Sunday, March 29, 2009

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.7

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5   Part 2.6

"இன்னாருக்கு இன்னார் என்று எழுதிவைத்தானே தேவன் அன்று" கண்ணதாசன் எழுதிய பாடலை நம்பி வாழ்க்கையில் நிறைய இடத்தில் முயற்சியே பண்ணாமல் கோட்டை விட்டிருக்கிறேன். ஆனால் தேவன் சில இன்னார்களுக்கு மட்டும் வகை தொகையே இல்லாமல் எக்கச்சக்கமாய் எழுதிவைத்துவிடுகிறார். இந்த மாதிரி இன்னார்களை பார்க்கும் போது நாபிக் கமலத்திலிருந்து கப்புன்னு புகை மாதிரி ஒன்று எக்கச்சக்கதிற்கு கிளம்பும். அவனை முதல் முறை பார்த்ததே நாலைந்து பெண்கள் சுத்தி சூழத் தான். சுத்தியிருந்த யுவதிகள் கொள்ளை அழகு. எல்லாரும் மிஸ் யுனிவேர்ஸ் போட்டி நடக்கும் இடத்துக்கு வழி கேட்டுக்கொண்டிருந்த மாதிரி தான் இருந்தது. "இங்கே சகலவிதமான இடங்களுக்கும் வழி சொல்லப்படும்"ன்னு கழுத்தில் போர்டு மாட்டிக் கொள்ளத்தூண்டும் அழகு.

"எப்படீங்க இதெல்லாம்...அடுக்குமா அப்புறம் நாங்களெல்லாம் எங்க போறதாம்...?"

"....?"

"இல்ல...நீங்க ரெண்டு பேருக்கு வழி சொல்லிட்டு மிச்ச பேரெல்லாம் அங்க போய் வழி கேட்டுக்கோங்கன்னு இங்க எங்க பக்கம் கொஞ்சம் அனுப்பி இருக்கலாம்ல"

பெருமிதமும் வெட்கமும் கலந்து சிரித்தான். கபால்லுன்னு உடனே அவனை தோஸ்தாக்கிக் கொண்டேன். இந்த இந்தி படத்தில் அண்ணாக்கு கல்யாணம் ஆகும், அப்படியே அண்ணியோட குடும்பத்திலிருந்து தம்பிக்கு ஒன்னு செட் ஆகும்...உடனே ப்யார்...சிந்தகி...சப்னே. என்னைச் சொல்லி குற்றமில்லை ஹிந்தி படம் இந்த பச்சைமண்ணை கெடுத்துக் குட்டிச்சுவராக்கியிருந்தது. ஆனால் இதற்க்கெல்லாம் மேலே நேரம் என்று ஒன்று இருக்கிறதே. என்ன தான் தாடியெல்லாம் வைத்திருந்தாலும் ஆட்டுக்கு வால் அரை கிலோமீட்டரா வைத்திருக்கிறார் கடவுள்?

சில பெண்களுக்கு கண்ணே தெரியாது....என்னடா இங்க ஒருத்தன் வழி சொல்றதுக்குன்னே ராப்பகலா படிச்சிட்டு வந்து நிக்கிறானேன்னு ஒரு இங்கிதமே இருக்காது, நேரே போய் நம்ம இன்னாரிடம் போய் நிற்பார்கள். இன்னாரும் "நேரா போய் பீச்சாங்கைப் பக்கம் திரும்பு"ன்னு வழியைச் சொல்லாமல் தார் யாரு கண்டுபிடிச்சா, ரோடு யாரு போட்டான்னு பாடமெடுத்துக் கொண்டிருப்பான். "என்னாது கஜினியை ஹிந்தில எடுக்கப் போறாங்களா"ன்னு நைஸா ஜனரஞ்சகமாக ஜோதியில் ஐக்கியமாகப் பார்த்தாலும் நடக்காது. அந்தப் யுவதிகளுக்கு நம்மள மாதிரி ஹிந்தி பெர்சனாலிட்டியையெல்லாம் பிடிக்காது நடையைக் கட்டிவிடும். என்னடா இது அதிர்ஷடம் இமெயில்ல வந்தா தரித்திரம் இன்ஸ்டன்ட் மெசஞ்சர்ல வருதுன்னு இன்னாரிடம் ஒரு பாட்டம் அழுவேன். இன்னாரும் எனக்கு ஆறுதல் சொல்லுவது மாதிரி சிரித்துக்கொண்டே அந்தப்பக்கம் அந்தப் பெண்ணுக்கு டாட்டா காட்டிக் கொண்டிருப்பான்.

