Sunday, December 21, 2008

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.6

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5

அந்த கம்பெனியில் நான் சேர்ந்து முப்பத்திநான்கு நாட்கள் இரண்டுமணி நேரம் தான் ஆகியிருக்கும். போன புதிதில் அலுவலக வண்டவாளங்கள் வெளிவராதால் அது சொர்கபுரியாய் இருந்தது. எப்போ வேணா வரலாம் போகலாம். முதல் நாள் ஒன்பது மணிக்கே போய் தேவுடு காத்து, பதினோரு மணிக்கு டிப்பார்ட்மெண்ட் ஹெட் வந்து, நான் குட்மார்னிங் சொல்லி அவர் குட் ஆப்டர்நூன் சொல்லி, எத்தனை மணிக்கு வந்தேன்னு கேட்டு, ஒன்பது மணிக்கு வந்தேன்னு சொல்லி, ஒம்போது மணிக்கா...அதெல்லாம் ஆபீஸ் வர்ற நேரமான்னு நாளைலேர்ந்து பதினோரு மணிக்கு...வான்னு அறிவுரை சொல்லி, நீங்க தான் சார் என் குலதெய்வம்ன்னு கால்ல விழுந்து...அடுத்த நாள்லேர்ந்து பன்னிரெண்டு மணிக்கு ஆபீஸ் போய்...இந்த சொட்டத்தலையன் தொல்லை தாங்கல...அதான் லேட்டா வந்தாலும் லேட்டா தான் போறோம்ல..அப்புறம் ஏன் ஒருமாதிரி பார்க்கிறான்"னு அப்போது தான் அலுவலகத்தில் சௌஜன்யமாகிக் கொண்டிருந்தேன்.

சீட்டில் செட்டிலாகி முதல் அரைமணிநேரம் ஆர்யபட்டா சொன்னார்,அப்துல் கலாம் சொன்னார், நாரயணமூர்த்தி அவர் வீட்டு கக்கூஸை இன்னுமும் அவரே கழுவுகிறார்ன்னு வந்திருக்கும் மெயில் பார்வேர்ட்டையெல்லாம் படித்துவிட்டு, எத்தனை பார்வேர்டு மெயில் வருகிறது/அனுப்புகிறோம் என்பதற்கேற்ற மாதிரி தான் சம்பளம் என்ற நம்பிக்கையில், வந்த மெயிலை எல்லாம் நாமும் சகட்டு மேனிக்கு சி.இ.ஓ தவிரதலாக நமக்கு அனுப்பியவன் உள்பட(இப்படி கடுப்பேதுவதே ஒரு பெரிய சுகம்) மத்த எல்லாருக்கும் மாஸ் பார்வேர்ட் விட்டு இந்தப் பக்கம் திரும்பினால் சாப்பாட்டுக்கு மணியடித்திருப்பார்கள். கல்யாணமான புதிதில் ஆரம்பித்த பழக்கத்தில் தங்கமணி மூன்று அடுக்கு கேரியரில் லெவெல் காட்டியிருப்பார். முன்வினை பின்வினை தெரியாமல் முன்னால் செய்த வழிப்பறிக்கு, கூட இருக்கும் பஞ்சத்தில் அடிபட்ட கூட்டம் பதில் மரியாதை செய்தது போக மிச்சத்தை தொண்டைக்குழியில் அடைத்துவிட்டு வந்து உட்கார்ந்தால் மானிட்டர் - மானிட்டர் அடித்தது மாதிரி சொக்குப் பொடி போட்டு கண்ணைச் சொருகும்.

செஞ்சோற்றுக் கடனுக்கு ரெண்டு மூனு ஆபிஸ் மெயிலை "எஸ் ஆபிஸர்...ஓ.கே. ஆபிஸர்...டன் அந்தக் கப்பலை அஞ்சு கோடிக்கு முடிச்சிடலாம்"ன்னு விவரமா மெயில் அனுப்பிவிட்டு திரும்பவும் கடிகாரத்தைப் பார்த்தால் டீ.க்கு நேரமாகியிருக்கும். விவரம்கெட்ட ஆபீஸில் டெஸ்க்கில் கொண்டு வந்து குடுக்காமல் காண்டீனுக்கு வந்து குடிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். "துன்ன சாப்பாடே இன்னும் செரிக்கலை..அதுக்குள்ள டீயா..ஏகப்பட்ட வேலை இருக்கு.."ன்னு அலம்பலுக்கு நடுவில் கவர்மெண்ட் ஆபீஸில் எப்படி வேலையே பண்ணுவதில்லை என்பதையும் பேசிக்கொண்டே டீயைக் குடித்துவிட்டு வந்தால் டிப்பார்ட்மெண்ட் ஹெட், அமெரிக்காவில் சாட்டிலைட் விட்டு படியளக்கும் பகவானிடம் டெலிகான் அரெஞ்ச் பண்ணியிருப்பார். டெலிகானில் தோராயமாக பதில் சொல்லிவிட்டு மீண்டும் ஒரு மணி நேரத்தில் ஆன்சைட் மேனேஜர் கூப்பிட்டு இங்கிலீஸ் டு இங்கிலீஸ் ட்ரான்ஸ்லேஷன் பண்ணி பகவான் என்ன சொன்னார்ன்னு சொல்லுவார். 'அட அப்படியா சொன்னான் அந்த கம்மனாட்டி'ன்னு என்னம்மோ புரிந்தது மாதிரி காட்டிக்கொண்டு அந்த கோட் கமெண்ட் பண்ணி கம்பைல் பண்ணுவெதெல்லாம் ரொம்ப கஷ்டம்னு இங்கி பின்கி பாங்கிபோட்டு தோராயமா நாலு நாளாகும் என்று கணக்குப் போட்டு சொன்னால் ஆன்சைட் மேனேஜர் ஒரு வாரம் என்று ரவுண்ட் செய்து பகவானிடம் ஆட்டையப் போட்டு ஓக்கே வாங்கிவிடுவார்.

