Thursday, March 15, 2007

பிரசவம்

"ஏங்க கொஞ்சம் வலிக்கிற மாதிரி இருக்குங்க கொஞ்சம் சீக்கிரமாக ஆபிஸுலேர்ந்து வந்திருங்க"

"ஐயைய்யோ...இப்போ கிளம்பினா கூட வரதுக்கு முக்கால் மணிநேரம் ஆகுமேமா? நான் வேணா ஜெய்கிட்ட ஃபோன் பண்ணி வரச் சொல்லட்டுமா?"

"வேண்டாம் நீங்க வாங்க..அதுவரைக்கும் பொறுத்துப்பேன்..."

"சரிம்மா உடனே கிளம்பறேன்" அரக்கப் பரக்க வீட்டுக்கு சென்றடைந்த போது உதட்டைக் கடித்துக் கொண்டு சுவற்றைப் பிடித்து நின்று கொண்டிருந்தாள்

"ரொம்ப வலிக்குதா..ஆஸ்பத்திரிக்கு கிளம்பிப் போலாமா? ஆம்புலன்ஸ கூப்பிடட்டுமா?"

"வேண்டாம் வலி அப்பிடியே தான் இருக்கு; கூடல..ஆனா வலிச்சிக்கிட்டே இருக்கு"

"இரு நான் வேணா ஃபோன் பண்ணிக் கேக்கறேன்"

"வலி கூடுகிறதா, உதிரப் போக்கு இருக்கா? பனிக்குடம் உடைந்த மாதிரி தோன்றுகிறதா? நீர் வருகிறதா? எப்போ வலி ஆரம்பித்தது? ஆயிரெத்தெட்டு கேள்வி கேக்கிறாங்க...அதெல்லாம் இல்லைன்னு சொன்னேன்...அப்போ பார்த்துட்டு வாங்கன்னு சொல்றாங்க...எனக்கென்னவோ பயமா இருக்குடா கிளம்பிப் போயிறலாம்.."

வலிக்கு கடித்துக் கொண்டிருந்த அவளின் உதட்டின் ஓரத்தில் கீற்றாய் ஒரு முறுவல்."பொண்டாட்டி மேல அவ்வளவு கரிசனமா??.."

"நக்கல் விடற நேரமா இது? நானே உதறிக்கிட்டு இருக்கேன்"

"இல்லைங்க இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துட்டு கிளம்பலாம் அங்க காத்திட்டு இருக்க வைச்சிருவாங்க எனக்கு அங்க போனா எனக்கு ரொம்ப அன் ஈசீயா இருக்கும்"

அவள் விழியோரங்களில் கண்ணீர் எட்டிப்பார்த்திருந்தது. உதட்டை மறுபடியும் கடித்துக் கொண்டாள். கையைப் பிடித்துக் கொண்டாள்.

"எதாவது சூடா குடிக்க போட்டுத் தரவா? கற்பகரட்சாம்பிகை விளக்கெண்ணை இருக்கு அம்மா வலி வந்தவுடனே வயித்துல தடவச் சொன்னாங்க..."

அவள் என் கைகளை இறுக்கியதிலிருந்து வலி கூடியிருப்பது தெரிந்தது. "இதப் பாரு லூசுத்தனமா பிகேவ் பண்ணாத நான் டாக்ஸிக்கு சொல்றேன் போயிடலாம்..இதுக்குத் தான் இங்க வேணாம் ஊர்ல வைச்சிக்கலாம்னு சொன்னேன்...தைரியத்துக்கு கூட ஒருததரும் இல்லாம..என்ன... " வாயைப் பொத்தினாள்.

"இப்படியே பொலம்பிக்கிட்டிருந்தா எனக்கும் தைரியம் போயிடும்...கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு இருக்கியா?"

"இதுக்குத் தான் நான் வேண்டாம்ன்னு சொன்னேன்"

"என்ன வேண்டாம்ன்னு....?? ஹ...யாரு நீ...?" வலிக்கு நடுவிலும் குறும்பாக சிரித்தாள்.

"போட்டேன்னா தெரியுமா...நான் குழந்தை பத்தி சொன்னேன்..இப்போ வேண்டாம்னு நான் சொல்லலை? ஆமா நீ என்ன வலின்னு சொல்லிட்டு என்ன நக்கல் விட்டுக்கிட்டு இருக்க...உண்மையிலேயாவா...இல்ல சும்மா சீன் போட்டு என்னை கலங்கடிக்கிறியா?.." அவள் நடிக்கவில்லை என்று தெரிந்தும் பேச்சுப் போக்கு காட்டினேன்.

"அம்மா...." என்று அவள் முனகிய போது டாக்ஸி வந்திருந்தது.

"மேடு பள்ளம் பார்த்துப் போங்க ப்ளீஸ், வேகமா வேண்டாம் ஆனா சீக்கிரமா போங்க..அந்த வழி சுத்து இப்படி போங்க..."

ஆஸ்பத்திரி வந்த போது அவளால் இறங்க முடியவில்லை கையை இறுக்கப் பிடித்துக் கொண்டு மடியில் படுத்துக் கொண்டாள்.

"முடியலைடா.."

"கொஞ்சம் பொறுத்துக்கோடா நான் போய் ஸ்ட்ரெட்ச்சர் எடுத்துட்டு வரேன்..."

"எக்ஸ்க்யூஸ்மி என் மனைவிக்கு பிரசவம்...ரொம்ப முடியவில்லை டாக்ஸியில் இருக்கிறாள்...ப்ளீஸ் டாக்டரைக் கூப்பிடுங்கள்...ஸ்டெரெட்சர் எடுத்துக் கொண்டு வரச் சொல்லுங்கள் ப்ளீஸ் சீக்கிரம்..."

"உங்கள் மனைவி எங்கே? உள்ளே கூட்டிக்கொண்டு வாருங்கள்"

"அவள் வலியில் இருக்கிறாள்...வெளியே டாக்ஸியில்"

"பரவாயில்ல மிஸ்டர்...அட்ஜஸ்ட் செய்து வரச்சொல்லுங்கள்...ஸ்ட்ரெட்சர் வார்டிலிருந்து வரனும்..டாக்டர் வரமாட்டார் நர்ஸ் தான் வந்து பார்ப்பார்...இப்பொழுது ஒரு பேஷண்டைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.....பனிக்குடம் உடைந்துவிட்டதா?.."

"என்ன விளையாடறீங்களா...நான் என் மனைவிக்கு முடியவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்..நீங்க கூலா கதை கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்..."

"நீங்கள் ரொம்ப டென்ஷனாக இருக்கிறீர்கள்...முதலில் அமைதியாகுங்கள்.."

"என்னங்க...அங்கே என் மனைவி துடிச்சிட்டு இருக்கா..நீங்க அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க...அவள முதல்ல அட்மிட் பண்ணுங்க...அப்புறம் நாம பேசுவோம்...மேனேஜர கூப்பிடுங்க..."

"பதட்டப்படால் ஒன்றும் ஆகாது மிஸ்டர்....நர்ஸ் வந்து பார்ப்பார்..இல்லையென்றால் ஸ்ட்ரெச்சருக்குக் காத்திருக்க வேண்டும்..."

