Thursday, May 24, 2007

சையன்ஸ் பிக்க்ஷன் மாதிரி..

மு.கு- இந்தப் பதிவு ரொம்ப நாள் முன்னாடி வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் அட்லாஸ் வாலிபராய் இருந்த போது(அவங்க போறாத நேரம்) எழுதியது. இங்கே மறு பதிப்பு செய்துகொள்கிறேன்.
***************************

“உட்காருங்கள்..இன்னும் பத்து நிமிஷத்தில் பிரசாத் உங்களை அழைப்பார்” - எல்லா ஆஸ்பத்திகளிலும் வழக்கமாய் சொல்லுவது போல் டாக்டர் என்று சொல்லாமல் பிரசாத் என்று அந்த அழகுப் பதுமை சொன்ன போது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“ஒருவேளை டாக்டருக்கும் ரிசப்ஷனிஸ்டுக்கும் ஒரு இது இருக்குமோ?” அவன் மனம் நதிமூலம் ஆராய முற்பட்ட போது ஒரு அதட்டு போட்டு மனதை அடக்கிக் கொண்டான். அவள் இவன் நினைப்பதையெல்லாம் பற்றி அலட்டிக் கொள்ளாமல் ஐஸ்குச்சி மாதிரி எதையோ வைத்துக் கொண்டு நளினமாய் நகத்தை ராவிக் கொண்டிருந்தாள்.

ஒரு கடி கடிச்சு இழுத்து துப்பி எறியாமல் ஏன் இந்த இழவ இப்படி சிங்காரித்துக் கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு எரிச்சலாக வந்தது. நல்லவேளை அவன் பொறுமையை இழப்பதற்கு முன்னால் பிரசாத் உள்ளே அழைத்துவிட்டார்.

“ஹலோ டாக்டர்…ஐ ஆம் சந்திரா”

“சந்திரா நீங்க என்னை பிரசாத்னே கூப்பிடலாம்..டாக்டர் எல்லாம் அவசியம் இல்லை”

“ஏன் நீங்க இன்னும் டாக்டர் பரீட்சை பாஸ் பண்ணவில்லையா?”

“ஹா ஹா குட் ஒன். சொல்லுங்க…ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ?”

“மிஸ்டர் பிரசாத் எனக்கு கொஞ்ச நாளா ஒரு பிரச்சனை. சாரி இது பிரச்சனையான்னே எனக்குத் தெரியாது…எதுக்கும் ஒரு ஒபினியன் கேட்கலாம்னு தான் வந்திருக்கேன்” - சொல்லிக் கொண்டே கொண்டுவந்திருந்த பையிலிருந்து அந்த அழகான கடிகாரத்தை எடுத்து மேஜை மேல் வைத்தான். அழகிய வேலைப்பாடுகளுடன் பந்து வடிவத்திலிருந்த அந்த டிஜிட்டல் கடிகாரம் பேக்லிட்டில் கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்தது.

“வாவ் அழகா இருக்கே..கண்டிப்பா நம்மூர்ல செஞ்சது இல்லை போலிருக்கே…அமெரிக்காவா ஐரோப்பாவா இல்லை சைனாவா?”

“எனக்குத் தெரியாது மிஸ்டர் பிரசாத். இது என்னோட நண்பன் கிட்டேர்ந்து என்னிடம் வந்தது. பிரச்சனையைக் கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். என் நண்பன் ராகவ் இதை மூன்று மாதங்களுக்கு முன்னால் எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தான்…அவனுக்கு கிஃப்டாக வந்ததாம் இந்த கடிகாரம்” அவன் சொல்லிக் கொண்டே அடிக்கடி அந்தக் கடிகாரத்தை பத்து நொடிக்கொருமுறை பார்த்துக் கொண்டான்.

“மிஸ்டர் சந்திரா இந்தக் கடிகாரம் உங்கள் கவனத்தை திசை திருப்புகிறது என்று நினைக்கிறேன். இதை சொல்லி முடிக்கும் வரையில் நாம் தவிர்க்கலாமே” பிரசாத் தனது கைக்குட்டையினால் அந்தக் கடிகாரத்தை மூடினான்.

“யெஸ் பிரசாத் யூ ஆர் ரைட். கொஞ்ச நாளாக நான் இந்த கடிகாரத்தை பார்க்கும் போதெல்லாம் ஒரு விநோதமான பிரச்சனை. நான் பார்க்கும் போதெல்லாம் நேரம் யுனீக்காக இருக்கிறது. 12:12, 10:10, 07:07, 12:34 இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..”

“ம்ம்..அது உங்கள் மனதை உறுத்துகிறது ரைட்?”

“எக்ஸாட்லி”

“இதில் சலனப்படுவதற்கு ஒன்றும் இல்லை சந்திரா..இது ரொம்ப நார்மல்..ஜஸ்ட் கோ இன்ஸிடென்ஸ்…இந்தக் கடிகாரத்தின் அழகு உங்களை கவர்ந்திருக்கலாம்..அதனால் நீங்கள் இதை அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கலாம்…நீங்கள் பார்த்துக்கொண்டிருந்த நேரங்கள் அந்த வித்தியாசமான நொடிகளாய் இருந்திருக்கலாம்…இந்த விபரங்களை ஒரு முதுகலை கணித மாணவனிடம் கொடுத்தால்..கணக்கு போட்டு உங்களுக்கு இது நிகழக் கூடிய ப்ராபபலிட்டியை சொல்லிவிடுவார்கள். ரொம்ப சிம்பிள் உங்களை மாதிரி நானும் பார்த்துக் கொண்டிருந்தால் எனக்கும் நிகழக் கூடியது தான் இது”

