For picture version of this post Part 2a Part 2b
நாடக கான சபா
பத்தாவது வயதின் போது தான் மாமா வீட்டிற்கு வந்தேன். இத்தனைக்கும் அடுத்த தெருவில் தான் அதற்கு முன் இருந்தேன். பையன்களில் ஓரிரு முகங்கள் தெரியுமே தவிர யாரையும் பழக்கம் கிடையாது. பெரியவர்கள் விளையாடும் கிரிக்கெட்டில் முன்பிருந்த சன்னதித் தெருவிற்கும், இந்த வடக்குத் தெருவிற்கும் அடிக்கடி போட்டி நடக்குமாகையால், பையன்கள் என்னை பாகிஸ்தான் டீமை சேர்ந்தவன் மாதிரி தான் பார்த்தார்கள். வடக்குத் தெருவில் பையன்களும் ஜாஸ்தி. அக்ரஹாரம் ஆகையால் எதாவது அப்பப்போ நடந்து கொண்டிருக்கும். மாதர் சங்கமெல்லாம் உண்டு. மாதர் சங்கமென்றால் பழைய சினிமாவில் காட்டுவது மாதிரி பவுடரெல்லாம் போட்டுக்கொண்டு கைப்பையை தூக்கிக் கொண்டு சினிமாவுக்கெல்லாம் போகமாட்டார்கள். புதன்கிழமை தோறும் கோவிலில் ஸ்லோகம் சொல்லுவார்கள். மத்தியான் வேளைகளில் ஒவ்வொரு வீட்டிலும் முறைவைத்துக் கொண்டு புதிது புதிதாக ஸ்லோகம் சொல்லிக்கொள்வார்கள். நவராத்திரிகளில் இதேமாதிரி முறைவைத்துக் கொண்டு ஸ்லோகம் சொல்லிக்கொண்டு வெத்தலபாக்கு குடுப்பார்கள். இதுபோக உறுப்பினர்களின் வீடுகளில் எதாவது விஷேமானால் அதற்கு ஒரு தூக்கோ வாளியோ கண்டிப்பாக பரிசாக கொடுப்பார்கள். நான் அந்த தெருவிற்கு போன காலத்தில் வருஷா வருஷம் மாதர் சங்க தினமும் கொண்டாடுவார்கள். மாதர் சங்க தினத்தில் பாட்டு, நடனம், நாடகம் அனைத்தும் உண்டு. சிறுவர் சிறுமியர் அனைவரும் ஆர்வத்துடன் பங்கு கொள்வார்கள்.
நான் வந்த புதிதில் மாமி என்னையும் சேர்த்துவிட்டாள்.
"என்னடா வேணும் கோந்தே...டான்ஸ் ஆடறியா பாட்டு பாடறியா, நாடகத்துல நடிக்கப் போறியா?"
ரிகர்ஸல் பார்க்கும் அந்த வீட்டில் நிறைய பெண்கள் கூட்டமாக இருந்ததால் நான் திரு திருவென முழித்தேன். ஒருவரையும் வேறு தெரியாது. மூன்று மூன்று பேராக நிறுத்தி வைத்திருந்த டான்ஸ் கூட்டதில் ஒரு ஆள் குறைவாக இருந்த்தால் நடனக் கூட்டத்தில் எடுத்துக்கொண்டார்கள்.
"ஆடுவான் மாதிரி தெரியறது. நீங்க விட்டுட்டு போங்கோ நாங்க பார்த்துக்கறோம்"
"அதெல்லாம் ஜோரா ஆடுவான், ஆத்துல கண்ணாடி முன்னாடி நிறைய ஆடுவான்" - ஐய்யோ பாவம் மாமி நான் கண்ணாடி முன்னாடி காகா வலிப்பு வந்தவன் மாதிரி கையையும் காலையும் வெட்டி வெட்டி இழுப்பதை நடனம் என்று நம்பினாள்.
உசரத்திற்கேற்ப நடுவில் ஒரு இடம் கிடைத்தது. இரண்டு பக்கமும் பெண்கள். வெட்கம் பிடுங்கித் தின்றது. ஒரு ஸ்டெப்பில் கையெல்லாம் வேறு கோர்த்துக்கொள்ள வேண்டிருந்தது. கையெல்லாம் வேர்த்திருந்தது. அந்தப் பெண் எதாவது சொல்லுவாளோ என்று பேருக்கு பிடித்துக்கொண்டேன். வளையமாக சுற்றும் போது லேசாக பிடித்திருந்தனால் கைஅடிக்கடி நழுவிற்று.