டாக்ஸிக்கு ஓடிப் போய் பார்த்தால் டிரைவர் ஓரமாய் நின்று கொண்டு தம் அடித்துக் கொண்டிருந்தான். அவள் கசங்கிப் போய் வலியில் துடித்துக் கொண்டிருந்தாள்.
"கொஞ்சம் பொறுத்துக்கோம்மா...இப்போ நர்ஸ் வந்துருவாஙக...என் கையப் பிடிச்சிக்கோ...கடவுள நினைச்சிக்கோ....தோ வந்துருவாங்க..."

ஒடிசலாய் ஒரு நர்ஸ் வந்தாள்..

"யாருக்கு பிரசவம்..."

"அதோ தடிமாடு மாதிரி தம்மடிச்சிகிட்டு இருக்கானே அவனுக்குத் தான் பிரசவம்..என்னா விளையாடுறீங்களா...இங்க ஒரு பொம்பளை தானே இருக்கா?...இதோ என் மனைவிக்குதான்...கொஞ்சம் சீக்கிரம் பாருங்கள் ப்ளீஸ்"

"நான் நீ படுகிற டென்ஷனைப் பார்த்து உனக்குத் தான் பிரசவமோன்னு நினைச்சேன்...ரொம்ப கவலைப் படுகிறாயாமே..புதுப் பொண்டாட்டியா?"

நாசமாப் போடி...நீயும் உன் கடி ஜோக்கும்.."நீங்க இந்த மாதிரி கடி ஜோக்கடிக்காமல் என் மனைவியைப் பார்த்தால் கொஞ்சம் சொஸ்தமாயிருக்கும்"

"ஓகே ஓகே டென்ஷனாகத மேன்...நீ அவளை ரொம்ப பயமுறுத்திகிறாய்...இதே லட்சணத்துல நீ இவள பிரசவ அறையிலும் வந்து டென்ஷன் படுதினாயானால்...சுகப் பிரசவம் ஆன மாதிரி தான்...ஜாக்கிரதை"

நான் அதற்கப்புறம் கொஞ்சம் அடக்கிக் கொண்டேன்.

வீல் சேரில் கூட்டிப் போய் ஒர் அறையில் படுக்க வைத்து ரெண்டு மூனு செக் செய்தார்கள். அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டே வெளியே போய்விட்டார்கள்.

"என்னங்க எதாவது காம்ப்ளிகேஷனா?..."

"அதெல்லாம் ஒன்றுமில்லை...நீங்க அவளுடன் நில்லுங்கள் இன்னொரு நர்ஸ் வந்து பார்ப்பார்"

"என்னம்மோ திடீர்ன்னு கொஞ்சம் வலி குறைஞ்ச மாதிரி இருக்கு"

"வாய மூடிக்கிட்டு இருடி ஏற்கனவே லட்சனமா பார்க்கிறா ..அவ காதுல விழுந்திடப் போகுது..அப்புறம் வீட்டுக்குப் போயிட்டு அப்புறமா வான்னு சொல்லிடுவா..."

இன்னொரு குண்டு நர்ஸ் வந்து ஒரு ஊசி போட்டார். பக்கத்திலிருந்த ஃபைலை எடுத்துப் பார்த்துவிட்டு " நீ வலிதெரியாமல் இருக்க ஊசி கேட்கவில்லையா?" என்று கேட்டார்.

நாங்கள் முழித்ததிலிருந்தே இல்லை என்று புரிந்து கொண்டு.."ரொம்ப வலிச்சா இந்த டியூப்பை வாயில் வைத்து உறிஞ்சிக்கொள்..." என்று சொன்னார்.

"பெயின் கில்லரா?.."

"இல்ல பெத்தடின்...வலி தெரியாமல் இருக்கும்"

"எனக்கு வேண்டாம்பா.."

நேரமாக நேரமாக வலியெடுக்க ஆரம்பித்தது. கட்டில் கம்பியைப் பிடித்துக்கொண்டு முக்கினாள், முனகினாள்.

"ரொம்ப முடியலைடா...." என்று என் கையப் பிடித்துக்கொண்ட போது எனக்கு மனதைப் பிசைந்தது. சும்மாவே லேசாக அடிபட்டாலே பதறும் அவள் எப்படி பிரசவ வலி பொறுக்கப் போகிறாள் என்று பயமாக இருந்தது.

"இந்தா இத வாயில வெச்சு உறிஞ்சு...வலி தெரியாமல் இருக்கும்..."

வலி அவளை அனிச்சையாக பெத்தடின் குழாயை வாயில் பொறுத்தி உறிஞ்ச வைத்தது.

என் கைகளை இறுக்கிக் கொண்டாள்...படுக்கை லேசாக நனைந்த மாதிரி இருந்தது. ஓடிப் போய் நர்ஸை கூப்பிட்டேன்.

"பனிக்குடம் உடைந்துவிட்டதா?" ஓடி வந்து பார்த்தார்கள்.

"இல்லை..இன்னுமில்லை...இப்பொழுது தான் நல்ல வலி எடுத்து பனிக்குடம் உடைய ஆரம்பித்திருக்கிறது. வலியை அடக்கிக் கொள்ளாதே...முக்குவேண்டும் போல் இருந்தால் பயப்படாமல் முக்கு.."

ரத்த அழுத்தம் சோதனை செய்தார்கள். அவள் கண்கள் சொருகியிருந்தன. "இதோ பார் இனிமேல் நீ சோர்ந்து போகக் கூடாது...அந்தக் குழாயை இனிமேல் உறிஞ்சாதே...நன்றாக முக்கு...புஷ்...புஷ்..."

"இல்லை முடியலை...காலில் நரம்பு இழுத்துக் கொள்கிறது..என்னால முடியலைடா..."

காலை தடவிக் கொடுத்தேன்..."கவலப்படாதமா நீ முக்கு ...ஒன்னும் ஆகாது" நாலு பிரசவம் பார்த்தவன் மாதிரி உதடு சொன்னாலும் பப்ளிக் எக்ஸாம் எழுதப் போகும் பையன் மாதிரி அடிவயிற்றில் பயம் பந்தாக சுருண்டு கொண்டிருந்தது. தொளக் என்ற சப்தத்துடன் ரத்தமும் நீருமாய் திரவங்கள் பீறிட பனிக்குடம் உடைந்து.

"கமான்...பனிக்குடம் உடைந்து நீரெல்லாம் வெளியேறிவிட்டது இனிமேல் காத்திருக்கக் கூடாது...நன்றாக முக்கு...சீக்கிரம் பிரசவாகிவிடும்..."

"வலியை பொறுத்துக்கிட்டு நல்லா முக்குடா...சீக்கிரம் குழந்தை பிறந்துடும்...ப்ளீஸ் கொஞ்சம் பொறுத்துகோடா..."

துணியை தண்ணீரில் நனைத்து அவள் முகத்தை அவ்வப்போது துடைத்துக் கொண்டிருந்தேன். படுக்கவுமில்லை உட்காரவுமில்லை என்ற பொசிஷனில் அடுத்த கால் மணி நேரம் அவள் படுகிற பட்டை பார்த்த போது எனக்கே கண்ணில் கண்ணீர் துளிர்த்தது.

