Showing posts with label Thangamani. Show all posts
Showing posts with label Thangamani. Show all posts

Monday, December 30, 2013

கடுங்கண் ஐந்து

நான் Nintendo Wii கேம் விளையாடுவது குறைவு. அபூர்வமாய் ஒரு நாள் தோள்கள் தினவெடுத்து மகள்களுடனும் தங்கமணியுடனும் போட்டி போட்டுக்கொண்டு விளையாடுவேன். முதலில் அவர்கள் பிஸ்த்து காட்டும் விளையாட்டுகளில்லாம் சொல்லிச் சொல்லி என்னை தோற்கடித்து கழுவி ஊத்திவிடுவார்கள். அந்த மாதிரி நொந்து நூடூல்ஸாகும் தருணத்திற்கென்றே பிரம்மாஸ்திரமாய் டென்னிஸ் வைத்திருப்பேன். ஒவ்வொருத்தரா...ஒவ்வொருத்தரா வாங்கன்னு சொடக்கு போட்டு தோற்க வைக்க முனையும் போது தங்கமணி முதல் கேமில் தோத்த கடுப்பில் அடுக்களையில் குக்கரை வைத்து விட்டு, மூனு விசில் வந்தவுடன் கேஸை அமர்த்தச் சொல்லிவிட்டு மாடிக்குப் போய்விடுவார். "டேய் அதைப் போய் ஏன்டா குக்கர் விசில் அடிக்குதுங்கிறீங்க? எந்த குக்கர் மண்டயன்டா விசில உஸ்ஸ்ன்னு அடிக்கிறான்"ன்னு சுவத்தைப் பார்த்து கவுண்டமணி டயலாக் ஒன்னு விட்டுவிட்டு, "நீ போ ராஜாத்தி நான் பார்த்துக்கறேன்"-ன்னு சொச்சமிருக்கும் மானத்தை மகளிடமிருந்து செட் பாயிண்ட்டாக எடுக்க வியர்வை சிந்த ஆரம்ப்பிப்பேன். அடுத்த அம்பதாவது நொடியில் "கரெக்ட்டா ஆஃப் பண்ணிடுங்கன்னு..."ன்னு  அசரீரியாய் எச்சரிக்கை வரும். "அதெல்லாம் காலேஜ் காலத்திலேர்ந்தே எவ்ளோ விசில் அடிச்சிட்டிருக்கோம் எங்களுக்குத் தெரியாத விசிலா...அதெல்லாம் லெப்ட் ஹேண்டால அசால்ட்டா பண்ணுவோம்"ன்னு  சொல்லிவிட்டு ரெண்டாவது கேம் ஆடிக்கொண்டிருக்கும் போது குக்கர் ரொம்பக் கேவலமாய் உஸ்ஸூன்னு சத்தம் போடும். அப்ப மதுரை பாண்டிய மன்னனுக்கு வந்த மாதிரி வரும் பாருங்க ஒரு டவுட்டு... "இது எத்தனாவது விசில் சத்தம்....???"  தமிழ்சங்கம் தீர்த்துவைக்க முடியாத அந்த சந்தேகத்தை மகள்கள் கொடுக்கும் ஆளுக்கொரு ஆன்சரில் ஆவரேஜ் போட்டு குத்துமதிப்பாய் இன்னொரு சத்தம் போடவிட்டு அமர்த்தி, ஐந்து நிமிடம் கழித்துத் திறந்தால் ஒன்னு டைனோசர் வாந்தியெடுத்த மாதிரி குழைந்திருக்கும், இல்லை கஞ்சி போட்டு அயர்ன் பண்ணின மாதிரி வேகாத அரிசி விறைப்பாய் நின்று கொண்டிருக்கும். "ச்ச்சே நான் சொல்லல எல்லாம் கலிகாலம், சிகரெட் பிடிக்காதீங்கடான்னு தலை தலையா முகேஷ் அடிச்சிக்கிறார், கேட்டாத் தானே, மண்ணோடு மண்ணாப் போய் இப்போ பாரு அரிசி எப்படி வந்திருக்குன்னு" என்ற விளக்கமெல்லாம் எடுபடாது. அதற்கப்புறம் சங்கத்தில் இதற்கு தீர்ப்பு எப்படிச் சொல்லுவார்கள் என்பது இந்த பதிவுக்கு அவுட் ஆஃப் சிலபஸ்.

அடுத்த கடுங்கண் எனக்குத் தெரிந்து யுனிவேர்ஸலாய் எல்லா இடங்களிலும் நடக்கக் கூடியது. காய்கறி வாங்கும் கடையாகட்டும். சூப்பர் மார்க்கெட்டாகட்டும், தியேட்டர் இண்டர்வல் கூட்டத்தில் டாய்லெட்டாகட்டும், நாம் அவசரமாகப் போகவேண்டுமென்றால் அப்போது தான் நமக்கு முன்னால் பத்து க்யூ நிற்கும். பத்திலும் அனேகமாய் சமஅளவில் ஆட்கள் ரொம்பி வழிவார்கள். "வாழ்க்கை என்பது ஓட்டப் பந்தயம், டவுசர் அவிழ்ந்தது கூடத் தெரியாமல் அப்படியே ஓட்டமாய் ஓட வேண்டும் இல்லாவிட்டால் உட்காரத் தான் வேண்டும்" போன்ற தத்துவங்களெல்லாம் அப்போது தான் நியாபகத்துக்கு வரும். அதற்கேற்றபடியே இந்த தத்துவங்களையெல்லாம் நாம் ஆராய்ந்து கொண்டிருக்கும் போது, க்யூ முன்பை விட தற்போது இரண்டடி வளர்ந்திருக்கும். முதலில் எல்லாம் கவுண்டரில் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்பேன் (டாய்லட் தவிர்தலாய்). பெண்கள் இருந்தால் கட் அண்ட் ரைட்டாக வேலை மளமளவென்று செய்வார்கள், க்யூவும் வேகமாய் கரையும். கவுண்டரில் ஆம்பிளைக் கபோதிகள் இருந்தால் முன்னாடி இருக்கும் க்யூவைப் பற்றிக் கவலைப் படாமல் "இங்கதான் சார் இருந்துது நேத்திக்குப் பார்த்தேன் இப்ப காணோம்ன்னு கீபோர்டில் க்யூவைத் தேடிக்கொண்டிருப்பார்கள். சார் அங்க தான் சார் அப்படியே ஸ்ட்ரெயிட்டா போய் கீழ கீழ என்று பக்கத்திலிருப்பவர் வழி சொல்லிக்கொண்டிருப்பார். அதே போல் க்யூவில் நமக்கு முன்னால் வயதானவர்கள் இருந்தால் "அந்த ஃபாரம் இல்லை தாத்தா இதைப் பூர்த்தி செய்யுங்க" என்று தாமதமாகும் வாய்ப்புகள் பிரகாசமாய் உண்டு. இப்படி எல்லாம் ஸ்ட்ராஜிக்கலாய் யோசித்து ஒரு க்யூவைத் தேர்ந்தெடுத்துப் போனால் நம்மளோட அதிர்ஷ்டம் மட்டும் பக்கத்து க்யூவிற்கு போய் நின்று கொண்டுவிடும். நமக்கப்புறம் பதினைந்து நிமிடம் கழித்து வந்த ஒருவர் அடுத்த க்யூவில் நமக்குப் பின்னால் நாலடி தள்ளி நிற்பார். நம்மிடம் "சார் ஒரு நிமிஷம் பேனா குடுக்கறீங்களா.." என்று உரிமையோடு கடன் வாங்குவார், திடீரென்று இரண்டு நிமிடம் கழித்துப் பார்த்தால் நம்மைவிட இரண்டடி முன்னால் நின்று கொண்டிருப்பார். நமக்கு ஸ்டாக் மார்கெட் சரிவது மாதிரி வயிற்றில் கரைச்சல் கரைக்கும். அதை விடக் கொடுமை அந்த க்யூவிலும் நம்மை மாதிரி ஒருவர் பேந்தப் பேந்த முழித்துக்கொண்டு பாஸ்டா போகிறதா என்று நம்ம க்யுவை நோட்டம் விடுவார். நம்மைப் பார்த்தவுடன் அவருக்கு உதட்டில் ஒரு புன்முறுவல் வரும் பாருங்க - அவுங்க க்யூ பாஸ்டா போகிறதாம்...துடப்பக் கட்டை. டாய்லெட்டில் கூட முன்னால் இருப்பவர் கூட போனோமா வந்தோமான்னு இல்லாம நிதானமாக பேரல் பேரலாய் இறக்கிக் கொண்டிருப்பார். ஆச்சா ஆச்சான்னு நாம் துடிப்பது கேட்கவே கேட்காது. நமக்கு அப்படியே முட்டிக் கொண்டும் வரும்...நம்ம யோகம் அப்படி.

அடுத்தது - ஒரு நாள் ஆபிஸிலிருந்து வந்து வந்து கொண்டிருக்கும் போதோ, இல்லை குடும்பத்துடனோ, நல்ல சாப்பாடு சாப்பிடலாமே என்று ஹோட்டலுக்குப் போவீர்க்ள். வயிறு கப கபன்னு பசிக்கும். என்ன சாப்பிடுறீங்கன்னு வாஞ்சையாய் கேட்கும் சர்வரையே முழுங்கிவிடலாமா என்றளவிற்கு பசி காதைடைக்கும் கண்ணை மறைக்கும். தந்த மெனு கார்டில் ஆசை ஆசையாய் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் சர்வர் "சாரி சார் அது சனி ஞாயிறு மட்டும் தான் இன்னிக்கு இல்லை" என்பார். உங்களுக்கு மெனுகார்டில் வேறு எதுவுமே செட்டாகாது. ரொம்ப மெனெக்கெட்டு இதக் கொண்டுவாப்பான்னு எதையோ ஒன்னை ஆர்டர் செய்துவிட்டு இந்தப் பக்கம் திரும்பினால் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருப்பவருக்கு சாபிட எதுவாய் அவருடைய ஆர்டர் டெலிவரியாகியிருக்கும். அடாடா பார்ப்பதற்கே அவ்வளவு பிரமாதமாய் இருக்கும். அவரும் சப்புக் கொட்டிக் கொண்டு புகுந்து விளையாடுவார். சே அத ஆர்டர் பண்ணியிருக்கலாமே என்று தோன்றும். சர்வரைக் கூப்பிட்டு ஆர்டரை மாத்த சொன்னால் சாரி சார் ஆர்டர் போட்டுட்டாங்க இப்ப இப்ப வந்திடும்னு கொண்டு வைப்பார். சனியன் வாயில் வைக்க விளங்காது வீட்டு சாப்பாடே எவ்வளவோ தேவலாம் என்றாகிவிடும். இப்பல்லாம் என்ன வேணும்ன்னு கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பக்கத்து சீட் ஆர்டரை அப்படியே ப்ளஸ் ஒன் போட்டு டெலிவர் பண்ணிடுங்கன்னு சொல்லிடறேன்.

நல்ல புத்தகம் படிப்பது என்பது தியானத்தைத் தாண்டிய நிஷ்டையில் ஈடுபடுவது மாதிரின்னு பெரிய பெரிய விஞ்ஞானிகள்லாம் கண்டுபிடிச்சிருக்காங்க. (எந்த விஞ்ஞானின்னு கோட்டு கோபிமாதிரி கேட்டீர்களேயானால் -  வில்லேஜ் விஞ்ஞானிங்க) இந்த மாதிரி நிஷ்டையில் ஈடுபடுவது எப்பவாவது நடக்கும். அன்றைக்கு தங்கமணிக்கு கடைத்தெருவிற்குப் போக வேண்டியிருக்கும், கொஞ்சம் ட்ராப் செய்யக் கூடாதா என்று கேட்பார். "நானே ப் எங்கே போடனும் ஸ்பேஸ் எங்கே விடனும்னு தெரியாம இருக்கேன்..."ன்னு சலித்துக் கொண்டு தட்டிக் கழிப்போம். "அவள் கன்னத்தோடு கன்னம் இழைத்து மெல்லிடைப் பற்றி மெதுவாக தன்னருகில் அமரச்செய்தான்"னு இலக்கியத்திற்குள் தீவிரமாய் போய்க் கொண்டிருக்கும் போது, "மழை வர்ற மாதிரி இருக்கு, கார்டன்ல துணி உணர்த்தியிருக்கு, ஒரு கண்ணு வைச்சிக்கோங்க" என்று தங்கமணி சொல்வது காதில் விழும் ஆனா விழாது. இங்கே யவனகுமாரன் கடசலில் வேலை பார்பது மாதிரி தேவியோடு இழை இழைன்னு இழைத்துக் கொண்டிருப்பான், கரெட்க்டா இளையதேவி தன்னை மறந்து கண்ணைச் சொருகி அவன் கரம் பற்றி..அடுத்த லெவலுக்கு யத்தனிக்கும் போது....... இழவெடுத்த வேங்கைமாறன் எங்கேர்ந்தோ வாளோடு வந்து கைது செய்து, நமக்கு சமூக பிரஞ்கை வரும் போது "நான் சொன்னதும் மழை வந்துச்சான்"னு மழை காட்டு காட்டுவென்று காட்டிக் கொண்டிருக்கும். அடடான்னு பதறிப் போய் சீரியல் நாயகி மாதிரி பிழியப் பிழியப் பிழிந்து கொண்டிருக்கும் போது வேங்கைமாறன் மாதிரி தங்கமணியும் வந்துவிடுவார். அப்புறமென்ன திரும்பவும் மழை ஆரம்பிக்கும் - இந்த முறை இடியுடன்.

எங்கவூர் சாந்தி உயர் தர சைவாள் கபேயில் சோம்பல் படாமல் டெய்லி தோசைக்கரைப்பார்கள். கிச்சனில் அவ்வளவு தோதுப் படாது என்று ஹோட்டலுக்கு சைட் ரோடில் வைத்துத் தான் அரிசி மாவையும் உளுந்து மாவையும் மாஸ்டர் கலப்பார். ஒரு பெரிய அண்டாவில் முதலில் பாதி அரிசி மாவை கொட்டி பிறகு உளுந்து மாவு, அப்புறம் திரும்பவும் அரிசிமாவு. அதற்கப்புறம் அவருடைய கஷ்கம் வரை அண்டாவில் கையை விட்டு சும்மா கல கல கலவென்று கலப்பார் பாருங்கள். உப்பு கரெக்டாய் இருக்கும். நிற்க. சிறுது காலம் முன்னே பேஷன் என்ற பெயரில் லேடிஸ் ஒரு கிரடிட் கார்டை மட்டுமே வைக்க முடியமளவிற்கு கையகல பர்ஸை நீளமான வாரில் குறுக்காலே தொங்கவிட்டுக் கொண்டு ஹேண்ட்பேக் என்று சொல்லிக் கொண்டு திரிந்தார்கள். இதுவே கொஞ்சம் நாள் கழித்து Gucci,  Prada போன்ற ப்ராண்டுகள் புண்ணியத்தில் ஒரு மாத மளிகை சாமான் மொத்தமும் வாங்கி வருவது போன்ற சைஸில் வர ஆரம்பித்தது. நிதமும் இந்த மளிகை சாமான் ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு பஸ்ஸில் எனக்கு முன்னால் ஒரு பெண்மணியாவது ஏறுகிறார். இங்கே ட்ரைவர் தான் கண்டெக்டடுரும் என்பதால் பஸ் கார்டைத் தேய்த்து பச்சை லைட்டு வந்த பிறகு தான் பேருந்தின் உள்ளே போக முடியும். இந்த மளிகை சாமான் பெண்மணிகள் ஏறும் போதே பஸ் பாஸ்கார்டை எடுத்து வைத்துக்கொள்ளவேண்டாமோ, ஏறிய பின் கையை அந்த ஹேண்ட் பேக்கில் விட்டுத் துளாவுவார்கள் பாருங்கள், எங்கூர் சாந்தி கபே தோசைமாவு மாஸ்டர் தான் நியாபகத்துக்கு வருவார். ஹூம் ரெண்டு பக்கா தோசை மாவை சல்லிசாய் கலந்து வைத்துவிடலாம் ஆனால் அந்த பஸ் கார்டு மட்டும் இவர்களுக்கு மாட்டவே மாட்டாது.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Wednesday, January 09, 2013

கள்வனின் காதலி

நல்ல சுளீர் காரத்துடன் கூடிய மிக்ஸரோ காராசேவோ,ஒமப்பொடியோ, மசாலா கடலையோ, பஜ்ஜியோ கொறித்துக் கொண்டே சூடாய் டீயோ காப்பியோ குடித்திருக்கிறீர்களா?  கேள்வியே அபத்தம். கட்டாயம் குடித்திருப்பீர்கள்.  இல்லாவிட்டால் திரும்பப் போய் அம்மாவின் கர்பப் பைக்குள்  சௌகர்யமாய் படுத்துக்கொள்ளலாம். பிறந்தே இருக்கவேண்டாம். கொறிக்கும் பலகாரத்தின் காரம் நாக்கில் இறங்கி டீயின் சூட்டோடு ஹாட்டாய் டுயட் பாடும் போது டாப்பாய் இருக்கும். விட்டதா அதோடு. நாக்கு நம நமங்கும். இப்படி சமீபத்தில் எனக்கும் நாக்கு நமநமத்தது. என்றைக்கா... சரியாப் போச்சு, சில பதிவுகளுக்கு முன்னால் பேஸ்புக்கில் குத்துவிளக்கைப் பார்த்தேன் என்று சொன்னேன் அல்லவா அதற்கு ரெண்டு நாள் கழித்து.

