Tuesday, March 27, 2007

டிஷ்வாஷர்

"பாத்திரங்கள் பளபளக்க கண்ணாடி பீங்கானும் மினுமினுக்க ஏ1 க்ளீனிங் பவுடர்" என்று மழைக் காலத்தில் ச்சூச்சாவை அடக்கி வைத்துக்கொண்டு டாய்லெட்டுக்கு ஓடுகிற அவசர கதியில் ரேடியோவில் ஒரு மாமாவும் மாமியும் பாட்டு பாடுவார்கள். இது தான் எனக்கு நியாபகம் இருக்கும் முதல் பாத்திரம் கழுவும் பவுடர் விளம்பரம். அப்புறம் டீ.வி. வந்ததற்கு அப்புறம் இந்தப் பக்கம் ஒரு அம்மணி நான் பால்கோவா கிண்டுகிறேன் என்று தீய்ச்ச சட்டி மாதிரி ஒன்றை வைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருப்பார். அந்தப் பக்கம் இன்னொரு அம்மணி புத்தம் புதிய தட்டை சோப்பு நுரையில் நிறைத்து அதை லேசாக தடவிக் கொடுத்து தண்ணீரில் காட்டி நோகாமல் நொங்கெடுத்துக் கொண்டிருப்பார். பின்னணிக் குரலில் ஒரு கெய்தான் அங்கிள் நீங்களும் இத மாதிரி ஒரு புதுப் பாத்திரத்தை வாங்கி இந்த ப்ராண்ட் வாஷிங் பவுடரை உபயோகித்தால் இதே மாதிரி பளபளவென்று வரும் என்று பீலாவுட்டுக் கொண்டிருப்பார்.

இதுக்கெல்லாம் எங்க தெரு மாமிகள் அசந்ததே கிடையாது. எனக்குத் தெரிந்து சமீப காலம் வரை ரயில் மார்க் புண்ணாக்கு பொடியில், கோலிக்காய் சைஸ் புளி உருண்டையை போட்டு தேங்காய் சவுரியை வைத்து காட்டுகிற காட்டில் தான் பாத்திரங்கள் பளபளத்திருக்கின்றன. தெருவில் முக்கால் வாசி வீட்டில் இதே டெக்னிக் தான். இருந்தாலும் பாத்திர பளபளப்பு முக்கியமான விஷயம். நாளும் கிழமையுமாய் ஏதாவது திண்பண்டங்கள் கொடுக்கல் வாங்கல் இருக்குமாகையால் இது பெரிய மானப் பிரச்சனை. லேசாக டல்லடித்தால்..."ஏண்டியம்மா...பாத்திரம்னா பாரு பாருன்னு முகம் பார்க்கிற மாதிரி சுண்டி இழுக்க வேண்டாமோ இப்படியா டல்லடிச்சுண்டு இருக்கும்..?" என்று தொங்கவிட்டு தோரணம் கட்டிவிடுவார்கள்.

மாமிகளின் இந்தப் போட்டி மனப்பான்மையை கரெக்ட்டாய் பிடித்து பொழப்பு நடத்தியது காஸ் மெக்கானிக் கைலாசம் ஒருவன் தான். பத்தாவது ஃபெயிலாகி மேலே படிக்காமல் கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி பாயாக இருந்தவன், கொஞ்ச நாளில் காஸ் அடுப்பை கழட்டி அழுக்கை துடைத்து ஓவராயில் செய்கிற மெக்கானிக் கைலாசமாகிவிட்டார். அடுப்பை கழட்டி மாட்டுகிறதில் கொஞ்சம் எக்ஸ்பீரயன்ஸ் போட்டுவிட்டு நமக்கு நாமே திட்டத்தில் மெக்கானிக் கைலாசம் இஞ்சினியர் கைலாசமாகி, நாங்களெல்லாம் தலையிட்டு அப்புறம் திரும்பவும் மெக்கானிக் கைலாசமானார்.