"இன்னும் கொஞ்சம் டா"

"அம்ம்...ம்ம்ம்..ம்மா" என்று அவள் முயற்சியில் குழந்தை தலை தெரிந்தது.

"இன்னும் நல்லா முக்கும்மா..இந்த நிலையில் குழந்தை இருக்கக்கூடாது...தலை வெளியே வர வேண்டும்...இல்லையென்றால் குழந்தைக்கு மூச்சு முட்டும்...ம்ம்..நல்ல புஷ்..புஷ் புஷ்..." நர்ஸின் பதட்டம் எல்லோருக்க்கும் தொற்றிக் கொண்டது.

தனக்கு வலித்தாலும் குழந்தைக்கு மூச்சு முட்டக்கூடாது என்று அவள் கவலை கண்ணில் தெரிந்தது. அந்த ஐந்து நிமிட போராட்டம் வாழ்வில் மறக்க முடியாதது. ரத்தமும் சதையுமாய் குழந்தை வெளியே வந்த போது அவள் கண்ணில் தெரிந்த நிம்மதி விவரிக்கமுடியாதது. நான் வாழ்நாளில் பார்த்திராத ரத்தம் வெளியேறி படுக்கை ரத்த மயமாக இருநதது.. குழந்தை வெளியே வந்த பிறகும் அவள் வயிற்றை அழுத்தி கழிவுகளை வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். அவள் வயிற்றில் இருந்து எடுத்த கழிவுகளைப் பார்க்க மயக்கமே வந்தது. வெளியே வந்த குழந்தை அழுவதற்காக லேசாக அடித்த போது நெஞ்சம் பதறியது. குழதையை காய்கறி கழுவது போல் கழுவி செக்கப்புகள் செய்து பஞ்சுக் குவியலாய் கொடுத்தார்கள். குழந்தையின் பிஞ்சு விரல்களைத் தொட்ட போது அடைந்த உணர்சிக்கு வார்தகளில்லை. குழந்தையை மெதுவாக தூக்கி அவளிடம் காட்ட திரும்பியது போது அவள் கிறக்கத்திலிருந்தாள்.

"பாருடா குழந்தைய பாரு.."

"ம்ம்..." என்று முனகியபடியே உதட்டில் வலியுடன் கூடிய புன்னகையுடன் தொட்டு முத்தமிட்டுக் கொண்டாள். விழியின் ஓரத்தில் இன்னும் கண்ணீர் கசிந்து கொண்டிருநதது. அவள் கண்கள் வலி மயக்கத்தில் மீண்டும் சொருகிக் கொண்டன.

தாய்மையைப் பற்றி எவ்வளவோ கேட்டிருந்தாலும் அதற்க்கு ஈடு இணை இல்லை என்று அன்று தான் உரைத்தது. தாய்மைக்கு ஈடாக தந்தைமை என்ற ஒரு வார்த்தை மட்டுமல்ல எதுவுமே ஈடாகாது என்று தோன்றியது. தொப்புள்கொடி உறவு என்றால் என்ன என்பதை உணர பிரசவத்தில் கூட இருந்தால் போதும்.

பிறப்பை பதிவு செய்ய விபரங்கள் கேட்க இன்னொரு நர்ஸ் வந்தாள்.

"பெயர் முடிவு செய்தாகிவிட்டதா?"

"....."

"இனிஷியல் சொல்லுங்க"

இனிஷியலாக என் பெயரைப் போட்டுக் கொண்ட போது குற்றவுணர்ச்சி வாட்டியது. வாட்டிக் கொண்டிருக்கிறது. கூடிய சீக்கிரம் இனிஷியலை மாற்ற வேண்டும்.

108 comments:

Jayaprakash Sampath said...

பதறிகிட்டே அவசர அவசரமா படிச்சு முடிச்சேன்.... முடிச்ச உடனே அப்படியே கிர்ருன்னு ஆயிடுச்சு... டுபுக்கு ... நீங்க வாழ்க...

Ms Congeniality said...

vaarthaiye varla..tooooooooooo good!!! :)

thiagu said...

gripping .. all the way..
thanks for reminding ..

Thiagu

சேதுக்கரசி said...

விறுவிறுப்பா எழுதித் தள்ளிட்டீங்க.. முடிவிலொரு திருப்பம் வரும்னு நினைச்சேன்.. நம்பிக்கையைக் காப்பாத்தீட்டீங்க :-)

இம்சை அரசி said...

தலைவா,
வார்த்தையே வரல...

Anonymous said...

தல அருமை

டுபுக்கு ரசிகர் மன்றம்
சிங்கை

Anonymous said...

Enna thala....ippadi ezhudhi manasa pathara vechuteengalae....enga kudumbathula aezhu pillaigal.Nenachaalae mandai kaayudhu.Thaaymai periya vishayamdhaan...

B o o said...

Wow! படிக்க ஆரம்ம்பிச்சதும் இழுத்து பிடிச்ச மூச்சு, கடைசி வரிக்கு அப்புறம் தான் மூச்சு விட்டேன். ரொம்ப அழகா விவரிச்சு இருக்கீங்க. புது அம்மாக்களின் சார்பாக ஒரு பெரிய சலாம்!

Radha Sriram said...

ரொம்ப நல்லா எழுதியிருகீங்க டுபுக்கு!சுட சுட !!
ஆனா ஒண்ணு சொன்ன கோச்சுக்க மாடீங்களே??
கொஞ்ச நாள்ல மறந்து போயிருவீங்க
இதெல்லாம்....:)

ACE !! said...

வழக்கம் போல் மிக அருமை.

//அதோ தடிமாடு மாதிரி தம்மடிச்சிகிட்டு இருக்கானே அவனுக்குத் தான் பிரசவம்//

நெகிழ்ச்சியான பதிவிலும் உங்க நகைச்சுவை முத்திரை...

படிக்கும் போதே வலிக்கிறது... நிஜத்தில்??

CVR said...

WOW!!

பொன்ஸ்~~Poorna said...

!!! ஒன்னும் சொல்ல முடியலை.. ரொம்ப நல்லா வந்திருக்கு..

Deekshanya said...

Chancey illa, nice one.. en payan pirantha antha secondku enna alaichitu poiruchu unga post... nandri!

Chakra said...

அட்டகாசமுலு!

இத ஒரு வாரம் முன்னாடி பெண்கள் தினம் அன்னிக்கி போட்ருந்தா மகளிர் அணி உனக்கு ஒரு பாரத் ரத்னா ரெக்கமண்ட் பண்ணி இருப்பாங்களே.

ambi said...

அண்ணாச்சி,
அருமை! யப்பா! எனக்கே பிரசவம் ஆன மாதிரி இருந்தது படிச்சு முடிக்கும் போது!

(வருங்கால) தங்கமணி ISD போன் போட்டு ஒரே அழுகை.

இன்னமே நான் கல்யாணம் பண்ணி என்னத்த......

ambi said...

சக்ரா அண்ணாச்சி சரியா சொன்னீங்க.
சரி விடுங்க, இலக்கியத்துக்கு நோபல் பரிசு உண்டு இல்ல!

ambi said...