விஷயம் இது தான். அன்றைக்கு பொழுதுபோகாமல் ஆட்டோகிராஃப் படத்தை திரும்பப் பார்த்தேன். நீ.தா.என்.பொ.வவையும் ரெண்டாவது தரம் பார்த்தேன்.பார்த்துவிட்டு தேமேன்னு கண்ணை மூடிக் கொண்டு படுத்துக் கொண்டிருந்திருக்கலாம். இப்ப தோன்றுகிறது ஆனால் அன்றைக்கு? நாமும் ஏதாவது ஒரு காது குத்து விசேஷம் வைத்து, ஸ்கூல் படித்துக் கொண்டிருந்த போது வடை வாங்கிக் கொடுத்து ரூட்டு விட்டுக் கொண்டிருந்த பெண்ணை (பார்க்க -1 , பார்க்க -2 ), பத்திரிக்கை குடுப்பது மாதிரி குடுத்து பார்த்து வரலாமா என்ற உள்ளே உறங்கிக் கொண்டிருந்த ஆர்வம் பிராவகமாய் கொப்பளிக்க ஆரம்பித்துவிட்டது. தப்பான எண்ணத்துடன் எல்லாம் இல்லை, சும்மா இப்போது அந்த பெண் எப்படி இருப்பார், அப்படியே தங்கமணிக்கு இதான்  உன்னோட சீனியர், வணக்கம் சொல்லிக்கோமான்னு சும்மா எந்த கல்மிஷமும் இல்லாமல் அந்த நாட்களை கலாய்க்கலாம் என்ற எண்ணம் தான். ஆனால் இந்த மாதிரி ஃபீல் குட் சீனெல்லாம் சினிமாவில் தான் சரிபடும் நேரில் நிச்சயம் உதைபடும் என்ற நிதர்சனம் நிச்சயமாய் தெரிந்ததால், இதயம் முரளி மாதிரி ஒளிந்து கொண்டு பேஸ்புக்கில் ப்ரொபைல் போட்டோவை மட்டுமாவது பார்ப்போம் என்று தேடு தேடு என்று தேடினேன்.

இந்த கூகிள் இருக்கிறதே கூகிள் - இணையில்லா வரப்பிராசதம் - என் எதிரிகளுக்கு. ங்கொய்யால என் பேரை டுபுக்கு என்று மாற்றி வைத்துக் கொண்டாலும் நான் யாரிடமிருந்தெல்லாம் ஒளிந்து கொள்ள நினைக்கிறேனோ அங்கெல்லாம் கரெக்ட்டாய் போட்டுக் கொடுத்துவிடும். ஆனால் பாருங்கள் நானும் மேற்படி ஆளை தேடு தேடுன்னு தேடுறேன் என்ன பெரிய புடலங்கா கூகிள், என்னுடைய வடை சுந்தரியைத் தவிர மற்ற எல்லாரையும் காட்டுகிறது. இதுல சப்பான், கொரியா என்று வேற்று நாட்டு ஆம்பிளைக் கபோதிகளை வேறு காட்டி இவனா பாரு என்கிறது. என்னத்தடா கோட் எழுதியிருக்கீங்க, உங்கள நம்பி யாஹூக்கு வேற துரோகம் பண்ணிட்டேனேடான்னு நான் நொந்து மிக்ஸரை வாயில் அரைத்துக் கொண்டே சூடான டீயை உறிஞ்சிக் கொண்டிருக்கும் போது தான் பொறி தட்டியது. மேற்படி முன்னாளை காலேஜ் படிக்கும் போது எதேச்சையாய் ஒரே முறை ஒருவர் வீட்டில் பார்த்திருக்கிறேன் அவரின் புதல்வி தங்கமணியின் கிளாஸ்மேட். சில பல மனக் கணக்குகள் போட்டு தங்கமணியின் அந்த க்ளாஸ் மேட் நம்மாளின் சொந்தம் என்ற முடிவுக்கு வந்தேன். அது எப்படி என்ற விபரங்களை கம்பேனி சொல்ல முடியாத நிலையில் இருப்பதால் பராக்கப் பார்க்காமல் விஷயத்தை மட்டும் பார்ப்போம்.இப்பேற்பட்ட தருணத்தில் தான் நான் முதல் பத்தியில் சொன்ன மிக்ஸர் காரம் - சூடான டீ விளைவால், தங்கமணியின் க்ளாஸ்மேட் வழியாக என வடை சுந்தரியைப் பற்றி துப்பு கிடைக்கலாம் என்று நாக்கு நமக்க ஆரம்பித்தது.

நல்ல படம் இல்ல...

ம்ம்ம்

ஸ்னேகா காரெக்டரும் சரி சமந்தா காரெக்ட்டரும் சரி அருமையா சித்தரிச்சிருக்காங்க.

ஹ...அதானே..

இல்ல அது இல்ல..வாழ்க்கைல ப்ரண்ட்ஸ் பெரும் பங்கு வகிக்கிறாங்க இல்ல.

....

ஸ்கூல் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் கூடலாம் டச்சுல இருக்கணும்.ரொம்ப முக்கியம்

ஓகோ..

நான் என் ஸ்கூல் மேட்ஸ், காலேஜ் மேட்ஸ் சில பேர் கூடலாம் இன்னும் நல்ல டச்சுல இருக்கேன்.

ப்ச்..எங்க நான் சில பேர் கூட மட்டும் தான்

அப்படில்லாம் விட்றக்கூடாது

..ம் அப்புறம்..

முயற்சி எடுக்கணும்.

டீ குடிச்சாச்சா...

உன் எல்லா ஃப்ரண்ட்ஸோடயும் நீ டச்சுல இருக்கணும். அதுக்கு நான் உதவி பண்றேன்

ஓகோ...நான் யார் கூடலாம் நான் டச்சுல இருக்கணும்?

பொதுவா சொன்னேன். உன் க்ளோஸ் ப்ரெண்டுன்னு சொன்னியே அவள இப்போதைக்கு கால் பண்ணினயா..?

இன்னும் கொஞ்சம் மிக்ஸர் சாப்பிடுங்க....

குடு குடு...நீ தந்து நான் என்னிக்கு வேண்டாம்னு சொல்லியிருக்கேன்

ம்ம்...அப்புறம்...நான் வேற யார் கூடலாம் டச்சுல இருக்கணும்..

நீ காலேஜ் படிக்கும் போது <<மேற்படி க்ளாஸ்மேட் >> உங்க செட்டு தானே

இல்லியே அவ ஜுவாலஜியாச்சே

இருக்கலாம், வேற க்ரூப்பா இருக்கலாம் ஆனாலும் அவங்க கூட டச்சுல இருந்தா தப்பில்லை. அதான் நட்போட சிறப்பு. முகநகன்னு ஆரம்பிச்சு தகதகன்னு திருவள்ளுவர் நட்பு பத்தி ஒரு குறள் எழுதியிருக்கார் பாரு அப்படியே அசந்துட்டேன்

அடேங்கப்பா....மிக்சரோட அப்படியே சூடா இந்த டீயையும் குடிங்க...ஆறிடப் போகுது

அங்கே தான் தப்பு செய்துவிட்டேன். அந்த டீயைக் குடித்திருக்கக் கூடாது. சும்மாவே உளறுவதற்கு கேட்க வேண்டாம் இதுல தங்கமணி கிவ் அண்ட் டேக் இன்ஷுரன்ஸ் பாலிசி ஏஜன்ட் எனபது தெரியாமல் உளறினால் கேட்க வேண்டுமா.

போன தரம் ஊருக்குப் போயிருக்கும் போது அந்த ஜூவாலஜி பொண்ணப் பார்த்தேன். உங்க வீட்டுக்காரர் எப்படி இருக்கார்ன்னு உங்கள பத்திக் கூட கேட்டா.

ஓ அப்படியா, அவ அப்பாவ எனக்கு நல்ல தெரியும். நல்ல மனுஷன். அவளுக்கு கூட எங்க ஊர்ல சொந்தக்கார பொண்ணு இருந்தான்னு நினைக்கிறேன, என் ஸ்கூல்ல தான் படிச்சாங்கன்னு நினைக்கிறேன்...

தங்கமணிக்கு க்ரோர்பதி அமிதாபச்சன் மாதிரி ஒரு விரலை கன்னத்தில் வைத்துக்கொண்டு என்னையே ஊடுருவி உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.

மிக்ஸர்ல என்ன பருப்பு ஃப்ரை பண்ணிப் போடுவாங்க, கடலப் பருப்பா...

இன்னமும் பார்த்துக் கொண்டிருந்தார்.

ம்ம்...யாரு அநத சொந்தக்கார பொண்ணு, நீங்க வடை வாங்கிக் குடுத்த சுந்தரியா?

உன்னை கேப்டன் டீம்ல சேர்த்தா bagisத்தான் தீவிரவாதி இண்ட்ராகேஷனுக்கு ரொம்ப உதவியா இருப்பன்னு நான் அதற்கப்புறம் அவரை புகழ்ந்ததெல்லாம் எடுபடவே இல்லை. நேராய் சைடாய் எந்த விதமாய் கேட்டாலும் தங்கமணி அசைந்தே கொடுக்கவில்லை. "எனக்கே உங்க கதைய கேக்கிறதுக்கு கேவலமா இருக்கு இதுல உங்க வடை சுந்தரியப் பத்தி இந்த பொண்ணு கிட்ட வேற கேட்கணுமா..எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு"என்று என்னை லோ லோவென்று அலைய விட்டுக் கொண்டிருந்தார். நடுப்பட்ட காலத்தில் என்னவெல்லாமோ செய்து எல்லா சேர்ச் இஞ்சின்லயும் தேடிப் பார்த்தேன் ம்ஹூம் ஒன்னும் சிக்கவே இல்லை. மானஸ்தனாச்சே, அடுத்த நாலு மணி நேரம் நச்சரிக்கவே இல்லை.அதற்கப்புறம் தான் நம்ம பிரம்மாஸ்திரத்தை எடுக்க வேண்டியது தான் என்று முடிவு செய்து "பார்த்துட்டேன் உன் கண்ணுல அந்த பயத்த பார்த்துட்டேன்...கவலப் படாத நான் சும்மா பேச்சுக்குத் தான் கேட்டேன் அவ கிட்ட பேசக் கூட மாட்டேன் ஜஸ்ட் எப்படியிருப்பான்னு ஒரு ஆர்வம் அவ்வளவுதான் ஆனா அதுக்காக உன்ன கைவிட்டுட மாட்டேன்" என்று பிரயோகிக்க, குருதிபுனலில் தலைவர் கமல் சொல்லுவாரே அந்த ப்ரேக்கிங் பாயிண்ட் க்ர்ர்ர் தூ என்று ஒர்க் அவுட் ஆக ஆரம்பித்தது. அப்புறம் கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம் அந்த பயத்தை நினைவூட்டியதில் அடுத்த இரண்டாவது நாள் "இதெல்லாம் ஒரு பொழப்பு" என்று பயந்து "சரி நான் கேட்டுச் சொல்றேன்" என்று கை மேல் பலன்.

மூன்றாவது நாள் தங்கமணி ஃபோனை எடுத்த போது இல்ல வேண்டாம் என்று தடுத்துவிட்டேன்.தங்கமணிக்கு ஒரே ஆச்சர்யம். அவர் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் அந்த வாரம் முழுவதும் என்னை எவ்வளவோ வற்புறுத்தியும் நான் ஒத்துக் கொள்ளவே இல்லை.

இங்கேயே சீனை கட் செய்து எல்லாரும் தியேட்டரைக் காலி செய்து விட்டுப் போனால் நான் தான் கே.டி.குஞ்சுமோனின் ஜெண்டில்மேன்.

ஆனால் என் கதை எனக்குத் தானே தெரியும். ஹூம் ஐபோன் SIRI மாதிரி புதுசா வாங்கின ஆண்ட்ராய்ட் போனில் கூகிள் S-voiceன்னு ஒரு லேடி கம்ப்யூட்டர் அசிஸ்டெண்ட் இருக்கிறது. அவன கால் பண்ணு, இந்த அப்ளிகேஷன ஓப்பன் பண்ணு என்று வாய்ஸ் ரெக்கக்னிஷனில் சொன்னதையெல்லாம் சிரமேற்கொண்டு செய்யும். சும்மா எப்படி ப்ரோக்ராம் பண்ணியிருக்காங்கன்னு டெஸ்ட் பண்ணுவோம்னு "you are too good; will you marry me"ன்னு டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன். "I would rather be your assistant"ன்னு காறித் துப்பிவிட்டது.
 இந்த கம்ப்யூட்டர் பெண்ணே இவ்வளவு தெளிவா இருக்குன்னா நம்ம கிரகம் சரியில்லாம தங்கமணி ட்ரை பண்ணி ஒரு வேளை நம்ம வடை சுந்தரி எனக்கு டுபுக்குன்னு யாரையுமே தெரியாதுன்னு  சூடன அடிச்சு சொல்லிடிச்சுன்னா...அப்புறம் அவ்வ்வ் நான் ஜீப்புல ஏறின ரவுடின்னு வீட்டுல இருக்கிற இமேஜ் என்ன ஆவது, வடை சுந்தரியைப் பற்றி நான் உருகி உருகி இங்கே இன்னும் நான் எழுதவேண்டிய பதிவுகள் என்னாவது..

ஹூம் ஓஷோவோ அப்துல் கலாமோ  சொல்லியிருக்காங்கல்ல  - நம்பிக்கை தானேங்க வாழ்க்கை.

Wednesday, December 01, 2010

ப்ளைட் ட்ரெயினிங்

சமீபத்தில் ஆபீஸில் ஒரு சக ஊழியருடன் பேசிக் கொண்டிருந்தது போது அவர் சென்று வந்த ப்ளையிங் எக்ஸ்பீர்யன்ஸ் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அரை மணி நேரம் பறந்து விட்டு வந்ததைப் பற்றி ரெண்டு மணி நேரம் படம் போட்டுக்கொண்டிருந்தார். அன்னார் பறப்பதில் கில்லாடி, ப்ளைட் ஓட்டுவதில் அசகாய சூரர், பாரா ஜம்பிங்கில் விற்பன்னர் என்று காட்டிய படத்தில் தெள்ளந்தெளிவாக விளங்கிற்று. "டுபுக்கு அத்தனை உசரத்தில் இருந்து குதித்து ரொம்ப் நேரம் பாராசூட்டை விரிக்காமல் ஃப்ரீ பாலிங் போது வயிற்றில் ஒரு பந்து உருளும் பாரு...வாழ்க்கையில் கண்டிப்பாய் இந்த த்ரில்லை எல்லாம் அனுபவிக்கனுமைய்யா"ன்னு ஸ்லாகித்துக் கொண்டிருந்தார். "அண்ணே ...இந்த வயித்துல பந்து உருளரறது, தலை கிர்ர்ருன்னு சுத்துறது, நான் இப்ப எங்க இருக்கேன்னு பேந்தப் பேந்த முழிக்கிறது - எல்லாம் கத்ரீனா கைஃப் - தங்கமணி கூட்டணியில நிறைய பார்த்தாச்சுண்ணே...செலவே இல்லாம பத்து ப்ரீ ப்ளைட் டிக்கெட் எக்ஸ்பீரியன்ஸ் குடுப்பதில் தங்கமணி கில்லாடிண்ணே"ன்னு சொன்னாலும் விடாமல் வாயால் ப்ளைட் ஒட்டிக்கொண்டிருந்தார்.

ஜோக்ஸ் அப்பார்ட். நானும் இந்த மாதிரி பைலட் ட்ரெயினிங் சென்று வந்திருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொண்டு இந்த மாதிரி ஷோ ஆஃப் செய்ததில்லை.  நீங்கள் ப்ளைட் ட்ரெயினிங் போயிருக்கிறீர்களா? என்னுடைய முதல் ட்ரெயினிங் ட்யூட்டர் ரொம்ப தெரிந்த தோஸ்த் என்பதால் வாரத்திற்கு ஒரு மணி நேரம் தியரி க்ளாஸ் நடக்கும். மிகவும் சுவாரசியமாக இருக்கும். பையனுக்கு பத்து வயசு தானே என்று ஏனோ தனோன்னு சொல்லிக் குடுக்காமல் சின்சியராய் பாடம் எடுப்பார். எப்பேற்பட்ட சந்தேகமானாலும் கரெக்டாய் தீர்த்து வைப்பார். ட்யூட்டர் நம்ப கன்னுக்குட்டி கணேசன் சித்தப்பா பையன். அவனுக்கு ஆறாவதோ ஏழாவதோ ஆனுவல் லீவுக்கு மெட்ராஸிலிருந்து ஊருக்கு வந்த போது, எனக்கும் இன்னும் சில அரை டிக்கெட்டுகளும் அம்மையப்பர் கோவில் பின்னாடி தியரி க்ளாஸ் நடக்கும். மீனம்பாக்கம் பக்கத்தில் தான் அவர் வீடு என்பதால் அவர் பார்க்காத ப்ளைட்டே கிடையாது. A300, 747...எந்த ப்ளைட்டானாலும் அவர் வீட்டு சைட் கக்கூஸுக்கு மேல் வழியாகத் தான் போயாகவேண்டும்.

ஒரு பைலட்டுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற கோட்பாடு படி அடிஷனல் க்ளாசாக கம்பு சுத்துவதும் சொல்லிக் குடுப்பார். அவர் ஒரு முறை உத்வேகமாய் கம்பு சுற்றி, கன்னுக்குட்டி கணேசாவின் கண்ணில் பட்டு, கணேசனின் அப்பாவும் கம்பை எடுத்துக் கொண்டு கோதாவில் இறங்கியதால், கம்பு சுற்றும் டெரெயினிங் இடையிலேயே நின்று போய் விட்டது. அப்புறம் அதுவே கம்பில்லாமல், மல்யுத்தமும் கராத்தேவும் கால் கால் கிலோ கலந்து, ஒருவிதமான மார்ஷல் ஆர்ட்ஸ் டெரெயினிங்காக சிலபஸ் மாற்றப் பட்டது. எந்தப் பிரச்சினையானாலும் அப்பாவைக் கூட்டி வரக்கூடாது என்ற சத்தியபிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகே ட்யுட்டர் க்ளாசை ஆரம்பித்தார்.

