Tuesday, July 29, 2008

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு - படங்கள்

...மற்றும் விபரங்கள் என்று தலைப்பு வைத்தால் இந்தப் பதிவைப் போல் நீளமாகிவிடும். அதனால் "எப்பவோ நடந்த"-என்பதை தலைப்பில் தவிர்த்திருக்கிறேன் :)

படங்கள் கீழே கடைசியில் இருக்கின்றன.


ஊருக்கு கிளம்புவதற்கு இரண்டு வாரங்கள் முன் நண்பர் கதிர் வலைப்பதிவை படித்து விட்டு ஒரு மடல் தட்டி இருந்தார். முதல் மடல் என்பதால் மானே தேனே போட்டிருந்தார். ஆஹா ஒரு விக்கெட் விழுந்தாச்சு...சென்னையில் சந்திக்கலாமா (போண்டாக்கு ஆச்சு) என்று நூல்விட்டுப் பார்த்தேன். கண்டிப்பாக என்று தெகிரியம் குடுத்ததில் சரி நெல்லை சந்திப்பு மாதிரி சொந்த செலவில் போண்டா என்று பிசுபிசுக்காது என்று கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

அடுத்தடுத்து போண்டா என்ன போண்டா, சாப்பாட்டுக்கே நாங்க கியாரண்ட்டி என்று குரு நிஷா, டோண்டு, பிரகாஷ், உண்மைத் தமிழன், பாபா, பிரபு கார்த்திக் - லிஸ்டு மெதுவாக நீண்டது. எதுக்கும் ஒரு தரம் ஃபோன் பண்ணி கண்பர்ம் பண்ணுவோம் என்று நம்பர் தந்த அனைவருக்கும் டயல் செய்ய ஆரம்பித்த உடனேயே களை கட்ட ஆரம்பித்துவிட்டது.

"சிட்டி சென்டர் சரி சார் ஆனா கரெக்டா எங்க? டி.நகரா, மைலாப்பூரா...எந்த இடம்? என்று டோண்டு கேட்டவுடன் எனக்கு குழம்பிவிட்டது. விட்கோ மாதிரி இல்லையே எனக்கு தெரிந்து சிட்டி சென்டர் ஒரு இடத்தில் தானே இருக்கிறது என்று அப்புறம் நான் சொன்னது நகர மையம் இல்லை ராதாகிருஷ்ணன் சாலை ஷாப்பிங் மால் என்று விளக்கிச் சொல்லி போனை வைத்தால், மனுஷன் அடுத்த இரண்டாவது மணி நேரத்தில் திரும்ப கூப்பிட்டு "சிட்டி சென்டருக்கு நீங்க இங்கேர்ந்து வந்தா இப்படி வரனும், அங்கேர்ந்து வந்தா அப்படி வரனும்"ன்னு ஒரு அல்வா குடுத்தார் பாருங்கள்...கரெக்ட் பதத்தில் வந்திருந்தது.

ஐகாரஸ் பிரகாஷ் மீட்டிங்கில் இருந்ததால் அவர் நண்பர் தான் போனை எடுத்தார். ஆரம்பத்திலிருந்தே அவருக்கு நான் ஐ.சி.ஐ.சியையோ என்று சந்தேகம் என்று நினைக்கிறேன். நான் வேற ஏகப்பட்ட சொதப்பல்

பிரண்டா...? லண்டனா? இப்போ எங்கேர்ந்து பேசறீங்க? உங்க பேரு என்ன? என் பேரு இது..ஆனா டுபுக்கு சொன்னா தான் தெரியும்ன்னு சொன்னவுடன் ஒரு ஐந்து வினாடி மௌனம்....அவர திரும்ப பேசச் சொல்றேங்கன்னு உஷாராக வைத்தார்.

பிரபு கார்த்திக் கரெக்டாக லஞ்ச் டயமில் மாட்டிக்கொண்டார் "இங்கிலீஷ் ப்ளாகெர்ஸ்லாம் நிறைய பேர் இருக்காங்களே..நீங்க ஏன் ஒரு பத்து பேர கூட்டிக்கிட்டு பந்தாவா ப்ளாகர்ஸ் மீட்க்கு வரக்கூடாது" என்று கூட்டத்துக்கு அடியப் போட்டவுடன் பிரபு கார்த்திக் "(ஆபிஸுல) மீட்டிங்க்கு போனும் மேடம் வைய்யும்"ன்னு நழுவிட்டார். இருந்தாலும் உடனே செல் நம்பரை மாற்றாமல் பொறுப்பாய் அடுத்த நாள் சந்திப்புக்கு அவ்யுக்தாவை அழைத்துவந்தார்.

சிட்டி சென்டர் வாசலில் இரண்டு பேர் டுபுக்குன்னு அவர்களுக்குள் விளித்துக்கொண்டது தெரியாமல் அவர்களும் ப்ளாகர்ஸ் மீட் தான் போலன்னு போய் வழிந்து சுதாரித்து அப்புறம் நாலாவது மாடிக்கு எப்படி போகனும்ன்னு வழி கேட்டு அவர்களும் "எல்லா இடத்தையும் மாதிரி இங்கையும் மேலே தான் போகனும்"ன்னு பொறுப்பாய் வழி சொல்லி, நான் போன அப்புறம் துப்புகிறார்களா என்று திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே போனால் தோளை தட்டி "நீங்க டுபுக்கு தானே" என்று ஒருவர் கேட்டார். சரிதான் மூஞ்சியிலேயே எழுதி ஒட்டி இருக்கு போல என்று இந்த தரம் சொதப்பினால் மூனாவது மாடிக்கு வழி கேட்கலாம் என்று கூச்சமே இல்லாமல் ஆமாம் நானே தான் டுபுக்கு என்றவுடன் செந்தில் என்று அறிமுகப் படுத்திக்கொண்டார்.


(குரு) நிஷா தவிர , கட்டாயம் வருகிறேன் என்று அடித்து சொன்ன அம்மணிகள் எல்லாரும் கரெக்ட்டாய் டிமிக்கி குடுத்துவிட்டார்கள். சொல்லி வைத்தாற் போல எல்லாருக்கும் கடைசிக்கு முந்தின நிமிடத்தில் வேலை வந்துவிட்டது. அதிலும் நித்யாவிற்கு ஆட்டோவில் ஏறியதுக்கு அப்புறம் ஆபிஸில் கூப்பிட்டு சனிக்கிழமை சாயங்காலம் ஏழு மணிக்கு அப்ரைசல் வைத்துவிட்டார்கள். அம்பிக்கு முந்தின நாளே தங்கமணியிடம் பெர்மிஷன் கிடைக்கவில்லை என்பது எனக்கு தெரியுமாகையால் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அம்பி போன் போட்டு நங்கநல்லூரில் பனி மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் வரமுடியவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்தார். விக்கியும் குருவும் ஏன் பெண் பதிவர்கள் ஒருவரும் வரவில்லை என்று என்னிடம் ஏமாற்ற தொனியில் கேட்கவே இல்லை. அதிலும் விக்கிக்கு ஏகப்பட்ட வருத்தம் என்று எனக்குத் தோன்றவே இல்லை. பதினான்கு பேர்கள் வந்திருந்தோம். ஓரிரண்டு பேரைத் தவிர முந்தின நாளே தொலைபேசியிருந்ததால் தெம்பாகவே போயிருந்தேன். போன பிறகு தான் அடுத்த நாள் இன்னோரு மாபெரும் வலைப்பதிவர் கூட்டம் ஒன்று நடக்கப்போவதாக தெரிந்தது. தெரிந்திருந்தால் அந்த நாளிலேயே போய் ஜோதியில் ஐய்க்கியமாகியிருப்பேன்.


குரு நிஷா முதலிலேயே சிட்டி சென்டருக்கு வந்து சாப்பாடுகடையை முடித்துவிட்டார்கள். படு க்யூட்டான குழந்தைகளை பார்த்துக்கொள்ள நிஷா கிளம்ப்பி முதல் மாடிக்குச் செல்ல மெதுவாக எல்லாரும் வந்து சேர்ந்தார்கள். பாபா இரண்டு சேர் தள்ளி முதுகைக் காட்டி உட்கார்ந்து கொண்டு சாப்பாடு ஒரு கட்டு கட்டி முடித்தவுடன் நைஸாக போன் பண்ணி எங்கே இருக்கிறீகள் என்று புதுசா கேட்கிற மாதிரி கேட்டு ஜோதியில் சேர்ந்துகொண்டார்.

கதிர், செந்தில், இகாரஸ் பிரகாஷ், உண்மைத்தமிழன், பாபா, பாபாவின் அண்ணன், விக்கி, சிமுலேஷன், டோண்டு, அவ்யுக்த்தா, குரு, பிரபு கார்த்திக் என்று நீளமேசை மாநாடு தொடங்கியது. சமுதாயம், தமிழ், வலைப்பதிவுகளின் எதிர்காலம் - என்று பொறுப்பில்லாமல் பேசாமல், அனானி ஆட்டம், ஏன் அனானிக்கள் சில பதிவுகளை கண்டுகொள்ளவே மாட்டேன் என்கிறார்கள், இட்லி வடை இந்நேரம் இந்த சந்திப்பு போட்டோக்களை ரிலீஸ் பண்ணியிருப்பாரா? ப்ளாகர்ஸ் மீட் நடத்த சென்னையில் இது மாதிரி கல்ர்புல்லான இடங்கள் வேறென்ன என்று ஆளாளுக்கு பேசிக்கொண்டிருந்தார்கள். உண்மைத்தமிழன் கடமை வீரராக பக்கத்து டேபிளில் உட்கார்ந்திருந்த காதல் ஜோடிகள் ஒரு மணிநேரமாய் ஒரு சூஸை உறிஞ்சிக்கொண்டே கடலைப் பார்த்து கடலை போட்டுக்கொண்டிருந்ததை சொல்லி பெருமூச்சோடு சமூக பிரக்ஞை காட்டினார்.

டோண்டுவுக்கு போரடித்துவிட்டது என்று நினைக்கிறேன், அடிக்காத போனை காதில் வைத்துக்கொண்டு வீட்டிலிருந்து கூப்பிடுவதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். வீட்டில் விருந்தாளிகள் வந்து காத்துக்கொண்டிருப்பார்களே என்று கேட்பதற்கு முன் அவரும் அதையே சொல்லி அப்பீட் ஆகிவிட்டார். சிமுலேஷனும் ஜூட் விட மீதமிருந்த கூட்டம் பீச்சுக்கு போய் காத்தாட உட்கார்ந்து பேசலாம் என்று கிளம்பினோம். நடுவில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளாமல் அப்படி என்ன பீச்சுக்குப் போய் அரட்டை என்று நிஷா குடுத்த மண்டகப்பிடியில் "எனக்கு பீச்சுல கண்டம்" என்று குருவும் ஒதுங்கிக் கொண்டார்.

பீச்சுக்கு போன மிச்சம் பத்துபேரும் ஐ.நா சபை மாதிரி ஒரு முடிவுக்கே வராமல் நிறைய விஷயங்களைப் பேசினோம். பாபாவிற்க்கு ட்விட்டரிலிருந்து எவ்வளவு கமிஷன் என்று கேட்ட மறந்துவிட்டது. டிவிட்டர் பற்றி நிறைய பேசினார். பி.கே, அவ்யுக்தா, விக்கி, கதிர் பிரகாஷ் எல்லாரும் பல்வேறு விஷயங்களில் லெவல் காட்டினார்கள். உண்மைத்தமிழன் இனிமையாக பழகினார். நான் வழக்கம் போல தமிழ் திரையுலகில் மலையாள மற்றும் மும்பை நடிகைகளின் மேலாண்மை குறித்தும், மேற்படி சமூகத்தின் தாக்கத்தை இல்லறம் தாக்காமல் சமச்சீருடன் நெறியாள்கை புரிவது எப்படி என்று கருத்தாடலில் ஈடுபட்டேன்.

மொத்தத்தில் நிறைய பேரை சந்தித்ததில் மிக இனிமையாக இருந்தது ஆனாலும் ஒவ்வொருத்தரையும் தனித்தனியாக சந்தித்திருந்தால் இன்னும் சுவாரசியமாக பேசியிருக்கலாமோ என்று தோன்றியது உண்மை.(அவர்களுக்கும் இதுவே தோன்றியதா தெரியவில்லை).

அடுத்த நாள் நண்பர் ஆடுமாடு-வை சந்திக்க முடிந்தது. மிக சுவாரசியமான மனிதர் சுவாரசியமான வேலை வேறு பார்க்கிறார். என்னுடைய சேலஞ்ச் விஷ்யத்தில் ஏற்கனவே உதவி செய்வதாக வக்களித்ததை மறக்காமல் சினிமாவில் தலையைக் காட்டுவதற்க்கு இயக்குனர் வசந்தபாலனிடம் வேறு பேசி வைத்திருந்தார். அக்டோபரில் திரும்ப வருவேன் அதற்குள் பெர்சனாலிட்டியை ஏத்தி "சார் போஸ்ட்" டயலாக் எல்லாம் பேசி பழகிவருகிறேன் என்று சொல்லி வைத்திருக்கிறேன் என்று உங்களுக்கெல்லாம் முன்னாடியே வார்னிங் கொடுத்துக்கொள்கிறேன் :))

இதில் சந்தித்தவர்களிடம் கேட்க மறந்த இன்ன பிற கேள்விகள்

•பிரகாஷ் - ஐகாரஸ் - காரணப் பெயரா?
•பாபா - ப்ளாகர்ஸ் மீட்டுக்கெல்லாம் முக்கா டவுசர் போட்டுகிட்டு வருகிற இரகசியம் என்ன? இந்த முறையும் என்.ஆர்.ஐ கோட்பாடின் படி ரோட்டோர பாட்டி, சுவரோர போஸ்டர், சூச்சா போகிற நாய்குட்டி நிழற்படங்கள் எடுத்தீர்களா?
•கதிர் - வெறும்ன படித்துவிட்டு ஊக்குவிக்கிற உங்கள் எனர்ஜி எங்கிருந்து சீக்கிரட் என்ன?
•செந்தில் - அடுத்த தரமாவது காராசேவ் வாங்கித் தருவீங்களா?
•பிரபு கார்த்திக் - என்னை வைத்து சூசகமாக He- He சீரிஸில் மேட்டர் ஏதாவது வருமா?
Monday, July 14, 2008

சென்னை

பி.ஏ.வில் தனியாக ஜாலியாக போனால் பக்கத்தில் ஐம்பத்தியைந்து வயது தாண்டிய மாமி பாட்டியும், பின்னால் சீட்டை காலால் அடிக்கடி எட்டி உதைக்கிற வாண்டும் உட்காரக் கடவது என்று எனக்கு எழுதி இருக்கிறது. இது போக நான் உட்கார்ந்திருக்கிற பக்கம் ஆம்பிளை கம்மனாட்டி க்ரூ மெம்பர் தான் உபசாரத்துக்கு வரவேண்டும் என்று தங்கமணியின் சாபம் வேறு பலித்து தொலைகிறது. இதுக்கு பேசாமல் கஜகஸ்தான் ஏர்லைன்சிலேயே போயிருக்கலாம்.

வேறு வழியே இல்லாமல் தூங்கிய மூன்று மணி நேரம் போக மீதி ஏழு மணி நேரத்தை ஓட்ட டாம் ஹான்க்ஸ் நடித்த சார்லி வில்சன்ஸ் வார் பார்த்தேன். ரொம்ப பிடித்திருந்தது நல்ல படம். பட ஆரம்பத்தில் ஹாட் டப்பில் வெள்ளைக்கார குழந்தைகள் பிறந்தமேனியாக குளிக்கும் போது மட்டும் பக்கத்தில் வயதான பெண்மணி இருக்கிறாரே என்று கொஞ்சம் நெளிய வேண்டி இருந்தது. அதற்கப்புறம் ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா எப்படி ரஷ்யாவின் முதுகில் குத்தியது என்று படம் சுத்த சைவமாக போனது. அப்புறம் பேச்சு குடுத்ததில் தான் தெரிந்தது பக்கத்திலிருந்தவர் பத்மா ஷேஷாத்திரி பள்ளி முதல்வர். இரண்டாவது முறை படம் ஓட ஆரம்பித்த போது திரும்பவும் ஹாட் டப் சீனெல்லாம் பார்க்காமல் ரொம்ப நல்ல பிள்ளையாக பள்ளி முதல்வரிடம் இந்தக் கால ஸ்டூடன்ட்ஸைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டேன்.

ஆனால் ஆச்சரியகரமாக சென்னை தூத்துக்குடி ஏர் டெக்கான் கலக்கலாய் இருந்தது. அனேகமாய் அந்த ப்ளைட் மும்பாயிலிருந்தோ குஜராத்திலிருந்தோ வருகிறது. இத்துனூன்டு ட்வின் ப்ரொப்பெலர் விமானத்துக்கு கண்ணுக்கு குளுமையாய் இரண்டு ஏர்ஹோஸ்டஸ். அருமையான சர்வீஸ் வேறு.

சென்னை சென்னை தான். மைலாப்பூரென்ன, பாண்டி பஜாரென்ன, ஸ்பென்சர், சிட்டி சென்டர் ஷாப்பிங் மால்ஸென்ன...சூப்பராக இருக்கிறது. ஷாப்பிங் மால்கள் எல்லாம் நவநாகரீக நங்கைகள் வலம் வர இன்னமும் மிக அழகாக இருக்கின்றன. என்ன விலைவாசி ஒன்று தான் ஷாக் அடித்தது. "டேக் த ட்வெண்டி பைவ்"ன்னு அசால்ட்டாக மக்கள் பணத்தை வீசி எறிந்து விட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். மீறி பேரம் பேசியதில் "இந்த பேரதுக்கு ...லண்டன்ல இருக்கன்னு மட்டும் மூச்சு விட்டுறாத..கொன்னே போட்ருவாங்க"ன்னு வார்னிங்க தான் கிடைத்தது. ஒன்னே ஒன்னுங்க...நான் பார்த்த வரை ஆட்டோகாரர்கள் தான் ஐய்யோ பாவம். ஏறியிருக்கும் விலைவாசியில் ஆட்டோ கட்டணம் அவ்வளவு ஏறியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பச்சையப்பாவிலிருந்து ஆழ்வார்பேட் சிக்னலுக்கு அறுபது ரூபாய் மூன்று வருடம் முன்னாலேயே வாங்குவார்கள் என்று எனகுத் தோன்றியது. இன்னமும் அதே தான். எப்படி சமாளிக்கிறார்களோ தெரியவில்லை.

துணிக்கடைகளில் ட்ரெஸ்ஸில் துணி எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அதற்கேற்ற மாதிரி பில்லில் கூட்டி இருந்தார்கள். ஹெம் அடிக்காத கிழித்துவிட்ட முக்கால் டவுசர் அதே துணியில் இருந்த முழுப் பேண்ட்டைவிட விலை கூடுதல். "பேசாம முழு பேண்டை வாங்கி நாமளே கிழிச்சிக்கலாமே என்ற ஐடியா வீட்டில் யாருக்கும் தோணாமல் 'உன்னை எப்படி லண்டன்ல அலோ பண்ணினாங்க..பைல்ட் கிட்ட சொல்லி போற வழியில் அரபிக் கடல்ல தள்ளிட்டு போகச் சொல்லறேன்' என்று சமுதாய அக்கறை தான் விஞ்சியது. ஆழ்வார்பேட் ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகத்தை ஏதோ ஒரு பாங்க் ஏற்றுக்கொண்டு டெய்லி சாய்ங்காலம் டிபன் போடுகிறார்கள். வீட்டில் எல்லாரும் அது பிராசதம் என்று பஜனை பாடினாலும் அக்காக்களின் உபயத்தில் கோயிலுக்கு போகாமலேயே டெய்லி டிபன் கிடைத்தது.

அக்கா பசங்களெல்லாம் பெரிய பையன்களாகிவிட்டார்கள். டெஸ்க்டாப்பில் அசின் மற்றும் பெயர் தெரியாத இன்ன பிற மாதுக்கள் மிளிர்கிறார்கள். பிலிம்மி சானல் புண்யத்தில் ஏஞ்சலினா ஜோலிக்கு பிறகு காலியாயிருந்த தன்னிகரலில்லா தலைவி பதவியை ஒருவழியாக நிரப்ப முடிந்தது. கண்டேன் சீதையை ரேஞ்சுக்கு இம்ப்ரெஸ்ஸாகி இந்த புது தலைவி பற்றி விஷயங்கள் சேகரித்தால் "என்ன மாமா நீங்க வேஸ்டாயிருக்கீங்க...இவ எப்பவோ வந்தாச்சு பேரு கத்ரீனா கைப், நாலு ஒன்னுக்கும் ஒப்பேறாத படங்கள்ல நடிச்சிருக்கா...நீங்க வேற தலைவி கொலைவின்னு அகநானூறு மாதிரி புலம்பிகிட்டு ...சல்மான்கான் எப்பவோ உஷார் பண்ணிட்டான்"ன்னு காறித் துப்பிவிட்டார்கள். இதில வேற ஒருத்தன் அவளை எல்லாரும் கூப்பிடுகிறமாதிரி "கேட்"ன்னு செல்லப் பேரு வைச்சு வேறு விளிக்கிறான்.

"டேய் உங்க எல்லாருக்கும் அரும்பு மீசை முளைச்சு பெரிய பசங்களாயிட்டீங்க ஒத்துக்கறேன்...ஏதோ உங்க ரேஞ்சுக்கு எம்மா வாட்சன் படத்தை டெஸ்க்டாப்புல போட்டுக்கோங்க வேணாங்கலை..யார்கிட்டயும் வீட்டுல போட்டுக்குடுக்க மாட்டேன் ஆனா கத்ரீனா கைப்ப மட்டும் எவன் கம்ப்யூட்டர்லயாவது பார்த்தேன்...அப்புறம் பேஜாராகிடுவேன் நானே ரொம்ப நாள் கழிச்சு ஒரு தானைத் தலைவியைக் கண்டுபிடிச்சிருக்கேன் அத்தோட இனிமே எவனாவது செல்லமா 'கேட்'டுன்னு கூப்பிட்டீங்க அப்புறம் நான் Dog-ஆ மாறிடுவேன்னு"னு குடும்பத்தில் சொத்தை பிரிப்பதற்க்குள் போதுபோதுமென்றாகிவிட்டது. தலைவிக்கு சொந்த ஊரு லண்டனாம். அடா அடா அடா....கேட் படம் ஒன்னு கிடைச்சா ஹாலில் ஜோராக மாட்டவேண்டும்.

சென்னை வலை மக்கள் வலை மக்கள் சந்திப்பு நல்லவேளை பிசுபிசுக்காமல் தப்பித்தது. அது பற்றி நிறைய சொல்லவேண்டுமாதலால் படங்களுடன் அடுத்த பதிவில்

Wednesday, July 09, 2008

தசாவதாரம்

நலம் நலமறிய ஆவலெல்லாம் அடுத்த பதிவுல :) முதல்ல தசாவதாரம் பத்தி சொல்லனும். 'கங்கா ஸ்நானம் ஆச்சா' மாதிரி, ஃபோன் ஈமெயில், சேட்ன்னு எல்லா இடத்துலயும் 'தசாவதாரம் ஆச்சா'ன்னு ஆகிப்போனது.

படம் பற்றி ரொம்ப எதிர்பார்ப்புடன் இருந்ததால் அதுபற்றிய நியூஸ், க்ளிப்ஸ், போட்டோஸ், விமர்சனம் என்று எல்லாவற்றையும் தவிர்த்துவந்தேன். இது ஒரு விதமான ஷோஆஃப் என்றாலும் எதிர்பார்த்து பார்க்கும் (சிவாஜி உள்பட) எல்லா படங்களுக்கும் இந்த மாதிரி விரதமிருந்து பார்ப்பது தனி குஜால்சாகத் தான் இருக்கிறது.

ஓபனிங் சீனில் புஷ், கலைஞ்ர் உட்பட ஒரு பெரிய கூட்டத்தில் கமல் உரையை ஆரம்பிக்கும் போது "அடடா ஓப்பனிங் இன்னும் கொஞ்சம் சூப்பரா இருந்திருக்கலாமே"ன்னு மனதில் தோன்றி மறைவதற்க்குள் 12ம் நூற்றாண்டு காட்சி வந்துவிடுகிறது. அட்ரா சக்கை இது மேட்டரு..அதானே தலீவர் கலக்காமலாபூடுவார்ன்னு நிமிர்ந்து உட்கார வைத்தது. "அடியேன் ராமானுஜ தாசன்"னு பாடி காட்டி சவுண்ட் விடும் போது கும்முன்னு இருந்தது. சாண்டில்யனையும் சுஜாதவையும் அரை அரைக் கிலோ கலந்து குடுத்திருப்பாரோ தலீவர் என்று பட படப்பாய் இருந்தது. ஆனால் எல்லாம் கொஞ்ச நேரம் தான்.

