Thursday, June 16, 2005

என்ன சொல்லப் போகிறாய்...

for picture version of this post click here

என்ன சொல்லப் போகிறேன்...பத்து பதிவுகளுக்கு ஒரு முறை பாடும் அதே பல்லவி தான்....

இன்றோடு வேலை மாறுகிறேன். புது கம்பெனியில் ப்ளாக் செய்வதற்கு சம்பளம் குடுத்து கட்டுப்பிடி ஆகாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால் வேலை நேரத்தில் இனி இங்கு அரட்டை அடிக்கமுடியாது. வீட்டிலிருந்து தான் எழுத முடியும். ஆனால் உங்கள் பக்கங்களை எல்லாம் வின்டோவை சின்னதாக வைத்துக் கொண்டு படிக்கும் டகால்ட்டி வேலையெல்லாம் செய்தாவது படிப்பேன் என்று நினைக்கிறேன். புள்ளகுட்டிக்காரன் கொஞ்ச நாளைக்கு கஷ்டப்படுவேன் என்று நினைக்கிறேன். அதனால் தீபாவளி, ஜெயிக்கப் போகிற கிரிக்கெட் மாட்ச் போன்ற நேரங்களில் நிலவும் மந்த நிலை தான் இங்கும் நிலவும் என்று பட்சி சொல்கிறது. என்ன சொல்ல வரேன்னா இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு நான் இங்கே எழுதினாலும் எழுதலாம் எழுதாமலும் போகலாம். உங்களுக்கு கமென்ட்ஸில் மட்டும் அரட்டை அடிக்கலாம் அடிக்காமலும் போகலாம். ஆனால் இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்குத்தான் இருக்கும். அதற்கப்புறம் நான் வருவேன் வருவே வந்துக்கிடேடேடேடே..இருபேன்.

Thursday, June 09, 2005

ஏன் என்ற கேள்வி...

for picture version of this post click here

டி.வி. மற்றும் சினிமா பார்க்கும் போது எனக்கு நிறைய சந்தேகங்கள் வருகின்றன...எனக்கு மட்டும் தானா இல்லை இத மாதிரி உங்களுக்கும் வருமா?

1.பெரும்பாலான டி.வி.களில் செய்திகள் ஆரம்பிப்பதற்கு முன்னாலும் முடிந்த பிறகும் பின்ணனி இசையின் போது செய்தி வாசிப்பவர்கள் அவர்களுக்குள் பேசிக் கொள்கிறார்களே...என்ன பேசிக் கொள்வார்கள்? (உங்க வீட்டுல இன்னிக்கு என்ன சமையல்னா? இல்ல மெட்டி ஒலி பார்த்தீங்களான்னா?)

2.சமைத்துப் பார் போன்ற டி.வி சமையல் நிகழ்ச்சிகளில் செய்த பதார்த்தங்களை என்ன செய்வார்கள்? குழம்பு அல்லது சைட் டிஷ் செய்தால் அதற்கு மெயின் டிஷ் செய்து சாப்பிடுவார்களா? இல்லை வீட்டுக்கு எடுத்துக் கொண்டு பொவார்களா? நிகழ்ச்சி தயாரிப்பாளர் மட்டும் எடுத்துக்கொண்டு போவாரா இல்லை முறை வைத்து எடுத்துகொண்டு போவார்களா?

3.முதல் சந்தேகத்தைப் போலவே தான். சினிமாக்களில் சில பாட்டுக்கு தையா தக்கா என்று ஆடாமல் நாயகியும் நாயகனும் பேசிக் கொண்டே கொஞ்சுவார்கள். (வளையோசை (சத்யா), போற்றிப் பாடடி பெண்ணே..) இதுக்கு வசனம் தருவார்களா...இல்ல அங்கேயும் சொந்த்க் கதை சோகக் கதை தானா?

