Friday, February 23, 2007

The Minute - நான் நடித்த பட ரிலீஸ்

நான் ஒரு படத்தில் நடித்தைப் பற்றி முன்னம் பதிந்திருந்தேன். அப்பிடியே சந்தடி சாக்குல மறந்துவிடுவீர்கள் என்று நினைத்தேன். கரெக்டாக நியாபகம் வைத்துக்கொண்டு தர்ம அடிக்கு போன பதிவில் ஒருவர் பின்னூட்டம் போட்டு அடிபோட்டுவிட்டார்.

இது சேனல் ஃபோர் போட்டிக்கு எடுத்த படம். போட்டியின் தலைப்பு "The Minute". படம் மொத்தமே ஒரு நிமிடத்துக்குள் தான் இருக்கலாம். என்னுடைய நடிப்பை விட்டுத் தள்ளுங்கள்.(அது என்னிக்குமே ஆஸ்கார் ரேஞ்ச் தான் :) ) இந்த சவாலுக்கு என்னுடைய முந்தைய அனுபவப் பதிவை கருவாக எடுத்துக்கொண்டு புரொடக்க்ஷன் வேலைகளில் டைரக்டர்கள் திறமையாக செயல் பட்டிருக்கிறார்கள் என்பது என் கருத்து. பின்னனி இசையும் பிரமாதம். என் நடிப்பை விட டைரக்க்ஷனை, எடிட்டிங்கை பாராட்டுவீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.

படம் பார்க்க.. --> The Minute


இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு மூன்று முன்னனி டைரக்டர்கள் கூப்பிட்டர்கள். ஒன்று பூக்கடை பஜாரில் பயங்கர கூட்டத்துக்கு நடுவே எல்லாரையும் தள்ளிக் கொண்டு எங்கேயோ அவசரமாக போக வேண்டிய நல்ல சேலஞ்சிங் ரோல். இன்னோன்று ஒரு ஊர்வலத்தில் ஊரில் உள்ள எல்லோரும் கிழக்கேயிருந்து மேற்க்கு நோக்கி சென்று கொண்டிருக்க நான் மட்டும் எதிர் திசையில் ஆடு திருடின கள்ளன் மாதிரி முழித்துக் கொண்டே பதுங்கிப் பதுங்கி வருகிற மாதிரி நடிக்கும் வித்தியாசமான ரோல். மூன்றாவது ஒரு சாவு ஊர்வலத்தில் வாயில் துண்டை கடித்துக் கொண்டே நடந்து நடித்து வருவது மாதிரி பட்டையக் கிளப்புகிற ரோல்.

வித்தியாசமான பாத்திரங்களாக இருந்தாலும் கதைக்களம் ஒரே மாதிரியாக இருக்கிறதே என்று வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
என்னுடைய நடிப்பைப் பற்றியும் உங்களுக்கு சொல்லுவதற்கு ஆயிரம் இருக்கும். (குறிப்பக அந்த கடைசி ஷாட்டில் ஃபீலிங்காய் ஸ்லோ மோஷனில் லுக் விடுகிறேனே :))) ) ஓ.கே விதி யார விட்டது. தர்ம அடி ரெடி ஸ்டார்ட் மீசிக்....

Friday, February 02, 2007

Raincoat


மு.கு - என்னைப் போல் படம் பார்க்கும் முன் சினிமா விமர்சனங்களைப் படிக்காதவர்கள் கவனத்துக்கு...இந்தப் பதிவில் லேசாக கதையை சொல்லி இருக்கிறேன்.

மப்பும் மந்தாரமுமாய் வானம், வெளியே நல்ல குளிர், தலை போகிற வேலை ஒன்றும் இல்லாமல், பொழுதும் போகாமல் சோம்பேரித்தனாய் இருக்கும் மத்தியான வேளை- எனக்கு ரொம்ப பிடிக்கும். சூடா மிளகாய் பஜ்ஜியும் ஒரு மசாலா டீயும் கிடைத்தால் பஞ்சத்தில் அடிப்பட்டவன் மாதிரி ஒரே அமுக்காய் அமுக்காமல், பாலு மஹேந்திரா படத்தில் வருவது மாதிரி மெதுவாக சுவைத்து தின்று விட்டு, "தூ...இதெல்லாம் ஒரு பொழப்பா..." என்ற பார்வையெல்லாம் கண்டு கொள்ளாமல் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுக்கையிலே கிடப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த மாதிரி சுகமான மதியத்தில் பார்த்தது தான் "ரெயின்கோட்".