இந்த மாதிரி நிறைய அமெரிக்கா பகவான்களிடம் ஆட்டையப் போட்டு போட்டு ஆபிஸில் சாயங்காலம் ஆறு மணிக்கு அடையாறு ஆனந்தா பவனிலிருந்து இலவச ஸ்வீட் காரம் காபி ஏற்பாடு செய்திருப்பார்கள். 'அடுத்தாப்புல முந்திரி பக்கோடா என்னிக்கு"ன்னு விவராமாய் விசாரித்துகோண்டே மேய்ந்துவிட்டு அங்கே இருக்கும் டேபிள் டென்னிஸோ, பாஸ்கெட் பாலோ இருக்கிற பக்கமா ஒரு ரவுண்டு வந்து "இப்படி இப்படி விளையாடனும்...நான் சொல்லிக்குடுத்ததெலாம் ஞாபகம் இருக்கில்ல...? ஸ்டெப்பு ஸ்டெப்பு...."ன்னு போகிற போக்கில் தின்னது செரிக்க நாலு இலவச டிப்ஸை அள்ளிவிட்டு வந்து உட்கார்ந்து யாகூ ஹாட்மெயில்ன்னு மத்த மெயிலெல்லாம் பார்த்துமுடிக்கும் போது ஹெட் கிளம்பிபோயிருப்பார். இன்னிக்கு ரொம்ப வேலை...எல்லாத்தையும் டீபக்(கமெண்ட்) பண்ணிட்டேன் நாளைக்கு மிச்சத்தை பார்த்துக்கலாம்ன்னு அப்படியே அப்பீட்டு.

பக்கத்து டீமிலிருந்தாலும் அவர் மட்டும் சாப்பாடு நேரத்தில் "சாப்பிட வர்றீங்களா"ன்னு கலயாணவீட்டில் சம்பந்தியைக் கூப்பிடுவது மாதிரி என்னை எப்போதும் மரியாதையாய் அழைப்பார். நூத்துக்கு தொன்னூறு முறை நான் போகவில்லை என்றாலும் கூப்பிட மறக்க மாட்டார். ஒரு நாள் அவர் தனியாய் உட்கார்த்து சாப்பிடுவதைப் பார்த்து பாவமாகி, தங்கமணி ஊருக்கு போய் காண்டினில் சாப்பாடு என்று இருந்த ஒரு வாரம் முழுவதும் அவர் கூட சாப்பிட போனேன். ரொம்ப மிருதுவான சுபாவம். பேச்சுவாக்கில் அவர் காலேஜ் ப்ரெஷர் என்று தெரிந்தது. அப்புறம் நண்பர் ஆபிஸ் மெயிலில் என்னவெல்லாம் பண்ணக்கூடாது க்ளையன்ட் கிட்ட பேசும் போது எப்படி பேசனும் என்று அங்கே இங்கே என்று பேசி டாபிக் கடைசியில் லவ்வுக்கு மாறியது. பார்ட்டி நம்ம சினிமா முரளிக்கு நெருங்கின சொந்த ரகம். காதல் தெய்வீகமானது, அதையும் தாண்டி புனிதமானது என்று பழுத்த காதல் பக்திமான். ஒரு நாள் பக்திமானின் காதல் கலாட்சேபத்தைக் கேட்டுக்கொண்டிருந்து கேண்டீனில் கொத்தமல்லி சட்னி காலியாகிவிட்டது.

அதிலிருந்து "எப்பா ராசா...சித்த பொறு...அங்க சட்டிய தேய்ச்சு கவுத்திருவானுக...இன்னிக்கு வத்தக் குழம்பு வேற சூப்பரா இருக்குன்னு" நழுவிவிடுவேன். பக்திமான் மனம் தளரமாட்டார் கலாட்சேபத்தை பாஸ் பண்ணிவிட்டு மீண்டும் ரெஸ்யூம் செய்வார். அப்புறம் இதெல்லாம் சரிபட்டு வராது என்று "ரெண்டாவது ப்ளோர்ல உன்னை மாதிரி காதலிக்காக மூக்கை வெட்டிக்கிறவன் ஒருத்தன் இருக்கான் அவன நாளைக்கு அறிமுகம் பண்ணி வைக்கிறேன்"ன்னு சொல்லி வைத்தேன். "நீங்க காதலை ரொம்ப கேவலப்படுத்தறீங்க"ன்னு பக்திமான் வீறு கொண்டு எழுந்துவிட்டார்.

"எப்பா கேவலமெல்லாம் படுத்தல...நானும் லவ்ஸ் விட்டிருக்கேன்...என்ன என் லவ்ஸ் ட்ராஜடில முடிஞ்சிடிச்சு....அதான் வித்தியாசம்..."