4. மூக்குப் பொடி டப்பா கூட வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு சின்னதான ஹேன்ட் பேக் வைத்துக் கொள்கிறார்களே சில பெண்கள்...இது சும்மா ஸ்டைலுக்குத் தானா இல்லை அதில் நிஜமாகவே எதாவது எடுத்துப் போவார்களா?

5.அதென்ன எல்லா விளம்பரங்களிலும் ஆண்களே பெண்களுக்கு கிஃப்ட் குடுக்கிறார்கள்? நிஜ வாழ்வில் பெண்கள் குடுப்பதில்லையா?

6.விக்கோ வஜுர்தந்தி பேஸ்ட் விளம்பரப் பாட்டை எப்போது மாற்றுவார்கள்?

7.சினிமாவில் சில காட்சிகளில் நாயகன் நூறு ரூபாய் நோட்டையெல்லாம் பிச்சையாக போடுவார். அதையெல்லாம் காட்சி முடிந்ததும் திரும்ப வாங்கிக்கொள்வார்களா இல்லை அது அவர்களுக்கே தானா?

8. சினிமாவில்/டி.வியில் சாப்பாடுகிற மாதிரி காட்சிகளின் போது காட்சி முடிந்தவுடன் எழுந்து போகச் சொல்லிவிடுவார்களா....இல்லை கூட குறைய கேட்டுப் பரிமாறி வயிறு முட்ட சாப்பாடு போடுவார்களா?

Wednesday, June 08, 2005

டெலிபோன் மணி போல்....

for picture version of this post click here

அவசரமாக கார் இன்ஷுரன்ஸை மாற்ற வேண்டிய ஒரு சூழ்நிலை. நான் காரிலே பிறந்து வளர்ந்து வாழாததைக் காரணம் காட்டி இந்த இன்ஷுரன்ஸ் கம்பெனிகள் கேட்ட தொகைக்கு ஒரு எண்ணைக் கிணறு வாங்குவதே உச்சிதமாகப் பட்டது. நம்பர் மேல் நம்பர் போட்டு ஓய்ந்த போது மதுரமாய் அந்தப் பெண்ணின் குரல்...

தொழில் சம்பந்தப்பட்ட சம்பிரதாயமான கேள்விகளுக்குப் பிறகு

"உங்கள் பெயர்?"

"....."

"நீங்கள் இந்தியாவைச் சேர்ந்தவரா.."

"ஆமாம் "(எனக்குத் தெரிந்து விக்டோரியா மகாராணி குடும்பத்தில் இந்த பேர் இல்லை)

"இந்தியாவில் எங்கே...தமிழ்நாடா?"

"அட ஆமாம்..." அப்புறம் தான் மண்டையில் பல்பு எரிய ஆரம்பித்தது. அந்தப் பெண்ணுக்கு வெளிநாட்டுப் பாணியில் பேசுவதில் நல்ல தேர்ச்சி. ப்ரிட்னி ஸ்பியர்ஸ் பாணியிலிருந்து வெளிவந்து நார்மலாக பேச ஆரம்பித்தார்.

"இந்த கால்சென்டர் எங்கு இருக்கிறது? சென்னையிலா?"

"இல்லை..பெங்களூரில்"

"ஓ.." (கன்னடத்துப் பைங்கிளி)

"பெங்களூருக்கு வந்திருக்கிறீர்களா?"

"துரதிஷ்டவசமாக இதுவரை இல்லை...மிகவும் அழகான (**பெண்கள் நிறைந்த**) ஊர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.இந்த கால்சென்டர் இந்தியாவில் இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது "

"எனக்கும் ஒரு இந்தியரோடு பேசுவது சந்தோஷமாக இருக்கிறது"

அப்புறம்...காவிரி நீர் பிரச்சினை தவிர எல்லா சொந்தக் கதை சோகக் கதையும் நிறையப் பேசினோம்.