//WOW//

@CVR, அய்ய்! தொர இங்க்லீஸ் எல்லாம் பேசுது! :p

இலவசக்கொத்தனார் said...

எச்சூஸ் மீ! இப்போ நடந்த மேட்டரா? சொல்லவே இல்லை!! வாழ்த்துக்கள்.

MyFriend said...

இதற்கு முன் உங்க போஸ்ட்டை எல்லாம் படிச்சிருக்கேனா இல்லையான்னு தெரியலை..

ஆனால், இதை படிக்கும்போது உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் இப்பவே படிக்கனும்ன்னு முடிவு செய்துட்டேன்.. :-)

MyFriend said...

இதை படித்ததும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

சொல்ல வார்த்தையில்லை.
இனி அகராதியில் தேடிதான் சொல்லவேண்டும் போல.

மிக மிக அருமை.

அந்த சில நிமிடங்களை அருமையாக சொல்லியிருக்கீங்க. அந்த இடத்தில் நான் இருந்து என் கண் முன்னே நடப்பதுபோல் ஒரு படபடப்பு..

என் நாடி இன்னமும் வேகமாய்தான் துடித்துக்கொண்டிருக்கிறது. உங்க பதிவை படித்த பிறகு. Simply superb.. :-)

பத்மா அர்விந்த் said...

ரங்கா
நடிப்புத்துறை விட்டுவிட்டு எழுத்தில் நேரம் செலவிடுங்கள். அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

Premalatha said...

//ரங்கா
நடிப்புத்துறை விட்டுவிட்டு//

மன்னிக்கவும். சிரிக்காம இருக்கமுடியல.:)))))))

மெய்யாலுமே போஸ்ட் நல்லா வந்திருக்கு. கதம்பத்துல லின்க்டு (அதுலேர்ந்துதான் எனக்குத்தெரியுமே. bloglines சொதப்புது இப்போல்லாம்.)

மெளலி (மதுரையம்பதி) said...

உணர்ச்சி பிரவாகமா இருந்தது....இதுதான் நான் படிக்கும் தங்களது முதல் பதிவு.......வாழ்த்துக்கள்...

kuttichuvaru said...

arumaiyaana pathivu..... anubavichu ezhuthi irukkeenga!! vazhakkamaana nakkal pathivugal-lernthu nalla oru maaruthalaana pathivu!!

The Visitor said...

மனதைத் தொட்ட பதிவு.

The Visitor said...

மறந்துட்டேன் - வாழ்த்துக்கள். :)

லங்கினி said...

Good one. Very recently I had gone thro' such a phase. After this 6months I forgot the pain and discomfort, Pain goes off the moment u see ur baby! Its amazing!

Yeah...As Radha Sriram said, idhellam konja nalaikku dhan & u guys will forget !!

But Yen dideernu ippadi senti blog-lam?!!

Jaggy said...

Excellent narration..As an aspiring father I enjoyed reading it.

ஓகை said...

டுபுக்கு
நல்ல விவரிப்பு. வாழ்த்துக்கள்.

செல்வநாயகி said...

வாழ்த்துக்கள்.

SLN said...

Very touching.

Sumathi. said...

ஹாய் டுபுக்கு,

வேக வேகமா படியில எறங்கி சும்மா ஸ்டைலா போஸ் குடுத்து நின்ன நீங்களா இப்படி எழுதுனீங்க..!!!!!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ..எனக்கு ஒரே அழுகாச்சியா வருது...

அந்த மரணத்தை பத்தி நீங்க எழுதின கதை தான் நான் முதல் தடவையா படிச்சது. இப்போ இது இரண்டாவது.
சொல்லறதுக்கு வார்த்தையே வரலை போங்க.உணர்ச்சி பூர்வமா எழுதியிருக்கீங்க.EXCELLENT.

யாத்ரீகன் said...

Dubuks sir.. Chancey illa atakaasam.. kadaiseela vithyasama mudikirey paervazhi-nu ilama.. iyalba mudichirukeenga.. thank god..

and the flow of language and the nakkal's inbetween showed the intimacy between the couples wonderfully... :-) .. padika padika kann munaey apdiyey oduthu.. kalakiteenga..

Anonymous said...

//ரங்கா
நடிப்புத்துறை விட்டுவிட்டு//

//மன்னிக்கவும். சிரிக்காம இருக்கமுடியல.:)))))))//

இதை வன்மையாக கண்டிக்கிறோம்

தல சிக்கிரம் அந்த3வது முடிவ எடுங்க

இவன்
டுபுக்கு ரசிகர் மன்றம்
சிங்கை

Anonymous said...

என்ன தலைவா போஸ்ட் நாட்டலில் மன்னி கொஞ்சம் பெரேடு எடுத்தில் கூல் பண்ண இந்த பதிவா?. இருந்தாலும் கலக்கலான பதிவு. மனதை குடைந்தது. நன்றிகள் பல.

Unknown said...

exteremely realistic.

brings back memories..good ones..

thank you for a wonderful read!

கோபிநாத் said...

இப்பதான் உங்க பதிவுக்கு வருகிறேன்...

என்ன சொல்லறது மிக மிக அருமையா எழுதியிருக்கீங்க...

கூடவே இருந்த மாதிரி இருந்தது....கடைசி வரிகளை படிக்கும் போது கண்ணில் கண்ணீர் வந்துருச்சி....

வாழ்த்துக்கள் !!!

Mookku Sundar said...

டுபுக்ஸ்,

முதலில் வாழ்த்துக்கள் - குழந்தைக்காக!!!

இதுல தெரியிற ஃபீலிங்சுக்காக என்ன சொல்றதுன்னே தெரியலை. கொஞ்சம் அதிகமாவே உணர்ச்சி வசப்பட்டுடீங்கன்ன்னு நினைக்கிறேன். உங்களைச் சொல்லிம் குத்தமில்லை. லேபர் ரூம் எக்ஸ்பீரியன்ஸ் என் பெருவாரியான நண்பர்களையும் இப்படித்தான் உணர்ச்சிப் பிழம்பாக ஆக்கி இருக்கிறது. இது சம்பந்தமாக முன்பே ஒரு பதிவு எழுதி தரும அடி கூட வாங்கிய ஞாபகம்.

நானும் அம்மா பிள்ளைதான். ஆனால தாய்மை என்பதற்கு நிகராக தந்தைமை என்று எதுவுமே என்று இல்லை என்று ச்ல்வது கொஞ்சம் இல்லை...ரொப்பவே ஓவர்.

தலைவா...குழந்தைக்கு அப்பாவாக இருப்பதன் சந்தோஷமும், பதட்டமும், பொறுப்பும், வெல வெலப்பும், குறுகுறுப்பும் தெரிய அதனை வயிற்றுக்குள் வளர்த்திருக்க வேண்டிய, பிரசிவித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

தாய்மை என்பது ஒரு ஸ்தானம் என்றால் தந்தைமை என்பதும் மறுக்க முடியாத ஒரு ஸ்தானம்தான்.இயற்கையும் சமூகமும் இரண்டு ஸ்தானங்களுக்கும் அதற்குண்டான பொறுப்புகளையும், பயன்களையும் அளித்தி இருக்கிறது. மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் அதை செய்தாலே போதும். நம் மனைவிகளையும், தாய்களையும் பெருமைப்படுத்த, நம்மை நாமே தாழ்த்தி கொள்ள வேண்டாம் என்பது என் தாழ்மையான எண்ணம்.

