Sunday, November 06, 2011

மாலை

இந்த பிறந்த நாள் இருக்கிறதே பிறந்த நாள் அது நமக்கு வந்தால் தேவலாம். லைப் பார்ட்னருக்கு வந்தால் பரிசாய் என்ன வாங்கிக் குடுப்பது என்ற குழப்பம் இருக்கே ஸ்ஸ்...சிண்டை பிடித்துக் கொள்ள வைத்துவிடும். சூப்பரா இருக்கணும், அவரிடம் இல்லாததாய் இருக்கணும், அவருக்கு  ரொம்பப் பிடித்ததாய் இருக்கணும், ஹைய் இத இதத் தான் ரொம்ப நாளா வாங்கணும்ன்னு நினைச்சேன் என்று கூவ வைக்கக் கூடியதாய் இருக்கணும் ஆனால் எல்லாத்துக்கும் மேலாக விலை நம்ம பட்ஜெட்டில் இருக்கணும், முடிந்தால் கொஞ்சம் மிச்சமும் வரணும்” - இந்த ஸ்பெசிவிகேஷனை கடைக்காரரிடம் சொன்னால் “தம்ப்ரீ...நேரா போய் லெப்ட்ல திரும்பினா வெளியே போற வழி வரும்..போகும் போது ரைட்டுல தண்ணி வைச்சிருப்பாங்க குடிச்சிட்டு போய்ச் சேரு”ன்னு தெளிவாய் சொல்லிவிடுவார்.

ஆனால் என்ன மாயமோ தெரியவில்லை எனக்கு வாங்குவது என்றால் மட்டும் தங்கமணிக்கு எதாவது சுளுவாய் மாட்டும். என் பிறந்தநாளுக்கு ஒருதரம் கழுத்தில் போட்டுக்கொள்ளும் ஒரு ஸ்டைலான மாலை வாங்கித் தந்தார். இந்த மென்ஸ் ஜுவெல்லரியில் எனக்கு அப்படி ஒ்ன்றும் பெரிய ஆர்வம் இல்லை என்றாலும் “ஹைய்ய்ய்”ன்னு ரியாக்‌ஷன் குடுத்து போட்டுப் பார்த்ததில், அழகுக்கு அழகு சேர்த்த மாதிரி இருந்ததால் எனக்கும் பிடித்துவிட்டது. முதலில் கொஞ்ச நாள் வீட்டில் மட்டுமே போட்டுக் கொண்டேன். “வீட்டுல மட்டும் போட்டுக்கறதுக்கு இதென்ன நைட்டியா...இனிமே வெளியில் போகும் போது கழுத்துல மாலை இருக்கணும்..இல்ல” என்று தங்கமணி அன்பாய் சொல்ல. அப்பீல் ஏது? ஆனால் அங்கே ஆரம்பித்தது ஒரு இம்சை.

பார்க்கிறவர்களுக்கெல்லாம் ஏனோ பார்வை என் கழுத்தில் போய் நிற்கும். நான் குடுக்க வேண்டிய “ஹைய்”ரியாக்‌ஷனோடு “இதென்ன புதுசா மாலை” என்று ஆரம்பிப்பார்கள். முதலில் எல்லாம் “சும்மாத்தேங்...” என்று ருதுவான பெண் மாதிரி வெட்கத்தோடு நெளிந்து கொண்டிருந்தேன். சில இடங்களில் அது ஒர்க் அவுட் ஆகாமால் “தொண்டைல கட்டி இந்த மாலையை மூனு வேளை  அணிந்தால் கரைஞ்சிடும்ன்னு டாக்டர் சொல்லியிருக்கார்” என்று மெடிக்கல் ரீசன் குடுக்க ஆரம்பித்தேன். இதெற்கெல்லாம் அவசியம் இல்லாமல் வெகு சில இடங்களில் “கௌன் பனேகா க்ரோர்பதி” மாதிரி அவர்களே “யானை முடியா, பூனை கடியா”ன்னு என்று அவர்களே நிறைய சாய்ஸ் குடுப்பார்கள், நானும் எதாவது ஒன்றை “லாக் கர் தீஜீயெ” சொல்லி தப்பிப்பேன்.

ஆனால் சினிமாவில் சி.பி.ஐ ஆபிஸராய் நடிக்கப் போகவேண்டிய சிலர் இருக்கிறார்களே, துளைத்தெடுப்பது மாதிரி பார்த்துக் கொண்டு பதிலுக்கு வெயிட் பண்ணுவார்கள். நான் வேறு வழியில்லாமல் கடைசியில் "ஹீ ஹீ ஸ்டைலுக்குத் தான் போட்டிருக்கிறேன்" என்று வாக்கு மூலம் குடுக்கும் வரை விடமாட்டார்கள். பதிலுக்கு நூற்றுப் பதினைந்து சதவீதம் "ஓஹ்ஹ்ஹ்ஹோ..." என்று  உதட்டோர புன்முறுவலோடு ஒரு பெரிய நக்கல் கிடைக்கும். உண்மையச் சொன்னா நக்கல் விடற இந்த சமுதாயம் இருக்கும் போது ஓசோன்ல ஏன் ஒட்டை விழாதுன்னு அதற்கப்புறம் இந்தக் கேள்வியை சாய்ஸ்சில் விட்டுவிட்டு “அடேங்கப்பா பில்டிங் என்னம்மா இழைச்சுக் கட்டியிருக்கான் , கண்ணாடியெல்லாம் ஜொலிக்கிறது” என்று ஏதாவது சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனாலும் சில விடாக் கொண்டர்கள் விட மாட்டார்கள். திரும்பவும் கேள்வியே காதில் விழாதமாதிரி கொஞ்ச நாள் நடிக்க ஆரம்பித்தேன்.  ஒரு தரம் ஒரே ஒருவர் மட்டும் "துளசி மாலையா" என்று எடுத்துக் குடுக்க ஆமாம் என்று அன்றிலிருந்து கெட்டியாய் பிடித்துக்கொண்டேன்.

இருந்தாலும் நமக்கென்று வந்து சேர்வார்களே அகராதிகள்.

“துளசி மாலையா...? பார்த்தா தெரியலையே. என்ன துளசி” என்று ஆரம்பித்துவிடுவார்கள்.

“இது காட்டுத் துளசி பார்த்திருக்கமாட்டேள்.” 

“காடா ...அப்படி என்ன நான் பார்க்காத காடு”

ம்ம்ம் சுடுகாடு என்று நொந்து கொண்டு “இது விஷ்வ துளசி. அந்தக் காலத்துல போதி தர்மர் இத கழுத்துல மாலையா போட்டு காவி உடுத்தி...சூர்யா மொட்டையடிச்சிண்டு கம்ப தூக்கிண்டு போதி தர்மரா நடிச்சிருக்கார் பாருங்கோ...சைனா காரனே தொப்பி போட்டுண்டு பிச்சை வாங்கறான்னா பார்த்துகோங்கோளேன்...” ஸப்ப்பா..... சமாளிப்பதற்குள் எனக்கு நாக்கு தள்ளி விடும்.

சில சமயம் விதி வீட்டிற்கு வந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டு விளையாடும். “என்ன இன்னும் கல்யாண ஷோக்கு குறையலையோ.. இன்னும் மாலையும் கழுத்துமா இருக்கியே அதான் கேட்டேன்” போன்ற அரத ஜோக்குகளுக்கெல்லாம் “எப்படீங்க இப்படியெல்லாம்” என்று சம்பிரதாயமாய் சிரித்துவிட்டு “மாமாக்கு சீக்கிரம் காப்பி போட்டுக் குடுமா... இந்த மாதிரி மொக்கை போடறதுக்கு இன்னும் ரெண்டு வீடு இருக்காம்”ன்னு பேக்கப் சொல்ல வேண்டியிருக்கும்.

ஏனோ நடுவில் இப்போ கொஞ்ச நாள் இந்த மாலை சம்பிரதாயம் இல்லாமல் இருந்தது.

சமீபத்தில் காசு குடுத்து சோற்றுக்கடன் ஆற்ற ஒரு க்யூவில் நிற்க வேண்டிய நிர்பந்தம். முன்னால் ஒரு மாமி நின்று கொண்டிருந்தார். என் மகள் ஏதோ என்னிடம் கேட்க, திரும்பிப் பார்த்தவர் சினேகமாய் சிரித்து "கழுத்தில் என்ன துளசி மாலையா" என்று ஆரம்பித்தார்.

ஆஹா கூப்பிடுடா போதிதர்மரைன்னு நான் உஷாராகும் போது  "துளசி மாலை மாதிரியே இல்லையே ஸ்டைலாய் உங்களுக்கு ரொம்ப நன்றாக இருக்கிறதே" என்று சொன்னார். இப்பேற்பட்ட நல்ல மனிதர்கள் இருக்கும் போது ஓசோன்ல எப்படீங்க ஓட்டை விழுது?

Monday, September 26, 2011

சினிமாவுக்குப் போன சித்தாளு

ஒரு ஊரில் ஒரு சித்தாளு இருந்தானாம். அவனுக்கு சினிமா பைத்தியமாம். மலை நதி காடு கரை போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்லும் போது அந்த இடத்தில அம்சமாய் கையைக் கட்டிக் கொண்டோ, கண்ணாடியைப் போட்டுக் கொண்டோ சோலோ சோலையப்பனாய் ஒரு போட்டோ எடுத்து கையோடு பேஸ்புக் ஃப்ரொபைல் பிக்கசராய் போடும் ஒரு காலக் கட்டாயம் இல்லாத காலத்தில், “எனக்கு நெஞ்சு வலிக்கிறது,குப்புன்னு வியர்க்கிறது,யாரோ கூப்பிடுகிறார்கள் #heartattack" என்று வைகுந்த வேளையிலும் டிவிட்டர் அப்டேட் குடுக்கிற மஹானுபாவர்கள் தோன்றாத ஒரு காலக் கட்டத்திலும் நம்ம சித்தாளு சினிமா பார்க்க ஆரம்பித்திருக்கிறான். சித்தாளுவுக்கும் தெருவில் இருக்கும் அவன் நண்பனுக்கும் சினிமா அலைவரிசை அலாதி. ஸ்கூலில் இருந்து வரும் போது சனிக்கிழமை போஸ்டரைப் பார்த்தால், இருவரும் ஒரு பார்வை பார்த்துக் கொள்வார்கள். டீல் டன் அண்ட் டஸ்டட்.

சினிமா பார்க்க சித்தாளு வீட்டில் செய்யும் அஜால் குஜால் வேலைகள் இந்த பதிவின் சாராம்சமில்லை என்பதால், சினிமா யாத்திரையை தொடங்கும் போது சித்தாளு பையில் ஒரு ரூபாய் கிணு கிணுத்துக் கொண்டிருக்கும். 75 பைசாவிற்கு பெஞ்ச் டிக்கட் வாங்கிக் கொண்டு 25 பைசாவிற்கு ஒரு நீள லக்ஸுரி மைசுர் பாகும் வாங்கிக் கொண்டு தூண்கள் எதுவும் மறைக்காத, ஒரு கையை ஊன்றிக் கொண்டு பார்க்க ஏதுவாய் இருக்கும் சின்ன திண்டு முன்னால் பெஞ்சில் உட்கார்ந்து படம் பார்த்த நாட்கள் - சித்தாளுவின் எண்ணப் புத்தகத்தில் பொன் எழுத்தில் பொறிக்கப்பட்டவை.
 சித்தாளுவும் நண்பனும் சினிமா பார்க்கும் போது பேசிக்கொள்ளவே மாட்டார்கள். சினிமா என்று இறங்கிவிட்டால் இடைவேளையோ சுபமோ போட்டால் தான் சித்தாளுவிற்கும் நண்பனுக்கும் சமூக பிரக்ஞையே வரும்.அதுவரை வாயில் கரையும் மைசூர்பாகு கூட தெரியாத அளவிற்கு சினிமாவை “பே”என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

”யெக்கா திருநாகேஸ்வரம் போய் பாம்புக்கு பால் வைச்சா தோஷம் குறையுமாம்க்கா..கே.ஆர் விஜயா அந்த படத்துல சொன்னாங்கல்லா” “மாப்ள..செத்த காத்தாட பீடி இழுத்துட்டு வந்துடறேன்..இந்த ஒப்ப்பாரி முடிஞ்சு செயமாலினி டான்ஸ் வந்துடிச்சினா விசில் சத்தம் குடுறா நல்லா இருப்ப, காசு அழுததே அதுக்கு தான்” போன்ற சக சித்தாளுக்களின் சம்சாரிப்புகள் எல்லாம் காதில் விழவே செய்யாது. சினிமா பார்க்கும் சுகானுபவத்தில் எந்த குறுக்கீடுகளும் வர இயாலத காலம் அது.

ஆனால் காலக் கிரயத்தில் சித்தாளுவின் சினிமா குணாதியசங்கள் மாறியே போயின. மாட்னி ஷோவில் பீடி வலிக்கப் போகும் சேட்டன்கள் கதவை ஒழுங்காக சாத்தாமல் சூரிய வெளிச்சம் திரையில் விழும் போது கூட ”யோவ் கதவ மூடுய்யா” என்று அநீதியை எதிர்த்து குரல் குடுக்காத சித்தாளு வீட்டில் டீவி பார்ப்பதற்க்கே திரைகளைப் போட்டு கதவை சாத்தி களேபரம் செய்ய ஆரம்பித்தான். பகலில் பார்க்கும் படத்திற்கே வீட்டில் உள்ளவர்கள் வெளிச்சம் தெரியாமல் தடுக்கி விழுந்துவிடுவோமோ என்று தவழ்ந்து செல்லும் நிலையில் ராத்திரி படம் போட்டால் கேட்கவே வேண்டாம். படங்களில் ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் காட்சிகளில் எங்கேயோ காட்சிக்கு சம்பந்தம் இல்லாமல் ஏதோ ஒரு பாட்டியிடம் யாரோ பேரம் பேசி வாங்கும் கேட்கவே கேட்காத டயலாக் எல்லாம் கேட்க வேண்டும் என்று அராஜகம் புரிய ஆரம்பித்தான். டயலாக் புரியாவிட்டால் ரீவைண்ட் செய்து, சவுண்டைக் கூட்டி - என்று சித்தாளு செய்யும் களேபரத்தில் இரண்டரை மணி நேர படங்கள் எல்லாம் நாலரை மணி நேர படங்களாய் ஓட ஆரம்பித்தன. “டேய் வெண்ண..ஸ்டூடியொல சவுண்ட் இஞ்னியரிங் பண்ணும் போது கூட அவங்களுக்கே இது கேட்டிருக்காது..” என்று சித்தாளுவின் தங்கமணி அன்பாய் எடுத்து சொல்லியும் அடங்காமல் இரண்டரை  to நாலரை ஒரு நாள் ஏழரை ஆகி அப்புறம் சித்தாளு வீட்டில் கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தான்.

சித்தாளுவின் வாழ்க்கையில் அன்லிமிட்டட் சினிமா கார்டு வரப்பிரசாதமாய் வர, வழக்கமாய் தியேட்டர் போகும் சனிக்கிழமை ராமசாமியாய் அவதாரமெடுத்தான். பேக் டு பேக் இரண்டு படங்கள் தொடர்ச்சியாய் பார்ப்பது சித்தாளுவின் ரெகுலர் தீர சாகசங்களில் ஒன்று. “சினிமா பார்ப்பது என்பது ஒரு தவம்” - என்று சீன் போடுவது சித்தாளுவிற்கு ரொம்பப் பிடிக்கும். தற்போதும் குடும்பத்தோடு போகும் போது படம் ஆரம்பிப்பதற்கு அரை மணி முன்னாலேயே காரை பார்க் செய்து, டிக்கெட் கிழிப்பவரை நச்சரித்து முதல் ஆளாய் தியேட்டருக்குள் போவது சித்தாளுவின் தங்கமணிக்கு சுத்தமாய் பிடிக்காது. உள்ளே போய் பத்து வெவ்வேறு இடங்களில் உட்கார்ந்து கடைசியில் பதினொன்றாவதாய் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உட்காரும் போது தங்கமணி நெற்றிக்கண் இல்லாமலேயே எரித்துவிடுவதற்கு எல்லா முயற்சியும் செய்வார். கேட்டால் படம் பார்ப்பதற்கு பங்கம் வராமல் இருக்க சித்தாளு ஸ்ட்ராடிஜிக்காய் இடம் பிடிக்கிறாராமாம்.


