Monday, November 28, 2016

Setup to Fail

சமய சந்தர்ப்பத்தை முன்னிட்டு முதலிலேயே சொல்லிவிடுகிறேன் செட்டப்ன்னா அந்த செட்டப் இல்ல ;)

ஆபிஸில் பாலிடிக்ஸ் என்பது சர்வ சாதாரணம். அதுவும் மிடில் மேனேஜ்மெண்ட்டில் இது தான் ஐநூறு ஆயிர ரூபாய் மாதிரி - ஜீவாதாரமே. ஒரு பொறுப்பை ஒருவரிடமிருந்து இன்னொருவர் இந்த பாலிடிக்ஸ் காரணமாக கைமாற்றும் சூழல் வந்தால் செத்தான் சிவனாண்டி. என்ன தான் எழவு ஹாண்ட் ஓவர் ப்ரொசீஜர்சை கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு சரி பார்த்து வாங்கியிருந்தாலும் குடுக்கறவன் ஒள்ளிச்சு வைச்சிருப்பான் பாருங்க ஒரு கன்னிவெடி. திரில்லிங்கான ஒரு கேம். நிற்க நீங்கள் எப்பேற்பட்ட தில்லாலங்கடியாக இருந்தாலும் இதையெல்லாம் ஜுஜுபி என்றாக்கிவிடும் விளையாட்டு ஒன்று இருக்கிறது. பொண்டாட்டியை மூனு நாள் ஊருக்கு அனுப்பிவிட்டு வீட்டை சமாளித்துப் பாருங்கள்...இதுக்கு ஒரு எம்.பி.ஏ எவனாவது ஆரம்பிக்கக் கூடாதா.

தங்கமணி மூன்று நாட்கள் அவருடைய நண்பிகளுடன் ஹாலிடே.

“நீ ரெண்டடி தள்ளி நின்னு இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் மட்டும் சொல்லு நான் செய்யறேன்” என்று ஏகப்பட்ட பந்தோபஸ்து பண்ணி சென்னா மசாலா செய்யக் கற்றுக் கொண்டாலும் இந்தப் பக்கம் ஷன நேரம் திரும்பும் போது அந்தப் பக்கம் ஏதாவது ஒரு பொடியை எடுத்துப் போடும் துக்கிரித்தனம். secret ingredient....என்ன இருந்தாலும் நான் சமைச்ச மாதிரி...

ஒரு வாரமாய் எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளும் படி (ஹாண்ட் ஓவர்) ஒரே நச்சரிப்பு. (பொலிடிக்கல் கரெக்ட்னஸ்). அது வாங்கி ஸ்டாக் பண்ணவா இது வாங்கி ஸ்டாக் பண்ணவா... சமைத்து பிரிட்ஜில் வைத்துவிட்டு போகவா ... நோ நோ நோ எல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம். வீ ஆர் க்ரோன் அப்ஸ் அண்ட் வீ நோ டு ஹாண்டில் சிச்சுவேஷன்ஸ்

குக்கர் இங்க இருக்கு, அது அங்க இருக்கு... இது எங்க இருக்குன்னு தெளிவா ஹாண்ட் ஓவர் வாங்கிக் கொண்டு அடுத்த நாள் அரிசி வைக்கப் போனால் குக்கர் வெயிட்டைக் காணோம். புஸ்ஸு புஸ்ஸுன்னு காத்து தான். ஜேம்ஸ் வாட் இப்படித் தான் ஸ்டீம் இஞ்சினைக் கண்டுபிடிட்தாரா தெரியவில்லை. "தெரியும் உங்க லட்சணம்...” என்ற கெக்கலிப்பில் ஆரம்பித்து அங்க பாரு இங்க பாருன்னு கடைசியில் ஒரு ட்ராவில் இருந்தது. என்ன ஒரு வில்லத்தனம். பரமசிவன் என்னிக்காவது பாம்பை கழட்டி வைச்சிருக்காரா...குக்கர் வெயிட் பாத்திரம் தேய்த்து (உணர்த்திய கையோடு) மூடியிலேயே இருக்க வேணாமா.... Kaizenகாரன் வந்தால் வழிச்சிண்டு சிரிக்க மாட்டானா?

பாத்திரம் தேய்ப்பதெல்லாம் லெஃப்ட் ஹாண்ட்ல அசால்ட்டா செய்வேன் என்றாலும் கரெட்டாய் ஒரு ஷிப்ட் பாத்திரத்துக்கு அப்புறம் டிஸ்பென்சரில் லிக்விட் சோப் காலி. ரீபில் மெகா பாட்டிலை காணோம். சை ... ”இதுக்குத் தான் என்ன வேணும் என்ன வேணும்ன்னு ஒரு வாரமா கேட்டேன்” - ஈஸ்வரா இந்த indispensable factor

டீ போடறதுக்கு என்னிடம் கண்ணன் தேவனே வந்து டியூஷன் எடுத்துக்கணும். அதெல்லாம் எங்க ஏரியா உள்ள வராதே என்ற சவுடாலெல்லாம் கரெக்ட்டா தான் போச்சு. ஏலக்காய் இஞ்சியை இடிக்க குட்டி மசாலா இடிக்கும் உரலைத் தேடினால் உரல் இருக்கு இடிக்கும் கம்பியைக் காணோம். வாரம்...க்ரீன் டீ வாரம்...

ச்சை... போதும் நிறுத்திக்கிறலாம் என்று தற்சமயம் சரவணபவன் அண்ணாச்சியும், பிட்ஸா ஹட் பாயும் சேர்ந்து நம்ம வீட்டு சிச்சுவேஷன்ஸை ஹாண்டில் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

Thursday, September 08, 2016

நாயகன்

இரவு ஒன்றரை மணி. ஆன்லைனில் ஓசோனைப் பற்றி ஓஷோ ஏதாவது சொல்லியிருக்கிறாரா என்று நோண்டிக் கொண்டிருந்தேன். திடீரென்று இங்கே இங்கிலாந்தில் இருக்கும் தோழியிடமிருந்து வாட்ஸப்பில் ”ஆர் யூ தேர்” என்று பிங் வந்தது.  இரவு பத்து மணிக்குத் தான் அவரிம் மாட்லாடியிருந்தேன்.  ராத்திரி ஒரு மணிக்கு ஆன்லைனில் யோக்கியனுக்கு என்ன வேலை என்று நம்பளைப் பற்றி ஏதாவது ஏடாகூடமாய் நினைத்துக் கொள்வார்களோ என்ற பயம். (நல்லவனுக்கு நாளெல்லாம் சோதனை). இப்பத் தான் தண்ணி குடிக்கலாம்னு எழுந்தேன், டைம் என்னன்னு மொபைலை பார்க்கலாம்னு ஆன் பண்ணினா ஹய்யைய்யோ நீங்க என்று அளவளாவ ஆரம்பித்தேன்.

