Monday, April 03, 2017

Hidden Figures

சைஸு வாரியா நிக்கிறாங்களே ஒரு வேளை ஒபிசிட்டி பற்றிய படமாய் இருக்கோமோ என்று பச்ச மண்ணாய் சந்தேகப் பட்டேன். இந்த மாதிரி அல்ப சிந்தனைகளால் தான், என்ன தான் அன்லிமிட்டட் சினிமா பாஸ் வைத்திருந்தாலும், சில நல்ல விஷயங்கள் லேட்டாய் தான் வாய்க்கப்பட சபிக்கப்பட்டிருக்கிறேன் என்பது புரிந்தது.

அட்டகாசமான படம். உங்களுக்கு The Man who knew Infinity பிடித்தது என்றால் இந்தப் படம் அதை விட பிடிக்கும். 1960-ன் ஆரம்ப கால கட்ட வருடங்களில் நடக்கும் கதை. கருப்பர்களை மிகுந்த பாகுபாட்டுடன் நடத்திய ஒரு நிறவெறி காலக்கட்டம். அதற்கு அந்தக் காலக் கட்டத்தில் மூன்று மூளைக்கார கருப்பின பெண்மணிகள் நாசாவில் எப்படி கால்பதித்து சிகரம் தொட்டார்கள் என்பது பற்றிய படம். கருப்பின பாகுபாடு தவிர பெண்கள் எல்லாம் ஆண்களுக்கு ஒரு படி கம்மி என்ற சித்தாந்தம் நிலவிய காலகட்டமும் கூட. கேட்கவே வேண்டாம். ஐய்யையோ கமலா காமேஷும் அஞ்சலி தேவியும் பார்னர்ஷிப் போட்டு அழுற மாதிரி இருக்கேன்னு பயப்படாதீங்க - படம் அவ்வளவு ஹெவியாக எல்லாம் இல்லை. படம் நெடுக பட்டாசு - அவ்வளவு சுவாரசியம்.

கருப்பினத்தவர்களிடம் எனக்கு சில ஈர்ப்புகள் உண்டு. எல்லாருமே பயங்கர ஸ்டைலிஷாய் டேன்ஸ் ஆடுவார்கள் - அதுவும் பெண்கள்.  கிளப்புகளில் இவர்களின் ஒவ்வொரு அசைவும் அவ்வளவு நேர்த்தியாய் இருக்கும். (கேள்வி ஞானம் சார்)  பார்பதற்கு ஆஜானு பாகுவாய் கொஞ்சம் பயமாய் இருந்தாலும் எந்த இடத்திலும் ஈசியாய் நட்புடன் பழகும் வல்லமை படைத்தவர்கள். இசையில் பயிற்சி பெற்றவராயிருந்தால்  - வித்தைகாரர்களாய் இருப்பார்கள். இவற்றையெல்லாம் விட எனக்கு மிகவும் பிடித்தது இவர்கள் பேச்சில் இருக்கும் நையாண்டி.  நல்ல பழகியவர்கள் என்றால் வரிக்கு வரி ஹாஸ்யமாய் நையாண்டி இருக்கும் - கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

படத்திற்கு வருவோம். அறுபதுகளில் அமெரிக்காவும், ரஷ்யாவும் விண்வெளி ஆராய்ச்சியில், விண்வெளிக்கு யார் முதலில் மனிதனையும் ராக்கெட்டையும் அனுப்புவது என்று போட்டி போட்டுக் கொண்டு பனிப்போர் நடத்திய காலகட்டம். கம்ப்யூட்டர்கள் புழக்கத்தில் வராத காரணத்தினால் பல்வேறு கணக்குகளை செய்வதற்கு மெத்த படித்த மனித கம்ப்யூட்டிங் ஆட்களை கொண்ட காலகட்டம்.  இதில் மூன்று பெண்களே படத்தின் கதா நாயகிகள். ஒருவர் கணித விற்பன்னர், ஒருவர் இன்ஜினியரிங் மேதாவி, மற்றொருவர் நாசாவிற்கு முதன் முறையாக ஐ.பி.எம் கம்ப்யூட்டர் வந்த பிறகு போட்ரானிலும் தன்னை நிலைநாட்டியவர். (அவ்வ்வ் நானும் காலேஜில் போட்ரான் படித்தேன் - ஹலோ வேர்ல்ட்டுக்கே கம்பைலர் அரைப் பக்கத்திற்கு காறித் துப்பியது)  இவர்கள் நாசாவில் பிற்காலத்தில் தங்கள் பெயர்களை நிலைநாட்டினாலும் அதற்கு அவர்கள் கடந்து வந்த பாதையும், சந்தித்த கஷ்டங்களும், போராட்டமுமே படத்தின் கதை.