"ஓ சாரி..அதான் காதல் பத்தி வெக்ஸாகியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்..."

"இல்ல பரவாயில்ல...இதுக்கெல்லாம் ரொம்ப வருத்தப்படாதீங்க...எங்க காதல் கல்யாணத்துல முடிஞ்சிருச்சின்னுங்கிறதத் தான் அப்படி சொன்னேன்"

அதுக்கப்புறம் பக்திமான் பேஜாராகி என்னை காதல் துரோகியாய் பாவித்து கொஞ்ச நாள் காதல் பத்தி அடக்கியே வாசித்தார். இருந்தாலும் எனக்கு அவரை சீண்டுவதே கொள்ளை இன்பமாக இருந்தது. அப்புறம் உங்க காதல் ஜோதி எந்த மட்டுக்கும் எரியுதுன்னு டெய்லி ஸ்டேடஸ் ரிப்போர்ட் கேட்பேன். (கவுண்டமணி) செந்தில் "போங்கண்ணே..."ரேஞ்சுக்கு பக்திமான் வெட்கப்படுவார். எத்தன நாளைக்குத் தான் நானும் இதையே வெச்சு ஓட்டறது..உங்க ஒயிட் டவ்வ கொஞ்சம் அடையாளம் காட்டினா நானும் நாலுபேர் கிட்ட கிசுகிசுக்க வசதியா இருக்கும்லன்னு டெய்லி கிண்டுவேன். "நீங்க வேற நானே இன்னும் லவ்வ சொல்லலை...சக்சஸான முதல் ட்ரீட் உங்களுக்குத் தான்"ன்னு பக்திமான் சத்தியம் செய்தார். ஆஹா ஆன் சைட் மேனேஜர் வந்தா ஆட்டையப் போடலாம்ன்னு ரிசர்வ் பண்ணி வைச்சிருந்த அந்த திரி ஸ்டார் ஓட்டல்ல பக்திமானுக்கு இலாகா மாத்திடலாம் போல இருக்கேன்னு "நீ அழகான பெண்ணை காதலிக்கவில்லை...நீ காதலித்ததால் அவள் அழகானாள்"ன்னு அங்க இங்கேர்ந்து தேத்தி தேத்தி கே.ஏ.ஏஸ் சேகர் கடையில லாட்டரி விற்பது மாதிரி அவனுக்கு டெய்லி கோடீஸ்வரன் ஃபீலிங்க்ஸை ஏத்தினேன்.

அப்புறம் தான் தெரிந்தது பையன் லவ்விக் கொண்டிருந்தது ஹெச் ஆர் எக்ஸிக்யூட்டிவ்வ. அவங்க கல்லூரி காம்பஸ்ஸில் கண்ட நாள் முதலாம். அடங்கொக்க மக்கா விவரமாத்தேன் இருக்கான்...நாமளும் ஒருதரம் ஏர்லைன்ஸ் மேனேஜரை கம்ப்ளையிண்டுக்காக பார்த்தோம்...ஹும்ம்ம்ம் டிக்கெட்டுக்காவது மிச்சமாயிருக்கும்ன்னு எனக்கு ஏப்பம் வந்து, அப்புறம் ஒரு படத்தில் கோர்ட் சீனில் வக்கீல் சுஜாதா "குற்றம் செய்தவனை விட குற்றம் செய்ய தூண்டியவனுக்குத் தான் தண்டனை அதிகம்"ன்னு பாயிண்ட்டாய் ஒரு டைகர் தயாநிதியை மாமாவூட்டுக்கு அனுப்பியது நியாபகம் வந்து, "எய்யா ராசா...டீம்ல பிரச்சனைன்னா மேனேஜர் கிட்ட சொல்லலாம்...மேனேஜர் கிட்ட பிரச்சனைன்னா ஹெச் ஆர்ல சொல்ல்லாம்..நீ ஹெச் ஆர்லயே பிரச்சனை பண்ற..இன்ஸ்டண்ட் சங்கு தான்...பார்த்துக்கோ"ன்னு நழுவி விட்டேன்.

அப்புறம் நான் அந்தக் கம்பெனியில் இருந்த அடுத்த நாலு மாதமும் பக்திமான் தூணுக்கு பின்னால் மறைந்து மறைந்து பிலீங்க்ஸாய் எக்ஸிக்யூடிவ்வை பார்த்துக் கொண்டிருப்பார். ஹெச் ஆர் மேடம் குடுத்த வேலை கன்பேர்மேஷன் ஆர்டரை ரூமில் ப்ரேம் போட்டு மாட்டியிருந்ததாக அவன் ரூமேட் தெய்வம் அசரீரி சொன்ன்னது. அப்புறம் நான் கம்பெனி மாறிவிட்டேன். சொல்ல முடியாது ....அவனிடம் இருந்த கடமையுணர்ச்சி சில சமயம் யோசிக்கும் போது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கும். கிறுக்குப் பயலே இந்த மாதிரி அதீத கடமையுண்ர்ச்சி எல்லாம் கடைசியில ட்ராஜடில தான்டா முடியும்ன்னு அவனுக்கு மெயிலாவது அனுப்பியிருக்கலாம்ன்னு நினைத்துக் கொள்வேன்.