நாளைக்கு எங்கயும் கமிட் ஆகாமல் ரெடியாய் இருங்கள் ஒரு கோல்டன் ஆப்பர்ச்சுனிட்டி என்று சுருக்கமாய் முடித்துக்கொண்டார். அந்த காலக் கட்டத்தில் வேலை மாறும் படலத்தில் இருந்ததால் காலையில் மகள்களுக்கு ரொட்டியில் வெண்ணெய்யையும்,  மிச்ச நேரங்களில் வீட்டில் பெஞ்ச்சையும் தேய்த்துக் கொண்டிருந்தேன். எதாவது க்ளு கொடுக்கலாமே க்ரோர்பதிலேயே மூனு ஆப்ஷன் தர்றாங்க என்றது  “உங்காளுங்க” என்று  ஏகத்துக்கு க்ளூ கொடுத்தார்.  இருக்கறவனுக்கு ஒரு ஆள் நமக்கு ஊரெல்லாம் என்று நினைப்பு  (நோட் த பாயிண்ட் நினைப்பு நினைப்பு) . வேதிகாவா இருக்குமோ, இல்லை நயந்தாரா அடிக்கடி லண்டனுக்கு வருகிறாரே  இல்லை சமந்தாவா என்று ஏகத்துக்கு குழப்பம்.  எதாய் இருந்தாலும் காலையில் தான் கன்ஃப்ர்ம் ஆகும் என்று கறாராய் சொல்லிவிட்டார்.  அவ்ளோ தான் ஓஷோவையும் ஓசோனையும் ஓரங்கட்டிவிட்டு யாரெல்லாம் லண்டனுக்கு வந்திருக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். ஏழு மணிக்கு திரும்ப கால் வந்தது. சொக்கா சொக்கா சொக்கா என்று பதற ஆரம்பித்துவிட்டேன். ஏங்க அவரு என் ஆளாங்க..... தலைங்க என்னோட தலை என்று தலையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அதுவும் நாங்க செல்லவேண்டிய வேலையும் அவ்வளவு சோக்கானது. சிங்கத்தையே..படம் பிடிக்க வேண்டிய பொன்னான வாய்ப்பு. (அவரை டைரக்ட் செய்ய என்பதெல்லம் ரொம்ப ரொம்ப ஓவரான வார்த்தை). எங்கே என்ன எதற்கென்ற விபரங்கள் இங்கே தர முடியாத நிலையில் இருக்கிறேன் - தோழிக்கு வாக்கு கொடுத்திருக்றேன் எனபதால் அந்த விபரங்கள் பதிய முடியவில்லை. ப்ளீஸ் மன்னித்து விடுங்கள் ஆனால் அது சினிமாவல்ல...ஒரு வாழ்த்து அவ்வளவு தான் அந்த காணொளி எல்லாம் ஊடங்களில் எப்பவோ வெளிவந்துவிட்டது அவ்ளோ தான். (இது நடந்து கொஞ்ச காலங்கள் ஆயிற்று)

பதினோரு மணிக்கு அங்கே இருக்கிற மாதிரி வந்துவிடுங்கள் என்று இடத்தைச் சொல்ல பத்து மணிக்கே ஏரியாவிற்கு போய்விட்டென். பெரிய ஹோட்டல் என்பதால் லாபியில் மீட் பண்ணுவதாய் ப்ளான். முன்னாடியே  போய் லாபியில் உட்காருவதற்கு பதில் சும்மா பக்கத்தில் தெருவில் சுற்றிக் கொண்டிருக்கலாம் என்று சுற்றிக்கொண்டிருந்தேன். பத்தரை மணிக்கு தோழியிடமிருந்து செய்தி. எங்கிருக்கிறீர்கள் சார் அல்ரெடி வந்தாச்சு இங்கே தனியாய் இருக்கிறார் என்று. பின்னங்கால் தலையைத் தாண்டி மேல் வயிற்றில் வந்து படுமளவிற்கு ஓட்டம். மூச்சிறைக்க லாபிக்கு வந்தால் அமைதியாய் உட்கார்ந்திருக்கிறார் தலைவர். பக்கத்தில் போக எழுந்து கொண்டார். குணா கமல் கோயில் சீன் மாதிரி அவரையே  பரவசமாய் ஒரு நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தேன். தோழி ரொம்ப மரியாதையாய் ‘சார் இவர் உங்களோடு பெரிய டை ஹார்ட் ஃபேன்...அது இது’ என்று என்னை கமலுக்கு அறிமுகம் செய்து கொண்டிருந்தார். அவரும் புன்னகையோடு என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.  “எப்படி இருக்கிறீர்கள்” என்று பாந்தமாய் கேட்கிறார். பதில் சொல்லத் தோன்றவில்லை. பிரமிப்பு இன்னும் அடங்கவில்லை...மூச்சிறைப்பும் தான். “கேன் ஐ ஹக் யூ” என்று கேட்கிறேன். பதிலுக்கெல்லாம் காதிருக்கவில்லை. அவர் கை லேசாக திறந்ததும் அவரை அணைத்துக் கொள்கிறேன். முப்பது விநாடிகள் நீண்ட அணைப்பு. முதுகில் தட்டிக் கொடுக்கிறார்.  வாங்க உட்கார்ந்து பேசலாம் என்று எதிர் சோஃபாவை காண்பிக்கிறார். எதிர் சோபா தள்ளியிருந்தது. அங்க வேண்டாம் ரொம்ப தள்ளியிருக்கு நான் இப்படியே இங்க உங்க சோபா கைப்பிடியில் இன்பார்மலாய் உட்கார்ந்து கொள்கிறேனே என்கிறேன். சிரித்துக் கொள்கிறார். கைப்பிடி வசதியாய் இல்லை ஒரு காலை மடித்து காலேஜில் அரட்டை அடிப்பது போல் அப்படியே முட்டியை சோபா பக்கத்தில் வைத்து தரையில் ரெண்டுங்கெட்டானாய் முட்டி போட்டு உட்கார்ந்து கொள்கிறேன். சாரி ஏதோ கேட்டீங்க காதுல விழலை என்று திரும்ப கேட்டு பதில் சொல்கிறேன். உங்களைப் பார்த்தா சார்ன்னுலாம் சொல்லக்கூடாது நீங்க எனக்கு கமல் அதுனால கமல்ன்னு கூப்பிடம்ன்னு இருதேன் ...இப்போ முடியலை என்கிறேன். நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார். தோழி மேலும் என்னுடைய கமல் பைத்தியத்தைப் பற்றி சொல்கிறார்.  தோழியைப் பார்த்து உங்களுக்கு கோயில் ஒன்னு கட்டி அடுத்த ஆடியில் கும்பாபிஷேகம் என்பது போல் நன்றியோடு பார்க்கிறேன்.  கேமிரா கொண்டுவரும் நண்பர் வழியில் ட்ராபிக்கால் தாமதமாகிறது என்ற செய்தி வருகிறது. ட்ராபிக்குக்கும் பக்கத்திலேயே ஒரு கோயில் கட்டவேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்.

ஹய்யோ கமலைக் காக்க வைக்க முடியாதே என்று தோழி பதறுகிறார்.  சார் எங்களுக்கு இப்போ ஒரு மணி நேரம் முன்னால் தான் விஷயமே தெரியும் தவறாக நினையாதீர்கள் நண்பர் தள்ளியிருந்து வருகிறார் என்கிறேன்.  அதெல்லாம் ஒன்னும் பிரச்சினையில்லீங்க எனக்கு இன்னும் ஒன்றரை மணிநேரம் இருக்கு அதுக்குள்ள முடிச்சிட்டா போதும், டோண்ட் வொர்ரி  ரிலாக்ஸ்என்கிறார். நண்பருக்கு ஃபோன் போட்டு ஒன்னும் அவசரமில்லை மெதுவா வாய்யா (நான் பேசிக்கொண்டிருக்கிறேன்) என்று சொல்லலாமா என்று குறுக்கு புத்தி போகிறது. தோழி டக்கென்று இவருடைய நாற்பதாவது பிறந்த நாள் கொண்டாட்டமே உஙக் தீம் தான் என்று கரெக்ட்டாய் எடுத்துக் கொடுக்கிறார். ஆஹா தெய்வமே குல தெய்வமே என்று அவரைப் பார்க்கிறேன். அட அப்படியா என்கிறார் கமல். கொஞ்சம் புரியவில்லை அவருக்கு. அந்த பார்ட்டிக்கு கமல் எனபது தான் தீம். நண்பர்கள் கமலின் வெவ்வேறு பட கெட்டப்பில் தனியாகவோ ஜோடியாகவோ வந்திருந்தார்கள். ஆளவந்தான் கமல்,  சண்டியர் கமல், அவ்வை சண்முகி கமல் என்று பல பேர் மெனெக்கட்டு தீவிர கெட்டப்பில் வந்து கலக்கியிருந்தார்கள். பேஸ்புக்கில் ஆல்பம் இருந்தது. இங்க பாருங்க என்று டக்கென்று பேஸ்புக் ஆல்பத்தை எடுத்து காட்டுகிறார் தோழி. கமல் புன்னகையுடன் பார்க்கிறார். அட இவ்வளவு மெனக்கெட்டு தீவிரமா வந்திருக்காங்க என்று ஆச்சரியப் படுகிறார். எனது ப்ரொபைல் பிக்ச்சர் வேறு சலங்கை ஒலி இன்விடேஷன் சீன் கெட்டப்பில் நானும் தங்கமணியும் எடுத்த ஒரு படம். அதையும் க்ளிக் செய்து பார்க்கிறார். கொஞ்சம் ஓவர் தான் என்றாலும் இது எது மாதிரி என்று தெரிகிறதா என்று கேட்கிறேன். கொஞ்சம் பலமாய் புன்னகைத்து தலையாட்டுகிறார். நினைத்துக் கூட பார்க்கவில்லை அந்த பார்ட்டி படங்களை எல்லாம் கமல் பார்ப்பார் நான் அவருக்கு பக்கத்திலிருந்து காண்பிப்பேன் என்று. தோழியும் என் மற்ற நண்பரும் (அவர் கணவர்)  மற்ற் வேலைகளை பார்க்க் நகருகிறார்கள். கமலுக்கும் எனக்குமான ஒன் டு ஒன் அரட்டை ஆரம்பிக்கிறது. சொக்கா சொக்கா....அத்தனையும் எனக்கேவா...

முப்பத்தைந்து நிமிடங்கள் ஓடியதே தெரியவில்லை. அரசியல், சினிமா, சக மனிதம் என்று பேச்சு பலவற்றைத் தொட்டது. மனிதத்தில் நிறைய உண்ர்ச்சி வசப்பட்டார்.  உங்க பாதிப்புல நமக்கு நாமே திட்டத்துல் என்னை ’உன்னால் முடியும் தம்பி கமல்’ என்று தான் சொல்லிக்கொள்வேன் என்று நைசா சொருகிவிட்டேன். உணர்ச்சி வசப் படுவதை நிப்பாடி விட்டார். ஆன்லைன் உலகத்தைப் பற்றி சொன்னேன். ப்ளாக் உலகம் பற்றியும் தற்போது ஆன்லைன் உலகில் நடக்கும் பல நல்ல விஷயங்கள் பற்றியும் சொன்னேன்.  சினிமா மட்டுமே குறைவாகப் பேசப்பட்டது.  எங்கேயும் அவரின் கம்ஃபோர்ட் சோன் தாண்டிப் பேசக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தேன். ஆனால் அவர் வெளிப்படையாகப் பேசினார். ஆன்லைன் உலகில் சாதி அரசியலை மட்டும் விட்டுவிடாதீர்கள் என்றார். பதில் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக் கொண்டேன். தாமதமான நண்பர் வந்து சேர்ந்தார். இவ்ளோ அவசரமா சித்த மெதுவா வரப்பிடாதா சித்தப்பு என்று அவரைப் பார்க்கிறேன். கேமிரா செட் செய்து லைட்டிங் பார்த்து சவுண்ட் செக் செய்து அடா அடா அடா...எங்களின் இந்த ஆர்வம் பற்றியும் எங்கள் சோத்துக் கடமை பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டார். சார் லண்டன் ஃபிலிம் அக்காடமியில்..என்று செல்ஃப் டப்பாவையும் சேர்த்துக் கொண்டேன். அந்தப் பல்கலைக் கழகம் அமைதியாகக் கேட்டுக் கொண்டது. கேமிராவில் சில டிப்ஸ் கொடுத்தார். தள்ளி சென்று ஒரு நிமிடம் கண்ணாடியில் பார்த்துக் கொண்டார். வசனத்தை ப்ரிப்பேர் செய்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். திரும்ப வந்து இங்க நின்னா சரியாக இருக்குமா  என்று கேட்டுக்கொண்டது நிறை குடம்,  அந்த அந்த அந்த ஒரு நிமிடம் வந்தது. வாழ்வின் பொன்னான நேரம் ஆக்‌ஷன் என்று குரல் கொடுக்க  - பேச்சுக்கு சொல்லவில்லை ...சிங்கம்ன்னா சிங்கம் அப்படியே வேறொரு காட்சி. குரல் அவ்வளவு தெளிவு. பே என்று பேஸ்தடித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். கேமிராவில் ஹெட் ரூம் கொஞ்சம் பெட்டராய் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. வசனத்தின் நடுவில் சிறிது முன்னால் வந்து விட்டார். முடிந்து தான் தெரிந்தது. அவரே ஹெட்ஃபோன் வாங்கிப் போட்டுப் பார்த்து ’ஆமாம் கொஞ்சம் டைட்டாக இருக்கு இன்னொரு டேக் போலாமா’ என்றார். அட்ரா சக்க இன்னொரு டேக்கா எங்களுக்கு டபுள் ஓக்கே. இந்த முறை இடத்தை சரியாக பிக்ஸ் செய்துகொண்டார்.  திரும்பவும் ஆக்‌ஷன். திரும்பவும் சிங்க கர்ஜனை. வார்த்தை மாறாமல் பிசகாமல் கலக்கலாய் அதே டயலாக் டெலிவர். நிஜமாய் இதய்ப் பூர்வமாய் சொல்கிறேன் - வாய் வொய் கமல் இஸ் க்ரேட்.

எல்லாம் முடிந்து விடை பெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்த போது நம்பவே முடியவில்லை. முப்பத்தைந்து நிமிட ஒன் டு ஒன்.... வாவ் சான்ஸே இல்லை - பிரமிப்பு அடங்க நிரம்ப நேரம் பிடித்தது. அவருக்கு எங்காவது நம்மைத் திரும்ப பார்த்தால் நியாபகம் இருக்குமா என்று இன்று வரை யோசிக்காமல் இருக்க முடியவில்லை. முக்கால் வாசி என்னை மறந்து இந்த விஷயமே நியாபகம் இல்லாமல் போகலாம்  - அவருக்கு இது போல் ஆயிரம், லட்சம் ரசிகர்கள். ஆனால் எனக்கு அவர் ஒரே ஒரு கமல்.

Monday, August 29, 2016

என்.ஆர்.ஐ. மம்மி

தலைப்பு சற்று மிஸ்லீடீங்காய் இருக்கிறதே முதலிலேயே மு.கு கொடுக்கவில்லையே என்று ஆதங்கப் படுபவர்களுக்காக சொல்லிவிடுகிறேன். இந்தப் பதிவு நேற்று எழுதிய The man who knew infinity திரைப்பட பதிவின் நீட்சியே.
என்.ஆர்.ஐ. மம்மி இந்தப் பதிவின் ஒரு அங்கமே அன்றி முக்கிய கதாநாயகி அல்ல. அது தவிர திரைப்படத்திலிருக்கும் சில காட்சிகளை இந்தப் பதிவில் விவரித்திருக்கிறேன். படம் பார்க்குமுன் அது பற்றி தெரிய விரும்பாதவர்கள் பதிவைத் தவிர்ப்பது நலம்.
நேற்றைய பதிவில் வந்த பெனத்தாலார் மற்றும் ராம்ஜியின் பின்னூட்டங்களே இந்தப் படம் பற்றிய என்னுடய மேலும் சில கருத்துகள் பதிய ஊக்கப்படுத்தின.(நன்றி அண்ணாச்சிகளா) The Mam who knew infinity-ல் இயக்குனர், வசனங்களோடு விரும்பி செய்த நிறைய subtle nuances கூர்ந்து கவனித்தால் அசத்தும்.

The So called Racism - ரேசிசம் என்பது இன்றைய காலகட்டத்தில் இனவெறுப்பு மட்டுமல்லாது இன. நிற , வகுப்பு, சாதி என்று எல்லாவற்றையும் பொதுவாய் குறிக்கும் ஒரு சொல் மற்றும் உணர்வாகிவிட்டது. ராமானுஜனின் போராட்ட காலம் முதலாம் உலகப் போருக்கு முன்னால் ஆரம்ப கால ஆயிரத்தி தொள்ளாயிர காலம். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்துகொண்டிருந்த ஒரு காலம். இந்தியர்களை பெரும்பாலோர் நடத்தும் விதம் பற்றிக் கேட்கவே வேண்டாம். இதைப் பல இடங்களில் இயக்குனர் தைரியமாகக் காண்பித்திருப்பார். ஆனால் அதை விட இந்த மிரட்டல்களை எல்லோரும் எல்லா இடங்களிலும் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள் , சில இடங்களில் தள்ளு முள்ளுக்களும் நடக்கும் என்றும் மிக subtleஆக அழகாக காட்டியிருப்பார். மெட்ராஸில் முதன் முதலாக ராமானுஜ்னுக்கு க்ளார்க் வேலை தரும் நாராயணன் அவரை தன் முதலாளி சர் ப்ரான்சிஸிடம் அறிமுகப் படுத்த அழைத்துச் செல்வார். ப்ரான்சிஸ் பார்த்த மாத்திரத்திலேயே ராமானுஜனை துச்சமாக மதித்து இவனையெல்லாம் ஒரு ஆள் என்று கூட்டிவந்துவிட்டீரா என்ற தோரணையில் “நாராயணன் நீங்க என்னிடம் எவ்வளவு காலம் எனக்கு வேலை பார்கிறீர்” என்று கேட்க “ கோதவரி நதியில் அணை கட்ட நான் உங்களுக்கு டிசைன் செய்து கொடுத்த நாள் முதலாய் சார், அதாவது அதிலிருந்து உங்களுக்கு சர் பட்டம் கிடைத்து உங்களை இன்று வரை சர் என்று அழைக்கும் காலத்திலிருந்து” என்று நாராயணன் ஊசி ஏத்துவார் பாருங்கள். வசனம் நச். (on a different note - நம்மூரில் தற்போது ரேசிசம் என்பதில் அது ரேசிசம் என்பதை உணராமலே நாம் எவ்வளவு பங்கெடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் போது பெருமூச்சு தான் வருகிறது. நமக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி போன்ற டீட்டெயிலுக்கு தனிப் பதிவே எழுதலாம்)

எல்லா இடங்களிலும் இந்த வெறுப்பு என்பது சாத்தியமான ஒன்று. ஆனால் இப்பேற்பட்ட இடங்களிலும் காலகட்டங்களிலும் அன்பைப் பாராட்டும் நல்லுங்களும் இருப்பார்கள். ப்ரொபசர் ஹார்டி மற்றும் லிட்டில் வுட் இதற்கு அருமையான உதாரணங்கள். மேதாவித்தன போட்டியும் பொறாமையும் நிறைந்து இருக்கும் கேம்பிரிட்ஜில், எங்கேயோ இருக்கும் ஒரு இந்தியனுக்கு வக்காலத்து வாங்கி அவனுடைய மேதமைக்காக மட்டுமே அவனை கொணர்ந்து. ஹார்ட்டி ராமானுஜனுக்காக ஃபெல்லோஷிப் வாங்க படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. படத்தில் சொல்லாத ஒரு நிஜம் ராமானுஜன் இங்கிலாந்து லேசில் வரவில்லை ப்ரொபசர் ஹார்டி ராமானுஜனை இங்கிலாந்து கொண்டு வர மெட்ராசில் ஒன்றம் பின் ஒன்றாக ஆட்களை தூது அனுப்பி ரொம்ப மெனக்கெட வேண்டியிருந்தது. ஹார்டி இல்லாவிட்டால் இன்றைக்கு நமக்கு ராமானுஜன் யார் என்றே தெரிந்திருக்காது. கேம்பிரிட்ஜில் ஹார்டிக்குத் துணையாக லிட்டில்வுடும் இன்னும் சில ப்ரொபசர்களும் பலம் சேர்த்தார்கள். ராமானுஜனைக் கொண்டாடும் நாம் இவர்களுக்கு என்றென்றைக்கும் கடமைப் பட்டுள்ளோம்.
இந்த ரேசிசம் தவிர ஞான செருக்கு பற்றி பல இடஙக்ளில் இயக்குனர்அழகாய் காண்பித்திருப்பார். ராமானுஜன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு அப்பொழுது தான் வந்திறங்கியிருப்பார். மலைப்புடன் பல்கலைக் கழக பிரமாண்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ப்ரொபசர் லிட்டில்வுடின் வசனம் கன ஜோராய் இருக்கும். “Yes...the intended effect. ..Don't be intimidated. Great knowledge comes from the humblest of origins" - நிறை குடங்களை அவர்களின் பெருந்தன்மையை அழகாய் வசனத்தில் செதுக்கியிருப்பார் வசனகர்த்தா.

அடுத்தாய் எனக்கு பிடித்த ஒரு உளவியல் ரீதியான அனுகுமுறை ராமானுஜனின் தாய் பற்றியது. பிராமணர்கள் கடல் தாண்டி செல்லக் கூடாது என்ற நம்பிக்கை பலமாய் இருக்கும் குடும்பத்தில் சில பல சில பல சமாதனங்களுக்குப் பிறகு ராமானுஜன் இங்கிலாந்து செல்கிறார். ராமானுஜனின் மனைவி ஜானகியம்மாள் அவரைப் பிரிந்து எப்பொழுது அவருடன் சேருவோம் என்ற மன்நிலையில் இருக்கிறார், அவர் ராமானுஜனுக்கு எழுதும் கடிதங்கள் எதையும் ராமனுஜனின் தாய் கோமளம்மாள் போஸ்ட் செய்யாமல் ஒரு பெட்டியில் ஒளித்து வைத்துவிடுகிறார். அதே போல் ராமானுஜன் அனுப்பும் கடிதங்களையும் மனைவியிடமிருந்து மறைத்து பெட்டியில் வைத்துவிடுகிறார். ராமானுஜனின் மனைவி ஒரு கட்டத்தில் ராமானுஜன் தன்னை மறந்து விட்டார் என்று மனம் வெறுத்து அண்ணன் வீட்டிற்கு கிளம்பிவிடுகிறார். அங்கேயிருக்கும் காலகட்டத்தில் கடைசியாய் ராமானுஜனுக்கு ஒரு கடிதம் எழுதி அதில் அவரின் அம்மாவின் குட்டு வெளிபட்டுவிடுகிறது. வீட்டிற்கு திரும்ப வந்து கடிதங்கள் ஒளித்து வைத்திருக்கப்படும் பெட்டியை கண்டுபிடித்துவிடுகிறார். அப்பொழுது ராமனுஜனின் தாயார் வந்து “நீயும் அங்கே போய்விட்டால் ராமானுஜன் நாட்டிற்கு திரும்ப வரமாட்டான்” என்று கண்ணீர் மல்க சொல்கிறார்.
மற்ற குடும்ப அரசியலை எல்லாம் தவிர்த்துப் பார்த்தால் எனக்கு இது மிக மிக மிக நியாமான கோணமாய் பட்டது. இது கோமளம்மாளுக்கு மட்டுமல்ல எல்லா என்.ஆர்.ஐ மம்மிக்களுக்கும் பொருந்தும். எந்த ஒரு ஆணுக்கும் கல்யாணத்துக்கு முன் அம்மா என்ற இடத்தை கல்யாணமான பின் மனைவியே பூர்த்திசெய்கிறார். இருவரும் ஒரு இடத்தில் இருந்தால் இந்த விஷயமே பொசசிவாய் மாறி சில பல குடும்ப அரசியலுக்கு வித்திடும். ஆனால் ஒரு என்.ஆர்.ஐ. கோணத்தில் ஒரு ஆள் மனைவி கூட இல்லாமல் வெளிநாட்டில் இருப்பது பயங்கர ஹோம் சிக்காவிடும். அதுவும் உடம்பு சரியில்லாமல் போய் தவித்த வாய்க்க்ய் தண்ணீர் தரக் கூட ஆளில்லாமலிருந்தால் “போங்கடா நீஙகளுமாச்சு உங்க டாலருமாச்சு” என்ற முக்தி நிலை வந்துவிடும். நிறைய நண்பர்களிடம் இங்கு பார்த்திருக்கிறேன். ராமானுஜனின் வாழ்க்கையில் அதுவே அவர் பயங்கர ஹோம் சிக் ஆகி நாட்டிற்கு திரும்ப வருகிறார். இதே அவர் மனைவி இங்கிலாந்து சென்றிருந்தால் அவருக்கு கணித்ததின் மீது இருக்கும் காதலால் இங்கிலாந்தில் அவருக்கு வாய்த்த கணித வாய்ப்புகளால் இந்தியா உடனே வந்திருப்பாரா என்பது என்னளவில் மிகப் பெரும் சந்தேகமே. படத்தில் இது பெரிய சீனோ இல்லை வசனமோ அல்ல. ஆனால் இதுவே எனக்கு intended effectஆகப் பட்டது.

