ணீர் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லையாம்.
கேள்வியை கேட்டிருந்தால் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். வேறு யாரிடமாவது சந்தர்ப்பம் கிடைக்கும் போது கேட்க வேண்டும்.
No comments:
Post a Comment