Monday, August 24, 2009

கசகசா

"ஹலோ டுபுக்கா...நான் குப்புசாமி பிரெண்டு கப்புசாமி பேசறேன்..."

"ஆங் சொல்லுங்க சார்...குப்புசாமி நேத்திக்கு தான் போன் பண்ணினார்...யூகேக்கு இப்போ தான் வந்திருக்கீங்கன்னு சொன்னார்...என்ன...செட்டிலாகிட்டீங்களா?"

"ஆங் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா ஆகிட்டிருக்கோம்...அது விஷயமாத் தான் போன் பண்ணினேன்...எனக்கு தயிர்னா உயிர்...இங்க பக்கத்து கடையில வாங்கின தயிரு ரொம்ப புளிக்குது....அத்தோட பிரியாணிக்கு கசகசாவும் வேணும்...இங்க நம்ம ஊரு மளிகை கடை எங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா..."

"**** ஆஹா கிளி கூண்டுக்குள்ள சிக்கிடிச்சு....*** நீங்க இருக்கிற ஏரியாலேர்ந்து வழி கொஞ்சம் காம்ப்ளிகேட்டட்...ஒன்னு பண்ணுங்க...நான் எங்க வீட்டுக்கு வழி சொல்றேன்..நீங்க பேசாம இங்க கிளம்பி வந்துருங்க...வந்தீங்கண்ணா..டீ குடிச்சிக்கிட்டே நான் மேப் போட்டு கசகசா விக்கிற இடத்தைக் குறிச்சு தரேன்..."

"அப்டீங்கிறீங்களா...அதுவும் சரிதான்..வந்திடறேன்."

ஆஹா இப்படி கசகசாவை வைத்து கிளியை பிடிக்க வழியிருக்கான்னு..பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் போதே மனுஷன் வந்துவிட்டார். மனுசன் பிரியாணிக்கு ஏகத்துக்கு காய்ஞ்சி போய் இருந்தார் போல.

"இந்த கசகசா..."

"முதல்லலாம்...இந்த கசகசாவை கேரளாக்காரங்க ஏத்துமதி பண்ணிக்கிட்டு இருந்தாங்க...அது ப்ரான்ஸ் போயிட்டு வரும்...இப்போ கொஞ்ச நாளா...அங்க கெடுபிடி ஆகிட்டதுனால..சுவிட்சர்லாந்துக்கு தான் அதிகமா ஏத்துமதி பண்றாங்க..."

"ஐயைய்யோ..அப்போ இங்க யூகேல கசகசா கிடைக்காதா..."

"***என்ன கூண்டுக்கிளி மக்கர் பண்ணுது...**** இல்லீங்க இங்கயும் கிடைக்கும்...சுவிஸ்ல கசகசா சகாயவிலையில் கிடைக்க வாய்ப்பிருக்குன்னு சொல்ல வந்தேன்..."

"அப்பாடா நான் ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன்..."

"நீங்க...போன வாரம் ஃபோன் பண்ணியிருந்தீங்கன்னு வையுங்க உங்களுக்கு அலேக்கா அப்படியே ஒரு கிலோவோ ரெண்டு கிலோவோ கசகசா வாங்கி வந்திருப்பேனே..."

"இல்லீங்க நமக்கு அவ்வளவு தேவைப்படாது..."

"** மக்கர் கிளியா இருக்கேன்னு பார்த்தா சரியான மக்கு கிளியா இருக்கே..**** இல்லீங்க இங்க யூகேல இருநூறு கிராம் கசகசா வாங்குறதுக்கு சுவிஸ்ல ஒரு கிலோ வாங்கலாம்ன்னு சொல்லவந்தேன்..."

"ஓ...தயிரு புளிக்காம கிடைக்குமா..."

"சுவிஸ்ல பால்தாங்க விசேஷம்...சூப்பரா இருக்கும்...அப்போ தயிரு எப்படி இருக்கும்ன்னு பார்த்துக்கோங்களேன்..."

"இல்லீங்க நான் யூகேல கேட்டேன்..."

