For previous parts -->
part1   
part2பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சல் என்பதற்கெல்லாம் கவலையே படாமல் நான் கோலிக்காய் விளையாட போய்விட்டேன். அப்பாவும் அம்மாவும் தான் நான் அந்தப் பள்ளியில் படிக்காவிட்டால் இங்கிலீஸில் ப்ளாக் செய்ய முடியாதே என்று ரொம்பவும் கவலைப்பட்டார்கள். அப்புறம் அப்பா அந்தப் பள்ளியின் பெரிய தலையைத் தனியாகப் பார்த்து "பார்த்து செய்யுங்க சார்..என் பையன் உங்க பள்ளியில் படித்துத் தான்
பீட்டர் விடும் பெண்களுக்குப் போட்டியாக ஒரு ப்ளாக் ஆரம்பிக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டதால் அந்தக் க்ளாசில் கூடுதலாக ஒரு சீட் குடுத்து என்னையும் சேர்த்துக் கொண்டார்கள்.
(இந்தப் ப்ளாக் உலகில்
பீட்டர் விடும் பெண்களைப் பார்த்திருக்கிறீர்களா?...என்னல்லாமோ கலக்கலாக வார்த்தைகளைப் போடுகிறார்கள்...பையன்களில் சில பேரும் இந்த விளையாட்டை நன்றாக விளையாடுகிறார்கள் என்றாலும் பெண்கள் ஜனத்தொகை ரொம்ப அதிகம் இவர்களெல்லாம்...டெய்லி சாப்பாடுக்கப்புறம் ஒரு டிக்க்ஷினரியை முழுங்குவார்கள் என்று நினைக்கிறேன்)
நானும் சாக்ஸ் ஷூவெல்லாம் போட்டுக் கொண்டு, தோள் பையை மாட்டிக் கொண்டு ஸ்கூல் பஸ்ஸில் போகலாம் என்று ஏக குஷியாக கிளம்பிவிட்டேன். ஸ்கூலில் இங்கிலீஸில் தான் பேச வேண்டும். சேர்ந்த புதிதில் எனக்கு இங்கிலிபிஸ் அவ்வளவாக வராது (இப்ப மட்டும் என்னவாம்). ஆரம்பத்தில் டீச்சர் எலிசபத்து மகராணி மாதிரி எதாவது கேட்பார். நான் டீ.வி. சீரியல் ஹீரோ மாதிரி முழிப்பேன். கொஞ்ச நேரம் பராக்கப் பார்த்துவிட்டு அப்புறம் உக்காச்சிக்க சொல்லிவிடுவார்கள். "டீச்சர் இவன் என்னை நுள்ளிட்டான்" என்பதைக் கூட இங்கிலீஸில் சொல்ல வேண்டுமே என்று நுள்ளியதை எல்லாம் பெரிய மனது செய்து தள்ளுபடி செய்து விடுவேன்.
ஸ்கூல் வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம். ஸ்கூல் வேனில் தான் பயணம். நான் சேர்ந்த வேளை அவர்கள் அப்புறம் நல்ல காசு பார்த்து இரண்டு பஸ் வாங்கி விட்டார்கள். ஸ்கூல் வேனில் ஒரு அக்கா கதையெல்லாம் சொல்லி பாட்டு பாட சொல்லித் தருவார். நானும் தெருவிலிருந்த இன்னும் மூணு நசுக்குகளும்தான் அக்காக்கு பின்பாட்டு. இந்த ஸ்கூலில் ஆரம்பத்தில் மத்தியான தூக்கத்திற்கு டகால்டி வேலையெல்லாம் செய்ய வேண்டி இருக்கவில்லை. அவர்களே மம்மம் சாப்பிட்ட பிறகு பாயைப் போட்டு ஒரு மணி நேரம் தூங்க விடுவார்கள். அப்புறம் பையன்கள் ஓரத்தை கடித்து சுவைத்திருக்கும் ஒரு ப்ளாஸ்டி தம்ளரில் பால் தருவார்கள். எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான் நடந்தது. ஸ்கூல் கொஞ்சம் பாப்புலர் ஆகி கூட்டம் சேர்ந்தவுடன் தூக்கம், பாலெல்லாம் கோவிந்தா.
