Friday, December 30, 2005

2005

இந்த வருடத்தின் கடைசிப் பதிவு இது. 2005-ல் ஏகப்பட்ட இயற்கைச் சீரழிவுகளைப் பார்த்தாயிற்று. 2006 நல்ல படியாக இருக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

நேற்று பி.பி.ஸியில் டாம்ப் ரைய்டர் பார்த்தேன். ஏஞ்சலினா அம்பாள் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறார். மனதில் ஒரு கோயில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தியாயிற்று. என்னம்மா நடிச்சிருக்கா குழந்தை. இங்கே ப்ளாகில் ஒரு ஓரமாய் நான் மட்டும் பார்க்கிற மாதிரி போடுவதற்கு அன்னாரின் நல்ல படம் இருந்தால் அனுப்பி வையுங்கோ. நன்றி ஹை.

யாரோ சென்னையிலிருந்து(203.101.40.10) மனோ என்ற புண்ணியவான் முப்பதிலிருந்து நாற்பது வரை உள்ள பெண்கள் வேண்டும் என்று சைடில் இருக்கும் Current Crisis செக்க்ஷனில் கேட்டுள்ளார். எண்ணிக்கையைச் சொல்கிறாரா இல்லை வயதைச் சொல்லுகிறாரா என்று தெரியவில்லை. இன்னும் இது ஒன்னு தான் பாக்கி. நல்லாயிருடா ராசா...ஏற்கனவே நிறைய பேர் சரோஜாதேவி புஸ்தகங்களைத் தேடி வருகிறார்கள் அதோட இது வேறயா...ஹூம்

நிற்க முன்னமே சொல்லவேண்டும் என்று நினைத்தேன். donthecat கேன்ஸர் நோய் விழிப்புணர்வுக்காக ஒரு ப்ளாக் போட்டி நடத்தி வருகிறார். மிக நல்ல விஷயம். ஆர்வமிருப்பவர்கள் பங்கு பெற்று வெல்ல வாழ்த்துக்கள். பங்கு பெறாவிட்டாலும் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இதைப் பற்றிச் சொல்லலாம். அதறகான சுட்டி இங்கே...

நம்ம பஸ்பாஸ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகளை சேகரிக்கும் ஒரு தானியங்கி வலைப் பதிவு தளத்தை நடத்தி வருகிறார். அதன் சுட்டி இங்கே..
(பஸ்பாஸ் - நம்ம டுபுக்கு பதிவு மட்டும் எப்போதும் மேலே டாப்பில வர்ற மாதிரி எதாவது செய்யமுடியுமா? :P )

பொங்கல் பார்ட்டி ஜனவரி 15ம் தேதி என்று முடிவாகி வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. இடம் மிலடன் கீய்ன்ஸ். ஆர்வம் இருப்பவர்கள் தெரியப் படுத்தவும். மேலும் விபரங்களைத் தருகிறேன். தலைக்கு பத்து பவுண்டு நுழைவு கட்டணம்.(பெரியவர்களுக்கு).

மற்றபடி 2006 அமைதியையும், சந்தோஷத்தையும், எல்லா வளங்களையும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கொண்டு வர வாழ்த்துக்கள்.

Wednesday, December 28, 2005

Alma மேட்டர் - 2

for previous parts --> part1

முதல் நாள் ஸ்கூல் அனுபவம் நியாபகம் இல்லை. ஆனால் அந்த ஸ்கூல் எல்.கே.ஜி யூ.கே.ஜி நியாபகங்கள் கொஞ்சம் இருக்கின்றன. முதல் ஸ்கூல் அப்பிடி ஒன்றும் பெரிய ஸ்கூலில்லை. கொஞ்சம் நீளமான வீட்டில் நடத்தி வந்தார்கள். அடுத்த தெருவில் இருந்ததால் அம்மாவுக்கு கொண்டு விடுவதற்கு வசதியாக இருக்கும் என்று சேர்த்தார்கள் என்று நினைக்கிறேன். தனியார் பள்ளி அது. ஐந்தாம் வகுப்பு வரை தான் இருந்தது. இளங்கலை முடித்து விட்டு வரும் பெண்களே டீச்சர்கள். அவர்களுக்கும் வீட்டில் கல்யாணம் பார்த்துக் கொண்டிருப்பார்கள் அதுவரைக்கும் சும்மா இருக்கவேண்டாமே என்று இங்கு வேலைக்கு சேர்ந்திருப்பார்கள். கையில் பிரம்பு வைத்திருப்பவர்கள் எல்லாம் ஒரு வருடத்திற்கும் மேலாக வேலை பார்ப்பவர்கள், மற்றவர்களெல்லாம் மர ஸ்கேல் வைத்திருப்பார்கள்.

நான் பள்ளிக்குப் போவதற்கு ரொம்ப அழமாட்டேனாம். ஆனால் அழாமல் அடிக்கடி மட்டம் போட்டுவிடுவேனாம் அம்மா சொல்லி இருக்கிறார்கள். அடுத்த தெரு தானே, மத்தியானம் சாப்பாட்டுக்கு அம்மா இடுப்பில் வைத்துக் கொண்டுவருவார்கள். முதலில் எனக்கு சாப்பாடு ஊட்டி விட்டு விடுவார். பிறகு அம்மா சாப்பிட்டு வேலையெல்லாம் முடித்து விட்டு வருவதற்க்குள் சமத்தாக தூங்கிவிடுவேன். அவர்களும் எழுப்பிப் பார்ப்பார்கள்...சில நாள் குழந்தையை எழுப்ப மனசு வராமல் சின்ன க்ளாஸ் தானே என்று அப்பிடியே தூங்க விட்டுவிடுவார்கள். என்னவோ இந்த டெக்னிக் நன்றாக மனதில் பதிந்து விட்டது. இப்பவும் மனைவி ஷாப்பிங்க்கு கூப்பிடும் போது சில சமயம் இந்த உத்தி கை கொடுக்கும்...முதலில் கட கடவென்று சாப்பிட்டு விட்டு தங்கமணி வேலையை முடித்துவிட்டு வருவதற்கு முன் நான் உட்கார்ந்து கொண்டே தூங்கிவிடுவேன். ஒரு இருமுறை பச்சாதாபம் ஒர்க் அவுட் ஆச்சு அதற்கப்புறம் உதை தான் என்றான பின்...குழந்தைகளை தூக்கம் பண்ண முயற்சி செய்ய..இப்போதெல்லாம் ஷப்பிங் போய்விட்டு வந்தப்புறம் தான் சாப்பாடே போடுகிறார் தங்கமணி.