கைலாசம் காஸ் அடுப்பை கழட்டி மாட்டுகிற வேலையை வெறுமென செய்யமாட்டார். "மாமி என்ன தான் சொல்லுங்க...இந்த தெருவிலேயே உங்க வீட்டுல மட்டும் தான் எவெர்சில்வர் அடுப்பு எவர்சில்வரா பள பளன்னு இருக்கு..மத்த வீடுகள்ல்ல சொன்னாத் தான் எவர்சில்வர்ன்னு தெரியுது...மத்தபடி ஈயத்துல செஞ்சா மாதிரித்தேன் இருக்கு"ன்னு கொளுத்திப் போட்டுவிடுவார். அவ்வளவு தான் அந்த விட்டு மாமிக்கு பாத்திரம் தேய்ப்பதில் எம்.டெக் பட்டம் வாங்கியது மாதிரி அப்பிடியே அள்ளிக்கொண்டு போய்விடும்.

"கேஸ் மெக்கானிக் கைலாசமே சொல்லிட்டான்..எங்காத்துல பளபளக்கிறது மாதிரி யாராத்துலயும் இல்லையாம்" என்று கைலாசம் கொடுத்த எம்.டெக் பட்டத்துக்கு பப்ளிசிட்டி கொடுத்துவிடுவார். மற்ற மாமிகளுக்கு உடனே Peer Pressure அதிகரித்துவிடும். உடனே அடுப்பில் எண்ணைய வெண்ணைய கொட்டி கைலாசம் விசிட்டுக்கு ஏற்பாடாகிவிடும். இப்படியாக பத்தாவது ஃபெயிலான "நடமாடும் பல்கலைக்கழகம்" கேஸ் மெக்கானிக் கைலாச வள்ளல், பாத்திரம் தேய்பதில் எம்.டெக் பட்டத்தை மாமிகளுக்கு சுழல் முறையில் வழங்கி கல்லாவில் காசு பார்த்துவிடுவார்.

சென்னையில் இருந்த போது ஸ்காட்ச் ப்ரைட் என்று தேய்பதற்கு ஒரு ஸ்கரப்பர் வந்தது. வந்த புதிதில் சன் டீவியில் அவன் விடுகிற பீலாவில் வீட்டில் தங்கமணி மயங்கி "சூப்பரா இருக்காம்...இப்போ போய் வாங்கிட்டு வாங்ன்னா வாங்கிட்டு வாங்களேன்"ன்னு இதயம் நல்லெண்ணை மாதிரி விரட்டிவிட்டார். கடைக்குப் போய் விலையைக் கேட்டால் தலையைச் சுற்றியது. இந்த தொத்தல் ஸ்கரப்பருக்கு போய் எவனாவது நாற்பது ரூபாய் குடுப்பானா என்று வீட்டுக்கு வந்து வழக்கம் போல ஸ்டாக் இல்லையாம் என்று சொல்லிவிட்டேன். எவ்வளவு நாள் தான் தாக்குபிடிப்பது..."என்ன பெரிய ஸ்காட்ச் பிரைட்.பிச்சாத்து ..இதுக்கு போய் எந்த இளிச்சவாயனாவது நாற்பது ரூபாய் குடுப்பானா . எல்லாம் நாம தேய்க்கிறதுல தான் இருக்கு இங்க கொண்டா இப்படி, இப்படி கர கரன்னு தேய்ச்சா எப்படி பளபளன்னு இருக்கு பாருன்னு ஒரு டெமோ காட்ட.."ஆஹா நீங்க சொன்னது கரெக்ட்டுத் தாங்க சூப்பரா இருக்கு இதுக்கு போய் எவனாவது நாற்பது ரூபாய் குடுப்பானா அதுவும் நீங்க இருக்கும் போது... நீங்களே இனிமே டெய்லி இதே மாதிரி கர கரன்னு தேய்ச்சு பளபளன்னு ஆக்கி வைச்சிருங்க"ன்னு டெக்னிக் பேக் ஃபய்ராகி விட்டது. அப்புறம் "நீ சொன்னது கரெக்ட்டு தான்மா..இப்போ தான் இத ஸ்காட்ஸ் ப்ரைட் பத்தி பேப்பர்ல படிச்சேன் சூப்பராத்தேன் இருக்கு ...இதுல லேசுல தேயாத நைலான் பைபர் இருக்காம் பிசுக்கெல்லாம் நல்லா போகுமாம் அதுனால தான் இவ்வளவு விலையாம். நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை..நாயகன் மாமா சொல்லி இருக்கார்" என்று ஏகப்பட்ட கதை விட்டு தப்பிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