ரெடி..ஜூட்...ஒரு ஒருத்தரா வந்து மிதிங்கப்பா..என் முதுகு விரியட்டும்

:-) :-) :-:

Mookku Sundar said...

http://mynose.blogspot.com/2004/07/blog-post_26.html

பழைய பதிவு

Dubukku said...

All -

எல்லாரும் மன்னிச்சிக்கோங்க...இந்தப் பதிவு நான் ஒரு ரெண்டு வருஷமா எழுதனும்ன்னு இரண்டாவது (மகள் பிறந்த போது) நினைச்ச பதிவு. கொஞ்சம் லேட்டாகிவிட்டது. இதை பதிவில் தெளிவாகச் சொல்லாமல் விட்டுவிட்டேன். நிறைய பேர் வாழ்த்து சொல்லியிருக்கிறீகள் மிக்க நன்றி.
இவ்வளவு பேர் வாழ்த்து சொல்லியிருக்காங்களே வேஸ்டா போகனுமான்னு தங்கமணி கிட்ட கேட்டிருக்கேன்...பார்ப்போம். :)

Dubukku said...

Prakash- மிக்க நன்றி அண்ணே!!

Ms.Congeniality - ரொம்ப டாங்க்ஸ் ..மேடம்

Thiagu - டாங்க்ஸ். உங்களுக்கும் நியாபகம் வந்திருச்சா :)

சேதுக்கரசி - நன்றி மேடம்.

இம்சை அரசி - வாங்க அரசி. நன்றி ஹை.

Anonymous - தல நீங்க பேர் போட்டு கமெண்ட் போடுங்க...அந்த ரசிகர் மன்றம் வேண்டாமே...ரொம்ப கூச்சமா இருக்கு :)

dugulamama - ஆமா எங்க தாத்தா குடும்பத்திலயும் அப்பிடி தான். எப்பிடி தான் சமாளிச்சங்களோ.

B O O - ரொம்ப நன்றி. மெயிலில் சொன்ன மாதிரி விஷயம் கொஞ்சம் பழசு இப்போ நடந்தது இல்லை :)

Radha Shriram - சுடச் சுட இல்லைங்க. ரெண்டு வருஷம் ஆச்சு. மறக்கலை அதனால நியாபக் இருக்கும்னு நினைக்கிறேன். தெரியல பார்ப்போம். நீங்க சொன்னதும் வாஸ்தவம் தான்:)

ACE - நிஜத்துல ரொம்பவே வலிங்க அது.

Dubukku said...

CVR -நன்றி ஹை

பொன்ஸ் - ரொம்ப டேங்க்ஸ்

Deekshanya - ரொம்ப பெயின்புல் எக்ஸ்பீரியன்ஸ் எனக்கும் இன்னமும் அப்பிடியே கண்ணுல இருக்கு

Chakra - டேங்க்ஸ்டா...ஒரு மாசமாத்க்கு முன்னால ஆரம்பிச்சு மூடி வைச்ச போஸ்ட் இது.

Ambi - டேங்கஸ்.நானும் நினைச்சேன். வருங்கால அம்மாக்கள் படிச்சா பயப்புடுவாங்களோன்னு...ஆனா நான் என்ன புதுசாவா சொல்லீருக்கேன்னு போட்டுட்டேன் :)

இலவசக்கொத்தனார் - இப்போ நடக்கலைங்கோ ரெண்டு வருஷம் முன்னாடி நடந்தது :) இருந்தாலும் வாழ்த்துக்கு நன்றி. பேக்டேட் பண்ணிக்கிறேன்.

மை ஃபிரண்ட்- ரொம்ப நன்றிங்க. பொறுமையா எல்லா பதிவையும் படிச்சாச்சா? ரொம்பத் தான் பொறுமை உங்களுக்கு :)

பத்மா அர்விந்த் - அப்போ நடிப்புத்துறை வேண்டாம்ங்கிறீங்க....வெள்ளித்திரை கலைசேவை வேண்டாமா...இங்க பாருங்க ஒருத்தங்க சிரிக்கிறாங்க :))

Premalatha - நன்றி. என்ன சிரிப்பு வேண்டிகிடக்கு என் நடிப்ப பார்த்து உங்களுக்கு பொறாமை...:)

மதுரையம்பதி- வாங்க வாங்க.. வந்து கால் பதிச்சதுக்கு. அடிக்கடி வந்து போங்க நன்றி.

Anonymous said...

Dubuks nanbareh

Kalakitinga, arumaiyana padhivu, Paarata Varthaiya thedavendiruku.
Keep writing.

Dubukku said...

Kuttichuvaru - நன்றி. அப்போ அப்போ ஃபிலிங்க்ஸ் காட்டலாம்னு பார்க்கிறேன் என்ன சொல்றீங்க:))

The visitor - ரொம்ப நன்றி. வாழ்த்தை பேக்டேட் பண்ணிட்டேன்.

லங்கினி- ஓ நீங்க புது அம்மாவா..வாழ்த்துக்கள். நீங்களும் மறந்துருவேன்னு சொல்றீங்க...இருக்கலாம்....பார்ப்போம்...

Jagadeesan - ரொம்ப நன்றி. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஓகை - மிக்க நன்றி

செல்வநாயகி - வாழ்த்துக்களை பேக்டேட் பண்ணிட்டேன் :)

SLN - ரொம்ப டாங்க்ஸ்

Sumathi - அம்மாங்க சும்மா அப்போ அபோ ஃபீலிங்க்ஸ்...கண்டுக்காதீங்க..ரொம்ப நன்றி.

மிக்க நன்றிங்க - என்னா திடீர்ன்னு சார்ன்னு பிரோமோஷன்?

யாத்திரீகன்- தல ரொம்ப நக்காலாப் போச்சு...கூடிய சீக்கிரம் அந்த முடிவ எடுத்திருவோம்...(ஆமா மூனாவது முடிவு என்னாது? சொல்லுங்க எடுத்திருவோம் :)) )

Dubukku said...

sahana -ஹீ ஹீ அய்யா யாரு...பரேடுக்கெல்லாம் பயப்புடறாளா என்ன....எத்தன பரேடு பார்த்திருப்போம்..:)) நன்றிங்க.


Sundar Naranayaan - நன்றி. எல்லா அப்பாக்களுக்கும் இந்த நினைவலை இருக்கும்னு நினைச்சேன் :)

கோபிநாத் - வாங்க வாங்க. ரொம்ப நன்றிங்க. இரண்டு வருஷம் முன்னாடி நடந்தது இது.

Dubukku said...