அந்த முதல் ஸ்கூலில் ரொம்ப பிடித்த விஷயமே "ஸ்கூல் டே" தான். வெளியே கல்யாணம் மாதிரி பந்தல் போட்டு ஒலிபெருக்கியை அலற விட்டு கோலாகலாமாக நடக்கும். இடுப்பில் கை வைத்துக் கொண்டு தலையை இடமும் வலமுமாக ஆட்டிக் கொண்டு ஒரு அரத இங்கிலீஸ் ரைம்ஸ் ஆட்டம் கண்டிப்பாக இருக்கும். இது போக "எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தா" பாட்டுக்கு ஆணகளும் பெண்களுமாக க்ருப் ஆட்டமும் கண்டிப்பாக இருக்கும். பாட்டின் நடுவில் இரண்டு பேருக்கு வேஷ்டி அவிழ்ந்து திரு திருவென்று முழித்துக் கொண்டு நிற்பார்கள். அவர்களை மிஸ் வந்து தர தரவென்று இழுத்துக் கொண்டு போவார்கள். மிஸ் டான்ஸ் சொல்லிக் குடுப்பது அழகாக இருக்கும். "கையில காசு வாயில தோசை" என்ற பாடலுக்கு கையைக் காட்டிவிட்டு காசு மாதிரி சுண்டிக் காட்டவேண்டும். அப்புறம் வாயை ஆ காட்டி விட்டு கையால் தோசை வார்க்கவேண்டும். நான் "கட்டித் தங்கம் வெட்டி எடுத்து" என்ற பாடலுக்கு ஆடினேன். கட்டிக்கு கையை பாறாங்கல் மாதிரி வைத்து விட்டு தங்கதிற்க்கு காதில் தோடைக் காட்டிவிட்டு மம்பட்டியால் கஷ்டப்பட்டு வெட்டி எடுத்தேன்.

நாடகத்தில் கட்டப்பொம்மன் கண்டிப்பாக வருவார். ஜாக்ஸன் துரைக்கும், ராஜா ராணியாக நடிக்கும் சீனியர் ஆர்டிஸ்டுகளுக்கு மட்டும் தான் ரோஸ் பவுடர். மற்றவர்களுக்கெல்லாம் வீட்டில் போடும் அதே பான்ட்ஸ் பவுடர் தான். எனக்கு ஒரு முறை கூட ரோஸ் பவுடர் கிடைக்கவில்லை.

இந்த ஸ்கூலில் எனக்குப் பிடித்த மற்றொரு விஷயம் நெல்லிக்காய் மரம். மிக புளிப்பான அருநெல்லிக்காய். ஆனால் ஸ்கூல் வாட்ச்மேன் அந்த மரம் பக்கமே போக விட மாட்டார். கொத்துக் கொத்தாய் காய்த்து தொங்கும் கீழே விழுந்த நெல்லிக்காய்களை யாரும் பார்க்காத போது ஓடிப் போய் பொறுக்கிவருவதே மிகத் துணிச்சலான விஷயம். ஆனால் இந்த ஸ்கூலிலிருந்து வெளியே வந்து வாலு முளைத்த அப்புறம் வானரப் படையோடு போய் வாட்ச் மேனையும், மரத்தையும் பாடாய் படுத்தி இருக்கிறேன்.

இந்த ஸ்கூலில் படித்தது இரண்டு வருடங்களே ஆனாலும் ரொம்ப சமத்தாக இருந்தேன்.ஒரே ஒரு முறை மட்டும் எல்லாரையும் ஒரு சினிமாவுக்கு அழைத்துப் போய்விட்டு வரும் போது வழியில் வீடு வந்துவிட்டதே என்று க்யூவிலிருந்து வீட்டிற்க்குள் நழுவிவிட்டேன். அங்கே ஸ்கூலில் என்னை தேடு தேடுவென தேடி விட்டு வாட்சுமேன் வீட்டில் லபோ திபோவென்று அப்பா அம்மாவிடம் குற்றப் பத்திரிக்கை படித்தார். அடுத்த நாள் ஸ்கூலில் மிஸ் காதைப் பிடித்து திருகினார்.

இந்த கால கட்டத்தில் தான் எஙகள் ஊரில் இன்னொரு பள்ளி கொஞ்சம் பிரபலமாக ஆரம்பித்தது. கான்வென்ட் டைப்பில் ஆரம்பித்து ஸ்கூல் ஷூ, சாக்ஸெல்லாம் போட்டுக் கொண்டு பையன்கள் வேனில் போவதைப் பார்த்து எனக்கும் ரொம்ப ஆசையாக இருந்தது. அப்பா அம்மாவும் பையன் இந்தப் பள்ளியில் சேர்ந்து படித்தால் இங்கிலீஸில் பொளந்து கட்டி ப்ளாக் ஆரம்பித்துவிடுவான் என்று நம்பியதால் என்னை சேர்க்க ஆசைப் பட்டார்கள். அப்பா சென்று விசாரித்து வந்து தலையில் குண்டைப் போட்டார். அந்தப் பள்ளியில் சேருவதற்கு டெஸ்ட் எழுத வேண்டுமாம். அதுவும் இங்கிலீஸ் மற்றும் மேத்ஸ் பரீட்சைகள் வேறு. வீட்டில் அக்கா பெண்டை நிமிர்த்தி விட்டார். நம்ம பெயரில் ஆங்கில எழுத்துக்களில் ரெண்டு மட்டும் குறையும் அவ்வளவு தான். ஆங்கில எழுத்துக்களில் ஒழுங்கான வரிசை ஒன்று, பெயருக்கு ஒரு வரிசை என்று எழுதப் படிப்பதற்குள்ளே எனக்கு அந்த ஸ்கூல் மோகம் குறைய அரம்பித்துவிட்டது. தேர்வுப் பரீட்சையில் பக்கத்திலிருந்து மண்டையில் குட்ட அக்கா இல்லையாதலால் மானாவாரியாக தோன்றியதை எழுதினேன்.

தேர்வுப் பரீட்சை முடிவுகள் வெளிவந்து, குட்டியாகப் பெயர் வைத்துக் கொண்டிருந்த தெருவிலிருந்த மற்ற இரண்டு நண்பர்களும் தேர்வாகி இருக்க, நான் மட்டும் எங்கம்மா சொல்லுகிற மாதிரி பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சல். "அதென்ன பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சல் ...ஃபெயில் சொல்லுங்கோம்மா" என்று இன்றளவும் என் மனைவி மாமியாரிடம் இந்த விஷயத்தில் தர்க்கம் பண்ணிக் கொண்டிருக்கிறார். என் அம்மாவும் "ஃபெயில் இல்லைடி ...குழந்தை நன்னாத் தான் படிச்சான்...பரக்கப் பார்த்ததுல பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சல் அவ்வளவு தான்" என்று விட்டே குடுக்காமல் சமாளித்துவருகிறார். ஹூம் எங்கம்மா மட்டும் எனக்கு டீச்சராக வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.

-தொடரும்

Tuesday, December 20, 2005

சினிமா சினிமா

எந்தப் படுபாவி கண்ணப் போட்டானோ...எல்லாம் கிடக்க கிழவியத் தூக்கி மனையில வைன்னு என்ன நட்டநடு இடத்துக்கு ஆபிஸில இடம் மாத்திவிட்டார்கள். அப்பப்போ பார்க்கும் ப்ளாகை கூட (??!!) இப்போயெல்லாம் பார்க்கமுடியவில்லை. ட்ரெயினில் வேறு இரண்டு நாளாக இடம் கிடைக்கவில்லை. எல்லாவற்றிக்கும் மேலாக யெக்கோவ் புண்யத்தில் யவன ராணி படித்து வருகிறேன். சாண்டில்யன் சும்மா கலக்கு கலக்குன்னு கலக்கியிருக்கிறார். படித்து முடித்துவிட்டு விரிவாக எழுதுகிறேன். கண்டிப்பாக ஒரு காதல் கதை எழுத முயற்சிக்கவேண்டும் என்று இருக்கிறது.