இங்கே லண்டன் வந்தும் நமக்கு நாமே திட்டம் தான் இவ்வளவு நாளாக ஓடிக் கொண்டிருந்தது. போன வருடம் கொழுக்கட்டை பண்ணுகிறேன் பேர்வழி என்று அடுப்பில் தண்ணீர் வைக்காமல் கொழுக்கட்டையை வைத்துவிட்டு இந்தப் பக்கம் வந்துவிட்டேன். நம்ம நேரம் அடுப்பில் கொழுக்கட்டை கரிக்கட்டையாகி புகைந்து அடுக்களை எல்லாம் ஒரே புகைமயமாக்கிவிட்டது. "ஓட்டப்பம் தானே வீட்டைச் சுடும்ன்னு பட்டினத்தார் சொன்னார்...கொழுக்கட்டையெல்லாம் சொல்ல்வில்லையேன்னு பட்டினத்தார் மீது பழி போட்டுப் பார்த்தேன், ம்ஹூம் வீட்டில் மீரா ஜாஸ்மின் மீதிருந்த துவேஷம் எல்லாம் அன்று என் தலையில் தான் விடிந்தது.

இப்போ விட்டில் ஏகப்பட்ட (உண்மையான) ஆணி புடுங்குவதால் டிஷ்வாஷரும் வாங்கி மாட்டிவிட்டோம். பிச்சாத்து பாத்திரம் தேய்கிறதுக்கு ஒரு மிஷின். ரயில் மார்க்க் புண்ணாக்கு பொடியெல்லாம் ஒத்துக்காதாம்..அதுக்கு கடையில போய் கேட்டால் டூ இன் ஒன், திரீ இன் ஒன்...என்று பைவ் இன் ஒன் வரை மாத்திரை விக்கிறார்கள். என்ன டூ இன் ஒன்னுன்னா பாட்டு பாடிகிட்டே பாத்திரம் தேய்க்குமான்னு அங்கதம் ட்ரை பண்ணி பார்த்தேன், "நீயெல்லாம் டிஷ்வாஷர் வாங்கிட்டியா விளங்கினாப்ப்ல தான்"னு லுக்கு தான் கிடைத்தது. இது போக சால்ட், ரின்சிங் லிக்விட்ன்னு ஆயிரெத்தெட்டு வாங்கி கடைசில பாத்திரம் தேய்கிறதுக்கு பில்லைப் பார்த்தா பிச்சை பாத்திரம் தான் மிஞ்சும் போல தெரிந்தது. ஹும் இந்த விலைக்கு பாத்திரம் தேய்கிறதுக்கு அழகா ஒரு வெள்ளக்காரிய வேலைக்குப் போட்டிருக்கலாம்.