தியேட்டருக்குள் பீடி வலிக்க தடை வந்துவிட்டதால் பீடி தொல்லை இல்லாமல் இருந்தாலும் சித்தாளுவிற்கு சற்றும் பிடிக்காத வேறு பல தொல்லைகள் உண்டு. லேட்டாய் வருவதோடு மட்டுமில்லாமல் ஸ்கிரீனைப் பார்க்காமல் படம் ஆரம்பிச்சாச்சா என்று கேட்கும் லேட் மஹாதேவன்கள், கூட்டி வரும் கேர்ல் பிரண்டுக்கு ஏகத்துக்கு பப்ளிக்காய் லவ்வைக் காட்டி எந்தப் படத்தைப் பார்ப்பது என்று சித்தாளுவை குழப்பத்திலாழ்த்தும் முன் சீட் முத்தண்ணாக்கள், தியேட்டர் காரன் லைட்டை அணைத்தாலும் மொபைலில் டெக்ஸ்ட் பண்ணுகிறேன் பேர்வழி என்று பளீர் என்று முகத்தில் அடிக்கும் மொபல் ஸ்கீரின் வெளிச்சத்தைக் காட்டும் “செல்”வராகவன்கள் என்று இன்றளவிலும் சித்தாளுவிற்கு பல சத்திய சோதனைகள். இருந்தாலும் மனம் தளராத மெகா சீரியல் நாயகி மாதிரி சித்தாளு சினிமா போவது மட்டும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அதுவும் குழைந்தகள் ஸ்பெஷல் ஷோவிற்கு ஒரு முறை போய் “எனக்கு லாரா கூட உட்காரணும்” “அங்க போகாத;இந்த மாமா மேல நிக்காத” என்று குழ்ந்தைகளும் அவர்கள் அப்பா அம்மாக்களும் விடும் சவுண்டில், சினிமாவுக்கு போன சித்தாளு சந்தைக்குப் போன சித்தாளு ஆகிவிட்டான். கழுத காசு போனாலும் போகுது இனிமே முழு டிக்கெட் எடுத்து ஜெனெரல் ஷோவுக்குத் தான் குழ்ந்தைகளை கூட்டிப் போவது என்று முடிவாய் இருக்கிறான் சித்தாளு.  ஏன் என்றால் சித்தாளுவிற்கு சினிமா பார்க்கும் போது சத்தமே வரக்கூடாது. முறுக்கு தின்று கொண்டே பார்த்தால் அந்த சத்தத்தில் டயலாக் கேட்காது என்பதனால் சித்தாளு வீட்டில் சினிமா பார்க்கும் போது முறுக்கு,சீடைக்கெல்லாம் தடை. சினிமாவிற்க்கு போகும் போதும் கருக்கு முருக்குன்னு சத்தம் வரும் திண்பண்டங்கள் வாங்க மாட்டார் சித்தாளு. அதற்காக சித்தாளு கொடுமைகாரன் அல்ல.சத்தமே வராத அதிரசம், லட்டு, ஜாங்கிரி போன்றவை ஓக்கே.

“போய்யா போ...இனிமே உங்க கூட நாங்க படமே வரதா இல்லை” என்று வீட்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றியும் சித்தாளு செய்யும் அலம்பல்கள் குறைந்த பாடில்லை. ஏன்னா பாருங்க “சினிமா பார்ப்பது என்பது ஒரு தவம்”

Saturday, September 10, 2011

என்னது காந்தி செத்துட்டாரா

அடடா எப்படி சொல்வது எங்கே ஆரம்பிப்பது. இந்த தரம் கலக்கலான இந்தியா ட்ரிப். செய்ய நினைத்தில் முக்கால் வாசி டிக்.போனஸாய் லிஸ்டில் இல்லாத சில அயிட்டங்களும் டிக் ஆனது எனக்கே வியப்பு. ஏர் இந்தியாவில் புக் செய்திருக்கிறோமே என்று வேண்டிக் கொண்டு போனால், இருக்கை அமைப்பே குடும்ப கட்டுப்பாடு ரீதியில் ஆச்சரியப் படுத்தியது.அதாவது ஒரு சீட்டுக்கும் அடுத்த சீட்டுக்கும் நடுவில் போதிய இடைவெளி.ஏகப்பட்ட லெக் ரூம். ஏர் ஹோஸ்டட்ஸ் ராசி இல்லை என்று முடிவு கட்டியே போனால் ”ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ” என்று அம்சமாய் புது ரெக்ருட். (யோவ்...லிஸ்ட்ல இல்லாததும் டிக்குன்னு இத சொல்லல..சொல்லிட்டேன் ஆமா). சீட்டெல்லாம் ரஜினி ஸ்டைலில் மூன்று மூன்றாக பிரித்திருந்ததால் நான் மட்டும் தனியாக உட்கார நேர்ந்தது. ப்ளைட்டில் குடுத்த சாப்பாடு கேபிள் பாஷைல சொல்லனும்னா ”டிவைன்”.

இரண்டாவது மகள் பாசந்தியை வேஸ்ட் செய்கிறாளே என்று உட்கார்ந்த இடத்திலிருந்தே “உஸ் உஸ்ஸ்ஸ்” என்று ஜாடை மாடையாக அடி போட்டுக்கொண்டிருந்தேன். நான் கர்ம சிரத்தையாய் பாசந்தியை கேட்டுக்கொண்டிருந்ததை பின் வரிசை வெள்ளைக்கார மாமா வெட்கமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார். பார்த்தால் கூட பரவாயில்லை “தம்பி நான்  பாசந்தியை தொடவே இல்லை, பாலிதீன் பாக்கிங்கோட அப்படியே இருக்கு வேணுமா?” என்று வெட்கமே இல்லாமல் கேட்டார். நானும் வேறு வழியில்லாமல் வாங்கி சாப்பிட்டேன். அது தீர்ந்தவுடன் இரண்டாவது மகள் பாசந்தியை வேஸ்ட் செய்கிறாளே என்று நான் திரும்ப “உஸ்ஸ் உஸ்” என்று ஆரம்பித்ததை நல்லவேளை அந்த வெட்கம் கெட்ட வெள்ளைகார மாமா கவனிக்கவில்லை.

போய் இறங்கிய முதல் இரண்டு நாட்களில் கரும்பு சூஸ், பேல் பூரி,ஆவின் ப்ளேவேர்வர்ட் மில்க், ஸ்வீட் பான், கொத்துபரோட்டா,பருப்பு போளி, சப்போட்டா மில்க் ஷேக், பரோட்டா குருமா என்று வகை தொகையில்லாமல் வரிசை கிரமம் பார்க்காமல் வழியில் தென்பட்டதை எல்லாம் பகாசுரேஷ்வரா செய்ததில் `சார் சோமாலியால வெயில் எல்லாம் எப்படி...நம்மூர் மாதிரி தானா?` என்று ஆட்டோக்காரர் அன்பாக விசாரித்தார். ”நாளைக்கு கண்டிப்பா கடை தொறப்பேன் சார்” என்று கடைக்காரர் கெஞ்சியும், பாதி ஷட்டர் போட்டிருந்த கடையை திறக்கச் செய்து, வாயில் அரைத்துக் கொண்டிருந்த ஸ்வீட் பானை பாதியில் துப்பிவிட்டு நான் ஆவின் ப்ளேவர்ட் மில்க் குடித்ததை ஆட்டோக்காரர் ஒரு வேளை பார்த்திருப்பாரோ என்று தங்கமணிக்கு டவுட்டு.

முதல் நாள் பாண்டி பஜாரில் பேரம் பேசி வாங்கவேண்டுமே எங்கே ஆரம்பிப்பது என்று முழித்துக் கொண்டிருந்த போது ஒருவர் பெல்ட் வாங்க அவருடனே ஒட்டிக் கொண்டேன். அவர் வாங்கிய விலையை கவனித்து நான் கேட்டபோது அதையும் விட பத்து ரூபாய் குறைத்துக் கொடுத்த போது எனக்கு மயக்கமே வந்தது. சென்னை மால்கள் என்னை மாதிரி ஃபாரின் பிச்சைகாரர்களுக்கு எட்டாக் கனியாகிக் கொண்டிருக்கிறது. இந்த முறை என்ன தெய்வ குத்தமோ தெரியவில்லை நவநாகரிக யுவதிகள் அவ்வளவாக தென்படவில்லை. ஐநாக்ஸில் ஏர்போர்ர்ட்டை விட செக்யூரிட்டி பலமாய் இருக்கிறது. பையிலிருந்த எக்ஸ்ட்ரா பாட்டரியை வாங்கிக் கொண்டார்கள. “பைல முறுக்கு வைச்சிருக்கேன் அதொன்னும் பிரச்சனையில்லையே” என்று நக்கலாய் கேட்டது தப்பாய் போய்விட்டது, அதையும் வாங்கிவைத்துவிட்டார்கள் வெளி உணவு கூடாதாம். தெரிந்து கொண்டது நல்லதாய் போனது. திருட்டுத் தனமாய் கடத்திக் கொண்டு போன மைசூர் பாகு கூட கொஞ்சம் இனித்தது. முனி-2 தியேட்டரில் பெண்கள் வீல் வீல் என்று அலறிக் கொண்டே ரசித்துப் பார்த்தார்கள். தேவதர்ஷினி மாமியார் கோவை சரளாவை அடிக்கும் காட்சிகளில் பெண்கள் விசில் அடித்து ஆராவாரம் செய்கிறார்கள். தியேட்டர்கள் எல்லாம் அருமையாக இருக்கின்றன. இன்னொரு தியேட்டரில் சூச்சா போகுமிடத்திலும் டீ.வி வைத்திருக்கிறார்கள் என்று அக்கா பையன் சொன்னான். படம் அங்கேயே ஆரம்பித்துவிடுமா என்று கேட்டதில் இல்லை வெறும் அட்வர்டைஸ்மண்ட் மட்டும் தான் என்று பதில் வந்தது. தப்பித்தது. “உலகம் போகிற ஸ்பீடுல இன்னும் கொஞ்ச நாள்ல ஒன்னுக்கு கூட ஒழுங்கா போகவிடமாட்டான் ” என்று சீனாதானா மாமா சொன்னது தான் நியாபகத்துக்கு வந்தது. தீர்க்கதரிசி.

சென்னை வாசத்தின் சந்தோஷம் பதிவர் சந்திப்பு . பாலபாரதியும் இன்னும் சில வலைபதிவர்களும் சந்திப்பு விஷ்யத்தைப் பரப்பி நிறைய வலையுலக நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்துல்லா எல்லாருக்கும் பிரியாணி ஏற்பாடு செய்தது சந்திப்பின் ஹைலைட். மனிதர் கொஞ்சம் கூட அலட்டலே இல்லாமல் இனிமையாக இருக்கிறார். கார்கி,யுவகிருஷ்ணா,சுரேகா மற்றும் பாலபாரதி முறைவாசல் வைத்து எல்லோரையும் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். நான் பெயரை நியாபகம் வைத்துக் கொள்ளும் லட்சணம் எனக்குத் தெரியுமென்பதால் அமைதியாய் இருப்பதே நல்லது என்று சமத்தாய் ஓரமாய் உட்கார்ந்து கொண்டேன். தமிழ் அமுதன் மொபைலில் படமெடுத்தே கலாய்த்துக் கொண்டிருந்தார்.மோகன் குமார், ஆதி, எறும்பு ராஜகோபால்,ப்ரதீப், எல்.கே,ராம்ஜி யாஹூ என்று வலையில் பேசியிருந்த பல பேரை சந்திக்க முடிந்தது சந்தோஷமாய் இருந்தது. வந்ததில் பாதி பேர் திருநெல்வேலி மாவட்டம் என்பது ஸ்பெஷல் சந்தோஷம் :). என்னங்க இப்போல்லாம் வலைப்பதிவுகளில் சண்டையே இல்லாம சப்புன்னு இருக்கே ஏதாவது செய்யக்கூடாதான்னு வருத்தப்பட்டதில் கூகிள் பஸ் தான் இப்போ அதுக்கெல்லாம். வந்து ஜோதில ஐய்க்கியமாகிடுங்கன்னு அன்போடு வரவேற்றார்கள்.

ரிட்டர்ன் வரும் போது டெல்லி ஏர்போர்ட்டில் க்யூவில் அடுத்ததாய் நின்று கொண்டிருந்த தமிழருக்கு தமிழ் ப்ளாக் பற்றி தெரிந்திருந்தது.அடுக்காய் கேள்வியெல்லாம் கேட்டார். நாலாவது கேள்வி “அப்போ நீங்க இது வரைக்கும் எத்தன புஸ்தகம் போட்டிருக்கீங்க?” - ஆஹா சரிதான்.

Friday, July 15, 2011

அட்வைஸ்

"என்னடா என்னையே பார்த்துண்டு இருக்க.."

"என்னை என்ன பண்ணச் சொல்ற சித்தி..?"

"தலகீழ நிக்கிறான்டா..கொஞ்சம் புத்தி சொல்லேன். நீ சொன்னா கேப்பான்னு தோணறது. மேலத் தெரு நாராயணன் அவா ஆபிஸ்ல சொல்லி ஆபிஸ் பாய் உத்தியோகம் போட்டுக் குடுக்கச் சொல்றேங்கிறார் ஆனா பத்தாவதாவது ஜஸ்ட் பாஸ் பண்ணச் சொல்லுங்கோங்கிறார்"

"ம்..."

"நன்னா படிக்காட்டாலும் பாஸாவது பண்ணிண்டிருந்த பிள்ளை...இப்போ நாலு வேளையும் சினிமா கொட்டகையே கதின்னு இருக்கான்...நீ சித்த அறிவுரை சொல்லப் பிடாதா..."

"நல்ல ஆளப் பார்த்து தான் சொல்லச் சொன்னேள் போங்கோ..இவரும் விட்டா டிபனையும் காப்பியையும் கொட்டகைக்கு கொண்டு வா சொல்லிடுவார்"

"நீ கொஞ்சம் வாய மூடறியா...நம்ம பஞ்சாயத்த அப்புறம் வைச்சுக்கலாம்"

"நோக்கு தெரியாது கிரிஜா...இவன் அஞ்சு வயசுல எட்டாந் திருநாள்ல பச்சை பலூனை பிடிச்சிண்டு சேப்பு பலூன் தான் வேணும்னு அழுதுண்டு நின்னான்...நான்  போய் பலூன்காரன சண்டை பிடிச்சு மாத்திக் குடுத்தேன். எவ்வளவு பண்ணியிருக்கேன் இவனுக்கு...கும்மோணத்துல கிளப் காப்பிய தொண்டைல விடறதுக்குள்ள அவசரமா வருதுன்னு ட்ராயரோட...போய்"

"இப்ப என்ன தான் சொல்றான்.."

"சினிமால சேரப் போறானாம்... எல்லாம் என் தலையெழுத்து. எம்புள்ளை ப்ளஸ் டூ பாஸ் பண்ணுவான்னு நினைச்சேன்.. ஜம்புவோ சிம்புவோ...அவாள்லாம் படிச்சிருக்காளா...இன்னிக்கு கோடி கோடியா வாங்கலையாங்கிறான்..என்னத்த சொல்ல இவன் அப்பா மிராசுதாரா..இல்ல ஜெமினி கணேசனா. ஏதோ அவர் வேலைல இருக்கும் போதே போய் சேர்ந்ததுல எனக்கு கால்வயித்து பென்ஷன் வரது. எனக்கப்புறம் இவனுக்கு அதுவும் வராது"

"பாவம் சித்தி இவ்வளவு சொல்றாளே.. கொஞ்சம் பேசித்தான் பாருங்கோளேன்...நீங்க சொன்னா கேப்பானோ என்னம்மோ"

"எல்லாம் கேப்பான்...கேக்காம எங்க போறான். பலூன்காரன் சேப்பே இல்லைமான்னு சாதிச்சான்...விட்டேனா..?. கும்மோணத்துல..வாளியே இல்லை கக்கூஸுல..."