குழந்தைகளுக்கு அறிவை வளர்க்க லைப்ரரியில் ஃப்ரீயாக ரெண்டு டி.வி.டி எடுத்துக் கொள்ள கார்டு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எல்லாக் குழந்தைகளுக்கும் அறிவுப் பசி ரொம்ப அதிகம் என்பதால் முக்கால்வாசி நாள் குழந்தைகள் செக்க்ஷன் டிவிடி எல்லாம் காலியாகத் தான் இருக்கும். பெரியவர்கள் செக்க்ஷனில் யூ, மற்றும் பி.ஜி ரேட்டிங் டி.வி.டிகளையும் இந்தக் கார்டில் எடுத்துக் கொள்ளலாம். சும்மாக் குடுத்தா விட்ருவோமா? நோண்டிப் பார்த்ததில் மாட்டியது தான் ரெயின்கோட். நம்ம கிஸான் ரகுதாத்தா ஹிந்தியை வைத்துக் கொண்டு வழக்கமாக ரொம்ப அல்லாட மாட்டேன். அட்டைப் படத்தில் ஐஷ்வர்யா ராயைப் பார்த்தவுடன் கொஞ்சம் பதறலாய்த் தான் இருந்தது. கல்யாணமான புதிதில் "தாள்" படத்தில் ஐஷ்வர்யா ராய் உண்ர்ச்சி பூர்வமாக ஆடிக்கொண்டிருந்த ஒரு பாட்டை தங்கமணி துணி தோய்த்துக் கொண்டிருக்கும் போது ரீப்பேள் செய்து பார்த்து கையும் களவுமாய் மாட்டிக் கொண்டேன். "ஹிந்திக்காரன் என்னமா பாட்டெழுதியிருக்கான்...ப்யார்..கலம் கஹான் ஹை..? கலம் மேஜ் பர் ஹை....இஷ்க்...அப்படியே தத்துவார்த்தமான வரிகள்..இந்த வரிகளுக்காகவே எத்தனை தடவை வேணுமானாலும் பார்க்கலாம்..."ன்னு சமாளித்துப் பார்த்தேன் எடுபடவில்லை...தங்கமணி துணிக்கு பதிலாக என்னை தோய்த்து எடுத்து ஆடியோ கேசட் வாங்கி தந்து பாட்டை ட்ரான்ஸ்லேட் பண்ண அசைன்மெண்ட் குடுத்துவிட்டார். அன்றைக்கு தங்கமணி தலைமையில் நானும் ஐஷ்வர்யா ராய் எதிர்ப்பு சங்கத்தில் சேர்ந்தது தான்...அப்புறம் ஹூம்... வீட்டில் ஐஷ்வர்யா ராய் படத்துக்கு தடா. இந்தப்படம் கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கும் என்று அட்டைப் படத்தில் தெரிந்தது. பழைய சம்பவத்திற்கு பிறகு நிறையவே நாளாகிவிட்டதால், ரிஸ்க் எடுக்கலாம் என்ற தெம்பு வேறு. தெகிரியமாய் எடுத்துவிட்டேன்.

"நாமளும் டேக்ஸ் கட்றோம், குழந்தைகளுக்குன்னு ஃப்ரீயா ஒரு டிவிடி கிடைக்கிறதா..எப்போ போனாலும் காலியாவே இருக்கு...கேள்வி கேக்க மாட்டோம் நாம இளிச்சவாயன்னு நினைச்சுண்டு இருக்கான்... இந்த அநியாயத்த சும்மா விடலாமா...அதான் கட்ற காசுக்கு ரெண்டு டிவிடியை குடுறான்னு என்ன படம்ன்னு கூட பார்க்காம கண்ணை மூடிக்கிட்டு எடுத்து வந்துட்டேன் " போட்ட பீடிகையிலேயே தங்கமணி உஷாராகிவிட்டார். இந்தப் படம் ரொம்ப நல்லாருக்காம்...எங்கியோ படிச்சேன் அப்பிடி இப்படின்னு ஒப்பேத்தி..ரெண்டு பேருமாய் சேர்ந்து பார்த்தோம்.