"அண்ணே இதான் மேன்டிலாண்ணே" செந்தில் ரீதியில் நாங்களும் ஏகப்பட்ட டவுட்ஸ் கேட்போம். அவரும் எங்கள் அறிவுப் பசியில் தோன்றும் சந்தேகங்களை அழகாய் தீர்த்துவைப்பார்.

"டேய் ஒன்னுமே இல்லைடா பயப்படாதீங்க... அங்க மச்சிக் கதவ தொறக்கற கைப்பிடி மாதிரி ஒன்னு இருக்கும் அத மேல தூக்கினா ப்ளைட் மேலே போகும் கீழ இறக்கினா கீழ இறங்கும்.. அவ்வளவே தான்"

"அப்போ சைட்ல போகனும்ன்னா...?" என்ற என் அறிஜிவித்தனம் எடுபடவில்லை. அது அட்வான்ஸ்ட் சிலபஸ் அதுக்கு முதலில் நான் ஃபவுண்டேஷன் தாண்ட வேண்டும் என்று ட்யூட்டர் கறாராய் சொல்லிவிட்டார்.

"சரி அப்புறம் எதுக்கு தலைக்கு மேல ஏகப்பட்ட சுவிட்ச் வைச்சிருக்காங்க..?"

"டேய் ஏரோப்ப்ளேன்ல ஏகப்பட்ட பேர் இருப்பாங்க எல்லாருக்கும் தனித் தனியா ஃபேன் இருக்கும். ட்ரைவர் வண்டிய கிளப்புறதுக்கு முன்னாடி தலைக்கு மேல இருக்கிற சுவிட்ச்ச ஒன்னொன்னா போட்டு அவங்க ஃபேன ஆன் செய்வார்...அதுக்கு தான் அத்தன சுவிட்ச்"

"அவங்க காத ஏன் மூடிக்கிறாங்க?"

"அதுக்கு ரெண்டு உபயோகம் இருக்கு ...ஒன்னு வானத்துக்கு போனதுக்கு அப்புறம் டேப்ரெக்காரடர் போடுவாங்க அதுல பாட்டு கேக்கலாம், இன்னொன்னு எதுத்தாப்புல ஏரோப்ப்ளேன் வந்து ஹாரன் அடிச்சா காது செவிடாகிடும்ல அதான்"

"அண்ணே ப்ளைட்டுல ஏண்ணே கார்ல இருக்கிற மாதிரி ஸ்டியரிங் இல்ல..." பையன்களும் விட மாட்டார்கள். 

ப்ளைட் டெரெயினிங்கில் மடக்கக் கூடிய ஸ்டீல் நாற்காலி ஒரு மிக அத்தியாவசியமான உபகரணம். ஸ்டீல் நாற்காலியைத் திருப்பிப் போட்டு உட்கார்ந்து நிறைய ப்ளைட் சிமுலேஷன் க்ளாஸ் எல்லாம் எடுத்திருக்கிறேன். இப்பவும் ஸ்டீல் நாற்காலியைப் பார்த்தால் திருப்பிப் போட்டு ப்ளைட் ஓட்டத் தோன்றும். ரெண்டு மூனு நாற்காலியை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டால் சிமிலேஷன் ட்ரெயின் மோடுக்கு ப்ரோக்ராம் ஆகிவிடும். அதிலே தலைகாணியைப் போட்டு மேலே அமர்ந்தால் அதுவே லாரியாகிவிடும். கல்யாண வீடுகளுக்குப் போனால் அண்ணன் எப்ப கிளம்புவான் திண்ணை எப்போ காலியாகும்ன்னு ஸ்டீல் நாற்காலிகளுக்கு நிறைய தேவுடு காத்திருந்திருக்கிறேன்.


பெரியவனானதும் ப்ளைட் டெரெயினிங் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கங்கணம் கட்டிவைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் வேறு ஒரு பிரச்சினை தடுத்தது. எனக்கு கிறு கிறுவென உயரத்தில் சுத்தும் ராட்டினங்களைப் பார்த்தாலே வயிற்றைப் புரட்ட ஆரம்பித்துவிடும். சென்னையில் கிஷ்கிந்தா திறந்த புதிதில் சொல்லச் சொல்லக் கேட்காமல் ஏத்திவிட்டு விட்டார்கள். கிளம்பிய மூன்றாவது நிமிடத்தில் வயிற்றைப் புரட்டி, புளிச்சென்று தேமேன்னு உட்கார்ந்திருந்த எதிர்த்த சீட் அம்மமணி மேல் வாந்தி எடுத்துவிட, அப்புறம் செயின் எஃபெக்ட்டில் அவரும் வாந்தி எடுக்க ஆரம்பித்து ஒருவர் பாக்கி இல்லாமல் எடுத்து களேபரமாகிவிட்டது.


ஆனால் ஜேம்ஸ்பாண்டு படம் பார்த்த பிறகு ஜிவ்வென ஆகி ஓக்கே சமாளிக்கலாம் என்று விசாரிக்க ஆரம்பித்தேன். மெட்ராஸ் ப்ளையிங் க்ளப் சுத்த மோசம். ஜேம்ஸ்பாண்டு மாதிரி ரஷ்ய அழகியை பார்படாஸிலிருந்து விமானத்திலேயே அந்தர் பல்டி அடித்து பிக்கப் செய்து கொண்டுவருமளவுக்கு ட்ரெயினிங் குடுக்க அவர்கள் கேட்ட தொகை யந்திரன் படத்தில் அத்தனை ரஜினி ரோபோக்களுக்கும் பேண்டுக்கு மேல் போடும் இரும்பு ஜெட்டி வாங்கின செலவுக்கு ரெண்டு ரூபாய் குறைவு அவ்வளவு தான்.

"டேய் விமானத்தோட தொகைய கழிச்சுட்டு சொல்லுங்கடா...நான் ஏற்கனவே கன்னுக்குட்டி கணேசன் சித்தப்பா பையன் கிட்ட பவுண்டேஷன் டெரெயினிங் எடுத்திருக்கேண்டா" என்று சொல்லியும் தொகையை குறைக்க மறுத்துவிட்டார்கள். சரி என்னோட இடத்தை அப்படியே பிடிச்சு வைச்சுக்கோங்க..யாருக்கும் குடுத்துடாதீங்க...ரெண்டே நிமிஷத்துல சில்லறை மாத்திட்டு வந்துடறேன்னு ஓடி வந்துவிட்டேன்.

இங்கே லண்டனில், பக்கத்தில் ஒரு இடத்தில் க்ளைடர் ப்ளைட் இருக்கிறது. அது அத்தனை தலை சுத்தாது, ஒரு பத்து இருபது இரும்பு ஜெட்டி பட்ஜெட்டுல ஓரளவுக்கு கற்றுக்கொள்ளலாம்  என்று சொல்கிறார்கள். ஒரு தரம் சென்று வரவேண்டும். ரஷ்ய அழகிக்கு எப்போ குடுத்து வைத்திருக்கிறதோ....எல்லாத்துக்கும் ஒரு வேளை வரவேண்டாமா....சொல்லுங்க....ஹூம்

Sunday, October 31, 2010

லவ் லெட்டர்

சாமஜ வர கமனாவோ, அலைபாயுதேவோ கேட்டுக்கொண்டே கேசரி பஜ்ஜியை அலேக்காய் லவட்டிட்டு, பில்டர் காப்பியை சுர்ர்ர்ன்னு உறிஞ்ஜி விட்டு, "எங்க சௌம்யா வத்தக்குழம்பு வைச்சா அடுத்த தெரு வரைக்கும் மணக்கும்" டயலாக்கையெல்லாம் கேட்டுவிட்டு, சவுகரியமாய் ஊருக்குப் போய் கலந்து கேட்டு லெட்டர் போடறோம்ன்னு பழைய சினிமாவில் வருவது மாதிரியோ, இல்லை தமிழ் மேட்ரிமோனி டாட் காம்மில் போட்டோஷாப்பில் டச் செய்த போட்டோவை அப்லோடிவிட்டு "சோ அன்ட் சோ கம்பெனியில் சோ அன்ட் சோ சேலரி ட்ராயிங் மாநிறமான பையனுக்கு...வெள்ளிக்கட்டியாய் சிவந்த நிறமுடைய, பெரியவர்களை மதிக்கும், கடவுள் நம்பிக்கையுள்ள, எந்த தோஷமும் இல்லாத, சாப்ட்வேர் கம்பெனியில் வேலைப் பார்க்கும் பெண் வேண்டும்"ன்னு தகப்பனார் ஜாதாக பரிவர்தனை செய்ய ஆரம்பிப்பதற்கு வெகு முன்னாலேயே எதைத் தின்றால் பித்தம் தெளியும்ன்ன்னு ரெண்டாவது அட்டெம்ப்ட்டில் காதலாகி கசிந்துருகும் என்னை மாதிரி அபாக்கியவான்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவால் - "லவ் லெட்டர்".

அதிலும் முதல் லவ் லெட்டர் இருக்கிறதே மிகப் பெரிய இம்சை. இப்போது மாதிரி கூகிளில் "கத்ரீனா" என்று பாதி டைப் அடிக்கும் போதே "கைஃப்"ன்னு முடித்துக் குடுத்து கூடுதலாய்  "...ஹாட் போட்டோஸ்ன்னு" மிச்சத்தை ப்ராம்ப்ட் செய்யும் உதவி எல்லாம் கிடையாது. , " சார்ட்டர்டே டிஸ்கோவுக்குப் போகலமா"ன்னு திரையுலக பாடலாசிரியர்கள் கூப்பிடாத ஒரு காலத்தில் லவ்வி எக்கச்சக்கமாய் மாட்டிக்கொண்டேன். எனக்குத் தெரிந்த லெட்டர்கள் எல்லாம் நேருமாமா தன் மகள் இந்திராகாந்தி அம்மையாருக்கு எழுதிய கடிதங்கள் தான். அதிலும் அவர் பாட்டுக்கு அந்த நாட்ட பார்த்தியா இந்த நாட்ட பார்த்தியான்னு பக்கம் பக்கமாய் மகளை கொஞ்சி இருப்பார். இப்படியெல்லாம் லெட்டர் போட்டால் "அப்படியே மெட்ராசிலயே ஒழிஞ்சு போன்னு" திரும்ப பதிலுக்கு டெலிகிராமே வந்துவிடும் என்று தீர்மானமாய் தெரிந்தால் எதுக்கு வம்பு என்று ரொம்ப நாள் லெட்டரே போட்டவில்லை.

மெட்ராஸ் பட்டிணம் ஒரு கெட்டுக் குட்டிசுவரான ஊர். லவ் பண்ணுபவரக்ள் அம்மாவாசை பௌரணமியானால் காதலிக்கு குரங்கு பொம்மையோ கழுதை பொம்மையோ வாங்கி கழுத்தில் பட்டுக் குஞ்சலம் ஒன்றை கட்டி "ஐ லவ் யூ" என்று எழுதி பிங்க் கலரில் உதடு படம் ஒன்றை போடவேண்டும் என்று கோட்பாடு வைத்திருக்கிறார்கள். தங்கமணி வீட்டுக்கு இந்த மாதிரி எல்லாம் அனுப்பினால் "இந்தம்மாக்கு இதெல்லாம் வராதே"ன்னு போஸ்ட்மேனே திறந்து பார்த்து அங்கே டோர் டெலிவரி செய்வதற்கு பதிலாக நேர எங்க வீட்டில் போய் வாழ மட்டையை கொழுதினாற் போல் நல்ல புகைய விட்டு, மாமா காதில் மேட்டரை டெலிவரி செய்து,  "நல்லாத் தானேடா உன்னை வளர்த்தேன்"ன்னு மாமா மெட்ராஸுக்கு தேடி வந்துவிடுவார் என்பதால் இந்த ரிஸ்க் எடுக்க தெகிரியம் வரவே இல்லை.

கரும்பு படம் போட்ட ஒரு பொங்கல் வாழ்த்து அனுப்பும் போதே அன்புடன் போட்டு கையெழுத்து போட்டால் தப்பாகிவிடுமோ என்று எனக்கு உதறலெடுக்கும். ஏனென்றால் தங்கமணி வீட்டில் ஏகப்பட்ட காம்ப்ளிகேஷன். இந்தப் பக்க வீடு, அந்தப் பக்க வீடு எதிர்த்த வீடுன்னு ஒரே சொந்தக்காரர்கள் கூட்டுக் குடித்தனம். "மெட்ராஸுலேர்ந்து லெட்டர் வந்திருக்கு ஒரு வேளை ஐ.நா சபைலேர்ந்து கூபிட்டு அனுப்பியிருப்பாளோ என்ன அவசரமோன்னு பிரிச்சு படிச்சேன்....நேக்கில்லாத உரிமையா...கையெழுத்து இன்னும் பிடிச்சு வரனும்...கூட ரெண்டு வரி எழுதப்பிடாதோன்னு"ன்னு அரட்டையரங்கமாகிவிடும் அபாயமாய் எனக்குப் பட்டது. (எனக்குத் தான் அப்படி பட்டது அவர்கள் அப்படியில்லை அப்படியில்லை - தெளிவாக சொல்லிக்கிறேன்.)

எப்போதாவது ஒரு தரம் ஊருக்குப் போகும் போது பார்க்கப் போனால் "சௌக்யமா ஊரில் இருந்து எப்ப வந்த"ன்னு ஒவ்வொருத்தராய் கேட்டு நான் பதில் சொல்லி முடியும் போது - வீட்டுக்கு கிளம்பும் நேரமாகிவிடும். வயசுப் பையன் வந்திருக்கானே...(அவர்களுக்குள்) நிச்சயமான பெண் தானே...ரெண்டு பேரும் அப்படியே போய் ஜாலியாய் ஒரு சினிமா பார்த்துட்டு வாங்களேன்னு சொல்வதற்க்கு ஒருத்தருக்கும் வாய் வராது. இதில் தங்கமணியிடம் நான் என்னத்தை பேச.

இதில் தங்கமணியின் பாசக்கார கூட்டத்தில் ஒன்று "போன வாரம் தான் அவளுக்கு பிறந்தநாள்.. உங்களுக்கு தெரியுமோ இல்லையோ..."ன்னு எடுத்துக்குடுக்கும். "ஓ காந்தி இங்கேர்ந்து தான் தண்டி யாத்திரையை ஆரம்பித்தாரா"ன்னு நான் வழிந்துகொண்டே வியக்கும் போது..."நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்"ன்னு கண்ணாம்பா டயலாக்கை தங்கமணி கண்ணாலேயே டெலிவரி செய்வார்.

இதற்கு நடுவில் ஒரு தரம் ஊருக்கு போவதற்கு ஒரு தரம் கேப் விழுந்துவிட்டது.இதான் சமயம் என்று தங்கமணியின் உறவு வட்டத்தில் ஒருவர் "பிள்ளையாண்டன் வேறு சாஃப்ட்வேரில் இருக்கிறான். அந்த கம்பெனியிலெல்லாம் பசங்களும் பொண்ணுங்களும் திங்கள் டு வியாழன் டெய்லி டேட்டிங்கும் மத்த நாளெல்லாம் க்ளப்பிங்குமாய் ஜெகஜோதியாய் இருப்பார்கள் " என்று கிடைத்த கேப்பில் காட்சிலாவை வெட்டி விட்டார். அடுத்த அப்ரைசலில் தங்கமணி அன்பாய் ஏகப்பட்ட ஃபீட்பேக் குடுக்க..."என்னை மாதிரி மூக்கும் முழியுமாய் இருக்கும் பையன்களுக்கு சமுதாயத்தில் இந்த மாதிரி பிரச்சைனையெல்லாம் இருக்கு ஆனால் நான் நல்லவன்" என்ற வாதமெல்லாம் எடுபடவில்லை.

"கம்யூனிகேஷன் இஸ் த கீ" என்று தங்கமணி குடுத்த செமெத்தியான பீட்பேக்கில் லெட்டர் போடவேண்டும் என்று உந்துதல் ஏற்பட்டு எழுத ஆரம்பித்து...ஆரம்பித்து...ஆரம்பித்தது பித்து. "போன தடவை வந்திருந்த போது உங்க வீட்டில் குடுத்த பால்கோவா நன்றாக இருந்தது...நீயே செஞ்சதா" போன்ற அன்பான விசாரிப்புகள் லவ் லெட்டர் இலக்கணத்தில் வராததால் கொஞ்சம் தெவங்கிவிட்டேன். அப்புறம் உங்க வீட்டு கன்னுக்குட்டி எப்படி இருக்கு? தெரு நாய்க்கு காய்ச்சல் தேவலையா என்று ரீதியில் ஏதோ எழுதி வீட்டில் வேறு யாரிடமும் காட்டவேண்டாம் என்ற அபத்த டிஸ்க்ளெய்மரெல்லாம் போட்டு முடித்தேன். அதற்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் தேறி "கண்மணி அன்போட நான் நான் நான்" என்று தலைவர் படத்து மேற்கோளெல்லாம் போட்டு ரஜினி முத்து பட டயலாக்கையெல்லம் போட்டு முடித்து ஏதேதோ சமாளித்தேன் என்பது சப்ஜெக்ட்டுக்கு தேவையில்லாதது.

இப்பவும் அந்த முதல் லெட்டரை தங்கமணி பத்திரமாய் எடுத்துவைத்திருக்கிறார். "என்ன இருந்தாலும் தலைவன் தலைவிக்கு எழுதிய காதல் திணையல்லவா" என்ற எனது நினப்பில் மண்ணைப் போட்டு என் மகள் பெரியவளானதும் காட்ட வேண்டுமாம். லவ் லெட்டர் எப்படியெல்லாம் எழுதக் கூடாதென்று. அது சரி......இந்த உலகம் இருக்கே உலகம்...