"சாயங்காலாம் வரச் சொல்லுங்கோ நான் பார்த்து பேசறேன்... பேசறதுக்கு வரச்சொன்னேன்னு சொல்லாதீங்கோ திசைக்கும் திரும்ப மாட்டான். புதுப் பட ப்ரிவியூ ஷோக்கு ரெண்டு டிக்கெட் இருக்காம் கூப்பிட்டேன்னு சொல்லுங்கோ"


"முந்திரி கொத்து பண்ணி குடுத்து விடறேன். தீர்க்காயுசா இருப்ப. அந்த வெங்கடாஜலபதி தான் நல்ல வழியக் காட்டணும்"

"நிஜமாவே ப்ரிவியூ ஷோக்கா கிளம்பறேள்? நீங்க சித்திட்ட சும்மா பேச்சுக்குத் தான் சொன்னேளோன்னு நினைச்சேன்"

"இல்ல நிஜமா ரெண்டு டிக்கெட் இருக்கு. கூட்டிண்டு போய் பேசி பார்க்கறேன். இங்க பேசினா மண்டய மண்டய ஆட்டிட்டு கல்தா குடுத்துடுவான். ப்ளாஸ்க்ல காப்பி போட்டுத் தாயேன்"

"ம்ஹுக்கும் அதொன்னு தான் குறைச்சல்"

"அதானே பார்த்தேன்..என்னம்மோ டெய்லி ப்ளாஸ்குல காப்பி போட்டு குடுக்கற மாதிரி ஊரெல்லாம் தம்பட்டம் அடி"


"படம் முடிய இவ்வளவு நேரமா...ரொம்ப நேரம் புத்தி சொன்னேளா..? பாஸ்கி என்ன சொல்றான். திரும்ப படிக்க போறேங்கிறானா? "

"போவான். டுடோரியல் காலேஜ்ல சேர்த்துவிடறேன்னு சொல்லியிருக்கேன்"

"என்னது நிஜமாவா..."

"ம்ம். "

"இதேது ஊர்பட்ட அதிசயமா இருக்கு.. என்ன சொன்னேள்..எப்படி ஒரே நாள்ல மாறினான்? "

"ம்.. "

"அதான் எப்படின்னேன்..ம்ம்..அதென்ன புஸ்தகம் கையில"

"..கேட்டுண்டே இருக்கேன்... ஒன்னும் சொல்லாம அலமாரில வைக்கறேளே..? என்ன புஸ்தகம்ன்னு கேட்டேன்"

"எல்லாம் நல்ல புஸ்தகம் தான்"

"ப்ச்..இப்போ காட்டப் போறேளா இல்லையா.."

"தொனத் தொனங்காதியேன்...ஃபிலிம் இண்ஸ்டியூட் ப்ராஸ்பெக்டஸ், டைரக்‌ஷன் கோர்ஸ் இருக்காம். அடுத்த இயக்குனர் சிகரம் நீங்க தான்னு பாஸ்கர் என்ன ஒரே புகழாரம். என்னோட திறமைய நன்னா தெரிஞ்சு வைச்சுண்டிருக்கான். பையன் கெட்டிக்காரன்.  இப்போ கோர்ஸுக்கு அப்ளிகேஷன் வாங்கறாளாம், உள்ள அவனுக்கு ஆள் தெரியுமாம். நானாச்சு உங்கள சேர்த்துவிடறேன்னு சொல்லியிருக்கான். நாளைக்கு பத்து மணிக்குள்ள ஃபாரத்த பூர்த்தி பண்ணிக் குடுக்கணும்"

"....?"

Thursday, July 14, 2011

கன்னா பின்னா

வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்ன்னு சொன்னால் என்னம்மோ எங்க மாமியாரப் பத்தி நான் ஜாடை மாடையா பேசறேன்னு தங்கமணியோடு அம்மா காண்டாகிவிடுவார் என்பதால் எந்த பழமொழியும் சொல்லாமல், இந்த வருடம் நிறைய எழுத வேண்டும், புக்கர் ப்ரைஸ் வாங்க வேண்டும் என்ற பக்கத்து வீட்டு வெள்ளைக்கார மாமியின் ஆசையை தோசையாக்கி, ப்ளாகிலிருந்து நான் ரொம்ப நாள் காணாமல் போனதற்க்கு முழு பொறுப்பேற்றுக்கொண்டு, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்ளுமாறு சந்தன மாரியப்பனைக் கேட்டுக்கொள்கிறேன்.போதும் நிறுத்திகிறலாம். சில பேர திருத்த முடியாது. சந்தன மாரியப்பனை சொல்லிக் குற்றமில்லை...இந்த சமூகத்தை தான் சொல்லவேண்டும்.

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னேன்னு ஒரு மகான் சொல்லி இருக்காராம். பரதேசி அவன் கண்டி கைல மாட்டினான்..கைமா தான். பின்ன என்னங்க.. நீங்களே சொல்லுங்க நானே ரொம்ப நாள் கழிச்சி இங்க வந்து அட்டெண்டன்ஸப் போட்டா அடுத்த வாரமே இந்தியா ட்ரிப்புக்காக திரும்ப ஒரு லாங் லீவு போடுடான்னா மனுஷனுக்கு எரிச்சல் வருமா வராதா. சில சமயம் சமோசா காரமா இருந்தாலும் அதுலயும் முந்திரி பருப்பு போட்டிருப்பாங்க பாருங்க மனுஷ வாழ்க்கையும் அத மாதிரி தான். இந்த இந்தியா ட்ரிப்பில் நிறைய வலையுலக நண்பர்களை சந்திக்கனும்ன்னு இருக்கேன். இந்த ஒரு சந்தோஷத்துக்காகவே சந்தன மாரியப்பனை  பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடலாம்னு முடிவு எடுத்திருக்கேன்.(என்னாது யாரு சந்தன மாரியப்பனா...என்னக் கேட்டா..யாருக்குத் தெரியும்).

விடுங்க பதிவு ஒரே காராசாரமா போகுது கொஞ்சம் லைட்டா யோசிக்கலாம். ஊர்ல எங்க வீட்டுல வர்ற எல்லா லெட்டரையும் எங்க மாமா ஒரு கம்பில சொருகி ஆர்க்கைவ் பண்ணுவார். இந்த கம்பி ஆர்க்கைவ் மாடில புழுதியோட இருக்கும். தூக்கம் வராத மத்தியான வேளைகளில் “மாடிக்குப் போனா தான் கவனமா படிக்க முடியும்”ன்னு சொல்லிட்டு “நாம வடை குடுத்த சீனியர் பொண்ணு வித் லவ்வுன்னு அனுபின லெட்டர் மாதிரி மாமாவுக்கு எதாவது சுவாரசியமா லெட்டர் வந்திருக்கான்னு இந்த கம்பில இருக்கற பழைய லெட்டர்களையெல்லாம் நோண்டிக் கொண்டிருப்பேன். முக்கால் வாசி லெட்டர் “சுவாமி சுப்பிரமண்யம் சகாயம்”ன்னு ஆரம்பித்து “தீபாவளி, கார்த்திகை,பொங்கல் வகைக்காக ருபாய் பதினொன்று மணியார்டரில் தனியாக அனுப்பியுள்ளேன்,பெருமையுடன் பெற்றுக்கொண்டு குடும்பத்தையும் குழந்தைகளையும் ஆசிர்வாதம் செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்”ன்னு முடித்திருக்கும், இல்லையென்றால் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அன்பர்களை நன்கொடை அனுப்பச் சொல்லி குங்குமம் வீபூதி மணக்க வேண்டிக் கேட்டுக்கொண்டிருக்கும். இதுக்கு பித்தோகோரஸ் தியரமே எவ்வளவோ மேல் என்று படிக்கப் போய்விடுவேன்.

ஒரே ஒரு முறை மட்டும் வேறு ஒரு விளக்குப் பிறையில் பாலிதீன் கவரில் சில போஸ்ட் கார்டுகள் இருப்பதைப் பார்த்தேன். எடுக்கப் போகும் சமயத்தில் மாமா வந்துவிட படக்கென்று பிடுங்கி பரணில் வைத்துவிட்டார். அதையெல்லாம் எடுக்காதே என்று ரெண்டுங்கட்டானாய் ஒரு ஆர்டர் வேறு போட்டுவிட, எனக்கு சிரங்கை சொறிந்து விட்ட மாதிரி அரிக்க ஆரம்பித்து விட்டது. மாமியும் வேறு சேர்ந்து கொண்டு அதையெல்லாம் தொடாதேன்னா தொடாதேன்னு கூடுதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க, இங்கயும் ஏதோ வடை மேட்டர் இருக்கு என்று எனக்கு கன்பஃர்ம் ஆகிவிட்டது. பின்னொரு நாளில் தெருவில் நடக்கும் கல்யாணத்திற்கு எல்லோரும் போயிருக்க,அவசரமாய் பாலிதீன் பையை பிரித்தால் முத்து முத்தான கையெழுத்தில் “வெங்கடாசலபதி துணை” என்று ஆரம்பித்து இந்த லெட்டரை இருபது பிரதி எடுத்து அடுத்த ஐந்து நாட்களுக்குள் அனுப்பவேண்டும் என்று செல்லமாய் கேட்டுக் கொண்டு,  அப்படி பிரதி எடுத்து அனுப்பாத ஒருத்தர் வீட்டில் பாம்பு வந்துவிட்டதாயும், கிழித்துப் போட்ட ஒருத்தரை எருமைமாடு முட்டிவிட்டதாகவும், பிரதி எடுத்து அனுப்பியவருக்கு அடுத்த வாரமே மாட்டுக் கொட்டகையில் ட்ரங்க் பொட்டி நிறைய தங்கம் கிடைத்து ரெண்டாவது கல்யாணத்திற்கு பெண்குடுக்க க்யூ நிற்பதாகவும் ஏகப்பட்ட மிரட்டல்கள். எங்கள் தெருவில் ஏகப்பட்ட எருமை மாடுகள் இருப்பதால் மாமா கிழித்து எறியாமல் பத்திரமாய் வைத்திருக்கிறார் என்று எண்ணிக் கொண்டேன்.

நிற்க. சமீபத்தில் பேஸ்புக்கில் இதே ரீதியில் ஒரு ஸ்டேடஸ் மெசேஜ். “இதை உங்கள் ஸ்டேடஸ் மேசேஜாகப் போட்டால் ஏகப்பட்ட அதிர்ஷட்ம் கொட்டும் என்றும் போடாவிட்டால்...” -- ஸ்ப்ப்ப்ப்ப்பா...ஏகப்பட்ட பேர் அதை ஸ்டேடஸாக வேறு போட்டிருந்தார்கள். எனக்கு ரொம்பவே அதிர்ச்சியாய் இருந்தது. இதை எதுக்கு சொல்கிறேன் என்றால் காலத்திற்கேற்ப டெக்னாலஜி மாறும் ஆனால் மனிதர்கள் மெண்டாலிட்டி மட்டும் மாறவே மாறாது.

Thursday, May 19, 2011

ஜில்பான்ஸ் – 190511

சமீபத்திய சினிமா
கொஞ்ச நஞ்சமில்லை ஐந்து வாரங்கள் (ஹீ ஹீ சரி மூன்று வாரங்கள்) வேலை பின்னிப் பெடலெடுத்துவிட்டது. ரொம்ப அலுப்பாயிருக்கும் போது சாப்பாட்டுக்கு அப்புறம் சினிமா போனால் சொஸ்தமாகிவிடும் என்று டாக்டர் சொல்லி இருக்கிறாரே என்று சினிவேர்ல்ட் இணையத்தைப் பார்த்து அரக்கப் பரக்க அவசரமாய் போய் "சார் எச்சூஸ்மீ ஐ அம் தி அர்ஜென்ட்"ன்னு உட்கார்ந்தால் தலைப்பு ஜிலேபி ஜிலேபியாய் இருந்தது. சரி இது ஒருவேளை ரொம்ப அட்வான்ஸ்ட் டைட்டில் டிசைன் போல நமக்குத் தான் புரியவில்லை என்று பார்த்தால் எல்லோரும் மலையாளத்தில் சம்சாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எந்தா இது குருவாயூரப்பா !! நான் தான் தியேட்டர் மாறி வந்து உட்கார்ந்துவிட்டேனோ என்று வாயிலில் போய் என்ன சினிமா என்று திரும்பப் பார்தால் உறுமி என்று ஆங்கிலத்தில் போட்டிருந்தார்கள். "டேய் தமிழன அப்பரஸ் பண்ணுறீங்களாடா...கூப்பிடுடா தியேட்டர் மேனேஜர"  என்று சவுண்டு விடுவதற்கு முன்னால் எதற்கும் தங்கமணியைக் கூப்பிட்டு கேட்போம் என்று கேட்டதில் உறுமி ஒரிஜினல் அக்மார்க் மலையாளப் படம் தான் என்று கன்பர்ம் செய்தார். அதற்குள் ஜெனிலியா, வித்யா பாலன், நித்யா மேனன் என்று டைட்டில்ஸ் ஆங்கிலத்தில் போட்டார்கள். இந்த வாரம் எதிர்பாரா சந்தோஷம் மும்மடங்கு வாய்க்கும்ன்னு இதைத் தான் தினமலர்ல சொன்னாங்க போல என்று சேரநன்னாட்டிளம் பெண்களுடனே செட்டில் ஆகிவிட்டேன்.

சந்தோஷ் சிவன் கேமிரா மற்றும் இயக்கம். வித்யா பாலன் குனிந்து நிமிர்ந்து ஒரு ஐயிட்டம் சாங் ஆடுகிறார். கஷ்ட காலம் தொப்பையை வைத்துக் கொண்டு இப்படி ஆடுவதற்கு பதில் புடவையை உடுத்திக் கொண்டு பூப்போல சிரித்தாலே நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நித்யா மேனன் மனதையும் அள்ளி வூட்டுக்கு வந்து கூகிளிலும் சித்தித்தார், தித்தித்தார் (கவித கவித). ஜெனிலியா இடுப்பு கச்சத்தை ட்ராயர் மாதிரி அணிந்து கொண்டு பாய்ந்து பாய்ந்து சண்டை போடுகிறார். ப்ரித்விராஜ் ஆர்ம்ஸ் காட்டுகிறார். ஜெனிலியா அவர் பக்கத்தில் கோழிக் குஞ்சு மாதிரி இருக்கிறார். வாஸ்கோடகாமா காலத்து நல்ல களம். திரைக் கதை தான் கொஞ்சம் வள வளவென்று ஆகிவிட்டது போல் தோன்றியது. கலையும் கேமிராவும் குடுத்த காசுக்கு வசூல். மூன்று கதாநாயகிகள் பொங்கல் போனஸ். வசனம் புரியவில்லை ரெண்டாந்தரம் போனால் தான் புரியும் என்று வீட்டில் வாய்தா வாங்குவதற்குள் படத்தை தூக்கிவிட்டார்கள். நல்ல படங்களை நாம் ஆதரிக்கும் லட்சணம் இவ்வளவு தான்.

அடுத்த நாள் லைப்ரரிக்கு போனால் இந்த வாரம் சந்தோஷ் சிவன் வாரம்ம்ம்ம்ம்ம்  என்று "Before the Rains" டிவிடி முழித்துக் கொண்டு இருந்தது. அதில் நந்திதா தாஸ் வெள்ளைக்காரனுடன் ஜல்ஸா சீன் எங்கேயோ பார்த்த நியாபகம் கீற்றாய் வந்து தொலைக்க...என்னா சினிமேட்டோகிராபி தெரியுமா... பார்த்து கத்துக்க ஏராளமா இருக்குன்னு லைப்ரரியனிடம் சொல்லி எடுத்துவந்தேன். படம் ஆரம்பித்து ஐந்தாவது நிமிடமே நான் சொன்ன சினிமேட்டோகிராபி சீன் வந்து விட்டது. ஆனால் படம் ரொம்ப சிம்பிளான நேர்கோடு கதை. புதுமை பண்ணுகிறேன் பேர்வழி என்றில்லாமல் அருமையாய் எடுத்திருக்கிறார். நந்திதா தாஸ் நறுக்கு தெரித்தாற் போல அட்டகாசமாய் நடிக்கிறார். எல்லா ஏமாற்றப்பட்ட அழகான கதாநாயகிகளும் கடைசியில் துறவறம் போவது மாதிரி பிரம்மச்சாரினியாய் ஆவது தான் கொஞ்சம் க்ளீஷேவாக இருக்கிறது. படத்துலயாவது இவங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையக்கூடாதா.