“எனக்குப் புரிகிறது டாக்டர். என் நண்பன் இதைக் கொடுத்தான் என்று சொன்னேன் அல்லவா…அவனுக்கு இதே பிரச்சனை என்று சொல்லி தான் என்னிடம் வந்தான். நானும் நீங்கள் சொன்ன மாதிரியான விளகத்தைச் சொல்லி தான் இந்தக் கடிகாரத்தை வாங்கிக் கொண்டேன் “

“ஹூம்…வெல்டன் அப்புறம் என்ன…”

“என் நண்பன் கூடுதலாக ஒரு விபரம் சொன்னான். நான் முன்பு சொன்ன நேரங்கள் தவிர்த்து அவனுக்கு 99:99 என்ற நேரமும் அடிக்கடி தெரிவதாக சொன்னான். அது தான் கொஞ்சம் இடித்தது. நானும் கடிகாரத்தில் கோளாறு இருக்கலாம் என்று அவனிடமிருந்து வாங்கி வைத்தேன். இதுவரை நான்கு கடைகளில் கொடுத்து செக்கப் செய்தாயிற்று. கடிகாரத்தில் பிரச்சனையே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அவன் சொன்னதை சரிபார்ப்பதற்காக நானும் அடிக்கடி கடிகாரத்தை நோட்டம் விட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நார்மலாகத் தான் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் எனக்கும் அடிக்கடி 99:99 தெரியா ஆரம்பித்து இருக்கிறது..அதான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன்”

“இன்ட்ரெஸ்டிங்…ம்ம்ம்….ஹாலூசினேஷன் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

“கேள்விப் பட்டிருக்கிறேன்…”


“மாயை..சில சமயம் நமது மனம் மூளை இவை விசித்திரமாக செயல்படும். நமது மூளை இருக்கிறதே..அதன் அமைப்பு அவ்வளவு விந்தையானது, சிறப்பானது. மருத்துவ உலகின் மிக முக்கியமான ஆராய்ச்சிகளில் ஒன்று மனித மூளையின் செயல்பாடுகளை புரிந்து செயல் படுத்த முயன்று கொண்டிருக்கும் ஆராய்ச்சி. எந்த அளவில் என்று தெரியுமா? லட்சத்தில் ஒரு பங்கு கூட கிடையாது. இதில் ஒரு பகுதியையாவது கிழித்துவிடுவோம் என்று ஐ.பி.எம்மும் ஸிவிஸ் விஞ்ஞானிகளும் இறங்கி இருக்கிறார்கள், ஆனால் இன்னும் நம்பிக்கை பிறக்கவில்லை. எதற்கு சொல்கிறேன் என்றால் இந்த ஹாலுசினேஷன் என்பது மூளையின் பில்லியன் கணக்கான ந்யூரான்களில் ஏற்படும் ஒரு கெமிக்கல் எஃபெக்ட். சில பேருக்கு குரல்கள் கேட்கலாம்..சில பேருக்கு உருவங்கள் தெரியலாம். அந்த மாதிரியாக உங்கள் நண்பர் சொன்னதிலிருந்து நீங்கள் கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருப்பத்னால் வந்த விளைவு தான் இது. கவலையே படாதீர்கள்…நீங்கள் மிக மிக ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறீர்கள். குணப்படுத்திவிடலாம். ஆனால் அதற்கு முன்னால் உங்களை இன்னும் தரோவாக செக்கப் செய்யவேண்டும்

“எனக்கு என்னமோ இது அது மாதிரி தெரியவில்லை டாக்டர்”

“சந்திரா நான் சொன்ன மாதிரி நீங்கள் மிக மிக ஆரம்ப கட்டத்தில் இருக்கிறீர்கள் என்று நான் சந்தேகம் தான் படுகிறேன். நான் சில டெஸ்டுகள் எடுத்துப் பார்த்து விட்டால் அதுவும் தெரிந்துவிடும்…என்ன சொல்லுகிறீகள்”

“செலவு..”

“நிறைய ஆகாது வெறும் டெஸ்டுகள் தான்…நீங்கள் நாளை காலை வாருங்கள்..அதற்கு முன்னால் இந்த கடிகாரத்தையும் எனக்குத் தெரிந்த இடத்தில் கொடுத்து சோதித்து பார்த்துவிடுவோம்..கடிகாரம் தான் பிரச்சனை என்றால்…ரிப்பேர் சார்ஜ் மட்டும் கொடுங்கள் போதும் என்ன..ஹா ஹா”

சந்திரா அந்த ஜோக்கை அவ்வளவாக ரசிக்கவில்லை என்பது அவன் கவலை தோய்ந்த முகத்துடன் கிளம்பிச் சென்றதிலேயே தெரிந்தது.

“பிரசாத் இன்று நீங்கள் மிஸ்டர் ரெட்டியை சந்திப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்” ரிசப்ஷன் பதுமை பதவிசாக வந்து நியாபகப் படுத்தியபோது பிரசாத் அந்த மெடிகல் ஜார்னலில் ஆழ்ந்திருந்தான்.

“ஓ மை காட் மறந்தே போய்விட்டேன்…இதோ கிளம்புகிறேன்…இன்றைக்கு வந்த ஆள் நாளை மீண்டும் வருவான்…அவனுக்கு இனிஷியல் டெஸ்ட் ஒன்று செய்ய ஏற்பாடு செய்துவிடு..ஆரம்ப கட்டமாய் தான் தோன்றுகிறான்..பார்ப்போம்”

டாக்டர் பிரசாத் பக்கத்திலிருந்த பாத்ரூமில் முகம் கழுவிப் புறப்பட்டான். கைக்குட்டையை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது கண் அநிச்சையாய் சந்திராவின் கடிகாரத்தில் மணி பார்த்தது…துல்லியமாக 99:99 என்று அவனைப் பார்த்து கண்சிமிட்டியது.