Mooku Sundar - வாங்க சுந்தர். வாழ்த்துக்களுக்கு நன்றி. (ஆனா ரெண்டு வருஷமாச்சு சாமி)

உங்க கருத்து எனக்கு புரியுது. ஆனால் நான் அதிலிருந்து வேறுபடுகிறேன். இது உணர்ச்சி பிழம்பு இல்லை. இரத்தத்தைப் பார்த்த அதிர்ச்சியோ, எதிர்வினையோ அல்ல. ப்ளாக் சென்சேஷனுக்காகவும் எழுதப்பட்டது இல்லை.மேலே சொன்ன மாதிரி இந்த சம்பவம் நடந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.

தந்தமையை இகழவேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதவில்லை. தந்தமை சிறப்பனது தான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் என்னைக் கேட்டீர்களானால் சதையும் இரத்தமுமாக வலியோடு பெற்று எடுக்க நாம் ஈசியாக போய் இனிஷியல் போட்டுக்கொள்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி எனக்கு இருந்தது, இருக்கின்றது. இதெல்லாம் என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு தான். தந்தைக் கடமையில் நாமும் நிறைய செய்கிறோம் தான் இல்லையென்று சொல்லவில்லை, வியர்வை சிந்தி நாம் பரிபாலணம் செய்வது அவர்கள் இரத்தம் சிந்தி பெற்றெடுத்ததைத் தான் என்பதை நினைக்கும் போது எனக்கு அது தான் கூடுதலாக தோன்றுகிறது.

உங்கள் பதிவைப் பார்த்தேன். பிரசவத்தைப் பார்த்தவர்கள் சிலாகிப்பது பற்றி எழுதியிருக்கிறீர்கள். அக்கருத்துக்களோடு வேறுபடுகிறேன். நீங்கள் அப்பதிவை சொன்ன மாதிரி நீங்களும் ஒரு வேளை பார்த்திருந்தால் வேறுபடுவீர்களோ என்று தோன்றுகிறது. விளக்க முடியாது என்று தோன்றுகிறது. போதை என்பதை அனுபவிக்காதவனிடம் விளக்க் முற்படுவது போல தான் என்று நினைக்கிறேன். நான் "சிகிரெட்டில் , தண்ணியில் அப்பிடி என்ன சுகம்டா இருக்கும்" என்று சொல்வது போல் தோன்றியது :)

மேற்சொன்னமாதிரி இவை என்னுடைய தனிப்பட்ட அனுபவம் கருத்துக்கள் மட்டுமே...ஜெனரலைஸ் செய்ய முற்படவில்லை :)

(மற்றபடி தர்ம அடி போடுவதற்கெல்லாம் நம்ம ப்ளாக என்னமோ தெரியல அனானி சங்கம் சாய்ஸில் விட்டுவிடுகிறார்கள். :( )

Syam said...

எனக்கும் பேச்சே வரல தல...இது ஒரு உணர்வு,அத இவ்வளோ அழகா விவரிக்க முடியும்னு நிரூபிச்சுட்டீங்க...hats off to you :-)

Jeevan said...

Very touching post Friend.

Its tear in my heart while reading. Hats off to our women's!! (hats off is simple world before their suffer and brave).

Munimma said...

orey senti peelings thaan.
varungalathila namma vijaya T.R. mathiri, (pengal sentiment oda) kathai, vasanam, nadippatral(?), ellam one man army rangekku ranga nu sollalam.

wonderfully written. you need to seriously think of a writing career on the side. at least, unga selavilaye konjam books publish panni ellarukkum freeya distribute pannalam ;-) naangalam padichi ensoy pannuvom.

But I prefer to laugh at your stories than cry with them. BTW, epidural is the doctor's gift to pregnant women.

சேதுக்கரசி said...

மேடம் எல்லாம் வேணாங்க...

//இவ்வளவு பேர் வாழ்த்து சொல்லியிருக்காங்களே வேஸ்டா போகனுமான்னு தங்கமணி கிட்ட கேட்டிருக்கேன்...பார்ப்போம். :)//

ம்.. நல்லா வாங்கிக் கட்டிக்கிறதுன்னு முடிவு பண்ணியிருக்கீங்க.. உங்களை யார் காப்பாத்தறது! :-)

சீனு said...

romba arumaiyeaga unarvugalai ezhuthi irukinga...good one...

[ 'b u s p a s s' ] said...

அருமையான பதிவு.

//"என்ன வேண்டாம்ன்னு....?? ஹ...யாரு நீ...?" //


//மேனேஜர கூப்பிடுங்க..."//


எனக்கு மிகவும் பிடித்த வரிகள். யதார்த்தத்தை அழகாக காட்டுகின்றது.

Appaavi said...

ரொம்ப உணர்வுபூர்வமான பதிவு, அருகில் இருந்து பார்த்தது போன்ற ஒரு பதட்டமான உணர்வை தருகிறது.

குழந்தைக்கு இனிசியலாக தாய், தந்தை இருவரது பெயரையும் போட வேண்டும் என்பது என் விருப்பம்.

Anonymous said...

Fantastic Dubukku.

Been there done that. But kutra unarvu yenakku mattum illai kaaranam yen paiyanukku Middle Initial Ammaa peyarin Mudhal yezhuthu thaan.

Belated wishes Dubukku ! Have one more for more Fun ;-)

Anonymous said...

என்ன சொல்லறது......வாழ்த்துக்கள்...

Excellent,plz Continue...

kalidasan
Nellai

Usha said...

amam ba ore feelings ayiduchu enakkum padichappo. great stuff!

Vidya said...

Am here after some time. And as usual you have not disappointed me. When I was reading, it, I knew you were talking about the 'coming to the world of your second one.' The way you have written it is EXCELLENT Renga. Too Good. Brought tears in my eyes. Thanks da! Beautiful.

sriram said...

HI Dubuks,
I am one of those who have read each and every post in this blog (sonna nambanum) and not at all surprised by this one, I knew your capability of explaining in sequence (be it a serious post or (Y)our favourite sattire.
A real good one from someone who has been delivering entertaining stuff. Keep up the good work, tyr to a posting once every week atleast, BostonLa vera entertainment eduvum Illai.
Sriram, Boston, USA

Anonymous said...

speechless! chancey illa thalaiva

Sundari said...

Excellent Post!!!

aparnaa said...

speachless!! wordless!! u are simply great!! cant find words to write!!

Dubukku said...

Syam/ Jeevan - மிக்க நன்றி என்னா நீங்களும் ஃபீலிங்ஸ் ஆகிட்டீங்களா :)

Munimma - வாங்க வாங்க..புக்கு தானே போட்டிருலாம்.ஆனா சொந்த செலவுலன்னு சொல்றது தான் இடிக்குது :))
ஆனாலும் டி.ஆர் கூட கம்பேர் பண்ணிட்டீங்களே இப்படி :)))

சேதுக்கரசி - ஹீ ஹீ வாங்கிக் கட்டிக்கிறதெல்லாம் புதுசா என்ன :)

Seenu - ரொம்ப டேங்க்ஸ்

busspass - நன்றி தல

அப்பாவி- நல்ல சிந்தனை. ஆனால் கூட இருந்து பார்த்தாலோ என்னவோ எனக்கு என் இனிஷியலைப் போட்டுக்கொள்வதில் ரொம்ப கஷ்டமாக இருந்தது.