ஒரு வரிக் கதை. ஆனால் எடுத்த விதம் அருமையாக இருக்கிறது. மெகா சீரியல் மாதிரி நாலைந்து கதா பத்திரங்கள் தான். படத்தின் பெரும்பகுதி ஒரு அறையில் தான். ஸ்கிரீன் ப்ளே படத்தின் மிகப் பெரிய பலம். அஜய் தேவ்கனும் ஐஷ்வர்யாவும் ஒரு காலத்தில் காதலித்திருக்கிறார்கள் . அவர்கள் காதலையும், ஏன் பிரிந்தார்கள் என்பதையும் வலுவில்லாமல் சொல்லி இருக்கிறார்கள். கதையின் மையக் கரு அதில்லையென்பதால் தப்பித்தது. ஐஷ்வர்யா எதோ ஒரு கபோதியை கல்யாணம் பண்ணிக் கொண்டு ஏழ்மையில் கஷ்டப் படுகிறார். அஜய் தேவ்கன் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார். கல்கத்தாவுக்கு பொழப்பை கவனிக்க வந்த இடத்தில், அதை விட்டு விட்டு கொட்டுகிற மழையில் அஜய் ஐஷ்வர்யாவை சந்திக்க்க அவர் வீட்டுக்கு வருகிறார். ஐஸ்ஸின் கல்யாணத்திற்கு பிறகு இருவரும் முதன் முறையாக சந்திக்கின்றனர். இருவரும் அடுத்தவர் மனது கஷ்டப் படக்கூடாது என்பதற்காக பகட்டாய் இருப்பதாய் காட்டிக் கொள்கிறார்கள். படத்தின் மையக் கரு இந்த சந்திப்பு. பேசிக் கொண்டே இருக்கிறார்கள். எதிர்பாராத விதமாக அடுத்தவரின் ஏழ்மையை அவர்கள் அறியாமல் அறிந்து கொள்கிறார்கள். தங்கள் ஏழ்மையைக் காட்டிக் கொள்ளாமல், ஒருவருகொருவர் தெரியாமல் உதவி செய்கிறார்கள். கவித்துவமான எதார்த்தமான முடிவு. (கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா அபத்தமெல்லாம் இல்லை....)

ஐஷ்வர்யாராய் படம் நெடுக வடகிந்திய பாணியில் புடவை கட்டிக்கொண்டு வீட்டுப் பெண்மணியாய் வளையவருகிறார். பாந்தமாய் இருக்கிறது. அஜய்தேவ்கன்..நன்றாக நடித்திருக்கிறார். பாத்ரூமில் அழும் போது குழாயைத் திறந்துவிட்டுக் கொள்ளவேண்டும் என்று நண்பனின் மனைவி டிப்ஸ் கொடுப்பது, எல்லா பெண்களுமே கல்யாணம் முடிந்து வரும் போது அழுவது பெற்றோரை விட்டு பிரிவதனால் மட்டும் தானா என்று அஜய் சூசகமய் கேட்பது, என்று படத்தில் நிறைய இடங்கள் நச்சென்று இருக்கிறது. நண்பனின் மனைவியாக வரும் கதாபாத்திரம் அழகாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்தது.

ஐஷ்வர்யா ராயை வைத்துக்கொண்டு ஒரு பாரின் பாட்டு கூட இல்லை,லொட லொடவென்று பேசுவது பிரச்சனை இல்லை, ஐஷவர்யாவிடம் நடிப்பைத் தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை, படம் நன்றாக இருந்தால் போதும் என்றால் பாருங்கள்- பிடிக்கும்.