பி.கு - இந்தப் பதிவ படிச்சிட்டு சாவித்திரி வாடை வருது சுஜாதா வாடை வருதுன்னு பின்னூட்டம் போடாதீங்க இப்போவே சொல்லிப்புட்டேன்…போதும் நிறுத்திகிரலாம் :)

Wednesday, May 16, 2007

கல்யாணம்

நீ கல்யாணி தானே...ஏன்டி பார்த்து எம்புட்டு நாளாச்சு..நல்ல இளைச்சுட்டியேடி..ஏது ஒன்னோடு போறும்ன்னு நிப்பாட்டியா இந்தக் காலத்துல எல்லாரும் ரெண்டு பெத்துக்கறாளேடி...

என்னோடு வெள்ளைக்கல் ஜிமிக்கியப் பார்த்தேளா...மண்டபத்துக்கு கிளம்பும் போது இந்தப் பையில தான் போட்டுவைச்சேன்...சிண்டு தான் பைய நோண்டின்டு இருந்தது..கொஞ்சம் தேடிக் குடுங்களேன்

நீங்க தான் காண்டிராக்ட்டா...காசியாத்திரை குடை சின்னதா இருக்கே...நல்ல பெருசா வாங்க வேண்டாமா...பட்டுப் பாயெல்லாம் நல்ல வாங்கியிருக்கேளா...காட்டுங்கோ பார்க்கட்டும்

ஏன்டா அந்தப் பையனோட ஏடாகூடமா பேசிண்டு இருந்தியா சித்திப்பாட்டி வந்து உம்பிள்ளை இந்த வயசுலயே பம்பாய் செக்ஸப் பத்தி பேசிண்டு இருக்கான்னு குண்டத் தூக்கிப் போட்டுட்டு போறா?

ம்ம்..அந்த குண்டத் தூக்கி உன் சித்திப்பாட்டி மண்டையில போடு பாம்பே சென்செக்ஸும் ஒரு விதமான செக்ஸுன்னு நினைக்கிறா பாரு....இந்த வயசுல அந்தக் கிழத்துக்கு இதெல்லாம் தேவையா..ஓரமா உட்கார்ந்து ராம ராம சொல்லச் சொல்லு புண்யம் கிடைக்கும்

எத்தன தடவை சொன்னேன் இந்தப் புடவை வாங்காதேன்னு ...உன் கலர் கம்மியா காட்டறதுன்னு...அங்க பாரு எல்லாரும் எப்படி ஜம்முன்னு வந்திருக்கான்னு..அந்த பச்சைக் கலர் புடவை சூப்பரா இருக்கு இல்ல், இந்த மெருன் கூட ரொம்ப நல்லா இருக்கு....அந்த பர்பிள் அடிச்சிக்கவே முடியாது அம்சமா இருக்கு

போதும் போதும் புடவைய கிரிட்டிசைஸ் பண்றேன்னு எல்லாரையும் நைசா பார்த்து ரசிச்சது...புடவை தான் நீங்க சொன்னத வாங்கலையே தவிர உங்களுக்கு பிடிச்ச செருப்பு தான் போட்டுண்டு வந்திருக்கேன்

அட போடா ஒன்னும் தேற மாட்டேங்குது...போனவாரம் ஒரு குஜ்ஜூ கல்யாணத்துக்கு போயிருந்தேன்...புடவைய கட்டினா கூட மாராப்ப அந்தப் பக்கமா போட்டு என்ன ஸ்டைலு....இட்லி இட்லிதான் சப்பாத்தி சப்பாத்தி தான்..துக்டா துக்டாவா போட்டுக்கிட்டு பாட்டென்ன ஆட்டமென்ன பட்டயக் கிளப்பிருச்சில்ல..எல்லாரையும் கட்டிப்பிடிச்சி இல்ல வரவேற்கிறாங்க...இதமாதிரியா வணெக்கெம்ம்ம்ம்ம்ன்னு கையக் கூப்பிறாங்க..

மாமி உங்களுக்கு மடிசார் கட்டிவிடத் தெரியுமா...சித்த கல்யாணப் பொண்ணுக்கு கட்டிவிட்டுங்கோளேன்...யாரோ கட்டிவிட்டு துணியடைச்ச சோளக்கொல பொம்மை மாதிரி இருக்கா...

ஏன்னா அங்க ரூம்ல இருக்காளே அதான் என்னோட ஒன்னு விட்ட அத்தை

நினைச்சேன்...அடேயெங்கப்பா...உருளக்கிழங்கு போண்டாவ தின்னுட்டு....அங்க அடிச்ச கப்புக்கு உங்க அத்தை ஒன்னு விட்டிருக்கமாட்டாங்க ரெண்டு மூனு விட்டிருக்கனும்...என்னா நாத்தம்டா சாமி...மனுஷன் மூக்கு மசிரெல்லாம் கருகிப் போச்சுல்ல...

சீ...நான் என்ன சொல்றேன் நீங்க என்ன..பேசறீங்க அத்தை காதுல விழுந்திடப் போகுது.

என்ன...மாப்பிள்ள என்னைப் பத்தி ஏதோ சொல்றார் போல இருக்கே...

இல்ல...நான் இல்ல அத்தை உங்க பொண்ணு தான்...- இது தான் எங்க 'ஒன்னு' விட்ட அத்தை...'ஒன்னு' விட்ட அத்தைன்னு உங்களப் பத்தி மண்டபம் ஃபுல்லா நாற அடிக்கிறா..

மாப்பிள்ளை ரொம்ப தமாஷ் பேர்வழிபோல இருக்கே...இருக்கட்டும் இருக்கட்டும்

ஆமாமா இருகட்டும்...இருக்கட்டும்.அத்தை எதுக்கும் நீங்க கொஞ்சம் அடக்கி வாசிங்கோ....

ஏன்டா கிச்சு உன்னை எங்கெல்லாம் தேடறது....மாப்பிளை இந்த பிராண்டு செண்ட் தான் யூஸ் பண்ணுவாராம் ஓடிப் போய் ஸ்பென்சர்ல வாங்கிண்டு வந்திரு

அடப்பாவிங்களா...ஸ்பென்சர் வரைக்கும் கிச்சு ஓடனுமா.....ஏன்டி உங்க வீட்டுல நம்ம கல்யாணத்துக்கு தண்ணில ரெண்டு சொட்டு பன்னீர விட்டு லோக்கல் பாட்டில்ல அடைச்சு வைச்சு செண்டுன்னு ஏமாத்தினீங்களே அதெல்லாம் இப்போ இல்லையா...திருந்திட்டீங்களா...

இங்க மாப்பிள்ளைய பார்த்தீங்கல்ல...எல்லாம் ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி தான் வைப்போம்... உங்க மூஞ்சிக்கு பன்னீர் பாட்டிலே ரொம்ப அதிகம்.

ஏம்பா வேஷ்டி கட்டிக்கோ...கட்டிக்கோன்னு படுத்தற நீ பாட்டுக்கு கட்டி விட்டுறுவ அவுந்தா அப்புறம் உன்னை நான் எங்க தேடறது? இதே மாதிரி படுத்தினியான்னா அப்புறம் ஒன்னு விட்ட அத்தைகிட்ட மாட்டிவிட்டுறுவேன்.

சார் அங்க மாப்பிள்ளை சொந்தக்கார ரூமுக்கு அனுப்பின காப்பில சர்கரையே இல்லையாம்...கொஞ்சம் பார்த்து சொல்லி அனுபுங்களேன்...

நம்ப மல்லிகா புள்ளை அமெரிக்கால இருக்கானாம் வரன் பார்த்திண்டு இருக்கா...ரொம்ப நல்ல பையன்..கை நிறைய சம்பளம்.அமெரிக்கால அவாத்து கொல்லைக்கதவ திறந்தா புஷ்ஷோடு ஆம் தெரியும்ன்னா பார்த்துக்கோங்கோளேன்...நம்ப வசுந்த்ரா ஜாதகத்தை தாங்கோ நானாச்சு முடிச்சுவைக்கிறேன்.

ஏன்டி பர்ஸ்ட் நைட்டு ஹோட்டல்லயாமே...ரொம்ப நன்னா டெக்கரேட் பண்ணுவாளாமே...எங்க காலத்துல எங்களுக்கெல்லாம் வீட்டு மாடியிலதான்...அதுவும் நெல்லு மூட்டைய ஓரமா வெச்சுட்டு பூ போட்டு வைச்சிருப்பா..அங்க தான் எல்லாமே ஹூம்....

விசாலம்...பொண்ணுக்கு எல்லாம் சொல்லிக்குடுத்திருக்கியோ...பதவிசா நடந்துபாளொன்னோ..

பாட்டி அதெல்லாம் உங்ககாலம்....நம்ம ராது சும்மா புகுந்து விளையாடிடுவா..ஏண்டி ராது அப்படிதானே..?

போடா அந்தப் பக்கம்...பொம்மனாட்டிகள் இடத்துல ஆம்பிளங்களுக்கு என்ன வேலை...

என்னடா மச்சான் கல்யாணத்துக்கு கவனிக்கவே மாடேங்கிற வாட்டர் பார்டி ஒன்னும் கிடையாதா...

டேய் மெதுவா பேசுடா சித்தப்பா காதுல விழுந்திடப் போகுது ராத்திரி மொட்டைமாடில பசங்களோடு ஏற்பாடு ஆகியிருகுடா..கலக்கிடுவோம்...வாங்கி வைச்சாச்சில்ல...

ஏன்டா உன் சித்தப்பா ரொம்ப ஜாலின்னு நினைச்சேன்..ஸ்ட்ரிக்ட்டா?

போடாங்க...அவரு கவுத்தினார்னா உனக்கு பாட்டில் தான் மிஞ்சும்...மடாக் குடியன்டா கட்டுப்படியாகாது..பெருசுங்களலாம் தனியா போகுதுங்க...லூஸுல விடுடா...உளறிக் கவுத்திறாத

ஏன்டி சித்ரா உன் புருஷன் உன்னையே சுத்தி சுத்தி வராறே என்ன சொக்குப் பொடி போட்டு வைச்சிருக்க...

சித்ரா என்ன சொக்குப் பொடி போட்டான்னு நான் சொல்லட்டுமா...&(*£&£&^&£^%&!^ !&"!^"^ &*£&%£$£^& £*"^! %£&£^%&$*$^ ^$!^"%!"&

இப்படித் தான் போன தரம் உஷா ஊட்டி டூருக்கு போன போது..&"*(*&"£(*(&£ $$"£^^!^"*&& ஏன்டி உஷா அந்தக் கதைய சொல்லேன்...

ஏன் எனக்கு உங்க கதை தெரியாதே....இவ டெய்லி &*&£&**!*" ^*&!&"*!"& %&^^&*!^"*& ^&&^!*

எல்லா ஆம்பிளங்களும் இப்படி தான் &£(£&£&$&^$&**!*&£&!&&"

எந்தக் காலத்துலடி இருக்க இப்போல்லாம் &*&**"&*£"& &£ ^$&& $*$£ £$$!££$" £&£&$&^$&**!*&

%^*&£^£&&£ பொண்ணுங்களுக்கு&&*&£ காலம்பற &&(*£"(*^£&

ஏன்டி கல்யணமான பொண்ணுங்க மாதிரியாடி பேசறீங்க...கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம..

ஏய் இவள யாருடி இங்க விட்டா...ஏய் நீ போய் உன் வயசு கல்யாணமாகத பொண்ணுங்களோடு போய் சைட் அடி போ இங்க எல்லாம் வராத....

ஏன்டி சுஜா அங்க அவாளுக்கெல்லாம் தலகாணி வந்திருக்கான்னு பாரு...இல்லைன்னா எடுத்துக் குடு..மசமசன்னு நிக்காத

ஏன் உன் சீமந்தப் புத்ரன எங்க...கூப்பிட்டு சொல்லவேண்டி தானே...

ஏன்டி ராகவ் நேத்திலேர்ந்து ஓடியாடி எம்புட்டு வேலை பண்ணினான்...இப்போ கூட ராதுவ கொண்டுவிடறதுக்கு கூடப் போயிருப்பான்..

ஆஹாஹா....ரொம்ப தேறிட்டமா...பாசத்துல மெகாசீரியல் அம்மாவையும் மிஞ்சிருவ...மண்டபத்து டெரெஸ்ல போய் பாரு உம்பிள்ளை சரக்கடிச்சுட்டு பிரெண்ட்சுகளோடு மிதந்துண்டு இருப்பான்...சே என்ன பொழப்புடா இது கிழங்களுக்கு தலைகாணியக் குடு போர்வையக் குடுன்னு...நானும் இனிமே பாட்டிலடிச்சிட்டு மட்டையாயிடப் போறேன்..

சத்தம் போட்டுத் தொலையாதடி..பாட்டி காதுல விழுந்திடப் போறது..


ஏன்டி ராது எல்லாம் நல்லபடியா நடந்துதுல்ல?...சந்தோஷமா இருந்தியா?

ம்ம்...என்னம்மா வெவஸ்தையே இல்லாம இதெல்லாம் கேட்டுண்டு...எம்பராஸ் பண்ணாத...

ஹேய் கல்யாணப் பொண்ணு வாம்மா கண்ணு..உன்னைத் தான் காலைலேர்ந்து தேடிக்கிட்டு இருக்கோம். மாட்னடி மவளே ..நீங்க போங்கம்மா நாங்க கேட்டுக்கிறோம். என்னாடி பையன் எப்படி..? தேறுவானா...?..கழுத்தக் காட்டு பார்ப்போம்..எங்கெல்லாம் என்ன பண்ணியிருக்கான்ன்னு பார்ப்போம்

ஏய் போங்கடி....உத படப் போறீங்க....

புளியோதரை, சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாம் பேக் பண்ணி தனித் தனியா டப்பால போட்டு இன்டிவிஜுவலா போட்டிருக்கோம். வழியில பஸ்ஸுலயே சாப்பிட வசதியா எல்லாத்துக்கும் ஸ்பூனும் போட்டிருக்கோம். வாட்டர் பாட்டிலும் இருக்கு. வசதியா இருக்கும்.

விசாலம் கண்ணு கலங்காத பொண்ண அனுப்பி வைக்கனும்...கடல் தாண்டி போறா, போற இடத்துல நன்னா இருக்கனும்..சிரிச்ச முகத்தோடு அனுப்பு...அதுவும் சின்னது நீ கண் கலங்கினா அப்புறம் அதுவும் கழுத்த கட்டிண்டு அழும்.

அழாத ராது...ப்ளைட் ஏறறதுக்கு நாங்க ஏர்போட்டுக்கு வருவோம்... என்னென்ன ஊருக்கு எடுத்துண்டு போகனும்ன்னு அப்புறம் வாக்கா சொல்லு அம்மா பேக் பண்ணி வைக்கிறேன் என்ன

இதுல அப்பளம் வைச்சிருக்கேன்...ராகவ் பிரெண்டு அங்க தான் எம்.எஸ் பண்றானாம் வந்து பார்த்துக்கிறேன்னு சொல்லியிருக்கானாம். அடிக்கடி ஃபோன் பண்ணு என்ன...யாராவது வந்து போறதான்னா சொல்லு எதாவது குடுத்துவிடறேன்....உடம்ப பார்த்துக்கோடி வேளா வேளைக்கு சாப்பிடு என்ன...

டேய் ...அந்த ப்ரீத்தி பின்னாடியே துப்பட்டாவ பிடிச்சிண்டு சுத்திண்டு இருக்காத ஒழுங்கா படி என்ன...சீகிரமே நீயும் அங்க வந்திரு...என்ன..

அம்மா இங்க இப்ப ஒரே குளிர்..நீ இங்க வந்துட்டு போனதுக்கு அப்புறம் சிண்டு உன்ன ரொம்ப தேடறான்...அடிக்கடி ஏங்கி ஏங்கி அழறான்.....ஜூன்ல நாம ராகவ் மாமா கல்யாணத்துக்கு போறோம்ன்னு சொல்லி சமாதானம் பண்ணி வைச்சிருக்கேன்..

நீ ராது தானே...ஏன்டி பார்த்து எம்புட்டு நாளாச்சு..நல்ல இளைச்சுட்டியேடி..ஏது ஒன்னோடு போறும்ன்னு நிப்பாட்டியா இந்தக் காலத்துல எல்லாரும் ரெண்டு பெத்துக்கறாளேடி...

என்னோடு வெள்ளைக்கல் ஜிமிக்கியப் பார்த்தேளா...மண்டபத்துக்கு கிளம்பும் போது இந்தப் பையில தான் போட்டுவைச்சேன்...சிண்டு தான் பைய நோண்டின்டு இருந்தது..கொஞ்சம் தேடிக் குடுங்களேன்

....
...
....