"தவமாய் தவமிருந்து" பார்த்தாகிவிட்டது. ரசித்து எடுத்திருக்கிறார் சேரன். ஆனால் சில இடங்களில் வேண்டுமென்றே ரொம்ப இழுத்திருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. ஹீரோயின் பாத்திரத்துக்கு படு பாந்தமாய் இருக்கிறார். சேரனை விட ராஜ்கிரண் நடிப்பு தான் மிகப் பிடித்தது. சரண்யாவும் நன்றாக நடித்து இருக்கிறார். லேசாக தொண்டை கட்டின மாதிரி இருக்கும் அவருடைய குரல் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டாக இருக்கிறது. "பேரு வைக்கிறான்பாரு குசுப்பூ கூரப்பூன்னு" சொல்லும் போது இயல்பாக இருக்கிறது.

ஏ.பி.சி.டி படமும் பார்த்தாகிவிட்டது. ஆரம்பித்த வேகம் எதிர்பார்ப்பை கிளப்பி விட ஆனால் படம் அப்புறம் தொய்வடைந்துவிடுகிறது. படத்தில் ஷ்யாம் நன்றாக நடித்திருந்தாலும் , படத்தில் எல்லாரும் எப்பவும் என்னம்மோ கடன் கேக்கிற மாதிரி மிகவும் தாழ்வான குரலிலேயே பேசுகிறார்கள். சில இடங்களில் சகிக்கல. மற்றபடி படம் தேவலை ரகம்.

சிவகாசி வேற பார்த்துத் தொலைத்தேன். ஒரு பவுண்டு போன ஜென்ம கடனாயிருக்கும். மத்தபடி படம் தெண்டம். விஜய் படத்தின் சம்பிரதாயப் படி இந்தப் படத்திலும் ஹீரோயின் அசின் காலை கோணலாக வைத்துக் கொண்டு ஒரு குத்தாட்டம் ஆடுகிறார். கஜினியில் ஆடிய குட்டியா இதுன்னு தலையில அடிச்சிக்கலாம் போல இருக்கிறது.

கண்ட நாள் முதல் படமும் பாட்டும் நல்லாயிருக்கு. லைலா நன்றாக நடித்திருக்கிறார். பிரசன்னா நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. அனேகமாக இன்னும் கொஞ்ச நாளில் நமக்கு வில்லனாகிவிடுவார் என்று நினைக்கிறேன். வூட்டுல கொஞ்சம் ஜொள்ளிங்ஸ்.(இன்னும் ஒத்துக்கலை) அய்யோ பாவம் அலைபாயுதே யு.யெஸ் மாப்பிள்ளை இதிலும் அதே யூ.யெஸ் அதே மாதிரி பெண் பார்த்து இந்த தரமும் கோட்டை விடுகிறார். அடுத்த படத்திலாவது கல்யாணமாக வேண்டும் என்று வீட்டில் தங்கமணி வேண்டிக் கொண்டிருக்கிறார்.

மொத்தத்தில் தமிழ் சினிமாவில் தரம் கொஞ்சம் இறங்கி இருக்கிறது. இவ்வளவு படத்திலும் ஒரு ஹீரோயின் கூட மனதில் தங்கவில்லையே...சே என்னைய்யா படம் எடுக்கறீங்க...

Thursday, December 15, 2005

இங்கிலாந்துப் பிரதாபங்கள்...2

for previous part click here

எனக்குப் பிடித்த இங்குள்ள இன்னொரு விஷயம்...மக்களிடம் உள்ள நட்புடன் சகஜமாக பழகும் ஸ்னேக பாவம். தெருவில் நடந்து போகும் போது முன்னப்பின்ன தெரியாத நபர்கள் அதிகாலையாய் இருந்தால் காலை வணக்கங்கள் சொல்லுவார்கள்.
நானும் சொல்லிப்பார்போமே என்று நிறைய தடவை முயற்சி செய்து பார்த்திருக்கிறேன். பரஸ்பரம் வணக்கம் சொல்லிக்கொள்ளாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு சினேகமான புன்னகையாவது பரிமாற்றிக்கொள்வார்கள். குற்றமாகச் சொல்லவில்லை நம்மூரில் டிப்டாப்பாக ட்ரெஸ் பண்ணிக்கொண்டாலும் இப்பிடி யாராவது செய்தால் கடன் கேக்க வந்திருக்கானோ அல்லது ஏமாற்றுப் பேர்வழியாக இருப்பானோ என்ற சந்தேகம் வரலாம். இங்கே வந்த புதிதில் எனக்கும் இருந்த்து. இல்லை இங்கெல்லாம் இது சகஜம் என்று உரைக்க சிறிது நாளாயிற்று. நம்மூரிலும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

வேறு சில பேரிடம் இந்த சினேகபாவம் அதீதமாக இருக்கும். விட்டால் மடியில் ஏறி உட்கார்ந்துவிடுகிற நட்பு இருக்கும். நேரம் தெரியாமல் இப்பிடி மாட்டிக்கொண்ட அனுபவமும் உண்டு. ஒரு முறை தங்கமணி(அதாங்க வீட்டு அம்மணி சும்மா அக்னிநட்சத்திரம் பாணியில் இப்பிடி தான் சொல்லிக்கொள்வேன்) பக்கத்துக் கடைக்குப் போயிருக்க நான் வெளியில் பையுடன் காத்துக்கொண்டிருந்தேன். ஏடாகூடமான் பெண்மணி ஒருவர் என்னைப் பிடித்துக்கொண்டு பேச்சுக் குடுக்க ஆரம்பித்துவிட்டாள். வானிலைப் பற்றி பேசாமல் ஏதேதோ பேச ஆரம்பித்துவிட்டாள். எனக்கு அந்தப் பெண்ணைடமிருந்து விடுபட்டால் போதும் என்று ஆகிவிட்டது. "பலான பெண்ணுடன் பாகவதமா பேசுவான்" என்று நாக்கிலே பல்லைப் போட்டு யாரும் பேசிவிடக்கூடாது பாருங்கள். தங்கமணி வேறு செருப்புக் கடைக்குப் போயிருந்தார், அவர் பார்த்து டென்ஷனாகி விட்டால் என்னாவது. அப்புறம் அந்த பரதேவதையை "நெக்கு கல்யாணமாயிடுத்து போயிட்டு வாடியம்மா" என்று அனுப்பிவைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.