Thursday, June 24, 2010

பில்லியர்ட்ஸ்

லாங் லாங் அகோ சோ லாங அகோ என்று அழைக்கப்படுகிற சுமார் ஒன்பது பத்து வருடங்களுக்கு முன்னால் இங்கே இங்கிலாந்தில் ஒரு நண்பர் வீட்டில் சாப்பாட்டுக்கு அழைத்திருந்தார்கள். சும்மா கூப்பிட்டால் ப்ரேக்பாஸ்ட் சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு போவோம், அவர்கள் சாப்பாட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டதால, முந்தின நாளே பட்டினியாய் இருந்து வெற்றிவேல் வீரவேல்ன்னு குடும்பத்தோடு போய்வந்தோம். அவர்கள் வீட்டில் நண்பருடைய மாமனார் மாமியார் ஊரில் இருந்து வந்திருந்தார்கள்.

வெளிநாடுகளில் வசிக்கும் குடும்பஸ்தர்க்ள் வீட்டில் சம்மரில் பெரும்பாலும் ஊரில் இருந்து மாமனார் மாமியார் வந்திருப்பது சகஜம். முதல் தரமாய் வந்திருந்தால் - பாவம் முதல் இரண்டு வாரங்கள் வித்தியாசமாய் இருக்கும் ஊர், தட்ப வெப்பம், ஊரளவு இருக்கும் மால்கள், பிரஷ்ஷாய் கிடைக்கும் தக்காளி, கள்ளி சொட்டாய் கிடைக்கும் திக் பால், உட்கார்ந்து இலை போட்டு சாப்பிடும் அளவு சுத்தமாய் இருக்கும் ரோடுகள், சன்னம்மாய் துணியணிந்தாலும் துளியும் குளிராமல் உலவும் மாதர்கள் என்று வியந்து வியந்தே முதல் மூன்று வாரங்கள் அவர்களுக்கு பொழுது போய்விடும். அதற்கப்புறம் அவர்கள் ரொம்பவே பாவம். "ஊராய் இருந்தால் காலாற நடந்து கோயிலுக்கு போய் வரலாம் இங்க அடுத்த தெருவுக்கு போறதுக்கே அவன் ஆபீஸ்லேர்ந்து வர வேண்டியதாய் இருக்கு..எவ்வளவு நேரம் தான் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருப்பது" என்று ஆயாசம் வந்துவிடும். இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு யாராவது ஏஷியன்ஸைப் பார்த்தாலே "எங்களுக்கு மாயவரம் உங்களுக்கு...?" என்றளவுக்கு காய்ச்சல் வந்துவிடும்.

கூப்பிட்ட நண்பர்...நண்பர் என்றால் நெருங்கிய நண்பர் கிடையாது கொஞ்சம் தான் பழக்கம். எனவே ரொம்ப ஃபார்மலாய் "ஹௌ ஆர் யூ" கேட்டுவிட்டு தான் "சாப்பாடு ரெடியா"ன்னு டீஜென்டாய் படம் விட வேண்டியிருந்தது. பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு தண்ணி குடிக்கப் போவது மாதிரி "நைஸ் கிச்சன்" என்று சமையல் ஆகிவிட்டதா என்று நோட்டம் விட நழுவினேன். விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மேலே மாட்டிக்கொண்டிருந்த பலூனை எடுத்து தரும் படி கேட்க, பக்கத்தில் இருந்த குச்சியை வைத்து பலூனை இழுத்து எடுத்துக் குடுக்கவேண்டியிருந்தது. அப்பொழுது அந்தப் பக்கம் வந்த நண்பரின் மாமனார் "அப்பவே உங்கள பார்க்கும் போதே நினைச்சேன்..நீங்களும் பூல் விளையாடுவீங்கன்னு" என்று குஷியாய் பிடித்துக் கொண்டார்.

எனக்கு மாமா எதைப்பற்றி சொல்கிறார் என்று புரியாவிட்டாலும், வெள்ளைக்காரர்கள் வழவழ கொள கொள ஜோக் மாதிரி புரியாமலே "ஹீ ஹீ ஆமா ஆமா..." என்று நடுவாந்திரமாய் சிரித்து வத்தேன். அடுத்த ஐந்து நிமிடங்கள் மாமா குஷியாய் பேசிக்கொண்டே "வாங்க கீழ மாப்பிள்ளை பூல் டேபிள் போட்டிருக்கிறார் ஒரு கேம் போடுவோம்" என்று கையை பிடித்து கூட்டிக்கொண்டு போய்விட்டார்.

நானும் மூனு சீட்டாய் இருக்குமோ என்று குழம்பிக் கொண்டே போன பிறகு தான் அவர் பில்லியர்ட்ஸ் பற்றிப் பேசுகிறார் என்றும் நான் பலூன் எடுக்க பயன்படுத்திய குச்சியை தான் மாம க்யூ என்றழைக்கிறார் என்றும் புரிந்தது.  இநத ஊரில் பூல் என்று விளிக்கிறதை எங்க ஊர் பஜனைமடத்தில் நானும் கன்னுக்குட்டி கணேசனும் பில்லியன்ஸ் என்று தான் சொல்லுவோம். சீனாதானா மாமா வந்து பில்லியர்ட்ஸ் என்று திருத்தி, ஞாயிற்றுக் கிழமை "குலமகள் ராதை" டி.டி சினிமாவுக்கு முன்னால் தேவுடு காக்கும் போது சில சமயம் டெல்லி தூர்தர்ஷனில் இந்த இழவை பார்த்துத் தொலையவேண்டியிருக்கும். "என்னடா பெரிய கேம்...இதோ இருக்கிற ஓட்டைகுள்ள பந்த அடிக்கிறதுக்கு அவ்வளவு பெரிய குச்சி...அத அந்த ஆள் குனிஞ்சு குனிஞ்சு வேற ஆங்கிள் பார்க்கிறான்...தூ ஒத்தயடி  அடிச்சா பந்து தானா போய் விழப்போறது...என்னம்மோ போ ஒரு சேலேஞ்சும் இல்ல..இந்த இழவுக்கு கோட் சூட் வேற...இந்த கேம் ரொம்ப ஈஸிடா எங்க வீட்டுல மடையில சத்தை அடைச்சி தண்ணி போகலைன்னா இத மாதிரி ஒரு குச்சிய வைச்சு என்னா குத்து குத்தியிருக்கேன் தெரியுமா...பார்க்கிறதுக்கு தான் கஷ்டமா இருக்கு ஆனா இந்த கேம் ரொம்ப ஈஸி தான்
"- கன்னுக்குட்டி கணேசனுக்கு இந்த விளையாட்டு கைவந்த கலை.

எனக்கும் இந்த விளையாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஹம் ஆப் கே ஹைன் கௌன் ஹிந்திப் படத்தில் மாதுரி தீட்சித் புடவையை அந்தப்பக்கமாய் கட்டிக் கொண்டு மாடியிலிருந்து வரும் போது சல்மான் கான், கவிதை சொல்லி இந்த க்யு குச்சியை வைத்துக் கொண்டு லெப்ட் ரைட் சென்டர்ன்னு போட்டுத் தாக்கி மாதுரிக்கு ப்ராக்கெட் போடுவார். சுத்தி இருப்பவர்கள் எல்லோரும் "வரே வா வா" என்று புகழ்வார்கள்.......ஹூம்ம்ம்ம்ம்ம்.

மாமா வேற ஸ்னூக்கர் விளையாடனுமா இல்லை பில்லியர்ட்ஸான்னு ஜார்கனெல்லாம் போட்டு தாக்கிக் கொண்டிருந்தார். "நீங்க முதல்ல சொன்னேளே அந்த விளையாட்டு தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்"ன்னு குத்துமதிப்பாய் சொல்லி வைத்தேன். நாம பார்க்காத விளையாட்டா என்று குச்சிய வாங்கி கிட்டிபுல் மாதிரி ஒரு போடு போட்டதில்  க்ரிக்கெட்டாய் இருந்தால் சிக்ஸர் குடுத்திருப்பார்கள். பந்து டேபிளை விட்டு எகிறிவிட்டது. அப்புறம் மாமா சல்மான் கான் மாதிரி லெவல் காட்ட நான் சிக்ஸர் சிக்ஸராய் அடித்து தாக்க...தங்கமணி அன்ட் கோ வேடிக்கைப் பார்க்க வந்துவிட்டது.

தங்கமணி நம்ம கேப்டன் விஜயகாந்த் படத்துல எதிர் கட்சி ட்ரெயினிங் எடுத்தவர். திறந்தவெளி ஜீப்பில் ஏன் எதுக்குன்னு எதைப் பற்றியும் கவலைப் படாமல் வெங்காயத்தை கடித்து வீசுகிற மாதிரி போகிற போக்கில் அலேக்காய் வெடிகுண்டை வீசி என் மானத்தை எக்ஸ்போர்ட் லைசென்ஸ் வாங்கி கப்பலேற்றும் விற்பன்னர்..


 "நான் என்னிக்கும் வயசுக்கும் பாரம்பரியத்துக்கும் மரியாதை குடுக்கிறவன்னு அதான் முழு திறமைய இன்னும் காட்டல"ன்னு சமாளித்தாலும்... தங்கமணி கருணை காட்டவில்லை. குஷியாய் "இவருக்கு கோல்ப் பந்தையும் பில்லியர்ட்ஸ் பந்தையும் கலந்து வைச்சா வித்தியாசமே தெரியாது இதுல இவர எதுக்கு இந்த விளையாட்டுக்கு சேர்த்தீங்க"ன்னு கரெக்ட்டாய் நம்ம பெருமையை எடுத்து விட ஆரம்பித்துவிட்டார். ஒருதரம் செகண்ட் ஹாண்டில் இந்த குச்சியை ஒரு சீமான் தள்ளுபடி விலையில் போட்டிருக்க, "பீரோக்கு அடியில எதாவது போச்சுன்னா எடுக்க வசதியா இருக்கும் வாங்கிப்போடுங்க"ன்னு அவர் சொல்லி "மொட்டைக் கம்புக்கு இத்தனை விலையா...எல்லாம் ஒன் பவுண்ட் ஷாப்பில பார்த்துக்கலாம் அங்க துடைக்கறதுக்கு துணியும் அட்டாச் பண்ணி தருவான்"னு நான் அந்தக் குச்சியை வாங்க ஒத்திவைப்பு தீர்மானம்  போட்ட கோபம் அவருக்கு.

"இல்ல மாமா எனக்கு இங்க லைட்டிங் கரெக்டா இல்ல, எல்லா லைட்டையும் அணைச்சுட்டு சினிமால வர்ற மாதிரி ஒரே ஒரு நாப்பது வாட்ஸ் பல்ப ஷேடோட நடுவுல கீழ வரைக்கும் தொங்கவிட்டா தான் எனக்கு ஆங்கிள் பார்த்து விளையாட வரும்னு அப்புறம் ரிட்டையர்ட் ஹர்ட் ஆகிவிட்டேன்.

சமீபத்தில் ஒரு கார் பூட் சேலில் மொத்தமாய் இந்த செட் வைத்திருந்தார்கள். டேபிள் இல்லாவிட்டாலும் ஷோகேஸில்  சும்மா ஒரு பந்தாவாய் இருக்குமேன்னு வாங்கிப் போடலமான்னு ஒரே சபலம் எனக்கு. பக்கத்திலேயே வேறு ஒரு சீமான் கோல்ப் மட்டை வைத்திருந்தார். குணம் நாடி குற்றம் நாடி...கோல்ப் மட்டை நல்ல காத்திரமாய் இருக்கு..எலியோ திருடனோ வந்தா அடிக்க உபயோகப் படும் என்று அதை அடுத்த தரம் வாங்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

Monday, April 19, 2010

கச்சேரி

சின்ன வயதில் அதிலும் மிருதங்கம் கற்றுக் கொள்ள ஆரம்பித்த பிறகு கர்நாடக சங்கீத கச்சேரி என்றாலே கொஞ்சம் வயிற்றைக் கலக்கும். "டேய்...வாடா மிருதங்க வித்துவான்...இது என்ன ராகம் சொல்லு பார்ப்போம்..."ன்னு இழுத்துப் பிடித்து கேள்வி கேட்ப்பார்கள். மிருதங்க சிலபஸ்ல ராகம் கிடையாது தாளம் தான் என்று எவ்வளவு சொன்னாலும் விட மாட்டார்கள் கவுண்டமணி தவில்ல நலந்தானா வாசிக்க சொல்லுவது மாதிரி சில பெருசுகள் தொல்லை சொல்லி மாளாது. இந்த மாதிரி கச்சேரிகளில் நிறை குடங்கள் தளும்பவே தளும்பாது. சில அரைகுறைகள் பண்ணுகிற சேட்டை தான் தாங்காது.

சீனா தானா மாமா கொஞ்சம் சங்கீதத்தில் அரைகுறை தான். எல்லா ராகங்களும் தெரியாது என்றாலும் அவருக்கு சில ராகங்கள் தெரியும். அவருக்கு தெரிந்த ராகம் வந்து விட்டால் சித்தார்த் பாஸு மாதிரி க்விஸ் வைக்க ஆரம்பித்துவிடுவார். காபி ராகத்தை வைத்து உலவும் அரத ஜோக்குகளில் சேர்ப்பதற்காக எங்கள் வானரக் கூட்டத்திலும் ஒன்று உண்டு. ராதா கல்யாணத்தை முன்னிட்டு பஜனை மடத்தில் கச்சேரி ஏற்பாடு செய்திருந்தார்கள். வந்திருப்போருக்கு காபி சப்ளை எடுபிடி பார்த்துக் கொண்டிருந்த சாது வானரத்திடம் அப்போது தான் வந்திருந்த சீனாதானா மாமா என்னடா போன பாட்டு என்ன காப்பியான்னு நக்கலாய் கேட்க மைக் சத்தத்தில் வானரம் சரியாய் காதில் வாங்கிக் கொள்ளாமல் "இல்லை மாமா டீ தான் இருக்கு...கன்னுக்குட்டி கணேசன் காப்பிப் பொடி வாங்கப் போய் இருக்கான்"ன்னு கர்ம சிரத்தையாய் பதில் சொல்ல சீனாதான மாமா அவனை மட்டும் ஏனோ அன்றிலிருந்து க்விஸ்லிருந்து ஒதுக்கி வைத்துவிட்டார்.

"டேய் நம்ம சீனாதானா மாமா தொல்லை தாங்க முடியலை...இதான் ஷண்முகப் ப்ரியா அதான் ஹரஹ்ரப் ப்ரியான்னு என்னம்மோ ராகதேவன் மாதிரி ஓவரா ப்லிம் காட்டறார். திருவள்ளுவர் என்ன சொல்லி இருக்கார் அடக்கம் அமரருள் உய்க்கும்ன்னு எனக்கும் தான் மேலத்தெரு ப்ரியாவைத் தெரியும் அதுக்காக இவர்ட்ட போய் மேலத்தெரு ப்ரியாவைத் தெரியுமான்னு என்னிக்காவது கேட்டிருப்பேன்...?? .ஒரு நாள் இவருக்கு இருக்கு" கன்னுக்குட்டி கணேசனுக்கு சீனாதானா மாம பிஹேவியர் பிடிக்காமல் ரொம்ப நாள் கருவிக் கொண்டிருந்தான்.

அடுத்த தரம் சீனா தானா மாமா அவருடைய கட்டைத் தொண்டையில் பாடி இதென்ன ராகம்ன்னு கன்னுக்குட்டி கணேசனைக் கேட்க "இது ஒரு தலை ராகம்" மாமான்னு அவனும் சொல்ல "போடா தறுதலை ராகம்...சினிமாலயே நில்லுங்கோ இன்டர்வ்யூல கேட்பா போய் சொல்லுங்கோ உடனே மேனேஜர் உத்தியோகம் குடுப்பான்"ன்னு சீனாதானா மாமா டென்ஷனாகி அத்தோடு ராக க்விஸ் போட்டி எங்களுக்கு இனிதே நிறைவைந்தது,

நிற்க இந்த கச்சேரி கொசுவத்தி எதுக்கு சுத்தினேன் என்றால் ரொம்ப்பபபபபப நாட்களுக்குப் பிறகு இங்கே யூ.கேவில் மில்ட்டன் கீன்ஸ் த்வனி புண்யத்தில் ஒரு சங்கீதக் கச்சேரிக்கு போன வாரம் போய்வந்தேன். முதலில் டாக்டர் ஜோத்ஸ்னா ஸ்ரீகாந்த் மற்றும் சுதீந்திரா அவர்கள் கச்சேரியும், அடுத்து  சஞ்சய் சுப்ரமண்யம், நெய்வேலி வெங்கடேஷ், மற்றும் வரதராஜன் அவரகளின் கச்சேரியும் நடந்தேறியது. மிகக் குறைந்த டிக்கெட் விலையில் த்வனி சுமார் மூன்றரை மணி நேர கச்சேரியை அருமையாய் பேக்கேஜ் செய்து நடத்திக் காட்டினார்கள்.

சங்கீதக் கச்சேரிக்குப் போவதற்கு என்று சில ஜபர்தர்ஸுகள் இருக்கின்றன. அங்கங்கே 'ச்....ச்'ன்னு உச்சுக் கொட்டி முன் வரிசையில் நாலு பேருக்கு கேட்கும் படியாக அங்கங்கே சபாஷ் பலே போடத் தெரிந்திருக்கவேண்டும். (நம்ம்) தொடையைத் தட்டி விரல் விட்டு எண்ணி என்னம்மோ பாடுபவர்க்கு தாளம் சொல்லிக் குடுக்கிற மாதிரி தாளம் போடத்தெரிய வேண்டும். இந்தப் பக்கம் உள்ளவரிடம் "ஆமா இந்தப் பாட்டு என்ன ராகம் தொண்டையில நிக்கிறது பேரு நியாபகம் வரமாட்டேங்கிறது"ன்னு நைசாக நூல் விட்டு தெரிந்து கொண்டு அந்தப் பக்கம் உள்ளவரிடம் "என்னமா இழையறது இந்தோளம்"ன்னு சங்கீத பூஷணமாக தெரிந்திருக்க வேண்டும்.

இத்தனை 'வேண்டும்'களுக்கு மத்தியில் கொஞ்சம் நடுங்கிக் கொண்டே தான் போனேன். போன இடத்தில் கேமிராவை ஆன் பண்ணி ஆப் செய்கிற வேலையை நைஸாக எடுத்துக் கொண்டு முதல் வரிசையிலேயே உட்கார்ந்துவிட்டேன். பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர் ராஜா (அந்தப்பக்கத்லிருந்து கேட்டு) ராகங்கள் சொல்லி அசத்திக் கொண்டிருந்தார். நடுவில் இது அந்த ராகம் தானேன்னு ஏதோ ராகத்தை டவுட் வேற கேட்டார். நானும் "ரீ மா...செ...ன்"ன்னு மனதிற்குள் பாடுவது மாதிரி பாவ்லா காட்டி ஆமா அத மாதிரி தான் இருக்குன்னு சொல்லி சமாளித்தேன். அடுத்த பாட்டிற்கு திரும்பவும் ராகத்தில் டவுட் கேட்க "உளுந்த வடை,தோசை கொண்டு வந்திருக்கான் ...சாம்பார் வந்த மாதிரி வசனை தெரியலையேன்னு..." நம்ம ஞானத்தை மூக்காலயே காட்ட அப்புறம் அவருக்கு டவுட்டே வரலையே.

ஜோக்ஸ் அபார்ட்ன்னு துரை மாதிரி சொல்லிட்டு விஷயத்திற்கு வருகிறேன். ஜோத்ஸ்னா ஸ்ரீகாந்த் வயலினில் புகுந்து விளையாடினார். சுதீந்திரா மிருதங்கம் இதமாய் இருக்க இன்னும் கொஞ்சம் வாசிக்க மாட்டாரா என்று இருக்கும் போது கச்சேரி முடிந்துவிட்டது. அதற்கு அப்புறம் நடந்த சஞ்சை சுப்ரமண்யம் கச்சேரியும் மிக அருமை. மனிதர் அன்யாசமாய் அசராமல் இதமாய் பாடுகிறார். த்வனி,  நேயர் விருப்பம் மற்றும் கேள்விகளுக்கு தனியாய் ஒரு விண்ணப்ப படிவத்தை டிக்கெட்டோடு குடுத்திருந்தார்கள்.  அதில் "ஆல் தோட்ட பூபதி" எழுதிக் கேட்டால் ஆளை வைத்து அடித்து விரட்டிவிடுவார்கள் என்பதால் மெனக்கடவில்லை. ஆனால் எனக்கு சஞ்சயிடம் பிடித்ததே அவர் கேள்விகளுக்கு விடையளித்த பாங்கு. மிக இயல்பாய் நகைச்சுவை கலந்து எந்த தலைக்கணமும் இல்லாமல் என்னை மாதிரி பாமரனுக்கும் புரியும் வண்ணம் பதிலளித்தார்.

மொத்தத்தில் ரொம்ப நாள் பிறகு ஒரு நல்ல கச்சேரி போய் வந்த அனுபவ்ம் கிடைத்தது. "எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போயிருக்கார்"ன்னு வீட்டிலிருந்து வழியணுப்பி வைத்த தங்கமணி திரும்பி வந்தவுடன் நான் பயந்துகொண்டிருந்த "ஆமா என்னென்ன பாட்டு பாடினார்" கேள்வியைக் கரெக்ட்டாய் கேட்டு விட்டார்.

நானும் நாயகன் கமல் மாதிரி உணர்ச்சி பொங்க பல ரியாக்க்ஷன் குடுத்து விட்டு உச்சி மண்டையில் கையால் வகிடெடுத்து தெரியலையேம்மான்னு சொல்லிவிட்டு "ஆனா உளுந்தவடையில மிளகு போட மறந்துட்டான்"ன்னு க்ரெக்ட்டாய் ரிப்போர்ட் குடுத்துவிட்டேன். யாருகிட்ட நம்மகிட்டயேவா..

Sunday, February 28, 2010

வித்துவான்

எஸ்.பி.பியின் என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சி பார்க்கும் போதெல்லாம் வயத்தெரிச்சலாய் இருக்கும். நானும் பெரிய வித்துவான் ஆகி இருக்கவேண்டியவன். சில பல துரதிஷ்டங்களால் முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் பாடுவதை மட்டும் இன்றளவில் விட்டதே கிடையாது. சந்தோஷமாய் இருக்கும் போது தனியாக ரூமில் பாடுவேன். சில சமயம் கலையுணர்வு மிஞ்சி காலை ஒன்பதேகாலில் இருந்து ஒன்பதரை வரை நாலு மணி நேரம் அசுர சாதகம் பண்ணுவேன். ஆனால் என்னோட வீக் பாயிண்டே எந்தப் பாட்டானாலும் முதல் வரி மட்டுமே வார்த்தைகள் கரெக்ட்டாய் வரும். அடுத்த வரியிலிருந்து கொஞ்சம் மானே தேனே பொன்மானே வந்துவிடும்...இந்த சின்ன சறுக்கல் மட்டும் இல்லாவிட்டால் பெரிய வித்துவானாகி இருக்கவேண்டியவன் ஹூம்...

நான் பாட ஆரம்பித்த அறுபத்தி எழாவது வினாடி தங்கமணி "பூனையை காப்பாத்துங்க பூனையை காப்பாத்துங்க"ன்னு அலறிக் கொண்டு வருவார். என்ன பூனை...எங்க...ஏன் காப்பாத்த வேண்டும் ஹ... கேட்கவே மாட்டேனே. "இங்க யாரோ பூனையை கழுத்த நெரித்து, அது கதறுவது மாதிரி இருந்தது...அதான் ஓடோடி வந்தேன்..." என்று கேட்காவிட்டாலும் அவராகவே ஒரு விளக்கமளிப்பார். "இனிமே பாட்டு பாடினா நான் பாடறேன்னு அனௌன்ஸ் பண்ணிட்டு பாடுங்கோ...என்ன ஏதுன்னு தெரியாமல் நாங்களெல்லாம் பதற வேண்டியிருக்கு"ன்னு ஆதங்கப் படுவார். இங்க நான் என்ன ஆல் இந்தியா ரேடியோல அனௌன்ஸ் பண்றதுக்கா சாதகம் பண்றேன்...ஒரு வித்துவானோட பீலிங்ஸை புரிந்துகொள்வே மாட்டார்.

எல்லாம் கொஞ்ச நாள் தான். ஒரு தரம் நாள் சாதகம் பண்ணும் போது இந்த வித்துவானுக்கே தெரியாமல் அதை ரெக்கார்ட் செய்து என்ன ஏதுன்னு சொல்லாமல் வாக்மேனில் என்னை கேட்க விட்டு, அப்புறம் நான் பூனைய காப்பாத்துங்க பூனைய காப்பாத்துங்கன்னு பதறி, சங்கீத வித்துவான் ஆசையை விட்டுவிட்டேன். விட்டுவிட்டேன் என்றால் முழுதாக எல்லாம் இல்லை. அந்த மாதிரி கெட்ட பழக்கம் எங்க குடும்பத்திலேயே கிடையாது. ஐ.ஐ.டிக்கு ஆசைப் பட்டு சேர முடியாவிட்டாலும்.. கஷ்டப்பட்டு என்ட்ரன்ஸ் எழுதி என்.ஐ.ஐ.டியிலாவது சேர்ந்துவிடுவோம். சங்கீத வித்துவான் ஆக முடியாவிட்டாலும் பூனை மேட்டருக்கப்புறம் நாம ஏன் ஒரு மிமிக்கிரி வித்துவான் ஆகக் கூடாது என்று குறிக்கோளை மாத்திவிட்டேன். ஊரில் நான் காலேஜ் படிக்கும் போது மிம்க்ரி பண்ணப் போறேன்னா, "முந்தினனா ராத்திரியே நல்லா ஊற வைச்சுடு...அப்போதான் அரைக்கும் போது பதமா வரும்"ங்கிற ரேஞ்சுக்குத் தான் மிமிக்ரியைப் பத்தி தெரியும். ஒருத்தரும் இல்லாத ஊர்ல கம்பு நட்டவன் தான் ராஜான்னு ஊர்ல மிமிக்ரில கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் போட்டிருந்தேன்."அடக்கம் அமரருள்...etc etc" திருவள்ளுவர் நமக்கா சொல்லி இருக்கிறார்?

முன் ஒரு நாளில் "செந்தாழம் பூவில்"-ஜேசுதாஸ் ஆரம்ப ஹம்மிங்கை எப்படியாவது அலேக்காய் பிடித்து ரிப்பீட் அப்ளாஸ் வாங்கிவிட வேண்டும் என்று அசுர சாதகம் கொண்டிருந்த போது, தங்கமணி "ரெண்டு நாள் பட்டினி கிடந்த நாய் சோத்துக்கு ஊளையிடுவது மாதிரி இருக்கு தாங்கமுடியலை" என்று என்கரேஜிங்காய் பீட்பேக் குடுத்திருந்தார். அதனால் முதலில் நாயில் இருந்து மிமிக்கிரி ப்ராக்டீஸை ஆரம்பிக்கலாம் என்று நண்பர்களிடம் ஐடியா கேட்டது தப்பாய் போய்விட்டது. இந்த உலகம் இருக்கே உலகம்... ரொம்ப போட்டியும் பொறாமையும் நிறைந்தது. நான் பாட்டுக்கு நாய் பூனைன்னு சாதகம் செய்து கொண்டிருந்தால் இன்னொரு நண்பர் 'சில்க் ஸ்மித்தா' வீட்டு நாய் நமீதா விட்டு பூனைன்னு கான்செப்டை இம்பரவைஸ் செய்து கைதட்டை வாங்கிக் கொண்டுப் போய்விட்டார். அப்புறம் "தம்பீ இங்க வா..தொழில்ல போட்டி இருக்கலாம் பொறாமை இருக்க கூடாது"ன்னு அவரை கூப்பிட்டு சமாதானக் கூட்டம் போட்டு ‘சில்க் சுமிதா’ வீட்டு நாய் அவருக்கும், ரெண்டு நாள் பட்டினி கிடந்த நாய் எனக்குமாய் பங்கு போட்டுக் கொண்டோம். ஆனாலும் மனிதர்களுக்கு சினிமா மோகம் ஜாஸ்தி சார்... ஐய்யோ பாவம் ரெண்டு நாள் பட்டினி கிடந்த நாயாச்சேன்னு கொஞ்சம் கைத்தட்ட வேண்டாமோ... ம்ஹூம் சினிமா மோகத்தில் சிதறுண்டு சிக்கியிருக்கிறான் தமிழன்னு சும்மாவா சொல்லியிருக்கார் டாக்டர்.

ஒருதரம் மிஸ்கால்குலேஷன் ஆகி தொடர்ச்சியாய் ரெண்டு நாள் குளித்தது, உடம்புக்கு ஆகாமல் தொண்டை கட்டிக்கொண்டுவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாய் குரல் தெளிவு பெற இரண்டு வாரங்கள் பிடித்தது. "கடவுள் ஒரு பிகர் வீட்டு ஜன்னலை மூடினால் இன்னொரு லேடீஸ் ஹாஸ்டல் கதவை திறப்பார்"ன்னு முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா? நம்ம கம்மின குரலின் ஜியாக்ரபி தெரியாமல்..."அடேங்கப்பா...அப்படியே கலைஞர் மாதிரி பேசறீங்களே...நீங்க மட்டும் போன்ல பேசினா உடனே டி.வி பொட்டிய எடுத்து என் கைல குடுத்திடுவா"ன்னு ஒரு நண்பர் அள்ளி விட, அதுவரை சற்று தூங்கிக் கொண்டிருந்த மிமிக்கிரி வித்துவான் முழித்துக் கொண்டுவிட்டார். அப்புறம் கலைஞர், வீரபாண்டிய கட்டபொம்மன், டைனோசர், வெக்கம் கெட்ட கழுதை என்று வெரைட்டியாய் - மிரட்டலாய் மிமிக்கிரி வித்துவான் ப்ராக்டீஸை ஆரம்பித்தேன்.

ஆனால் தங்கமணிக்கு இதெல்லாம் துளியும் பிடிக்கவில்லை. கொஞ்சம் குரலை ட்யுன் செய்ய அவர் உதவியை நாட வேண்டி இருந்தது. "இந்த இழவுக்கு உங்க பாட்டு வித்துவான் பேராசையே எவ்வளவோ பரவாயில்லை, டைனோசர் குரலுக்கு புளிச்ச மோரைக் கொண்டா தோசமாவ கொண்டான்னு என் உசிரு போகிறது. உங்க சாதகத்தால பக்கத்து வீட்டுக்காரன் கூடிய சீக்கிரம் கவுன்சில்ல கம்ப்ளெயின்ட் குடுக்கப் போறான் "ன்னு ரொம்ப சலித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார். அவர் சலித்துக் கொண்டதாலோ இல்லை நம்ம பெர்பார்மன்ஸ் கண்திருஷ்டியிலோ என்னம்மோ, பெப்பரப்பேன்னு திறந்திருந்த தொண்டை திரும்பவும் அடைத்துக் கொண்டு குரலுக்கு பதிலாய் வெறும் காத்து மட்டுமே வர ஆரம்பித்தது. (சனிக்கிழமை மட்டும் நீராடுன்னு பெரியவங்க சொன்னத கேட்காததால் வந்த பிரச்சனை)


தங்கமணியோட சித்தப்பாவோட பெரியம்மாவோட மாமியோட நாத்தனார் ஒருவர் "கொதிக்கிற வெந்நீர்ல சொட்டு தேனோட இந்தப் பொடிய ரெண்டு ஸ்பூன் நன்னா கலக்கி குடு, நம்ம பாபநாசம் டேம் மதகு மாதிரி தொண்டை தானா திறந்துடும்" என்று அக்ஸ்தியரோட பேத்தி மாதிரி சித்த வைத்தியப் பொடி ஒன்றை குடுத்தார். தங்கமணி 'மனாளனே மங்கையின் பாக்கியம்' என்று யாரோவோட நாத்தனார் சொன்ன ரெண்டு ஸ்பூனுக்கு பதிலாக நாலு ஸ்பூன் ‘நன்னா’ கலக்கி., அதை குடித்துவிட்டு எனக்கு வாயோடு வயத்தோடு கலக்கி, கணீரென்று இருந்த வித்துவான் குரல் மக்கி துருப் பிடித்த பித்தளைப் பாத்திரத்தை தேங்காய் நார் வைத்து தேய்க்கும் சத்தம் மாதிரி மாறி விட்டது. அத்தோடு மிமிக்கிரி வித்துவான் ஆசையும் கானல் நீரானது. "இதுக்குத் தான் எங்காத்துக்காராளோடு வம்பு வெசுக்காதீங்கோ"ன்னு தங்கமணி பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தாலும் எனக்கென்னம்மோ தங்கமணி மருந்துப் பொடி டப்பாவில் சீயக்காய் பொடியை கன்ப்யூஸ் செய்திருப்பாரோ என்ற பயங்கர சந்தேகம் இன்றளவில் இருக்கிறது.

இருக்கட்டும் இருக்கட்டும் ஒரு நாள் எப்படியாவது எதிலாவது வித்துவானாகிவிடுவேன் சார்.

Wednesday, May 13, 2009

அன்புள்ள தங்கமணிக்கு...

வாவ்...இந்தப் புடவை எப்போ எடுத்தோம்...இதுல நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா...அப்படியே ஜன்னல் பக்கத்துல வானத்துல காக்காய பார்க்கற மாதிரி கன்னத்துல கைய வெச்சிண்டு ஒரு போஸ் குடு...டக்குன்னு கேமிரால பிடிச்சுடறேன்...என் அடுத்த படத்துக்கு இந்த மாதிரி ஒரு ப்யூட்டிய தான் தேடிண்டு இருந்தேன்....

தேங்ஸ் பட் நோ தேங்க்ஸ்..தெளிவாவே சொல்லிடறேன்...கண்டிப்பா இன்னிக்கு ராத்திரி என்னால சப்பாத்தியும் சன்னா மசாலாவும் பண்ணவே முடியாது...!!!!!!

சே மனுஷன் சன்னா மசாலாவுக்கெல்லாம் பொய் சொல்லி பிச்சை எடுக்க வேண்டியதாப் போச்சு...சனியன் நானும் அத எவ்வளவு வருஷமா பண்ணிப் பார்க்கறேன் ஒரு தரமாவது நல்லா வந்து தொலைய மாட்டேங்குது...நீயும் அடுக்களையில எவ்வளவு தான் கஷ்டப்படற...இதுக்கு தான் ஒரு வெள்ளக்காரிய வீட்டோடு கொண்டு வந்துடறேன்னு சொல்றேன்...அவளும் கூட மாட ஹெல்ப் பண்றதோட அக்கா அக்கான்னு உங்கிட்ட ஆசையா இருப்பா...நீ தான் கேக்க மாட்டேங்கிற

ஏன் அதுக்கு பதிலா நான் ஒரு ஆள கூட்டிண்டு வரேனே ...அவன் கூட தான் உங்கள அண்ணா அண்ணான்னு கூப்பிடறதோட உங்களுக்கும் ஒத்தாசையா இருப்பார்...நம்ம அடுத்த தெரு ஆப்பிரிக்க நண்பர் எப்படி வசதி...?

அடிப்பாவி அந்த ஆள் "கேய்"ன்னு தெரிஞ்சு பழிவாங்குறியா...அவன் ஆள் இருக்கிற சைஸ்சுக்கு...உனக்குள்ள இப்படி ஒரு சொர்னாக்கா இருப்பான்னு நான் நினைக்கவே இல்லை....

