Sunday, February 28, 2010

வித்துவான்

எஸ்.பி.பியின் என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சி பார்க்கும் போதெல்லாம் வயத்தெரிச்சலாய் இருக்கும். நானும் பெரிய வித்துவான் ஆகி இருக்கவேண்டியவன். சில பல துரதிஷ்டங்களால் முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் பாடுவதை மட்டும் இன்றளவில் விட்டதே கிடையாது. சந்தோஷமாய் இருக்கும் போது தனியாக ரூமில் பாடுவேன். சில சமயம் கலையுணர்வு மிஞ்சி காலை ஒன்பதேகாலில் இருந்து ஒன்பதரை வரை நாலு மணி நேரம் அசுர சாதகம் பண்ணுவேன். ஆனால் என்னோட வீக் பாயிண்டே எந்தப் பாட்டானாலும் முதல் வரி மட்டுமே வார்த்தைகள் கரெக்ட்டாய் வரும். அடுத்த வரியிலிருந்து கொஞ்சம் மானே தேனே பொன்மானே வந்துவிடும்...இந்த சின்ன சறுக்கல் மட்டும் இல்லாவிட்டால் பெரிய வித்துவானாகி இருக்கவேண்டியவன் ஹூம்...

நான் பாட ஆரம்பித்த அறுபத்தி எழாவது வினாடி தங்கமணி "பூனையை காப்பாத்துங்க பூனையை காப்பாத்துங்க"ன்னு அலறிக் கொண்டு வருவார். என்ன பூனை...எங்க...ஏன் காப்பாத்த வேண்டும் ஹ... கேட்கவே மாட்டேனே. "இங்க யாரோ பூனையை கழுத்த நெரித்து, அது கதறுவது மாதிரி இருந்தது...அதான் ஓடோடி வந்தேன்..." என்று கேட்காவிட்டாலும் அவராகவே ஒரு விளக்கமளிப்பார். "இனிமே பாட்டு பாடினா நான் பாடறேன்னு அனௌன்ஸ் பண்ணிட்டு பாடுங்கோ...என்ன ஏதுன்னு தெரியாமல் நாங்களெல்லாம் பதற வேண்டியிருக்கு"ன்னு ஆதங்கப் படுவார். இங்க நான் என்ன ஆல் இந்தியா ரேடியோல அனௌன்ஸ் பண்றதுக்கா சாதகம் பண்றேன்...ஒரு வித்துவானோட பீலிங்ஸை புரிந்துகொள்வே மாட்டார்.

எல்லாம் கொஞ்ச நாள் தான். ஒரு தரம் நாள் சாதகம் பண்ணும் போது இந்த வித்துவானுக்கே தெரியாமல் அதை ரெக்கார்ட் செய்து என்ன ஏதுன்னு சொல்லாமல் வாக்மேனில் என்னை கேட்க விட்டு, அப்புறம் நான் பூனைய காப்பாத்துங்க பூனைய காப்பாத்துங்கன்னு பதறி, சங்கீத வித்துவான் ஆசையை விட்டுவிட்டேன். விட்டுவிட்டேன் என்றால் முழுதாக எல்லாம் இல்லை. அந்த மாதிரி கெட்ட பழக்கம் எங்க குடும்பத்திலேயே கிடையாது. ஐ.ஐ.டிக்கு ஆசைப் பட்டு சேர முடியாவிட்டாலும்.. கஷ்டப்பட்டு என்ட்ரன்ஸ் எழுதி என்.ஐ.ஐ.டியிலாவது சேர்ந்துவிடுவோம். சங்கீத வித்துவான் ஆக முடியாவிட்டாலும் பூனை மேட்டருக்கப்புறம் நாம ஏன் ஒரு மிமிக்கிரி வித்துவான் ஆகக் கூடாது என்று குறிக்கோளை மாத்திவிட்டேன். ஊரில் நான் காலேஜ் படிக்கும் போது மிம்க்ரி பண்ணப் போறேன்னா, "முந்தினனா ராத்திரியே நல்லா ஊற வைச்சுடு...அப்போதான் அரைக்கும் போது பதமா வரும்"ங்கிற ரேஞ்சுக்குத் தான் மிமிக்ரியைப் பத்தி தெரியும். ஒருத்தரும் இல்லாத ஊர்ல கம்பு நட்டவன் தான் ராஜான்னு ஊர்ல மிமிக்ரில கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் போட்டிருந்தேன்."அடக்கம் அமரருள்...etc etc" திருவள்ளுவர் நமக்கா சொல்லி இருக்கிறார்?

முன் ஒரு நாளில் "செந்தாழம் பூவில்"-ஜேசுதாஸ் ஆரம்ப ஹம்மிங்கை எப்படியாவது அலேக்காய் பிடித்து ரிப்பீட் அப்ளாஸ் வாங்கிவிட வேண்டும் என்று அசுர சாதகம் கொண்டிருந்த போது, தங்கமணி "ரெண்டு நாள் பட்டினி கிடந்த நாய் சோத்துக்கு ஊளையிடுவது மாதிரி இருக்கு தாங்கமுடியலை" என்று என்கரேஜிங்காய் பீட்பேக் குடுத்திருந்தார். அதனால் முதலில் நாயில் இருந்து மிமிக்கிரி ப்ராக்டீஸை ஆரம்பிக்கலாம் என்று நண்பர்களிடம் ஐடியா கேட்டது தப்பாய் போய்விட்டது. இந்த உலகம் இருக்கே உலகம்... ரொம்ப போட்டியும் பொறாமையும் நிறைந்தது. நான் பாட்டுக்கு நாய் பூனைன்னு சாதகம் செய்து கொண்டிருந்தால் இன்னொரு நண்பர் 'சில்க் ஸ்மித்தா' வீட்டு நாய் நமீதா விட்டு பூனைன்னு கான்செப்டை இம்பரவைஸ் செய்து கைதட்டை வாங்கிக் கொண்டுப் போய்விட்டார். அப்புறம் "தம்பீ இங்க வா..தொழில்ல போட்டி இருக்கலாம் பொறாமை இருக்க கூடாது"ன்னு அவரை கூப்பிட்டு சமாதானக் கூட்டம் போட்டு ‘சில்க் சுமிதா’ வீட்டு நாய் அவருக்கும், ரெண்டு நாள் பட்டினி கிடந்த நாய் எனக்குமாய் பங்கு போட்டுக் கொண்டோம். ஆனாலும் மனிதர்களுக்கு சினிமா மோகம் ஜாஸ்தி சார்... ஐய்யோ பாவம் ரெண்டு நாள் பட்டினி கிடந்த நாயாச்சேன்னு கொஞ்சம் கைத்தட்ட வேண்டாமோ... ம்ஹூம் சினிமா மோகத்தில் சிதறுண்டு சிக்கியிருக்கிறான் தமிழன்னு சும்மாவா சொல்லியிருக்கார் டாக்டர்.