Monday, December 08, 2008

"அச்சமுண்டு அச்சமுண்டு" அருண் - பேட்டி

முக்கியமான அப்டேட் - சினேகாவின் எக்ஸ்க்ளூசிவ் படம் (கடைசியில்) அப்டேட் செய்யப்பட்டுள்ளது..பக்தகோடிகள் க்யூவில் தள்ளுமுள்ளு செய்யாமல் தரிசனம் செய்யவேண்டி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் - என்றும் இறைபணியில் தர்மகர்தா. படம் அன்பளிப்பு அருண் வைத்தியநாதன்





ஏ எல்லாரும் கேட்டுக்கோங்க பார்த்துக்கோங்க நானும் ரவுடி நானும் ரவுடி நானும் ரவுடி...என்னா கேட்டீங்க தமிழ் திரைப்பட உலகிற்கும் எனக்கும் ஏதாவது சமபந்தம் இருக்கான்னா.. யாரப் பார்த்து என்னா கேள்வி கேட்டீங்கோ....இப்போ ப்ரெஷ்ஷா வந்திருக்காரே அச்சமுண்டு அச்சமுண்டு அருண்....அவர டவுசர் போட்டுக்கொண்டு மூக்கு ஒழுகிக்கொண்டிருந்த காலதுலயே எனக்கு தெரியும்ன்னு சொல்ல ரொம்ப ஆசை தான். ஆனா இந்த போஸ்டை அவரும் படிப்பார் அதுனால அப்புறமா அவர் படிக்காத போது சொல்றேன்...:))

அருண் வைத்தியநாதன் - 2004/5 ல் தமிழில் ப்ளாகிக் கொண்டிருந்தவர்களுக்கு பரிச்சயமான பெயர். நம்மள மாதிரி ப்ளாகில் ஜொள்ளுவிட்டதை பற்றி எழுதாமல் நியூயார்க் பிலிம் அக்காடமி, குறும்படம்ன்னு லெவல் காட்டிக்கொண்டிருந்தார். இவரின் குறும்படங்கள் பார்த்து அப்பவே இது படிக்கற புள்ள...இவர் பின்னாளில் பெரிய டைரடக்கராக வருவார் என்று துண்டு போட்ட (நம்பிக்கை வைத்த) தொண்டரடிப் பொடியாழ்வாரில் அடியேனும் ஒருவன் (ஹி...ஹீ நல்ல படியில ஏறாத ரோலா பார்த்து மீட்டருக்கு மேல போட்டுக் குடுங்க அருண் :) ).

ப்ரெண்டு ஒருத்தருக்கு சுகாசினி மணிரத்னம் ரொம்ப தோஸ்த், அதுக்கே நான் "இந்த ஹாசினி இருக்காங்களே நம்பளுக்கு ரொம்ப க்ளோஸ்"ன்னு தான் ப்லிம் காட்டிக்கிட்டு திரியறது. இதுல அருண் வைத்தியநாதனை ஏற்கனவே ஐஸ் பொட்டில பாக்கிங் செஞ்சாச்சு விட்டுருவோமா...பேட்டி பேட்டின்னு கோட்டியா அலைஞ்சு...அவரு நேரம் அவரும் ஒத்துக்கிட்டாரு.



தற்போது அருண் அச்சமுண்டு அச்சமுண்டு தமிழ் திரில்லரை இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தில் ப்ரசன்னா, ஸ்னேகா நடிக்கிறார்கள். ஹாலிவுட் ஜான் ஷியா வில்லனாகவும் படத்தில் இன்னும் நிறைய ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கிறார்கள். "அச்சமுண்டு அச்சமுண்டு" இந்தியாவிலேயே முதன் முறையாக ரெட் கேமிராவினால் ஹை டெபினிஷனில் படமாக்கப்பட்டு போஸ்ட் பொரடக்க்ஷன் ஸ்டேஜில் இருக்கிறது.

இன்னும் வாயில் நுழையாத ஜார்கனெல்லாம் தட்டுப்படவே அருணையே கேள்விகளால் துளைத்தார் சினிமா நண்டு டுபுக்கார்.

1. வணக்கம் அருண். அச்சமுண்டு அச்சமுண்டு பற்றி ரெட் ஒன், ஹாலிவுடின் பிரபல பெயர்கள் என்று என்னவெல்லாமோ பெருமையாக கேள்விப் படுகிறோம். நேரா படம் சம்பந்தப்பட்ட டெக்னிகல் கேள்விகளுக்கு போய் விடுவோம். ஸ்னேகா படத்திற்க்காக அமெரிக்கா வந்திருக்கிறார் என்று படித்தோம். ஸ்னேகாவுக்கு பிடித்த டிபன் என்ன? ஸ்னேகா நம்மூர் இட்லி பூரிக்கிழங்கு சாப்பிட்டாரா இல்லை அந்தவூர் கெல்லாக்ஸ் கார்ன்ப்ளேக்ஸே அட்ஜீஸ் பண்ணிக்கொண்டாரா?