சரி வாங்கினது தான் வாங்கியாச்சு...சட்டு புட்டுன்னு பாத்திரத்த தேய்ச்சுக் கொடுக்குதா? பாத்திரத்த அதுல போடறதுக்கு முன்னாடி ஒரு தரம் கழுவனுமாம். ரொம்ப லட்சணம் தான் இந்த் இழவுக்குத் தான் இம்புட்டு பைசாவான்னு நொந்து கொண்டே அடுக்கி வைக்க நம்மூர் இலுப்புச் சட்டியெல்லாம் அவ்வளவு தோதாக வைக்கமுடியவில்லை. நீ அந்தப் பக்கம் நகரு நமக்கு கம்ப்யூட்டர்ல நிறைய கட் அன்ட் பேஸ்ட் அனுபவம் இருக்குன்னு சாஃப்டுவேர் பிரதாபத்தையெல்லாம் காட்டி தங்கமணியை அந்தாண்ட போகச் சொல்லி எல்லாவற்றையும் அடுக்கி வைத்து சுவிட்சைப் போட்டு சிவனேன்னு தேவுடு காத்தோம். எல்லாம் முடிஞ்சு திறந்து பார்த்தா நான் நிமிர்த்தி வைத்திருந்த இரண்டு இலுப்புச்சட்டியில் கரி அப்பிடியே இருக்க சோப்பு வெந்நீரை நிரப்பி வைத்திருந்தது. என்னாங்கடா டிஷ்வாஷருக்கு பதிலா வெந்நீர் போடற மிஷின அனுப்பிட்டானான்னு நான் குழம்ப தங்கமணி வந்து தலையில் ரெண்டு போட்டு பாத்திரங்களை கவுத்தி வைக்கனும்ன்னு உரைக்கச் சொல்ல...இப்போ சிலபஸ மாதியிருப்பானுகன்னு சமாளிக்க வழக்கம் போல அதுவும் ஊத்திக்சிச்சு.

இப்போல்லாம் "என்ன தான் சொல்லு நீ தேய்க்கிறமாதிரி இந்த மிஷின் தேய்க்கமாட்டேங்குது"ன்னு காஸ் மெக்கானிக் கைலாசம் டெக்னிக்தான் அடிக்கடி ஓடுது வீட்டுல.

Thursday, March 15, 2007

பிரசவம்

"ஏங்க கொஞ்சம் வலிக்கிற மாதிரி இருக்குங்க கொஞ்சம் சீக்கிரமாக ஆபிஸுலேர்ந்து வந்திருங்க"

"ஐயைய்யோ...இப்போ கிளம்பினா கூட வரதுக்கு முக்கால் மணிநேரம் ஆகுமேமா? நான் வேணா ஜெய்கிட்ட ஃபோன் பண்ணி வரச் சொல்லட்டுமா?"

"வேண்டாம் நீங்க வாங்க..அதுவரைக்கும் பொறுத்துப்பேன்..."

"சரிம்மா உடனே கிளம்பறேன்" அரக்கப் பரக்க வீட்டுக்கு சென்றடைந்த போது உதட்டைக் கடித்துக் கொண்டு சுவற்றைப் பிடித்து நின்று கொண்டிருந்தாள்

"ரொம்ப வலிக்குதா..ஆஸ்பத்திரிக்கு கிளம்பிப் போலாமா? ஆம்புலன்ஸ கூப்பிடட்டுமா?"

"வேண்டாம் வலி அப்பிடியே தான் இருக்கு; கூடல..ஆனா வலிச்சிக்கிட்டே இருக்கு"

"இரு நான் வேணா ஃபோன் பண்ணிக் கேக்கறேன்"

"வலி கூடுகிறதா, உதிரப் போக்கு இருக்கா? பனிக்குடம் உடைந்த மாதிரி தோன்றுகிறதா? நீர் வருகிறதா? எப்போ வலி ஆரம்பித்தது? ஆயிரெத்தெட்டு கேள்வி கேக்கிறாங்க...அதெல்லாம் இல்லைன்னு சொன்னேன்...அப்போ பார்த்துட்டு வாங்கன்னு சொல்றாங்க...எனக்கென்னவோ பயமா இருக்குடா கிளம்பிப் போயிறலாம்.."

வலிக்கு கடித்துக் கொண்டிருந்த அவளின் உதட்டின் ஓரத்தில் கீற்றாய் ஒரு முறுவல்."பொண்டாட்டி மேல அவ்வளவு கரிசனமா??.."