Sunday, August 28, 2016

The Man who knew Infinity

சில மனிதர்களைப் பற்றிய படங்கள் அதீத ஆர்வத்தை ஏற்படுத்தும். அவ்வகையில் ரொம்ப நாளாகவே நான் எதிர்பார்த்த ஒரு ஆளுமை சீனிவாச ராமானுஜன் - The Mathematical Genius. மேத்ஸ்லாம் எனக்கு ஏதோ சுமாராய் வரும். டாப்பராய் ஒரு போதும் இருந்ததில்லை (ம்ம்க்கும் மேத்ஸ் என்ன எந்த சப்ஜெக்ட்டிலுமே  ). இண்டகரேஷனெல்லாம் சிம்ம சொப்பனாமாய் இருந்திருக்கிறது. ஏ,பி, எக்ஸ், ஒய் இசட் எழுத்துகளை சகட்டு மேனிக்கு மாற்றி மாற்றி மேலும் கீழுமாய் எழுதி அங்கஙகே ப்ராக்கட் போட்டு அமைத்த ஈ.குவேஷனெல்லாம் - வெறும் காத்து தான் வரும். ஆனால் கேம்பிரிட்ஜில் வந்து பாடுபட்டு அதிலிலும் சில வருடங்கள் மட்டுமே இருந்து பெல்லோஷிப் வாங்கி இன்றளவிலும் அவருடை கைப் பிரதி புத்தங்களை காட்சிப் பொருளாய் வைத்து கொண்டாடுமளவிற்கு கோலோய்ச்சிக் கொண்டிருக்கும் ஒரு ஆளுமை. “எஸ் ஐ ஆம் ஆல்சோ ஃபெரம் தி சேம் ப்ளேஸ்” என்று ஒரு முறை ப்ளைட்டில் பக்கத்தில் ஒரு கேம்பிரிட்ஜ் ப்ரொபசரிடம் கூச்சமே இல்லாமல் மார்தட்டியிருக்கிறேன். அவருடைய சரித்திரத்தை அவர் சந்தித்த போராட்டங்களை மேலோட்டமாய் தெரிந்த அளவில் அவர் தொடர்பான புதினங்களில் மிகுந்த ஈடுபாடு இருந்தது.
தமிழில் ராமானுஜன் வந்த போது மிக ஆர்வத்துடன் பார்த்தேன். பார்த்த சூழ்நிலையோ அல்லது எனது மனநிலையோ தெரியவில்லை அந்தப் படம் மிக நன்றாக இருந்தாலும் அத்தனை தாக்கத்தை உண்டு செய்யவில்லை.(திரும்பவும் பார்க்கவேண்டும்) சமீபத்தில் The Man who knew Infinity வாய்த்தது. ஒருவரின் வாழ்க்கையை உள்ளதை உள்ளபடி இண்ட்ரஸ்டிங்காய் ஒரு முழு நீள திரைப்படமாய் கொடுப்பது லேசுபட்ட விஷயம் அல்ல. ஆனால் எந்தப் பகுதியை விலாவரிக்கிறோம் எதை சாய்ஸ்சில் விடுகிறோம், எந்தக் கோணத்தை எடுத்துக் கொள்கிறோம் என்பது இயக்குனரின் சாமர்த்தியம். அந்த விஷயத்தில் The Man who knew Infinity இயக்குனர் மேத்யூ ப்ரவுன் மிகத் தெளிவு. படம் அத்தனை சுவாரசியம். ராமனுஜனிற்கு உறுதுணையாய் இருந்து இந்த உலகிற்கு அவரது அதிமேதாவித்தனத்தை அறிமுகம் செய்தது கேம்பிரிட்ஜ் ப்ரொபசர் ஹார்டி. ராமானுஜனுக்கும் ஹார்டிக்குமிடையிலான சம்பவங்களிலேயே படம் பெரும்பாலும் பயணிக்கிறது.
பெரும்பாலும் மெத்தப் படித்தவர்களிடம், அதி மேதாவிகளிடம் ஒரு ஞான கர்வம் இருக்கும். ஆரம்ப கால ஆயிர்த்தி தொள்ளாயிர வருடங்களில் உலகைக் கோலோய்சிக் கொண்டிருந்த வெள்ளையர்களிடம் எப்படி இருந்திருக்கும் என்று கேட்கவே தேவையில்லை. அதிலிலும் அங்கே இருக்கும் கேம்பிரட்ஜ் பல்கலைக் கழகம் இன்னும் விஷேசம். இப்பேற்பட்ட ஒரு இடத்தில் எந்த முறையான கல்வித் தகுதியும் இல்லாத ஒரு இந்தியன், தான் கண்டுபிடித்த தியரங்களை கேம்பிர்ட்ஜில் பதிப்பித்து தன்னை நிலைநாட்டிக்கொளவது என்பது எவ்வளவு கடினமாய் இருதிருக்கும் என்பதை மட்டுமே திரைக்கதையில் முன்னிலைப் படுத்தியிருக்கிறார் இயக்குனர். சொல்ல வந்ததை மிக மிக நேர்த்தியாய் சொல்லியிருக்கிறார். படத்தைப் பார்த்து யாரும் கணிதம் கற்றுக் கொள்ளப்போவதில்லை என்பதிலிருந்து தேவையில்லாத காட்சிகளில் அதிக நேரம் செலுத்தாமல் சொல்ல வந்த கோணத்திலேயே செல்வது போன்ற நேர்த்திகளால் நம்மை படம் நெடுக கட்டிப்போடுகிறார். படத்தில் ராமானுஜனின் கடைசி காலக் காட்சிகள் ஏதுமில்லை. ஆனால் அதைக் கூட ஹார்டியின் ஆங்கிளில் சொல்லி முடிப்பது மிக அழகு. படம் பார்த்துவிட்டு சே...இவ்வளவு பெரிய ஜீனியஸ் 32 வயதில் இவ்வளவு அல்ப ஆயுசில் விதி முடியவேண்டுமா என்று பெருமூச்சு விட வைக்கிறது.
ஹிஸ்டோரியன்ஸின் பார்வைகளில் சில் நொட்டைகள் தெரியலாம். சில வருடங்கள் to the scale-ல் இல்லாமல் இருக்கலாம். சில விஷயங்கள் chronological orderல் இல்லாமல் இருக்கலாம் பல விஷயங்கள் அவுட் ஆஃப் போகஸில் இருந்திருக்கலாம். ஆனால் அவற்றை காலபரிணாம நேர்த்தியில் நெர்கோட்டில் சொல்ல்வது சுவாரசியமில்லாத ஆவண படமாகி அரசு விழாக்களில் திரையிட மட்டுமே தகுதியாகிவிடும். இது ஆவணப் படமல்ல, ஒரு கணித மேதையை பற்றிய விஷயங்களை மிக மிக சுவாரசியமாக ஜனரஞ்சகமாக தந்திருக்கும் சினிமா. Highly recommended.