ஒருதரம் மிஸ்கால்குலேஷன் ஆகி தொடர்ச்சியாய் ரெண்டு நாள் குளித்தது, உடம்புக்கு ஆகாமல் தொண்டை கட்டிக்கொண்டுவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாய் குரல் தெளிவு பெற இரண்டு வாரங்கள் பிடித்தது. "கடவுள் ஒரு பிகர் வீட்டு ஜன்னலை மூடினால் இன்னொரு லேடீஸ் ஹாஸ்டல் கதவை திறப்பார்"ன்னு முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா? நம்ம கம்மின குரலின் ஜியாக்ரபி தெரியாமல்..."அடேங்கப்பா...அப்படியே கலைஞர் மாதிரி பேசறீங்களே...நீங்க மட்டும் போன்ல பேசினா உடனே டி.வி பொட்டிய எடுத்து என் கைல குடுத்திடுவா"ன்னு ஒரு நண்பர் அள்ளி விட, அதுவரை சற்று தூங்கிக் கொண்டிருந்த மிமிக்கிரி வித்துவான் முழித்துக் கொண்டுவிட்டார். அப்புறம் கலைஞர், வீரபாண்டிய கட்டபொம்மன், டைனோசர், வெக்கம் கெட்ட கழுதை என்று வெரைட்டியாய் - மிரட்டலாய் மிமிக்கிரி வித்துவான் ப்ராக்டீஸை ஆரம்பித்தேன்.

ஆனால் தங்கமணிக்கு இதெல்லாம் துளியும் பிடிக்கவில்லை. கொஞ்சம் குரலை ட்யுன் செய்ய அவர் உதவியை நாட வேண்டி இருந்தது. "இந்த இழவுக்கு உங்க பாட்டு வித்துவான் பேராசையே எவ்வளவோ பரவாயில்லை, டைனோசர் குரலுக்கு புளிச்ச மோரைக் கொண்டா தோசமாவ கொண்டான்னு என் உசிரு போகிறது. உங்க சாதகத்தால பக்கத்து வீட்டுக்காரன் கூடிய சீக்கிரம் கவுன்சில்ல கம்ப்ளெயின்ட் குடுக்கப் போறான் "ன்னு ரொம்ப சலித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார். அவர் சலித்துக் கொண்டதாலோ இல்லை நம்ம பெர்பார்மன்ஸ் கண்திருஷ்டியிலோ என்னம்மோ, பெப்பரப்பேன்னு திறந்திருந்த தொண்டை திரும்பவும் அடைத்துக் கொண்டு குரலுக்கு பதிலாய் வெறும் காத்து மட்டுமே வர ஆரம்பித்தது. (சனிக்கிழமை மட்டும் நீராடுன்னு பெரியவங்க சொன்னத கேட்காததால் வந்த பிரச்சனை)


தங்கமணியோட சித்தப்பாவோட பெரியம்மாவோட மாமியோட நாத்தனார் ஒருவர் "கொதிக்கிற வெந்நீர்ல சொட்டு தேனோட இந்தப் பொடிய ரெண்டு ஸ்பூன் நன்னா கலக்கி குடு, நம்ம பாபநாசம் டேம் மதகு மாதிரி தொண்டை தானா திறந்துடும்" என்று அக்ஸ்தியரோட பேத்தி மாதிரி சித்த வைத்தியப் பொடி ஒன்றை குடுத்தார். தங்கமணி 'மனாளனே மங்கையின் பாக்கியம்' என்று யாரோவோட நாத்தனார் சொன்ன ரெண்டு ஸ்பூனுக்கு பதிலாக நாலு ஸ்பூன் ‘நன்னா’ கலக்கி., அதை குடித்துவிட்டு எனக்கு வாயோடு வயத்தோடு கலக்கி, கணீரென்று இருந்த வித்துவான் குரல் மக்கி துருப் பிடித்த பித்தளைப் பாத்திரத்தை தேங்காய் நார் வைத்து தேய்க்கும் சத்தம் மாதிரி மாறி விட்டது. அத்தோடு மிமிக்கிரி வித்துவான் ஆசையும் கானல் நீரானது. "இதுக்குத் தான் எங்காத்துக்காராளோடு வம்பு வெசுக்காதீங்கோ"ன்னு தங்கமணி பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தாலும் எனக்கென்னம்மோ தங்கமணி மருந்துப் பொடி டப்பாவில் சீயக்காய் பொடியை கன்ப்யூஸ் செய்திருப்பாரோ என்ற பயங்கர சந்தேகம் இன்றளவில் இருக்கிறது.

இருக்கட்டும் இருக்கட்டும் ஒரு நாள் எப்படியாவது எதிலாவது வித்துவானாகிவிடுவேன் சார்.

Monday, February 22, 2010

தி புக் ஆஃப் ஈலை


The Book of Eli


சில படங்கள் ட்ரையலர் பார்த்தவுடனே எப்ப படத்தை ரிலீஸ் பண்ணப் போறாங்கன்னு அரிக்க ஆரம்பித்துவிடும். இந்தப் படம் ட்ரயலரில் மிரட்டு மிரட்டுன்னு மிரட்டி இருந்தார்கள். டென்சல் வாஷிங்டனும், பட்த்தின் செபியா டோன் கலர் க்ரேடிங்கும், கண்ணில் ஒத்திக் கொள்ளும் படியான சினிமாடோகிராபியும் "சீக்கிரம் படத்த ரிலீஸ் பண்ணுங்கடா"ன்னு ஆர்வத்தை அதீதமாக தூண்டி இருந்தது.