"நக்கல் விடற நேரமா இது? நானே உதறிக்கிட்டு இருக்கேன்"

"இல்லைங்க இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துட்டு கிளம்பலாம் அங்க காத்திட்டு இருக்க வைச்சிருவாங்க எனக்கு அங்க போனா எனக்கு ரொம்ப அன் ஈசீயா இருக்கும்"

அவள் விழியோரங்களில் கண்ணீர் எட்டிப்பார்த்திருந்தது. உதட்டை மறுபடியும் கடித்துக் கொண்டாள். கையைப் பிடித்துக் கொண்டாள்.

"எதாவது சூடா குடிக்க போட்டுத் தரவா? கற்பகரட்சாம்பிகை விளக்கெண்ணை இருக்கு அம்மா வலி வந்தவுடனே வயித்துல தடவச் சொன்னாங்க..."

அவள் என் கைகளை இறுக்கியதிலிருந்து வலி கூடியிருப்பது தெரிந்தது. "இதப் பாரு லூசுத்தனமா பிகேவ் பண்ணாத நான் டாக்ஸிக்கு சொல்றேன் போயிடலாம்..இதுக்குத் தான் இங்க வேணாம் ஊர்ல வைச்சிக்கலாம்னு சொன்னேன்...தைரியத்துக்கு கூட ஒருததரும் இல்லாம..என்ன... " வாயைப் பொத்தினாள்.

"இப்படியே பொலம்பிக்கிட்டிருந்தா எனக்கும் தைரியம் போயிடும்...கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு இருக்கியா?"

"இதுக்குத் தான் நான் வேண்டாம்ன்னு சொன்னேன்"

"என்ன வேண்டாம்ன்னு....?? ஹ...யாரு நீ...?" வலிக்கு நடுவிலும் குறும்பாக சிரித்தாள்.

"போட்டேன்னா தெரியுமா...நான் குழந்தை பத்தி சொன்னேன்..இப்போ வேண்டாம்னு நான் சொல்லலை? ஆமா நீ என்ன வலின்னு சொல்லிட்டு என்ன நக்கல் விட்டுக்கிட்டு இருக்க...உண்மையிலேயாவா...இல்ல சும்மா சீன் போட்டு என்னை கலங்கடிக்கிறியா?.." அவள் நடிக்கவில்லை என்று தெரிந்தும் பேச்சுப் போக்கு காட்டினேன்.

"அம்மா...." என்று அவள் முனகிய போது டாக்ஸி வந்திருந்தது.

"மேடு பள்ளம் பார்த்துப் போங்க ப்ளீஸ், வேகமா வேண்டாம் ஆனா சீக்கிரமா போங்க..அந்த வழி சுத்து இப்படி போங்க..."

ஆஸ்பத்திரி வந்த போது அவளால் இறங்க முடியவில்லை கையை இறுக்கப் பிடித்துக் கொண்டு மடியில் படுத்துக் கொண்டாள்.

"முடியலைடா.."

"கொஞ்சம் பொறுத்துக்கோடா நான் போய் ஸ்ட்ரெட்ச்சர் எடுத்துட்டு வரேன்..."

"எக்ஸ்க்யூஸ்மி என் மனைவிக்கு பிரசவம்...ரொம்ப முடியவில்லை டாக்ஸியில் இருக்கிறாள்...ப்ளீஸ் டாக்டரைக் கூப்பிடுங்கள்...ஸ்டெரெட்சர் எடுத்துக் கொண்டு வரச் சொல்லுங்கள் ப்ளீஸ் சீக்கிரம்..."

"உங்கள் மனைவி எங்கே? உள்ளே கூட்டிக்கொண்டு வாருங்கள்"

"அவள் வலியில் இருக்கிறாள்...வெளியே டாக்ஸியில்"

"பரவாயில்ல மிஸ்டர்...அட்ஜஸ்ட் செய்து வரச்சொல்லுங்கள்...ஸ்ட்ரெட்சர் வார்டிலிருந்து வரனும்..டாக்டர் வரமாட்டார் நர்ஸ் தான் வந்து பார்ப்பார்...இப்பொழுது ஒரு பேஷண்டைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.....பனிக்குடம் உடைந்துவிட்டதா?.."

