Sunday, November 06, 2011

மாலை

இந்த பிறந்த நாள் இருக்கிறதே பிறந்த நாள் அது நமக்கு வந்தால் தேவலாம். லைப் பார்ட்னருக்கு வந்தால் பரிசாய் என்ன வாங்கிக் குடுப்பது என்ற குழப்பம் இருக்கே ஸ்ஸ்...சிண்டை பிடித்துக் கொள்ள வைத்துவிடும். சூப்பரா இருக்கணும், அவரிடம் இல்லாததாய் இருக்கணும், அவருக்கு  ரொம்பப் பிடித்ததாய் இருக்கணும், ஹைய் இத இதத் தான் ரொம்ப நாளா வாங்கணும்ன்னு நினைச்சேன் என்று கூவ வைக்கக் கூடியதாய் இருக்கணும் ஆனால் எல்லாத்துக்கும் மேலாக விலை நம்ம பட்ஜெட்டில் இருக்கணும், முடிந்தால் கொஞ்சம் மிச்சமும் வரணும்” - இந்த ஸ்பெசிவிகேஷனை கடைக்காரரிடம் சொன்னால் “தம்ப்ரீ...நேரா போய் லெப்ட்ல திரும்பினா வெளியே போற வழி வரும்..போகும் போது ரைட்டுல தண்ணி வைச்சிருப்பாங்க குடிச்சிட்டு போய்ச் சேரு”ன்னு தெளிவாய் சொல்லிவிடுவார்.

ஆனால் என்ன மாயமோ தெரியவில்லை எனக்கு வாங்குவது என்றால் மட்டும் தங்கமணிக்கு எதாவது சுளுவாய் மாட்டும். என் பிறந்தநாளுக்கு ஒருதரம் கழுத்தில் போட்டுக்கொள்ளும் ஒரு ஸ்டைலான மாலை வாங்கித் தந்தார். இந்த மென்ஸ் ஜுவெல்லரியில் எனக்கு அப்படி ஒ்ன்றும் பெரிய ஆர்வம் இல்லை என்றாலும் “ஹைய்ய்ய்”ன்னு ரியாக்‌ஷன் குடுத்து போட்டுப் பார்த்ததில், அழகுக்கு அழகு சேர்த்த மாதிரி இருந்ததால் எனக்கும் பிடித்துவிட்டது. முதலில் கொஞ்ச நாள் வீட்டில் மட்டுமே போட்டுக் கொண்டேன். “வீட்டுல மட்டும் போட்டுக்கறதுக்கு இதென்ன நைட்டியா...இனிமே வெளியில் போகும் போது கழுத்துல மாலை இருக்கணும்..இல்ல” என்று தங்கமணி அன்பாய் சொல்ல. அப்பீல் ஏது? ஆனால் அங்கே ஆரம்பித்தது ஒரு இம்சை.

பார்க்கிறவர்களுக்கெல்லாம் ஏனோ பார்வை என் கழுத்தில் போய் நிற்கும். நான் குடுக்க வேண்டிய “ஹைய்”ரியாக்‌ஷனோடு “இதென்ன புதுசா மாலை” என்று ஆரம்பிப்பார்கள். முதலில் எல்லாம் “சும்மாத்தேங்...” என்று ருதுவான பெண் மாதிரி வெட்கத்தோடு நெளிந்து கொண்டிருந்தேன். சில இடங்களில் அது ஒர்க் அவுட் ஆகாமால் “தொண்டைல கட்டி இந்த மாலையை மூனு வேளை  அணிந்தால் கரைஞ்சிடும்ன்னு டாக்டர் சொல்லியிருக்கார்” என்று மெடிக்கல் ரீசன் குடுக்க ஆரம்பித்தேன். இதெற்கெல்லாம் அவசியம் இல்லாமல் வெகு சில இடங்களில் “கௌன் பனேகா க்ரோர்பதி” மாதிரி அவர்களே “யானை முடியா, பூனை கடியா”ன்னு என்று அவர்களே நிறைய சாய்ஸ் குடுப்பார்கள், நானும் எதாவது ஒன்றை “லாக் கர் தீஜீயெ” சொல்லி தப்பிப்பேன்.