எனக்கு இந்த ஊரில் பிடிக்காத ஒரு விஷயம் (இப்பிடித் தான் சொல்லிக்கறது) சபையில் சொல்வதற்கு கொஞ்சம் லஜ்ஜையாகத்தான் இருக்கிறது.(அடேங்கப்பா) ஏடாகூடாமாக் இருந்தால் மன்னித்துவிடுங்கள். இரவு பகல் என்று பார்க்காமல் ஆண்களும் பெண்களும் ரோட்டிலேயே எல்லாவற்றையும் அரங்கேற்றுவது. மேற்கத்திய கலாச்சார நாடுகளில் குழந்தைகளுடன் இருக்கும் யாருக்கும் இதிலுள்ள கஷ்டம் தெரியும். என் குழ்ந்தை டி.வியில் வாயில் முத்தம் குடுப்பதைப் பார்த்தாலே பேட் என்று சொல்லுவாள். பஸ்ஸில் ஒரு முறை பக்கத்தில் இது அரங்கேற...நான் சுதாரிப்பதற்குள் அவனைப் பார்த்தே "பேட் பாய்.." என்று சொல்லிவிட்டாள். அப்புறம் காக்கா பாரு குருவி பாரு என்று சமாளித்தேன்.
இது இப்போயெல்லாம் ரொம்ப ஓவராகத் தான் போய்விட்டது. செய்தித் தாளில் படித்த ஒரு விஷயம். இரவு 8 மணிக்கு லண்டனிலிருந்து நெடுந்தூரம் போகும் ஒரு ரயிலில் ரொம்பக் கூட்டமில்லாத ஒரு கம்பார்ட்மென்ட்டில் இரு காதலர்கள் அமர்ந்திருந்தார்களாம். அடிக்கிற குளிரில் ஐய்யோ பத்திக்கிச்சு என்று எல்லமீறி எல்லாவற்றையும் அங்கேயே அரங்கேற்றி விட்டார்கள். அங்கே இருந்த மற்றவர்கள் யாரும் எதுவுமே சொல்லவில்லையாம்...எல்லா ஆட்டமும் ஆடி முடிந்து ஒய்யாரமாக இருவரும் சிகிரெட்டைப் பத்த வைத்தார்களாம். இருக்கிறவர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்து..."ஏன்டா என்னடா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்...ட்ரெயினில் சிகிரெட் பிடிக்கக் கூடாதென்று தெரியாது உங்களுக்கு?" என்று ரோஷமாகக் கேட்டார்களாம். எப்பிடியிருக்கு கதை. கொஞ்சம் பணம் சம்பாதித்துக்கொண்டு ஊருக்கு ஓடிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

இங்குள்ள மற்றொரு சுவாரசியமான விஷயம் பேய்கள். உலகத்தில் எல்லா நாடுகளையும் விட இங்கிலாந்து தான் பேய்களுக்குப் பெயர் போன நாடு. இங்கு "கெண்ட்" என்ற பகுதி, பேய்களின் சரணாலயமாகத் திகழ்கிறது. இங்கு மட்டும் அதிகாரப்பூர்வமாக 12 பேய்கள் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகிறார்கள். இந்த வல்லுனர்களின் ஜோலி என்ன? "கண்டேன் பேயை" என்று யாராவது ஆனந்தக் கூக்குரலிட்டால்...யாரு எந்தப் பேய்...இது புதுசுதானா இல்ல முன்னாலேயெ அட்டென்டென்ஸ் போட்ட பேய் தானா...தனியா வந்துச்சா..இல்ல கூட்டமா வந்து ரவுசு விட்டுச்சா.. என்ன சேட்டை பண்ணிச்சு இதெல்லாம் அலசி ஆராய்ந்து பதிவு பண்ணி புஸ்தகம் போட்டு சம்பாதிக்கிறார்கள்.(என்னடா இது பேய்ப் பொழப்புடா இது இதுக்கு நாண்டுக்கிட்டு செத்து பேயா அலையலாம்).

இந்தப் பேய்ப் பிரியர்கள் இன்றைக்கு இருக்கும் டெக்னாலஜியையும் இதில் உபயோகப்படுத்தி ஆதாரமெல்லாம் சேகரிக்கிறார்கள். கொஞ்ச நாள் முன்னாடி ஒரு புகையான உருவத்தோடு போட்டோவை பேப்பரில் போட்டு இது பேயா இல்லைப் போர்வையைப் போட்டுக் கொண்டு உலாத்தும் ஏதாவது தெனெவெடுத்த நாயா..என்று பட்டிமன்றமெல்லாம் வைத்தார்கள்.
இதுல டமாசு என்னவென்றால் ஒரு பணக்காரப் பேய்...குதிரைவண்டி பூட்டிய சாரட்டு வண்டியில வலம் வருதாம். பேய்க்கு வந்த வாழ்வப் பாருடா...பேயானாலும் இப்பிடியில்ல பேயானும். இன்னொரு பேய் என்னடான்னா நம்ம தமிழ் சினிமாவில் வர்ற மாதிரி காரில் சாவாரி கேட்டு பின்னாடி உட்கார்ந்துட்டு அப்புறம் பாதி வழியில் மறைஞ்சுடுதாம். பேயானாலும் ஓசி சவாரி புத்தி போகல போல. நம்மூர்ல இருக்கற மாதிரி கோழிப் பிரியாணி கேக்கற பேய்கள் எதுவும் இங்கே இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாம் வசதியான பேய்கள் போல. பேயோட்டுறவங்களும் இந்த்ப் பேய்களோடு கதாட்சத்தால கிடா மீசையும் கொடுவா பார்வையும் பார்காமல் கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு நாசூக்காய் திரிகிறார்கள். ஏன் தான் மக்கள் பேயப் பார்த்து பயப்படறாங்களோ...நாங்களெல்லாம் கல்யாணம் பண்ணி குடித்தன்மே நடத்தலையா?
இதெல்லாம் உண்மையோ பொய்யோ...கின்னெஸ் புஸ்தகத்துல போட்டு...இதையும் சுற்றுல்லா பக்கங்களில் போட்டு அரசாங்கம் நல்ல துட்டு பார்க்குது. (ஹூம் பணம் பணம்ன்னு ஏன் தான் இப்பிடி பேயா அலையறாங்களோ)
சரி சரி பேய்க்கதை போதும். உங்களுக்கு இன்னும் தெரிஞ்சிக்கனும்ன்னா இங்கே போய்ப் பாருங்கள். ஒருவேளை நீங்க கல்யாணமாகத பிரம்மச்சாரியா இருந்து இதெல்லாம் படிச்சுட்டு பயந்துட்டீங்கன்னா ராத்திரி உம்மாச்சிய கும்பிட்டுட்டு தாச்சிக்கோங்க...இல்லைன்னா சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க...பழகிடும்.

Wednesday, December 14, 2005

இங்கிலாந்துப் பிரதாபங்கள்...1

*********************************
முன் குறிப்பு - உங்களில் வெண்டைக்காய் சாப்பிட்டு நியாபகமாய் இருக்கும் புத்திசாலிகள் கண்டுபிடிப்பதற்கு முன்னால் நானே சொல்லிவிடுகிறேன். இந்தப் பதிவு ஒன்றரை ஆண்டுகள் முன்னால்(May 2004) நான் வலைப்பூவில் ஒரு வார ஆசிரியராக இருந்தபோது எழுதியது. கொஞ்சம் திருத்தியிருக்கிறேன். மதியும் காசியும் நான் அங்கே எழுதியதை இங்கே மறுபதிப்பு போட்டதுக்கு ஆட்சேபிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் போட்டிருக்கிறேன்(அப்பிடித் தானே :)). Alma மேட்டர் தொடர் அப்பிடியே காற்றில் விட்ட படி இருக்கிறது...நியாபகமிருக்கிறது...ஆனால் கொஞசம் வேலை மென்னியப் பிடிக்கிறது. ரெண்டு நாள் பொறுங்கோ எழுதிவிடுகிறேன்..
*********************************

இங்கிலாந்து என்று சொன்னால் உங்களுக்கு என்ன நியாபகம் வரும்? ஒரு நிமிஷம் கண்ணை மூடி யோசித்துவிட்டுத் தொடருங்கள்.