இந்த வார படிப்ஸ்சித்திரங்களும் கொஞ்சும் சினிமாவும் - முனைவர் கு.ஞானசம்பந்தன் எழுதிய புத்தகம். தமிழ் இலக்கியப் பாடல்களையும், சினிமா பாடல்களையும் அவர் மாணவர்களோடு சுற்றுலா போகும் இடங்களில் பொருத்தி மேற்கோள் காட்டி ஜாலியாக கொண்டு போயிருக்கிறார். ரொம்ப வித்தியாசமான சுவாரசியமான புத்தகம். இன்னும் முடிக்கவில்லை பாதி தான் படித்திருக்கிறேன்.

இந்த வார கேள்விரொம்ப நாளாயிருந்தாலும் Kookaburra “ஆம வடைக்கு ஏன் அப்படி பெயர் வந்தது” என்று கேட்ட கேள்வியை மறக்கவில்லை. இதை கொஞ்சம் நோண்டிப் பார்த்ததில் இது காரணப் பெயராய் இருக்கலாம் என்று தான் தோன்றுகிறது. ஆமையின் ஓடு மாதிரி இந்த பருப்பு வடையின் வெளிப்புறம் இருப்பதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்று பக்கத்து வீட்டுப் பாட்டி சொல்லுவதாய் புருடாவுட்டிகீறேன்பா :)) தப்புன்னு தெரிஞ்சவங்க சொன்னா கன்னத்துல போட்டு திருத்திக்கறேன்.

இந்த வார போஸ்டர்
தற்போது குறும்படத்திற்க்கு சின்னதாய் ஒரு தரமான நல்ல டீம் அமைந்திருக்கிறது. இந்தியா, யூ.எஸ், யூ.கே என்று மூன்று நாடுகளிலிருந்தும் வெர்ட்சுவலாய் வேலை செய்கிறோம். தொடர்ச்சியாய் குறும்படங்கள் எடுப்பதாய் திட்டம்.  அடுத்த படம் ஒரு காமெடி என்று ஸ்கிரிப்ட் லெவலில் இருக்கிறது. ஏற்கனவே அஃபீஷியலாய் ப்ரொடெக்க்ஷன் கம்பெனி ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய உபகரணங்களும் வாங்கிக் கொண்டிருக்கிறோம். தற்போது போட்டோஷாப், எடிட்டிங், சவுண்டு மற்றும் மிக்ஸிங் தவிர மிக முக்கியமாய் சினிமேட்டோகிராஃபிக்கு ஆட்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். இதில் சினிமேட்டோகிராஃபிக்கு யூ.கேவில் இருக்கவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. மற்றவர்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். சம்பளமாய் எதுவும் தர இயலாத இந்த நிலையில் ஆர்வமும் passion-ம் இருப்பவர்களுக்கே இவை பொருத்தமாய் இருக்கும். பெரிய பிராஜெக்ட் எடுக்கும் பட்சத்தில் வரும் வருவாயை பகிர்ந்தளிக்கும் வாய்ப்பிருக்கிறது. தற்போது ஒரு கலாசலான டீம் என்ற நிலையிலேயே இருக்கிறோம். பிஸினெஸ் ப்ளானோடு காம்பிளானையும் கலக்கிக் குடித்தால் சீக்கிரமே கார் காரேஜில் ஆரம்பித்த கூகிள் மாதிரி பெரிய கம்பேனியாக வளர வாய்ப்பிருப்பதாக கும்மிடிப் பூண்டி ஜோஸ்யர் சொல்லி இருக்கிறார். (சம்பந்தப்பட்ட) தொழில் தெரிந்த ஆர்வலர்கள் தொடர்பு கொள்ளவும் (r_ramn at yahoo dot com)ஆர்வமிருக்கும் சினிமா கல்லூரி மாணவர்களும் தொடர்பு கொள்ளலாம்.

Thursday, May 05, 2011

அவசர நோட்டீஸ்

வழக்கம் போல் காணமல்போனேஸ்வராகிவிட்டேன் என்று எண்ணாதீர்கள். சில பல அல்ல -  பல பல வேலைகள். முத்தாய்ப்பாக வருகிற மே 7ம் தேதி மிலடன் கீன்ஸ் "க்ளப் சரிகமா" சென்னை சிவானந்த குருகுலத்திற்கும்,  இங்கே இருக்கும் Willen Hospiceகாகவும்  ஒரு சேரிட்டி இசை மாலைப் பொழுது நடத்துகிறார்கள். அதற்கு சன் டிவி மற்றும் விஜய் டீவி முன்னாள் வி.ஜே ராதிகாவுடன் இணைந்து நிகழ்ச்சி தொகுத்துவழங்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். (எனது நிகழ்ச்சி தொகுப்பை விடுங்கள்) இந்த சேரிட்டி -  நல்ல விஷயத்திற்காகவாவது இங்கே யூ.கேவில் இருக்கும் நண்பர்கள் யாராவது கலந்து கொள்ள முடியுமென்றால் அன்போடு அழைக்கிறேன்.
அடுத்த வாரத்திலிருந்து திரும்ப வந்தேஸ்வரா

Tuesday, April 19, 2011

உடற்பயிற்சி

சுமார் இருபத்தியோரு வருடங்களுக்கு முன்னால் நான் இரண்டு மாத குழந்தையாய் இருந்த போது, குண்டு குண்டுன்னு பார்த்தாலே தூக்கிக் கொள்ளும் மாதிரி இருப்பேன் என்று வீட்டில் உள்ள இளம்பிராய ஃபோட்டோக்கள் சொல்லிக் கேள்வி. அப்படி குண்டு குண்டுன்னு இருந்தவன், அப்புறம் பூசின மாதிரி ஆகி அப்புறம் ரொம்பவே ஸ்லிம ஆகி காலேஜ் படிக்கும் போதெல்லாம் ரெண்டு மூனு சட்டையைப் போட்டுத் தான் உடம்பை தேற்றி இருக்கிறேன்.

ஊரில் கன்னுக்குட்டி கணேசன், முந்தின நாள் ராத்திரி ஊற வைத்த கொண்டக் கடலையை வாயில் போட்டு ப்ரீத்தி மிக்ஸி மாதிரி பதினைந்து செகண்டில் நைஸாய் அரைத்து விட்டு தீர்த்தபதி பள்ளி க்ரவுண்டில் பத்து தரம் ஓடி வருவான். அதற்கப்புறம் மஸ்தான் ஜிம் என்று போர்டு போட்டிருக்கும் இடத்தில் இவனை மாதிரியே நாலு பேர் கொண்டக் கடலையை அரைத்து விட்டு பெரிய பெரிய கர்லா கட்டைகளை சுத்திக் கொண்டிருப்பார்கள். அந்த இடம் வழியாகப் போனாலே எனக்கு சினிமாவில் "மச்சி இன்னிக்கு முடிச்சிருவோமா" என்று வத்தக் குச்சிப் பெண்ணை நாலு பேர் வசனம் பேசி,  தடிமாடு மாதிரி விழுந்து புடுங்கும் காட்சி தான் நியாபகத்துக்கு வரும்.

"அவாளுக்கெல்லாம் குஷ் குஷ்ன்னு உடம்பிருக்கு, எக்சர்சைஸ் பண்றா. உனக்கு சதைப் பத்தே இல்லியே இதுல என்னத்த கட்டை சுத்த போற? மாமிட்ட சொன்னா கொண்டக் கடலைய பேஷா சுண்டல் பண்ணித் தருவா முதல்ல சாப்பிட்டு உடம்ப தேத்து " என்று மஸ்தான் ஜிம் பத்து ரூபாய் கட்டணத்திற்காக மாமா தடா போட்டுவிட்டார். ஊர்ல அவன் அவன் நாட்டுக் கட்டையா பார்த்து சுத்துறான் ஒரு கர்லா கட்டைய சுத்தறதுக்கு இத்தனை அடக்குமுறையா என்று சோகமாகி விட்டது.

என் ஆதங்கதைப் பார்த்த மாமி "ஏண்டா கட்டைய தான் சுத்தனமா...கல்ல சுத்தப் பிடாதான்னு" வழிகாட்ட...விட்டால் வயசான பாட்டிகளுடன் ஆலமரத்தை சுத்தச் சொல்லிவிடுவார்கள் என்று  நானும் "கண்ணா எத சுத்தறோங்கிறது முக்கியமில்ல எப்படி சுத்தறோங்கிறது தான் முக்கியம்" என்று தூணிடம் டயலாக் பேசிவிட்டு ஆட்டுக் கல்லை தூக்கி தோளை சுற்றி சுத்த ஆரம்பித்தேன். இந்த உடற்பயிற்சியில் பெரிய பிரச்சனையே முதல் நாள் இருக்கும் ஆர்வக் கோளாறு தான். அடுத்த நாளே ஆர்னால்டுக்குப் போட்டியாய் களத்தில் இறங்கவேண்டும் என்று நான் ஆட்டுக் கல்லை சுத்திய சுத்தில் உளுந்தைப் போட்டிருந்தால் ரெண்டு ஊருக்கு தோசை வார்த்திருக்கலாம் அவ்ளோ சுத்து. 


அடுத்த நாள் உடம்பை சுத்தமாக அசைக்க முடியவில்லை. கண்ணாடியைப் பார்க்கக் கூட கையை தூக்க முடியவில்லை. தோள் பட்டை போயே போயிந்தி.
 கதக்களி மாதிரி கண்ணை மட்டுமே சுத்த முடிந்தது.  "சொன்னதக் கேக்காம ஆட்டுக் கல்ல சுத்தினா இப்படித் தான் ஆட்டுக் குட்டி மாதிரி பம்ம வேண்டி இருக்கும்" என்று கண்ணுக்குட்டி கணேசனுக்கு ஒரே கெக்கலிப்பு.  கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு திரும்ப ஆட்டுக்கல்லை சுத்தலாம் என்று ஒரு வாரம் ஒத்திவைப்பு தீர்மானம் போட்டு, திரும்ப ஆரம்பித்தது, ஒரேடியா எக்சர்சைஸ் பண்ணிணா உடம்புக்கு ஆகாது என்று ஒரு நாள் விட்டு ஒரு நாளாகி, அப்புறம் வாரம் ஒரு முறையாகி இருவாரத்திற்கு ஒரு முறையாகி கடைசியில் ஆயுத பூஜைக்கு சந்தன குங்குமப் பொட்டு இட்டு பூஜை செய்யுமளவுக்கு உடற்பயிற்சி ரொம்ப அன்யோன்யமாகிப் போனது.

இருந்தாலும் அவ்வப்போது டீ.வியில் ஒரு கட்டுமஸ்தான இளைஞ்ர் ஷேவ் செய்த படி ஆர்ம்ஸ் காட்டுவார், அவர் பக்கத்திலேயே அழகான ஸ்லீவ்லெஸ் யுவதி ஒருவர் இளைஞரின் கன்னத்தோடு கன்னம் இழைத்து எனக்கு அடிக்கடி உடற்பயிற்சியின் தாத்பரியத்தை உணர்த்துவார். நானும் "சொக்கா சொக்கா எனக்கில்லை எனக்கில்லை"ன்னு ஏக்கத்தோடு ஆட்டுக்கல்லைப் பார்ப்பேன்.

அதற்கப்புறம் நான் உடற்பயிற்சி கொஞ்சம் செய்தது - கல்யாணத்திற்கு கொஞ்ச நாட்கள் முன்பு. "சட்டையக் கழட்டி மண்டபத்துல உட்காருனும்ல" என்று நான் வெளி உலகுக்கு சமாதானம் சொன்னாலும், உண்மையான காரணம் பெண்ணோடு சித்தப்பா யாராவது "மாப்ள பொண்ண தூக்கிண்டு மண்டபத்தை மூனு தரம் சுத்தி வாங்கோ நம்ம சம்பிரதாயத்துல அது உண்டு"ன்னு தேரை இழுத்து தெருவில் விட்டுவிடுவார்களோ என்ற பயம் தான்.

அப்புறம் ஜிம் கலாசாரம் வந்த பிறகு ஒரு நாள் ஷோக்காய் போய் சுத்திப் பார்த்துவிட்டு வந்ததோடு சரி, அந்தப் பக்கமே போகவில்லை. அப்புறம் எங்க ஊரில் ஒரு வாரம் ஓசி ட்ரயல் குடுத்தார்கள். தங்கமணி அரி அரியென்று நச்சரித்ததில் அந்த ஒரு வாரம் போய்விட்டு வந்தேன். இந்த லட்சணத்தில் முதல் நாள் ட்ரெயினர் வேறு. எப்படி நிற்கவேண்டும் உட்காரவேண்டும் என்பதிலிருந்து ஆரம்பித்தார். ரெண்டு மணி நேரம் எல்லாதையும் விளக்கு விளகென்று விளக்கி விட்டு ஏதாவது டவுட்டு இருக்கிறதா என்று கேட்டார். "நாலு பேர் வந்து புழங்குகிற இந்த மிஷினெல்லாம் இப்படி பள பளன்னு வைச்சிருக்கீங்களே..டெய்லி எண்ணை போட்டு துடைப்பீங்களா" என்று நான் கேட்ட டவுட்டு அவரை விட தங்கமணிக்குப் பிடிக்கவில்லை. சரி நான் பாட்டுக்கு ஸ்விம்மிங் பூல் ஜன்னல் பக்கமா ஒரு சைக்கிளை ஓட்டிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதுவும் பிடிக்கவில்லை.  எனக்கு என்னடா பெரிய ஜிம் என்றாகிவிட்டது.

சமீபத்தில் ஒரு நாள் சும்மா என் ஆர்ம்ஸை தொட்டு பார்த்த என் சின்ன மகள் ஆஹா ஓஹோ என்று பாராட்ட நானும் என்னுடைய ஆட்டுக்கல் புராணத்தை எல்லாம் ஜம்பம் விட்டு தற்போது நிலமை விபரீதமாகி நான் மீண்டும் சிக்ஸ் பாக்ஸ் காட்ட வேண்டும் என்று மகள்கள் கெடு விடுத்திருக்கிறார்கள். என்னம்மோ முன்னாடி ஏழெட்டு பாக் இருந்த மாதிரி நானும் சில பல உபகரணங்கள் வாங்கி கையைக் காலை சுத்திப் பார்க்கிறேன், கண்ணாடியில் ஃபாமிலி பாக் தான் தெரிகிறதே தவிர சிக்ஸ் பாக்ஸ் வருகிற வழியக் காணும். தேவுடா...இன்னும் எத்தனை நாளோ..

Thursday, April 14, 2011

Musical Sprint

கீழே காணும் ப்யூஷன் ம்யூசிக் ஆல்பம் அடியேன் எடிட் செய்தது. ஜோத்ஸ்னா ஸ்ரீகாந்த் எனது இனிய நண்பர். ஐரோப்பாவிலும், இந்தியாவிலும் பெரிய பெரிய இசை நிகழ்ச்சிகளில் பிரபலம். வயலின் மேஸ்ட்ரோ. தற்போது ராயல் பில்ஹார்மோனிக்குடன் சேர்ந்து ஒரு இசை முயற்சிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ஐந்து காமிராக்கள் வைத்து ஸ்டுடியோவில் ஷூட் முடித்து என்னிடம் வந்த அளவில் சில பல டெக்னிகல் சிக்கல்களுக்கு நடுவில் (சில முக்கிய காட்சிகளில் எல்லா கேமிராக்களுமே அந்த நொடியில் வாசிக்கும் இசைக்கலைஞரை படம் பிடிக்க கோட்டை விட்டிருந்தன; இது போக நிறைய ட்ராப் ப்ரேம்ஸ் ) எடிட் செய்வதென்பது கொஞ்சம் சேலஞ்சிங்காகவே இருந்தது. எடிட்டிங்கை விட்டுத் தள்ளுங்கள் இசையைக் கேளுங்கள். இந்த ஆல்பத்தில் இதுவும் இன்னும் இருக்கும் பல ட்ராக்குகளும் மனதை மயக்கும் விதத்தில் இருக்கின்றன. (எடிட்டிங் பற்றி உங்கள் கருத்துகளை தாராளமாக தெரிவிக்கலாம் :) )

அடுத்த பதிவிலிருந்து மொக்கை வழக்கம் போல தொடரும் :)

பி.கு - இதில் வரும் பிரமாதமான இசைக்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. இசை நல்லா இருக்கும் போதே இது உங்களுக்கு தெரிந்திருக்கும் இருந்தாலும் :))

Tuesday, April 05, 2011

TamilNadu Election - Short film


தமிழ்நாடு தேர்தல் பற்றி டாக்குமென்ட்ரி ஸ்டைலில் என்னுடைய குறும்படம். இந்த குறும்படம் எந்தக் கட்சியையும் சாராமல், பொதுமக்களின் "சோத்துக் கட்சி"யை சார்ந்தே எடுக்கப்பட்டுள்ளது.