"என்ன விளையாடறீங்களா...நான் என் மனைவிக்கு முடியவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்..நீங்க கூலா கதை கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்..."

"நீங்கள் ரொம்ப டென்ஷனாக இருக்கிறீர்கள்...முதலில் அமைதியாகுங்கள்.."

"என்னங்க...அங்கே என் மனைவி துடிச்சிட்டு இருக்கா..நீங்க அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க...அவள முதல்ல அட்மிட் பண்ணுங்க...அப்புறம் நாம பேசுவோம்...மேனேஜர கூப்பிடுங்க..."

"பதட்டப்படால் ஒன்றும் ஆகாது மிஸ்டர்....நர்ஸ் வந்து பார்ப்பார்..இல்லையென்றால் ஸ்ட்ரெச்சருக்குக் காத்திருக்க வேண்டும்..."

டாக்ஸிக்கு ஓடிப் போய் பார்த்தால் டிரைவர் ஓரமாய் நின்று கொண்டு தம் அடித்துக் கொண்டிருந்தான். அவள் கசங்கிப் போய் வலியில் துடித்துக் கொண்டிருந்தாள்.
"கொஞ்சம் பொறுத்துக்கோம்மா...இப்போ நர்ஸ் வந்துருவாஙக...என் கையப் பிடிச்சிக்கோ...கடவுள நினைச்சிக்கோ....தோ வந்துருவாங்க..."

ஒடிசலாய் ஒரு நர்ஸ் வந்தாள்..

"யாருக்கு பிரசவம்..."

"அதோ தடிமாடு மாதிரி தம்மடிச்சிகிட்டு இருக்கானே அவனுக்குத் தான் பிரசவம்..என்னா விளையாடுறீங்களா...இங்க ஒரு பொம்பளை தானே இருக்கா?...இதோ என் மனைவிக்குதான்...கொஞ்சம் சீக்கிரம் பாருங்கள் ப்ளீஸ்"

"நான் நீ படுகிற டென்ஷனைப் பார்த்து உனக்குத் தான் பிரசவமோன்னு நினைச்சேன்...ரொம்ப கவலைப் படுகிறாயாமே..புதுப் பொண்டாட்டியா?"

நாசமாப் போடி...நீயும் உன் கடி ஜோக்கும்.."நீங்க இந்த மாதிரி கடி ஜோக்கடிக்காமல் என் மனைவியைப் பார்த்தால் கொஞ்சம் சொஸ்தமாயிருக்கும்"

"ஓகே ஓகே டென்ஷனாகத மேன்...நீ அவளை ரொம்ப பயமுறுத்திகிறாய்...இதே லட்சணத்துல நீ இவள பிரசவ அறையிலும் வந்து டென்ஷன் படுதினாயானால்...சுகப் பிரசவம் ஆன மாதிரி தான்...ஜாக்கிரதை"

நான் அதற்கப்புறம் கொஞ்சம் அடக்கிக் கொண்டேன்.

வீல் சேரில் கூட்டிப் போய் ஒர் அறையில் படுக்க வைத்து ரெண்டு மூனு செக் செய்தார்கள். அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டே வெளியே போய்விட்டார்கள்.

"என்னங்க எதாவது காம்ப்ளிகேஷனா?..."

"அதெல்லாம் ஒன்றுமில்லை...நீங்க அவளுடன் நில்லுங்கள் இன்னொரு நர்ஸ் வந்து பார்ப்பார்"

"என்னம்மோ திடீர்ன்னு கொஞ்சம் வலி குறைஞ்ச மாதிரி இருக்கு"

"வாய மூடிக்கிட்டு இருடி ஏற்கனவே லட்சனமா பார்க்கிறா ..அவ காதுல விழுந்திடப் போகுது..அப்புறம் வீட்டுக்குப் போயிட்டு அப்புறமா வான்னு சொல்லிடுவா..."