கன்னுக்குட்டி கணேசனிடம் கன்சல்டேஷன் பண்ணியதில்...இதற்கெல்லாம் சபையில் சொல்ல முடியாத ஒரு இடத்தில் மச்சம் இருக்கவேண்டும் என்று வாத்ஸ்யாயணர் சொல்லி இருப்பதாக தகவல் சொன்னான். அத்தோடு அவனையும் இந்தி பெர்ச்னாலிட்டியில் சேர்த்துக் கொண்டு "இதுக்கெல்லாம் கவலப்படாதடா மச்சி...நம்மள மாதிரி இந்தி பெர்சனாலிட்டிக்கெல்லாம் மெட்ராஸுல தான் மவுஸ் ஜாஸ்தி" என்றும், கிண்டியில் ஊரிலிருந்து வரும் பஸ் நிற்கும் ஆட்டோ ஸ்டாண்டுக்குப் பக்கத்திலேயே எங்கள் வரவை ஆவலோடு யுவதிகள் எதிரிபார்த்துக் காத்துக்கொண்டிருப்பார்கள் என்றும் உபரி தகவலும் குடுத்தான். சரி நம்பளுக்கான இன்னாரை மெட்ராஸுல எழுதிவைச்சிருக்கான் போல இருக்குன்னு ரொம்பவே ஆறுதலாக இருந்தது. மீசை ரொம்ப வளராவிட்டால் தெருவில் எல்லாரும் கன்வேர்ட்டேர்ட் ஹிந்தி பெர்சனாலிட்டி ஆகிவிடுவார்கள். எனக்கு வளர் சிதை மாற்றத்தின்(அடலெசன்ஸ்) ஆரம்பத்தில் அரும்பு மீசைக்கு முந்தய ஸ்டேஜில் இருந்தது.

ஆனால் இன்னார் கொஞ்சம் பர்சனாலிட்டியாய் கலராய் இருப்பான். அரும்பு மீசையும் அழகாய் இருக்கும். அதனாலேயே இன்னார் பக்கத்தில் இருந்தால் யுவதிகள் கூட்டம் நம்ம பக்கம் திரும்பி கூட பார்க்காது. இருந்தாலும் இன்னாரிடம் வழிகேட்டு விட்டு என்னிடம் இன்னார் சொன்ன வழி கரெக்ட்டு தானா என்று பேருக்கு சும்மா கன்பார்மாவது பண்ணிக் கொள்ளக்கூடாதா என்று நிறைய ஆதங்கப்பட்டிருக்கிறேன். ஆதங்கம் சில சமயம் சமுதாயத்தின் மீது வெறுப்பாய் மாறி பேசாமல் வெள்ளை ஜிப்பா போட்டுக்கொண்டு நெற்றியில் குங்கமத்தை கொழப்பி வெற்றித் திலகமிட்டுக் கொண்டு ஓம் கேசட்டை டேப்ரெக்கார்டரில் பிஜிம்யில் போட்டு விட்டு வெள்ளைக்காரர்களுக்கு குல சாமியாராய் போய்விடலாமா என்று தோன்றும். ஓம் கேஸட் வாங்க போதுமான பைனான்ஸ் இல்லாமல் வெள்ளைக்காரர்களுக்கு குலசாமியாய் போகும் முடிவுக்கு நிறைய தடவை (வெள்ளைக்காரர்களுக்கு) காலம் கனியட்டும் என்று ஒத்திவைப்பு தீர்மாணம் நடத்தியிருக்கிறேன்.

அப்புறம் காலம் கனிந்து "அட கிறுக்குப் பயலே உனக்கு இன்னார் கிண்டியில இல்லைடா இங்கயே பக்கத்திலயே அடுத்த ஊரில் இருக்கார்டா"ன்னு கடவுள் கனவில் வந்து சொன்னதுக்கப்புறம் ஓம் சாமியார் ஐடியாவை மூட்டைக் கட்டிவிட்டு...யுவதிகளுக்கு வழி சொல்வதெல்லாம் தூ....ஒரு பொழைப்பா...போங்கடா போங்கடா போய் புள்ளைக் குட்டிய படிக்க வைக்கிற வழியப் பாருங்கடான்னு பரம்பரை நல்லவனாய் மாறி..ஏறி உட்கார்ந்து மிதித்தால் ஒரு அட்ரெஸுக்கு தானாகவே போகிற மாதிரி சைக்கிளை ஆட்டோ ப்ரொக்ராம் செய்து விட்டேன்.