"இங்கு எங்கள் கால்சென்டரிலும் நிறைய தமிழ் பையன்கள் இருக்கிறார்கள். எனக்கும் அவர்களிடமிருந்து இரண்டு வார்த்தைகள் தெரியும்...வேலை ஆரம்பிக்கும் முன் எல்லாரும் அவர்களோடு சேர்ந்து இதைத் தான் கோஷமாக சொல்லிவிட்டு ஆரம்பிப்போம் %£&$^$*$ இதற்கென்ன அர்த்தம்"

நினைத்த மாதிரி ...தமிழன் நிப்பான்ல....

"இதற்கு அர்த்தம் சொல்லமுடியாது. இது ஒரு கெட்டவார்த்தை" (**எல்லாரும் வேறு சொல்லுகிறீர்களா பிரமாதம்..தமிழா தமிழா**)

"ஓ அப்பிடியா...மற்ற பெண்களிடமும் சொல்கிறேன்"

அம்மணி...ஆட்சேபனையே இல்லாமல் அரட்டை அடித்தார். கால்சென்டர்களில் இந்த மாதிரி அடிக்கலாமா என்று ஆச்சர்யமாக இருந்த்து. சினேகமாகப் பேசினதுமில்லாமல் இன்ஷுரன்ஸ் தொகையையும் டிஸ்கவுண்ட்லாம் போட்டு குறைத்துக் குடுத்தார். (அட உண்மையாப்பா!)

வழக்கமாக எதாவது பிரச்சனைக்கு விஷயமாக சண்டை போட அழைக்கும் போது தான் இந்திய கால்சென்டருக்குப் போகும். நம்மாளுக்கிட்டப் போய் கத்தவேண்டியிருக்கே என்று நினைப்பேன்.

இந்த முறை வித்தியாசமாக இனிமையாக இருந்தது. வாழ்க இந்திய கால் சென்டர்கள்.

Monday, June 06, 2005

கேள்விக்கென்ன பதில்

பொதுவா இமெயிலில் தான் முன்னாடி இது வந்து கொண்டிருந்தது. இந்த உம்மாச்சி படம் ரொம்ப அபூர்வமானது இல்ல இந்த மந்திரத்தை பத்து தரம் சொல்லு, இன்னிக்கு உலக நண்பர்கள் தினம் etc etc இத படிச்ச அடுத்த அரைமணி நேரத்துக்குள்ள ஏழு பேருக்கு அனுப்பு இல்லாட்டா உங்க வீட்டு எருமைமாடு கன்னுக்குட்டி போடாது etc. etc. இப்போ ப்ளாகிலும் வந்து விட்டது.சில கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். கிருத்திகா வல்லவர், நல்லவர் என்பதாலும் என்னையும் ஒரு மனுஷன்(அவர்கள் பாஷையில் ..வெட்டி ஆபிஸ்ர் ) என்று இதற்கு பதிலளிக்க சொல்லியிருப்பதாலும்.....பெரியோர்களே, தாய்மார்களே, குழந்தைகளே.....

THREE NAMES YOU GO BY:
1."உன்னால் முடியும் தம்பி" கமல்
2."ஆசை" அஜீத்குமார்
3."ரோஜா" அரவிந்சாமி

உய்ய்ய்ய்... எவன்டா அங்க "நெனப்புத் தான் பொழப்ப கெடுக்கும்" டுபுக்குன்னு முனகறது? பிச்சுப்பிடுவேன் பிச்சு


THREE SCREEN NAMES YOU HAVE HAD:

வானம் பொழிகிறது பூமி விளைகிறது. உனக்கேன் கொடுக்கவேண்டும் வரி. நீ எங்களோடு வயலுக்கு வந்தாயா நாற்று நட்டாயா, களை புடுங்கினாயா..இல்லை எங்குலப் பெண்களுக்கு ம்ஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா....
நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ளீஸ்THREE PHYSICAL THINGS YOU LIKE ABOUT YOURSELF:
தெளிந்த பார்வையும், தினவெடுத்த தோள்களும், நிமிர்ந்த நடையும்..நேர் கொண்ட நெஞ்சமும்...அடடா என்னத்தன்னு சொல்றது எல்லாமே பிடிக்கும் பா....