ஃபிலிம் ஸ்கூலுக்குப் பிறகு நான் தமிழில் எடுத்திருக்கும் முதல் குறும்படம் உங்கள் பார்வைக்கு. இந்த படத்தில் என்னுடன் உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

குறும்படம் குறித்த உங்கள் கருத்துகளை அறிய வழக்கம் போல் மிக ஆர்வமாய் காத்திருக்கிறேன்.

(இங்கு சில காலம் சொல்லாமல் கொள்ளாமல் லீவு எடுத்ததிற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் இனிமேல் அடிக்கடி வருவேன் :) )

இந்த குறும்படத்தை (யூ-ட்யூப் லிங்குடன்) உங்கள் தளத்திலோ பதிவிலோ பேஸ்புக்கிலோ (வீடியோவில் மாற்றம் செய்யாமல்) இணைக்க விரும்புவர்கள் தாராளமாக இணைத்துக் கொள்ளலாம். (மார்க்கெட்டிங்கிற்கு உதவியாயும் இருக்கும் :) ).


Thursday, March 03, 2011

தாத்தா பாட்டி

“Thatha I wanna take a leak”

"அப்டீன்னா"

"குழாய் லீக்காகறதுங்கறானோ என்னம்மோ...அது அப்படித் தான்டா செல்லம்...உங்க தாத்தா மாதிரி லூஸாயிடுத்து ...குழாய்காரன வரச் சொல்லுவோம்"

"ஐய்யோ அம்மா அவனுக்கு பாத்ரூம் போகணுங்கிறான்...டேய் தாத்தா பாட்டி கூட பேசும் போது தமிழ்ல தான் பேசணும்ன்னு சொல்லியிருக்கேன்ல"

"இருக்கட்டும்டீ குழந்தைய வையாத..என்னமா பொளந்து கட்றான் என் செல்லம்.."

"ஐ...சீ.........ஐ டேக் யுவர் பாத்ரூம்...கம் வித் மீ...."

"....அப்பா நீ வேற ஏன்ப்பா இங்கிலிஷ்ல பேசிக் கொல்ற...தமிழ்ல பேசுப்பா அப்போ தான் அவனுக்கு வரும்"

"இதேதுடா தமிழ்ல பேசினாத் தான் வருமா...அவனுக்கு அல்ரெடி வந்தாச்சு சொன்னானே..."

"ஸப்பா...கஷ்டம்.."

"நீ விடுடீ...இவாத்துக்காராளே இப்படித் தான்... அஞ்சு பைசாக்கு பிரயோஜனமில்லாத பிலுக்கு...ஜானவாசத்துக்கு கோடு போட்ட கோட்டு வாங்கலைன்னு இவா மாயவரம் பெரியப்பா தாட் பூட் தஞ்சாவூர்ன்னு இங்கிலீஷ்ல ஆரம்பிச்சுட்டார்.....அப்புறம் தலை தீபாவளிக்கு..."

"அம்மா...நீ சொல்லி நிறைய கேட்டாச்சு"

"அதுக்கு இல்லடீ கூஜால காப்பி போட்டு தரேன் எஸ்.எஸ்.எல்.சி பாஸ் பண்ணுங்கோன்னு தலையா அடிச்சிண்டேன் கேட்டாரா மனுஷன்"

"போடி போக்கத்தவளே...இவ கூஜால காப்பி போட்டு குடிச்சுட்டு ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணிட்டா...கிரிஜா உங்க அம்மாவ கையழுத்து போட்டு பாங்குலேர்ந்து பத்து ரூபாய் பணம் எடுத்துண்டு வரச் சொல்லு பார்ப்போம்..."

" நான் ஏன் போகணும்...எங்க மாமனார் என்ன தள்ளி நில்லுன்னு ஒரு வார்த்தை சொன்னதில்லை....அவர் சொன்னா பாங்க் மேனேஜர் ஆத்துக்கு வந்து சலாம் போட்டுட்டு பைசா குடுத்துட்டுப் போவார்"

"அப்படி வா வழிக்கு...இங்கிலீஷாம் இங்கிலீஷ்....சப்ரிஜிஸ்தர் ஆபிஸுல ரமணி இஸ் எங்க போடணும் வாஸ் எங்க போடணும்ன்னு எங்கிட்ட வருவான் தலைய சொறிஞ்சிண்டு"

"போறுமே...குழந்தைய ஒன்னுக்கு கொண்டு விடச் சொன்னா வேண்டாத வியாக்யானம்"

"ஐய்யோ போறும் ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்தறேளா..." "என்னுதிது மரத்த பிடுங்கி எடுத்துண்டு வரேள்..."

"சிண்டுவுக்கு மாம்பழம் வேணுமாம்....கன்னு நட்டா நாளாகும்ன்னு சின்ன மரத்தையே பதியம் பண்ணி எடுத்துண்டு வந்துட்டேன்...பிள்ளையார் தோப்பு மரம் ஒரு பயலுக்கும் குடுக்க மாட்டான்...நான் கைல கால்ல விழுந்து கெஞ்சி கொண்டு வந்திருக்கேன்...அடுத்த வருஷம் சிண்டு வரும் போது பூத்துடும்.."

"அப்போ அடுத்த ஹாலிடேஸ்க்கு வரும் போது மேங்கோ இருக்குமா தாத்தா"

"ஆமாம் பாரு...அடுத்த வருஷம் நீ வரும் போது மேங்கோ வாங்கோ வாங்கோன்னு கூப்பிடும்...வேணுங்கிறது திங்கலாம்..."

"பாட்டி பல்லு ப்ரோக்...tooth fairy ராத்திரி பைசா குடுப்பா"

"ஓ பல்லு விழுந்தாத் தான் குடுப்பாளா ஃபேரி கடங்காரி...நம்ம மஹாலெஷ்மிட்ட வேண்டிண்டா...கூரைய பொளந்துண்டு கொட்டுவாளே....ஸ்லோகம் சொல்லு கோந்தே மஹாலெஷ்மீச்ச...தீமஹீ"

"அவன் கீழ பெட்ல போட்டுக்கோப்பா...ஏன்பா தோள்லயே வைச்சிண்டு இருக்க.."

"இருக்கட்டும்டீ...குழந்தைக்கு ஜலதோஷம் மூக்க அடைக்கறது தூங்காம கஷ்டப்படறான்..எனக்கும் தோளுக்குக்கு இதமா இருக்கு...நான் இப்படியே தூங்கிடுவேன்.."

"தாத்தா வாட்ஸப்"

"ஐ ஆம் ஃபைன்...ஹவ் டு யூ டூ.."

"அப்பா...சிண்டுவுக்கு தமிழ் சொல்லிக் குடுக்கச் சொன்னா...அவன் உங்களுக்கு இங்க்லீஷ் சொல்லிக் குடுத்துண்டு இருக்கான்"

"அதுக்கென்ன அவனுக்கு பேஷா சொல்லிக் குடுத்துட்டா போச்சு...சொல்லுடா கோந்தே ஓரொண்ணு ஒன்னு...ஈரெண்டு நாலு.."

"ஆ...அப்பா தமிழ் சொல்லிக்குடுக்கச் சொன்னேன்பா...வாய்ப்பாடு இல்லை..."

"அதுவும் சொல்லித் தரேன்...சொல்லுடா கோந்தே தண்டையும் சிலம்பும் சிலம் பூடுருவப் பொருவடி..."

"நான் சொல்லல...இவாத்துகாராளுக்கே பிலுக்கு ஜாஸ்தி..."

"கோந்தைக்கு விழுந்த பல்லு முளைக்கறதே....சாயங்காலம் பல்லு கொழக்கட்டை பண்ணித் தரேன்...பிள்ளையார் கோவிலுக்கு போலாம் என்ன.. தேங்கோழல் பண்ணித் தரேன் சீப்பலாம்"

"சிண்டு இதோ பாரு என்ன வாங்கிண்டு வந்திருக்கேன்.. ..கோலிக்காய்"

"ஹை மார்பிள்ஸ்"

"மார்பிள் இல்லைடா கோந்தே ...கண்ணாடி.."

"தாத்தாக்கு பல்லு இருக்கா பாரு ஆ...   உங்க பாட்டி பண்ணிக்குடுத்த சீடைய கடிச்சு கடிச்சே பல்லெலாம் விழுந்துடுத்து"

"ஆமா சின்னக்குழந்த மாதிரி நாப்பது வயசு வரைக்கும் சாக்லேட்ட தின்னா?... அதான் அப்பவே விழுந்துடுத்து ராமானுஜம் டாக்டர் சொன்னார். கேக்கல..மண்டைல முடியும் கொட்டிடுத்து. யார் சொல்றது யார் கேக்கறதுன்ன இப்படித் தான்"

"ஐ...Cow!!!"

"வெறும் cow இல்ல..ஹோலி கவ். உம்மாச்சி ! தொட்டு ஒத்திக்கோ”

"கிரிஜா சித்திரத்தையும் அதிமதுரப் பொடியையும் கலந்து வைச்சிருக்கேன்...ஜலதோஷம் உடம்பு வலின்னு வந்தா குழந்தைக்கு தேன்ல கலந்து கொடு...நிமிஷமா போயிடும்"

"வாரா வாரம் ஃபோன் பண்ணனும்... நிலா நிலா ஓடி வா பாடிக் காட்டனும் சரியா"

"விளக்கேத்தி சொல்லிக்குடுத்த ஸ்லோகத்த மறக்காம சொல்லச் சொல்லு"

ப்ளைட் இறங்கியதும் கேட்டேன் "அடுத்த ஹாலிடேஸ்க்கு ஊருக்கு போலாமா வேண்டாமா?"

"ஓ யெஸ் ஐ லவ் மாம்பழம், ஐ லவ் கொழக்கட்டை ஐ லவ் கவ்ஸ், ஐ லவ் மார்பிள்ஸ்"

"..............."

"haa haa நான் சும்மா டீஸ் பண்ணினேன்மா ஐ லவ்வ்வ்வ்வ்வ்வ் தாத்தா பாட்டி ஐ மிஸ் தெம்... அன்ட்  அவாள பார்க்கனும் "

ஓடி வந்து கட்டிக் கொண்டான். சந்தோஷமாய் இருந்தது.

Tuesday, February 15, 2011

Black Swan

சைக்காலஜிக்கல் திரில்லர்/ ட்ராமா என்பது கொஞ்சம் ட்ரிக்கியான ஜானர். சில விஷயங்களை ரொம்பவே ஜீரணிக்க முடியாத அளவுக்கு ராவாக காட்டுவார்கள். அத்தோடு நேர்கோடு புரிதல் இல்லமல் பார்ப்பவரை குழப்பும் ஒரு ஸ்க்ரீன் ப்ளே இருக்கும். அதனாலே இந்த மாதிரி ஜானர் படங்கள் அனேகமாய் ஜனரஞ்சகமாக இருக்காது. ஆளவந்தான் படத்தில் கமல் இந்த விஷயத்தை இலாவகமாக கையாண்டிருப்பார் ஆனால் அந்த படத்தில் நிறைய காம்ப்ரமைஸும் இருக்கும்.

சமீபத்தில் வந்த ப்ளாக் ஸ்வான் ட்ரைலர் பார்த்த போதே வசீகரமாய் இருந்தது. அத்தோடு படத்தின் கையாளப் பட்டிருந்த பாலே நடன பிண்ணனியும் ஒரு வரிக் கதையும் பயங்கர ஆர்வத்தை தூண்டியது. படம் துளியும் ஏமாற்றவில்லை. உச்ச ஸ்தாயியில் ஜன்னி வந்த மாதிரி நடுங்கிக் கொண்டு பாடும் ஓபராவிற்க்கும் எனக்கும் ரொம்ப தூரம். அதே போல் பாலே நடனத்தின் அருகாமையையும் அண்டியதில்லை. இந்த படத்தில் பாலே பற்றி டெக்னிகலாய் தாக்கியிருப்பார்களோ என்று ஒரு பீதி இருந்தது. ஆனால் படம் ஆரம்பித்து பத்து நிமிஷத்திலேயே இது இந்தோளமா, யமன் கல்யாணியா என்று ராகம் பற்றி தெரியாமலே அனுபவிக்க முடியும் கச்சேரி என்று பிடித்துப் போய்விடுகிறது.

படத்தின் கதையை சொன்னால் படம் பார்க்கும் அனுபவத்திற்கு பாதகமில்லை என்பதால் சில விஷயங்களை விவரித்திருக்கிறேன். கதை பற்றி தெரிய விருப்பமில்லாதவர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்வது சொஸ்தம்.

ஒரு வரிக் கதையாக சொல்ல வேண்டும் என்றால் நியூயார்க்கில் இருக்கும் ஒரு கம்பெனியின் பாலே நடன ஷோவுக்கு கதாநாயகி பாத்திரத்திற்கு படத்தின் நாயகி முயற்சித்து வெற்றி பெறுகிறார்.  நல்லதையும் கெட்டததையும் ட்யூயல் பெர்சனாலிட்டியாய் பிரதிபலிக்க வேண்டிய ஒரு பாலே பாத்திரம்.  இதில் நல்லதை பிரதிபலிக்கும் வொயிட் ஸ்வானின் முகபாவம், அங்க மற்றும் நடன அசைவுகளும் பாவங்கள் சுளுவில் வர, தன்னுடைய மன இறுக்கம், கூச்சம், பாலியல் ரீதியான இறுக்கங்கள் காரணமாக கெட்டதை பிரதிபலிக்க வேண்டிய ப்ளாக் ஸ்வானின் பாத்திரததை செய்ய திணறுகிறார் நாயகி. இதற்கு நடுவில் அவருடைய அம்மாவின் கட்டுப்பாடு வேறு. கருத்தரித்ததின் காரணமாக தன்னுடைய பாலே கனவுகளை மூட்டை கட்டி வைத்த தாயின் பாலே தாகம் மகளின் மீது கட்டுப்பாடுகளாய் விடிகிறது. இதற்கு நடுவில் பளாக் ஸ்வான் பகுதியை சரிவர செய்ய முடியாததினால் வாய்ப்பு பறி போய்விடும் அபாயம். இவ்வளவும் சேர்ந்து அவருக்கே எதிரியாய் மனபிறழ்தலாய் மாறுகிறது.

கதாநாயகி நடாலி போர்ட்மேன் சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார். லட்டு மாதிரி ஒரு சான்ஸ். கிடைத்த சான்ஸை துளி கூட வேஸ்ட் செய்யாமல் அசத்தியிருக்கிறார். இவரின் நடிப்பு நம்மை மெய்மறந்து போகச் செய்கின்றது அந்த அளவிற்கு படம் நெடுக இவரின் ஆக்கிரமிப்பு. தன் அம்மாவை அவர் எதிர்க்கும் இடமாகட்டும், பாலியல் ரீதியாய் அவர் தனது சுய கட்டுப்பாடை உடைக்க முடியாமல் அவதிப் படும் இடமாகட்டும் அவ்வளவு கனகச்சிதமாய் நடித்திருக்கிறார். இந்த வருட ஆஸ்கர் இவருக்குத் தான் கண்டிப்பாக கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். சிறந்த நடிகைக்கான பாஃப்டா அவார்ட் அல்ரெடி அவருக்கு கிடைத்தாயிற்று.

இயக்குனர் டாரன் அர்னோஃவ்க்ஸ்கி. இந்த மாதிரி ஒரு மனரீதியான போராட்டத்தை மிக அழகாகவும் ஜனரஞ்சகமாகவும் சொல்லுவது மிகக் கடினம். மனப் போராட்டத்தை சுவாரசியம் சிறிதும் குறையாமல் கதையில் நகர்த்தியிருக்கிறார். . பல இடங்களில் இவர் காட்சியமைப்புகளிலேயே பல விஷயங்களை நம்மையுமறியாமல் மனதில் புகுத்தியுள்ளார். உதாரணமாக வொயிட் ஸ்வான் பகுதியில் இருக்கும் காட்சியமைப்பும், ப்ளாக் ஸ்வான் அமைப்பில் இருக்கும் காட்சியமைப்பும் நம்மையே அறியாமல் நல்லதையும் கெட்டதையும் மனதில் புகுத்தும். அந்த காட்சியமைபுகளில் உபயோகப்படுத்தியிருக்கும்  வண்ணங்கள், கேமிரா கோணங்கள், கலர் க்ரேடிங்குகள் அனைத்தும் காட்சியில் சொல்ல வந்ததை சொல்லாமல் நம்மை உணரச்செய்யும்.

