Sunday, March 16, 2008

தமிழ்மண வாரம் - நன்றி

ஓடியே போச்சு தமிழ்மண வாரம். என்னென்னமோ நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் இந்த ஒரு வாரமும் எனக்கு டி.பி.கஜேதிரன், வீ.சேகர் பட க்ளைமாக்ஸ் மாதிரி தான் இருந்தது. அதாவது எல்லாப் பக்கத்திலிருந்தும் ப்ரஷர் மற்றும் பிரச்சனை. இதில் தினமும் ஒரு பதிவு என்ற நிர்பந்தமும் ஒட்டிக் கொண்டது. அது என்னம்மோ தெரியவில்லை இந்த மாதிரி சன்மானங்கள் வரும் போது வேறு மன அழுத்தங்களும் சேர்ந்து கொண்டு ரொம்பவே சொதப்புகிறேன். சாயங்காலம் ஏழு/எட்டு மணிக்கு ஒரு மணி நேர தூக்கம் போட்டுவிட்டு ராத்திரி இரண்டு மணி வரை முழித்து நிர்பந்தத்தில் போடும் போஸ்ட் திருப்தியாகவே இல்லை. உங்களுக்கும் அவ்வாறே இருந்திருக்கலாம். உங்களுக்கு எதிர்பார்ப்புகள் இருந்து அதில் ஏமாற்றியிருந்தால் வருந்துகிறேன். இந்த தினமும் ஒரு பதிவு நிர்பந்தம் மட்டும் இல்லாதிருந்தால் இந்த வாரம் பந்திந்தவைகளில் முக்கால்வாசி பதிவுகளை பப்ளிஷ் செய்துஇருக்கமாட்டேன்.எனக்கு அவற்றில் முக்கால் வாசி பதிவுகள் மனதுக்கு நிறைவே இல்லை. நான் பெரிய இவன் என்ற தொனியில் இதையெல்லாம் சொல்லவில்லை, என்னுடைய க்ரியேட்டிவிட்டி டைம் பிரஷ்ஷரில் வேலை செய்ய திறமையில்லாது என்பதை மட்டுமே பகிர்ந்துகொள்கிறேன். இந்த நிதமும் ஒரு பதிவு என்பது தமிழ்மண ஆங்கிளில் நூற் சதவீதம் சரியானது. நான் அதைக் குற்றம் சொல்ல்வே இல்லை. என்னுடைய திறமை அதில் பல்லிளித்தது என்பதை சுட்டிக் காடுகிறேன். இந்த புரிதலோடு, இனிமேல் இந்த மாதிரி பொறுப்புகள் ஏற்றுக்கொள்வதை ஜாக்கிரைதையாகக் கையாளவேண்டும் என்ற படிப்பினை கற்றுக்கொண்டிருக்கிறேன்.

எனது சொதபல்களுக்கு இடையிலும் பாராட்டி என்னை ஊக்குவித்த உங்கள் அத்தனை பேருக்கும் நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

தமிழ்மணம் நட்சத்திரம் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு.(நான் சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்). எனக்கும் இந்த வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாகத்துக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்மணம் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள்!!

Saturday, March 15, 2008

அவன் அவள் அது

ஸ்வேதாவுக்கு படபடப்பாய் இருந்தது. தான் எடுத்த முடிவு சரியா என்பதிலேயே அவள் மனம் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தது. ஒரு கையில் திணிக்கப்பட்ட ஏர் பேக்குடனும் இன்னொரு கையில் அதுவாக வந்து ஒட்டிக்கொண்ட நடுக்கத்துடனும் இன்னும் விடியாத கருக்கலில் ஆனந்துடன் நின்று கொண்டிருந்தாள்.

" ஆனந்த் அங்க பாரு ரோட்டுல வர்றவன் போறவன்லாம் ஒரு மாதிரியா என்னையே பார்க்கிறான் எனக்கு ரொம்ப கூசுது"

"ஸ்வேதா நீ ரொம்ப டென்ஷனாகிற...அவ்வளவு தான் அவங்க உன்னை பார்க்கலை..."

"நாம பண்றது சரிதானா. வீட்டுல இருக்கிறவங்களுக்கு துரோகம் பண்றோமா..."

"இதோ பாரு ஸ்வேதா நீ ஏன் இத துரோகம்ன்னு நினைக்கிறன்னு எனக்குப் புரியவே இல்லை..திரும்ப திரும்ப மனசப் போட்டு குழப்பிக்காத நாமளும் வேற வழியில்லாம தானே இந்த முடிவுக்கு வந்திருக்கோம்?"

"எவ்வளவு ஈசியா சொல்லிட்ட நீ...நம்மள எவ்வளவு பாடுபட்டு நம்ம பெற்றோர் வளர்த்திருப்பாங்க, நம்ம சந்தோஷத்துக்காக எவ்வளவு ஒவ்வொன்னா பார்த்துப் பார்த்து செஞ்சிருப்பாங்க, எங்க வீட்டுல அதுவும் எங்கப்பா அம்மாலாம் என்ன தங்கத் தட்டுல வைச்சு தாங்கினாங்க தெரியுமா?.."

"இதோ பாரு எல்லா அம்மா அப்பாவும் அது மாதிரி தான்..."

"இல்லைங்கல ஆனா அவங்கள ஏமாத்திட்டு அவங்களுக்குத் தெரியாம இப்படி செய்யறோமே என் மனசு ஒத்துக்கவே இல்லை..."