"*** இன்னிக்கு ஒரு கப்பு டீ வேஸ்டாயிடும் போல இருக்கே**** ஆங் இங்கயும் கிடைக்கும் கிடைக்கும்....ஆனா சுவிஸ் மாதிரி டேஸ்டா கிடைக்காது..."

"இங்க எங்க தயிர் கிடைக்கும்"

" ***** &($*&*$(£$*$( ***** ....."

"நீங்க சமீபத்துல சுவிஸ் போயிருந்தீங்களா...."

"*** எனக்குத் தெரியும் உழைச்ச காசுல போட்ட டீ என்னிக்குமே வேஸ்டா போகாதுன்னு எங்க தாத்தா அன்னிக்கே சொல்லியிருக்கார்**** ஆமாங்க சும்மா போய் சுத்தி பார்த்துட்டு வரலாமேன்னு போன வாரம் போயிருந்தேங்க....மானே தேனே பொன்மானே...சுவிஸ்...கண்மணி...பொண்மணி....சுவிஸ்....மானே தேனே பொன்மானே...சுவிஸ்...."

"சூப்பர்ங்க அப்போ சுவிஸ் சூப்பரா சுத்தினீங்கன்னு சொல்லுங்க..."

"ஆமாங்க நம்ம பதிவர் மகேஷ் கூட சுவிஸ்க்கு வேலை நிமித்தம் வந்திருந்தார்...வந்து சுவிஸ்ல இந்திய உணவகத்துக்கும் வழியெல்லாம் சொன்னாருன்னா பார்த்துக்கோங்களேன். மனுசன் ரொம்ப நல்லவர்ங்க... ஜெனிவால ரெண்டு நாள் தொடர்ந்து வந்து கைடு காசு மிச்சப் படுத்திட்டார்னா பார்த்துக்கோங்களேன்....""

"ஓ அப்பிடியா...கொஞ்சம் மளிகை கடைக்கு வழி சொல்றீங்களா..."

"இங்கேர்ந்து நேரா உங்க வீட்டுக்கு திரும்பி போங்க....கார நிப்பாட்டிட்டு லெப்ட் சந்துல அஞ்சு நிமிஷம் பொடி நடை நடந்தீங்கன்னா...சூப்பர் இந்திய மளிகை கடை இருக்கு...எல்லாம் கிடைக்கும்....

"....???????"

"இருங்க போயிடாதீங்க...கீழே இருக்கிற படத்த கிள்க் பண்ணி நல்லா பாருங்க...அதுல பனியில பின்னாடி கோடு போட்ட மாதிரி ஒரு பாதை தெரியுதா...அதுல அப்பீடீக்கா அஞ்சு நிமிஷம் போனா கசகசா விக்கிற கடை வந்துறும்...உங்களுக்கு வழி கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கக் கூடாதேன்னு தான் இந்த படம் காண்பிச்சேன்..."
*** நம்மளுக்கு உன்னால் முடியும் தம்பிக்கு பக்கத்துல தேறுகிறதே ஆயிரத்துல ஒரு போட்டோ...அத பார்க்க வைக்கிறதுக்கு இன்னா கதவுட வேண்டியிருக்குடா சாமீ.....*******


பி.கு - இந்தப் பதிவிற்க்கு போட்டோ சூப்பர்...போன்ற பின்னூட்டங்கள் மட்டுமே அனுமதிக்கப் படும். உன்னால் முடியும் தம்பி கமல் மாதிரி இருக்கீங்கன்னு வரும் கமெண்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.தங்கமணி மாதிரி காறித் துப்பும் பின்னூட்டங்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.

Thursday, August 06, 2009

நியாபகங்கள்


உலகமே வெறுத்து யாரையாவது நாலு பேரை போட்டுத் தள்ளிடலாம் என்றளவுக்கு வெறுப்பு தட்டும் போதெல்லாம் தவறாமல் சமையல் பக்கம் போவேன். இதே மாதிரி தங்கமணிக்கும் மூட் அவுட்டாகி குறைந்தபட்சம் மூனு பேரையாவது போட்டுத் தள்ளிட தோன்றும் போதெல்லாம் புதுசாக ஏதாவது ஒரு டிஷ் ட்ரை பண்ணுவார்.