கதையின் அவுட்லைன் இருப்பதால் தெரிய வேண்டாதவர்கள் இங்கேயே நிறுத்திக் கொள்ளவும். நியூக்கிள்யர் யுத்தற்கு பிறகு புல் பூண்டு கூட இல்லாமல் சீரழிந்து தண்ணிக்கு கூட கொலை வெறியோடு அலையும் ஒரு அபோக்ளிப்டிக் அமெரிக்காவில் டென்சல் வாஷிங்டன் லொங்கு லொங்கென்று முதுகு பையில் ஒரு புஸ்தகத்தை வைத்துக் கொண்டு அலைகிறார். அடுத்த வேளை சோத்துக்கே வழி இல்லாம இருக்கிற பஞ்சத்துக்கு அடிபட்ட ரவுடி கூட்டத்திலேர்ந்து படத்தில் வருகிற பத்துக்கு ஏழு பேர் இந்த என்னம்மோ இந்த புஸ்தகத்தை வைத்து தான் புள்ளக் குட்டிய படிக்க வைக்கப் போகிற மாதிரி இந்த புஸ்தகத்துக்கு அடி போடுகிறார்கள், டென்சலின் கையால் அடி படுகிறார்கள். புஸ்தகம் என்னாச்சு, டென்சல் போக வேண்டிய இடத்துக்கு போய் சேர்ந்தாரா என்பதோடு கதை முடிகிறது.

படம் நெடுக இரண்டே விதமான காட்சிகள். ஒன்று வறண்ட அத்துவான காட்டில் பாலைவனமாய் காட்சியளிக்கும் ஒரு ரோட்டில் சண்டை போடுகிறார்கள், இல்லை தடவி தடவி அடியெடுத்து வைக்கும் இருட்டில் கொழ கொழவென்று பேசுகிறார்கள். சப்டைட்டில் இல்லாமல் சில இடங்களில் நாமும் தெவெங்க வேண்டியிருக்கிறது. ஒரு பெண்ணும் டென்சலும் ஒரு காட்சியில் ஒரே அறையில் வேறு. அந்தப் பெண் கதவை மூடி விட்டு வருகிறது. அடடா ஒன்னுமே தெரியலையே ஒரே இருட்டா இருக்கே, கிறுக்குப்பயலுங்க மூஞ்சில மட்டும் லேசா லைட்டிங் குடுத்திருக்காங்களேன்னு நமக்கு பிரஷர் ஏறும் போது, வயற்றில் பாலை வார்க்கும் வண்ணம் டென்சல் அந்தப் பெண்ணை "போய் சமத்தா படுத்துக்கோ எதா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்"ன்னு அனுப்பி விடுகிறார். அடத் தூ இதுக்கு இந்த லைட்டிங்கே அதிகம்ன்னு நமக்கும் நிம்மதி பிறக்கிறது.

நிற்க படத்தில் டெக்னிகல் சமாச்சரங்கள் மிகப் பிரமாதமாய் இருக்கின்றன. சினிமேட்டொகிராப்பி காட்சி அமைப்புகள் சூப்பராய் இருக்கின்றன. ஆனால் எனக்கு கதை என்னமோ ஓவர் பில்டபாய், கொஞ்சம் இழுவையாய் பட்டது. ஒன்றரை மணி நேர படத்துக்கு நாலு பாட்டு, அதுல ஒன்னு குத்து சாங், ரெண்டு பைட் என்று சப்பையாய் எதிர்பார்காவிட்டாலும் கதை சில இடங்களில் கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது. படம் பிடித்திருக்கிறதா என்றால் படம் பிடிக்காமலில்லை என்று தான் சொல்லுவேன் எனக்கு இருந்த எதிர்பார்ப்பு பூர்தி ஆகாமல் வந்த ஏமாற்றத்தால் சிறிது பிடிக்காமல் இருக்கலாம், இது இல்லாமல் ஒரு வேளை உங்களுக்கும் பிடிக்கலாம். (தலீவா...இதெல்லாம் உங்கிட்டேர்ந்து வந்தது தலீவா...)

நிற்க சில சமயம் ஒரே விஷயங்கள் இரண்டு பேருக்கு ஒரே நேரத்தில் தோன்றலாம். சமீபத்தில் நம்ம கேபிள் சங்கர் எடுத்திருந்த ஒரு குறும் பட நாட் மற்றும் காட்சி அமைப்புடன் கூடிய ஒரு கதையை நான் வேறொரு களத்தில் அதே நாட்டுடன் எடுக்க இங்கே சில பேரிடம் டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தேன். நல்லவேளை அதற்கு முன்னால் அவரின் அந்த படைப்பை பார்த்தால் ஒரு வாழ்த்துடன் மேட்டர் முடிந்துவிட்டது. சமீபத்தில் தமிழில் வந்த ஒரு படம் போர்க்களம். அதன் லைட்டிங் மற்றும் கலர் க்ரேடிங் மற்றும் ஒரு முக்கியமான நாட் இந்த புக் ஆஃப் ஈலை படத்திலும் இருக்கிறது. நல்லவேளை அந்தப் படம் இது வருவதற்கு முன்னால் வந்து விட்டது. இல்லை என்றால் போர்க்களம் இந்தப் படத்தின் தழுவல் வழுவல் என்று ஏதாவது பீதியைக் கிளப்பி இருப்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரை போர்க்களத்தில் அந்த நாட்டை நன்றாக எக்ஸ்சிக்யூட் செய்திருப்பார் டைரக்டர் பண்டி சரோஜ்குமார். புக் ஆப் ஈலையில் அந்த மேட்டர் முக்கிய நாட் இல்லை என்பதால் அது அவ்வளவு அழுத்தமாக சொல்லப் படவில்லை.

சில படங்களை பார்த்துவிட்டு IMDB-ல் போய் பார்த்தால் நிறைய விஷயங்கள் புரியும். இந்தப் படமும் அதே அதே.

Tuesday, February 16, 2010

நடிகன்

பீலிங்க்ஸாய்...வாழ்க்கையை திரும்பிப் பார்க்காமல் சைட்லேர்ந்து எட்டிப் பார்த்தால், சின்ன வயதில் நான் என்னவெல்லாம் செய்ய மாட்டேன் என்று நினைத்தேனோ அத்தனை கோணாங்கித் தனங்களும் செய்திருக்கிறேன். சின்ன வயது என்றால் இப்ப இல்ல...இதை விட இன்னும் சின்ன வயது...சுமார் பத்து வயது :). கூச்சமும் பயந்த சுபாவமாய் இருந்த என்னை மாற்றியது வடக்குத் தெரு தான். கூட இருந்து என்னை குட்டிச்சுவராக்கிய சக வானரங்களும் அதன் கலகலப்பான நாட்களும் எனக்கு என்றும் அது மால்குடி தான்.