கேமிரா இரண்டு இடங்களில் என்னை அசத்தியது. கதாநாயகி தோழியுடன் அம்மாவை மீறி பப்புக்கு சென்று குடித்துவிட்டு போதையின் உச்சத்தில் புதிதாய் அறிமுகமாகும் நபருடன் ஈடுபட்டு , தீடீரென்று அவரின் உள்ளுணர்வு அவரை உசுப்பி சுயநினைவுக்கு வருவதை மிக அற்புதமாய் காட்சிப் படுத்தியிருப்பார். அதே போல் க்ளமாக்ஸில் அவர் ப்ளாக் ஸ்வானாக மாறும் காட்சியையும் மிக அற்புதமாய் காட்டியிருப்பார். படம் முடியும் போது கைத்தட்டுமளவிற்கு நம்மை ஒன்றிப் போகச்செய்வதில் சினிமேட்டோகிராபி மிக முக்கிய பங்களித்ததாய் நான் உணர்ந்தேன்.

டாரன் அர்னோஃவ்க்ஸ்கியின் முந்தைய படங்களில் "Pi" மட்டுமே பார்த்திருக்கிறேன். ப்ளாக் ஸ்வான் இவரின "Requiem for a Dream"  படத்தை பார்க்கவேண்டும் என்று ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.

நிற்க இந்தப் படம் குழந்தைகளுடன் போவதற்கு எதுவானது அல்ல. பாலியல் உணர்வை தூண்டாத் பல பாலியல் காட்சிகள் படத்தில் இருக்கின்றன. அத்தோடு ரத்தத்தைப் பார்த்தாலே உறைந்து போகக்கூடியவர்களுக்கும் இந்தப் படம் கொஞ்சம் ஷாக்கிங்காய் இருக்கலாம். இவர்களையெல்லாம் தவிர்த்துவிட்டு எந்த விதமான தொந்தரவோ நச்சரிப்போ இல்லாமல் பார்க்க வேண்டிய ஒரு படம். சினிமாவை ரசித்துப் பார்க்கும் ஓவ்வொரு ரசிகருக்கும் இந்த படம் ஹைலி ரெக்கமெண்டட்.

Saturday, February 05, 2011

புதுப் பெண்டாட்டி

டிவிட்டர் ஜோதியில் நானும் ஐய்க்கியமாகியாச்சு. மோகம் எத்தனை நாள் என்று இனிமேல் தான் பார்க்கனும். இது வரை டிவீட்டியதில் சில

  • தூக்குறேன்டா...கரைச்சல் குடுக்கிற எல்லாரையும் ஒருதன் ஒருதனா ஸ்கெட்சு போட்டு தூக்குறேன்டா # Wife Passed Driving Test
  • கத்ரீனா வீட்டில் ஐ.டி. ரெய்டு. ஆமா ஊரக் கொள்ளையடிக்கிறவன விட்ருங்க எல்லோர் மனசையும் கொள்ளையடிக்கிறவங்கள பிடிங்க #வழிசல் தொண்டன்
  • சர்ச் ஹாலில் சாய் பஜன் - மீல்ஸ் ப்ரொவைடட் #ப்ளாகில் அரைத்த மாவு
  • "திவ்யா ஐ லவ் யூ" நம்மூர் பஸ்ஸுல மட்டும் தான் கிறுக்குவாங்கன்னு நினைச்சேன். இங்கே லண்டனிலும் கூட கிறுக்குகிறார்கள் "Emma 14 is pregnant"
  • Got to say usabilty and search function sucks in Twitter. இல்ல பெண்கள் டிவீட்டுவதே இல்லீங்கிறீங்களா? :P
  •   
  • இனி ஓர் உயிரையும் இழக்கவிட மாட்டோம்: நிரூபமா ராவ் நம்பிக்கை - 'ம'னாவையும் 'உ'னாவையும் கன்ப்யூஸ் பண்ணியிருப்பாங்களோ? #TNfisherman
  •  அரசியல் பண்ணுறத நிப்பாட்டுங்கடா. எங்க ஊர் அண்ணாச்சிய கூட்டிட்டு வந்திருந்தா இதுக்குள்ள பஞ்சாயத்து முடிஞ்சி தீர்ப்பாகியிருக்கும் #tnfisherman
  •  

Wednesday, January 26, 2011

ஜில்பான்ஸ் - 260110

இந்த வார சினிமா
ஒரு சில படங்கள் கலை நோக்குடன் எடுக்கப்பட்டிருக்கும். டி.வி.டி அட்டைப் படத்திலோ இல்லை போஸ்டரிலோ குண்ஸாய் பார்க்காமல் ஒருவர் மட்டும் அம்மணகுன்ஸாய் கேமிராவை பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருந்தால் படம் மேற்படி உண்மையான கலைப் படம் என்று எனது டிக்க்ஷன்ரியில் பிரிவு படுத்தி வைத்திருக்கிறேன். அந்த வகையில் இந்த "Ten Canoes" படத்திற்கு கலை ரேட்டிங் குடுத்து பார்க்கலாம் என்று ஆரம்பித்தேன். இந்த மாதிரி கலைப் படங்கள் ரொம்பவே மெதுவாகத் தான் போகும். பல் தேய்த்து கொப்பளிப்பதை முழுதாய் காண்பித்துவிட்டு அதற்கப்புறம் நாக்கை வழிப்பதையும் பொறுமையாக காண்பிப்பார்கள். அதனாலேயே இந்தப் படத்தில் வேகம் பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் அந்த மைன்ட்செட்டுக்கே படம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ஸ்லோ. ஏதோ கதை சொல்வார்கள் என்று பார்த்தால் ஒரு மணி நேரமாகியும் கதை வருகிற வழியைக் காணும். படத்தில் வரும் ஆண்கள் எல்லாம் குருவிக் கூடு மாதிரி கொண்டையை வைத்துக் கொண்டு வேறு ஒன்றுமே போடாமல் கூச்ச நாச்சமின்றி படம் நெடுக தழைய தழைய வளைய வருகிறார்கள். அண்ணன் பெண்டாட்டியை ஆட்டையப் போட நினைக்கும் ஒருவனுக்கு கதை சொல்வதாக ஆரம்பித்து ஸ்ஸ்ஸ்ஸப்பா முடியல. கலைப் பட ரசிகர்களின் பொறுமையையும் ரொம்பவே சோதிக்கிறது. படம் முடிந்தவுடன் இதைச் சொல்ல இவ்வளவு நேரமா என்ற ஆயாசமே எஞ்சுகிறது.

இந்த வார படிப்ஸ்
தீண்டும் இன்பம். வாத்யாரின் லிஸ்டில் படிக்காமல் விட்டு விட்ட ஒரு புஸ்தகம் சமீபத்தில் எங்கள் லைப்ரரியில் சிக்கியது. வாத்யார் சுஜாதா பற்றி நான் சொல்லவும் வேண்டுமோ. படித்து முடித்த பின்னும் ஒரு மணிநேரம் புத்தகத்தின் தாக்கம் அகலவே இல்லை. அத்தனை வேகம். வாத்யாரை ஒரு தரம் கூட நேர்ல சந்திக்கலையே என்ற துக்கம் தான் நெஞ்சில் மிஞ்சியது ஹூம்ம்ம். படித்த இன்னொரு புஸ்தகமும் வாத்யார் புஸ்தகம் தான் "பெண் இயந்திரம்". இரு புத்தகங்களுமே பெண்கள் வாழ்வியல் கஷ்டங்களைப் பற்றி என்றாலும் கதை சொல்லும் விதம் இருக்கிறதே வாத்யார் வாத்யார் தான்.

இது மேட்டரு
உலகில் உள்ள கஷடமான தொழில்களில் ஒன்று பல் டாக்டர் தொழில். "பல்லு தேய்கிறதா அப்பீடீன்னா? " என்று கேட்கும் விடியா மூஞ்சிகள் வாடிக்கையாளர் உட்பட எல்லார் வாயிலும் மண்டையை உள்ளே விட்டு பல்லை பிடுங்கும் வேலை ரொம்பவே பரிதாபகரமானது. இதில் ரொம்ப கூர்ந்து நோக்கினால் பாதி நேரம் "ஆ காடுங்க ஆ காட்டுங்க"ன்னு சொல்லி சொல்லியே பாதி பல் டாக்டர்கள் வாய் கோணியபடியே இருக்கும். ஜெர்மனியின் ம்யூனிக் நகரில் ஒரு பல் ஆஸ்பத்ரி. இப்படி 'ஆ காட்டுங்க' சொல்லி சொல்லி மாய்ந்து போன ஒரு பெண் பல் டாக்டர் ஆஸ்பத்ரியில் வேலை பார்க்கும் எல்லா பெண் ஊழியர்களுக்கும், நர்ஸுகளுக்கும் லோ கட் க்ளிவேஜ்ன்னு யூனிஃபார்மை படு கவர்ச்சிகரமாய் மாற்றிவிட்டார். அத்தோடு பல் குடையும் இயந்திர ஊசிகள் சத்தம் கேட்காமலிருப்பதற்காக அந்த ஃபிரிகெவென்சியை மட்டும் மட்டுறுத்தும் எம்.பி.3 ப்ளேயர்களையும் பேஷண்ட்டுகளின் காதுகளில் பொருத்தும்படியும் செய்தார்.அப்புறமென்ன வாடிக்கையாளர் கூட்டம் பிய்த்துக் கொண்டு போவதுமில்லாமல் எல்லாரும் வாசலிலிருந்தே வாயைப் பொளந்து கொண்டு வருகிறார்களாம். ரொம்ப பல்லக் காட்டாதீங்க போதும் வேலையாகிவிட்டதுன்னு டாக்டரே பேஷண்டுகளை கட்டாயப் படுத்தி போயிட்டு வாங்கன்னு அனுப்பவேண்டியிருக்கிறதாம். ஜெர்மனிக்கு போகும் போது பல் வலித்தாலும் வலிக்கலாம்ன்னு வீட்டுல ஒரு பிட்ட போட்டு வைச்சிருக்கேன்.

இந்த வார கேள்வி
இங்கே இங்கிலாந்தில் பனி கொட்டோ கொட்டென்று கொட்டியது நியூசில் பார்த்திருப்பீர்கள். அத்தோடு இல்லாமல் இந்த முறை கடும் குளிர். சில இடங்களில் மைனஸ் பதினெட்டு டிகிரி. ஏரி குளம் எல்லாம் பாறாங்கல்லாய் உறைந்து விட்டது. விட்டிற்குள்ளேயே தேங்காய் எண்ணெய் எல்லாம் உறைந்து விட்டது. காரை எல்லாம் கொட்டிய பனிக்கு நடுவில் தேடி தோண்டி எடுக்க வேண்டியிருந்தது. அப்போது என் மகள் கார் டேங்கில் இருக்கும் பெட்ரோல் உறைந்து விடாதா என்று கேட்டாள். இல்லை அது உறையாமல் இருக்க காரில் ஏற்பாடு செய்திருப்பார்கள் என்று சந்தேகத்தோடு அடித்து விட்டாலும், பெட்ரோல் டேங்கர் லாரிகள் எப்படி உறையாமல் தடுக்கின்றன என்று சந்தேகம் வலுத்தது. சரி கொஞ்சம் தேடித் தான் பார்ப்போமே என்று கூகிளிட்டதில் பெட்ரோல் மைனஸ் அறுபது டிகிரி வரை உறையாது என்று தெரிய வந்தது. அத்தோடு டீசல் மைனஸ் நாற்பது வரை உறையாமல் இருப்பதற்க்கு அடிட்டிவ்ஸ் சேர்க்கிறார்கள் என்றும் தெரிந்து கொண்டேன். பாடம் நடத்தும் போது கவனிச்சிருக்கலாம். ஹூம்ம்ம்ம் எனக்கு தெரிந்த கெமிஸ்ட்ரி நாயகனுக்கும் நாயக்கிக்கும் நடுவில் ஒர்க் அவுட் ஆவது மட்டுமே..:)


இந்த வர விளம்பர போஸ்டர்

இந்தோனேஷியாவிலிருந்து ஸ்பைசஸ் இறக்குமதி செய்யும் ஒருவருக்கு இந்தியாவில் நல்ல உள்நாட்டு வியாபார கனெக்க்ஷன்கள் தேவைப் படுகிறது. இங்கே விளம்பரப் படுத்துவதை விட வேறு நல்ல இடங்கள் இருக்கின்றன என்றாலும் இங்கே ப்லாகில் நிறைய ஆச்சரியங்களை சந்தித்திருக்கிறேன் அதனால் தான் மறுப்பேதும் சொல்லாமல் விளம்பரம். Spice-ல் ஆர்வமிருப்பவர்கள் என் தனி மெயிலுக்கு(r_ramn அட் யாஹூ டாட் காம்)  ஒரு ஈமெயில் தட்டினால் அறிமுகப் படுத்தி வைக்கிறேன்.

Tuesday, January 18, 2011

முகப்புத்தகம்

ஒரு காலத்தில் நலம் நலமறிய ஆவல் என்று இங்க் பேனா வைத்து எழுதியது போய், "லெட்டர் எழுதி குடுக்க ஒரு ஸ்டெனோ தேடிக்கிட்டு இருக்கேன்...அதுவரைக்கும் வேகாதது அட் வெந்தது டாட் காம்க்கு ஒரு மெயில தட்டு மாமு நானே கைப்பட திரும்ப ஈமெயில் போடறேன்"னு வந்து, "சத்தியமா ஈமெயில் அடிச்சேன்டா இன்விடேஷன் வரலையா ஒரு வேளை ஸ்பாம் போல்டருக்கு போயிருக்கும் நீ பார்த்திருக்க மாட்ட" என்று சால்ஜாப்பாகி, "என்னோட வெப் சைட் அடேஙகப்பா டாட் காம் வா நான் எங்க இருக்கேன்னு எல்லா அப்டேட்டும் ரெகுலரா போடறேன் நினைச்ச நேரத்துல் சௌகரியமா என்னைப் பத்தி தெரிஞ்சிக்கலாம் ஃபோட்டோ கூட போட்டிருக்கேன் அப்பாவையும் கூட்டிண்டு வந்து காட்டு" என்றாகி,  "டூட் சும்மா டபாய்க்காத ஐ.சி.க்யூலயோ ஜீடாக்கிலயோ பிங் பண்ணினா பதில் சொல்லிட்டுப் போறேன் வாய்யா"-ஆகி, " 'நொண்டியடித்துக் கொண்டே எல்லாத்தையும் பத்தியும்'ன்னு ஒரு ப்ளாக் வைச்சிருக்கேன். டெய்லி ஆபிஸ்லேர்ந்து அப்டேட் மயம் தான், கமெண்ட் கூட போடலாம், 2020ல என்ன பண்ணப் போறேங்கிறதுலேர்ந்து நீயும் நானும் ரெண்டாங் கிளாஸ் படிக்கும் போது நம்மூர் சந்துல சூச்சால எட்டு போட்டது வரைக்கும் பதிவு எழுதறேன்னா பார்த்துக்கோயேன்" என்று அதுவும் கடந்து போய் தற்போது பேஸ்புக் மசக்கையில் வந்து நிற்கிறது.

பேஸ்புக்கில் ப்ரொபைல் ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே யாரோ என்னை நண்பராக்கிக் கொள்ள முயற்சி செய்ய எனக்கு ஒரு ஈமெயில் வந்து சரி இருக்கட்டும்ன்னு ப்ரொபைல ரெஜிஸ்தர் செய்தேன். இருந்தாலும் இதுவும் ஆர்குட் மாதிரி தான் என்ன பெரிசா என்று ரொம்பநாள் சீண்டவே இல்லை. அப்பப்போ யாராவது என்னை போனால் போகிறது என்று நண்பராக்கிக் கொள்வார்கள். நிறைய பேர் போட்டோவெல்லாம் போட அட பரவால்லையே ஆர்குட் மாதிரி இல்லாமல் இங்கே தைரியமாகவே போடுகிறார்களே என்று ஈடுபாடு கூட நாம் போடுகிற அப்டேட்டுகளுக்கு அங்கேயே கமெண்டும் லைக்கும் இருக்க சூப்பர் என்று ஆகி, ஆளாளுக்கு வீடியோ ஆடியோ என்று போட்டு அசத்த நானும் ஜோதியில் ஐய்க்கியமாகிவிட்டேன்.