இந்தக் கேள்வியை நான் ஆண்வர்க்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். அது என்ன சினேகா பூரி சாப்பிட்டாரா, இட்லி சாப்பிட்டாரா என்றொரு கேள்வி? பிரசன்னாவையும் இந்தக் கேள்வியில் சும்மானாச்சுக்குமாவது சேர்த்திருக்க வேண்டும். ஊரிலிருந்து கிளம்பும் போது, 'We want only American food' அப்டீன்னு சப்புக்கொட்டிட்டுக் கெளம்புனவங்க...நாலாவது நாள், 'கொஞ்சம் ரவா உப்புமா கெடைக்குமா?' என்ற ரேஞ்சுக்கு இறங்கி, நமது உணவுக் கலாச்சாரத்தைப் பேணிக் காத்தார்கள்.

(நீங்க சொல்வது மிக்க சரி அருண்...பிரசன்னா என்னத்தையோ கொட்டிக்கும் போது சினகா இட்லி சாப்பிட்டாரான்னு கேட்டிருக்கனும்...இனிமே கவனமா கேக்கிறேன் )

2. சாப்ட்வேரிலிருந்து ப்ளாக் அடித்து சமபளம் வாங்கினது போதும் சினிமாவுக்கு போகனும்ன்னு என்று எப்படி தோன்றியது. இல்லை சாப்ட்வேரே நானும் கச்சேரிக்குப் போனேன் கதை தானா?

இது சாப்ட்வேர் காலத்தில் தோன்றியது இல்லை -அண்டர்வேர் அணியும் காலத்திலேயே தோன்றியது. ஆனால், அப்பா அம்மா இருவரும் ஆசிரியர்கள் என்பதால், எனது கனவுகளும் 'இனிய பாடல் சண்டைக்காட்சிகளோடு' அவ்வப்போது முடிவடைந்துவிடும். நான் உறுதியாய் இருப்பதைப் பார்த்தவுடன், 'சரி...உனக்குன்னு ஒரு உத்தியோகம் கெடைச்சதுக்கப்புறம், என்ன வேணும்னாலும் பண்ணு!' என்று ஒரு மாதிரி க்ரீன் சிக்னல் கிடைத்தது. சினிமாவுக்குத் தான் தடையேயொழிய, கலை சார்ந்த விஷயங்களுக்கும், சினிமா(க்கள்) பார்ப்பதற்கும் எனக்கு எந்தத் தடையும் இருந்ததில்லை என்பது ஒரு ஆறுதல் பரிசு. மனசு எப்போதும் சாப்ட்வேரில் ஒரு கால், சினிமாவில் ஒரு கால் என்று தான் வேலை பார்க்கும் தருணங்களிலும் இருந்தது. சாப்ட்வேரில் வேலை பார்த்தது, கச்சேரிக்குப் போன கதையென்றே சொன்னாலும்...தேங்காய்மூடிக் கச்சேரி கிடையாது! 9லிருந்து 5மணி வரை செய்யும் வேலையில் எனக்கான சலிப்பை அனுதினம் கேட்டு கேட்டு, எனது தங்கமணி (ஹி..ஹி) 'அப்புறம் எப்போ பட வேலையை ஆரம்பிக்கிறீங்க?' என்று கேட்காத குறைதான்!

3. தாலி, தாய்மாமா, காதல், ஆக்க்ஷன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு முதல் படத்திலேயே தமிழ் கூறும் நல்லுலகம் அதிகம் பார்த்திராத திரில்லர் களத்தில் இறங்கியிருக்கிறீர்கள். அதைப் பற்றி சொல்லுங்களேன்.

தாய்மாமா மட்டும் தான் நீங்கள் சொன்னதில் இல்லை. தாலி, காதல், ஆக் ஷன் எல்லாம் இருக்கிறது. தாலி எனது கதாநாயகி மாலினியின் கழுத்தில், காதல் செந்தில்குமார் - மாலினியிடத்தில், ஆக் ஷன் எங்கே எப்படி என்பது சஸ்பென்ஸ்! Genre films தமிழில் வரவேண்டும் என்ற ஆசையினாலும், த்ரில்லர்களுக்கு எப்போதுமே மவுசு என்ன கீபோர்டே உண்டு என்பதாலும்...இது போன்றதொரு முயற்சி. சுவாரஸ்யமாக ஒரு விஷயத்தை சொன்னால், 'அச்சு பிச்சு காமெடி', 'டண்டணக்கா டான்ஸ்' தேவைப்படாது என்ற எனது அபரிதமான நம்பிக்கையின் ஒரு வடிவம் தான் 'அச்சமுண்டு! அச்சமுண்டு!'. குறிப்பாக, இது 'இத்தாலி படத்திலேந்து சுட்டது, ஜெர்மன் படம் 'ப்ரிஞ்சால்'லே இதே சீன் இருக்கு' என்ற அபாயங்களும் இல்லாத படமாக இருக்கும்.

4.படத்தில் லைவ் சவுண்ட் உபயோகப் படுத்தியிருக்கிறீர்கள் என்று வேற நல்ல பேட்டிகளில் சொல்லி இருக்கிறீர்கள். ஹே ராமில் கமல் லைவ் சவுண்ட் உபயோகப்படுத்தி, கூட இருந்தவர் "மாப்ள படம் எப்போ போடுவாங்க"ன்னு கேட்டது தான் நியாபகம் வந்தது. ஏன் லைவ் சவுண்ட்...? த்ரில்லர் களம் என்பதால் ஏதாவது ஸ்பெஷல் காரண்ங்கள் உண்டா...?