இன்னொரு குண்டு நர்ஸ் வந்து ஒரு ஊசி போட்டார். பக்கத்திலிருந்த ஃபைலை எடுத்துப் பார்த்துவிட்டு " நீ வலிதெரியாமல் இருக்க ஊசி கேட்கவில்லையா?" என்று கேட்டார்.

நாங்கள் முழித்ததிலிருந்தே இல்லை என்று புரிந்து கொண்டு.."ரொம்ப வலிச்சா இந்த டியூப்பை வாயில் வைத்து உறிஞ்சிக்கொள்..." என்று சொன்னார்.

"பெயின் கில்லரா?.."

"இல்ல பெத்தடின்...வலி தெரியாமல் இருக்கும்"

"எனக்கு வேண்டாம்பா.."

நேரமாக நேரமாக வலியெடுக்க ஆரம்பித்தது. கட்டில் கம்பியைப் பிடித்துக்கொண்டு முக்கினாள், முனகினாள்.

"ரொம்ப முடியலைடா...." என்று என் கையப் பிடித்துக்கொண்ட போது எனக்கு மனதைப் பிசைந்தது. சும்மாவே லேசாக அடிபட்டாலே பதறும் அவள் எப்படி பிரசவ வலி பொறுக்கப் போகிறாள் என்று பயமாக இருந்தது.

"இந்தா இத வாயில வெச்சு உறிஞ்சு...வலி தெரியாமல் இருக்கும்..."

வலி அவளை அனிச்சையாக பெத்தடின் குழாயை வாயில் பொறுத்தி உறிஞ்ச வைத்தது.

என் கைகளை இறுக்கிக் கொண்டாள்...படுக்கை லேசாக நனைந்த மாதிரி இருந்தது. ஓடிப் போய் நர்ஸை கூப்பிட்டேன்.

"பனிக்குடம் உடைந்துவிட்டதா?" ஓடி வந்து பார்த்தார்கள்.

"இல்லை..இன்னுமில்லை...இப்பொழுது தான் நல்ல வலி எடுத்து பனிக்குடம் உடைய ஆரம்பித்திருக்கிறது. வலியை அடக்கிக் கொள்ளாதே...முக்குவேண்டும் போல் இருந்தால் பயப்படாமல் முக்கு.."

ரத்த அழுத்தம் சோதனை செய்தார்கள். அவள் கண்கள் சொருகியிருந்தன. "இதோ பார் இனிமேல் நீ சோர்ந்து போகக் கூடாது...அந்தக் குழாயை இனிமேல் உறிஞ்சாதே...நன்றாக முக்கு...புஷ்...புஷ்..."

"இல்லை முடியலை...காலில் நரம்பு இழுத்துக் கொள்கிறது..என்னால முடியலைடா..."

காலை தடவிக் கொடுத்தேன்..."கவலப்படாதமா நீ முக்கு ...ஒன்னும் ஆகாது" நாலு பிரசவம் பார்த்தவன் மாதிரி உதடு சொன்னாலும் பப்ளிக் எக்ஸாம் எழுதப் போகும் பையன் மாதிரி அடிவயிற்றில் பயம் பந்தாக சுருண்டு கொண்டிருந்தது. தொளக் என்ற சப்தத்துடன் ரத்தமும் நீருமாய் திரவங்கள் பீறிட பனிக்குடம் உடைந்து.

"கமான்...பனிக்குடம் உடைந்து நீரெல்லாம் வெளியேறிவிட்டது இனிமேல் காத்திருக்கக் கூடாது...நன்றாக முக்கு...சீக்கிரம் பிரசவாகிவிடும்..."

"வலியை பொறுத்துக்கிட்டு நல்லா முக்குடா...சீக்கிரம் குழந்தை பிறந்துடும்...ப்ளீஸ் கொஞ்சம் பொறுத்துகோடா..."