லண்டன் பிரிட்ஜும், பிக் பென்னும், சிவப்பு ரெட்டை மாடி பஸ்ஸும் நியாபகத்துக்கு வந்தால் நீங்கள் இளம் வயதினர்.

ஷேக்ஸ்பியரும், மாடம் துசாட்ஸ் மெழுகுச்சிலை மியூசியமும், கோகினூர் வைரமும், குட்டைப் பாவாடை வெள்ளைக்காரபெண்களும் நியாபகம் வந்தால் ஒரு வேளை பெண்ணாய் இருக்கக்கூடும்

ஸ்காத்லாந்தும் மதுவும் நியாபகத்துக்கு வந்தால் இங்கு ஒரு முறையாவது வந்து போயிருப்பீர்கள்...

டவர் ஆப் லண்டன், லண்டன் ஐ, மாடம் துசாட்ஸ் மெழுகுச்சிலை மியூசியம் இவை நியாபகத்துக்கு வந்தால் இங்கு வரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் குடும்பஸ்தராக இருக்கக்கூடும்.

லண்டன் பிரிட்ஜ், பங்கிங்காம் அரண்மனை, டயானா, டைடானிக் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நியாபகம் வந்தால்..கல்யாணமானவராக இருக்கக்கூடும்.

டயானாவும், டோனி பிளேரும், பழ்ங்கால இங்கிலாந்து உடையில் உள்ள பெண்களும் நியாபகத்துக்கு வந்தால் நீங்கள் கல்யாணமாகாத பிரம்மச்சாரியாக இருக்கலாம்,

பெக்காம், மீரா சாயல் லிஸ்டில் இருந்தால் நீங்கள் ஜொள்ளுகின்ற பெண்ணாய் இருக்கலாம் ;)

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், அழகான வெள்ளைக் கார குட்டிகள், ஸ்காட்லாந் மது, சமீபத்திய குண்டு வெடிப்பு ஆகியவை நியாபகத்துக்கு வந்தால் நீங்கள் கல்யாணமான ஆணாக இருக்கக் கூடும்.

மேற்சொன்ன எதுவுமே இல்லாவிட்டால் நீங்கள் எழுத்தாளராகவோ பிஸினெஸ்மேனாகவோ இருக்கலாம். :)

இதெல்லாம் இல்லாமல் ஸ்காத்லாந்து யார்ட் போலீஸ் மட்டும் நியாபகத்துக்கு வந்தால்...அட போங்கய்யா...பேசாம வீட்டுல இழுத்துப் போர்த்திண்டு தாச்சிக்கலாம்.

(ஜோஸ்சியம் பலித்ததென்றால் சொல்லுங்கள்...இங்கே ஒரு கடையைத் தொறந்துவிடுகிறேன் :P)

மேற்சொன்ன அத்தனை விஷயங்களைப் பற்றியும் திகட்ட திகட்ட கேட்டிருப்பீர்கள். அதனால் அதையெல்லாம் விட்டுவிட்டு சும்மா உப்பு பெறாத சில விஷயங்களை சொலட்டுமா?

இங்கிலாந்து வந்து அலுவலகத்தில் சேர்ந்த புதிதில் அப்போது தான் அறிமுகமான இரண்டு பேர் நான் இருக்கும் அறையில் பேசிக் கொண்டிருந்தார்கள்

"நேத்திக்கு 13 போச்சு...தெரியுமா?"

"அப்பிடியா நாளக்கு 10 தான் போகுமென்று சொன்னார்கள்"

"இன்று காலை 10 மணி வரை 7 தான் இருந்தது. 1 மணிக்கு எப்பிடித்தான் 15க்குப் போகுமோ தெரியவில்லை"

என்னத்தப் பத்தி இப்பிடி பேதி மாத்திரை சாப்பிட்ட மாதிரி பேசறாங்க...ஒரு வேளை பங்குச் சந்தை பற்றி இருக்குமோ என்று எனக்கு நானே நினைத்துக் கொண்டேன். இன்னும் கொஞ்ச நேரம் கவனித்த பிறகு தான் புரிந்தது.

"வாரக்கடைசியில் மழை பெய்யுமென்று சொல்கிறார்கள்...பாழாய்ப்போன மழை.."

அடப்பாவிங்களா வானிலையைப் பற்றியா இப்படி ஒரு மணி நேரமா பேசிக்கொண்டிருக்கிறீர்கள். நம்மூரில் தான் பேசுவதற்கு ஒன்றுமில்லையென்றால் "இங்கு வெய்யிலடிக்கிறது அங்கு வெய்யிலடிக்கிறதோ" என்று சும்மானச்சுக்கும் கலாசுவார்கள் . இதெல்லாம் இங்கு முக்கியமான விஷயம். வானிலையைப் பற்றிப் பேச யாரையும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. "இன்னிக்கு மழை பெய்யும்ன்னு சொன்னானா?"என்று அழகான வெள்ளகாரக் குட்டிலேர்ந்து பாட்டி வரை யாரிடம் வேண்டுமானாலும் கடலை போடலாம். கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் இங்கே வானிலையும் அப்பிடித்தான் இருக்கிறது. குளிர் அந்தந்த காலங்களுக்கேற்ப இருந்தாலும் எப்ப மழை பெய்யுமென்று சொல்லவே முடியாது. வெகு சில நாட்களே காலங்களுக்கேற்ப ஊகிக்க முடியும். மத்த நாளெல்லாம் இவங்க சொல்லற மாதிரி "ப்ளடி பிரிட்டிஷ் வெதர்" தான். ஒரு நாள் இப்பிடி தான் முந்தின நாள் குளிரியதே என்று தடியான கோட்டைப் போட்டுக் கொண்டுபோக...அன்றைக்கு ரம்மியமாக இருந்தது. நான் கோட்டுகுள்ளே போட்டுக்கொண்டிருந்த சட்டைக்குள்ளே போட்டுக்கொண்டிருந்த பனியனில் மட்டும் நாலு குட்டிகள் மொத்தமாய் டிரஸ் தைத்துப் போட்டுக்கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள். எனக்குத்தான் அவ்வளவு ஆடைகளையும் போட்டுக் கொண்டு நடக்க வெட்கமாக இருந்தது. இப்பெல்லாம் நாங்களும் வெள்ளக்காரன் மாதிரி வானிலை பற்றி அடிக்கடி பேசுகிறோம்.