பேட்டிகளில் நல்ல பேட்டி, டுபுக்கு பேட்டி என்று உண்டா என்ன? இந்தியத் திரைப்படங்களைத் தவிர, மற்ற முக்கால்வாசி நாடுகளில் 'லைவ் சவுண்ட்' முறையில் தான் படங்கள் எடுக்கப்படுகிறது. பாலிவுட்டில் பல பெரிய படங்கள் 'லைவ் சவுண்டு'க்கு மாறி ரொம்ப நாட்களாகி விட்டன. ஆனாலும், இன்னும் இந்தியாவில் பெரும்பான்மையான படங்கள் டப்பிங் முறையில் தான் எடுக்கப்படுகிறது. நீங்கள் சமையல் கட்டில் உங்கள் மனைவியோடு பேசுகிறீர்கள் என்பது தான் காட்சி என்றால், அங்கு கேஸ் அடுப்பு எரியும் சத்தம் கேட்க வேண்டும், ரசம் கொதிக்கும் சத்தம் கேட்க வேண்டும், வசனங்கள் நிஜ வாழ்வில் பேசுவது போலவே இருக்க வேண்டும் ...இத்தனை 'வேண்டும்'களும் வேண்டும் என்றால், லைவ் சவுண்ட் தான் ஒரே வழி. (பின்னணியில் கேட்கும் சத்தங்களில் சவுண்ட் எடிட்டிங்கிற்கும் பெரிய பங்குண்டு). இந்தப் படத்தில் லைவ் சவுண்ட் செய்த 'டென்னிஸ்', பல படங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். அதே போல 'மிக்ஸிங்'கும் 'Grudge','Exorcism of Emily Rose', 'Strangers' போன்ற படங்களை செய்த மார்ட்டி ஹம்ப்ரியோடு ஹாலிவுட்டிலேயே தான் நடக்கிறது. துல்லியமான துள்ளல் ஒலிக்கு நான் கியாரண்டி! (நான் சட்டசபை தேர்தல் கணக்கா வாக்குறுதிகளை அள்ளி வீசறேன்...மவனே அடங்குடா அப்டீன்னு மனசு சொல்ற சவுண்டு சப் வூஃபர்லே கேக்குது!)

5. இந்தப் படத்தில் "அப்பாடா பாதி கிணறு தாண்டிவிட்டோம்" என்று எந்த தருணத்தில் தோன்றியது?

பாதி கிணறு தாண்டிய உடனே.... (ஹி...ஹி)

(நான் சொல்லல...அருண் 2004லயே தமிழ் ப்ளாக் உலகில் பழம் தின்று மொக்கை போட்டவர்ன்னு :)))) )

6. CTRL C & CTRL V தவிர சாப்ட்வேர் உலகில் கற்றுக்கொண்டது ஏதாவது தற்போது தங்களைய டைரடக்கர் ரோலுக்கு உதவுகிறதா?

கணிப்பொறியில் தமிழ் அடிப்பதில் நல்ல பரிச்சயம் இருப்பதால், முழு திரைக்கதையையும் தமிழிலேயே அடிக்க முடிந்தது. அதனால் திருத்தங்களும் சுலபமாக செய்ய முடிந்தது. அதைத் தவிர, டைரடக்கர் ரோலுக்கு தேவை சாப்ட்வேர் அறிவு அல்ல - கதை சொல்லும் அறிவும், திரைப்படத் தொழில் நுட்ப அறிவும் தான்!

7. அமெரிக்காவிலிருந்து பார்க்கும் போது கோடம்பாக்கம் எப்படி தெரிகிறது?

இன்றைக்கு எத்தனையோ ஹாலிவுட் படங்களையும், வெளிநாட்டுப் படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றாலும்...எங்கள் ஊரில் நான் பார்த்த நடிகர் திலகம் படங்களையும், கமல்ஹாசன் படங்களையும் மறக்க முடியுமா? சினிமா மீதான காதல், இன்று கல்யாணத்தில் முடிந்ததற்கு கோடம்பாக்கம் தானே முன்னுரை எழுதியது! என்னைப் பொறுத்தவரை, மொழிகள் கடந்து, காலம் கடந்து நிற்கும் எந்தவொரு படைப்பும் சிறப்பான விஷயம். அப்படிப்பட்ட சினிமாவானது உலகின் மூலை முடுக்களிலிருந்தெல்லாம் வருகிறது - நமது ஊரிலிருந்தும் எப்போதாவது அத்திப் பூத்தால் போல் வருகிறது. இன்னும் புதுப்புது வித்தியாசமான முயற்சிகள் நிறைய வரவேண்டும். மக்களும், படைப்பாளிகளும் ஒரே அலைவரிசையில் மாற்றம் நோக்கி சிந்தித்தால் தான், கோடம்பாக்கம் கோல்டன்பாக்கமாக மாறும்!

8. ஒரு சக ப்ளாகரிலிருந்து டைரடக்கராக மாறியிருக்கிறீர்கள். படத்தில் இங்கே கதை லொட்டு அங்கே நடிப்பு லொசுக்கு, இரண்டாவது ரீலில் நாலாவது சீனை இப்படி எடுத்திருக்கலாம், க்ளைமாக்ஸில் லைட்டிங் நல்லா இருந்திருக்கலாம் என்று என்னை மாதிரி அரைவேக்காடுகள் ப்ளாகில் மூவி சுப்புடுகளாக விமர்சனம் பண்ணும் போது ஒரு டைரடக்கராக என்ன தோன்றும்?