"இது பத்தி நாம ஏற்கனவே நிறைய பேசியாச்சு...இப்போ இத நாம அவங்க கிட்ட சொன்னா புரியாது அவங்க புரிஞ்க்கவும் ட்ரை பண்ண மாட்டாங்க..நம்ம முடிவ ஏத்துக்கவும் மாட்டாங்க.அதுக்குத் தான் உன்ன லெட்டர் எழுதச் சொன்னேன். ஒரு வாரம் எல்லாரும் நமக்காக அழுவாங்க அப்புறம் பழகிடும். அடுத்த வருஷம் சகஜமாகிடுவாங்க..."

"எங்கப்பாவ நினைச்சா எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு...அவரால இதத் தாங்கவே முடியாது"

"எந்தக் காலத்துல இருக்க நீ?...இப்போ இதெல்லாம் ரொம்ப சாதாரணம்..சினிமா நியூஸ்ன்னு எல்லாத்துலயும் காட்டுறாங்க...ரெண்டு நாள்ல அவங்களே இதையெல்லாம் சொல்லி சமாதனம் ஆகிடுவாங்க."

"ஊர்ல எல்லாரும் என்ன நினைப்பாங்க என்னப் பத்தி...ரொம்பக் கேவலமா பேசுவாங்க"

"லெட் மீ மேக் ஒன் திங்க் க்ளியர்...நீ என்னிக்குமே ஊரப் பத்தி கவலப் படாத...எல்லாருக்கும் அவங்க பொழப்ப பார்க்கவே டைம் கிடையாது...போற போக்குல எதையாவது சொல்லிட்டு போவாங்க...அதையெல்லாம் கண்டுக்கவே கூடாது. உனக்காக உன்னுடைய முடிவுகளை எடுக்கனுமே தவிர ஊருக்காக இல்லை...அவங்க வந்து குடித்தனம் பண்ணப் போறது இல்ல..நீ தான்.."

"பஸ் வந்தாச்சு பாரு வா..."

ஸ்வேதா கைகள் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது, ஆனந்த் ஓடிப்போய் வாட்டர் பாட்டில் வாங்கி அருகில் அமர்ந்தான்.

"ஸ்வேதா அன்ஃபார்சுனேட்லி நமக்கு கல்யாணமாகி ஒரு வருஷம் ஆனாலும் நம்ம ரெண்டுபேரோடு டேஸ்டும் விருப்பங்களும் வேற வேற. இந்த டைவேர்ஸ் முடிவு நாம விரும்பி எடுத்துகிட்டது இல்லை ஆனா இதில்லாம நாம் சேர்ந்திருந்தோம்னா நமக்குள்ள வருத்தங்களும் பிர்ச்சனைகளும் தான் நிறைய வரும். சினிமால காட்டுற மாதிரி அடிதடி அசிங்களெல்லாம் ஆகாட்டாலும் வீ ஹேவ் அ ஃலைப் டு லிவ். நீ இனிமே உனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் கண்டிப்பா வாழ்க்கை அமையும். அடுத்த முறையாவது உன்னோட விருப்பங்களை வாயத் தொறந்து சொல்லி உனக்கு பிடிச்ச வாழ்க்கையா அமைச்சுக்கோ..டோன்ட் பி இமோஷனல் .எல்லாத்துக்கும் தேங்க்ஸ்.."

ஆனந்த் எழுந்து போவதை வெறித்த படியே பார்த்துக்கொண்டிருந்தாள்.பஸ் ஸ்வேதாவின் ஊரை அடைந்த போது ஸ்வேதாவின் அப்பா அவளுக்காக பஸ்ஸ்டாண்டில் காத்துக் கொன்டிருந்தார்.

Friday, March 14, 2008

ஒரு டுபுக்கு டைரக்டராகிறார் - 3

எடுக்கப் போகிற படம் இன்னது என்று ஒரு சிறுகுறிப்பு வரைந்து காட்சியமைப்புகளை மனதில் இருத்திக்கொண்டு "ஓ.கே யூனிட் நாம இன்னிக்கு படம் எடுக்க போறோம்"ன்னு அறிக்கை விட்டாச்சு. அடக்கம் அமரருள் உய்க்கும்ன்னு திருவள்ளுவர் சொன்னது "அடக்கம்னா அமரர் ஊர்தில இஸ்திகினு போவாங்க"ன்னு என்று தான் எனக்கு அர்த்தமாகியிருக்கிறது என்பதால்
"இந்த ப்ளானிங் இருக்கு பார்த்தியா அது தான் முக்கியம். எல்லாத்தையும் கரெக்ட்டா ப்ளான் பண்ணிட்டோம்ன்னு வை...அப்புறம் அசால்ட்டா இடது கையால பத்தே நிமிஷத்துல படத்த முடிச்சிரலாம்"ன்னு நான் அடக்கமா சொல்லும் போது மணி எட்டு.

செல்லப் பெண்கள் இருவரும் காஸ்டியூம் சேஞ்சுக்குப் போயாச்சு. எல்லாத்துலையும் தான் மூக்கை நுழைப்போமே. காமிராக்கு என்ன கலர் பிடிக்கும்ன்னு தெரியாவிட்டாலும் சும்மா இது அடிக்க வர்ற மாதிரி இருக்கும் இந்த கலர் ஒத்து வராதுன்னு அங்கேயே கொஞ்சம் பெண்டு நிமிர்ந்துவிட்டது.