ஆனால் சினிமாவில் சி.பி.ஐ ஆபிஸராய் நடிக்கப் போகவேண்டிய சிலர் இருக்கிறார்களே, துளைத்தெடுப்பது மாதிரி பார்த்துக் கொண்டு பதிலுக்கு வெயிட் பண்ணுவார்கள். நான் வேறு வழியில்லாமல் கடைசியில் "ஹீ ஹீ ஸ்டைலுக்குத் தான் போட்டிருக்கிறேன்" என்று வாக்கு மூலம் குடுக்கும் வரை விடமாட்டார்கள். பதிலுக்கு நூற்றுப் பதினைந்து சதவீதம் "ஓஹ்ஹ்ஹ்ஹோ..." என்று  உதட்டோர புன்முறுவலோடு ஒரு பெரிய நக்கல் கிடைக்கும். உண்மையச் சொன்னா நக்கல் விடற இந்த சமுதாயம் இருக்கும் போது ஓசோன்ல ஏன் ஒட்டை விழாதுன்னு அதற்கப்புறம் இந்தக் கேள்வியை சாய்ஸ்சில் விட்டுவிட்டு “அடேங்கப்பா பில்டிங் என்னம்மா இழைச்சுக் கட்டியிருக்கான் , கண்ணாடியெல்லாம் ஜொலிக்கிறது” என்று ஏதாவது சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனாலும் சில விடாக் கொண்டர்கள் விட மாட்டார்கள். திரும்பவும் கேள்வியே காதில் விழாதமாதிரி கொஞ்ச நாள் நடிக்க ஆரம்பித்தேன்.  ஒரு தரம் ஒரே ஒருவர் மட்டும் "துளசி மாலையா" என்று எடுத்துக் குடுக்க ஆமாம் என்று அன்றிலிருந்து கெட்டியாய் பிடித்துக்கொண்டேன்.

இருந்தாலும் நமக்கென்று வந்து சேர்வார்களே அகராதிகள்.

“துளசி மாலையா...? பார்த்தா தெரியலையே. என்ன துளசி” என்று ஆரம்பித்துவிடுவார்கள்.

“இது காட்டுத் துளசி பார்த்திருக்கமாட்டேள்.” 

“காடா ...அப்படி என்ன நான் பார்க்காத காடு”

ம்ம்ம் சுடுகாடு என்று நொந்து கொண்டு “இது விஷ்வ துளசி. அந்தக் காலத்துல போதி தர்மர் இத கழுத்துல மாலையா போட்டு காவி உடுத்தி...சூர்யா மொட்டையடிச்சிண்டு கம்ப தூக்கிண்டு போதி தர்மரா நடிச்சிருக்கார் பாருங்கோ...சைனா காரனே தொப்பி போட்டுண்டு பிச்சை வாங்கறான்னா பார்த்துகோங்கோளேன்...” ஸப்ப்பா..... சமாளிப்பதற்குள் எனக்கு நாக்கு தள்ளி விடும்.

சில சமயம் விதி வீட்டிற்கு வந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டு விளையாடும். “என்ன இன்னும் கல்யாண ஷோக்கு குறையலையோ.. இன்னும் மாலையும் கழுத்துமா இருக்கியே அதான் கேட்டேன்” போன்ற அரத ஜோக்குகளுக்கெல்லாம் “எப்படீங்க இப்படியெல்லாம்” என்று சம்பிரதாயமாய் சிரித்துவிட்டு “மாமாக்கு சீக்கிரம் காப்பி போட்டுக் குடுமா... இந்த மாதிரி மொக்கை போடறதுக்கு இன்னும் ரெண்டு வீடு இருக்காம்”ன்னு பேக்கப் சொல்ல வேண்டியிருக்கும்.

ஏனோ நடுவில் இப்போ கொஞ்ச நாள் இந்த மாலை சம்பிரதாயம் இல்லாமல் இருந்தது.

சமீபத்தில் காசு குடுத்து சோற்றுக்கடன் ஆற்ற ஒரு க்யூவில் நிற்க வேண்டிய நிர்பந்தம். முன்னால் ஒரு மாமி நின்று கொண்டிருந்தார். என் மகள் ஏதோ என்னிடம் கேட்க, திரும்பிப் பார்த்தவர் சினேகமாய் சிரித்து "கழுத்தில் என்ன துளசி மாலையா" என்று ஆரம்பித்தார்.

ஆஹா கூப்பிடுடா போதிதர்மரைன்னு நான் உஷாராகும் போது  "துளசி மாலை மாதிரியே இல்லையே ஸ்டைலாய் உங்களுக்கு ரொம்ப நன்றாக இருக்கிறதே" என்று சொன்னார். இப்பேற்பட்ட நல்ல மனிதர்கள் இருக்கும் போது ஓசோன்ல எப்படீங்க ஓட்டை விழுது?