என்டரென்ஸ் பரீட்சையில் தான் பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சலே ஒழிய படிப்பில் ஓரளவு நன்றாகப் படித்து வந்தேன். தெருவில் கூடவே இரண்டு பேர் படித்து வந்த்தால் இந்தப் பியர் ப்ரஷ்ஷர்(peer pressure) தொல்லை தாங்க முடியாது. அதுவும் அதில் ஒருவன் க்ளாசில் முதல் மார்க் வேறு வாங்குவான். அதனாலயே வூட்டுல பெண்டு நிமிர்ந்துவிடும். அக்காக்களெல்லாம் அவர்கள் பாடத்தைப் படிக்காமல் என்னை "ஸ்டுடென்ட் நம்பர் ஒன்" ஆக்குவதிலிலேயே குறியாக இருப்பார்கள். எப்படியோ அப்போ அப்போ எதாவது செய்து அவனுக்கு அடுத்த மார்க்காவது வாங்கிவிடுவேன். அன்றைக்கு மட்டும் சீக்கிரமாகவே தெருத் தோழிகளுடன் கையைப் பிடித்துக் கொண்டு ஜோடிப் புறா விளையாடப் போய்விடலாம். மத்த நாளெல்லாம் பாதி விளையாட்டிலேயே திரும்ப வந்து விரலை மடக்கி மடக்கி விட்டதைப் பார்த்து கண்க்கு போட வேண்டியிருக்கும்.
ஒரு முறை ஒன்னாவது படிக்கும் போது முண்டந்துறைக்கு சுற்றுலா போய் வந்தோம். திரும்ப வரும் போது பஸ்ஸில் ஒரு வாத்தியார் "நேத்து ராத்திரி.." என்று பாட்டு எடுத்துவிடுவார் ....நாங்களெல்லாம் அர்த்தம் தெரியாமலே பல்லைக்க் காட்டிக் கொண்டு குஷியாக "யெம்மா..." என்று எசப் பாட்டு பாடுவோம். அவர் திரும்ப "தூக்கம் போச்சுடி..." நாங்கள் "யெம்மா...". வீட்டில் வந்து இதே எசப்பாட்டை சந்தோஷமாக எடுத்து விட தொடையில் நல்ல நிமிட்டாம் பழம் கிடைத்தது.
இந்த ஸ்கூலிலே தான் நான் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தேனாகையால் என் படிக்கும் காலத்தின் முக்கால்வாசி இங்கேயே கழிந்துவிட்டது.எட்டாம் வகுப்பு வரை இந்த முண்டந்துறை சுற்றுல்லாவைத் தவிர இங்கே ப்ளாகில் சொல்லுமளவுக்கு விசேஷமாக ஒன்றும் நடக்கவில்லை. நான் எட்டாவது படிக்கும் போது க்ளாசில் முக்கால்வாசி பேர் ஸ்கூலுக்கு சைக்கிளில் வர ஆரம்பித்தார்கள். வீட்டில் ஒரு சைக்கிள் தான் இருந்தது அதுவும் மாமாவுக்கு வேண்டும் என்பதால் கிடைக்கவில்லை. நானும் இன்னொரு நண்பனும் மட்டும் இன்னமும் ஸ்கூல் பஸ்ஸில் வந்து கொண்டிருந்தோம். பொதுவாக ஸ்கூல் பஸ்ஸில் பெண்கள் தான் அதிகம் வருவார்கள். எங்கள் வயது பையன்கள் சைக்கிளில் தான் வருவார்கள் என்பதால் எங்களுக்கு கொஞ்சம் வெட்கமாக இருக்கும். எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத் தான். அப்புறம் நாங்கள் தான் பஸ்ஸில் சீனியர் (பையன்களில்). அந்த சமயத்தில் எங்களை விட ஒரு வருட சீனியர் பெண்கள் மூன்று பேர் வந்து கொண்டிருந்தார்கள்.
--தொடரும்