நான் வடக்குத் தெருவிற்கு வருவதற்கு முன்னால் செய்யவே மாட்டேன் என்று நினைத்திருந்த விஷயங்களில் ஒன்று நாடகங்களில் வேஷம் கட்டுவது. முதல் ஜோடி நடனம்...அனுமாராய் வேஷம் போட்டது எல்லாம் ரொம்ப முன்னாடி 2004ல் எழுதியிருக்கிறேன் ([பகுதி1 பகுதி2). இதெல்லாம் எங்கள் தெரு நாடக குழுவில் நடிக்கும் போது நான் போட்ட வேஷங்கள். அப்புறம் பதினோராம் ஆண்டு படிக்கும் போது ஸ்கூலில் திரும்பவும் நாடக வாய்ப்பு கிடைத்தது. சுதந்திர தின கொண்டாட்டத்திற்க்காக மருது பாண்டியர்களின் கதையை நாடகமாய் போட்டோம். இருந்த ரெண்டு மருதில் நானும் ஒரு மருது. கதைப் படி எனக்கு செகண்ட் ஹீரோ வாய்ப்பு தான். இருந்தாலும் இந்த மாதிரி நாடகத்தில் நடிப்பவர்களுக்கெல்லாம் எங்க ஸ்கூலில் பெண்கள் மத்தியில் ரொம்ப மரியாதை உண்டு என்பதால் விரும்பி நடித்தேன்.

ஏற்கனவே அனுமாராய் வேஷம் கட்டிய எக்ஸ்பீரியன்ஸ் வேறு இருந்ததால்...ப்ராக்டீஸ் ரவுண்டு போது நல்ல நடித்து வாத்தியாரை அசத்தி விட்டால் என்னை முக்கியமான மருதுவாய் ப்ரமோட் செய்துவிடுவார் என்று ரொம்ப துடித்துக் கொண்டிருந்தேன். ரிகர்சலின் போது ஒரு வெள்ளைக்கார துரையை எதிர்த்து நாலு வரி பேச வேண்டும். மத்த நேரமெல்லாம் பெரிய மருது வசனம் பேசுவார். நான் "ஆமாம ஆமாம் பெரியய்யா"ன்னு சிங்க்சக் போடவேண்டும். என் வசனத்தின் போது எங்களை சங்கிலியால் கட்டி ரெண்டு அல்லக்கைகள் பிடித்து கொண்டிருக்கும். நான் திமிறிக் கொண்டு பேச வேண்டும். என் வசன நேரம் வந்த போது எனக்கு கூத்துப் பட்டரை கலைராணி (முக்கால் வாசி படங்களில் நெஞ்சில் அடித்துக் கொண்டு உணர்ச்சிகரமாய் அழுவாரே....முதல்வனில் கூட அர்ஜுனின் அம்மாவாய் வருவாரே) மாதிரி வேகம் வந்துவிட்டது. "யூ ஆர் ட்ரையிங் டூ அப்ரஸ் அன்ட் சப்ரஸ் அன்ட் டிப்ரஸ் தி ஃபீலிங்ஸ் ஆப் எ தமிழியன்" என்று உணர்ச்சிவசப் பட்டு வசனம் பேசியதில் அல்லக்கை பிடித்திருந்த சங்கிலியெல்லாம் பிய்த்துக் கொண்டு வந்துவிட்டது. "டேய் கலைராணி மாதிரி ஒரு ரூபாய் குடுத்தா ஒன்பது ரூபாய்க்கு நடிச்சா கூட பரவாயில்லை ஆனா நீ ஒன்பதாயிரம் ரூபாய்க்கு நடிக்கிற...? உனக்கு இந்த வேஷம் வேணுமா வேண்டாமா"ன்னு வாத்தியார் கொக்கி போட்டுவிட்டார். நம்ம நடிப்புத் திறனுக்கு இப்படி அணை கட்டிட்டாங்களேன்னு ஆதங்கம் எனக்கு ரொம்ப நாள் இருந்த போது தான் நான் என் வாழ்வில் நடக்கவே நடக்காது என்று நிணைத்திருந்த இரண்டாவது விஷயம் நிகழ்ந்தது.

மாறுவேடப் போட்டி. அந்த வருட ஸ்போர்ட்ஸ் டேக்கு மாறுவேடப் போட்டியும் வைத்திருந்தார்கள். பொதுவாய் மாறுவேடப் போட்டி என்றாலே பரமசிவன், பாரத மாதா,பிள்ளையார், பசு, ஏசு, அகத்தியர் என்று ஒரு க்ளீஷே இருந்து வந்தது. இதையெல்லாம் உடைத்து ஏதாவது ஒரு வேஷம் போட்டு சரித்திரத்தில் இடம் பிடித்துவிட வேண்டும் என்று எனக்குள் கலைத் தாகம் நாபிக்கமலத்திலிருந்து பெருக்கெடுத்தது. வழக்கம் போல தெரு நண்பர்கள் அனயாசமாக ஐடியா குடுத்தார்கள். "உனக்குத் தான் மனசுல பெரிய மைக்கேல் ஜாக்ஸன்ன்னு நினைப்பே அவர மாதிரி வேஷம் போடேன்" என்று ஒறு ஐடியா மணி திருவாய் மலர்ந்தது. போடலாம் தான்...மாமி லவட்டி குடுக்குற நாலணாவை 'சேமிப்பே நாட்டின் சுகாதாரம்'ன்னு சேர்த்து வைக்காமல் ரூட்டு விட்ட பெண்ணுக்கு டெய்லி வடை வாங்கிக் குடுத்த வகையில் கோட்டை விட்டிருந்தேன். மைக்கேல் ஜாக்ஸன் வேஷத்துக்கு பட்ஜெட் இடித்தது. சிம்பிளாய் எந்த பட்ஜெட்டுமில்லாமல் ஐடியா கேட்டதில் பசங்கள் கையை விரித்து விட்டார்கள். கண்ணுக்குட்டி கணேசன் மட்டும் "ரயில் மாதிரி வேஷம் போடு, குயில் மாதிரி வேஷம் போடு”ன்னு அள்ளி விட்டுக் கொண்டிருந்தான்.

