Wednesday, April 29, 2009

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.8

இந்த தரம் ஒரு குறும்படம்.

தேர்வு சமயம், தொடர்ந்து படிக்க வேண்டிய கட்டாயம்/ கால கட்டம், உறைய வைக்கும் மைனஸ் நான்கு டிகிரி குளிர்...தொடர்ந்து அரைமணி நேரம் வெளியே நின்றால் நடுவில் முடிந்த போது காரிலோ பக்கத்தில் இருக்கும் கடையிலோ வீட்டிலோ போய் ஹீட்டரில் கை கொஞ்சம் குளிர் காய்ந்து ஏகப்பட்ட கமிட்மெண்டுடன் நடித்துக் கொடுத்த மூவருக்கும் மனமார்ந்த நன்றி. அதை விட ஏதோ கத்துக்குட்டி கேட்கிறானே என்று பெருந்தன்மையாய் அவர்களை நடிக்க அனுமதித்த அவர்களது பெற்றோர்களுக்கு கோடானு கோடி நன்றி.

இது மூன்றாவது குறும்படம் தான். இன்னும் கற்றுக்கொள்ளும் மாணவனாய் எடுத்த படம் தான்.எந்த வித பொரஃபஷனல் உபகரணங்களையும் உபயோகப் படுத்தாமல் சாதாரண கேம்கார்டரில் எடுத்த படம் தான். ஏதோ பார்த்து பெரிய மனது பண்ணி உங்கள் மேலான கருத்துக்களை சொல்லுங்கள், நன்றியுடையவனாய் இருப்பேன். இப்பொழுது வெகு சமீபத்தில் கேமிரா உட்பட பொரபஃஷனல் சமாச்சாரங்கள் வாங்கியுள்ளேன் அதனால் அடுத்த குறும்படத்தில் ஒலி மற்றும் ஒளி இன்னும் கொஞ்சம் தரமாகவே இருக்கும் என்று நம்புகிறேன் (படத்தின் தரம் அல்ல :) ). மற்றபடி அதே படபடப்பு மற்றும் எதிர்பார்ப்புடன் உங்கள் பின்னூட்டத்திற்கு காத்திருக்கிறேன்.

Monday, April 27, 2009

உதவி - வருத்தங்கள்

போன பதிவில் வலையுலக நண்பி பொயட்ரீ சார்பாக ஒரு உதவி கேட்டிருந்தேன். வந்த பின்னூட்டங்களில் ஸ்ரீதர் நாராயணன் உங்களின் இந்த பதிவே பொறுப்பில்லாமல் இருக்கிறது என்று கூறியிருந்தார். அவரின் அந்த குற்றச்சாட்டை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். விஷயத்தை விவரமாய் கூறாமல் ஏனோ தனோ என்று போட்டதில் வட தென் துருவங்களுக்கு போய் வந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமைக்கு பதில் அவர் ஏதோ அம்மாபட்டிக்கு போய் வந்த மாதிரி ஆகி, டி.வி.யில் அரைமணி நேர கச்சேரி ஸ்லாட்டுக்கு பிச்சையெடுப்பது மாதிரி ஆகிவிட்டது. பத்ரியின் அரைமணி நேர டி.வி. ஸ்லாட் பின்னூட்டம் எனக்கு மிக மிக எள்ளும் தொனியில் பட்டது (and felt very rude and offensive) ஆனால் தவறில் எனக்கும் பங்கு உண்டு. விஷயத்தை இன்னும் விவரமாய் பதிந்திருக்கலாம்.


விஷயத்துக்கு வருவோம். வட துருவத்துக்கோ தென் துருவத்துக்கோ ஏதோ ஒரு துருவத்துக்கு போவதே பெரிய விஷயம். இதைப் பற்றி சில ஹாலிவுட் படங்களே எடுத்திருக்கிறார்கள்.. ஆனால் சரஸ்வதி காமேஸ்வரன் ஏகப்பட்ட பிரயத்தனங்களுக்குப் பிறகு இரண்டே இரண்டு பெண்மனிகள் கொண்ட குழுவில் எந்த ஸ்பான்சரும் இல்லாமல் தன் சுயமுயற்சியில் இரண்டு துருவங்களுக்கும் 2007ல் போய் வந்திருக்கிறார். இவர் இரண்டு துருவங்களுக்கும் சென்று வந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றிருப்பதாக நண்பி பொயட்ரீ கூறுகிறார்.

பத்ரீ மற்றும் ஸ்ரீதர் நாராயணன் கூறிய குறிப்புகள் பதிவுகள் அவர் அப்பொழுதே இங்கே மற்றும் இங்கே லைவாக விவரமாக அன்றாட குறிப்புகளாக படங்களுடன் பதிந்திருக்கிறார்.