உமா - ரொம்ப டேங்க்ஸ். என்ன மேடம் ரொம்ப ஃபீலிங்காகிட்டீங்க போல... :)

அருண் - கலக்கிட்டீங்க போங்க.... வாழ்த்துக்கு நன்றி.

Kalidasan - நன்றி. அடிக்கடி வந்து போங்க :)

Usha - டேங்க்ஸ் மேடம்.

Vidya- டேங்க்ஸ்...அட என்ன ஃபீலிங்ஸாகிட்டியா?

Sriram - ரொம்ப டேங்கஸ் நீங்க என் மேல வெச்சிருக்கிற நம்பிக்கைக்கு. உங்க பின்னூட்டம் ரொம்ப என்கரேஜிங்கா இருந்தது. வீட்டுல வேலை நடந்திகிட்டு இருக்கு (உண்மையாவே ஆணி புடிங்கிகிட்டு இருக்கேன் முடிஞ்சவுடனே அடிக்கடி எழுத ஆரம்பிச்சிடுவேன்)

பிரபு கார்த்திக் - வாங்க தலை. ரொம்ப நன்றி.

சுந்தரி - வாங்க மேடம் முதல் பின்னூட்டதுக்கு நன்றி.

அபர்ணா - ரொம்ப நன்றி. என்னாங்க ரொம்ப ஃபீலிங்காகிட்டீங்க

கதிர் said...

எங்க வீட்டுக்கு பக்கத்துலயே கவர்மெண்ட் ஆஸ்பத்திரி. அர்த்த ராத்திரில நிறைய அலறல் சத்தம் கேக்கும். அப்போ ஒரே எரிச்சலா இருக்கும் ஏன் குழந்தைய பெத்துக்கறாங்கன்னு. எதுவுமே நமக்குன்னு வரும்போது மனசு கெடந்து துடிக்கும். என்னோட அக்கா பிரசவத்தின் போது இத்தனை நாள் எரிச்சலா நினைச்சிருந்தோமேன்னு வருத்தப்பட்டேன். பிரசவத்தின் போது வெளில இருந்த நாப்பது நிமிஷமும் என்னாகுமோன்னு இருந்துச்சி.

உணராதவரை எதுவுமே பெரிய விஷயம் இல்ல. உணர்ந்துட்டா போதும்.

இந்த பதிவை படிச்சி இன்னும் கொஞ்சம் தெளிவான நிலைக்கு வந்திருக்கேன்.

தாமதமா படிச்சேன்னு வருத்தமாவே இல்ல. எப்ப வேணும்னாலும் படிக்க வேண்டிய பதிவு இது.

வாழ்த்துக்கள்.

Jazeela said...

என் பிரசவத்தை நினைவுப்படுத்தியது உங்க கதை. அருமை. சுலபமாக எழுத முடியுமளவுக்கில்லை பிரசவம், அதையும் உணர்ந்திருக்கிறீர்கள் என்று உங்கள் பின்னூட்டம் சொல்லியது, வாழ்த்துக்கள். அந்த கடைசி வரிதான் மிகவும் பிடித்திருந்தது.

Naufal MQ said...

முதன் முறைய உங்கள் பதிவுக்கு வந்திருக்கிறேன். அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

மேலும், அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
எதுக்கா?
//இவ்வளவு பேர் வாழ்த்து சொல்லியிருக்காங்களே வேஸ்டா போகனுமான்னு தங்கமணி கிட்ட கேட்டிருக்கேன்...பார்ப்போம். :)
//
இதுக்குத்தான். :)

DesiGirl said...

bootiful!

Unknown said...

உணர்வுபூர்வமாக எழுதியிருக்கிறீர்கள். நன்றாகயிருக்கிறது.

மனைவி செய்த சிறு தவறுக்கு கோபமாக திட்டும்போது இதை நினைத்துக் கொண்டால் போதும்.

Just For Me said...

Enna pa azha vittuteenga.... unga wife itha padichaangala? I am sure she would have fallen in love with you all over again....

Great post!!

Regards,
Dee

http://deathbychoc.blogspot.com/

Geetha Sambasivam said...

mmmmmmm, thambiyai payamuruththavaa intha post? :P

நந்தா said...

வணக்கம். முதன் முறையா உங்க பாதிவுக்கு வர்றேன். இத்தனை நாள் எப்படி உங்க பதிவை விட்டு வெச்சிருந்தேன்னு தெரியலை.

ஆனா கதயை படிச்சவுடனே என்னமோ ஆய்ட்டேன். பாருங்க நேத்து காலைல கதை படிச்சுட்டு, உடனே கமெண்ட் போட கூடத் தோணலை.

இன்னிக்குக் காலைல வரைக்கும் உங்க கதை மனசுக்குள்ள ஒடிட்டடே இருக்கு. வாழ்த்துக்கள்.

//இவ்வளவு பேர் வாழ்த்து சொல்லியிருக்காங்களே வேஸ்டா போகனுமான்னு தங்கமணி கிட்ட கேட்டிருக்கேன்...பார்ப்போம். :)//

குசும்பு மட்டும் போகாது போல.

காயத்ரி சித்தார்த் said...

அண்ணாச்சி..

என்னனு சொல்ல? எப்பிடி சொல்ல? வெறும் எம்.ஏ.எம்.பில் தமிழ் படிச்சுட்டு.. கணினி கத்திரிக்கா..எதும் தெரியாம "எம்புருஷனும் கச்சேரிக்கு போறான்ற" மாதிரி நானும் ஒரு பிளாக் ஆரம்பிச்சிருக்கேன்.(கத்துக்குட்டி கூட இல்ல.. வெத்துக்குட்டி!) ஏகலைவன் ஸ்டைல்ல சொந்தமா நோண்டி நோண்டி கத்துகிட்டு இருக்கேன். உங்க டுபுக்கு பக்கம் வந்தாலும் வந்தேன்.. மதுரையில வழி மறந்துட்டு அலையுற மாதிரி உள்ளயே சுத்தி சுத்தி வர்றேன். டுபுக்கு ரசிகர் மன்றம் இருக்காமே? என்னையும் உறுப்பினரா சேர்த்துக்க சொல்லுங்க ப்ளீஸ்... அப்புறம் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு நான் ஆரம்பிச்ச ப்ளாக்கும் எங்க இருக்குனு கண்ணுக்கே தெரில அண்ணாச்சி!! என்ன பண்றது யார கேக்கறது னு ஒண்ணும் புரில. கொஞ்சம் சொல்லிக் கொடுத்து உதவுங்களேன்? சொல்ல மறந்துட்டேன்.. அண்ணி ரொம்ப குடுத்து வெச்சவங்க!!

Anonymous said...

அருமையா இருக்கு. ரொம்ப நாளைக்கப்புரம் வந்து பார்க்கிறேன். எப்ப வந்தாலும் உங்க பதிவுகள் அருமையா இருக்குது. டுபுக்கு, "ஆர்கைவ் லின்க்"கெல்லாம் போக மாட்டெங்கே? விட்ட கதையெல்லாம் படிக்க முடியலையே?
இரண்டு வருஷம் கழிச்சு எழுதினாலும், அருமையா எழுதிருக்கீங்க!