எந்த ஐடியாவும் தோன்றாமல் ஸ்போர்ட்ஸ் டே வேறு வந்துவிட்டது. பெயர் குடுத்தது குடுத்தது தான் வாபஸ்லாம் வாங்க முடியாது என்று பி.டி வாத்தியார் வேறு கறாராய் சொல்லிவிட்டார். "எந்த பிரப்பரேஷனும் இல்லாமல் லூசு மாதிரி அங்க போய் நிக்க போறோம்"னு எனக்கு பயமாய் இருந்த போது தான் கடைசி நிமிடத்தில் அந்த ஐடியா தோன்றியது. பேசாமல் லூசாகவே வேஷம் போடலாமே, செலவும் அதிகம் ஆகாது....என்ன வேண்டுமானாலும் தத்து பித்துவென்று உளறலாம் என்று வீட்டில் இருக்கும் மாமாவின் பழைய சட்டையை ஒன்றை எடுத்துப் போய் ஆஜரானேன். ரொம்ப மேக்கப் போடாமலே எல்லாரும் தத்பரூபமாய் இருக்கு என்று சொல்ல... ஒரு திரு திரு வள்ளுவருக்கு பின்னால் களத்தில் இறங்கி ஏக ரணகளம் செய்து இது தான் சாக்கு என்று அங்கே இருந்த பி.டி.வாத்தியாரையும் மொத்தமாய் கலாய்த்து, வந்திருந்த சிறப்பு விருந்தினர் இந்த மாதிரி ஒரு பைத்தியத்தை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை இனிமேலும் பார்க்க முடியாது என்று ஏகத்துக்கு பாராட்டி முதல் பரிசு கப்பை கையில் குடுத்துவிட்டார்.
அடுத்த நாள் தினமலரில் ரெண்டாவது பக்கத்தில் அந்த புகைப்படம் பெயருடன் வந்திருந்தது. "உங்க பையன் பெரிய பைத்தியம்ன்னு பரிசு குடுத்திருக்காளே...தினமலர்ல போட்டோலாம் வந்திருக்காமே" என்று ஊரில் எல்லாரும் விசாரிக்க..."ஆமா இருக்காத பின்ன...எங்க குடும்பத்திலேயே இது ரத்தத்தில் ஊறி இருக்கே"ன்னு மாமாவுக்கும் ஏக பெருமை. ஸ்கூலில் அந்த கூத்து ரொம்ப பாப்புலர் ஆகி இன்னொரு அன்னையர் தின விழாவிலும் அதே வேஷத்தை ஆசிரியர்கள் உட்பட நிறைய பேர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேடையேற்றினேன் :)

பி.கு - தங்கமணிக்கு இந்த விஷயம் இது நாள் வரை தெரியாது..இப்போது தெரிந்துவிடும்...."ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டாக...என்ன சப்பான்ல சாக்கிசான் கேட்டாக...ஒசாக்கால ஒபாமா கேட்டாகன்னு ஆரம்பித்துவிடுவார். தங்கமணி - ரெடி ஸ்டார்ட் மீசிக்

Sunday, February 07, 2010

அஞ்சு பைசா பைத்தியம்

எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே அவர் எங்கள் ஊரில் தான் இருந்து வந்தார். மிக கசங்கி, ஏகப்பட்ட கறைகளோடு இரண்டே பட்டன்களோடு சட்டை. கலைந்து தாறுமாறாக இருக்கும் நரைத்த முடி. ஒரு வாரம் சவரம் செய்யாத வெள்ளை குறுந்தாடி. வேஷ்டியிலும் ஏகப்பட்ட காப்பி கறை இருக்கும். கோனலாய் கட்டியிருந்தாலும் முக்காவாசி நேரம் மடித்து தான் கட்டியிருப்பார். அவரோடு இயற்பெயர் தெரியாது, ஆனால் எல்லாரும் அவரை ஊரில் ‘அஞ்சு பைசா பைத்தியம்’ என்று தான் கூப்பிடுவார்கள்.

ரோட்டில் ஒருத்தரை விடமாட்டார். "சார் ஒரு அஞ்சு பைசா இருக்குமா...அஞ்சே பைசா தான்...இருக்குமா பாருங்க சார் அஞ்சே பைசா" கூடவே ரொம்ப நேரம் வருவார்.. தப்பிப்பதற்காக கடைக்குள் ஏதாவது ஏறினாலும் விடமாட்டார். திரும்ப திரும்ப இதையே சொல்லிக் கொண்டிருப்பார். இவரின் தொல்லை தாங்கமுடியாமல் வெளியூர்காரர்கள் எதாவது சில்லரையை குடுத்து அனுப்பிவிடுவார்கள். உள்ளூர்காரர்கள் சட்டையே செய்யமாட்டார்கள். அவரும் சளைக்காமல் அரை மைல் தூரம் வரை கூட வந்து பார்ப்பார். காலேஜ் மாணவர்களை கூட விட மாட்டார். கேட்பது தான் அஞ்சு பைசா கேட்பாரே தவிர எத்தனை பைசா குடுத்தாலும் வாங்கிக் கொள்வார்.

"டேய் அவர அவாய்ட் பண்ணன்னும்னா ஒரு ஈஸியான வழி இருக்கு...வெத்து பேப்பர்ல கையெழுத்து போடறீயான்னு கேளு அந்த ஆள் ஓடி போய்டுவான்"ன்னு ஒரு நண்பன் என்னிடம் சொன்னான். ஒரு வேளை அடித்துவிட்டால்...என்று கொஞ்சம் உள்ளூர பயத்தோட சொல்லிப் பார்த்தேன். ஓடியெல்லாம் போகவில்லை....ஒரு நிமிடம் அஞ்சு பைசா புராணத்தை விட்டுவிட்டு தீர்க்கமாய் என்னைப் பார்த்தார். அப்புறம் எதுவும் பேசாமல் நடந்து போய்விட்டார்.

"அம்பி அவர் கணக்குல பெரிய சூரப்புலி ஏதாவது சந்தேகம்னா கேட்டுகிடலாம்...போஸ்ட் ஆபிஸுல அக்கவுண்ட்லாம் வெச்சிருக்காரு தெரியுமா" என்று சிவா ஸ்டோர்ஸ்காரர் சொல்லுவார்.

"அந்த ஆள் ப்ராடு...பைத்தியமெல்லாம் இல்லை...சும்மா ஊர ஏமாத்திட்டு பைத்தியம் மாதிரி திரியறான். நல்லா இங்கிலீஷ்லாம் பேசுவான் .."