இவரின் இந்த இரண்டு துருவங்களுக்கும் சென்று வந்த முதல் இந்தியப் பெண்மணி தகவல் சரியான முயற்சி இல்லாமல் இந்த பெருமை சரியாக வெளியே வராமல் போய்விட்டது. இப்பொழுது சமீபமாக 2010ல் இதே இரண்டு துருவங்களுக்கும் போகப் போகும் ஒரு பெண்மணிக்கு "இதே இரண்டு துருவங்களுக்கும் போகப் போகும் முதல் இந்தியப் பெண்மணி" என்ற தவறான பட்டத்தை ஊடகங்கள் வழங்குவதைப் பார்த்து நண்பி பொயட்ரீ கொதித்துப் போய் எழுந்து உதவ முடியுமா என்று கேட்டு வந்தார். அதுவும் எப்பொழுது.. செய்தியைப் பரப்பிக்கொண்டிருக்கும் எல்லா ஊடகங்களையும் ஆன மட்டும் தொடர்பு கொண்டு எழுதி பயனில்லாத போது.2010ல் பயணிக்கப்போகும் பெண்ணின் குழு அமைப்பாளருடன் பேசியும் பயனில்லை. எல்லாமே (Daily India, ANI International and Felicity Aston) கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது.

ஒரு விஷயத்தை தெளிவு படுத்திவிடுகிறேன் - முன்னால் அவர் எனது ப்ளாகில் பின்னூட்டம் இட்டிருந்தாலும் நண்பி பொயட்ரீயை எனக்கு இந்த விஷயத்தின் போது தான் அறிமுகம் கிடைத்தது. நம்மூர் பெண்மணியின் பெருமையை யாருக்கோ வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆன மட்டும் முட்டிப் பார்த்துவிட்டேன் இப்பொழுது வலைப்பதிவுகள் மூலமாகவாவது செய்தியைப் பரப்பி உதவி கிடைக்குமா என்று கேட்ட போது உடனே பதியவேண்டும் என்று தோன்றியது.


நான் பதிவில் போட்டதை மற்றவர் உல்டா பண்ணிப் போட்டாலே கோவம் வருகிறது, பதிப்புலகில் இதுவே பெரிய சர்ச்சையாகுகிறது...ஆனால் ஒருவர் 2007ல் "முதல் இந்தியப் பெண்மணி" என்ற பெற்ற சாதனையை இப்பொழுது மறுக்கப்படும் பொழுது கொதிக்கவே செய்கிறது. இவரின் இந்த சாதனை முதலில் இமயத்தை தொட்ட இந்தியப் பெண்மணி, முதலில் விண்வெளிக்குப் போன இந்தியப் பெண்மணி என்ற வரிசையில் தான் நான் பார்க்கிறேன். இதுவே இதே இடத்தில் கல்பனா சாவ்லாவாக இருந்த்திருந்தால் உதவி புரிந்திருக்க மாட்டோமா? "ப்ளாக்ல போடு சந்தோஷப் படு அதுவே பெரிய சாதனை தான் ....ஐய்யோ வரலையேன்னு புலம்பக் கூடதூன்"னு பின்னூட்டம் போட்டிருப்போமா? அதுவும் பதிப்புலகில் இருக்கும் பத்ரி மாதிரியான ஆட்கள் இதைச் சொல்வது மிக மிக வருத்தமாய் இருக்கிறது. கல்பனா சாவ்லா மாதிரி சாதனையில் இது எந்த விதத்தில் குறைந்து விட்டது? உங்களால் உதவி செய்ய முடியாவிட்டாலும் பரவயில்லை...டி.வியில் அரைமணி நேர ஸ்லாட் என்றெல்லாம் அடுத்தவரின் சாதனையை ரொம்பவே கேவலப் படுத்தாதிர்கள்.

என் போன்ற ப்ளாகில் செய்தி வருகிறது என்பதால் அவரின் சாதனை எந்த விதத்திலும் குறைந்ததில்லை

Sunday, April 26, 2009

உதவி

எப்படி இருக்கீங்க. நம் வலையுலக நண்பி பொயட்ரீ சார்பாக ஒரு உதவி தேவை. அவர்களின் நண்பி சரஸ்வதி காமேஸ்வரன் மிகுந்த முயற்சிக்கு பிறகு வட மற்றும் தென் துருவங்களுக்கு 2007ல் பயணித்திருக்கிறார். இரண்டு துருவங்களுக்கும் சென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றும் இவருக்கு சரியான மீடியா அறிமுகம் கிடைக்கவில்லை. அவர்கள் முயன்று பார்த்தும் இந்த செய்தி சரி வர ஊடக வாயிலாக வெளியே வரவேயில்லை. ஆனால் கொடுமை என்னவென்றால் சமீபத்தில் 2010ல் ஒரு பெண்மணி இதே இரண்டு துருவங்களுக்கும் போகிறார் என்றும் அவரே இந்தியாவின் முதல் பெண்ணாக இருப்பார் என்றும் செய்திகள் வெளி வரத் துவங்கி இருக்கின்றன. நம் வலையுல நண்பர்கள் யாரேனும் பத்திரிகை துறையில் இருந்தாலோ அல்லலது அவர்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தாலோ, இந்த செய்தி(உண்மை) வெளி வர உதவ முடியுமென்றால் தயவு செய்து பின்னூட்டம் மூலம் தெரிவியுங்களேன் ப்ளீஸ்....மிக்க நன்றி.