என்னடி கெக்கபிக்கன்னு பார்த்துண்டு இருக்க...ஹோம்வொர்க்க எடுத்துண்டு வா. டி.வி.யப் பார்க்காம அந்த சோபால என்ன பார்த்து இப்படி திரும்பி உட்காரு...கான்சென்ட்ரேஷன் இம்ப்ரூவ் ஆகும். இந்தா இந்த டி.வி ரீமோட்ட பக்கத்துல வைச்சிக்கோ...மாடிலேர்ந்து அம்மா கீழ இறங்கி வர்ற சத்தம் கேட்டா டி.விய டக்குன்னு ஆஃப் பண்ணிட்டு ரிமோட்ட உன் பக்கத்துலேயே வெச்சிக்கோ. இல்லைன்னா அப்புறம் டீ.விய பார்த்துண்டே ஹோம்வொர்க் பண்றன்னு உன்ன தான் சத்தம் போடுவா...

அம்மா....டீ.வில பில்லா போடறான்...அப்பா நயன் தாரா பார்க்கறார்....

தாயைப் போல் பிள்ளைன்னு சும்மாவா சொன்னான்...ஒரு மட்டு மரியாதையே தெரியல உனக்கு.....இப்படியா நயன் தாரான்னு மண்டைல அடிச்ச மாதிரி சொல்றது...சித்தின்னு அழகா சொல்லுடா...சரி சரி உக்காரு...உடனே எழுந்து போய் மாடில உங்கம்மா கிட்ட ஊத வேண்டாம்..இன்னிக்கு கோட்டா அல்ரெடி ஓவர்...நாளைக்குப் பார்த்துக்கலாம்...ஹூம்...சோபால பூனைய வைச்சிண்டு சகுனம் பார்த்தேன் பாரு என்ன சொல்லனும்...

டாட் ...ஷீ இஸ் புல்லியிங் மீ....நான் தானே உங்க கடைசிப் பொண்ணு....ஷீ சேஸ் ஷி இஸ் தெ ஒன்

அவ சொன்னா சொல்லட்டும்...கண்டுக்காத...அதெல்லாம் இருக்கட்டும்...இங்க பாருடா செல்லம்...நான் உன்கிட்ட முன்னாடியே நிறைய தரம் சொல்லி இருக்கேன்...நீ என்னோட ரெண்டாவது பொண்ணுன்னு சொல்லிக்கோ ஆனா நீதான் கடைசிப் பொண்ணா இல்லியான்னு நானும் உங்க அம்மாவும் தான் பேசி ஒரு முடிவெடுக்கனும் ஓ.கேவா...

குழந்தை கிட்ட என்ன பேசறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா...அன்னிக்கு அவ ஸ்கூல்ல இன்னொரு பெண்ணும் இதே மாதிரி அவ வீட்டுல அவ தான் கடைசிப் பொண்ணுன்னு சொல்லியிருக்கா...இவ உடனே நீங்க சொன்னத அவ கிட்ட சொல்லி...நீ கடைசி பொண்ணா இல்லையாங்கிறத எங்கப்பா தான் முடிவு பண்ணனும்ன்னு சொல்லியிருக்கா..அந்த பொண்ணு அவ வீட்டுல அனேகமா சொல்லி இருக்கும்...அந்த தெரு பக்கம் போன இருக்கு உங்களுக்கு.

நீங்க வாழ்க்கையில எடுத்த ரெண்டாவது கரெக்ட் முடிவு காமிராக்கு பின்னாடி நிக்கனும்ன்னு எடுத்த முடிவு தான்....

என்ன இருந்தாலும் நீ செம ஷார்ப்டி...பயங்கர புத்திசாலி....உன்னளவுக்கு நான் போறாது...

என்னாச்சு இன்னிக்கு உண்மையெல்லாம் பயங்கரமா ஒத்துக்கறீங்க...?

ஆமா பின்ன உண்மை என்னைக்காவது உரைச்சுத் தானே ஆகனும்...நீ என்ன செலெக்ட் பண்ணின நான் உன்ன செலக்ட் பண்ணினேன்...இப்பவும் சொல்றேன் நீ பயங்கர ஷார்ப்மா...


அன்புள்ள தங்கமணிக்கு...தந்தை மகளுக்கு எழுதிய கடிதம், மகள் தந்தைக்கு எழுதிய கடிதம் வரிசையில் புருஷன் பெண்டாட்டிக்கு எழுதிய கடிதமாக இந்நேரம் இநத பதிவு மூலம் சரித்திரத்தில் இடம் பிடித்திருப்போம் (ஹீ ஹீ) . நம் மணவாழ்க்கையில் அஃபீஷியலாக பத்து வருடம் ஓடியே விட்டது. திரும்பிப் பார்க்கிறேன், ஓரமாய் நின்று பார்க்கிறேன் ஒன்றரைக் கண் விட்டுப் பார்க்கிறேன் என்று போரடிக்காமல் நேர விஷயத்திற்கு வருகிறேன். எத்தனையோ தரம் நீ சொல்லி நான் மறுத்திருந்தாலும்.....தஙகமணியில்லையேல் டுபுக்கில்லை என்று இன்று ஒத்துக்கிறேன். எனது வாழ்வில் நகைச்சுவையை மேம்படுத்தியது நீ தான் என்று ஒத்துக்கொள்கிறேன். எதைச் சொல்வேன் கண்மணி...தெள்ளிய நீரோடையில் வெள்ளியென..என்று ப்ளாக் கிடைத்ததே என்று ஓவராய் ஃபிலிம் காட்டாமல் "காக்க காக்க" ஜோதிகா மாதிரி (நினைப்பில்) நீ நம் வீட்டு கர்டன்களை திறந்துவிட்டு என்னைப் பார்த்து பேசும் டயலாக்கிற்கு அதில் என்றும் ஒரு சிறப்பிடம் என்ற ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

சொந்தக் கவிதை எழுதி டார்ச்சர் பண்ணாமல்...சமீபத்தில் நான் மிகவும் ரசித்த, நமக்கு மிகவும் பொருந்தும் சினிமா பாட்டையே போட்டுவிடுகிறேன்

நீ கோபப் பட்டால்...நானும் கோபப்படுவேன்
நீ பார்க்காவிட்டால்...நானும் பார்க்கமாட்டேன்
நீ திட்டி முறைத்தால்...நானும் திட்டி முறைப்பேன்
நீ சண்டை பிடித்தால்...நானும் சண்டை பிடிப்பேன்
நீ பேசாவிட்டால்...நானும் பேசமாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும்....உயிரை விடுவேன் (சும்மா உல்லாகட்டிக்கு)
நீ கேக்காமல் போனாலும்...கத்தி சொல்லுவேன்...பேபி ஐ...லவ்..யூ (பேபி யாருன்னு கேக்கப்பிடாது சொல்லிட்டேன் ஆமா)


எனக்குத் தெரியும் என்ன தான் வில்லு படத்திலேர்ந்து பாட்டெல்லாம் சுட்டுப் போட்டாலும் நீ சென்டி ஆக மாட்ட....அதே தான் கரெக்ட்...இந்த வாரம் சப்பாத்தி சன்னா மசாலா...அதே தான்...ப்ளீஸ்...சினிமாலேர்ந்து பாட்டெல்லாம் மேற்கோள் காட்டி போட்டிருக்கேன்....ஏதோ பார்த்து செய்யுங்க மேடம்...

Sunday, January 06, 2008

சேல்

லேட் ஆகுவதற்கு முன்னால்(??!!!) சொல்லிவிடுகிறேன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

கிறிஸ்துமஸ்க்கும் புத்தாண்டுக்கும் நடுவில் ஆபிஸுக்கு மட்டம். இந்த முறை ஒரு மாதத்திற்கு முன்னாலே ஹாலிடேயில் என்ன செய்ய வேண்டும் என்று உருப்படியாக திட்டம் போட்டு அதை வழக்கம் போல் குப்பையாக எல்லா சாமான்களையும் அடைத்துவைத்து உபயோகமே படுத்த முடியாத மாதிரி வைத்திருக்கும் அறையில் வைத்து பூட்டிவிட்டோம்.

உலகத் தொலைகாட்சிகளிலேயே முதன் முறையாக எல்லா என்.ஆர்.ஐக்களையும் மாதிரி நாங்களும் பாக்ஸிங் டே சேல்க்கு முதல் முறையாக படையெடுத்தோம். இந்த பாக்ஸிங் டே சேலின் மகிமையே இரண்டு வருடம் முன்னாடி தான் நண்பர்களின் வழியாக உணர்ந்து கொண்டோம். அது வரை நம்ம சேல் அனுபவமெலாம் திருநெல்வேலி போத்தீஸிலோ ஆரமெகேவியிலோ போடும் இரண்டு வைகிங் ஜெட்டி வாங்கினால் ஒரு டின்னர் பவுல் ஃப்ரீ வரை தான். அதிலேயே ஏகப்பட்ட டகால்டி வேலை நடக்கும். திருநெல்வேலியில் போத்தீஸ் ஆரெம்கெவி எல்லாம் மூன்று நான்கு கட்டிடங்களில் இருப்பதால், சும்மானாச்சுக்கும் முதலாளியோட க்ளாஸ்மேட் மாதிரி (எல்லாம் அவங்க குடும்பத்தில் நம்ம வயதில் யாராவது ஒரு ஒரு சின்னப் பையன் இருப்பார் என்ற நம்பிக்கையில்) "முதலாளி இன்னிக்கு இந்தக் கடையில் இருக்காரா இல்ல அங்க இருக்காரா"ன்னு கேட்டால் விற்பனை பிரதிநிதி கொஞ்சம் உதறலோடு "அங்க தான் இருக்கார் சார்"ன்னு சேர் எடுத்துப் போடச் சொல்லி ஒரு லெமன் ஜூஸ் தருவார். திரும்ப பில் கட்டும் போது இதே பிட்டைப் போட்டால் ஜிப் வைத்த மணிபர்ஸ் கேட்காமலே தருவார்கள். சில சமயம் ராங்கி பிடித்த காஷியர்கள் "எந்த முதலாளியக் கேக்கறீங்க"ன்னு கொக்கி போடுவார்கள். நம்ம பாரம்பரியத்தில் தாத்தா பெயர் தான் பேரனுக்கு இருக்கும் என்ற நம்பிக்கையில் "விஸ்வநாதன்.... அதான் விச்சு"ன்னு கேஷுவலாக சொன்னால் "சின்ன ஐய்யா கடைக்கு வரமாட்டாரே..பெரிய ஐய்யா தான் இருப்பார்...மணி, சார முதலாளி ருமுக்கு கூட்டிக்கிட்டு போ"ன்னு கூட ஒரு ஆள் வரும். சில சமயம் வரும் மணி நல்லவராய் இருப்பார். மணியை அப்பிடியே நைஸாக லேடிஸ் ட்ரெஸ் செக்க்ஷனுக்கு கூட்டிக்கொண்டு போய் தஙகமணி எடுத்துவைத்திருக்கும் ஜவுளிக் கடலுக்குப் பில்லைப் போட்டால் "சார் சின்ன ஐய்யாவுக்கு தெரிஞ்சவராம்"ன்னு பில் பத்து பர்ஸன்ட் டிஸ்கவுண்ட் ஆகியிருக்கும். இதுவே ராங்கி பிடித்த மணியாயிருந்தால் முதலாளியே கண்ணாயினாராய் இருப்பார். "விச்சுவ நான் ஃபோனில் பிடிச்சிக்கிறேன்ன்னு "ஹலோ யாரு துபாய் ஷேக்கா? அடுத்த கப்பல்ல முன்னூறு ஒட்டகமும் ரெண்டு எருமை மாடும் வேணும் அனுப்பிருங்க"ன்னு முக்கியமான போனுக்காக மணி கத்தரித்து விடப்படுவார். தங்கமணி நான் என்னம்மோ ரெண்டு தெரு தள்ளியிருக்கும் வீட்டில் யாருக்கோ சொந்தம்ங்கிறமாதிரி திசைக்கே வரமாட்டார். வந்தாலும் நெஞ்சில் சளி கட்டிக் கொண்ட மாதிரி காறிக் காறித் துப்புவார் என்பதால் நானும் கண்டுகொள்ள மாட்டேன்.

இப்படியாக சேலில் வாங்கி வந்ததைப் போட்டுக்கொண்டு பவுலில் ஒரு சூப் குடித்துவிட்டோம் என்றால் சேல் சாபல்யம் அடைந்துவிடும்.

இந்த முறை வீட்டுக்குத் தேவையான முக்கியமான இரண்டு விஷயங்கள் வாங்க வேண்டி இருந்ததால் சேலுக்கு காத்துக்கொண்டிருந்தோம் அப்பிடியே, அப்பிடி என்ன தான் சேல்ன்னு பார்க்கலாம் ஒரு ஆவல். இங்கு லண்டனில் இந்த பாக்ஸிங் டே சேல் ரொம்பப் பிரபலம். சில கடைகள் காலை நாலு மணிக்கு இதற்காகத் திறப்பார்கள். ஒரு மணி நேரத்திற்குள் நல்ல உருப்படிகள் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிடும் என்று நண்பர்கள் பயமுறுத்தி இருந்தார்கள். நாலு மணியெல்லாம் நமக்கு வேலைக்காது என்பதால் பாதி ராத்திரி ஏழரை மணிக்கு எழுந்து, குழந்தைகளையும் கிளப்பிக் கொண்டு வீட்டுக்குப் பக்கத்திலுள்ள மிகப் பெரிய ஷாப்பிங் பார்க்குக்கு ஒன்பது மணிக்கு போய் சேர்ந்தால் இரண்டாயிரம் கார்கள் நிப்பாட்டக் கூடிய கார் பார்க்கில் இடமே இல்லை. அடிச்சுப் பிடிச்சு நிப்பாட்டி விட்டு சேலுக்குப் பிரபலமான ஒரு கடைக்குப் போனால் வெளியிலேயே பெரீய்ய்ய்ய க்யூ. மூன்று மாடிக் கட்டமும் புல்லாம். இனிமே எத்தனை பேர்கள் வெளியே வருகிறார்களோ அத்தனை பேர்கள் தான் உள்ளே போகலாம்ன்னு ரெண்டு கடோத் கஜன்கள் காவலுக்கு இருந்தார்கள்.

அரை மணி நேரம் தேவுடு காத்து உள்ளே போனால் களேபரமாக இருந்தது. பெண்கள் எல்லாம் கொல்லைப் புறத்தில் காயப் போட்ட துணியை மழை வந்தால் எடுக்கிற அவசர கதியில் துணிகளை அள்ளிக் கொண்டிருந்தார்கள். முக்கால் வாசி துணி அடுக்குகள் காலியாக பல்லைக் காட்டிக் கொண்டிருந்தது. இதைப் பார்க்கவா வெளியே இந்த மூதேவி க்யூல வரச்சொன்னான்னு எனக்குக் கடுப்பு. பக்கத்து வீட்டு குண்டு இங்கிலீஷ் மாமா இடுப்பு சைஸ்க்கு மட்டும் உள்ளாடை சல்லிசாக கிடைத்தது. அதில் ஒரு காலிலே என் முழு உடம்பும் போய்விடும், அவ்வளவு பெரிய சைஸ். பேசாமல் அதை எடுத்துக் கொண்டு அடுத்த தரம் ஊருக்குகுப் போகும் போது ஊரில் ஆல்டர் பண்ணி எடுத்துவரலாமா என்று தோன்றியது. தங்கமணியிடம் கேட்டால் திரும்பவும் அவருக்கு நெஞ்சில் சளி கட்டிக் கொள்ளும், அத்தோடு அவருக்கு ஒரு துணிமணியும் கிடைக்கவில்லை என்ற எரிச்சலும் என் தலையில் விடியும் என்பதால் "என்ன பெரிய சேல்...எங்கூர்லலாம் ரெண்டு வாங்கினா ஒரு டின்னர் பவுல் குடுப்பாங்க தெரியுமா"ன்னு கிடைத்த குண்டு மாமா மலிவு விலை உள்ளாடையையும் திரும்ப கம்பியில் மாட்டிவிட்டு வந்துவிட்டேன்.

"இந்த இழவ விட்டா உங்களுக்கு வேற எதுவுமே கண்ணுல படாது. வெள்ளக்காரனப் பாருங்கோ என்னம்மா கேர்ல் பிரெண்டுக்கு ட்ரெஸ் எடுக்கிறான். நான் கூட உங்களுக்கு ரெண்டு சட்டை எடுத்திருக்கேன்...இவ்வளவு பெரிய கடையில் உங்களுக்கு வேற எதுவுமே கண்ணுக்கு தட்டுப் படலையா"ன்னு தங்கமணி வேப்பிலையடிக்க ஆரம்பித்துவிட்டார்.

"சரி சரி வருத்தப் படாத நாளைக்கு மெட்லன்ல உனக்கு ஜமாய்ச்சிருவோம், என்னச் சொல்லி குத்தமில்லை..எனக்கு சின்ன வயசிலேயே ஜாதகத்துல கோமணதோஷம் இருக்குன்னு ஒரு ஜோசியர் சொல்லியிருக்கார், பழனியில போய் ஒரு பரிகாரம் பண்ணின்னா எல்லாம் நிவர்த்தியாகிவிடும்"ன்னு கலாய்த்து விட்டு அடுத்த நாள் வீட்டுக்குப் பக்கதிலிருந்த இன்னொரு நல்ல கடைக்கு போய் நிறைய (சரி கொஞ்சமாய்) துணிமணிகள் வாங்கினோம்.
(சே வர வர ப்ளாக் போஸ்டல் கூட சினிமா மாதிரி சுபம் போட ஆரம்பித்துவிட்டேன் :) )

Wednesday, October 24, 2007

ஹாலிடே-3

முதல் நாள் பீச் பீச்சாக சுற்றினோம் என்று சொன்னேன் அல்லவா, சாப்பாடு பற்றி சொல்லவே இல்லையே. முதல் நாள் கிளம்புவதற்கு முன்னாலே தங்கமணி வீட்டில் பாவ் பாஜி செய்து டப்பாவில் எடுத்துக் கொண்டுவிட்டதால் வழியிலேயே சர்வீஸ் ஸ்டேஷன்களில் நிப்பாட்டி சாப்பிட்டோம் . "என்ன தான் சொல்லு உன் கையால சமைச்ச சாப்பாட்டுக்குப் பக்கத்துல இந்த பர்கர் கிங்லாம் பிச்சை தான் எடுக்கனும்"ன்னு ஏத்திவிட்டு கூட கொஞ்சம் பாவ்பாஜியை நொக்கிவிட்டதில் காரில் ஏறி உட்கார்ந்ததும் சொக்கிவிட்டது.