"சே... சே... அந்த ஆள் பாவம்..ரொம்ப பைத்தியம் இல்லாட்டியும்...ஏதோ சித்தபிரமை பிடிச்சு இப்படி அலயறார்...."

இரண்டு விதமாயும் அவரை பற்றி கருத்துகள் ஊரில் நிலவும். மாமாவுடன் செல்லும் போதெல்லாம் அந்த ஆள் தென்பட்டால் மாமா அவருக்கு விஷ் பண்ணுவார்.அவரும் மாமாவிற்கு திரும்பவும் விஷ் பண்ணுவார்.

"யாரோ அவர் கிட்ட வெத்து பத்திரத்துல கையெழுத்து வாங்கி ஏமாத்திட்டா அதுனால தான் இப்படி ஆகிட்டார்ன்னு சொல்றாளே அப்பிடியா" என்று மாமாவிடம் ஒரு நாள் கேட்டேன்.

" தெரியலை ...நல்ல மனுஷன் பாவம் என்ன கஷ்டமோ இப்படி ஆகிட்டார்..அவரோட சொந்தக்கார்கள் சொத்து விஷயத்துல எமாத்திட்டான்னு சில பேர் சொல்றா...சில பேர் வியாபார நஷ்டத்துனால இப்படி ஆகிட்டார்ன்னு சொல்றா எது உண்மை தெரியலை...ஆனா நல்ல நாலெட்ஜிபிள் மேன்"

ஒரு நாள் ஹெட் போஸ்ட் ஆபிஸிற்கு வேலையாக சென்றிருந்த போது அங்கு அஞ்சு பைசா பைத்தியம் யாருக்கோ பாரம் பூர்த்தி செய்ய உதவி செய்து பைசா வாங்கிக் கொண்டதைப் பார்த்தேன். போஸ்டல் ஆர்டர் எடுக்க பாரம் எங்க இருக்குன்னு அவரிடம் போய் கேட்டேன். உடனே "அஞ்சு பைசா இருக்குமா"ன்னு ஆரம்பித்துவிட்டார்.

அதற்கடுத்த வாரம் மெயின் ரோடுக்கு போன போது மண்டையில் சின்ன கட்டுடன் அஞ்சு பைசா புராணம் பாடிக்கொண்டிருந்தார். பஸ்ஸ்டாண்டில் யாரோ அடித்துவிட்டதால் கட்டு என்று ஊரில் பேசிக்கொண்டார்கள். என்னவோ எனக்கு மனதில் ரொம்ப பதிந்துவிட்ட பெர்சனாலிட்டிகளில் ஒருவராய் இந்த அஞ்சு பைசா பைத்தியம் ஆகிவிட்டார்.

அதற்கப்புறம் நான் சென்னைக்கு படிக்க வந்து விட்டேன். அப்புறம் ஊருக்கு லீவுக்கு போன போதெல்லாம் அஞ்சு பைசா பைத்தியத்தைக் காணவில்லை. "யாரு கண்டா இங்க தான் எங்கயாவது சுத்திண்டு இருக்கும்"ன்னு யாருக்கும் தெரியவில்லை. சென்னையில் வேலை கிடைத்து ஒரு முறை லீவுக்கு போயிருந்த போது ரொம்ப நாள் கழித்து திருநெல்வேலி பஸ்ஸ்டாண்டில் அஞ்சு பைசா பைத்தியத்தைப் பார்த்தேன். அதே கோலத்தில் தான் இருந்தார். ஆனால் கொஞ்சம் தூரத்திலிருந்து பார்த்த போது கிளம்பிக் கொண்டிருந்த பஸ்ஸில் "நல்லா படிம்மா என்ன" என்று யாரையோ வழி அனுப்பிக் கொண்டிருந்தார்.

எனக்கு ஆர்வம் கொப்பளிக்க அவரை நோக்கி வேகமாய் நடந்தேன். பெயர் தெரியாததினால் அவர் தோளைத் தொட்டு கூப்பிடலாமா என்று குழப்பமாய் இருநது. எப்படி அறிமுகப் படுத்திக் கொள்வது என்று தயக்கமாகவும் இருந்தது. சில விநாடிகளில் அவரே என் பக்கம் திரும்பினார்.

"... எப்படி இருக்கீங்க..?"

"..."

"நியாபகம் இருக்கா என்ன..."

"சார் ஒரு அஞ்சு பைசா இருக்குமா...அஞ்சே பைசா தான்...இருக்குமா பாருங்க சார் அஞ்சே பைசா தான் சார்....கொஞ்சம் பாருங்க சார்....."

Monday, February 01, 2010

வெட்டி பந்தா

ஸ்கூல் பருவமும் பந்தா விட்டுக்கொள்வதும் ரசவடை மாதிரி. ஊறிப் போன ஒரு விஷயம். அப்போது க்ரிகெட் வீட்டுக்கு வீடு வாசப்படி. எனக்கு க்ரிக்கெட் விளையாட பிடிக்குமே தவிர பார்ப்பது அவ்வளவாக வராது. நம்ம நியாபக சக்திக்கு பதினோரு பெயரை நியாபகம் வைத்துக் கொள்வதே பெரிய விஷயம் இதில் ஊர்பட்ட டீமில் உள்ள ஆளையெல்லாம் சென்சஸ் எடுக்க முடியாது என்பதால் 'இன்னிக்கு எனக்கு மேத்ஸ் போடனும்டா" என்று சொல்லிவிட்டு டி.டியில் போடும் ‘முஜே பச்சாவ்’ அரத ஹிந்தி படத்தை பார்க்க உட்கார்ந்துவிடுவேன்.

இருந்தாலும் அரட்டை கச்சேரிகளில் கூட்டத்தோட கோவிந்தா போடுவதற்காக, இந்தியா விளையாடும் ஏதாவது ஒன்னு ரெண்டு மேட்ச்சை பார்த்துவிட்டு "சேட்டன் ஷர்மா இருந்தாலும் யார்க்கர் போட்டிருக்கவேண்டாம்டா"ன்னு நம்ம கருத்தையும் ஆவணத்தில் ஏற்றிவிடுவேன். கிங்பெல் மட்டும் ப்ராட்மேன், சோபர்ஸ் கீபர்ஸ்ன்னு ஆதியிலிருந்து அந்தம் வரைக்கும் பிரித்து மேய்வான். அங்கேயும் " ஆமாமா அவங்களெல்லாம் க்ரேட் ப்ளேயர்ஸ்...சிறந்த திறமைசாலிகள்"ன்னு அதிலும் மேஜர் சுந்தராஜன் மாதிரி நம்ம கருத்தை ஏத்திவிடுவேன். இதற்கடுத்தகட்ட பைத்தியமாய் பையன்கள் விளையாட்டு வீரர்களின் ப்ளோ அப் படங்களை வீட்டில் மாட்டி வைப்பார்கள். ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழ்களில் வரும் வழ வழ பேபர் ப்ளோ அப் மிகப் பிரசித்தம். எங்கவீட்டில் நாங்க வாரமலர் மட்டும் தான் கடன் வாங்கிப் படிப்போம் என்பதால் இந்த ப்ளோஅப் எல்லாம் எட்டாக்கனி.