"கைய பிடிச்சுண்டா காதறுந்துரும்ன்னு பயப்படறியோ? கெட்டியா பிடிச்சுக்கோ அறுந்தா தைச்சுக்கலாம் " நடனம் சொல்லிக்குடுத்த அக்கா கேலி செய்ய எல்லாரும் சிரித்தார்கள். அப்புறம் இருக்கிப் பிடித்துக்கொண்டேன். நழுவக் கூடாதே என்று கவனம் செலுத்தியதில் விடவேண்டிய கட்டத்தில் நான் மட்டும் கெட்டியாக பிடித்துக்கொண்டு இருந்தேன்.
"பரவால்லயே கெட்டியா பிடிச்சுக்கறயே...ஆனா இந்த இடத்துல விட்டுறு உனக்கு வேனும்னா அப்புறம் திரும்ப பிடிச்சிக்கலாம்...."
திரும்பவும் எல்லாரும் சிரித்தார்கள். உம்மென்று இருந்தேன். அந்த வருடம் பவுடரை அள்ளிப் பூசிக்கொண்டு 'தத்தக்கா புதக்கா'வென்று ஆடிவிட்டு வந்தேன்.
அடுத்த வருடத்திலிருந்து பையன்களும், களமும் பழக்கமாகிவிட்டதால் நாடகத்திலெல்லாம் நடிக்க ஆரம்பித்தேன். நாடகத்திற்கு தெருவில் இருக்கிற பையன்கள் எல்லாரும் செட் சேர்ந்தோம். நண்பனின் அம்மா தான் நாடக ஆசிரியர். மிக அழகாகச் சொல்லிக் குடுப்பார்கள். அதோடு நல்ல பழக்கம் என்பதால் தைரியமாக வசனமெல்லாம் பேசினேன். பண்ணையார் வேஷம் போட்டு நன்றாக பேசியதில் தெருவில் நிறைய பேர் பண்ணையாரென்று பட்ட பேர் வைத்து கூப்பிட ஆரம்பித்தார்கள். அதே நாடகத்தை நாலைந்து மேடைகளில் போட்டோம். வசனம் நிறைய இருகே என்று பெண் வேஷம் போட எல்லாரும் தயங்கிய போது வசனம் நிறைய இருக்கே என்று ரெடியாக ஒத்துக்கொண்டேன். ராஜா வேஷம், ரானி வேஷம், சாமி வேஷம் என்று எல்லா வேஷமும் போட்டேன்.
வசனத்தில் சொதெப்பல்லாமும் உண்டு.
"பக்தா உன் பக்தியை மெச்சினேன்" என்று உம்மாச்சி பக்தனுக்கு காட்சி குடுக்க வேண்டிய விறுவிறுப்பான காட்சியில் "பக்தா உன் பஜ்ஜியை மெச்சினேன்" என்று சொதப்பி எல்லாரையும் வயத்தைப் பிடித்துக் கொண்டு சிரிக்க வைத்த கலாட்டாவும் உண்டு.
ஒரு உம்மாச்சி நாடகத்தில் அனுமாருக்கு முக்கிய வேஷம். நிறைய வசனம் பேச வேண்டும் என்று எனக்கு குடுத்தார்கள். வேஷமெல்லாம் வேண்டாம்டா அப்பிடியே போய் நில்லு தத்பரூமாக இருக்கும் என்று எல்லாரும் கலாய்த்தார்கள். வேஷத்திற்கு எல்லாம் ரெடி இந்த வால் மட்டும் நொழு நொழுவென்று இருந்தது. என்ன செய்யலாமென்று யோசித்து நண்பனின் அம்மா ஒரு கனமான கம்பியை வளைத்து துணியைச் சுற்றி வால் தயார் செய்தார்கள், கொஞ்சம் கனமாக இருந்தது. மேடையில் கஷ்டப்பட்டு பேலன்ஸ் செய்து கொண்டு நடித்துக்கொண்டிருந்தேன். ஒரு காட்சி முடிந்து ஒதுங்க வேண்டிய நண்பன் என் வாலில் தடுக்கிக் கொண்டு போக...கம்பி பிய்த்துக்கொண்டதுமல்லாமல் பின்புறத்தில் இடம் மாறி குத்த வேறு ஆரம்பித்துவிட்டது. எனக்கு மரண் அவஸ்தை. அடுத்த காட்சியில் அனுமார் வேஷத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் வேறு ஆட வேண்டும். அந்த காட்சி முடிவ்தற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது எனக்கு.(அனுமார் ஆப்படித்துவிட்டார் :) ) அப்புறம் அவசர அவசரமாக திரையைப் போட்டு ஒரு மாமியை பாட்டுப் பாடவிட்டு எனக்கு சரி செய்தார்கள்.
நாடகமெல்லாம் முடிந்து இரண்டாம் பரிசு கிடைத்த போது வலியெல்லாம் போயே போச்சு..பொயிந்தே...
-- தொடரும்
Monday, April 26, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment