Sunday, March 21, 2010

த்வனி - மில்ட்டன் கீன்ஸ்

Update - நிகழ்சியில் முக்கிய மாற்றம்...விசா பிரச்சனைகளால் ரஞ்சனி காயத்ரிக்கு பதிலாக சஞ்சய் சுப்ரமண்யம் கச்சேரி மாற்றம். அத்தோடு ஜோத்ஸ்னா ஸ்ரீகாந் அவர்களின் கச்சேரியும் கூடுதலாக ஏற்பாடாகி இருக்கிறது. மேலும் விபரங்களுக்கு படத்தை க்ளிக்கவும்.
 
சில நிகழ்ச்சிகள் நடத்தும் அழகுக்கே பார்க்கப் போகலாம். மில்டன் கீன்ஸ் த்வனி நண்பர் குழு ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அழகாக நடத்திவருகிறார்கள் என்று கேள்வி. (போன முறை செல்ல முடியவில்லை). நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் அலாதியானது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். யூ.கேவில் இருக்கும் விருப்பமுள்ள நண்பர்கள் நண்மைக்காகவும்...இப்படியாவது அவர்களில் பி.ஆர்.ஓவாக ஒட்டிக் கொண்டு ஓசி டிக்கெட்டுக்கு அடியப் போடமுடியுமா என்ற முயற்ச்சிக்காகவும் பதிவிடுகிறேன். படத்தை க்ளிக்கினால் அவர்களின் நம்பர் கிட்டும். கிட்டாவிட்டால் திட்டாமல் நம்பள்கீ காண்டாக்ட் செய்றான், சேட் டிக்கெட்கீ ஏற்பாடு செய்யறான்..



Saturday, March 13, 2010

சுவாமிஜியும் மாமிஜியும் - திரை விமர்சனம்

திரைப்படங்களைப் பொறுத்த வரையில் சில படங்கள் பார்த்த மாத்திரத்திலேயே "என்ன படம் எடுத்திருக்காங்க வெங்காயம்"ன்னு காறித் துப்பத் தோன்றும், சில படங்கள் பார்த்தவுடனேயே மனதுக்கு பிடித்து "சூப்பரா எடுத்திருக்கான்பா"ன்னு மெச்சத் தோன்றும். இன்னும் சில படங்கள் பார்த்த அடுத்த அரை மணிநேரத்திற்கு எந்த வார்த்தையும் பேசத் தோன்றாது அதன் தாக்கத்தில் அப்படியே நம்மை வீழ்த்திவிடும்.

சமீபத்தில் சன்-நக்கீரன் கோ-டிஸ்ட்ரிபியூஷனில் வெளியாகி கலக்கோ கலகென்று கலக்கி கல்லாவிலும், சில பேர் மனதில் நெருப்பையும் அள்ளிக் கொட்டியிருக்கும் சுவாமிஜியும் மாமிஜியும் காவியம் இதில் மூன்றாம் வகை (அட்லீஸ்ட் என்வரையில் :) ). படத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் மீள வில்லை. படத்தில் கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. டெக்னிகல் எக்ஸலன்ஸ் என்று ஹாலிவுட் துரைமார்கள் நாக்கை சுழட்டி சொல்லும் தொழில் நுட்ப மேலான்மையும் அவ்வளவாக இல்ல, பெரிய செட்டு, ஆர்ட் என்று அதுவும் ரொம்ப இல்லை. முதலில் கொஞ்சம் அதிகமாக இருக்கும் காஸ்டியூம்ஸும் கூட போக போக துண்டக் காணும் துணியக் காணும் என்று குறைந்து அதுவும் அதிகமாக இல்லை - இப்படி எத்தனையோ இல்லை இல்லாமல் இருந்தாலும் படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை.