இந்த காலக் கட்டங்களில் நண்பன் ஒருவன் டென்னிஸை அறிமுகப் படுத்தினான். முதல் மேட்ச்சே விமன்ஸ் டென்னிஸ் செமிஃபைனல்ஸ். ஆகா என்னாமா விளையாடுகிறார்கள்...இந்த விளையாட்டு ரொம்ப நல்லா இருக்கேன்னு நானும் ஜோதியில் ஐய்க்கியமாகிவிட்டேன். அதிலும் நமக்கு பிடிச்ச ஒரு ஆளை சப்போர்ட் செய்யவேண்டும் என்று மோனிகா செலஸை இஷ்ட தெய்வமாகிக் கொண்டு விட்டேன். எனக்கு என்னவோ ஆண்கள் டென்னிஸ் அவ்வளவு பிடிக்கவில்லை. என்னைச் சொல்லி குற்றமில்லை...வீணாப் போனவர்கள் பெண்கள் மாதிரி அவ்வளவு விறுவிறுப்பாக விளையாடாததால் இருக்கலாம்.

"டேய் மோனிகா செலஸ் படம் கிடைச்சா ஒன்னு லவட்டி குடுடான்னு தெரிவில் சீனாதானா மாமா தவிர எல்லாரிடமும் நாயாய் பேயாய் கெஞ்சி டீல் போட்டு வைத்திருந்தேன். நம்ம யோகம் மோனிகா சிக்கவே இல்லை. "டேய் என்னோட கலெக்க்ஷன்ல கடைசியா இது ரெண்டு தான் இருக்கு வேணும்னா வெச்சிக்கோ ஏதோ புட்பால் ப்ளேயர்ஸ்ன்னு நினைக்கிறேன்"ன்னு கிங்பெல் உப்புக்கு ரெண்டு படத்தை குடுத்தான். மோனிகா வாழ வேண்டிய புக் ஷெல்பில் அரை ட்ராயரை போட்டுக்கொண்டு தொடையில் ரெண்டு கோழியை ஒளித்து வைத்துக் கொண்டது மாதிரி இருக்கும் இந்த காட்டான்களையா மாட்டுவது என்று எனக்கு ஏக வருத்தம். அதை விட கொடுமை அந்த படத்தில் இருப்பது யாரு என்பது கூட தெரியாமல் படத்தை பந்தாவாக மாட்டி வைத்திருந்தது தான்.

அடுத்த வாரம் சீனாதானா மாமா வீட்டிற்கு வந்த போது "சபாஷ் உன்னோட டேஸ்ட நான் ரொம்ப பாராட்டுறேன்...எல்லாரும் க்ரிக்கெட் க்ரிகெட்ன்னு பைத்தியமாய் அலையும் போது நீ வித்தியாசமாய் புட்பால் ரசிகனாய் இருக்க பாரு இது ரொம்ப பிடிச்சிருக்குன்னு " ஒரே பாராட்டு மழை. எங்க அவர் இந்த ஆளப் பத்தி சொல்லுன்னு சொல்லிவிடுவாரோன்னு எனக்கு ஒரே பயம். "ஹீ ஹீ ஆமாம் மாமா எனக்கு புட்பால்னா ரொம்ப ஆசை...நம்மூர்ல சரியான க்ரவுண்டே இல்லை எல்லாம் ஒரே குழியும் குட்டையுமா இருக்கு...கார்ப்பரேஷன்ல சொல்லனும்"ன்னு எதோ சமாளித்து கொண்டிருந்தேன். "ஓய் உம்ம பையனுக்கு நல்ல டேஸ்ட்... மாட்டி வைச்சிருக்கிறது யாரு தெரியுமோ....பீலே!!! லேசுப்பட்ட ஆளில்லை ஓய்....மிகப் பெரிய புட்பால் லெஜென்ட்...ப்ரெசிலியன்"ன்னு மாமாக்கு சினா தானா மாமா பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது தான் இது நாள் வரைக்கும் படம் காட்டி பீலா விட்டுக்கொண்டிருந்தது பீலேன்னு தெரிந்தது.

நான் மாடியிருந்த படத்திலிருந்த அந்த இன்னொரு ஆள் யாருன்னு இன்று வரை தெரியாது. டென்னிஸை அறிமுகப் படுத்திய நண்பன் என் பிறந்த நாளுக்கு மோனிகா செலஸ் ஸ்போர்ட் ஸ்டார் ப்ளோ அப்பை மனவுந்து தர, குட்டைப் பாவாடையை போட்டுக் கொண்டு மார்க்கமாய் இருக்கும் மோனிகா செலஸ் படத்தை நம்ம புக் ஷெல்பில் ஒட்டினால் மாமா ஏற்றுக் கொள்வாரோ மாட்டாரோன்னு பயம். "டேய் நீ என்ன மோனிகா செலஸ மருமகளாவா ஏத்துக் கொள்ளச் சொல்லப் போற...இதுக்கெல்லாம் பெர்மிஷன் கேட்டுக்கிட்டு...புஸ்தகத்த வெச்சு மறைச்சிடுடா"ன்னு கூட இருந்த ஒரு ஐடியா மணி வாரி வழங்கி, மோனிகா புஸ்தகத்தின் பின்னாலிருந்து ரொம்ப நாள் அருள் பாலித்துக் கொண்டிருந்தாள்.