"ஐய்யைய்யோ சமையலா..நீங்களா..?...நான் கூட நின்னு எடுத்தாவது தரேன்"

"இதோ பாரு சிங்கம் என்னிக்கும் சிங்கிளாத் தான் சமைக்கும்"

"கிழிக்கும்...சிங்கம் சிங்கிளா சமைச்சா...கிச்சன் பன்னிங்க கூட்டமா வந்து கும்மியடிச்சிட்டுப் போன மாதிரி ஆயிடும்...நோ வே..போன தரம் பால்கோவா கிண்டறேன்னு எவர்சில்வர் குக்கர நான் ஸ்டிக் குக்கர் மாதிரி கரிச்ச உங்க பிரதாபம் போதும்..முதல்ல இடத்த காலி பண்ணுங்க" - நான் சமையல் அறை பக்கம் சமைக்க வந்தாலே தங்கமணி டெரர் ஆகிவிடுவார்.

அப்புறம் எதாவது சொல்லி சமாதானப் படுத்தி "அன்னிக்கு ஒரு நாள் சப்பாத்திக்கு செஞ்சியே கோபி மஞ்சூரியன் அத எப்படி செஞ்ச சொல்லு...? கரெக்டா செஞ்சியான்னு செக் பண்ணிக்கறேன்" என்று ஒரு ரெசிப்பி கேட்பேன். உடனே தங்கமணியும் மணாளனே மங்கையில் பாக்கியம் அஞ்சலி தேவி மாதிரி தேம்பி தேம்பி ரெசிப்பியை சொல்லுவார்.

நான் செய்யும் எல்லா டிஷ்ஷிலும் கட்டாயம் உருளைக்கிழங்கு இருக்கும். முதலாளி...அதில் ஒரு தொழில் ரகசியம் என்னான்னா... என் மகள்கள் இருவருக்கும் உருளைக்கிழங்கு ரொம்ப பிடிக்கும். வெறும்ன வெந்து மேஷ் செய்து குடுத்தாலே "எப்படிப்பா இப்படி டேஸ்டியா சமைக்கிற"ன்னு சிங்கத்துக்கு சிடுக்கெடுத்து விடுவார்கள். தங்கமணி முன்னால் சொன்ன கோபி மஞ்சூரியன் ரெசிபியை கொஞ்சம் உல்டா செய்து, உருளைக்கிழங்கை வெந்து ஒரு கப் மாதிரி குடைந்தெடுத்து கோபி மஞ்சூரியனை அதில் போட்டு இட்டாலியன் டிஷ் என்று குடுப்பேன். "எப்படீப்பா இப்படி சூப்பரா.." என்று மகள்கள் திரும்பவும் ஆரம்பிக்கும் போது "இதெல்லாம் ரொம்ப ஓவர்டி...சிங்கத்துக்கு ரொம்ப தான் சிங்கியடிக்கிறீங்க ரெண்டு பேரும்" என்று தங்க்ஸ் மங்களம் பாடி விடுவார்.

நிற்க. என்னாடா சினிமா விமர்சனமாய் இருக்குமோன்னு பார்த்தால் திரும்பவும் சொந்தக் கதை சோகக் கதைய சொல்றானேன்னு நினைக்காதீங்க. என் சொந்தக் கதை பிசினெஸ் மாடலுக்கும் ஞாபகங்கள் பட பிசினெஸ் மாடலுக்கும் வித்தியாசம் அதிகமில்லை ஜென்டில்மேன்.

ரெயின் கோட் படத்தை லேசாக உல்டா செய்து அதை நண்பனின் சொந்தக் கதை என்று பேக் செய்திருக்கிறார்கள் அவ்வளவு தான். முடிவு மட்டும் நண்பனின் கதையா இல்லை படம் முழுவதுமேவா என்பதை தெளிவு படுத்தியிருக்கலாம்.