ஒருமுறை ரோமன் முறைப்படி எழுத்துக்கள் கொண்டிருந்த ஒரு கடிகாரத்தைப் பற்றி ஒரு நண்பர் சுவாரசியமான தகவல் சொன்னார். ரோமன் முறைப்படி நாலு என்பதை "IV" என்று தான் போடவேண்டும். ஆனால் இங்கிலாந்தில் மட்டும் ஒரு காலத்தில் "IIII" என்று போட்டுக்கொண்டிருந்தார்களாம். காரணம் என்னவென்றால்..ஒரு ராஜா ஒருமுறை ஸ்பெஷலாக கடிகாரம் செய்யச் சொன்னாராம். கடிகாரம் செய்தவன் கரெக்டாக "IV" என்று போட்டுக் கொண்டுவந்து காமித்தானாம். இந்த ராசா பள்ளிக்கூடத்தில் படிக்காமல் கழுதை மேய்த்திருப்பார் போல...நாலு "IIII" இப்பிடித்தான் போடனும் என்று திருத்தச் சொன்னாராம். அவனும் ராசா சொல்லறார் நமக்கேன் வம்பு என்று அப்பிடியே போட்டுக் கொண்டுவந்தானாம். இதைப் பார்த்து மற்ற எல்லோரும் பயந்து போய் அப்பிடியே போட ஆரம்பித்தார்களாம். இப்பிடியாக எல்லாம் தெரிந்த ராசா ஏதோ விட்ட கதையாக...தப்பாய் போட்டதையும் தலையில் வைத்துக்கொண்டு கொண்டாடுகிறார்கள். இப்போது பன்னாட்டுச் சந்தையிலிருந்து பொருட்கள் வருவதால் எல்லா கடிகாரங்களும் இப்பிடி வருவதில்லை ஒரு சில ஸ்பெஷல் கடிகாரங்கள் மட்டும் இப்பிடி என்று நண்பன் சொன்னான்.

என்ன இருந்தாலும் பழமைகளைப் போற்றிப் பாதுகாப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்கள் தான். கட்டடம் கட்டுவதில் ஆதியிலிருந்து மிகவும் திறமைவாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். 1700/1800-களில் கட்டிய கோட்டைகள் துளியும் சேதமில்லாமல் இன்றும் கம்பீரமாய் நின்று கொண்டிருக்கின்றன. சமீபத்தில் 1750-ல்கட்டிய வீடு ஒன்று விலைக்கு வந்ததையும் டி.வியில் பார்த்தேன். 1750ல் கட்டப்பட்டது என்பதற்காக விலையில் சகாயமெல்லாம் இல்லை. எங்க வீடு 1900- 1940-ல் கட்டப் பட்ட வீடு.ஆனா இந்த விஷயத்த ஊர்ல சொல்ல...சொன்னா "நீதான்டா ஒரிஜினல் டுபுக்குன்னு" பாராட்டுவாங்களேன்னு தான். வீட்டில் சுவற்றில் இன்றும் ஆணியடிக்க திணறத்தான் வேண்டி இருக்கு. ராணி விக்டோரியா காலத்தில் கட்டிடங்களுக்கு இன்றும் மிக்க மதிப்பு இருக்கிறது(எங்க வீடும் விக்டோரியன் பில்டிங்). விக்டோரியாவோ கிக்டோரியாவோ...ஆணியடித்து தேதி பார்க்கும் காலண்டர் ஜோராய் மாட்டாவிட்டால் கை நமநம என்று அரிக்கிறது.
- அடுத்த பதிவில் இ.பிரதாபங்கள் முடியும்

Monday, December 12, 2005

லண்டனில் பொங்கலோ பொங்கல்

தீபாவளி பார்ட்டியின் வெற்றியைத் தொடர்ந்து...பொங்கலுக்கும் மீண்டும் சந்திக்கலாம் என்று முடிவாகியிருக்கிறது. இந்த முறை கல்லாவை காலியாக்கும் பொறுப்பை உமாவும், தீபாவும் ஏற்றுக்கொண்டு பொறுப்புகளை மேற்பார்வை பார்த்துவருகிறார்கள் (அவங்க வூட்டுல வூட்டுக்காரர் பெண்டு நிமிருத்துன்னு ஸ்காட்லாண்ட் யார்ட் ரகசிய அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள்..கிருஷ்ணா, ராம்கி அப்பிடியா :P )

"மகளிர் மட்டும்" அணி பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதால் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு பழிவாங்கும் விதமாக ஹிருத்திக் ரோஷன் போன்ற மீசையில்லா வாழைக்காய் பஜ்ஜிகளை விழாவில் பார்க்கும் பாக்யம் கிட்டலாம். சூர்யா வந்தாலும் சந்தோஷமே (கூடவே ஜோதிகாவும் வருவாங்கள்ல?)

இப்பிடி அடிக்கடி பார்ட்டி நடத்தி இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து, சிங்கப்பூர் மற்றும் கோபால் பல்பொடி நாடுகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி யூ.கே ப்ளாக் வட்டத்தில் முதல் இடத்தில் வெற்றிக் கொடி கட்டுகிறது.

இங்கிருப்பவர்களும், இங்கே பொங்கல் சமயத்தில் வரப் போகிறவர்களும் இந்த பார்ட்டிக்கு வர விருப்பப் பட்டால் மேலும் விபரங்களுக்கு எனக்கு(r_ramn at yahoo dot com) ஒரு மெயில் அனுப்புங்கள்.

Friday, December 09, 2005

தேசி பண்டிட்

தேசி பண்டிட் பற்றி உங்களில் நிறைய பேர்களுக்குத் தெரிந்திருக்கும். பிரேமலதா அக்கா புண்யத்தில் இன்றிலிருந்து அங்கே தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தும் பொறுப்பை நானும் அவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். நீங்கள் தமிழில் வலைப்பதிபவராக இருந்தால் மெயில் அனுப்புங்கள். பேங்க் அக்கௌண்ட் நம்பர் அனுப்பி வைக்கிறேன், எவ்வளவு சீக்கிரமாக ட்ரான்ஸ்பர் செய்கிறீர்களோ அத்தனை சீக்கிரம் அங்கே போட்டு விடுகிறேன் :)

Monday, December 05, 2005

Alma மேட்டர்

இதுவும் வழக்கம்போல "அம்ம பாட்டுத்தேன்ங்...".(தேவர் மகன் சிவாஜி பாணியில் வாசிக்கவும்)
Alma Mater என்றால் ஸ்கூல் காலேஜ் யுனிவேர்ஸ்டி என்று எல்லாம் அடங்கும். அதைக் கொஞ்சம் விஸ்தீரணப் படுத்தி சொல்லிக் குடுத்த போதிமரங்கள் எல்லாவற்றையும், கற்றுக்கொண்ட அத்தனைப் பாடங்களையும் ஒரு தலைப்பில் கொண்டுவரும் முயற்சி தான் இந்தத் தொடர் (ஆஹா இதுவல்லவோ ஜல்லியடித்தல் ...அப்போதானே நீங்க தலைப்புக்கும் எழுதறதுக்கும் சம்பந்தம் இல்லையேன்னு சொல்லமுடியாது :) ). அல்மா மேட்டர் நான் முன்னால் எழுதிய தாமிரபரணித் தென்றல், நாமதேவரும் கைப்பிடி சுண்டலும், மற்றும் ஜொள்ளித் திரிந்ததொரு காலம் ஆகியவற்றைப் போல் ஒரு கிளைக் கதை.