முதல் காட்சியியே அட்டகாசமாய் ஆரம்பிக்கிறது. கருபினத்தவர்களை எவ்வளவு கேவலமாய் நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது செவிட்டில் அறைந்த மாதிரி காட்டுகிறார்கள். அத்தோடு ஆணாதிக்க போக்கையும் தொட்டிருக்கிறார்கள். படத்தில் நிறைய காட்சிகள் - பார்த்துப் பார்த்து செதுக்கிய மாதிரி அவ்வளவு நிறைவு. முதன் முறையாக கேத்தரின் (ஹென்சன்) நாசாவின் விண்வெளி டீமிற்கு  தனது சாமான் செட்டுகளை ஒரு அட்டை டப்பாவில் எடுத்துக் கொண்டு வருவார். அவரை துப்புறவு பணியாளர் என்று நினைத்துக் கொண்டு டீமில் இருப்பவர் ஒரு Bin-ஐ திணித்து இதை ஏன் இன்னும் காலி செய்யவில்லை என்று கேட்பது மாதிரி காட்சி - அவ்வளவு நச். ட்ரைலரிலும் இருக்கிறது பாருங்கள். கருப்பர்களுக்கான பாத்ரூமிற்கு அரை மைல் தூரம் ஓடி செல்வது, வெள்ளையர் மட்டுமே படிக்க இயலும் என்ற காலேஜில் இன்ஜினியரிங் படிப்பதற்கே கோர்ட் படியேறவேண்டிய கட்டாயம், என்ன உழைத்தாலும் சூப்பர்வஸர் ஆவதற்கே அல்லாட வேண்டிய நிர்பந்தம் என்று இவர்கள் பட்ட பாடையெல்லாம் பார்க்கும் போது, “வேர் இஸ் தி காஃபி, ஏன்யா லேட்டு” என்று கச்சேரிக்குப் போவது மாதிரி போய்விட்டு வரும் இன்றைய வேலையெல்லாம் - அங்கப் பிரதட்சணம் செய்யலாம். அவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் நாமெல்லாம்.

வசனங்களில் நையாண்டியும் நக்கலும் சுவாரசியம் சேர்க்கிறது. படம் போவதே தெரியாமல்  சுவாரசியமாய் பின்னப் பட்ட திரைக்கதை.
பார்க்கவில்லையென்றால் = கண்டிப்பாய் பாருங்கள்- அவ்வளவு நல்ல ஃபீல் குட் படம். பார்த்துவிட்டு நன்றி மட்டுமே கூறுவீர்கள். Very Highly recommended.

2 comments:

Balaji Ramakrishnan said...

அவ்வ்வ் நானும் காலேஜில் போட்ரான் படித்தேன் - ஹலோ வேர்ல்ட்டுக்கே கம்பைலர் அரைப் பக்கத்திற்கு காறித் துப்பியது

chancae illa boss... same blood moment
Will definitely watch this movie!!

அப்பாவி தங்கமணி said...

Visiting ur page after a very long time in need of a stressbuster (to overcome back to back study sessions for upcoming exams). Asusual purpose served, thank you :)

Post a Comment

Related Posts