கஷ்டப்பட்டு தங்கமணி சமைச்சுப் போட்டதை, 'இன்னும் கொஞ்சம் உப்பு ரெண்டு சிட்டிகை அதிகமா போட்டிருக்கலாம்!' என்று நீங்கள் சர்வ சாதாரணமாய் சொல்லும் போது 'சமைச்சுப் பார்த்தா தெரியும்!' என்று அங்கிருந்து டாணென்று பதில் வரும். ஆனால், அதே போல ஒரு பதில் சரவணபவனில் சாப்பிடும் போது வந்தால், பிரச்சினை தான்! காசு கொடுத்து பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புகள் இருக்கும். அவர்களுக்கு அது சம்பந்தமான விமர்சனங்கள் இருக்கும். எல்லாவற்றையும் தாமரை இலை தண்ணீர் போல் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது தான். ஆனால் ஒரு விஷயம், சினிமா எடுப்பது என்பது ஒரு பிரசவம், போர், வலி! ஒரு நல்ல விமர்சனம் என்பது 'சாண்ட்விச்' முறையில் இருக்க வேண்டும். படத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை முதலில் சொல்லி, மெதுவாக பிடிக்காத விஷயங்களை வரிசைப்படுத்தி, மீண்டும் நல்ல விஷயத்தோடு முடிப்பதென்பது எந்த ஒரு கலைக்கும், கலைஞனுக்கும் இதமாய் இருக்கும்.

9. "நானும் ஒரு நாள் படமெடுத்தே தீருவேன்" என்று என்னை மாதிரி மந்திரித்த கோழிகளுக்கு உங்கள் அறிவுரை என்ன? எங்கே தொடங்குவது?

முதலில் 'திரைப்படம்' என்பது சுலபமான விஷயமில்லை. இதற்காக நீங்கள் கொடுக்க வேண்டிய விலை, செய்ய வேண்டிய தியாகங்கள் நிறைய. கேம்கார்டரில் நான்கு நண்பர்களை நடிக்க வைத்து, அதை சுமாராக எடிட் செய்து, பின்னணி இசையாக 'ஹௌ டு நேம் இட்'ன் வயலினிசையை ஜம்மென்று போட்டு...'ஆத்தா....நான் படமெடுத்துட்டேன்!' என்று சொல்வதல்ல சினிமா. மேற்கூறியவை ஒரு நல்ல தொடக்கம் என்று வேண்டுமானால் கூறலாம். திரைப்படமெடுக்க ஆசைப்படும் முன் நல்லதாய் ஒரு பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் படிப்பது சாலச்சிறந்தது. திரைக்கதை எழுதுவது சம்பந்தமாக பல புத்தகங்கள் (ஆங்கிலத்தில்) இருக்கின்றன, படமெடுப்பது குறித்தும் பல புத்தகங்கள் கிடைக்கப்பெறும். (தமிழிலும் இது போல புத்தகங்கள் பல வருவது அத்தியாவசியமான ஒன்று - பதிப்பாளர்கள் செய்வார்களென்று நம்புகிறேன்). குறிப்பாக, நண்பர்கள் வட்டத்தையும் தாண்டி, ஒரு புரொஃபஷனல் க்ரூவை வைத்து மூன்று குறும்படங்களாவது செய்ய வேண்டும். அது எத்தகைய வரவேற்பைப் பெறுகிறது என்பதும், எத்தனை திரைப்பட விழாக்களில் கலந்து கொள்கிறதென்பதும் உங்கள் திறமைக்கு அளவுகோலாய் இருக்கும். அசிஸ்டெண்டாக ஒரு ஐந்து ஆண்டுகள் இருந்து விட்டு, சந்து கேப்பில் ஹீரோவிடம் 'கதைப்படி நீங்க பொறுக்கி சார்!' என்று சொல்லி இம்ப்ரெஸ் செய்து தான் 'டைரக்டர்' ஆக வேண்டும் என்று அவசியமில்லை. நான் மேலே சொன்ன முறையான பயிற்சியும், குறும்படங்களும் கூட நல்ல இயக்குனராவதற்கு வாய்ப்புகளை உருவாக்கி தரும். இந்த முறை நான் சென்னை சென்ற போதே பல கல்லூரிகளில் திரைப்படம் குறித்தான பாடங்கள் வந்து விட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பாலுமகேந்திராவில் ஆரம்பித்து ராஜீவ்மேனன் வரை ஒளிப்பதிவு மற்றும் திரைப்படம் குறித்தான கல்லூரிகள் நடத்துகின்றனர், பிரசாத் ஸ்டூடியோ L.V.Prasad Academy என்று ஒன்று நடத்துகிறது - பல அட்டகாசமான மாணவர்களின் அசத்தலான குறும்படங்களை நானும் பார்த்தேன். படிப்பதற்கு வசதியில்லையென்று தோன்றினால், ஒரு இயக்குனரிடத்தில் வேலை செய்து விஷயங்களைக் கற்றுக்கொள்வது நல்ல முயற்சி தான். குறிப்பாக திரைப்படங்களில் இறங்க ஆசைப்படுபவர்கள், கமலின் இந்தப் பேட்டியைப் பார்க்க வேண்டும் - http://www.youtube.com/watch?v=ZjlD7IEQ3cE
பி.கு :- நான் கமலை இதில் உதாரணம் காட்டியிருப்பதற்கு, 'உன்னால் முடியும் தம்பி' கமலின் தம்பி போல தோற்றமளிக்கும் டுபுக்குக்காகத் தான் என்பதை சொல்லாவிட்டால் மண்டை வெடித்து சுக்கு, இஞ்சி நூறாகிவிடுமென்று வேதாளம் பயமுறுத்தியதால் தான் என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் அறியக் கடவது. (வேதாளம் a.k.a டுபுக்கு)