என் மகள் இரண்டு வயதில் காக்கா கதை சொல்லுவாள். அது வேண்டாம் என்று வேறு கதை கேட்டால் சரி என்று தலையை ஆட்டிவிட்டு இது இன்னொரு காக்கா என்று அதே கதையைச் சொல்லுவாள். இதுவும் அதே மாதிரி தான். தலைப்பு தான் வேறயே தவிர இதுவும் அவற்றைப் போல் "என் சோகக் கதையக் கேளு" ரகம் தான்.

மொத்தத்தில் எல்லாவற்றையும் சேர்த்துப் படித்தால் நேரா வந்து என் சட்டைக் காலரைப் பிடித்து விடலாம். சமீபத்தில் ஜொள்ளித் திரிந்த காலம் தொடரைப் படித்து விட்டு சிகாகோ தமிழ் சங்க பிரசிடென்ட் தொடர்பு கொண்டார். நான் எதோ என் கதையைப் படித்து விட்டு ப்ரீயா அமெரிக்காவுக்கு டிக்கெட் எடுத்துக் குடுத்து சிகாகோ தமிழ் சங்கத்தில் பிரசங்கம் பண்ணத் தான் கூப்பிடுகிறாரோ என்று வீட்டில் மன்னார் அண்ட் கம்பேனி தங்கவேலு மாதிரி பந்தா விட்டுக் கொண்டிருந்தேன். மெதுவாக நீங்க எந்த ஊர் நானும் அதே ஊர், நீங்க எந்த ஸ்கூல் நானும் அதே ஸ்கூல், நீங்க எந்தத் தெரு நானும் அதே தெரு, நீங்க எந்த வீடு...அடப்பாவி நீயா...என்று கடைசியில் முடிந்தது. இவருக்கு என் மனைவி வீட்டில் ஒரு முக்கியமான நபரைத் தெரியும் ரொம்ப வாலாட்டினா போட்டுக் குடுத்திருவேன் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார். மனுஷனுக்கு எத்தனைக் கவலை பாருங்கள். நேற்று ஒருவர் எனது கடல் புறா பதிவில் ஸ்கூலைப் பற்றியெல்லம் கமெண்ட் விட்டிருக்கிறார். அனேகமாக என்கூட என் க்ளாசில் குப்பைக் கொட்டிய பேர்வழியாக இருக்கலாம்.(அதே பேரில் ஒருவர் இருக்கிறார்) கேட்டிருக்கிறேன்...தெரியவில்லை. இந்தத் தொடரையெல்லாம் எழுதி விட்டு ஊர் பக்கம் போனால் நல்ல செமையாக கிடைக்கப் போகிறது எனக்கு.

அப்புறம் இன்னும் ஒன்று ...புகழந்து பின்னூட்டம் விடுபவர்கள் தயவு கூர்ந்து பெயரை மட்டுமாவது சொல்லுங்களய்யா...வீட்டுலே நானே அனானிமஸாக அடிக்கிறேன் என்று நக்கல் தாங்க முடியலை. (ஹாலேஸ்கானில் ஐ.பியாவது இருக்கும் ப்ளாகரில் அந்த வசதி இல்லை)

உங்களில் நிறைய பேர் நான் முன்பு எழுதிய தாமிரபரணித் தென்றல் மற்றும் நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் ஆகியவற்றைப் படித்திருக்கலாம். படிக்காதவர்கள் படித்து விடுங்கள். அப்புறம் கேள்வி கேட்கும் போது முழித்தீர்களானால் பெஞ்ச் மேல் ஏற்றி விடுவேன். முன்னாடியே படித்தவர்களும் இன்னொரு தரம் படிங்கப்பூ (இல்லாட்டா எங்களுக்கு எப்பிடி ஹிட் கவுண்ட் எகிறுமாம்?)

நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் - Part1 Part2 Part3 Part4 Part5

தாமிரபரணித் தென்றல் - Part1 Part2 Part3


-தொடரும்

Friday, December 02, 2005

பரீட்சை

பத்தாம் வருட பொதுத் தேர்வு. தேர்வு ஆரம்ப மணியடிக்க இன்னும் கொஞ்ச நேரமே இருந்தது. மாணவ மாணவியர்கள் மும்முரமாக கடைசி நேரத்திலும் முட்டிக்கொண்டிருந்தார்கள். சிலர் பக்திப் பழமாக விபூதியெல்லாம் இட்டுக்கொண்டு இல்லாத சகுனங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ராசியான பேனா, பென்சில், ஸ்கேல், எல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்று ஒருமுறை சரிபார்க்கப்பட்டன. சில நன்றாக படிக்கும் அதிமேதாவிகள் பாராமல் படபடவென ஒப்பித்து பக்கத்திலிருந்தவர்களின் வயிற்றில் புளி வார்த்துக் கொண்டிருந்தார்கள். அரைகுறையாகப் படித்தவர்களுக்கு இவர்கள் ஒப்புவித்த வேகத்திலேயே எல்லாம் மறந்துவிட்டது போல இருந்தது. சிலர் ஒரு சிட்டிகை உப்பு, பெருங்காயம் போட்டு கரைத்துக் குடித்துவிடுகிற ரேஞ்சில் புஸ்தகத்திற்குள் மண்டையை விட்டுத் தட்டிக்கொண்டிருந்தார்கள். எல்லாம் மணியடிக்கும் வரையில் தான்.

எல்லோரும் இடம் பார்த்து உட்கார்ந்து வினாத் தாளும் குடுத்தாகிவிட்டது. தெரிந்த கேள்வி வந்திருக்கா இல்ல புட்டுக்குமா...என்ற அவசரத்தில் வினாத்தாள் சரசரக்கும் சத்தம் அடங்கி எல்லோரும் எழுத ஆரம்பித்தார்கள். புட்டுகிற கேஸ்கள் மட்டும் நகத்தைக் கடித்துக் கொண்டு ஐன்ஸ்டீன் மாதிரி யோசித்தாலாவது எதாவது எழுத முடியுமா என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். அரைகுறைகள் கண்ணை மூடி தியானம் பண்ணி குண்டலினியிலிருந்து விடைகளை இழுத்து வெளிக் கொண்டுவர பிரயத்தனப் பட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவனுக்கு என்ன செய்யவென்று தெரியவில்லை. ஒரு முறை நிதானமாக எல்லோரையும் நோட்டம் விட்டான். கொஸ்டின் பேப்பரை ஒரு முறை பார்த்தான். அவையெல்லாம் படித்த மாதிரியே இல்லை.சொறிகிற வாக்கில் கை போன போது தான் பாக்கெட்டில் அந்த பேப்பர் தட்டுப் பட்டது. "இது எப்பிடி இங்கு வந்தது? "அவனுக்கு திக்கென்று இருந்தது. எப்பிடி இதைப் பற்றி மறந்து போனான்? நேற்று இரவு வைத்த நியாபகம் வந்தது. வேணுமென்றே அதை சட்டைப் பையில் வைக்கவில்லை. நியாபகம் வந்திருந்தால் இதை வெளியிலேயே பையில் பத்திரமாக வைத்துவிட்டு வந்திருப்பான். இப்பொழுது பையில் இருக்கு என்று தெரிந்தவுடன் மனசு கிடந்து அடிக்க ஆரம்பித்தது அவனுக்கு.