நிற்க எனக்கு பேஸ்புக்கில் மிகப் பிடித்தது அங்கு வலம் வரும் வீடியோக்கள் தான். மிக மிக சுவாரசியமான விடீயோக்கள் வலம் வருகின்றன. எனக்குப் பிடித்த சில வீடியோக்களின் சாம்பிள்களை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.. தமிழ் பதிவர்களில் முக்காலே வாசி பேரை பேஸ்புக்கில் காண முடிகிறது. உண்மைத்தமிழனும் இன்னொரு ப்ளாகரும் ஏகப்பட்ட  பேருக்கு நண்பரகளாய் இருக்கிறார்கள். ப்ளாக்க்கு சம்பந்தமே இல்லாத எதோ ஒரு விதத்தில் தெரிந்த நண்பரை க்ளிக் செய்தால் கூட அங்கேயும் உண்மைத் தமிழன் இருக்கிறார். எனக்கு வந்த ஆச்சரியம் இன்னும் அடங்கவில்லை ஹூம்ம்ம்ம்

தற்சமயம் பேஸ்புக்கில் நிறைய உழன்று கொண்டிருக்கிறேன். "தோசை வார்த்தாகிவிட்டது கீழே வரவும்" என்று தங்கமணி பேஸ்புக் வழிதான் செய்தி அனுப்புகிறார். அந்த கமெண்டை லைக் பண்ணிவிட்டு நானும் டின்னருக்கு செல்லுமளவுக்கு குடும்பத்தோடு பேஸ்புக்கில் ஐய்க்கியமாகிவிட்டோம்.

பெயரை பதியும் போது ‘Dubukku Blog’ என்று பதிய நினைத்து எழுதுப் பிழையாகி 'Dubukku Bogl' என்று போட்டு(எதத் தான் கரெக்டா செஞ்சிருக்கோம்) பேஸ்புக் keyword என்று திரும்ப மாற்ற அனுமதிக்கவில்லை. போங்கடான்னு விட்டுவிட்டேன்.

யோவ் எந்தக் காலத்துலயா இருக்கீரு!.. பேஸ் புக்லாம் அரதப் பழசு அதற்கடுத்த கட்டமாக நாங்கள்லாம் ட்விடருக்கு எப்பவோ போய்ட்டோம்ல என்று நிறைய பேர் சிரிக்கலாம். "ரெண்டுக்குப் போய்விட்டு திரும்பிப் பார்க்கிறேன் சொம்பை காணவில்லை" என்று ரத்தினச் சுருக்கமாய் இன்னும் எழுத வரவில்லை. கலை கைக்கு வந்தவுடன் ட்விட்டருக்கு மாலை போட்டுக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். அதுவரை அடியேனுடைய கால அபத்ததை பொருத்தருளவும்.


பேஸ்புக்கில் வலம் வந்ததில் பிடித்த வீடியோக்களில் சில


மருதமலை மாமணியே ரீமிக்ஸ் அந்த அம்மணியின் கொண்டையும் அவர் பண்ணுகிற சேட்டையும் ரொம்பவே ரசிக்கும் படி இருக்கின்றது. தேவரின் குணம் காக்கும் வேலைய்யா....ஈஈய்யா (oh yeah மாதிரி)!! இதுல "ஒயே ஒயே...ய்யேய்...வரே வா"உறுமலோட கடைசியில் "க்யா பாத் ஹை" ஹிந்தி வேற. சரிதான் :))) முருகன் முக்குல போய் குந்திக்குவார். ஆனால் பாட்டில் இருக்கும் எனர்ஜியை பாருங்கள் !!
ஹிந்தி படம் ஒன்றில் ஆங்கிலத்தை கடித்துக் குதறும் நல்ல காமெடி ஒன்று

படத்தைப் பார்த்தால் நீங்களே தெரிந்துகொள்வீர்கள். - The Most offensive translator - பயங்கர காமெடி

Monday, January 10, 2011

சாட்டிங் சாட்டிங்

நான் படித்த ஸ்கூலில் கான்வென்ட் ரேஞ்சுக்கு 'மேடம் குட்மார்னிங்' சொல்லும் பழக்கத்துக்கு அடுத்த படியாக கடைபிடிக்கப்பட்டு வந்த பழக்கத்தில் தலையாயது வகுப்பில் இருக்கும் சக பெண் மாணவியரோடு சகஜமாய் பேசலாம். இது என்னவோ ரொம்ப பெரிய விஷயம் மாதிரி "உங்க ஸ்கூல்ல என்னப்பா முட்டி வரை ஸகர்ட் போட்ட கேர்ல்ஸ் கூடலாம் பேசுவீங்க சேர்ந்து நடந்து போவீங்க"  என்று மத்த ஸ்கூல் மாணவர்கள் வயத்தெரிவார்கள்.

இப்படி சம வயது பெண்களுடன் பேசுவதற்கு பெயர் "கடலை" என்று தமிழ் கூறும் நல்லுலகம் நாமகரணம் சூட்டிய போது நான் காலேஜில் அடியெடுத்து வைத்திருந்தேன். முதல் வருடம் ஒரு பெண்ணும் பேசாமல், கடலை வாடையே மறந்து போயிருந்தது. இரண்டாம் வருடம் கடலை டச் விட்டுப் போய் யாரிடமாவது பேசவேண்டும் என்றாலே உதறல் எடுக்க ஆரம்பித்தது.  "இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. யாரு கிட்ட வந்து ரவுசு விடற"ன்னு பெட் கட்டி ஒரு பெண்ணிடம் 'எச்சூஸ்மீ' சொன்ன பிறகு திரும்ப உதறல் வந்து "கொஞ்சம் அழி ரப்பர் கடன் குடுக்க முடியுமா என்னோடத மறந்து வீட்டுல வைச்சிட்டு வந்துட்டேன்"ன்னு பென்சிலை கடன் வாங்கி வந்திருக்கிறேன்.  காலேஜ் பேர்வல் பார்ட்டி வரை அந்தப் பெண்ணும் திரும்ப கேட்கவில்லை நானும் குடுக்கவில்லை.

பட்டிணம் பட்டிணம் தான் இல்லையா...சென்னை (என்) ஐ.ஐ.டி வந்த பிறகு விஷயமே தலைகீழ். கம்ப்யூட்டர் படிப்பு சம்பந்தமாய் பெண்களுடன் அடிக்கடி பேசவேண்டிய நிர்பந்தங்கள் நிறைய வந்தன. அந்த கால கட்டத்தில் வந்த புதுமையான விஷயம் தான் சாட்.  தட்டு நிறைய வெந்த கொண்டக் கடலையையும் வெங்காயத்தையும் இன்ன பிற அயிட்டங்களையும் சேர்த்து கொத்தமல்லி இலையை தூவி ஸ்பூனை சொருகி தரும் சேட்டுக் கடை சாட் வேறு, “யூ நோ இன் சுவீஸ் தே மேக் ஸ்னோ”ன்னு கம்ப்யூட்டரில் வெர்ட்சுவல் கடலை போடும் சாட் வேறு என்று திரும்பவும் ஞானோபதேசம் கிட்டியது இங்கே தான்.

"அதான் இங்கயே பேசறீங்களேடா ...அப்புறம் இதுல வேற என்ன"

"டேய் அது வேற இது வேற ...இதுல தெரியாதவங்க கூட ஃப்ரீயா பேசலாம் ஃபாரின்லேர்ந்து கூட வருவாங்க"

"ஓஹோ அவ்வளவு தூரத்துலேர்ந்து கூடவா...சரி என்ன பேசுவீங்க?"

"எங்க ஊர்ல பருப்பு புளி இன்ன விலை, உங்க ஊர்ல என்ன விலை...கோக்கோ கோலால ராத்திரி பல்ல போட்டு வைச்சா காலம்பற சுத்தமா அரிச்சுருமாமே அப்படியா...மூனு கிலோ வைக்கல் தின்னா எருமைமாடு எத்தன லிட்டர் பால் கறக்கும் இத மாதிரி நிறைய ஜெனரல் நாலட்ஜ வளர்த்துக்கலாம்"

"ஓஹோ இந்த சந்தேகத்தலாம் யாருகிட்டா கேப்பீங்க"

"லோன்லிகேர்ல், ஜஸ்ட் எயிட்டீன், எக்ஸ்மாடல், யுவெர்ஸ்_ஷகீரா, லவ்லி_ஸ்வேதா, யங்கேர்ல்வெயிட்டிங் இந்த மாதிரி நிறைய கற்ற மாதர்கள் இருப்பாங்க..அவங்க நம்மள அறிவு வழியில் கூட்டிட்டுப் போவாங்க.."

"ஆமாண்டா விஞ்ஞானம் நமக்கு அறிவ வளர்க்க எவ்வளவு சந்தர்ப்பங்களைத் தருது. 'We've arranged a civilization in which most crucial elements profoundly depend on science and technology' - ன்னு கார்ல் சாகன் சொல்லியிருக்கார் " என்று  எனக்கும் சாட்டிங்க் கருத்துப் பூர்வமாய் பிடித்துவிட்டது.

நான் சொல்லும் காலகட்டம் கூகிள் நிறுவனம் பற்றி தெரியாத காலகட்டம். யாஹூ மற்றும் 123இன்டியா மட்டுமே சாட்டிங் வசதிகள் வழங்கி வந்த காலம்.  நன்பேண்டான்னு என்று நண்பரே கூட வந்து லாகின் ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய உதவினார். டுபுக்கு இரண்டாம் ஆண்டு (என்) ஐ.ஐ.டின்னு போடுன்னு சொன்னது நண்பருக்கு சரியாய் வரும் என்று தோன்றவில்லை. லாகின் ஐடிலயே ஒரு ஃபயர் இருக்கனும்...பொண்ணுங்கள சுண்டி இழுக்கனும்ன்னு  எனக்காக ரொம்ப மெனக்கெட்டார். ‘கட்டிளங்காளை’ என்று அவர் போட "டேய் யாருடா அந்த கட்டிளங்காளை"ன்னு நான் கேட்க அப்புறம் நான் தான் கட்டிளங்காளைன்னு எனக்கே அன்றைக்கு தெரிந்து, கடைசியில் பெயர் ஜோராக முடிவாகியது. எல்லாத்தையும் பூர்த்தி செய்து பட்டனை அமுக்கினால் "Dude ஏற்கனவே ஏகப்பட்ட கட்டிளங்காளைகள் நம்ம சேட்டிங்ல சுத்திக்கிட்டு திரியுதுங்க...வேணும்னா கட்டிளங்காளை_7383749347 ஐ.டி இருக்கு, எடுத்துக்கோன்னு கம்ப்யூட்டர் நக்கல் விட்டது. ஆகா உண்மைத் தமிழன் ஐ.டி மாதிரி ஆயிடிச்சேன்னு ரொம்ப யோசித்தேன்.

"இதுக்கெலாம் மேஷம் மீனம் பார்க்காத எடுத்துக்கோ எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாகிடும்"ன்னு எனெக்கென்னம்மோ கேன்சர் வந்த மாதிரி அட்வைஸ் பண்ணி ரெஜிஸ்த்தர் பண்ணிவிட்டார் நண்பர்.

அடுத்த நாள் மவுண்ட் ரோடில் ஒரு ப்ரவுசிங் சென்டருக்கு பக்கத்தில் ஒரு முக்கியமான வேலை இருந்தது. ஒரு மணி நேரம் ஆகும் அதுவரைக்கும் பக்கத்திலிருக்கிற ப்ரவுசிங் சென்டரில் 123இன்டியா சைட்ல போய் சேடிங் பண்ணிட்டு வாங்கன்னு அவர்களே சொல்லிவிட்டதால் வேறு வழியில்லாமல் ப்ரவுசிங் சென்டருக்கு போக வேண்டியதாகிவிட்டது. லாகின் ஸ்க்ரீன் பார்த்த போதே ஒரே கிளுகிளுப்பாய் இருந்தது. ஆனால் இளம் சமுதாயத்திற்கு தான் எவ்வளவு சோதனை - முந்தின நாள் ரெஜிஸ்தர் செய்த கட்டிளங்காளை 738 க்கு அப்புறம் வரும் நம்பர்கள் மறந்து போய் விட்டது. எனவே முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதாகிவிட்டது. இருபத்தி நாலு மணிநேரத்தில் கட்டிளங்காளைகள் ஜனத்தொகை அதிகமாகி இந்த முறை 8759362301 என்று வந்தது. கவனத்தை சிதறவிடாமல் நம்பரை நோட்டில் குறித்து வைத்துக் கொண்டேன். சீனியாரிட்டி முக்கியம் இல்லையா?

இந்த சந்தர்ப்பத்தில் பிள்ளையாரை விட முருகனே பெட்டர்ன்னு அவரை வேண்டிக்கொண்டு லாகின் செய்தால் முருகன் முருகன் தான். எனக்கு அடுத்த பெயராக லாகின் செய்தவர்கள் பட்டியலில் க்யூட்கரீஷ்மா பெயர் இருந்தது. நான் (என்) ஐ.டி.யில் படிக்கிறேன் 94% வைத்திருக்கிறேன்னு அறிமுகப் படுத்திக் கொண்டு மெசேஜ் அடித்தேன். நடுவில் வயர் ஏதாவது லூஸ் கணெக்க்ஷனாகி இருக்குப் போகிறது, மெசேஜ் சரியாய் போய்ச் சேரவேண்டுமே என்று ஒன்றுக்கு மூன்று முறை அனுப்பினேன். க்யூட்கரிஷ்மா என்ன க்யூட்டோ கருமாந்திரம் பதிலே வரவில்லை.

அதற்கடுத்தாக  என்னை ஈர்த்த பெயர் ஹார்னி19f. அந்தப் பெயரில் 19f இன்ட்ரஸ்டிங்காய் இருந்தது. " ஹலோ எங்க முந்திய வீட்டு நம்பரும் 19f . நம்க்குள்ள என்ன ஒரு ஒத்துமை பார்த்தேளான்னு" என்று அதிரடியாய் ஒரு மெசேஜை தட்டி இம்ப்ரஸ் செய்தேன். என் கெட்ட நேரம் ஹார்னி19f சாப்பாடுக்கு லாகவுட் செய்யாமல் வெளியே போய் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்டாயம் நான் அனுப்பிய அந்த அதிரடி மெசேஜுக்கு உடனே பதில் வந்திருக்கும். சரி 19f இல்லாவிட்டால் என்ன அப்போது குடியிருந்த 44a/76 வீட்டு நம்பருக்கு ஏதாவது லாகின் மாட்டுகிறதா என்று பார்த்தேன். அந்த நம்பரில் ஒருதரும் இல்லை.

அதுக்கப்புறம் இன்னும் சில பல பேருக்கு மெசேஜ் அடித்தும் பதில் வரவில்லை. நேரம் முடிவடைகிற தருவாயில் தான் எனக்கு மண்டையில் பல்பு எரிந்தது. பதில் வராததற்கு காரணம் ஒரு வேளை நான் உட்கார்ந்திருந்த கம்ப்யூடரில் கோளாறு இருக்கலாமென்று. அங்கே இருந்த சென்டர் சூப்பரவைஸரை கூப்பிட்டு இந்த மாதிரி இங்கேர்ந்து போகிற முத்து முத்துனா மெசேஜ்கள் போய் சேருகிற மாதிரி தெரியவில்லை பதிலும் வரவில்லை என்னைய்யா கம்யூட்டர் வெச்சிருக்கீங்க பில் கேட்ஸ்ட சொல்லட்டுமான்னு சரிபார்க்கச் சொன்னது அவருக்கு பிடிக்கவில்லை. ஒரு மணி நேரம் தான் முடிந்துவிட்டதே முதல்லயே காசு வாங்கியாச்சேன்னு என்று என்னை பார்த்து நக்கலாய் சிரித்துக் கொண்டிருந்தார். எனக்கு கன்ஃபார்ம்டா கம்ப்யூட்டரில் தான் பிரச்சனை என்று தெரிந்துவிட்டது. "இப்படியே பல்லக் காட்டிண்டு இரு… சென்ட்டர் விளங்கிடும்...முதலாளியப் பார்த்தா உன்னைப் பத்தி ஓகோன்னு சொல்றேன்"னு கோவமாய் வந்துவிட்டேன்.