கதை நகர நகர ஒரு ஹாலிவுட் சுமார் ரக மசாலா கதையை தமிழ் படுத்தியிருக்கிறார்கள் அவ்வளவு தான். பணத்தையும் கமலையும் பிரதானப் படுத்தி பிசினஸ் பண்ணியிருக்கிறார்கள். சரி திரைக்கதையாவது கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம். ங்கொய்யால லாஜிக் எல்லாம் முதல் ரீலிலேயே பெருமாளோடு கட்டி கடலில் போட்டுவிட்டார்கள் போல. தசாவதாரம் என்று பெயர் வைப்பதற்க்காக கமலுக்காக பத்து கேரக்டர்களை உருவாக்கி கதையில் திணித்திருக்கிறார்கள். இதில் NaCl என்று சொன்னதுக்கப்புறம் முழுக்கதையும் தெரிந்துவிடுவதால் படம் எப்படா முடியப்போகிறதுன்னு இருக்கிறது.

மேக்கப் எல்லாம் ரொம்ப ரொம்ப சுமார் ரகம். தசாவதாரம் எல்லாம் குஷ்டாவதாரமாக தெரிகிறது. அதுவும் புஷ், வெள்ளைக்கார கமல், இஸ்லாமிய கமல், பாட்டி கமல் எல்லா பாத்திரத்துக்கும் மேக்கப் படு உறுத்தலாக இருக்கிறது. எனக்கு இந்தப் படத்தில் வெள்ளைக்கார கமலைப் பார்க்கும் போது ரெட் சிட்டிசன் பட கிழ அஜீத் தான் நியாபகத்துக்கு வந்தார். இதுக்கு சிவாஜி ரஜினியின் வெள்ளைக்கார கெட்டப்பே எவ்வளவோ மேல். போகப் போக படத்தில் குறுக்கையும் நெடுக்கையும் போகிறவர்களைக் கூட அது கமலாக இருக்குமோ இது கமலாக இருக்குமோன்னு அயர்ச்சியைத் தருகிறது.

அசின் பாத்திரத்தின் அலட்டல்கள் மகா கேவலமாக இருக்கின்றன. சரியான லூசு மாதிரி சித்தரித்திருக்கிறாகள். வசனத்தையாவது தலீவர் வேறு யாரிடமாவது கொடுத்திருக்கலாம். அசினோடு காமெடி ட்ராக் நிறைய இடங்களில் பிசுபிசுக்கிறது.

சப்பான் கமல், சிங் கமல் மற்றும் ஜெயப்பிரதா பாத்திரங்கலெல்லாம் கதையில் பத்துக்கு ஒன்னு கணக்குக்காகத் தான், கதைக்கு இம்மியும் சம்பந்தமில்லை. சப்பான் கமல் கேரக்டரை ஒரிஜினல் சப்பான்காரருக்கும், ரா அதிகாரி கமலை எஸ்.பி.பிக்கும் குடுத்திருக்கலாமோ என்று எனக்குப் பட்டது.

படு சொதப்பலான படத்தில் ரசிக்கமுடியும் கமலின் நடிப்பைக் கூட மேக்கப் மறைத்து கெடுத்து குட்டிச்சுவராக்கியிருக்கிறது. மற்றபடி கமல் படம் பார்ப்பது ஒரு தனி அனுபவம்...அது அவர் ரசிகர்களுக்குத் தான் தெரியும்ன்னுலாம் ஜல்லி அடிக்கமாட்டேன். படம் ரொம்ப சுமார் ரக படம். கமல் ஸ்டாண்டர்ட்டுக்கு ரொம்பவே சுமார் தான். ஹே ராம் க்கு கதையும் திரைக்கதை வசனம் எழுதிய கமலா இந்தப் படத்துக்கு? நம்பவே முடியவில்லை.

தலீவா அடுத்த பத்துல இருபது கேரக்ட்டர் பண்ணலாம், ரவிக்கை போடாத புடவை கட்டும் அசின் கேரக்டரையும் நீங்களே பண்ணலாம்ன்னு ஏதாவது ஒரு கூறு கெட்ட கபோதி சொல்லும், நம்பிக்கினு இறங்கிடாத தலீவா...ஒழுங்கா உங்க பாணியிலேயே எடுங்க தல.