(ஹீ ஹீ அருண் ...."உன்னால் முடியும் தம்பி" பட்டம் மக்கள் எனக்கு குடுத்தது....:)))

10. டுபுக்கு அவர்கள் - வேறு ஏதாவது சொல்ல வேண்டுமென்றாலும் சொல்லுங்கள் என்று எனக்கு ஒரு 'சாய்ஸ்' கொடுத்திருக்கிறார். நான் சொல்ல நினைக்கும் 'சில' விஷயங்களை சொல்லி விடுகிறேன்.

திரைப்படங்களைத் திருட்டு வீடியோவில் பார்க்காதீர்கள். திரையரங்கத்திற்குள் நுழையும் போது, செல்போனை ஆஃப் செய்து விட்டு உட்காருங்கள். ஒரு இரண்டரை மணி நேரம் உங்களால் போன் இல்லாமல் இருக்க முடியாதென்றால், திரையரங்கத்திற்கு செல்வதைத் தவிருங்கள். 'மச்சான்...கிளைமாக்ஸ் சீன்லே நம்மாளு பின்றான் இல்லே' என்று ரன்னிங் கமெண்டரி கொடுக்கக் கூடிய இடம் திரையரங்கம் கிடையாது என்பது ஒரு கொசுறு செய்தி. நல்ல திரைப்படங்களைத் தியேட்டரில் சென்று பார்த்து ஆதரிப்பதன் மூலம், நீங்களும் மாற்றத்தில் பங்குபெறுகிறீர்களென்பதை மகிழ்ச்சியோடு உணருங்கள். கடைசியாக, 'அச்சமுண்டு! அச்சமுண்டு!' படத்தைக் குறித்து நண்பர்களிடத்தில் என் சார்பாக ஒரு 'ஹாய்' சொல்லி நூறு பேருக்காவது இமெயிலின் மூலம் இன்னும் இருபத்தி நான்கு மணிநேரத்துக்குள் பகிர்ந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், உங்களுக்குத் தலைமுடி அரக்கு நிறத்தில் மாறி, காது சிகப்பு நிறமாகி விடும் அபாயமிருக்கிறது. ஒரு வேளை அனுப்பி விட்டீர்களென்றால், உங்களுக்கு 'நைஜீரியாவிலிருந்து கோடிக்கணக்கில் பணத்தை விட்டுச் சென்ற ராஜாவின் மகனிடமிருந்து' ஸ்பாம் மெயில் வருவது நின்று விடும்!

---------

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் கடைசி நேர வேலைகளுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கி என்னையும் ஒரு ஆளா மதித்து பேட்டி கொடுத்தமைக்கு கோடானு கோடி நன்றி அருண். அச்சமுண்டு அச்சமுண்டு படம் மிகப் பெரிய வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்.

அச்சமுண்டு அச்சமுண்டு பற்றி அருண். சுடச் சுட..படங்களுடன் தனது ப்ளாகில் அடிக்கடி அப்டேட் செய்து வருகிறார் இது போக அவரின் தளத்திலும் இவரின் முந்தைய குறும்படங்களை தரவிறக்கம்( அதான்பா தமிழ்ல சொன்னா டவுண்லோட்) செய்து கொள்ளலாம்.

இது போக அருணிடம் ஸ்னேகா கொஞ்சம் இளைத்த மாதிரி இருக்கே நம்ம வாசகர்களும் அதை சரி பார்க்க....கண்ணுல ஒத்திக்கிற மாதிரி exclusive சினேகா படம் இருந்தா அனுபுங்கன்னு சொன்னேன் அருண் அதைக் கண்டுக்காமல் சாய்ஸில் விட்டதோடு அல்லாமல் டுவாக்கியெல்லாம் இருக்கிற படத்தை காட்டி மிரட்டுகிறார். (Btwn- அந்த படத்தில் ஜானோடு இருப்பது தான் அருண்) . இதுகெல்லாம் அடங்குகிற பார்ட்டியா நாம...அருணிடமிருந்த நன்றி உணர்ச்சியோட நேர போய் சினேகா இருக்கிற மாதிரி ஒரு படத்தை அவரோட வெப்சைட்லேர்ந்து சுட்டு கீழே போட்டுள்ளேன்.. :))) இதுக்கும் ரொம்ப நன்றி அருண். படத்தைப் பார்த்துவிட்டு நீங்களும் போய் ஒரு வார்த்தை பாராட்டுங்கள் நண்பர் சந்தோஷப்படுவார்.