இது பா.விஜய்யின் முதல் படம். முதல் படத்திற்கு பரவாயில்லை. எடுத்த விஷயத்தில் ரொம்ப கத்தி போட்டு போர் அடித்து பாதியிலேயே படத்தை விட்டு எழுந்து போகுமளவுக்கு செய்யாமல் ஓரளவுக்கு கொண்டு போயிருக்கிறார்கள். இதையும் டைரக்டருக்கு முதல் படம் என்பதால் மட்டுமே சொல்லமுடிகிறது. மற்றபடி இதைக் கருத்தில் கொள்ளாமல் மற்ற படங்களோடு ஒப்பிட்டால் ரொம்பவே சுமார் ரகம் தான். பா.விஜய் டைரக்க்ஷனோடு நிப்பாட்டிக்கொண்டு ஹீரோவாய் வேறு யாரையாவது போட்டிருக்கலாம் என்பது என் தனிபட்ட எண்ணம். பாட்டு டேன்ஸ் என்று வரும் போது ரொம்பவே பொறுமையை படம் சோதிக்கிறது. படம் நெடுக வருபவர்கள் ரொம்பவே செயற்கையாக வசனம் பேசுகிறார்கள். ஹீரோவும் கவிதை எழுதுபவர் என்று திரைக்கதையை வைத்துக்கொண்டு தனிபட்ட முறையில் குடுக்கவேண்டியவர்களுக்கெலாம் கணக்கு செட்டில் செய்துவிட்டார் போலும். ஏதோ ஒரு பெருந்தலையை வேறு சாடுகிறார். மனுஷன் யாருன்னு தான் பிடி பட மாட்டேங்குது.

பா.விஜய் நடிப்பில் சேரனை இமிடேட் செய்கிறாரா என்று தெரியவில்லை அழும் போது அவரை மாதிரியே (கேவலமாக) இருக்கிறது. இதை கொஞ்சம் கவனித்தால் நலமாயிருக்கும். அவருடைய கவிதை வரிகள் வழக்கம் போல் நன்றாக வந்துள்ளன. கல்லூரி விழாவில் கவிதை வாசிப்பது, வாசிக்கும் போது திணறுவது, திணறும் போது முதல் வரிசையில் மூனாவது ஆளும், நாலாவது வரிசையில் ஆறாவது ஆளும் எழுந்து நின்று குடுத்த காசுக்கு தெம்பா திரும்பிப் போன்னு சொல்லுவது உடனே ஹீரோவிற்கு சக்தி வந்து அருவி மாதிரி கொட்டுவது ஹைய்யோ ஹைய்யோ....அடுத்த படத்திற்க்கு கூட நல்ல துடிப்பான அசிஸ்டெண்ட் டைரக்டர்களை வைத்துக் கொள்ளுங்கள் விஜய்...

Sunday, August 02, 2009

சுவாரஸ்ய பதிவர்கள்

முதலில் இந்த விருது பட்டர்ப்ளை அவார்ட் என்று ஒரு வருடத்திற்கு (போன வருஷம் தானே?) முன் ஒரு ரவுண்டு வந்தது. அப்போது Boo மற்றும் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் இருவரிடமிருந்தும் இதைப் பெறும் பாக்கியம் கிடைத்தது. (இருவரும் என்னை மன்னிக்கவும்...சாரி அப்போது என்னால் அதை தொடரமுடியவில்லை) இந்த முறை இன்ட்ரெஸ்டிங் ப்ளாக் என்ற வேர்ஷனில் ராப், வசந்தகுமார் மற்றும் வெட்டிப்பயல் ஆகியோரிடமிருந்து விருது பெறும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. விருதை வழங்கிய அனைவருக்கும் உளமார்ந்த நன்றி. விதிமுறைப்படி நானும் எனக்குப் பிடிக்கும் சில ப்ளாக்குகளுக்கு இதைக் குடுக்கவேண்டும்.