Tuesday, May 08, 2007

சொல்ல மறந்த கதை

பிரேமலதாவின் இந்தப் பதிவைப் பார்த்ததும் வழக்கம் போல் டார்ட்டாய்ஸ் சுத்தல் தான். நான் நல்லா படிச்சு பர்ஸ்ட் ரேங்க் எடுக்கனும்னா ட்ராவெல்லாம் வைத்த ஒரு கோத்ரேஜ் டேபிளெல்லாம் வாங்கித் தரவேண்டும் என்று மாமாவிடம் ரொம்ப நாளாக வேண்டுதல் இருந்தது. ஊரில் ஒரே ஒரு கடையில் தான் அந்த மாதிரி டேபிளெல்லாம் வைத்திருந்தார்கள். மாமியுடன் கடை தெருவுக்கு போகும் போதெல்லாம் அந்தக் கடைக்குப் போய் ஆசையாய் ட்ராவெல்லாம் திறந்து பார்த்துவிட்டு விலை கேட்டுவிட்டு வருவேன். கடைக்காரரும்.."என்னிக்கு வேணா வாப்பா...இதே விலை தான் உனக்கு..விலைய ஏத்தவே மாட்டேன்" என்று சிரித்துக் கொண்டே சொல்லுவார். நான் அரிப்பது போறாது என்று மாமியும் கூட சேர்ந்து அரித்ததில் மாமா அரிப்பு தாங்காமல் ஒரு வழியாக வாங்கிக் கொடுத்துவிட்டார்.

அதை மாடிப் படிக்கு கீழே வைத்து அப்பா வீட்டிலிருந்து ஒரு பழைய டேபிள் லாம்ப் லவுட்டிக் கொண்டு வந்து, மணிரத்னம் பட எபஃக்ட்டில் வைத்து படித்துக் கிழிக்கிற மாதிரி டேபிள் ஃபேன் எல்லாம் செட் செய்து வைத்தேன். ஐய்யோ பாவம் மாமாவும் பையன் இனிமே படித்து பர்ஸ்ட் ராங்க் வாங்கிவிடுவான் என்று நம்பினார். அது என்னம்மோ தெரியவில்லை மணிரத்னம் எப்ஃக்ட்டில் லைட்டை வைத்ததாலோ தெரியவில்லை டேபிளில் உட்கார்ந்தாலே ஃபேன் போடாமலே நல்ல தூக்கம் வரும். சததம் வரவில்லை என்றால் மாமியும் அடுத்த ரூமிலிருந்து "கோந்தே படிக்கிறியா" என்று குரல் குடுப்பார். "ம்ம் நோட்ஸ் எழுதிண்டு இருக்கேன்" என்று கூசாமல் கதை விடுவேன். நானும் டேபிள் லாம்ப் மாதிரி மணடையை கவுத்தி பதினோரு மணி வரை அங்கு தூங்கிவிட்டு அப்புறம் படுக்கைக்கு வந்து தூக்கத்தை கண்டினியூ செய்வேன். சில சமயம் மாமியே நான் மண்டைய கவுத்தி படிப்பதை பார்த்துவிட்டால் "சரி போய் படுக்கை விரிச்சு படுத்துக்கோ நாளைக்கு எழுந்து படிக்கலாம்" என்று சொல்லிவிடுவார்.

இப்படி படிச்சு பர்ஸ்ட் ரேங்க் எடுக்க வாங்கிய டேபிள் அதைத் தவிர எனக்கு பலவிதத்திலும் உபயோகப் பட்டது. குறைச்சு மார்க் வாங்கிய டெஸ்ட் பேப்பர், கதை புஸ்தகங்கள் இவற்றையெல்லாம் ஒளித்து வைத்தால் நான் மட்டும் தான் கண்டு பிடிக்க முடியும். ஸ்கூலில் நான் பிறந்த அதே தேதியில் பிறந்த குரங்கு ஒன்று என் கூட படித்துவந்தது. ஒரு நாள் பொழுது போகாத டீச்சர் ஒருவர் எல்லோரையும் பிறந்த நாள் பிரகாரம் வரிசையாக உட்காரவைத்துவிட்டதால் அந்த குரங்கும் நானும் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து ராசியாகிவிட்டோம். அப்புறம் எல்லாக் க்ளாசிலும் சேர்ந்தே உட்கார ஆரம்பித்தோம்.

இந்தக் குரங்கு தான் பின்னாளில் "டேய் அவ அடிக்கடி உன்ன பார்க்கிறாடா"ன்னு என்னை ஏத்திவிட்டு வடை வாங்கிக் கொடுத்து ஒரு ஃபிகர் பின்னாடி அலைய விட்டது. ஹிஸ்டரி க்ளாசில் வாத்தியார் பானிபட் யுத்ததில் பாபர் எப்படி ஜெயித்தார் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது "பாபர் கிடக்கான் மூதேவி...இப்படி சண்டை போட்டு போட்டே மண்ணோடு மண்ணாப் போய்..பொதைச்ச இடத்துல புல் முளைச்சு மரமாயிடிச்சி...நீ சாயங்காலம் வடை வாங்குறதுக்கு காசு எப்படி தேத்தலாம்னு யோசிச்சியா?"ன்னு நம்ம கடமையுணர்ச்சியை அடிக்கடி தூண்டுவார். நானும் அன்றாட நிகழ்வுகளை இந்தக் குரங்கிடம் தான் பகிர்ந்துகொள்வேன்.இதுல நான் ரூட்டு விட்டுக்கொண்டிருந்த பொண்ணு வேறு எனக்கு ஒரு வருடம் சீனியர் (என்ன பண்றது இதெல்லாம் நாபிக் கமலத்துலேர்ந்து அப்பிடியே வரது தானே)
நம்ம ஐடியா அய்யாச்சாமி..."டேய் அந்தப் பொண்ணு கிட்ட போய் மேத்ஸ் புஸ்தகம் கடன் கேளுடா...கேட்டா இப்பவே அடுத்த வருஷ சிலபஸ் படிக்கிறேன்னு சொல்லிடு"ன்னு அடிக்கடி ஐடியா கொடுப்பார். எங்க...எனக்கு நான் படிக்கிற சிலபஸுக்கும் அடுத்த வருஷ சிலபஸுக்கும் யாராவது சொன்னாத்தான் வித்தியாசமே தெரியும் - படிப்புல அவ்வளவு சூரப்புலி. இருந்தாலும் குரங்கு சொன்னதே என்பதற்காக போய் புஸ்தகத்தை வேறு கேட்டுவைத்தேன். அந்தப் பொண்ணுக்கும் நம்ம மேல ஒரு இது (என்று நான் நம்பியதால்) என்பதால் கொடுத்து உதவினாள். இதில் அந்தக் க்ளாசில் இருப்பவர்களுக்கு ஏகத்துக்கும் குறை.