பழி

**********
முதலிலேயே சொல்லிவிடுகிறேன். பதிவு ரொம்ப ரொம்ப இண்டீசண்டான பதிவு. டீசண்ட் பார்டீஸ் நேரா லெஃப்டுல போய் ரைட்டுல திரும்பவும்.
********
உலகின் தலையாய தர்மசங்கடங்களில் ஒன்று கக்கா போகும் போது மொபைலில் கால் வந்து தொலைவது. ஆண்களுக்கு மொபைல் ஃபோனை கால் சாராய் பையில் வைப்பதால் இந்த சங்கடம் அடிக்கடி நிகழும். இந்த சூப்பர் சிங்கரில் பாடுபவர்கள் எல்லாம் பாடும் போது காற்றில் எஸ் ஒன்றை வெட்டி வெட்டி வரைந்து கொண்டே பாடுவார்களே அது மாதிரி நம்மை சைலைண்ட்டாய் எஸ் வரைந்து கொண்டு கடமை ஆற்ற விடமாட்டார்கள். கரெக்ட்டாய் ஃபோன் வந்துவிடும். வரும் கால் ஒருக்கால் முக்கியமான காலாய் இருந்து தொலைத்தால் எடுத்து தொலைய வேண்டியிருக்கும். அப்படி பேச வேண்டிய சந்தர்ப்பங்களில் அந்தப் பக்கம் பேசுபவர் பெண்ணாய் இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம் அதி விசேஷம். ரகசியக் குரலில் “மேடம்....முக்கியமான மீட்டிங்கில் இருக்கேன்...கொஞ்ச நேரத்துல கால் பண்ணட்டுமா” என்றால் நம்ம “காற்றில் எந்தன் கீதம்” அவருக்கு காதில் விழுந்து தொலையாது. “உங்க சைடு சிக்னல் வீக்கா இருக்கு சார், குரல கொஞ்சம் உசத்திப் பேசுங்க சார்..” என்று விடமாட்டார்கள். “ இங்க என்னோட மேனேஜரோட இம்பார்ட்ண்ட் மீட்டிங்க்ல இருக்கேன் மேடம் கொஞ்ச நேரம் கழிச்சுப் பண்றேன்” என்றால் பக்கத்து டாய்லெட் சக பிரயாணி ட்ரிபிள் மீனிங்கில் கெக்கப் பிக்க என்று சிரிப்பார். 

வேறு சில சந்தர்பங்கள் இன்னும் எசகுபிசகாய் இருக்கும் “எங்க சார்..இருக்கீங்க புரியலை...சத்தமா பேசுங்க புரியலை” என்று அந்தப் பக்கம் இம்சையாய் கேட்கும் போது இந்தப் பக்கம் - பக்கத்து டாய்லெட் க்யூபிகலில் ட்ரம்ஸ் சிவமணியை குடித்தனம் வைத்த மாதிரி தடா முடாவென்று டெல்லி பெல்லி தனியாவர்தனம் செய்து கொண்டிருப்பார். “நீங்க ஏதோ கச்சேரில இருக்கீங்கன்னு நினைக்கிறேன் என்ஜாய் பண்ணுங்க நான் வேணா அப்புறமா பண்ணட்டுமா”ன்னு கால் முடியும் போது ஸ்ஸ்ஸ்ப்பான்னு என்று இருக்கும். 

ஆனால் இந்திய வம்சாவளிக்குத் தான் இந்த லஜ்ஜையெல்லாம் போல. ஆனால் இங்கே பல வெள்ளைக்கார்கள் கவலையே பட மாட்டார்கள். சிலபேர் கான்பரன்ஸ் காலையும் “எஸ் ஆல் டன் ஆன் டைம் - ஹை க்வாலிட்டி டெலிவரி” என்று ஸ்டேடஸ் அப்டேட்டோட ஜோலியோடு ஜோலியாய் இங்கேயே முடித்துவிடுவார்கள். நான் சமீபத்தில் கூசிக் குறுகி வாஷ் பேசினில் ஒரு தோழியுடைய கால் அட்டெண்ட் செய்யவேண்டிய கட்டாயம். ரெண்டு நிமிஷத்தில் திரும்பக் கூப்பிடுகிறேன் என்று சொல்லலாம் என்று எடுத்து “மேனேஜரோடு இம்பார்ட்டண்ட் ..” என்று ஆரம்பிக்கும் போதே பக்கத்து பிரயாணி “குயில் பாட்டு .....வந்ததென்ன இளமானே” பாட்டின் குயில் மாதிரி ஏடாகூடமாய் கூவி தோழி ஒரு மாதிரி சூழ்நிலையை புரிந்து அப்புறம் பேசுகிறேன் என்று கட் பண்ணிவிட்டார். கொலைப் பழியைக் கூட ஏற்றுக் கொள்ளலாம் ஆனால்......சை......இன்று வரை என்னால் ஒரு தன்னிலை விளக்கம் கூட கொடுக்க முடியவில்லை.