ஜப்பான்காரர்கள் எல்லாரும் ஜூடோவில் பெரிய ஆள், சைனாக்காரர்கள் எல்லாரும் கராத்தேவில் பெரிய ஆள் என்ற உலக கோட்பாடின் படி இந்தியாவில் இருப்பவர்களெல்லாம் கிரிகெட்டில் பிஸ்துன்னு இங்கு இங்கிலாந்தில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. ஆபிஸில் கட்டிடம் மாறிய புதிதில் ஒரு பெரிய தலையின் செக்ரட்டரி பக்கத்தில் உட்கார்ந்திருந்ததால் சும்மா பேச்சு பழக்கம். "அப்போ நீ பெரிய க்ரிக்கெட் பைத்தியமாய் இருப்பாயே ஒரு மேட்ச் கூட விடாம பார்ப்பியே...ஒருத்தர் விடாம ஜாதகத்த நோட் பண்ணி வைச்சிருப்பியே...எனக்கு க்ரிகெட் சுத்தமா தெரியாது"ன்னு அந்த மகராசியே எடுத்துக் குடுக்க, காசா பணமா..."ஹீ...ஹீ...ஆமா பின்ன....இருக்காதா...உங்களுக்கு வேற க்ரிகெட் தெரியாது....அப்போ எனக்கு எவ்வளவு தெரிஞ்சிருக்கனும் ... க்ரிகெட்னா எனக்கு உயிரு.... இவ்வளவு ஏன் க்ரிகெட்ன்னு சொன்னாதான் நான் தண்ணியே குடிப்பேன்னா பார்த்துக்கோங்களேன்" ஏகத்துக்கு எடுத்துவிட்டிருந்தேன்.
முன்னொரு நாளில் இங்கே ட்ரெயினில் கபில் தேவை சந்திக்க நேர்ந்தது. எந்த பந்தாவுமில்லாமல் மனுஷன் சகஜமாய் பேசிக் கொண்டு வர...எதுக்கும் இருக்கட்டும்ன்னு அவருடன் நிறைய போட்டோ எடுத்து வைத்திருந்தேன். அதை ஊருக்கு போயிருந்த போது ஊரில் காட்டிய போது "ஐ....இவரா இவர எனக்குத் தெரியுமே...இவர் முன்னாடி பூஸ்ட் விளம்பரத்துக்கு வருவாரே அவர் தானே"ன்னு நான் காட்டிய கூட்டமெல்லாம் எனக்கு மேல் அப்பரசன்டியாய் இருந்தது. கபில் தேவை சந்தித்தது பற்றியும் அம்மணியிடம் அளந்து விட்டிருந்தேன்.


மிக சமீபத்தில் ஆபிஸில் இரண்டு நாள் ஆப்சைட். ஆபிஸ் செலவில் வெளியூரில் தங்கி, நல்ல சாப்பிட்டுவிட்டு, டீலெக்ஸ் ரூம் போட்டு யோசித்து ஆபிஸை முன்னேறுவது எப்படின்னு வொர்க் ஷாப். போவதற்கு முந்தின நாள் நம்ம பெரிய தலை செகரட்டரி வந்து "உனக்கு ஒரு சந்தோஷமான் செய்தி!!... கேட்ட மாத்திரத்தில் நீ துள்ளிக் குதிக்க போற...நம்ம ஆப்சைட் கெஸ்ட் ஸ்பீக்கர் யாருன்னு தெரியுமா....டேவிட் கோவர் !!!! ஆனா இந்த விஷயத்தை யாருட்டயும் சொல்லிடாத இட்ஸ் அ சீக்கிரெட் "ன்னு என் காதில் கிசுகிசுத்துவிட்டு போக, யாரது கோவர்...நம்ம ட்ரேடிங் டெஸ்க் ஹெட்டா? அந்த ஆளா இருக்காதே கெஸ்ட் ஸ்பீக்கர்னா வெளியிலேர்ந்து பிரபலத் தானே கூப்பிடுவாங்கன்னு எனக்கு ஏகக் குழப்பம். "எனக்கு தெரியும் நீ சும்மா என்ன கலாசறதுக்கு நடிக்கிறன்னு...நான் ஸ்பெஷலா உன்னை அந்த ஆள் கூட டின்னர் டேபிளில் போட்டிருக்கேன்...சும்மா என்ஜாய் பண்ணு”ன்னு அம்மணி சொல்லிவிட்டு போய்விட்டார். ஐயைய்யோ அந்த டேபிள்லயேவா...அங்க பெரிய தலைங்க தானே உட்காருவாங்கன்னு உதறலெடுத்து. இதென்ன பெரியா சீக்கிரட்டா இருக்கே இந்த ஆள் யாருன்னு கூகிள் செய்து பார்த்தால்....அன்னார் இங்கிலாந்தின் முன்னாள் பெரிய கேப்டன்னு தகவல்கள் கிடைத்தது. அடப்பாவிங்களா...இன்னுமாடா என்ன நம்புறீங்க...எடுத்துக்குடுக்க கூட அங்க சீனாதானா மாமா இருக்க மாட்டாரேன்னு பரீட்சைக்கு படிப்பது மாதிரி அன்னாரைப் பற்றி படிக்க வேண்டியதாய் போய்விட்டது. "நீங்க தான் இது வரைக்கும் ஒருதரம் கூட நேர்ல பார்காமலேயே தாஜ்மகாலை செங்கல் செங்கலா விவரிச்சி இந்த ஊர்ல நிறைய பேருக்கு வெர்ட்சுவல் டூர் குடுத்திருக்கீங்களே ..உங்களுக்கு இதெல்லாம் ஜுஜூபி..."ன்னு தங்கமணி வேறு நம்பிக்கையளித்துக் கொண்டிருந்தார்.

ஆப்சட்டில் எங்கள் டேபிளில் எல்லாரும் என்னை பெரிய கிர்க்கெட் பிஸ்துன்னு கோவரிடம் அறிமுகம் செய்து வைக்க....எனக்கு ஏக உதறல். "நான் சென்னைக்கு வந்திருக்கேன்...அங்கே சிதம்பரம் ஸ்டேடியமில் விளையாடி இருக்கிறேன்"ன்னு அவர் சொல்ல..." ஆமாமா போன வருஷம் கூட கபில்தேவ் இங்க வந்திருந்தார்...மீட் பண்ணி ரொம்ப நேரம் பேசினோம்... சிதம்பரம் ஸ்டேடியமிலிருந்து நேரா வந்து லெப்ட்ல திரும்பினா மைலாப்பூர் வரும் அங்க டப்பா செட்டி கடைன்னு ஒன்னு இருக்கு"ன்னு நானும் சம்பந்தா சமபந்தம் இல்லாமல் உளறிக் கொட்டி...ஒருவழியாய் சமாளித்து வந்தேன்.