"டேய் வடையேழு வள்ளல்...நீ எங்க சிலபஸ ரொம்ப படிக்கிறியாமே...முதல்ல உன் புஸ்தகத்த ஒழுங்கா படிடா அப்போதான் பாஸ் பண்ணி அடுத்தவருஷம் இத படிக்கமுடியும்"ன்னு அடிக்கடி மிரட்டுவார்கள்.

"சரிங்க ஆபிஸர்ஸ்"ன்னு நானும் ஒரு கும்பிட போட்டுட்டு என்பாட்டுக்கு வடை வாங்கிக் கொடுத்துக்கொண்டிருப்பேன். இந்தக் குரங்கு கொடுத்த ஐடியா மூலமாக அந்தப் பொண்ணு கூட மேத்ஸ் புஸ்தக கொடுக்கல் வாங்கல் நடந்துவந்தது. ஒருநாள் பி.டி பீரியட் முடிந்து வரும் போது இந்தப் பெண் "உன் இடத்தில் புஸ்தகத்தை வைத்கிருக்கிறேன் எடுத்துக்கோ" என்று சொல்லிப்போனது. அந்த மாதிரி கொடுப்பது அது தான் முதல் முறை. ஆஹா வாங்கிக் கொடுத்த வடைக்கு இம்புட்டு விசுவாசமா இருக்காளே பயபுள்ளன்னு...யாரும் பார்ப்பதற்கு முன்னால் புஸ்தகத்தை உள்ளே எடுத்து வைத்துக்கொண்டுவிட்டேன்.

ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்து படிக்கிற மாதிரி நடிக்கிறதுக்கு அவளோடு மேத்ஸ் புஸ்தகத்தை எடுத்து திறந்தால் ஒரு அழகான பர்த்டே கார்டு. நமக்கு எந்த கிறுக்குப் பயலும் பர்த்டே கார்டு அனுப்பமாட்டானே என்று தெனவெட்டாய் பார்த்தால்...எனக்கே தான். என் பெயர் போட்டு அடியில் வித் லாட்ஸ் ஆஃப் லவ்ன்னு இந்தப் பெண்ணோட கையெழுத்து. இந்தப் பெண்ணின் கையெழுத்து எனக்கு அத்துப்படி என்பதால் எனக்குத் தலையை சுத்த ஆரம்பித்தது. என்னால் நம்பவே முடியவில்லை கையெழுத்து தெரியுமாதலால் நம்பாமலும் இருக்கமுடியவில்லை. அடுத்த நாள் என்னோட பிறந்தநாள் வேறு.

அடுத்த நாள் ஸ்கூலுக்குப் போய் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அந்தப் பெண்ணை பார்ப்பதற்கே பயமாய் இருந்தது, அன்றைக்கு வடை வழங்கும் விழாவையும் கேன்சல் செய்துவிட்டேன். கூட வந்த நம்ம குரங்குக்கு ஒரே சந்தேகம். குடை குடைன்னு குடைந்தெடுத்து விட்டது. எனக்கும் சொல்லி அழ வேறு எந்தக் குரங்குமில்லாததால் அவனிடம் எல்லாத்தையும் கொட்டித் தீர்த்து கார்டையும் காட்டினேன். ராஜ் டீவியில் வரும் ஸ்கலித பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் டாக்டர் மாதிரி கொஞ்ச நேரம் யோசித்து விட்டு "இத கொஞ்சம் கேர்புல்லா ஹேன்டில் பண்ணு, நேர போய் கேட்டு மாட்டிக்காத...இரு நானும் இதப் பத்தி கொஞ்சம் டீட்டெய்ல்ஸ் கலெக்ட் பண்றேன்"ன்னு நாட்டாமை தீர்ப்பை தள்ளி போட்டுவிட்டார்.

அடுத்த நாள் அங்க இங்க பிச்சையெடுத்து அந்தப் பெண்ணின் கையெழுத்தை சரிபார்ப்பதற்கு கொஞ்சம் தேத்தி வந்தான். ரிசர்வ் வங்கியில் கூட அப்பிடி சோதனை செய்திருக்க மாட்டார்கள் அப்படி கையெழுத்தை நோண்டி நொங்கெடுத்தோம். எல்லாம் ரொம்ப கரெக்டாக இருந்தது. சந்தேகமே இல்லைடா அவளே தான்னு தீர்ப்பாகியது. எனக்கு அதுக்கப்புறம் ஒரே உதறல்.

மாமா வேற படிப்பு தான் முக்கியம்ன்னு பெப்ஸி உமா மாதிரி அடிக்கடி அட்வைஸ் பண்ணுவாரே இதெல்லாம் நமக்குத் தேவையா...பத்தாம் க்ளாஸ் படிசதுக்கெல்லாம் எவனாவது வேலை குடுப்பானா...வடை வாங்கிக் கொடுத்த காசுக்கு ஒரு கிரைண்டரே வாங்கியிருக்கலாமேன்னு நான் புலம்பிக் கொண்டிருந்த போது இந்த குரங்கு முதேவி அந்தப் பொண்ணு என்னைத் தேடிக் கொண்டிருந்தாக சேதி கொண்டுவந்தது.