அப்புறம் காலம் போன போக்கில் வழி சொல்லிக் கொண்டிருந்த இன்னார் வெளியூருக்கு பெரிய படிப்பெல்லாம் படிக்கப் போய் இந்தியில் வழி சொல்லிக் கொண்டிருந்ததாக கேள்விப்பட்டேன். அனேகமாய் இப்போது அவனுக்கும் கல்யாணமாகி செட்டிலாகியிருப்பான். ஊருக்கே வழி சொன்ன அவனுக்கு ஒரு வழி அமையாமலா இருந்திருக்கும். இருந்தாலும் எந்த ஊரில் வழி அமைந்து எந்த இன்னாரோன்னு என்று இன்னாரைப் பற்றி நியாபகம் வரும்போதெல்லாம் ஆர்வமாய் இருக்கும்.

Monday, March 09, 2009

ஹாலிடே - குறும்படம்

ரொம்ப நாளாய் ஃபிலிம் காட்டிக்கொண்டிருந்த இரண்டாவது குறும்படம் ஹாலிடே உங்கள் பார்வைக்கு. முதல் குறும்படதின் அதே உதறலுடன் உங்கள் கிழிச்சுலு தொங்கப்போடலுவுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். இப்போது கொஞ்ச நாளாய் லண்டன் ஃபிலிம் அக்காடமியில் பாடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பிறகும், எடிட்டிங்கின் போதும் இந்த படதில் சில குறைகள் தெரிகின்றன. ஆனால் இந்தப் படத்தின் இடம் பொருள் ஏவல் வைத்துப் பார்க்கும் போது மனதுக்கு நிறைவாகவே இருக்கிறது. இதையே வேறு முறையில் சொல்லலாம் என்று இப்போது தோன்றினாலும் அதையெல்லம் பின்னொரு நாளுக்கு பின் தள்ளி இப்போது உங்கள் பார்வைக்கு. ஆனால் அதற்கு முன்

இடம்
காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்தாலாவது ஏதாவது லாஜிக் இருக்கும், ஆனால் கமர்கட்டு வாங்கப்போய் கழுதை வாங்கி வந்தால்? வாழ்த்து சொல்லப் போன இடத்தில் மண்டபம் பிடித்து அங்கேயே உடனேயே கல்யாணம் செய்துகொண்ட கதையாய் ஹாலிடேக்கு போன இடத்தில் மனதுக்குப் பிடித்துப் போய் குறும்படம்.

பொருள்

கதை திரைக் கதை எல்லாம் ரூம் போட்டு யோசிக்க டைம் இல்லாமல் டாய்லெட்டில் கூட பத்து நிமிஷம் தியானம் செய்து மிச்சத்தை களத்திலேயே மானே தேனே பொன்மானே போட்டு எடுத்தது. கையில் ஒரு டப்பா கேமிராவும் 60 வாட்ஸ் பல்பும் போடறதுக்கு ஒரு ப்ளாகும் இருந்தா மனசுல பெரிய டைரடக்கர்ன்னு நினைப்பான்னு திட்டாதீர்கள் நிறைய எனக்கு நானே கேட்டாகிவிட்டது.

ஏவல்

பள்ளிக்கூடத்துல ஆபிஸுலன்னு எவ்வளவு நடிச்சிருப்போம் எல்லாம் அத மாதிரி தான்..நீங்க சும்ம போட்டோக்கு போஸ் குடுக்கிற மாதிரி நின்னா போதும் மிச்சத்த நான் பார்த்துக்கிறேன்னு அரி அரின்னு அரிச்சதில் இவன் கொசுக்கடி தாங்கலைடான்னு நடிக்க ஒத்துக்கொண்ட இரண்டு புண்யாத்மாக்களுக்கு கோடானு கோடி நன்றி. இவர்கள் ப்ரொபஷனல் நடிகர்கள் இல்லையென்றாலும் வந்த இடத்தில் உடம்புக்கு முடியாத போதும் நான் என்னமோ கோடியைக் கொட்டி எடுக்கிற மாதிரி சின்சியராய் முடித்துகுடுத்ததிற்க்கு ஸ்பெஷல் நன்றி.