காதலும் கடந்து போகும்

 ஜனரஞ்சகமான எண்டர்டெய்னர். இரண்டு படங்களூக்கு முன்னால் விஜய் சேதுபதி பற்றி ரொம்பவே கிலேசமாய் இருந்தது. "இ.தா.ஆ.ப.பாலகுமாரா" படம் பிடிக்காத சொற்பத்தி சொச்சத்தில் அடியேனும் உண்டு. அவர் உடம்பு வேறு விஜய் டீ.வி பெண் ஆன்கர்கள் மாதிரி சைட் வாக்கில் போய்க்கொண்டிருந்தது. சர்தான் பிரபுவிற்கு வாரிசாய் கூடிய சீக்கிரம் நாலு பேருக்கு நல்லது பண்ணும் குணசித்திர வில்லனாகிவிடுவார் என்று எண்ணியிருந்த்தேன். நானும் ரவுடி தானில் ஆரம்பித்து சேதுபதி ஐ.பி.எஸ்சிற்காக உடம்பை டிரிம்மாக்கியிருந்தார். காதலும் கடந்து போகுமிலும் நன்றாக இருக்கிறார். தியேட்டரில் மீண்டும் பெண் ரசிகைகள் அவர் வரும் காட்சியில் நாக்கை மடித்துக் கொண்டு உய்ய்ய்ய் என்று கத்துகிறார்கள். படத்தைப் பற்றி - நல்ல படம், கெட்ட படம், பாம்படம், சம்படம் என்று நீட்டி முழக்காமல் சொல்லிவிடுகிறேன் எனக்குப் பிடித்திருந்தது. வசனங்கள் நிறைய இடங்களில் நகைச்சுவையாய் ரசிக்கும் படி வைத்திருக்கிறார்கள். ஆனால் யூ.கேயில் வசனங்கள் ஏதும் சென்சார் செய்யப்படாமல் சில இடங்களில் *தாக்களும் மயிரும் பீப்பில்லாமல் அப்படியே ஸ்பஷ்டமாய் ஒலிக்கின்றன. படத்தில் கதாநாயகி மடோனா செபாஸ்டியன். மலர் டீச்சர் மலர் டீச்சர் என்று சாய் பல்லவியைக் கொண்டாடிய பிரேமம் கூட்டத்திற்கு நடுவில் இங்கேயும் எதற்கும் இருக்கட்டும் என்று செலின் ரசிகர் மன்றத்தில் ஒரு கர்சீப் போட்டிருந்தேன் வீணாய்ப் போகவில்லை. அந்த பிரேமம் செலின் தான் நம்ம மடோனா. காப்பா டிவியில் வேறு பாடுவதைப் பார்த்திருக்கிறேன். படம் நெடுக அம்மணி பளிச் பளிச். Time and time again why I love kerala. ஐ.டியில் வேலை தேடும் ஒரு இளம் பட்டதாரியாய், பக்கத்து வீட்டு பெண்ணாய் கலக்கியிருக்கிறார். மடோனாவிற்கும் கோலிவுட் என்றால் ரொம்ப இஷ்டமாம். பேசாமல் ஒரு லாரி தமிழ் நடிகர்களை கேரளாவிற்கு ஏற்றுமதி செய்து பதிலுக்கு ஒரு லாரி கதாநாயகிகளை அங்கேயிருந்து இங்கே இறக்குமதி செய்துவிடலாம். இரண்டு இண்டஸ்டிரியும் சுபீட்சமாய் இருக்கும்.மற்ற படி இந்த படம் தாராளமாய் பார்க்கலாம் - இ.தா.ஆ.ப.பாலகுமாராவைவிட நல்ல எண்டர்டெய்னர்.
படத்தில் எனக்குப் பிடித்த சில காட்சிகள் கீழே

பாஜி ராவ் மஸ்தானி

ஹிஸ்டாரிக்கல் பேண்டசி ரசிகர்களுக்கு சரியான விருந்து. படத்தின் ட்ரையலரில் ஒரு ஷாட் வரும் ரன்வீர் சிங் குதிரையில் ஸ்லொமோஷனில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் தீபிகா மெதுவாய் ஷாட்டில் நுழைந்து ஓவர்டேக் செய்வார். அட்டகாசமான ஷாட். அன்றே படத்திற்கு துண்டைப் போட்டு வைத்துவிட்டேன். சரித்திரத்தை திரைக்கதைக்காக அப்படி இப்படி புரட்டியிருக்கிறோம் கண்டுக்காதீங்க என்று முதல் டிஸ்கிலேயே சொல்லிவிடுகிறார்கள். ரன்வீர் சிங் மொட்டயடித்துக் கொண்டு பேஷ்வாவாக படம் நெடுக மெனக்கெட்டிருக்கிறார். குடுமி வைத்த பேஷ்வா குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆடுவாரா என்ற தர்கத்தையெல்லாம் ஓரம் கட்டி பேஷ்வா எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று தண்ணி தெளித்துவிட்டு மஸ்தானிக்கு வருவோம். தீபிகா தீபிகா தீபிகா...என்ன ஒரு ஆளுமை படம் நெடுக. கத்தியை விட கூர்மையாய் பார்க்கிறார், கண்ணால் பேசுகிறார். சமீபத்திய படங்களில் நடிப்பில் பட்டயக் கிளப்புகிறார். Why Deepika is still my darling !!!
என்னை மாதிரி பேஷ்வாவிற்கும் தூத் பேடாவிற்கும் வித்தியாசம் தெரியாமல் ட்ரைலர்-1ஐ மட்டுமே பார்த்துப் படம் பார்க்கப் போனால் படம் சர்ப்ரைஸாக இருக்கும். ஜோதா அக்பர் மாதிரி அல்லாத்தையும் பரிமாறுவார்கள் என்று நினைத்தேன். மஹூம்...இரண்டு பொண்டாட்டிக்காரன் கதை. அதிலும் இரண்டாவது பெண்டாட்டியின் காதலைச் சொல்லும் கதை. பேஷ்வாவாகவே இருந்தாலும் குஜால்ஸுக்கு அப்புறம் படும் அல்லலை அழகாய் படம் பிடித்திருக்கிறார்கள். இரண்டாவது மனைவியாய் அதிலும் வேற்று மதத்திலிருந்து வந்து அங்கு சந்திக்கும் அவமானங்களை தீபிகா தீபிகா தீபீகா. தியேட்டரில் என் வரிசையில் இருபுறமும் முஸ்லீம் சகோதர்களும் சகோதரிகளும். படத்தில் இரு மதத்தின் பெயரால் நடக்கும் சில அக்கப்போர் காட்சிகளில் கொஞ்சம் தர்மசங்கடத்துடன் நெளிந்து கொண்டிருந்தேன். ஆனால் சினிமாவை வெறும் சினிமாவாக மட்டுமே பாராட்டிய அவர்களுடைய ரியாக்‌ஷனோடு பார்த்தது மிகச் சுவாரசியம்.
என்னளவில் படத்தின் ஹீரோ ப்ரொடக்‌ஷன் டிசைன் & ஆர்ட் டைரக்டர் தான் - கலக்கியிருக்கிறார்கள். படம் நெடுக வரக்கூடிய மாராத்திய கலாசார விஷயங்கள் ஆகட்டும், மாராட்டிய தர்பார் ஆகட்டும், பேஷ்வாவின் தர்பார் ஆகட்டும் இன்றெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதிலும் அந்த ஜொலிக்கும் கண்ணாடி மண்டபம் வாய் பிளக்க வைக்கிறது. டிக்கட்டிற்கு கொடுத்த பைசாவிற்கு வஞ்சமே இல்லாமல் பார்த்து வரலாம்.