துணியை தண்ணீரில் நனைத்து அவள் முகத்தை அவ்வப்போது துடைத்துக் கொண்டிருந்தேன். படுக்கவுமில்லை உட்காரவுமில்லை என்ற பொசிஷனில் அடுத்த கால் மணி நேரம் அவள் படுகிற பட்டை பார்த்த போது எனக்கே கண்ணில் கண்ணீர் துளிர்த்தது.

"இன்னும் கொஞ்சம் டா"

"அம்ம்...ம்ம்ம்..ம்மா" என்று அவள் முயற்சியில் குழந்தை தலை தெரிந்தது.

"இன்னும் நல்லா முக்கும்மா..இந்த நிலையில் குழந்தை இருக்கக்கூடாது...தலை வெளியே வர வேண்டும்...இல்லையென்றால் குழந்தைக்கு மூச்சு முட்டும்...ம்ம்..நல்ல புஷ்..புஷ் புஷ்..." நர்ஸின் பதட்டம் எல்லோருக்க்கும் தொற்றிக் கொண்டது.

தனக்கு வலித்தாலும் குழந்தைக்கு மூச்சு முட்டக்கூடாது என்று அவள் கவலை கண்ணில் தெரிந்தது. அந்த ஐந்து நிமிட போராட்டம் வாழ்வில் மறக்க முடியாதது. ரத்தமும் சதையுமாய் குழந்தை வெளியே வந்த போது அவள் கண்ணில் தெரிந்த நிம்மதி விவரிக்கமுடியாதது. நான் வாழ்நாளில் பார்த்திராத ரத்தம் வெளியேறி படுக்கை ரத்த மயமாக இருநதது.. குழந்தை வெளியே வந்த பிறகும் அவள் வயிற்றை அழுத்தி கழிவுகளை வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். அவள் வயிற்றில் இருந்து எடுத்த கழிவுகளைப் பார்க்க மயக்கமே வந்தது. வெளியே வந்த குழந்தை அழுவதற்காக லேசாக அடித்த போது நெஞ்சம் பதறியது. குழதையை காய்கறி கழுவது போல் கழுவி செக்கப்புகள் செய்து பஞ்சுக் குவியலாய் கொடுத்தார்கள். குழந்தையின் பிஞ்சு விரல்களைத் தொட்ட போது அடைந்த உணர்சிக்கு வார்தகளில்லை. குழந்தையை மெதுவாக தூக்கி அவளிடம் காட்ட திரும்பியது போது அவள் கிறக்கத்திலிருந்தாள்.

"பாருடா குழந்தைய பாரு.."

"ம்ம்..." என்று முனகியபடியே உதட்டில் வலியுடன் கூடிய புன்னகையுடன் தொட்டு முத்தமிட்டுக் கொண்டாள். விழியின் ஓரத்தில் இன்னும் கண்ணீர் கசிந்து கொண்டிருநதது. அவள் கண்கள் வலி மயக்கத்தில் மீண்டும் சொருகிக் கொண்டன.

தாய்மையைப் பற்றி எவ்வளவோ கேட்டிருந்தாலும் அதற்க்கு ஈடு இணை இல்லை என்று அன்று தான் உரைத்தது. தாய்மைக்கு ஈடாக தந்தைமை என்ற ஒரு வார்த்தை மட்டுமல்ல எதுவுமே ஈடாகாது என்று தோன்றியது. தொப்புள்கொடி உறவு என்றால் என்ன என்பதை உணர பிரசவத்தில் கூட இருந்தால் போதும்.

பிறப்பை பதிவு செய்ய விபரங்கள் கேட்க இன்னொரு நர்ஸ் வந்தாள்.

"பெயர் முடிவு செய்தாகிவிட்டதா?"

"....."

"இனிஷியல் சொல்லுங்க"

இனிஷியலாக என் பெயரைப் போட்டுக் கொண்ட போது குற்றவுணர்ச்சி வாட்டியது. வாட்டிக் கொண்டிருக்கிறது. கூடிய சீக்கிரம் இனிஷியலை மாற்ற வேண்டும்.