புத்தாண்டு
சின்ன வயதிலெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல் மாதிரி எங்கள் வீட்டில் தமிழ் புத்தாண்டு என்றால் சர்கரைப் பொங்கல், ஆங்கில் புத்தாண்டு என்றால் பால் பாயாசம் சாப்பாட்டில் இருக்கும். ஆங்கில புத்தாண்டு அன்றைக்கு ராத்திரி ஆட்டம் போடலாம். ஆட்டம் என்றால் குட்டைப் பாவாடை குமரிகளோடு கும்மாளம்லாம் இல்லை. ஹூம்... ஊரில் அதுக்கெல்லாம் ஏது வசதி. வீட்டிலிருந்து தப்பிக்க அன்றைக்கு தெரு பசங்களெல்லோரும் சேர்ந்து பஜனை மடத்தில் ஸ்பெஷல் பஜனை ஏற்பாடு செய்துவிடுவோம். (பஜனை என்றால் உண்மையான பஜனை).
மார்கழி மாதமாய் இருக்குமாதலால் பஜனை ஏற்பாடுக்கு ரொம்ப மல்லாட வேண்டியது இல்லை சுலபமாய் முடியும். ரகு அண்ணாவை நச்சரித்தால் அவர்கள் வீட்டிலிருந்து உம்மாச்சிக்கு பிரசாதமும் எங்களுக்கு கடையிலிருந்து அல்வாவும் வாங்கித் தருவார். ராத்திரி பத்து மணிக்கு ஆரம்பிக்கும் பஜனை, பதினோரு மணி வரைக்கும் அல்வா தின்ன தெம்பில் களை கட்டும். அப்புறம் நைசாக பஜனை மட பிரகாரத்த்தில் ஓரமாய் உட்கார்ந்து கொண்டு "ராக்கம்மா கையத்தட்டு" என்று இன்னிசைப்பாடல் பஜனை நடைபெறும். அங்கேயும் நான் தான் கஞ்சிரா வாசிப்பேன். "ராக்கம்மா கையத்தட்டா...? பஜனைமடத்துல பாடற பாட்டாட இது..பல்லத் தட்டு"ன்னு ஏதாவது ஒரு பெருசு வந்து பல்லவி பாடி விட்டு போகும். கரெக்டாக பன்னிரெண்டு மணிக்கு கோவில் மணி முழங்க...கோவிந்தாவோடு ஹேப்பி நியூ இயரும் சொல்லிவிட்டு வந்துவிடுவோம்.
இப்படி போய்க்கொண்டிருந்த புது வருட கொண்டாட்டங்களில் புதுவருட தீர்மானங்களை அறிமுகப் படுத்தியவர் சீனாதானா மாமா.(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அறுபது வயதுக்கு மேல். அடிக்கடி மாமாவுடன் அரட்டை அடிப்பதற்கு வீட்டுக்கு வருவார்.என் வாயையும் அடிக்கடி கிண்டுவார். நன்றாக இங்கிலிஷ் பேசுவாராகையால் மாமா என்னை அவரிடன் இங்கிலீஷில் பேசச் சொல்லுவார். பசங்கள் கூட்டமாய் அரட்டை அடித்துக்கொண்டிருந்தால் அவரும் வந்து கலந்துகொள்வார். எதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாலும் கவலையே பட மாட்டார் - ஒரு உப கதை சொல்லி அவர் வழியில் பேச்சை திருப்பிவிடுவார். பசங்களுக்கு கொஞ்ச நாட்களுக்கு அப்புறம் கடுப்பாக ஆரம்பித்தது. ஓட்ட ஆரம்பித்தார்கள்.
"நான் ஸ்கூல் படிக்கிறச்சே விஸ்வனாதன் விஸ்வநாதன்னு ஒரு பிரண்டு இருந்தான். அவன நாங்களெல்லாம் விசு விசுன்னு கூப்பிடுவோம்.." என்று சீனாதானா மாமா ஆரம்பிப்பார்.
"மாமா இவன் ஸ்கூல் படிக்கிறச்சே குஸ்வனாதன் குஸ்வநாதன்னு ஒரு பிரண்டு இருந்தான் அவன இவங்களெல்லாம்...."- ஒரு வானரம் பதிலுக்கு ஓட்டும்.
"இந்தக் கால பிள்ளேளுக்கு பெரியவா சின்னவான்னு ஒரு மட்டு மரியாதையே இல்லை.." என்று கடுப்பாகிவிடுவார். அதுக்கப்புறம் இங்கிலிஷில் எதிர் கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிடுவார். "என்விரான்மெண்டல்....ஸ்பஷ்டமா சொல்லு பார்ப்போம். எம்ஜியார் மெண்டல்ன்னு கும்பகோணம் வெத்தலை போட்ட மாதிரி கொதப்பிண்டு இருக்க...நாளைக்கு இன்டர்வியூக்கு போய் இப்படி தத்து பித்துன்னு உளருங்கோ...உடனே வேலை கொடுத்து உங்கள உட்காத்திருவான்... ஸ்போக்கன் இங்லீஷ் கத்துக்கோங்கடான்னா கிண்டல் அடிச்சுண்டு இருக்கேளே" என்று அதுக்கப்புறம் சீரியஸாகிவிடுவார். சீனாதான மாமா படிப்பு ஸ்போகன் இங்க்லீஷ் என்று ஆரம்பித்துவிட்டாலே பசங்களெல்லாம் உடனே சந்தைக்குப் போனும் ஆத்தா வையும்ன்னு கம்பி நீட்டிவிடுவார்கள்.மாமாவுக்கு பிரெண்டு என்பதால் நான் அவரிடம் வைத்துக்கொள்ளவே மாட்டேன்.