ஆஞ்சனேயா இந்தப் பிரச்சனைலேர்ந்து எப்படியாவது காப்பாத்துப்பா உனக்கு வடமாலை சாத்றேன்னு வேண்டிக்கொண்டு ஆஞ்சனேயர் மேல வடையப் போட்டுட்டு ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டேன். டேபிள் லாம்ப்பை போட்டுக்கொண்டு யோசித்ததில் வேற வழியே இல்லை அந்தப் பெண்ணிடம் நேர போய் பேசிவிடுவது தான் சரி..என்று முடிவு செய்தேன். அடுத்த நாள் குரங்கிடம் இந்த முடிவைச் சொல்லிக் கொண்டிருந்தபோது அவள் என்னை நோக்கி வந்தாள். கூட குரங்கை கழட்டிவிட்டு மேதுவாக பேச்சை ஆரம்பித்தேன். அவளுக்கு க்ளாசில் டெஸ்ட் வைத்திருக்கிறார்கள் என்று அவளும் பேச்சை ஆரம்பித்தாள். ஏன் உன்னை நேற்று காணவில்லை என்று கேட்ட போது ..சரி இனிமேல் உடைத்துவிட வேண்டியது தான் என்று முடிவு செய்து பேச்சை ஆரம்பித்தேன்.

"...இல்ல...உன்கூட கொஞ்சம் தனியா பேச வேண்டும். இன்னிக்கு தொண்டைல ஜுரம்...நாளை பேசுகிறேன்"ன்னு சொல்லி வாய்தா வாங்கிட்டேன். அவளும் ஜோதிகா மாதிரி ஒரே நேரத்தில் ரெண்டு மூனு ரியாக்ஷன் காட்டிவிட்டு போய்விட்டாள்.

அடுத்த நாள் வழக்கம் போல் குரங்காலோசனை நடத்தினால் குரங்கு சினிமால வர்ற பெருசு மாதிரி எதுக்கும் நல்ல யோசனை பண்ணிக்கோ....பிரின்சிபாலிடம் போட்டுக் குடுத்துடுவா...அப்புறம் சொல்லலையேன்னு சொல்லாத ...நாள் பாரு நட்சத்திரம் பாருன்னு என் கதையை மெகா சீரியலாக்கப் பார்த்தது. நான் வேற அதுக்குள்ள் தனியா பேசனும்ன்னு சிக்கலாக்கிவிட்டிருந்தேன். பேச்சு வளர்ந்து பொறி தட்டி கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு அவன் மேல சந்தேகம் திரும்ப ஆரம்பித்தது. கடைசியில் நான் என்னம்மோ பிரின்சிபாலை லவ்ஸ் விடுவது மாதிரி "அப்பிடின்னா இந்த லெட்டரை பேசாம பிரின்சிபாலிடமே கொடுத்திடறேன்னு" பூச்சாண்டி காட்ட...குரங்கு ஒருவழியாக உண்மையை ஒத்துக்கொண்டது. என் பெயர் மாதிரியே ஆரம்பிக்கும் அவளுடைய தோழிக்கு அவள் குடுத்த பர்த்டே கார்டை லவட்டிக் கொண்டு வந்து டகால்ட்டி வேலை காட்டி என்னை சும்மா ஏத்திவிடலாமென்று நினைத்திருக்கிறான். விஷயம் தெரிந்ததற்கப்புறம் எனக்கு உண்மையைச் சொல்லவேண்டுமானால் நிம்மதியாயிருந்தது. எங்கே அவ பாட்டுக்கு நம்ம பெர்சனாலிட்டியப் பார்த்து மயங்கி லெட்டரக் குடுத்து அப்புறம் நாம கமிட்டாகி, அப்புறம் அவளுக்கும் பர்ஸ்ட் ரேங்க் எடுக்க டேபிள் வாஙக மாமாவை அரிக்க வேண்டியிருக்குமேன்னு யோசித்து பயந்து போயிருந்தேன். அத்தோடு அந்தப் பெண் வேறு கொஞ்சம் பூசின மாதிரி இருக்கும். ஓமகுச்சி மாதிரி என் உடம்பை வைத்துக் கொண்டு அதை சைக்கிளில் பின்னாடி வைத்து ஸ்கூலுக்கு மிதிப்பதெல்லாம் நடவாத காரியம். நல்லவேளை அப்படி எதுவும் நடக்க வில்லை. அப்புறம் அந்த கார்டை வைத்துக் கொண்டு ரெண்டு நாளைக்கு டேபிளில் யோசித்துக் கொண்டிருந்தேன். மூன்றாவது நாளிலிருந்து மண்டையைக் கவுத்தி வழக்கம் போல படிக்க அரம்பித்துவிட்டேன்.

அந்த கார்ட்டு இன்னமும் என் டேபிள் ட்ராவில் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படியாக முதல் லவ்ஸ் ட்ராஜடியில் முடிந்தது. அப்புறமும் தேமேன்னு இராமல் இரண்டாவதாக ஒரு பெண் பின்னால் போய் லவ்ஸ் விட்டு அது இதை விட பெரிய ட்ராஜ்டியில் முடிந்து கல்யாணமாகி ரெண்டு குழந்தைகளும் ஆயாச்சு.. ஹூம்....

பி.கு. - தலைப்பு உங்களுக்கு இல்லை ஹி ஹீ தங்கமணிக்கு..(இன்னிக்கு இருக்கு எனக்கு)