THREE PHYSICAL THINGS YOU DON'T LIKE ABOUT YOURSELF:
ஹீ ஹீ...முந்தின கேள்விக்கான பதிலைப் பார்க்கவும்

THREE PARTS OF YOUR HERITAGE:
பதினெட்டுப் பட்டி
வெத்தலப் பொட்டி + சொம்பு
ஆலமரம்

THREE THINGS THAT SCARE YOU:
குலுக்கு நடிகைகள் க்ளோசப் (ஷகிலா வகையறாக்கள்...மற்றும் முத்து கொக்கு சைவக் கொக்குவில் குலுக்கு நடனம் ஆடும் பாட்டி வகையறாக்கள்)

பாத்ரூம் போய் விட்டு கையைக் கழுவாமல் எல்லாரிடமும் சங்கோஜமே இல்லாமல் கை குலுக்கும் ஆபீஸ் மாமா வகையறாக்கள்

சினேகபாவமே இல்லாத பரஸ் ஸ்தீரிகள்
(போய்ட்டு வந்த அனுபவமெல்லாம் இல்லப்பா...லண்டன் வந்த புதுசுல..விலை உயர்ந்த கேமிரா வாங்கிக் கொண்டு நானும் நண்பனும் பெக்க பெக்கவென்று முழித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தோம். வழியில் ஒரு பரதேவதை வழி மறித்துக் கொண்டு தகராறு செய்ய அரம்பிக்க...நானும் நண்பனும் விஷயம் புரிந்து உஷாராவதற்குள் அவள் சட்டையை பிடித்து இழுத்து கண் அடித்தாள் பாருங்கள்...ஒரே ஒட்டம். இன்றைக்கு வரைக்கும் திருடர்களை விட இந்த மாதிரி பெண்களை பார்க்கும் போது கொஞ்சம் உதறலாய்த் தான் இருக்கிறது.


THREE OF YOUR EVERYDAY ESSENTIALS:
சோத்து டப்பா (ரொம்ப முக்கியமோல்யோ)
மொபைல் போன் (ஷீலா மாலாவோட கதையடிக்கலாம் இல்லை... கல்யாணமானவாளுக்கு இதில தான் அரிசி, பருப்பு, கடுகெல்லாம் வாங்கிண்டு வர உத்தரவு வரும்..இல்லைன்னா அடுத்த நாளைக்கு வயித்துல ஈரத் துணியைக் கட்டிண்டு தான் ஆபீஸ் வரணும்.)
பர்ஸ் (முந்தின பாயிண்ட்ல சொன்னவற்றை வாங்கறதுக்கு டப்பு எடுத்துண்டு வர)

THREE THINGS YOU ARE WEARING RIGHT NOW:
வாட்ச்,
ஷூ,
டை மற்றும் இன்ன பிற..
(அடி செருப்பால...இப்பிடிப் பட்ட கிளுகிளுப்பான கேள்வியெல்லாம் என்ன மாதிரி கல்யாணமான ஆளுகிட்ட கேட்டா இப்பிடித்தான் பதில் வரும்)

THREE THINGS YOU WANT IN A RELATIONSHIP:
ஹூம் ...எவனோ கல்யாணமாகாத வயசுப் பையன் இந்த கேள்வியெல்லாம் கேட்டிருக்கான்னு நினைக்கிறேன்...காலா காலத்துல கல்யாணம் நடந்தா தானா தெரியும்....மூனு இல்ல முன்னூறு இருந்தாலும் காணாது.

TWO TRUTHS AND A LIE (in no particular order):
வானம் பொழிகிறது...பூமி ....
நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ளீஸ்

THREE PHYSICAL THINGS ABOUT THE OPPOSITE SEX THAT APPEAL TO YOU:
சந்தேகமே இல்லை கல்யாணமாகாத வயசுப் பையன் தான் இந்தக் கேள்வியெல்லாம் எழுதி இருக்கான். எல்லாம் வயசுக் கோளாறு.காலா காலத்துல நடக்கவேண்டியது நடந்துட்டா எல்லாம் சரியாயிடும்.