நியோரியலிஸம் ஜெனரில் நேச்சுரல் லைட்டிங் வகையாறாவில் படம் நெடுக படமாக்கப் பட்டிருக்கிறது. கேமிரா செவ்வன கடமையாற்றியிருக்கிறது. படமாக்கப்பட்ட விதம் சுமார் தான் என்றாலும் கேமிரா யுக்த்திகள் ஹாலிவுட் ரேஞ்சிற்க்கு இருப்பது பிரமிக்க வைக்கிறது. நடிகர்கள் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார்கள். அதுவும் சுவாமிஜி ஒருவிதமான கிறக்கமான சிரிப்பில் மாமிஜியை கொஞ்சும் போது அவருடைய நடிப்புத் திறமையில் பார்ப்பவர் நெஞ்சை கொள்ளை கொண்டு போகிறார். குறிப்பிட்டு ஒரு காட்சியை சொல்லவேண்டுமானால்...சுவாமிஜி கடமையாற்றுவதற்கு முன் "ஜிங்ங்" என்று காலை மேலே தூக்கி ஒரு குதி குதித்து எழும்புகிறார் பாருங்கள்...அடடா என்னவென்று சொல்லுவது. சுவாமிஜி யோகாவில் விற்பன்னர் என்று இந்த ஒரு காட்சியில் டைரக்டர் பொடி வைத்து நமக்கு சேதி சொல்லுகிறார்.

அதே காட்சியில் சுவாமிஜி காவிக்கு மேட்சாக கோடு போட்ட வெள்ளை கலர் ஜெட்டியணிந்து தமிழ் சினிமாவில் நெடுங்காலம் இருந்து வந்த "லங்கோடு" க்ளீஷேவை கிழித்து தொங்கப் போட்டுவிடுகிறார். மிக ரசனையாக காஸ்டியூம் தேர்ந்தெடுத்த காஸ்டியூம் டிசைனருக்கு இந்த ஒரு காட்சிக்காகவே ஒரு ஷொட்டு.

இவ்வளவு சிறப்பம்சங்கள் நிறைந்த காவியத்தில் குறைகளே இல்லையா என்று கேட்டால் ஏன் இல்லை. போஸ்ட் ப்ரொடக்க்ஷனில் சேர்த்திருக்கும் வாய்ஸ் ஓவர் சுத்தமாக ஒத்து வரவில்லை. சுவாமிஜி வருகிறார்...வருகிறார் வந்துவிட்டார். மாமிஜி தண்ணி எடுக்கிறார், எடுத்துவிட்டார். கூஜாவை திறக்கிறார் திறந்துவிட்டார் என்று கிரிக்கெட் கமெண்டரி போல உயிரை வாங்கும் சுரத்தே இல்லாத வர்ணனைனையால் படத்தோடு நம்மால் ஒன்ற முடியவில்லை. ஒரு விஷுவல் மீடியாவில் இவ்வளவு புளி போட்டு விளக்கவேண்டிய கட்டாயமென்ன? பிண்ணனி இசையை என்னவென்று சொல்லுவது... இடம் என்ன பொருள் என்ன காட்சி என்ன ஃபீலிங் என்ன என்று தெரிந்து மீசிக் போடவேண்டாமா....சும்மா எல்லாத்துக்கும் டைங் டைங்ன்னு பயமுறுத்துகிற மீசிக் போட்டு நிம்மதியாய் படம் பார்க்க விட மாட்டேன்கிறார் மீசிக் டைரக்டர்.

இருந்தாலும் இந்தப் படம் மொழி, கலாச்சாரம் தாண்டி இன்டர்நேனஷனல் சென்சேஷனாகி இருப்பது நம்முர் திறமையை பறைசாற்றுகிறது. தெலுங்கு, மலையாளம் ,கன்னடா மற்றும் “சுவாமிஜி அவுர் மாமிஜி” ஹிந்தி டப் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகியிருக்கும் இதே படத்தை, எதாவது காட்சியை மாற்றி இருக்கிறார்களா என்று கன்பர்ம் செய்து கொள்ளதற்காக பார்த்தேன்..சீன் பை சீன் அப்படியே எடுத்திருக்கிறார்கள். நக்கீரனில் ஹை டெபனிஷனில் ரிலீஸ் செய்திருக்கிறார்களாம். வருடாந்திர சந்தா கேட்டதால் ஹை டெபனிஷன் பிடிக்காமல் ரெண்டுங்கெட்டான் டபனிஷனிலேயே பார்த்துத் தொலைய வேண்டியிருந்தது. ஆனாலும் நிக்கிறான்ல தமிழன்...யாருகிட்ட நம்ம கிட்டயேவா..