சரி சரி இதுக்கு மேலே அப்புறம் நீங்க தம்மடிக்க போய்விடுவீர்கள் என்பதால் இத்தோடு முடிச்சிக்கிறேன்...பார்த்துட்டு என்ன பழிவாங்குறத வாங்குங்க ....ஐ ஆம் தி வெயிட்டிங் :)

யூ டியூப் வழக்கம் போல் படத்தின் தரத்தை குறைத்துள்ளது. புல் ஸ்க்ரீனில் பெரிதுபடுத்திப் பார்த்தால் பிக்சல்கள் பிசிறடிக்கின்றன.



யூ டியூப் சைட்டில் நேராக பார்ப்பதற்க்கு - http://www.youtube.com/watch?v=7cl_soBE8IM

Tuesday, March 03, 2009

தமிழ்மண விருது - நன்றி

குழப்பங்கள் அதிகமாகும், மன உளைச்சல் தீவிரமாக இருக்கும். பணம் விரயமாவதை தவிர்த்தல் நல்லது. அடுத்த வீட்டுக்காரர் குட்மார்னிங் சொல்ல மாட்டார். வீட்டு ஆட்டுக்குட்டிக்கு சுகப்பிரசவம் ஆகும் என்று வரும் பேப்பர் ஜோசியம் மாதிரி கொஞ்சம் நிஜமாகவே குழப்பம் இருக்கிறது. கவனம் வேறு இப்போது வேறு பக்கத்தில் இருக்கிறது. அதனால் தான் இங்கே கொஞ்ச நாளாக எழுதவே இல்லை. இங்கே கூடுதலாக கொஞ்சம் லீவு போடலாம் என்று வேறு எண்ணம். இந்த சமயத்தில் தமிழ்மணம் விருதுகள் ரொம்பவே ஆறுதலாக இருக்கிறது.


வழக்கமாக போட்டி வெச்சிருக்காங்க ஐய்யா போய் வோட்டு போடுங்கன்னு சொல்லுவேன்...நீங்களும் உங்களுக்கில்லாமயான்னு போய் வோட்டு போடாம கரெக்ட்டா கவுதிருவீங்க. ஆனா இந்த தரம் என்னம்மோ சொல்லாமலே உங்கள ஏமாத்திட்டேன். பார்த்தா குறும்படத்துக்கு பர்ஸ்ட் ப்ரைசும், நகைச்சுவை பிரிவில் மூனாவது இடமும் கிடைச்சிருக்கு. எனக்கே ஆச்சரியம் தாங்க முடியலை...பெரிய மனசு பண்ணி வோட்டு போட்டு செயிக்க வெச்ச அத்தனை சனத்துக்கும் கோடானு கோடி நன்றியைய்யா...!!!!!

எனக்கு இங்க எழுதாம முடியாது. இங்கே டெய்லி நிறைய பேர் வந்து பார்த்து ஏமாந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும் ஸ்டட் கவுண்டர் சொல்லுது. உங்களை ஏமாற்றுவதற்கு ரொம்ப வருந்துகிறேன். ஆனால் ஏனோ தானோன்னு எழுதி கடுப்பேற்றுவதை விட இது எவ்வளவோ தேவலாம் என்று தோன்றுகிறது. நீங்களும் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். பெரிய எழுத்தாளர் ரேஞ்சுக்கு ஸ்டேட்மென்ட் விடுவது மாதிரி தோன்றலாம் எனக்கும் தெரியும் ஆனாலும் இங்கே வந்து போய்க்கொண்டிருப்பவர்களுக்காக நீங்கள் அப்படி நினைத்தாலும் இதைச் சொல்லிக்கொள்கிறேன்.

அடுத்த வாரத்திலிருந்து கண்டிப்பாக முடிந்தாலும் முடியாவிட்டாலும் எழுதுகிறேன். மார்ச் 9ம் தேதிக்கு முன்னால் அடுத்த பதிவு கண்டிப்பாக இருக்கும்.


தமிழ்மண விருதுகளில் தேர்ந்தெடுத்ததிற்க்கு மனமார்ந்த நன்றி.