அடுத்த நாள் தான் நணபர் விளக்கினார். 19f என்பது வீட்டு நம்பராய் இருக்காது அது அவரின் வயதையும் பெண் என்பதையும் குறிப்பதாய் இருக்கும் என்று. இருந்தாலும் அவர் சாப்பிடத் தான் போயிருந்திருப்பார் என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டேன். 94 பெர்சன்ட் எடுத்ததை முதலில் சொல்லக் கூடாது, அதற்க்குப் பதிலாக ASL என்று கேட்கவேண்டும் என்று பொறுமையாய்  பாடம் எடுத்துரைத்தார்.

அப்புறம் மதுரை முத்து மாதிரி சென்னை அழகன்னு பெயரை கேட்டாலே சுண்டி இழுக்கிற மாதிரி மாற்றி வைத்துக்கொண்டேன். அதற்கப்புறமும் இரண்டு முறை  மவுண்ட்ரோடில் வேறு இடத்தில் வேலை வந்து, மறுபடியும் தாமதமாகி, அவர்களும் 123இண்டியாவில் சேட் செய்யச் சொல்ல, வேறு வழியில்லாமல் வேற ப்ரவுசிங் சென்டருக்குப் போகவேண்டியதாகி விட்டது. இந்த ப்ரவுசிங் சென்ட்டரில் வயர் லூஸ் கனெக்க்ஷன் இல்லமல் நன்றாக முறுக்கி விட்டிருந்தார்கள் போலும். அத்தோடு புது பெயரும் நல்ல ராசியாய் இருந்தது. பெங்களூர் இஷாவை இரண்டாவது நிமிடம் சுண்டியிழுத்து பதில் வந்தது. ஆனால் இந்த உலகம் இருக்கே உலகம், எல்லாத்துலயும் ரொம்ப கலப்படம் ஜாஸ்தி. சேட்டிங்க செய்ய ஆரம்பித்த பதினேழாவது நிமிடம் பெங்களூர் ஈஷா ஆம்பிளை என்று தெரிய வந்தது. "ங்கொய்யால " என்று ஆரம்பித்து ஒருவருக்கொருவர் மரியாதை செய்து கொண்டு "போடா போடா போய் வேற வேலையப் பாரு"ன்னு கனவான்கள் மாதிரி கைகுலுக்கி விடை பெற்றோம். அதே போல் அதற்கடுத்து வந்த ப்யூட்டிபுல் லில்லிf, மிஸ் ஜாஸ்மின்22f எல்லாமே பெண் பெயரில் வரும் ஆம்பிளைக் கபோதிகள் என்று தெரியவந்தது. "ஏண்டா உங்களுக்கெலாம் வெக்கமே இல்லையாடா... நாப்பது ரூபாய் குடுத்து ப்ரவுசிங்க் செய்வது சல்லிஸாய் போய்விட்டதா.. ரூபாயின் அருமை தெரியவில்லையா" என்று எனக்கு அவர்கள் மேல் ஆத்திரமாய் இருந்தது.

ஒரே ஒரு முறை தாய்லாந்திலிருந்து ரோஸ் என்ற பெண் மட்டும் உண்மையான பெண். டீச்சராய் இருந்தாராம். ஆனால் அவருக்கு வயது 58 என்று சொன்னவுடன் "குட்மார்னிங் மேடம்"ன்னு நான் படித்த கான்வென்ட் பழக்கத்தை பயன்படுத்தி "ஆஸ் ஐ அம் சபரிங் ஃப்ரம் பீவர்" படித்து ஓடி வந்துவிட்டேன்.. எப்பா ராசா இப்படி பொறுப்பில்லாத நேர்மை இல்லாத கூட்டத்தில் அவங்க ஊர் அரிசி பருப்பு விலை கேட்க ஒவ்வொரு தரமும் ப்ரவுசிங் சென்டருக்கு நாற்பதுரூபாய் அழ முடியாது என்று ஜகா வாங்கிவிட்டேன். அப்புறம் கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை கிடைத்த பிறகு  மவுண்ட் ரோடு ப்ரவுசிங் சென்டருக்கு பக்கத்தில் போக வேண்டிய வேலை வருவதும் நின்று விட்டது.

நிற்க இப்ப என்ன சொல்ற நீன்னு குழம்ப வேண்டாம். சும்மா உடாத நீ சேட்டிங்கே பண்ணலையான்னு கொதிக்க வேண்டாம். பதிவின் லேபிளைப் பாருங்க... அப்பிடீன்னா இந்தப் பதிவின் உட்கருத்து புனைவுன்னு அர்த்தம். கோக் எடு என்ஜாய் பண்ணு போதுமா சாமி. அவ்வ்வ்வ்வ்வ் நல்லாக் கேக்குறாய்ங்கய்யா டீட்டெயிலு....!!


தமிழ்மண விருதுகளில் - ஒரு கள்ளவோட்டு கூட போடாமல் வித்துவான் பதிவு உங்கள் ஏகோபித்த அன்பினால் கடைசி சுற்றுக்கு தேர்வாகி இருக்கிறது. வோட்டு போட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. உங்களுடைய அன்பிற்கு மிக்க கடமைப்பட்டுள்ளேன் !!

Saturday, January 01, 2011

ஜில்பான்ஸ் - 010111

வேண்டுவன எல்லாம் கிடைக்க அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இங்கே இந்த வாரம் முழுவதும் விடுமுறை. நண்பர்கள் வீடு பார்ட்டி என்றிருப்பதால் வழக்கம் போல் (??!!) எழுதமுடியவில்லை. அடுத்த வாரத்திலிருந்து நிலைமை சீராகும் என்று நம்புகிறேன்.

இந்த வார சினிமா

மன்மதன் அம்பு - இந்த படம் ஹார்ட் கோர் கமல் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாய்த் தான் இருக்கும். முதல் பாதி வரை ஜோராய் செல்லும் நேர்த்தியான கதை. இரண்டாம் பகுதியில் க்ளாம்க்ஸ் ட்ராமா ஆரம்பிக்கும் போது கதை சூடு பிடித்து...தோ வர்றார்ரா தலீவர்ன்னு நாமும் டென்ஷனாகும் போது குழப்பம் ஆரம்பிக்கிறது. இந்த கட்டத்தில் ஸ்கிரின்ப்ளேயும் வசனமும் பிசுபிசுக்க ஆரம்பிக்கிறது. எனக்கு தனிப்பட்ட விதத்தில் இந்த இடத்தில் லைவ் சவுண்டு வேறு கைவிட ஆரம்பித்த மாதிரி தோன்றியது. பல முடிச்சுகளைப் போட்டு ரணகளமாகி இடியாப்பத்தை பிழிந்த உடனேயே பிரிக்க முயற்சித்த மாதிரி இருந்தது. சில அரத டயலாக்குகளும் அவர்கள் ஒருத்தருக்கொருத்தர் பாடல்கள் பாடி பேசிக்கொள்வதும்...ஸ்ஸப்ப்பா தாங்கல. இன்னா தலீவா இப்படி பண்ணிப்புட்ட? நீலவானம் பாடலும் படமாக்கப்பட்ட விதமும் சூப்பர். படத்தில் சங்கீதாவிற்கு செம சான்ஸ். டாக்ஸி ட்ரைவர் கதாபாத்திரம் ப்ரான்சில் படப்பிடிப்பு உதவியதற்கு கைமாறு செய்த வகையில் புகுத்திய மாதிரி இருக்கு. கதைக்கு கொஞ்சம் கூட உதவவில்லை கொட்டாவிக்குத் தான் உதவுகிறது. சீராக இருக்கும் மாதவனை க்ளைமாக்சுக்காக குடிகார கம்னாட்டியாக்கி படு முட்டாளாக சித்தரித்திருப்பது கொடுமையிலும் கொடுமை. கமல் விஜய் டீ.வி இன்டர்வியூவில் பேசுவது மாதிரி சில இடங்களில் வசனங்களை அமைத்திருக்கிறார். திரிஷா ட்ராயர் போட்ட தம்பி மாதிரி படம் நெடுக வருகிறார். த்ரிஷாவை பிடித்தவர்கள் போய்ப் பார்த்து சந்தோஷப் பட்டுக்கொள்ளலாம். ஆனைக்கு பானை சரியாப் போச்சுன்னு திடீர்ன்னு மாதவன் சங்கீதா காதலிக்க கமல் த்ரிஷாவை காதலிப்பதாக சுபம் போடுகிறார்கள். கஷ்ட காலம். மொத்ததில் என்னளவில் படம் க்ளைமாக்ஸ் வரை சூப்பர். மிச்சபடி தேறும் ஆனா தேறாது.

ஈசன் - இதுவும் எனக்கு கொஞ்சம் ஏமாற்றமே. படத்தில் வரும் அரசியல்வாதி பாத்திரப் படைப்பு அருமை. அதுவும் டீல் பேச வந்திருக்கும் தொழிலதிபர் முன்னால் அரசியல்வாதி சட்டை வேஷ்டியை சர் சர்ன்னு உருவி போட்டு லுங்கிக்கு மாறும் காட்சி நச். திடீரென்று ஈசன் காரக்ட்டரை நுழைக்கிறார்கள். இரண்டாம் பகுதியில் காங் ரேப், ஏகப்ப்ட்ட ரத்தம், இரும்பு கம்பியினால் நங்கென்று அடிக்கும் காட்சிகள் என்று கொஞ்சம் ராவாக இருக்கிறது. சமுத்திரகனி போலிஸ் பாத்திரத்துக்கு கனகச்சிதம். நடிப்பில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். அதுவும் மேலிடத்து பிரஷர் காரணமாக கையாலகாதனத்தை அவர் வெளிக்காட்டும் இடங்களில் அருமையாக செய்திருக்கிறார். கர்பவதிகள் படத்தை அவாய்ட் செய்யவும்.

இந்த வார படிப்ஸ்
"கல்யாண சமையல் சாதம்" - அறுசுவை நடராஜன் அவர்கள் எழுதி விகடனில் தொடராய் வந்தது. சின்ன வயதில் தான் அனுபவித்த கஷ்டங்கள் முதற்கொண்டு அவரது பழுத்த அனுபவத்தில் நடந்த பல சுவையான சம்பவங்களை மிக சுவாரசியமாக தொகுத்திருக்கிறார். கிடைத்தால் வாசிக்கவும். அருமை.

"ராஜிவ் காந்தி கொலை வழக்கு" - கிழக்கு பதிப்பகம் வெளியீட்டில் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் சி.பி.ஐ தலமை புலனாய்வு அதிகாரி ரகோத்தமன் எழுதிய புத்தகம். நண்பனின் வீட்டில் சும்மா படிப்பதற்கு எதாவது புஸ்தகம் கொடேன் என்று வாங்கி படிக்க ஆரம்பித்தேன். கையில் எடுத்தது முதல் முடிக்கும் வரை அத்தனை விறு விறுப்பு. பல கிளைகளையும் பல கோணத்திலும் சொல்ல வேண்டிய விஷயங்களை குழப்பமில்லாமல் அருமையாக தொகுத்து குடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே இதே விஷயத்தை கையாளும் "குப்பி" திரைப்படமும் அருமையாக எடுக்கப் பட்டிருந்தது. புத்தகத்தை படித்து முடித்தவுடனே குப்பியை திரும்ப பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படிக்கவும்.

தள்ளி வைக்கப்பட்ட துக்கம்

தமிழ்மண விருது முதல் ரவுண்டில் என்னுடைய மூன்று பதிவுகளுமே அடுத்த கட்டத்திற்கு போய் இருக்கின்றன. வாக்காளர்கள் கில்லாடிகள். என்ன முதல் மாடியிலிருந்து தூக்கி போடுவதை விட அதற்கடுத்த மாடியிலிருந்து தூக்கிப் போட்டால் சேதாரம் அதிகம் என்று தெளிவாய் இருக்கிறார்கள். இரண்டாவது மாடிக்கு தூக்கி விட்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

இந்த வார கேள்வி
"நீங்க ஏன் டுபுக்குன்னு பெயர வைச்சிக்கிட்டு இருக்கீங்க. கூப்பிடுவதற்க்கு கொஞ்சம் தர்மசங்கடமாய் இருக்கு"ன்னு - ஷ்ஷ்.. கேட்டிருக்காங்க.
நிறைய பேர் இதையே அவ்வப்போது கேட்டிருப்பதால் விளக்கம் சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.

நான் ப்ளாக் ஆரம்பித்தது 2003ல். முதலில் இங்கிலிபிஸில் ஆரம்பித்தாலும் சீக்கிரமே தமிழுக்குத் தாவி விட்டேன். அப்போது தமிழில் இருந்த பதிவுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். இப்போது இருப்பது மாதிரி திரட்டிகள் எல்லாம் கிடையாது. ப்ளாக்கரில் பின்னூட்ட வசதி கூட கிடையாது. ஹாலோ ஸ்கேன் போன்ற ஆட் இன் போட்டு தான் ஓட்டி கொண்டிருந்தோம். நமக்கு ஒரு பதிவு தெரிந்து அங்கே போய் கமெண்டு போட்டால் அங்கே படிக்க வருபவர்கள் நம் பெயரை க்ளிக்கி நம்ம பக்கத்துக்கு வருவார்கள். இது தான் தெரியாத ஒருவர் நம் பக்கத்துக்கு வருவதற்கான ஒரே நேர் வழி. கூகிள் சேர்ச், மற்றவர் சொல்லி வருவது இதெல்லாம் மிக மிக சொற்பமே. இதில் எல்லாரும் எல்லாரையும் க்ளிக்கி வருவார்கள் என்று நிச்சயம் கிடையாது. மனதோடு மனீஷா, சுகமில்லாமல் சுவாதி, க்யூட் கேர்ள், ஆக்சுவலி அனு, வானத்தைப் பார்த்தபடி வானதி போன்ற பெயர்களுக்கு ஆகும் போனியில் ஒன்றில் பத்து கூட அமிஞ்சிக்கரை முருகன், ஆல்தோட்ட பூபதி, சப்தமில்லாமல் சபாபதி, ஆயிரத்தில் ஒருவன் பெயர்களுக்கு ஆகாது. சரி இதை வேறு விதமாய் தான் சமாளிக்கனும்ன்னு ஒரு வித்தியாசமான பெயராய் யோசித்துக் கொண்டிருந்தேன். கிட்ட வாங்க ஒரு ரகசியம். இதுவா அதுவான்னு நான் ஷார்ட்லிஸ் செய்திருந்ததில் முடிவு செய்த பெயர் "லொடுக்கு பாண்டி" என்பதே! அனால் அடுத்த நாள் ப்ளாகரில் விபரங்களை குடுக்கும் போது அவசரத்தில் இன்னொரு சாய்ஸான டுபுக்குன்னு போட்டு ஒரு போஸ்டும் போட்டு விட்டேன். ஒரு வாரம் கழித்து தான் உரைத்தது. சரி இருக்கட்டுன்னு விட்டுவிட்டேன்.

இந்த பெயரை தர்ம சங்கடமாய் பார்ப்பவர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இதை ஒரு அர்த்தம் தெரியாத ஸ்பானிஷ் பெயராகவோ அல்லது சிந்திக்கும் கோமாளி என்று அர்த்தம் வரக்கூடிய லத்தீன் பெயராகவோ மட்டும் பாருங்கள். தமிழில் நாம் வழி விடுங்கள் என்று சொல்வதை கேரளாவில் போய் சொன்னால் வாயையும் அதையும் பொத்திக் கொண்டு சிரிப்பார்கள் :)). அதற்காக வழி விட சொல்லாமல் இருக்கிறோமா? அதே போல் தான் இந்த டுபுக்கு என்ற ஸ்பானிஷ் பெயரும் :P தமிழில் சில விஷமிகள் வேறு அர்த்தம் வைத்திருக்கலாம். கண்டுக்காதீங்க. அ ரோஸ் இஸ் அ ரோஸ் இஸ் அ ரோஸ். அம்புட்டுத்தேன்.

(இது போக ஒரு நல்ல அறிவுப் பூர்வமான கேள்வி வைத்திருந்தேன் ஆனால் பதிவு ரொம்ப நீளமாகிவிட்டதால் அடுத்த பதிவில்)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.