Gopalan Ramasubbu said...

Dubbuku Sir,

You have a flair in writing.Very few people can make/take the readers to feel the situation and you have done that here.amazing post.Cheers

SurveySan said...

அடடா தொட்டுட்டீங்க சாரே!

Hats off!

களவாணி said...

பிரசவம்னா இப்படித்தானா? எனக்குத் தெரியாது. தெரிவிச்சதுக்கு நன்றிகள் பல...

க்ரேட்...

Anonymous said...

padika padika oru differentana xperience....g8t...

Anonymous said...

பிரசவம் என்பது மிகவும் கஷ்டம் என்று கெள்விப்பட்டிருக்கின்றேன். நிங்கள் எழுதியதை படித்தவடன் வேதனை கலந்த மகிழ்ச்சி என்ற புரிந்தது. கண் முன்னாடி பிரசவம் நடக்கிறமாதிரி இருந்தது உங்கள் அனுபவம்.

Subhashree said...

Nalla ezhudhiyirukkeenga. Pasanga eppidi irukkaannga? Wife nalla irukkaangala? Nisha (Chakra's friend Guru's wife, hope you remember us and our blog meet:))

Ramya Ramani said...

dubukku anna,

Indha post nijamave enna romba badichiduchhu.. evvalo naal comment poda kooda mudiyumanuu nenachen..but namakku pidichadha sollidanumnnu indha comment.. great post congrats!

Natty said...

thala... jollithiruvathi paditchittu computer munnadi sirichittae irunthaen.... intha pathivu patchi computer munnadi kanneerodu ... azha vetchiteenga thala :) nandri ninaivugalai uyirpithamaikku

Vadielan R said...

மிகவும் இக்கட்டான இனிமையான தருணம் தனியாக இருப்பது நல்லது அல்ல

Anonymous said...

good...very nice....

Che Kaliraj said...

"நான் நீ படுகிற டென்ஷனைப் பார்த்து உனக்குத் தான் பிரசவமோன்னு நினைச்சேன்...ரொம்ப கவலைப் படுகிறாயாமே..புதுப் பொண்டாட்டியா?"

So ore kalakkalaga irukkirathu climax. but your feeling is true. which day I can feel? I am a non married Boy(bachilor)ata namma english avvalavuthaan

Anonymous said...

hai dubuks
i could not help shedding tears

as somebody said manni romba kuduthu vachirukka

manasa thottutiye

rbsmtanjore

Vijay said...

என்னா சொல்றதுன்னு தெரியல. ஆனா எதாவது சொல்லியே ஆகனும். பிளீஸ், எதாவது சொல்லிதாங்களேன்.

Dew Drop said...

Never read anything like this before.

Keep writing.

Dew Drop said...

Never read anything like this before.

Keep writing.

Dew Drop said...

Never read anything like this before.

Keep writing.

rubamathi surenthiran said...

oru p[ennin prasava vedhanaiyai nandraaga kuripittu ulaarkal nandru

Sara Suresh said...

ஹலோ டுபுக்கு,
என்னுடைய இனிசியல்கள் (S .R. ) அப்பா, அம்மா பெயரை கொண்டுள்ளன.
முழு மூச்சாக 7-வது நாளாக (ஆபிஸ் நேரம் தவிர) உங்கள் அனைத்து பதிவுகளையும் படித்து கொண்டிருக்கிறேன்.
கலக்குறீங்க....

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

An excellent post.
Kudos.

கைப்புள்ள said...

டுபுக்கு சார்,
இன்னிக்கு தான் இந்த பதிவைப் படிச்சேன். படிச்சிட்டு சும்மா போக முடியலை. படிச்சிட்டு நானும் ஃபீல் பண்ணேன்னு தெரிய படுத்துறதுக்காகவே இந்த கமெண்ட். நீங்க சொல்ற இனிஷியல் கருத்தோட நானும் உடன்பட்டாலும் என் பொண்ணுக்கு இனிஷியல் எல்லாம் மாத்தலை. என் பேருல பாதியை எடுத்து சர்நேமா வச்சாச்சு...வரலாறு நம்மளைத் தூற்றக் கூடாது பாருங்க :)

உங்க போஸ்டைப் படிச்சதுக்கப்புறம் பாலைவன ரோஜாக்கள் படப் பாட்டு தான் ஞாபகம் வருது.

"காதலென்பது பொதுவுடைமை கஷ்டம் மட்டும் தானே தனிவுடைமை..."

balutanjore said...

i read this for the fifth time today.
manasai pisaigirathu saare. touching . poignant

balasubramanyan vellore

Anonymous said...

habbaa....padichu mudichavudandhaan moochchu vanthadhu....bayam vanthirukku delivery ninaithaal....but baby venume....superb dubukku.thanks.

vanathy said...

//இனிஷியலாக என் பெயரைப் போட்டுக் கொண்ட போது குற்றவுணர்ச்சி வாட்டியது. வாட்டிக் கொண்டிருக்கிறது. கூடிய சீக்கிரம் இனிஷியலை மாற்ற வேண்டும்.//

நெஞ்சை தொடும் வரிகள். நல்லா இருக்கு.

murugesh said...

the way he is told good...........

Anonymous said...

Really a superb script...which made me feel the situation. Hats off to u writer...

Kantha Moorthy Selvam said...

அருமையான உணர்வு...

Anonymous said...

very very nice. no words 2 describe...

Bala said...

Dear

I got tears after reading your experience . My wife is carrying 7 months now .

Really a fantastic post...

Take care
Balamurugan

Sujatha Shyamsundar Sreevats said...

hi Renga
super dooper!
very nice & articulate..
saranya prasava vali irukkaracha neraya
nakkal adichalo ?
This is the first one i have read in your
blog which drives me to read the
rest .. will do and post comments..

btw i am also living sujatha :-)

keep writing!

REgards
Sujatha Raja (MK)

Anonymous said...

very nice, no words to say, i am going to be a mom soon....... i felt that motherhood today itself........

Unknown said...

நாளை மெரினாவில் உங்களை சந்திக்க இருப்பதால் ராம்ஜியின் யோசனைப்படி இந்த பதிவைப் படித்தேன். இது உண்மையோ பொய்யோ தெரியவில்லை. அபாரமான விவரிப்பு நண்பரே.

Anonymous said...

உங்க பதிவுகளை இப்போ தான் ஒண்ணொண்ணா படிச்சுட்டு இருக்கேன் . கே.கே.நகர் பத்தின பதிவு படிச்சுட்டு அட !! என்று ஒரு பின்னூட்டம் இட்டேன் . இந்த பதிவு , ப்பா !!! உணர்ச்சிக்குவியலா இருக்கு.
அருமையா எழுதறீங்க . கண்முன் விரியுது உங்கள் எழுத்து, காட்சியாய் . வாழ்த்த்துக்கள் .
initial மாத்திட்டீங்களா உங்க மகளுக்கு ? ssk.

Anonymous said...

Wonderful narration. Brought tears to my eyes....

Madhu said...

Thanks..sir

Ell said...

Wonderful narration.

Ell said...

Thanks for posting

Post a Comment

Related Posts