"நாளைக்கு டிபனுக்கு பேசாம சன்னா மசாலாவும் சப்பாத்தியும் செஞ்சிக்கலாம் கையிலயும் எடுத்துட்டு போனா இதே மாதிரி அங்கங்க நொக்கறதுக்கு வசதியா இருக்கும்"ன்னு சொல்லுவதற்க்குள் தங்கமணி உண்ட மயக்கத்தில் தொண்டி ஆகியிருந்தார். அன்று நாங்கள் தங்கியிருந்த இடத்திலேயே அழகான விளையாடும் இடம் இருந்ததால் அதில் எல்லாரும் விளையாடிக் களைத்து அடுத்த நாள் வழக்கம் போல எட்டு மணிக்கு எழுந்து அரக்கப் பரக்கக் கிளம்பினோம்.

அடுத்த நாள் சப்பாத்தி, சன்னா மசாலா நினைப்பில் வேல்ஸ் மண் விழுந்தது. எதற்க்கும் இருக்கட்டும் என்று எடுத்து வந்திருந்த கார்ன் ப்ளேக்ஸ் பாலுடன் பெப்பரபேன்னு முழித்துக் கொண்டிருந்தது. "இன்னாது கார்ன் ப்ளேக்ஸா...இதுக்குத் தான் கடுகு, மஞ்சப் பொடி, சன்னான்னு டின்னு கட்டினியா...அப்போ அதெல்லாம் வேஸ்டா..." என்று மனு போட..."வேண்டாம் வேஸ்டாப் போக வேண்டாம் அந்த கார்ன் ப்ளேக்ஸ குடுங்க...அதிலயே தாளிச்சிக் கொட்டி சன்னாமசாலவையும் போட்டுத் தரேன் சாப்பிடுங்க"ன்னு அந்தக்கால வில்லன் மாதிரி தங்கமணி மிரட்ட ஆரம்பித்துவிட்டார். " ஐயய்யோ அதுக்கு எங்க மாமியார் செய்யற ரசத்தையே குடிச்சிரலாம்.. சரி சரி சமாதானம்..இதுக்குத் தான் நான் முதல்லயே கடுகு மஞ்சப் பொடியெல்லாம் எடுத்துட்டு வர வேண்டாம் வெறும் கார்ன் ப்ளேக்ஸ், மெக்டோனால்ட்ஸ்ன்னு மேனேஜ் பண்ணிக்கலாம்ன்னு சொன்னேன்"- என் டயலாகின் முதல் பகுதி தங்கமணி காதில் விழாததால் வேறு எந்த பிரச்சனையுமில்லாமல் ஊர் சுத்த கிளம்பிவிட்டோம்.

இரண்டாம் நாள் குழந்தைகளுக்காக டயனோசர் பார்க், கேம்ஸ் பார்க் என்று சுத்தி விட்டு மூன்றாம் நாள் மீண்டும் காடு மலைன்னு கண்ணன் தேவன் டீ வாங்கப் போன மாதிரி சுத்தினோம். அன்றைக்கு கற்காலத்துக்கு பிறகு வந்த இரும்புக் காலத்தில் மக்கள் வாழ்ந்த மாதிரி செட் செய்திருந்த ஒரு இடத்துக்குப் போனோம். இன்றைய நவீன யதிரங்களோ ஆயுதங்களோ எதுவும் உபயோகப்படுத்தாமல் அந்தக் காலத்தில் எப்படி வாழ்ந்திருப்பார்களோ, அவர்களுக்கு என்ன ஆயுதங்கள் இருந்திருக்குமோ அதைக் கொண்டு அந்த இடத்தையும் வீடுகளையும் மீண்டும் உயிர்பித்திருந்தார்கள். வந்திருந்த வெள்ளைக்கார மாமாக்களும் மாமிக்களும் வாயைப் பொளந்து கொண்டு கதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கு நம்மூர் கிராமங்களை திரும்ப பார்த்த மாதிரி இருந்தது. இன்னும் நம்மூர் கிராமங்கள் அந்தக் காலத்து வசதிகளுடனே இருப்பதை எண்ணும் போது கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.

பிறகு அடுத்த நாள் ஸகந்தவேல் கோவிலுக்குப் போனோம். எனக்கு சாமியைப் பார்க்கும் ஆர்வத்தை விட அங்கேயே முழுக்க முழுக்க இருக்கும் மந்திரம் சொல்லும் வெள்ளைக்காரர்களைப் பார்ப்பதற்கே ஆர்வமாக இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டமே தெரியாத ஒரு காட்டு வழியாகப் பயணம். ஒரு ஒத்தயடிப் பாதையில் தான் காரே போகவேண்டும். வழியிலேயே போலீஸ் காரை நிப்பாட்டிவிட்டது. "ஐயையோ நான் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துவதைத் தவிர எந்தத் தப்பும் செய்யலையே" என்ற எனது உதறலைக் கண்டுகொள்ளாமல் ஃபூட் அன்ட் மவுத் நோயினால் அந்தக் கோவிலில் மேலும் இரண்டு மாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று அவற்றைக் கொன்(ண்)று போக வந்திருந்தார்கள். இதற்க்கு முன் சம்பூ என்று மாடு நோயுற்று அது பெரிய பிரச்சனையாகிவிட்டதால் இந்த முறை அவற்றை நீக்கும் வரை யாரையும் கோவில் பக்கமே அனுமதிக்கவில்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகு அனுமதித்தார்கள்.

எங்களை மாதிரியே கார்டிஃப்லிருந்து கோயிலுக்கு ஏழு பேர் கொண்ட தமிழ் கூட்டம் வந்திருந்தது. அதில் எல்லோரும் நர்ஸாக பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். பார்த்தவுடனேயே நட்பாகி ஜாலியாகப் பேசிப் பழக ஆரம்பித்துவிட்டதால் காத்திருப்பு போரடிக்காமல் இருந்தது.

நோய்க்குப் பலியான மாடுகளுக்காக அன்று பூஜை நடைபெறவில்லையாதலால் வெள்ளைக்காரன் "ஓம் சுவாகா" மந்திரம் சொல்லுவதைக் காணக் கிடைக்கவில்லை. ஆனால் கோயிலில் வேறு ஒரு அங்கியணிந்த பூசாரி அம்பாளின் மகிமையைப் பற்றியும், ஜனனம் மரணம் பற்றிய தத்துவங்களையும் எங்களிடம் தெளிவாகப் பேசிக்கொண்டிருந்தார். பொதுவாகவே இந்த மாதிரி சமாச்சாரங்களுக்கும் எனக்கும் கொஞ்சம் தூரம் அதிகம். இருந்தாலும் ப்ளாக்க்கு எதாவது மேட்டர் தேறுமான்னு கவனமாகக் கேட்டும் ஒன்றும் புரியவில்லை.


கோவிலில் கார்டிப் நர்ஸ் நண்பர்களுடன் எல்லா இடங்களுக்கும் போனோம். பேச்சுவாக்கில் "நீங்க இண்டர்நெட்டில் ப்ளாக்லாம் படிப்பீர்களா...நான் கூட "டுபுக்கு"ங்கிற பெயரில் ஒரு ப்ளாக் வைத்திருக்கிறேன்" என்று ஒரு நண்பரிடம் பிட்டைப் போட ஆரம்பிப்பதற்குள் நண்பர் இடைவெட்டினார்.. "எங்கங்க....அதெல்லாம் ஒரு காலம்...கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி நான் கூட "நைஸ் கை"ங்கிற பெயரில் ராத்திரி பகல்ன்னு பாராம ஃபிகருங்க கிட்ட சேட்டில் நிறைய கடலை போட்டிருக்கேன்..இப்போ அதுக்கெல்லாம் ரொம்ப நேரமில்லைங்க" என்று நண்பர் பதில் சொல்லி "கல்யாணமாகியும் இன்னமுமா இதையெல்லாம் கண்டினியூ பண்றன்றீங்கன்னு ஒரு லுக்கு விட்டார் பாருங்கள். தஙகமணிக்கு என்ன்னோட தன்னடக்கம் ப்ளாப்பானது சிரிப்பான சிரிப்பு. அப்புறம் நண்பரிடம் "ஐய்யைய்யோ இது அந்த மாதிரி மேட்டரில்லைங்க வேறங்க..இது ப்ளாக்குன்னு..." ஒரு மாதிரி அசடு வழிந்துகொண்டே சமாளித்தேன். ஆனாலும் அவர்களெல்லாம் மிக இனிமையான நண்பர்களாகி இப்பவும் அப்பப்போ ஃபோன் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறாக வேல்ஸ் ட்ரிப் இனிதே நிறைவடைந்தது.

முதல் நாள் கார்ன் ப்ளேக்ஸுக்குப் பிறகு தங்கமணி அதற்கடுத்த நாட்களில் சப்பாத்தி, சன்னாமசாலா, மற்றும் புளியோதரை செய்தார் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டு விடுகிறேன் (ஆங்..அப்புறம் வாங்கிக் கட்டுறது யரு?)




Monday, September 24, 2007

ஹாலிடே-2

தங்கமணியின் கடுகு எடுத்து வைச்சாச்சா என்ற சந்தேகம் வலுத்துக் கொண்டே போனது. "இதோ பாரு பெட்ரோல் விக்கிற விலைக்கு கடுகு மேட்டருக்கெல்லாம் காரைத் திருப்பமுடியாது" என்று டயலாக் விட வாயைத் திறக்கும் போது சேட் நேவ்வின் ரிமோட் மற்றும் மொபைல் போன்கள் இருக்கும் பையை வீட்டிலேயே வைத்து விட்டது நியாபகம் வந்தது.

"எலே மண்டைன்னா பொடுகில்லாம இருக்க முடியாது, சமையல்ன்னா கடுகில்லாம இருக்கமுடியாது நம்ம பாட்டன் முப்பாட்டன் காலத்துலேர்ந்து சுத்துப்பட்டு பதினெட்டு கிராமத்துலயும் யாராவது கடுகில்லாம சமைச்சிருக்காங்களான்னா பொறந்து குழந்தை கூட 'இல்லை'ன்னு பத்து லாங்குவேஜ்ல சொல்லும்டா.. என்னடா பர்த்துட்டிடுருக்க...சண்முகம் வண்டிய வூட்டுப் பக்கம் திருப்புலான்னு" விஜயக்குமார் மாதிரி டயலாக்வுட்டு சமாளிச்சு வீட்டுக்குப் போய் பார்த்தா கடுகைத் தவிர இன்னும் இரண்டு மூன்று முக்கியமான பைகளையும் வைத்துவிட்டு வந்திருந்தது தெரிந்தது.

எல்லாத்தையும் அள்ளிப் போட்டுக்கொண்டு திரும்ப பயணத்தை ஆரம்பித்தோம். இரண்டு மணி நேரம் கழித்து வழியிலிருந்த சர்வீஸ் ஸ்டேஷனில் நிப்பாட்டும் போது "தயிரை பிரிஜிட்லிருந்து எடுத்து வெளியே வைச்சிருக்கேன் கிளம்பறதுக்கு முன்னாடி நியாபகப் படுத்துங்க"ன்னு தங்கமணி நியாபகப் படுத்தச் சொன்னது நியாபகத்துக்கு வர "மண்டைன்னா மயிரில்லாம இருக்காது சாப்பாடுன்னா தயிரில்லாம இருக்காது"ன்னு மீண்டும் விஜய்குமார் டயலாக் விட்டால் வேல்ஸை வீட்டிலிருந்து பைனாகுலர் வழியாத்தான் பார்க்கவேண்டும் என்பதால் ராஜ்கிரண் மாதிரி ஃபீலிங்கா "ஏன்யா நாமென்ன பொறக்கும் போதேவா தயிரோட பொறந்தோம்..ஒவ்வொரு ஊரு தயிருக்கும் ஒரு மணம் இருக்கும் ஒரு குணம் இருக்கும் ஒரு ருசியிருக்கும், அந்தந்த மண்ணோட வாசத்த போய் பழகித் தான் தெரிஞ்சிக்கிருவோமே"ன்னு தயிரிருந்த திசைக்கு கும்பிடு போட்டுவிட்டு பயணத்தை தொடந்தோம்.

"வெள்ளைக்காரனும் தான் ஹாலிடே போறான். முந்தின நாள் மத்தியானம் போட்ட பணியனைக் கூட மாத்தாம ஒரு செருப்பைப் போட்டுக்கொண்டு காரை எடுக்கிறான்...போற வழியில ஒரு ஃபிகர பிக்கப் பண்றான், போனமா ஜாலியா இருந்தமான்னு சூப்பரா ரிலாக்ஸாகி வந்திடறான்...நாமும் போறோமே...போற இடத்துல நூறு பேருக்கு சமைச்சு அன்னதானம் கொடுக்கப் போற மாதிரி கடுகு, மஞ்சப் பொடி, தயிரு...சே..." என் புலம்பலை தங்கமணி கண்டுக்கவே இல்லை. "இந்தப் புலம்பலை எல்லாம் உங்க ப்ளாகோட வைச்சுக்கோங்க..."ன்னு புத்திமதி சொல்லிவிட்டு தெம்பாக தூங்கிவிட்டார்.

சேட்நாவ் புண்யத்தில் பயணம் எந்த குழப்பமோ, சண்டையோ இல்லாமல் சப்பென்றிருந்ததால் குழந்தைகளும் போரடித்து நன்றாகத் தூங்கிவிட்டார்கள். ஐந்தரை மணி நேரத்துக்கப்புறம் வேல்ஸ் எல்லையை தாண்டி உள்ளே போகும் போது வேல்ஸின் அழகு மனதைக் கொள்ளை கொண்டது. மலையில் அடர்ந்த காட்டுக்கு நடுவே காட்டாறைப் பார்த்துக் கொண்டே காரை ஓட்டுவது மிக ரம்யமாக இருந்தது. என்னைத் தவிர எல்லாரும் தூங்கி எழுந்து தெளிவாக இருந்தார்கள்.

தங்கப் போகும் இடத்தை பார்த்ததும் மனம் குதூகலித்தது. அடர்ந்த மரங்களுக்கு நடுவே மிக அழகான மரவீடு. இறங்கி கொண்டு வந்த சாமான்களை எடுத்து வைக்கவே ஒரு மணி நேரம் பிடித்தது. அடுத்த நாள் பீச் பீச்சாக சுத்தினோம். இதற்கு முன் ஏப்பிரலில் நண்பர்களோடு ஐல் ஆஃப் வொய்ட் போயிருந்தோம். வாழ்நாளில் மறக்க முடியாத இனிமையான பயணம் அது. மிக மிக குதூகலமாக காலேஜ் வாழ்கை மாதிரி ஜாலியாக இருந்த பயணம். எனக்கு ஒரு நீண்ட நாளைய ஆசை ஒன்று உண்டு. "தீப் பிடிக்க தீப் பிடிக்க" பாட்டில் ஆர்யா போட்டுக் கொண்டு வருவது மாதிரியான முண்டா பனியனைப் போட்டுக்கொண்டு பீச் ஓரத்தில் மணலில் ஜாக்கி ஷெராஃப் மாதிரி ஓடி வரவேண்டும் அதை படமாக்கிக் கொள்ளவேண்டும் என்று. தங்கமணியிடம் எப்படி கேமிரா ஆங்கிள் முதற்கொண்டு எல்லாத்தையும் விளக்கு விளக்கு என்று முன்பே விளக்கியிருந்தேன். கிடைத்த சந்தர்பத்தை கோட்டை விடாமல் காறித் துப்பிவிட்டு ஒருவழியாக சம்மதித்திருந்தார். பீச்சுக்கு போன பிறகு லொக்கேஷன் ஃபைனலைஸ் பண்ணிவிட்டு அம்மணியைத் தேடினால் காணோம். தனது தோழியோடு ஜாலியா செல் போனை வேறு ஆஃப் செய்துவிட்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். பீச்சில் ஒரு நீளமான குட்டைச் சுவர் இருந்தது. நான் அதற்க்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறேன் நீ லாங் ஷாட்டில் ரெடி சொன்னவுடன் குட்டைச் சுவற்றில் ஏறி குதித்து ஹீரோ மாதிரி ஓடி வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். நன்றாகத் தலையை ஆட்டிவிட்டு அரட்டைக் கச்சேரியில் மூழ்கி விட்டார்.

இது தெரியாமல் நான் குட்டைச் சுவருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு இப்போ ரெடி சொல்வார் அப்போ ரெடி சொல்வார் என்று பார்த்தால்...வழியக் காணும். இதற்குள் நண்பர்கள் என்ற பெயரில் கூட வந்த வானரக் கூட்டம் எடுத்த படம் தான் கீழே.(க்ளிக்கியவரும் பிரபல ப்ளாகர் தான்)

ரங்கீலா ஜாக்கி ஷெராஃப் மாதிரி ஓடி வரணும்ன்னு இருதவன இப்படி அவசரத்துக்கு ஓரமா ஒதுங்கினவன ஆக்கிட்டீங்களடான்னு அன்னிக்குப் பூராவும் எனக்கு வயத்தெரிச்சல் தாங்கவில்லை.