இப்பேற்பட்ட சீனாதானா மாமா ஒருதரம் நியூஇயர் ராத்திரி அரட்டையில் சிறப்பு விருந்தினாராக கலந்துகொண்டார். "வாட் இஸ் யுவர் நியு இயர் ரெசொலியூஷன்?" என்று தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரி மிரட்டலாக கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார். பசங்களுக்கு ரெசொலியூஷனுக்கு அர்த்தமே தெரியாது. ஒரு வானரம் "ராமா கில்ட் ராவணா" என்று தனக்குத் தெரிந்த விவிதபாரதியை ஆரம்பித்தது. "இந்தியா இஸ் மை கண்ட்ரி ஆல் இந்தியன்ஸ் ஆர் மை பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ்.." என்று இன்னொரு வானரம் ஸ்கூல் பிரேயரில் சொல்லுவதை ஒப்பிக்க ஆரம்பித்தது. "புதுவருஷத்துக்கு எதுக்குடா அழப்பிதழ் எல்லாம்?" என்று வானரம் என் முதுகைப் பிராண்ட..."மூதேவி அது இன்விடேஷன்...இது அதில்லை...ரெசோலியூஷன் - எங்களுக்கு இதெல்லாம் அடுத்த வருஷ செல்பஸில் தான் கவராகிறது மாமா" என்று நான் சொல்ல...சீனாதானா மாமா வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டார். அதுக்கப்புறம் அவர் க்ளாஸ் எடுத்ததில் தான் எங்களுக்கு புத்தாண்டு தீர்மானங்கள் பற்றியே தெரிய ஆரம்பித்தது. அந்த வருஷம் எல்லோரும் ஆளுக்கு ஒரு தீர்மாணம் எடுத்துக் கொண்டு கழுத்தில் போர்ட்டு மாட்டாத குறையாக தம்பட்டம் அடித்துக்கொண்டோம். மார்ச் வருவதற்குள் "டேய் நான் என்ன ரெசோலியூஷன் எடுத்துண்டேன்?" என்று மற்ற வானரங்களிடம் கேட்டு அடிக்கடி நியாபகப் படுத்தவேண்டியதாயிற்று.
அதற்கப்புறம் வருடா வருடம் நானும் எதாவது தீர்மானம் எடுத்துக்கொள்வேன். யாராவது டைரி கொடுத்தால் அதில் கொட்டை எழுத்தில் எழுதி வைத்துக் கொள்வேன். சிலவற்றை நினைத்துப் பார்த்தால் சிரிப்பாக வரும். "அடுத்த ஒலிம்பிக்ஸில் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வேன்" என்று ஒருதரம் தீர்மானம். அந்த வருஷமே ஒலிம்பிக்ஸ் வருகிறது என்று தெரிந்தவுடன் 'அடுத்த'வை அதற்கடுத்த என்று திருத்திவிட்டேன். காலையில் எழுந்து அம்பாசமுத்திரத்திலிருந்து பிரம்மதேசம் வரை நாலு பேருடன் ஓட்டப் பயிற்சி எடுத்து இரண்டு நாள் வேகமாய் ஓடினேன். மூன்றாம் நாள் நெஞ்சாங்கூட்டில் வலியெடுத்து...இனிமே என்னால முடியாதுப்பா நீங்களெல்லாம் ஒலிம்பிக்ஸ் போங்கோ நான் ஏஷியன் கேம்ஸோடு நிப்பாட்டிக்கிறேன் என்று ஜகா வாங்கி, உடம்புல பிடிக்காம விளையாடலாம் என்று அந்த தீர்மானத்தை அப்புறம் செஸ்க்கு மாற்றிவிட்டேன். அந்த வருஷத்துக்கப்புறம் இந்த மாதிரி ஒலிம்பிக்ஸ் ரேஞ்சுக்கு தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை. ஆனால் எடுத்த தீர்மானம் எதையும் நிறைவேற்றியதாக நினைவில் இல்லை. அதுக்கப்புறம் தீர்மானம் எடுப்பதாக இல்லை என்று ஒரு தீர்மானம் எடுத்தேன் அதுதான் இன்றளவும் ஓடிக்கொண்டிருக்கிறது..
நீங்க எப்படி?
கொஞ்சம் லேட் தான் இருந்தாலும்..
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
Thursday, January 04, 2007
Subscribe to:
Posts (Atom)