THREE THINGS YOU WANT TO DO REALLY BADLY RIGHT NOW:
ஒன்னே ஒன்னு தான் இந்த கேள்விகளை தொகுத்த பிரகஸ்பதியைப் பார்க்கவேண்டும்.

THREE CAREERS YOU'RE CONSIDERING:

இது கேள்வி!
இன்டெர்நேஷனல் சாமியார். (இந்த ஓம்ம்ம்ம்ம்ம்ம் கேஸட்டை பேக்கிரவுண்ட்லபோட்டு ..வெள்ளைக்காராளெல்லாம் மெய்மறந்து தலைய விரிச்சு லேசான சாமியாட்டம் போட்டுண்டு வணக்கம் சொல்லி டாலர் டாலாரா கொட்டுவாளே அந்த மாதிரி சாமியார்)

இல்லாவிட்டால்

கள்ளக் கடத்தல் கும்பலில் தலைவன் பதவி (டேய் மொட்டைன்னு நான் கத்தினா நாலஞ்சு பேராவது "யெஸ் பாஸ்"ன்னு வந்து கைகட்டி நிக்கனும். புகை மண்டிப் போன ஹாலில் ஓரத்தில் நாலஞ்சு குட்டிகள் நடனம் ஆடிக் கொண்டிருக்க நான் இண்டர்நேஷனல் கும்பல் தலைவர்களோட பிசினெஸ் பேச வேண்டும்)

இல்லாவிட்டால்

போனாப் போகிறது பிரிட்டிஷ் பிரதம மந்திரிப் பதவி.கல்யாணமானாலும் கருமாதியானாலும் கோட் ஸூடெல்லாம் போட்டுக்கொண்டு ஜம்ன்னு போட்டோக்கு போஸ் குடுக்கனும்.

THREE PLACES YOU WANT TO GO ON VACATION:

கேரளா மூலிகை மஸாஜ்

கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமே இல்லாத ஒரு கடற்கரை

கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமே இல்லாத, பச்சைப் பசேலென்று புல் தரை மட்டுமே இருக்கும் ஒரு ஐரோப்பிய வனாந்திரம்.

(ஹூம் ..வர வர நானும் மணிரத்னம் படத்தில வரும் கதாநாயகி மாதிரி யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்)

THREE KIDS NAMES YOU LIKE:
லல்லு பிரசாத் யாதவ்
மாயாவதி
ஜார்ஜ் புஷ்


THREE THINGS YOU WANT TO DO BEFORE YOU DIE:
ஏம்பா ஏம்பா...இப்போதான் நான் வாழறதப் பத்தியே யோசிக்கிறேன்...அதுக்குள்ள....

THREE(make that more!!) PEOPLE WHO HAVE TO TAKE THIS QUIZ NOW:
இந்தக் கேள்விகளை வேலை மெனக்கெட்டு எழுதிய புள்ளையாண்டன் ஆசையைக் கெடுப்பானே..இதப் படிக்கிறவங்க எல்லாரும் இதமாதிரி எழுதி லோக நன்மைக்கு பங்களிக்கனும்ன்னு தாழ்மையோடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

Thursday, June 02, 2005

அம்மாவசை

For picture version of this post click here

நலம் நலமறிய ஆவல்.
அம்மாவசை வருவதற்கு நீண்ட இடைவெளியாகிவிட்டது. (புரியாதவர்களுக்கு - முந்தைய பதிவிற்கும் இந்த பதிவிற்குமான இடைவெளியைப் பற்றிச் சொன்னேன். ஆடிக்கொருதரம் அம்மாவாசைக்கொருதரம் பதிவு செய்யும் ரகமாகிவிட்டேன்). இடையில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்வுகள். வேலை வேறு மாறுகிறேன். அதனால் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இதே மந்த நிலை தொடரும் என்று நினைக்கிறேன். கிடைக்கும் சந்தர்பத்திலெல்லாம் எட்டிப் பார்க்கிறேன். என்னை மாதிரி வலை உலகில் நிறையபேர் காணாமல் போன மாதிரி தெரிகிறது. நிறைய விஷயங்களைப் பற்றிப் பதிய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எல்லாம் புஸ்ஸ்...இப்போதைக்கு சமீபத்தில் பார்த்த சில படங்களைப் பற்றி...