அதற்க்கு முன்னால் இதை ஒரு அட்டகாசமான சந்தர்ப்பமாய் எடுத்துக்கொண்டும் ஒரு விஷயத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இங்கே நான் எழுதுவதை பாராட்டி ஈமெயிலிலும், பின்னூட்டத்திலும் மிக சிரமம் மேற்கொண்டு நீங்கள் எல்லாரும் நிறைய ஊக்குவித்து வருகிறீர்கள். ஆனால் இதில் நூற்றில் ஒரு பங்கு கூட நான் செய்வதில்லை. இது என் மனதில் நீண்ட நாளாய் உறுத்திக்கொண்டே இருக்கிறது. இது செய்யவேண்டாம் என்ற நோக்கத்தோடு நான் செய்யவில்லை. ஆனால் தற்போது சில நாட்களாய் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதிய ப்ளாக்குகளுக்குப் போய் பின்னூட்டம் போட முயற்சித்து வருகிறேன். முதலில் இந்த விருதுக்கு முற்றிலும் புதிய ப்ளாக்குகளாய் அறிமுகப் படுத்த வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் தற்போது கொஞ்ச காலமாய் ப்ளாக் பக்கம் அதிகம் வர முடியவில்லை. (செந்தழல் ரவி இந்த அவார்ட்டையே ஏதோ தமிழ் ப்ளாக் உலகில் எரிந்து கொண்டிருந்த பிரச்சனையை தீர்பதற்குத் தான் ஆரம்பித்தார் என்று படித்தேன்...என்ன பிரச்சினை என்று கூட தெரியாத அளவில் தான் நான் ப்ளாக் படிக்கும் லட்சணம்). தற்போதைய தமிழ் ப்ளாக் இருக்கும் எண்ணிக்கையில் திருவிழாவில் தொலைந்த குழந்தை கதையாகி இந்தத் பதிவு ரொம்ப லேட்டாகிவிடக் கூடாதே என்ற எண்ணத்தில் எழுதுகிறேன். அத்தோடு இந்த விருது சுற்றி வரும் வேகத்தைப் பார்த்தால் நான் குடுப்பதற்க்குள் ஆட்டமே முடிந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. அதனால் தெரிந்த, படித்த பிடித்த சில பதிவர்களையே நானும் லிஸ்ட் எடுத்திருக்கிறேன்.

சுவாரஸ்சியம் என்பது தனிப்பட்ட விருபத்தைச் சார்ந்தது. என்னைப் பொறுத்த வரையில் போட்டிருக்கும் பதிவு போரடிக்காமல் கடைசி மட்டும் படிக்க வைத்து சில சமயங்களில் பின்னூட்டத்தையும் படிக்க வைக்கும் பதிவுகள் இந்த வகையில் சார்ந்தது. இதில் தொடர்ச்சியாய் நிறைய பதிவர்கள் லெவல் காட்டி வருகிறார்கள். எனக்கு முகம் தெரிந்த நட்பு வட்டத்தை இந்த விருதுகளிலிருந்து எடுத்துவிட்டேன். கீழே இருப்பவர்கள் போக இன்னமும் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். ஆனால் எல்லாரையும் போட்டால் இது ஒரு மெகா சீரியல் நீள பதிவாக ஆகிவிடும் என்பதால் சுருக்கியுள்ளேன். விடுபட்டவர்கள் தவறாக நினையாதீர்கள்.

(சுட்டிகளின் ஆங்கில அகர வரிசைப் படி)

ஆசிப் அண்ணாச்சி - இவருடைய பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது நவீன பின் தத்துவமாய் சொன்ன காக்கா வடையை சுட்ட கதை. இவருடைய பதிவுகளில் எங்க திருநெல்வேலி தமிழில் இருக்கும் நக்கல் எனக்கு மிகப் பிடிக்கும்.

Boo - ஆங்கிலப் பதிவர். இவர் பதிவுகளில் இருக்கும் உயிரோட்டம் அலாதியானது. ரெண்டு சுட்டிகளின் அம்மாவாய் பதியும் பதிவுகளில் இருக்கும் மெல்லிய நகைச்சுவை மிக ரசிக்கும் படியாக இருக்கும். இவர் என்னைப் பற்றி முன்பு எழுதியிருப்பதால் நான் மேலும் சொல்லுவதெல்லாம் பதில் மரியாதை செய்வது மாதிரி ஆகிவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