லைட்டிங் பற்றி நிறையபேர் கேட்டிருப்பதால் சொல்லிவிடுகிறேன். உண்மையாக லைட்டிங் தான் நான் ரொம்ப மெனெக்கெட்டது. முதலில் ஃப்ளட் லைட் ஒன்று வாங்கி அதன் மேல் மெல்லிய துண்டை போட்டு (ஷார்ப்பாக இல்லாமல் கொஞ்சம் சாப்ட் ஆக்குவதற்க்கு) உபயோகிக்கலாமா என்று யோசித்தேன் ஆனால் ஃப்ளட் லைட் எல்லாம் ஆயிரம் வாட்ஸ். அது கக்குகிற சூட்டுக்கு துண்டை அதற்கு மேல் போட்டு தீபற்றி விட்டால் அப்புறம் தலையில் தான் துண்டை போடவேண்டும் என்பதால் ஐடியா மெகா பட்ஜெட் படத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இருந்த ப்ளோர் லேம்ப்பில் நூறைம்பது வாட்ஸ் பல்பைப் பொறுத்தி இது போக இன்னொரு மேஜை விளைக்கை ஆங்கிளில் வைத்தேன். இவை எதுவும் கேமிரா ஆங்கிளில் ரிப்ளக்க்ஷனில் வந்துவிடக்கூடாதே என்று இரண்டு மூன்று தடவை பார்த்துக்கொண்டேன். இருந்தாலும் ஒரே ஒரு ஷாட்டில் லைட்டிங் கிச்சன் சுவர் டைல்ஸில் ரிப்ளக்க்ஷன் இருக்கும். அந்த ஷாட்டில் மகளின் முகபாவனை பிடித்துப் போனதால் இருக்கட்டும் என்று வைத்துவிட்டேன்.

முதல் சீன் அடுக்களையில் சாப்பிடுவது மாதிரி. இருவருக்கும் சாப்பாடு நேரமாதாலால் பசி வேறு. முதல் கொஞ்ச நேரம் கேமிராவை ட்ரைபாடில் வைத்துவிட்டு ஆன் செய்யாமலே காமிரா பழகட்டுமே என்று எடுப்பது மாதிரி நடித்தேன். கேமிராவை பார்க்காதீர்கள் என்பதைத் தவிர ஏதும் சொல்லாமல் விட்டுவிட்டேன். மூத்த மகள் சின்னதை மேய்ப்பதில் வெகு சாமர்த்தியமாக செயல்பட்டார். சின்ன மகளிடம் ரியலாக ஸ்கூலில் நடந்ததைப் பற்றி உரையாட ஆரம்பித்துவிட்டாள். ஓ.கே டேக்குக்கு போகலாம் என்று கேமிராவை ஆன் செய்ய எத்தனித்த போது பார்த்தால் அவர்கள் தட்டிலிருந்த பிரெட் காலியாகியிருந்தது. வீட்டில் வேறு ப்ரெட் இல்லை.

இதுக்குத் தான் ப்ளான் பண்ணி வீட்டுக்குப் பக்கத்தில் கடை இருக்கிற மாதிரி பார்த்துக்கொண்டேன் என்று ஓடிப்போய் ப்ரெட்வாங்கி வந்தாயிற்று. வழக்கமாய் ஏதாவது சேட்டை பண்ணுவீர்களே இன்னிக்கு எதாவது சேட்டை பண்ணுங்கள் என்று கேமிராக்கு பின்னாலிருந்து குரல் குடுத்தால் "லூஸாப்பா நீயி..." என்று ஒரு லுக்கு விட்டு சின்னப் பெண் "சேட்டை பண்ணுவது நல்ல பழக்கம் இல்லை " என்று நமக்கே பாடம் போதித்தாள். இல்லைடா செல்லம் இன்னிக்கு எதாவது குறும்பு பண்ணு என்று கெஞ்ச வேண்டியதாகிவிட்டது. அப்புறம் "இதெல்லாம் சரி பண்ணி வைக்கிறதில்லையா"ன்னு அசிஸ்டன்ட் டைரக்டரிம் சொல்லி கரெக்ட் செய்தோம்.

"இந்த லைட்டிங் இருக்கு பார்த்தியா இத இப்படி வைச்சா சூப்பரா இருக்கும்"ன்னு சொல்லி வைத்துவிட்டு திரும்பும் போது எங்கிருந்தோ வயர் தானாக வந்து காலில் சுருட்டிக் கொண்டு டேபிள் லாம்ப்பையும் சேர்த்து இழுத்து கிளிங்கிவிட்டது. டேபிள் லாம்ப்பின் கண்ணாடி முழுவதும் சுக்குநூறாகவில்லை என்பதால் உடைந்த பக்கத்திலிருந்து ஒரு மாதிரியும் உடையாத பக்கத்திலிருந்து ஒருமாதிரியும் வெளிச்சம் வந்து அதுவும் நன்றாகத் தான் இருந்தது. "இங்க இன்னும் கொஞ்சம் லேசா உடைஞ்சிருக்கனும் அப்பத் தான் லைட்டிங் நான் எதிர்பார்த்த மாதிரி வரும். அதுக்குத் தான் எய்ம் பண்ணி தட்டிவிட்டேன்...இங்க உடையாம சொதப்பிடிச்சு இட்ஸ் ஒக்கே போஸ்ட் பொரெடக்க்ஷன்ல டச்சிங்கல சரி பண்ணிடலாம்" என்று உதாரிவிட்டு திரும்பினால் தங்கமணி இந்த இம்சைக்கு சீரியல் இம்சையே பெட்டர் என்று எஸ்ஸாகியிருந்தார்.