மும்பை எக்ஸ்பிரஸ்

ரொம்ப எதிர்பார்த்து கமலின் ரசிகன் என்ற முறையில் ஏமாந்து போன படம். படம் ஆரம்பித்து அரைமணி நேரம் ஆகியும் படம் பார்க்கிற உணர்வே வரவில்லை. படத்திற்கு பேர் "செங்கோட்டை பாஸஞ்சர்"ன்னு வைத்திருக்கலாம். அவ்வளவு மெதுவாக நகர்கிறது. வையாபுரி, விருமாண்டி வில்லன், கமல் இவர்களோடு குதிரையும் கடி கடியென கடிக்கிறது. கமல் நடிப்பில் குறையில்லை என்றாலும்...(யாரு..சிங்கம்டா அண்ணன்!) திரைக்கதை வசனம் எல்லாம் சொதப்பல். பொதுவாக லாஜிக் இல்லாவிட்டாலும் சிரிக்கவைத்தாவது மழுப்புவார்கள்...இங்கே அதுவும் இல்லை. கிரேஸி மோகனையே போட்டிருக்கலாம். அரைத்த மாவாக இருந்தாலும் புளிக்காமலாவது இருந்திருக்கும். எப்படா படம் முடியப் போகிறது என்று இருக்கிறது. யூ டூ கமல்???


சந்திரமுகி...எதிர்பார்ப்பே இல்லாமல் பார்க்க ஆரம்பித்து சுவாரஸ்யமாக பார்த்த படம். பொதுவாகவே இந்த பேய், பிசாசு எழவெல்லாம் ரொம்ப பிடிக்கும். (கல்யாணமானா அப்பிடித்தான்). ரஜினி படத்திலா இப்பிடி...அப்பிடி போடு. ரஜினிக்கு மிகப்பெரிய ஷொட்டு. இமேஜை தூக்கி குப்பைத்தொட்டியில் போடுங்க சார். உங்கள் தற்போதைய ரசிகர்கள் உங்களோடு தான் இருப்பார்கள். இதமாதிரி வித்தியாசமான கதைகளையும் களங்களையும் தேர்தெடுங்கள். பொன்னம்பலத்திற்கும் பன்ஞ் டயலாக்கிற்கும் கொஞ்ச நாள் விடைகொடுங்கள், அத்தோடு அந்த ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை வரும் "அண்ணன் அப்பிடி இப்பிடி" ஜால்ரா வசனங்களுக்கும் நோ சொல்லுங்கள்...எங்க பக்கத்து வீட்டுப் பாட்டியையும் ரசிகர் மன்றத்தில் சேர்த்துவிடுகிறேன்.

பொதுவாகவே ரஜினி அடிக்கடி டுபுக்கு ப்ளாக்கிற்கு வந்து நான் எழுதுவதையெல்லாம் படிப்பார். ஒருவேளை இப்போதைக்கு வர முடியவில்லை என்றால் நீங்கள் யாராவது பார்த்தால் நான் சொன்னதாகச் சொல்லிவிடுங்கள். சந்தோஷப் படுவார்.

சச்சின் - நான் என் வர்ஷா குட்டிக்கு கதை சொல்லுவது மாதிரி எடுத்திருக்கிறார்கள். யானை வரும், பூணை வரும் அப்புறம் யானை திடீரென்று சிங்கப்பூருக்குப் போய் புட்பால் விளையாடும்.குரங்கு சேட்டை பண்ணும். பூணை புண்ணாக்கு திங்கும். மிச்ச கதைக்கு சச்சின் படத்தைப் பாருங்கள். இப்பிடித் தான் போகிறது.