பிரபு கார்த்திக் - இவர் ஆங்கிலப் பதிவர். சீரியசான பல மேட்டர்களை இவர் எழுதும் பாணி எனக்கு மிக பிடிக்கும். இவருடைய ஹீ ஹீ பதிவுகள் மிக ரசிக்கும் படியாக இருக்கும். ஆனால் ஏனோ தற்போது அந்த மாதிரி பதிவுகள் இவரிமிருந்து கொஞ்சம் குறைந்துவிட்டது. நிறைய எழுதுங்க சார் (இத யார் சொல்றதுன்னு வெவஸ்தை இல்லையான்னு நீங்க சொல்றது கேட்கிறது...இருந்தாலும் சொல்லுவோம்ல :))

ஜொள்ளுப்பேட்டை - ஜொள்ளிங்க்ஸின் அத்தாரிட்டியே அண்ணாச்சி தான். ரசிக்கும் படி அழகாக எழுதுவார். என்ன..பதிவுகளில் படங்கள் காரணமாக ஆபிஸில் இவருடைய ப்ளாகை தெகிரியமாய் ஒப்பன் பண்ணமுடியாது...மினிமைஸ் பண்ணி படங்களை கவனமாய் பார்த்த பின் ஒப்பன் செய்துவருகிறேன்.

குந்தவை - இவரின் பதிவுகளில் துள்ளல் நடையில் இழையோடும் நகைச்சுவை கலக்கலாய் இருக்கும். ரங்கமணி கலாய்க்கும் சங்கத்தில் போர்டு மெம்பராய் இருக்கிறார். அன்றாட நிகழ்வுகளில் கலாய்த்து வருகிறார்.

குசும்பன் - சொல்லவே வேண்டாம்...இவரின் டைமிங் மற்றும் குசும்புகள் கலக்கல் ரகம். மிக ரசிக்கும் பதிவர்களில் ஒருவர். அரசியலிருந்து அன்றாட நிகழ்வுகள் வரை பதியும் அனைத்திலும் நையாண்டி சூப்பராய் இருக்கும்.

நவீன் - எனக்கும் கவிதைக்கும் ரொம்பவே தூரம். விதிவிலக்காய் இவரின் கவிதைகள் மட்டும் படித்துவருகிறேன். எதோ ஒரு பதிவை படித்துவிட்டு தொடர்ந்து படித்துவருகிறேன். பயமுறுத்தாத புரியும் தமிழில் அழகாய் சுவாரஸ்யமாய் எழுதிவருகிறார். கவிதைக்கு ஏத்த படங்கள் எங்கிருந்து தான் பிடிக்கிறாரோ மனுஷன். இவர் ப்ளாக் படித்த பின் தான் என்க்கு ஒரு ஞானோதயம் வந்தது. காதல் கவிதைகளுக்கு போடும் படியாக சினிமா தவிர்த்த இந்திய புகைப்படங்களே அவ்வளவாக இல்லவே இல்லை. கலாச்சாரம் என்ற பெயரில் என்னம்மோ பினாத்திக் கொண்டு வறட்சியாய் ஆக்கிவிட்டோமோ? இப்ப புரியுது தலைவர் குஞ்சுமோன் ஏன் பஸ்ஸ்டாப் சீனில் கூட வெள்ளைக்காரனை வைத்து படம் பிடித்தார் என்று ஹூம்

உருப்படாதது - நாரயணின் எழுத்து நடை வசீகரமானது. புதுப்பேட்டை சினிமா சமயத்தில் நார்த் மெட்ராஸ் நிழலுலகம் பற்றி இவர் எழுதிய பதிவுகள் அட்டகாசமானவை. புதுப்பேட்டை சினிமாவை விட அவை மிக சுவாரஸ்யமாக இருந்ததாக எனக்குப் பட்டது.

வெட்டிப்பயல் - ஐ.டி கம்பெனிகளில் அன்னாரின் பதிவுகள் மிகப் பிரபலம். சுவாரஸ்மாய் எழுதுவதில் விற்பன்னர். இவரும் எனக்கு இந்த விருது குடுத்து பாராட்டி இருப்பதால் மேலும் எழுதினால் பதில் மரியாதை ஆகிவிடும். ஆகவே அடக்கி வாசித்துக் கொள்கிறேன்.