சே மாட்டிக் கொண்டால் மானமே போய்விடும்...வெறும் ஸ்கூல் தேர்வு என்றாலாவது ஒன்றும் செய்யமாட்டார்கள்..இது பொதுத் தேர்வு வேறு...பறக்கும் படை வேறு திடீர் திடீரென்று வருவார்கள். மாட்டிக் கொண்டால் விஷயம் ஸ்கூல் முழுவதும் பரவிவிடும்.

அவனுக்கு ஒரு பயமாக இருந்தாலும் "ப்ளையிங் ஸ்காவர்ட் வந்தால் பார்த்துக் கொள்ளலாம்...நேற்று தான் வந்திருக்கிறார்கள் இன்று வேறு பள்ளிக்குத் தான் போவர்கள் இங்கேயே திரும்பவும் வரமாட்டார்கள் " தைரியம் ஆறுதல் சொன்னது.

சுற்றுமுற்றும் ஒருதடவைக்கு இரண்டு தடவை பார்த்துக் கொண்டு...ஒருத்தரும் பார்க்காத போது சடக்கென்று பையிலிருந்து எடுத்து வினாத்தாளுக்குப் பின்னால் ஒளித்து வைத்துவிட்டான். லாவாகமாக ஒளித்து வைத்தாலும் பார்த்து எழுதுவது கொஞ்சம் சிரமமாக இருந்தது. லேசாக குனிந்து பேப்பர்களை மறைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தான். இது கொஞ்சம் சௌகரியமாக இருந்தது.

பத்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது...இவனுக்காகவே காத்திருந்தது போல ப்ளையிங் ஸ்காவர்ட் 'திபு திபுவென' நுழைந்துவிட்டார்கள். மொத்தம் நாலு பேர். இவன் மும்முரமாக எழுதிக் கொண்டிருந்ததால் அவர்கள் வந்ததை கவனிக்கத் தவறிவிட்டான். எழுந்த எல்லோரையும் உட்காரச் சொல்லிவிட்டு மளமளவென்று காரியத்தில் இறங்கிவிட்டார்கள். "சிட்டிஸன்" படத்தில் அஜீத் முழிப்பது மாதிரி முழித்துக் கொண்டிருந்த இரண்டு பேர்களின் பேப்பர்களை சோதனை போட்டார்கள். இவனுக்கு இதயம் "திக் திக்" என்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. அவனையும் அறியாமல் அவன் முழி திசைக்கொன்றாக பார்த்து கள்ளப் பார்வை தொற்றிக் கொண்டது. பறக்கும் படையிலிருந்து ஒருவர் நேராக இவனிடம் வந்தார்.

"அந்த கொஸ்டீன் பேப்பர கொஞ்சம் காட்டுங்க...."

போச்சு போச்சு...மாட்டிக் கொண்டான்...அவர் நேராக அப்பிடி கேட்பார் என்று இவன் எதிர்பார்க்கவே இல்லை. இவன் தயங்குவதைப் பார்த்து அவரே பிடுங்கிக்கொண்டார்.

பிரித்த போது இவன் சொருகி வைத்திருந்த பேப்பர் "உள்ளேன் ஐய்யா" என்று கீழே விழுந்தது. எதிர்பார்த்து வந்தது கிடைத்த திருப்தி அவருக்கு. மற்றவர்களையும் கூப்பிட்டு காண்பித்தார்.

"என்ன மிஸ்டர்...இது பத்தாம் க்ளாஸ் பப்ளிக் எக்ஸாம் தெரியுமில்ல? பெண்டாட்டிக்கு லெட்டர் எழுதறதுக்கு வேற நேரம் காலமே கிடைக்கலையா...இங்க சூப்வரவைஸ் பண்றதுக்கு உங்கள போட்டிருக்கா இல்ல இந்த மாதிரி வேலை பார்கிறதுக்கு போட்டிருக்கா?"

"இல்ல சார்...வீட்டுல கொஞ்சம் பிரச்சனை அம்மா வீட்டுக்கு கோச்சுட்டு போயிட்டா அதான்.."

"ப்ரின்ஸிபால் கிட்ட குடுக்கறோம்...அங்க சொல்லுங்க விளகத்த..."

அவனுக்கு அதற்கப்புறம் என்னவோ வியர்ப்பது நின்றுவிட்டது.

Thursday, December 01, 2005

கடல் புறா

சாண்டில்யனின் எழுத்துக்களை ரொம்ப படித்ததில்லை. விடலைப் பருவத்தில் குமுதத்தில் அவர் கதைகளுகளுடன் வரும் சித்திரங்களை யாரும் பார்க்கவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு நைஸாகப் பார்த்து இருக்கிறேன். சித்திரங்களில் அவர் கதாநாயகிகள் எல்லாம் நல்ல வனப்புடன் இருப்பார்கள். இங்குள்ள நூலகத்தின் புண்யத்தில் அவர் எழுத்துக்களை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். சமீபத்தில் கடல் புறா படிக்க நேர்ந்தது. முதல் பாகம் மட்டும் தான் கிடைத்தது. மற்ற பாகங்கள் கிடைக்கவில்லையே என்று ரொம்ப நாளாக எடுக்காமல் இருந்தேன். இந்த முறை எடுத்துப் படித்துவிட்டேன். என்ன ஒரு விறுவிறுப்பு, காதலை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார். காதல் என்பதை விட ரொமேன்ஸ் (இதுக்கு தமிழில் சரியான வார்த்தை என்ன?) என்று தான் சொல்லவேண்டும். அடாடா மனுஷன் கலக்கி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படித்த பிறகு இப்பிடி விறுவிறுப்பாக இன்னோரு நாவல் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த எனக்கு இது ரொம்பவே பிடித்தது. பொன்னியின் செல்வன் விறுவிறுப்புக்கு சற்றும் குறைந்ததல்ல கடல் புறா. ஆனால் எனக்கு நேர்ந்த கொடுமை என்னவென்றால்...பாகம் 1 மட்டும் தான் கிடைத்தது. மிச்ச பாகங்களை யாரோ புண்ணியவான் எடுத்துக்கொண்டு போய் இன்னும் திரும்பக் குடுக்கவில்லை. கதாநாயகி காஞ்சனையை நினைத்துக் கொண்டு பாயைப் பிராண்டிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு அத்தியாயத்தையும் விவிறுப்பாக முடித்திருப்பார். உணமையைச் சொன்னால் இதைப் படித்த அப்புறம் ஒரு காதல் கதை எழுத வேண்டும் என்று இருக்கிறது.(இதெல்லாம் ரொம்ப ஓவரோ?). உடனே இல்லை...எழுத்தை இன்னும் மெருகேற்றிக் கொண்டு.

கடல் புறா கிடைத்தால் படித்துப் பாருங்கள். Highly Recommended !