அப்புறம் ஒரு வழியாக மிச்சத்தையும் முடிப்பதற்க்குள் குழந்தைகளுக்கு உண்மையிலேயே தூக்கம் வந்துவிட்டது. டைரக்டர் அதுக்குத் தானே ப்ளான் பண்ணியிருந்தார். ஒரு மூன்று நாள் இரவு கண்முழித்து எடிட்டிங் மிக்ஸிங் எல்லாம் முடிந்தது. படத்துக்கு பெயர் வைப்பதற்க்கு தான் கொஞ்சம் முட்டிவிட்டது. என்னடா வழின்னு யோசிச்சு எல்லாருக்கும் வாசல் தான் வழின்னு என்ற டயலாக் நியாபகார்த்தமாக "தி டோர்" என்று பெயர் சூட்டி இங்கே ரிலீஸும் பண்ணியாச்சு.

இங்கே நான் மிக மிக முக்கியமாக நன்றி சொல்லவேண்டியது - அம்மணிக்கு. அவர்கள் ஒரு மென்டராக இருந்து நிறைய உதவி செய்தார்கள். அவரக்ளுக்கு எனது மனமார்ந்த நன்றி.

நிற்க. படம் எடுக்க உபயோகப்படுத்திய உபகரணங்கள் விபரங்கள் நிறைய பேர் கேட்டிருந்தார்கள். வீடியோ கேமிரா - கேனான் எம்.வி.730ஐ (இப்போ இது கொஞ்சம் பழைய மாடல் தான்). ப்ளோர் லாம்ப் - 2, டேபிள் லாம்ப் - 1 ( கண்ணாடியில் ஈசானி மூலையில் அரைக்கு முக்கால் இஞ்ச் உடைத்துக் கொள்ளவேண்டும் அப்போ தான் நான் எடுத்த எஃபெக்ட் கிடக்கும் :) ) நிறைய இடமிருக்கும் ஹார்ட் டிஸ்க்குடன் கூடிய கம்ப்யூட்டர். மென்பொருள் - அடோபி மற்றும் விண்டோஸ் மூவி மேக்கர்.

Wednesday, March 12, 2008

எனது முதல் குறும்படம் இதோ

ஒரு சராசரி படைப்பாளிக்கு இருக்கும் படபடப்போடும், ஆர்வத்தோடும் இதோ எனது முதல் குறும்பட முயற்சியை உங்களுக்கு முன் வைக்கிறேன். எந்த பயிற்சியும் அனுபவுமும் இல்லாமல் எனது கேள்வி/பார்வை ஞானத்தில் விளைந்த முதல் முயற்சி என்பதால் நிறைய குறைகள் தென்படலாம். "என்னய்யா படம் எடுத்திருக்க வெங்காயம் என்பது உள்பட உங்கள் மனதில் தோன்றுவதை தாராளமாக நீங்கள் சொல்லலாம். சொன்னால் அடுத்த முயற்சியின் போது அவற்றை கவனத்தில் கொள்ள வசதியாக இருக்கும். சரி ரொம்ப வளவளன்னு பேசாமல் இதோ.

யூ டியூப் சைட்டில் நேராக பார்ப்பதற்க்கு - http://www.youtube.com/watch?v=CKYASKoOCB8

வளவள வம்படி வழக்கம் போல் நாளையிலிருந்து தொடரும். படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் குடுக்கப்போகும் ஃபீட்பேக்குக்கு ஆர்வத்தோடு காத்துக்கொண்டிருக்கிறேன்.

Update - சத்யப்ரியன் வேண்டுகோளுக்கிணங்க - இசை - மனு ராமேசன் படம் - பிடிச்சிருக்கு

பார்ப்பவர்கள் கவனத்தில் கொள்ள - வீடியோ கம்ப்ரெஷன் மிகவும் திணறிவிட்டேன். யூ டியூபில் இந்த குறும்படம் பெரிதாக்கினால் கொஞ்சம் பிசிறடிக்கிறது -

தடங்கலுக்கு..

மன்னிக்கவும். நேற்று இரவு இரண்டு மணி வரை முழித்து அடுத்த பதிவுக்காக அப்லோடு செய்துகொண்டிருந்த போது இன்டர்நெட் கனெக்க்ஷன் அறுந்து விட்டது. நான் வழக்கமாய் செய்யும் சில முட்டாள்தனங்களால் சேமித்து வைக்காமல் நேற்று செய்த வேலையை தொலைத்துவிட்டேன். சில நாட்களாகவே எனது ப்ராட்பாண்ட்டில் பிரச்சனை இருக்கின்றது. இரண்டு மணிக்கு திரும்பவும் கஷ்டமர் சர்வீஸைக் கூப்பிட்டு சாமியாடியதில் அவர்கள் கம்பெனி புலிக்கு புண்ணாக்கும் தண்ணியும் வைக்கவில்லை அதனால் நான் பச்சைக் கலர் டவுசர் போட்டுக்கொள்ள முடியாது என்றும் மேற்கூறிய காரணங்களால் இன்றைக்கு மழை வராது என்றும் அதற்காக அவர்கள் மிகவும் வருந்துகிறார்கள் எனவும் தெரிவித்தார்கள். இதெயெல்லாம் என்ன மாதிரி இளிச்சவாயன்கள் தான் நம்புவார்கள் ஸ்டார் வாரத்தில் தமிழ்மண சமூகம் என்னைப் பின்னிப் பெடலெடுத்துவிடும் "நீவீர் கம்பெனி குலம் வாழ்க உங்க சீ.இ.ஓ தலையில் இடி விழட்டும், உங்கள் கமெபெனி கான்டீன் மண்ணோடு மண்ணாகப் போகட்டும்" என்று வாழ்த்துப் பா பாடி போனை வைத்தேன். இப்பொழுது திரும்ப கனெக்க்ஷன் வந்துவிட்டது என்று ஓலை அனுப்பியிருக்கிறார்கள்.

ஆதலினால் படிக்கும் நீங்கள் கொஞ்சம் பொருத்தருள வேண்டும் இன்னும் 8 மணி நேரத்தில் நான் எடுத்த குறும்படத்தை இங்கே வேர்ல்ட் ரிலிஸ் செய்துவிடுகிறேன் :)). படத்தைப் பார்த்து உங்கள் மேலான கருத்துக்களை சொல்லி தயை புரியவேண்டும்.

Tuesday, March 11, 2008

ஒரு டுபுக்கு டைரக்டராகிறார் - 2

ஒரு தன்னிலை விளக்கம் இங்கே குடுத்துவிடுகிறேன். எனக்கு படமெடுக்கும் அனுபவம் பூஜ்ஜியத்துக்குப் பக்கம். நான் தமிழ், இந்தி, ஆங்கிலம், தேர்ந்தெடுத்த தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களை மட்டுமே பார்ப்பேன் பார்த்திருக்கிறேன். ஆங்கிலத்திலும் என்னுடைய டேஸ்ட் ரொம்ப ரொம்ப சராசரியானது தான். எனக்கு ஆர்ட் ஃப்லிம்ஸ் என்பதை விட திரைக்கதையில் சித்து வேலை காட்டி மயக்கும் படங்கள் மிகவும் பிடிக்கும். பார்வையாளர்களைக் கட்டிப் போட திரைக்கதை தான் அஸ்திவாரம் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளவன். கதை சொல்லும் யுக்தி ரொம்ப முக்கியம். தம் அடிப்பதற்க்கோ கைக்கடிகாரத்தை பார்ப்பதற்க்கோ பார்வையாளர்களுக்கு திரைக்கதை சந்தர்ப்பமே அளிக்கக்கூடாது. அவர்களை படத்தோடு ஒன்றிப்போக வைக்கவேண்டும். நீங்கள் நல்ல படம் என்று நினைக்கும் எந்த படமும் இந்த கிரைட்டீரியாவில் சோடை போகாது.

இது போக சிலபடங்களில் டைரக்டரின் அறிவுஜீவித்தனம் படத்திற்கு மேலும் மெருகூட்டும். இந்த மாதிரிப் படங்கள் இந்தக் காரணத்துக்காக எனக்கு வெகுநாள் மனதில் நிற்கும். மனோஜ் ஷ்யாமளனின் சிக்ஸ்த் சென்ஸ் மற்றும் தி வில்லேஜ், தி ரிங்க், விருமாண்டி, காக்க காக்க(சில இடங்கள்) போன்றவை எனக்கு உடனே மனதில் தோன்றும் உதாரணங்கள். ஸ்கிரீன் ப்ளே வித்தை தெரிந்தால் நமக்கு தெரிந்த ஒரு சாதாரண கதையைக் கூட ப்ளாகில் பின்னிப் பெடலெடுக்கலாம். நான் மிகச் சிறந்த பதிவுகள் என்று நினைக்கும் பதிவுகளில் இதுவும் ஒன்று. ஆசிப் அண்ணாச்சி வித்தை காட்டியிருப்பார் படித்துப் பாருங்கள்.

வலுவான திரைக்கதைக்கு தமிழில் நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு தங்கர் பச்சானின் திரைக்கதை பிடிக்கும், சமீபத்தில் வந்த ஒன்பது ரூபாய் நோட்டு பிடித்தது. இதுபோக கல்லூரி, அஞ்சாதே, பிடிச்சிருக்கு எல்லா படங்களிலும் கட்டிப்போட வைக்கும் திரைக்கதை அமைப்பு.

இதைத் தாண்டி சினிமாவையே வாழ்ந்து கொண்டிருப்பவரக்ள் ஈடுபாடுடன் எடுக்கும் படங்களைச் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு இன்றளவுக்கும் சினிமா யுனிவர்சிட்டியாக இருப்பது "லார்ட் ஆப் த ரிங்க்ஸ்". இந்தப் படத்தை இதுவரை எத்தனை தடவை பார்த்திருக்கிறேன் என்ற கணக்க்கு வைத்துக்கொள்ளவில்லை ஆனால் ஓவ்வொரு தடவை பார்க்கும்போதும் பீட்டர் ஜாக்ஸனின் ஈடுபாடு படத்தில் ப்ரேமுக்கு ப்ரேம் தெரியும், மெய்சிலிர்க்க வைக்கும். சாண்டில்யனின் "கடல் புறா"வை துளியும் சுவாரசியம் குறையாமல் எடுக்க பீட்டர் ஜாக்ஸனினால் மட்டும் தான் முடியும் என்று நான் திடமாக நம்புகிறேன். இத்துனை ஈடுபாடு கொண்டவர்கள் வேறு யாரையும் நான் இன்று வரை கேள்விப்பட்டதில்லை.

குறும் படங்களோ, முழுப் படங்களோ எதுவாகிலும் எடுப்பதற்கு ப்ரொபஷனல் கேமிரா வேண்டும், மற்றபடி பெரிய பெரிய உபகரணங்கள் வேண்டும் என்ற என் எண்ணத்தை அன்றைக்கு என்னை வைத்து குறும் படமெடுத்த அம்மணி உடைத்தெறிந்தார். குறும்படங்களை பொறுத்த வரை உங்கள் க்ரியேட்டிவிட்டி தான் முக்கியம் மற்றபடி உபகரணங்கள் எல்லாம் பெரிய பொருட்டே இல்லை என்ற பால பாடத்தை போதித்தார். மொபைல் ஃபோன் கேமிராவில் கூட சில வெள்ளைக்காரர்கள் பிஸ்து காட்டியிருக்கிறார்கள் என்ற அவர் சொன்ன போது கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

சரி முதலில் ஒரு குறும் படம் மாதிரி ஒன்னு எடுக்கலாம் என்று கிளம்பிவிட்டேன். நான் ஹெல்ப் பண்ணட்டுமான்னு என் இரண்டு பெண்களும் குஷியாகிவிட்டார்கள். தங்கமணி "இதெல்லாம் படமெடுத்து தேறின மாதிரி தான்" என்று உஷாராக வெளியிலிருந்து மட்டுமே ஆதரவு என்று கையை விரித்துவிட்டார். "சீக்கிரம் சாப்பாடு போடும்மா...முடிச்சிட்டு டைரக்டருக்கு ஸ்டோரி டிஸ்கஷன் இருக்கு..." அலம்பலெல்லாம் முதல் கொஞ்ச நாட்கள் வொர்க் அவுட் ஆயிற்று. ஆனால் எதைப் பற்றி எடுப்பது என்று மண்டை காய்ந்துவிட்டது. பாட்டு கேட்டால் கிரியேட்டிவிட்டி கூடுமென்று பெட்ரூமில் கதவைச் சாத்திக் கொண்டு பாட்டை ஓடவிட்டதில் தூக்கம் சொக்கியதே தவிர கிரியேட்டிவிட்டி கிணத்தில் போட்ட கல்லாக இருந்தது. மூனு மணிக்கு டீயும் மிளகாய் பஜ்ஜியும் சாப்பிட்டால் கிரியேட்டிவிட்டி களை கட்டும் என்று தங்கமணியை தாஜா கட்டி ஒரு தரம் ஓடியது. இருந்தாலும் க்ரியேட்டிவிட்டி கிலோ என்ன விலை என்று பல்லைக் காட்டிக் கொண்டிருந்தது.

சரி இன்டர்நெட்டை மேய்ந்தால் எதாவது ஐடியா கிடைக்கும் என்று மேய்ந்ததில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன் நடிக்கும் போது முத்தா குடுக்க ரொம்ப கூச்சப் படுகிறார் என்று கதாநாயகியே இழுத்துபிடித்து முத்தா குடுத்து டேக்கை ஓக்கே செய்தார் என்று நண்பன் அனுப்பிய துணுக்கில் பிலிம் டெக்னாலஜி பற்றி நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த கிசு கிசு படிக்கிறதுக்கெல்லாம் மிளகாய் பஜ்ஜி போட்டு கட்டுப்படியாகாது என்று தங்கமணி வெளியிலிருந்து குடுத்த ஆதரவையும் வாபஸ் வாங்கிவிட்டார்.

சரி நமக்கு இந்த படம் எடுக்கிறதெல்லாம் வொர்க் அவுட் ஆகாது "என்னய்யா படம் எடுத்திருக்கான் வெங்காயம்"ன்னு திரைவிமர்சனத்துக்கே போய்விடலாமா என்று கூட யோசித்தேன். தங்கமணி வேறு சிரிப்பான சிரிப்பாய் சிரித்து பிரஷரை ஏத்திக் கொண்டிருந்தார்.

சரி இதுக்குமேல ஆகாது என்று ஏனோதானோ என்று படப்பிடிப்பு ஆரம்பமானது.

-தொடரும்

Monday, March 10, 2008

ஒரு டுபுக்கு டைரக்டராகிறார்

இந்தியாவில் இருந்த வரைக்கும் சினிமாவில் ரொம்ப அதீத ஈடுபாடு கிடையாது. சத்யமில்லோ தேவி பாரடைஸிலோ வூஃபர் அதிர ஹாலிவுட் படங்கள் பார்க்கும் போது "என்னம்மா படமெடுத்திருக்கான்யா"ன்னு கொஞ்சம் ஜிவ்வுன்னு இருக்கும். துப்பாக்கியை எடுத்து நாலு பேரை பொட்டு பொட்டுன்னு போட்டுத் தள்ளிட்டு ஹெலிகாப்டரில் உலகைக் காப்பாற்ற கிளம்பலாமான்னு உள்ளம் துடிக்கும் போது 12ஜி பிதுங்கிக் கொண்டு வந்து தாவைத் தீர்க்கும் . இத்தனைக்கும் அப்போது நான் பார்த்த படங்களெல்லாம் "இன்டிபென்டஸ் டே", "ஜூராஸிக் பார்க்", "ஸ்பீட்" போன்ற கமெர்சியல் மசாலாக்கள் தான். பிஜிஎம் இல்லாமல் நாயகனும் நாயகியும் ஒருவர் கண்ணை ஒருவர் உற்றுப் பார்த்துக் கொண்டு உணர்ச்சிகளைப் பரிமாரிக்கொள்ளும் தி சோ கால்ட் "ஆர்ட் மூவிஸ்" பக்கமெல்லாம் மெட்ராஸ் வெய்யிலுக்கு கூட ஒதுங்கினதே இல்லை. ஒரே ஒரு தரம் மட்டும் பிரிட்டிஷ் ஹைகமிஷன் லைப்ரரியில் மெம்பராய் இருந்த போது ஓசிக்கு ஏ.சி தியேட்டரில் படம் போடுகிறார்கள் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு போய் எக்கச்சக்கமாய் மாட்டிக்கொண்டேன். சினிமா தியேட்டர் மாதிரி அங்கு ஈ.ஸியாய் எழுந்தெல்லம் வர முடியாது எல்லாரும் ஒரு மாதிரியாய் பார்ப்பார்கள் (என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன்). பட்டினத்தார் மாதிரி நாயகன் நாயகியை மருந்துக் கூட தொட்டுக்கொள்ளாமல் வள வளாவென்று கதா காலட்சேபம் நடத்திக்கொண்டிருந்தான். இந்த இழவுக்கு இண்டர்வெல் வேறு கிடையாது. ஓசி டீக்கு என்ன பேசறான், எதைப் பத்தி பேசறான்னு தெரியாத இந்த கொசுக்கடியை எல்லாம் நம்மால் தாங்க முடியாது என்று பிரிட்டிஷ் ஹைகமிஷன் லைப்ரரி உறவை ரிசைன் பண்ணிவிட்டேன்.

ஆனாலும் பொழுது போகாத போது தப்பித் தவறி ஸ்டார் டீ.வியில் போடும் சில நல்ல படங்களைப் பார்த்திருக்கிறேன். வாழ்வியலில் சில நுண்ணிய உணர்வுகளை மெயின் கதையாக எடுத்துக் கொண்டு களமிறங்கும் தெகிரியத்தைப் பார்த்து மலைத்திருக்கிறேன். நம்மாளுங்களால ஒரு ஐயிட்டம் சாங் இல்லாமல் இந்த மாதிரியெல்லாம் முடியுமா என்று நம்ப மறுத்திருக்கிறேன். ஊரிலிருக்கும் போது கமல் படங்களைத் தவிர்த்து, திரையுலகம் என்பது எனக்கு கேபிள் டீ.வி வகுத்த எல்லை தான். இங்கிலாந்து வந்ததுக்கப்புறம் காய்ஞ்ச மாடு கம்பங்கொலயப் பார்த்த மாதிரி ஊர விட்டு வந்து ஒரே சினிமாவா பார்க்க ஆரம்பித்தோம். வார இறுதியில் தொடர்ந்து பார்க்கும் 5 படங்களில் பெரும்பாலனவை அடுத்த நாளே கதை கேட்டால் "பார்த்துட்டேன்டா என்ன கதைன்னு மறந்து போச்சு.." பெப்பே தான். வெகு சில படங்களே அசை போட வைத்திருக்கின்றன. அபூர்வமாக காதல், ப்ளாக்(இந்தி) போன்ற படங்கள் தாவாக் கட்டைய தடவிக் கொண்டு டாய்லெட்டில் மோட்டுவளையத்தைப் பார்த்துக் கொண்டு உறைய வைத்திருக்கின்றன. "எவ்வளவு நேரமாச்சு உள்ள போய்... இதுக்குத் தான் வாழைப் பழம் அடிக்கடி சாப்பிடுங்கோன்னு சொல்றேன்"ன்னு தங்கமணி சொல்லும் போது "இல்ல அந்தப் படத்துல இந்த சீன்ல.."ன்னு ஆரம்பிக்கும் போதெல்லாம் தங்கமணி "இந்த வெண்டக்காய சின்னச் சின்னதா நறுக்கிண்டே சொல்லுங்கோ"ன்னு சமையலை முடித்துவிடுவார்.

சில சமயம் வெண்டக்காய் போய் எப்போ வெங்காயம் நறுக்க ஆரம்பித்தேன் என்பது கூட தெரியாமல் ஊத்து ஊத்துன்னு ஊத்தியிருக்கிறேன். சினிமா வெண்டக்காயையும் தாண்டி புனிதமாய் போய், என்னம்மோ பத்து படம் எடுத்து அதில் எட்டு சில்வர் ஜூப்ளி போன மாதிரி ஒரு நண்பியிடம் ஃபோனில் நிறைய ப்ளேடு போட்டிருக்கிறேன். பாவம் அவரும் வேறு வழியில்லாமல் பொறுமையாய் கேட்டிருக்கிறார். கொஞ்ச நாளில் நான் ஃபோனை எடுத்தாலோ "இதக் கேளேன்"ன்னு ஆரம்பித்தாலோ "உனக்கு ஒரு தரம் சொன்னா போதாது? திருப்பி திருப்பி சொல்லனுமா துண்ட எடுத்துண்டு குளிக்கப் போன்னு எவ்வளவு நேரமா கத்திண்டு இருக்கேன்? போ..அம்மா வந்து தலைக்கு தேய்ச்சி விடறேன்"ன்னு மெசேஜ் சொல்லிவிட்டு தங்கமணி எஸ்ஸாகி விடுவார். அப்புறம் "நானாவது எஸ்ஸாக முடியுது அய்யோ பாவம் ஃபோன்ல அந்தப் பக்கம் அவங்கள்லாம் என்ன கஷ்டப்படறாங்களோ"ன்னு பேக்கிரவுண்ட் புலம்பல்ஸ் மட்டும் தான் கேட்கும்.

"நானும் ஒரு நாள் படமெடுக்கப் போறேன்"ன்னு ஒரு நாள் குண்டைத் தூக்கி போட்டதற்கு தங்கமணி அடுப்பில் பால் பொங்கினால் குடுக்கும் ரியாக்க்ஷன் கூட குடுக்கவில்லை. பிலிம் டெக்னாலஜி கோர்ஸ் சேரப் போகிறேன் அந்த பீஸுக்கு ஒரு யானையும் ரெண்டு தொரட்டியும் வாங்கலாம் என்று ஆழம் பார்த்ததுக்கும் சின்ன நமுட்டு சிரிப்பு மட்டுமே வந்தது. வேறு எதோ ஒரு தர்க்கத்துக்கு நான் சொன்ன "இதெல்லாம் இப்பத் தேவையா.." வாதத்துக்கு மட்டும் "அந்த பிலிம் டெக்னாலஜி கோர்ஸ் எவ்வளவு" என்று அமைதியாய் கேட்டார்.

இருந்தாலும் நான் நண்பர் வட்டத்தில் பிலிம் டெக்னாலஜி கோர்ஸ் சேராமலயே பிலிம் காட்டிக் கொண்டிருந்தேன். ஆனால் உஷாராக அதைப் பற்றி ரொம்ப நோண்டி நொங்கெடுக்காதவர்களிடம் மட்டும் தான் பேசுவேன். அவர்களும் "இதெல்லாம் அப்பிடியே வரதுதான்ல"ன்னு எடுத்துக் கொடுபார்கள் . இப்படியே ஃபிலிம் முத்திப் போய் "என்னம்மோ தூக்கமே வரலை..அன்னிக்கு ஒரு படத்தைப் பத்தி சொன்னீங்களே அத திரும்ப சொல்லுங்களேன்...சூப்ப்பரா சொன்னீங்க ரெண்டாவது நிமிஷமே தூக்கம் சொக்கிடிச்சு..ப்ளீஸ்"ன்னு தங்கமணி ஜோ ஜோ பண்ணுவதற்கெல்லாம் நம்ப ஃபிலிம் டெக்னாலஜியை யூஸ் பண்ண ஆரம்பித்தார்.

இப்படி சமையல் காய்கறி நறுக்குவதற்கும், ஜோ ஜோ பண்ணுவதற்கும் யூஸாகிக்கொண்டிருந்த நம்ம ஃபிலிம் டெக்னாலஜி சகாப்தத்தில் அந்த நடிக்கும் வாய்ப்பு புதிய பாதையைத் திருப்பியது.

-தொடரும்

ஸ்டாராமில்ல..

உங்களுக்கு இந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணனை நியாபகம் இருக்கிறதா? டிசம்பர் மாத கர்நாடக கச்சேரி மேடைகளில் இருப்பார், டி.நகரில் புடவை கடை திறந்து வைப்பார், தூர்தர்ஷன் நிகழ்ச்சி மேடைகளில் இருப்பார், அப்புறம் பெரம்பூரில் காயலான் கடை திறந்துவைத்துவிட்டு நேஷனல் ஹாக்கி போட்டிகளில் கோப்பை வழங்குவார். தூர்தர்ஷன் செய்திகளில் காட்டும் வீடியோ க்ளிப்புகளில் எப்படியாவது இவரைப் பார்க்கலாம். சம்பந்தமே இல்லாமல் இந்த ஆளு எல்லா இடத்துலையும் தலைய காட்டுராறென்னு நிறைய யோசித்திருக்கிறேன்.

இந்த வாரம்/மாதம் எனக்கும் (ஊழல்/சிறை தவிர்தலாக) கோபாலகிருஷ்ணன் வாரம். இது வரை எந்த வலைப்போடிகளிலுமே பரிசு வாங்கியிராத நான் பல இடங்களில் நடுவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறேன். சங்கமம் விருதுகளில் நடுவாராக போட்டார்கள், வ.வா சங்க நகைச்சுவை புகைப்பட போட்டிக்கும் நடுவராகப் போட்டார்கள் இதெல்லாம் போக தமிழ்மணத்தில் முதல் முறையாக ஸ்டாராக வெற ஆகியிருக்கிறேன்(10 மார்ச் முதல் 16 மார்ச் வரை). முன்னால் இருந்த நட்சத்திரங்கள் போட்ட பதிவுகளின் தரத்தை பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. கைப்புள்ளை அடித்து விளையாடியா ஆட்டத்துக்கெல்லாம் ஈ.டு குடுக்க முடியும் என்றெல்லாம் நம்பிக்கை இல்லை. நிதமும் ஒரு பதிவாவது போடவேண்டுமாம். என் சோம்பேறித்தனத்துக்கு வைத்த ஆப்பு. முயற்சிக்கிறேன். அடிக்கடி போஸ்ட் போடுன்னு அன்பாக மிரட்டிக் கொண்டிருந்த அன்பு உள்ளங்கள் எல்லாம் ஒழுங்காக அட்டெண்டன்ஸ் போட்டுருங்க...(நிவி, இஸ்திரி பொட்டி,பாஸ்டன் ஸ்ரீராம், ராமச்சந்திரன் மற்றும் நண்பர்கள் எல்லாரும் கவனிக்க).

நம்பள் கீ இந்த ஒரு வார இம்சைக்கு பாராட்ட நினைக்கிறான் எல்லாம் நம்பள்யும், திட்ட நினைக்கிறான் எல்லாம் தமிழ்மணத்தையும் கான்டாக்ட் செய்றான். அரே உங்கள அந்த பகவான் தான் காப்பத்தனும் !!
ஓ.கே டெக்னிக்கலா நாளைக்குத் தான் ஸ்டார் வாரம் ஆரம்பிக்குது அதுனால நாளைக்கு சந்திக்கிறேன்.