Sunday, September 09, 2007

ஹாலிடே

நானெல்லாம் ஸ்கூல் படிக்கும் போது லீவுவிட்டா ஊரிலிருக்கும் காத்தாடுகிற கிருஷ்ணா தியேட்டரில் எங்க தாத்தா பார்த்து ஜொள்ளுவிட்ட அஞ்சலி தேவி படம் போடுவான் (மூதேவி ஹாஃப் இயர்லி எக்ஸாம் போதுதான் புத்தம் புதிய ரிலீஸ்லாம் போடுவான்). அதுக்கு கெஞ்சிக் கூத்தாடி பிரெண்ட்ஸோடு போறோம்ன்னு சொல்லி ரெண்டு பேர் போவோம். அதுக்கு கூட புது ட்ராயர்லாம் போட்டுக்கொள்ள முடியாது. நாங்கள் வழக்கமாக போகிற சிமிண்ட் பென்ச் டிக்கெட்டில் தேய்த்து தேய்த்து ட்ராயர் கிழிந்துவிடும் என்று மாமி ஆட்சேபிப்பார் என்பதால் குலேபகாவல்லி டிராயர் மட்டும் தான் அனுமதி. அது டிராயரா பாவாடையா என்று பார்ப்பவர் சந்தேகம் தீருமுன் கூட்டமில்லாத பெண்கள் வரிசையையில் புகுந்து டிக்கெட் வாங்கி, முதல் வரிசையில் முன்னாடி சாய்ந்து கொள்ள வச்சதியாக திண்டு இருக்கும் இடமாக பார்த்து இடம் பிடித்துவிடுவோம். இருபத்தைந்து பைசாவுக்கு ஒரு நீளமான மைசூர்பாகு கிடைக்கும் அதை வாங்கி, எழுத்து போடும் போது உறிஞ்ச ஆரம்பித்தோமானால் அஞ்சலி தேவி இரண்டாவது டேன்ஸ் பாட்டு ஆரம்பித்து முடிப்பதற்க்குள் காணாமல் போயிருக்கும். அதற்கப்புறம் ஜெயம் குண்டு சாம்பார் பருப்பு போட்டு மூனு வேளையும் கட்டு கட்டும் ஜெயமாலினி கையில் திராட்சைப் பழ கொத்தை வைத்துக் கொண்டு ஜிகுஜிகு வென்று பெல்லி டான்ஸ் ஆடும் போது முகத்தை மூடிக் கொண்டு விரலிடுக்கில் கேப் விட்டு பாட்டுமுடிந்துவிட்டதா என்று பார்த்து, அப்புறம் டொய்ங் என்று பி.ஜி.எம்ல்லி அஞ்சலி தேவி அழும் போது திண்டில் சாய்ந்தால் அப்பிடி ஒரு கிறக்கத்துடன் கண்ணைச் சுழற்றும், அழுகையெல்லாம் முடிந்து ஜெமினி கணேசனுக்கு வீரம் வரும் போது "இனிமே டேன்ஸ் கிடையாதுபா வெறும் சண்டை தான் " என்று பக்கதிலிருக்கும் பெரிசு அங்காலாய்த்து எழுப்பிவிடும். இந்த சமயத்தில் கருப்பு உள்பாவாடை ஸ்லிவ்லெஸ் சோளி தாடி மந்திரவாதி, மந்திரக்கோல், பாம்பு, உம்மாச்சி என்று கதை பட்டயக் கிளப்பும். அப்பிடியே மயிற்கூச்செரியும் முடிவை பார்த்து விட்டு பத்து நாளைக்கு அந்த படத்தை பற்றி பார்க்காதவர்களிடம் பேசி அதற்க்குள் படத்தை தியேட்டரிலிருந்து தூக்கிவிட்டால் இல்லாத ரெண்டு மூன்று காட்சியை வேறு சேர்த்துக்கொண்டு இப்படியே ஹாலிடே போய்விடும்.

இங்கே மகளுக்கு ஸ்கூல் விடுமுறை விட்ட அடுத்த நாளே "வேர் ஆர் வி கோயிங்" ஆரம்பித்துவிட்டது. கலெக்க்ஷனில் இருக்கும் "மணாளனே மங்கையின் பாக்கியம்" போட்டாலே காத தூரம் ஓடுகிறாள். தங்கமணிக்கு " நான் உழைத்து உழைத்து ஓடாய் போகிறேன்" என்று கவலை வேறு. அவர்களுக்குப் பிடித்த இடமாய் எங்காவது ஹாலிடே போய் அவர்களுக்கு வேண்டியதெல்லாம் வாங்கிக் கொடுத்தால் என் மன உளைச்சலெல்லாம் சொஸ்தமாகும் என்று வேல்ஸ் போகலாம் என்று ஏகமனதாய் தீர்மாணமாகியது. ஊரிலிருந்து மாமியார் வேறு வந்திருக்கிறார்கள் என்பதால் நமக்கு கொஞ்சம் சப்போர்ட், தங்கமணி பக்கம் ஓவரால் மெஜாரிட்டி கிடையாது இருந்தாலும் நானும் வழிமொழிய ஓகே ஆனது. அடர்ந்த காட்டுக்கும் நடுவில் காட்டேஜும் புக் செய்து பிரயாண யத்தம் களை கட்ட ஆரம்பித்தது.

"நாலு நாளுக்கு தானே போறோம் இதுக்கு எதுக்கு ஆயிரெத்தெட்டு பேக்? "

"எல்லாம் ஒரு சேஃப்டிக்கு தான்"

"என்ன எல்லாத்துக்கும் சும்மா சேஃப்டிக்கு..சேஃப்டிக்குன்னு சால்ஜாப்பு"

"இதோ பாரு ஆனானாப்பட்ட சுப்பர்மேனே என்ன தான் பேண்ட்க்கு மேல ஜெட்டி போட்டாலும் அதையும் ஒரு சேஃப்டிக்கு பெல்ட் போட்டு இறுக்கிகட்டியிருப்பார்...சுப்பர்மேனுக்கே அப்பிடின்னா..நாமெல்லாம் எம்மாத்திரம்" நான் அடித்த ஜோக்குக்கு என் மாமியார் வெட்கப்பட ஆரம்பித்துவிட்டார்.

அப்புறம் ஆனானப்பட்ட சுப்பர்மேன் ஷூ போட்டுக்கொண்டு இருக்கிறார், வாட்ச் கட்டிக்கொண்டிருக்கிறார் என்று ஆளாளுக்கு அடுக்க, எடுத்துக்கொண்டு போக வேண்டிய சாமான்கள் அபாய நிலையை அடைந்தது. "இந்த லெவலில் போச்சுன்னா இதையெல்லாம் நிரப்பி வெறும் காரை மட்டும் ஹாலிடெக்கு அனுப்ப முடியும்" என்று நான் திட்டவட்டமாக சொல்லிவிட, தங்கமணி பயந்து போய் குட்டி எலுமிச்சம்பழத்தை எடுத்து வெளியில் வைத்துவிட, "அது...தலையப் பார்த்து அந்த பயமிருக்கட்டும்.." என்று அஜீத் மாதிரி சவுண்ட் விட எதுவாக இருந்தது. செல்ப் கேட்டரிங் காட்டேஜ் என்பதால் சமையல் சாமான்கள் வேறு எடுத்துப் போக முடிவு செய்திருந்தோம். நாலு நாள் மளிகை சாமான் பட்ஜெட் மாச பட்ஜெட்டை தாண்டியிருந்தது. மாமியார் சப்போர்ட் இருந்ததால் சில முக்கய மேட்டர்களில் சீனியர் மெம்பர் வீட்டோ உபயோகப்படுத்த முடிந்தது. ஆனால் அதையும் "எட்டு வருஷமா மாப்பிளைக்கு அடிச்ச ஜால்ரா போதும் ரொம்ப ஓவரா ஜிங்கிச்சா போடாதே" என்று தங்கமணி அவர் வீட்டோவையும் ஓவர் ரூல் செய்துவிட்டார்.

காலை ஆறு மணிக்கு கிளம்புவதாக ப்ளான். எடுத்துப் போகவேண்டிய சாமான் செட்டுகளையெல்லாம் அடுக்கிவைத்து கிளம்புவதற்கு ஏழு மணியாகிவிட்டது. ஆபிஸுக்கு கிளம்பிக்கொண்டிருந்த அடுத்த வீட்டுக்காரர் "என்ன சார் சொல்லாம கொள்ளாம வீட்டைக் காலிபண்றீங்கன்னு வருத்தப்பட ஆரம்பித்துவிட்டார். தெரு திரும்பியதும் வரும் வழக்கமான "வீட்டைப் பூட்டியாச்சா சந்தேகத்துக்குப் பதிலாக தங்கமணிக்கு "கடுகு எடுத்து வைச்சேனா " சந்தேகம் வந்துவிட்டது.

- நீளமாகிடுச்சு அடுத்த பதிவில் முடிக்கிறேன்

Monday, June 18, 2007

டைவேர்ஸ் வாங்கலாம் வாங்க

கல்யாணமான புதிதில் வெளிநாட்டில் கார் ஓட்டக் கற்றுக்கொண்டு, லைசன்ஸ் வாங்கி, பெண்டாட்டியை முன் சீட்டில் உட்கார வெச்சு "இந்தாம்மா ராஜாத்தி இந்த மேப்பைப் பார்த்து கொஞ்சம் வழி சொல்லும்மா கண்ணு"ன்னு சொல்லிட்டு ஓட்ட ஆரம்பித்தோம் என்றால் போற இடத்துக்கு போய் சேருவோமோ இல்லியோ பெரும்பாலும் வழியிலயே வக்கீலைப் பார்த்து டைவேர்ஸ் அப்ளிகேஷன் குடுத்தாலும் குடுத்திருவோம். அதுவும் சந்தும் பொந்துமா புகுந்து போற ரூட்டுக்கு மேப்ப பார்த்து வழி சொல்லச் சொன்னா வள்ளலார் பொண்டாட்டி கூட விதிவிலக்கு கிடையாது. போற வழி ஃபுல்லா ஒரே லவுஸ்தான் போங்க.

நான் லைசன்ஸ் வாங்கின புதுசுல நடந்த அலம்பல் கொஞ்ச நஞ்சம் கிடையாது(இப்பவும் ஒன்னும் குறைச்சல் இல்லை). ரொம்ப நாள் வரைக்கும் ரவுண்ட் அபவுட்டுக்கு பயந்தே இருக்கிற டவுண விட்டு வெளிய போகவே இல்லை. எல்லைச்சாமி காவல் கிடக்கிற மாதிரி ஒரு எல்கைக்கு உள்பட்டே கார ஓட்டுவது என்று கொள்கை வைத்திருந்தேன். இதுல ரெண்டு தெரு தள்ளி இருக்கிற கடைக்குப் போகனும்னா கூட தங்கமணி முன்னாடி சீட்டில் உட்கார்ந்து கூடை பின்ன ஆரம்பித்து விடுவார். அடப்பாவி மக்கா இதெல்லாம் உனக்கே அடுக்குமா இந்த கார மெனுபாக்ஃசர் செஞ்சவன் பார்த்தா கண்ணீர் விடுவான்மான்னு சொல்லியும் கேக்கிற மாதிரி இல்ல. என் பெண்ணுக்கு வேறு நான் போகிற ரூட்டு போரடிக்க ஆரம்பித்து விட்டது. சரி கொளுகையை கொஞ்சம் தளர்த்தி நேர் கோட்டில் நூல் பிடிச்ச மாதிரி இருக்கிற அடுத்த ஊருக்கு போயிட்டு வருவோம்ன்னு ஒரு நாள் கிளம்பி போய் அதுவும் விபரீதமாகி தொலைந்து போய் அந்த இடத்துல இருக்கிற நண்பருக்கு போன் போட்டு அவர் வந்து வழிகாட்டி "இருந்தாலும் இந்த ரூட்டுல கூட தொலைஞ்சு போறதுக்கும் ஒரு திறமை வேணும்ன்னு" என்று வழிகாட்டியதோடு குடும்பத்தில் விளக்கேற்றியும்வைத்து விட்டுப் போய்விட்டார். விளக்கு பற்றி எரிந்து ஒரே லவ்ஸாகிவ்ட்டது.

அப்புறம் சமாதானமாகி ரவுண்டபவுட்டில் ஒரு பரிகாரத்தை பண்ணி விட்டு திரும்பவும் எங்க எல்லைக்கு உள்ளயே வலம் வர ஆரம்பித்தோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தேறி எல்லா இடங்களுக்கும் சென்று வர ஆரம்பித்தோம். ஆனாலும் போகிற வழியில் ஏகப்பட்ட லவ்ஸ் கண்டிப்பாக இருக்கும். இண்டர்நெட்டில் போகவேண்டிய இடத்துக்கு ஸ்டெப் ஸ்டெப்பா வழி சொல்லும் தளங்களிலிருந்து வழியை எடுத்துக் கொண்டு போனாலும், ரெண்டு ஸ்டப்பை முழுங்கிவிட்டு முந்தின லெஃப்டிலேயே ரைட்டுக்கு வழி சொல்லும் போதும், இந்தப் பக்கம் திரும்பனும் என்று விரல் ஒரு திசையும் விரலுக்கிடுக்கில் இருக்கும் பேனா நேரெதிர் திசையிலும் வழி காட்டும் போதும், பாதி தூரம் வரைக்கும் ஸ்டான்ஸ்டட் ஏர்போர்ட் குறியீட்டைப் பார்த்து போகனும் என்று சொன்னால், எதுவரைக்கும் என்று தெரியாமல் ஸ்டேன்ஸ்டட் ஏர்போர்ட்டையே முழுவதும் பார்த்துக் கொண்டு போய் நேரே ஸ்டேன்ஸ்டட் ஏர்போர்டில் பார்க் செய்துவிட்டு, "நீ தானே சொன்ன?" என்று பழியை நைஸாக மாற்றிப் போடும் போதும், போட்டிருக்கும் ரூட்டுக்கும் போற ரூட்டுக்கும் சம்பந்தமே இல்லையே என்று வெளியாளிடம் வழி கேட்டால்...நல்லவேளை வழி கேட்ட இன்னும் அஞ்சு நிமிஷம் நேரா போய் பீச்சாங்கை பக்கம் திரும்பினா ஃபிரான்சே வந்திரும்" என்ற எகதாளத்தை கேட்டுக்கும் போதும், "போதும்டா சாமி வழி சொல்லி சொல்லி...அடுத்த ஜென்மத்துல பஸ் ட்ரைவர் பொண்டாட்டியாவோ இல்லை காருக்கு தனியா செஃப்பார்(ட்ரைவர்) வெச்சிருக்கவன் பொண்டாட்டியாவோ தான் வாக்கப்படனும்...கார்ன்னு தான் பேரு, ஏறினோமா ஜாலியா பராக்கப் பார்த்தோமா..பாட்டு கேட்டோமான்னு இருக்கா...வீட்டில தான் போறாதுன்னா இங்கயும் இந்த இழவ கட்டி அழவேண்டியிருக்கு" என்ற அங்கால்ய்ப்பைக் கேட்கும் போதும் காரைச் சொல்லுகிறாளா இல்லை நம்மைத் தானா என்பது விளங்காவிட்டாலும் விவேகானந்தர் ஏன் கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லை என்பது விளங்கியது.

இல்ல எங்களுக்கு இந்தப் பிரச்சனையெல்லாம் இல்லை...நாங்க இப்போ சேட்நேவ் வாங்கிட்டோம்ன்னு சொன்னீங்கன்னா அடுத்த பரீட்சை ஜோடிப் பொருத்தம் போட்டியில் தான். இங்கயும் டைவேர்ஸ் எக்ஸ்பிரெஸ் சர்வீஸ் தான். கல்யாணமான புதிதில் கசகசவென்று எப்பவும் வியர்த்து கொட்டுகிற சென்னையின் கொதிக்கிற வெய்யில் கூட ஏஸி போட்ட தேவலோகமாக தெரிந்த பெரியவர்கள் சொன்ன முப்பது நாள் கெடுவில் இருந்த காலத்தில், ஆபிஸில் ப்ளாகெல்லாம் இல்லாத நேரத்தில் நாங்களெல்லாம் உழைத்து ஏதோ லாபம் பார்த்துவிட்டார்கள் என்று ஒரு நாள் கொண்டாட்டம் ஏற்பாடாகியிருந்தது. கொண்டாட்டம்ன்னா பாட்டு பாடினோமா ஆட்டம் ஆடினோமா, கண்டபடி தின்னோமா கக்கூசுக்குப் போனோமான்னு இல்லாம போட்டி வைக்கிறேன்னு ஜொடி பொருத்தம் வேற வைச்சுட்டாங்க.

நான் ஆபிஸில் வழக்கமாக கடலை போடும் பெண்களெல்லாம் இதை விட்டா சான்ஸ் கிடைக்காது என்று எங்கள் பெயரை கொடுத்து மொத்தமாக பழிவாங்கிவிட்டார்கள். இதில் கொடுமை என்னவென்றால் ஆபிஸில் காதலித்துக் கொண்டிருந்தவர்களும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டார்கள். காதலிக்கும் வேகமென்ன கல்யாணமான சோகம் என்ன..இரண்டும் போட்டி போடமுடியுமா? போட்டி நடத்தினவர்கள் முதல் ரவுண்டில் டெஸ்ட் எழுதச் சொல்லிவிட்டார்கள். கேள்விகளை பார்த்த உடனேயே நம்ம லட்சணம் தெரிந்துவிட்டது. பெண்டாட்டியின் பிறந்தநாளை கேட்டாலே பாத்ரூமில் தாள்பாழ் போட்டுக்கொண்டு பத்து நிமிஷம் யோசிக்கனும் இந்த லட்சணத்தில் மாமியாரின் பிறந்தநாளைக் கேட்டிருந்தார்கள். என்னம்மோ தெரிந்து மறந்த மாதிரி ரொம்ப யோசித்ததில் பத்தாவது பரீட்சையில் நியாபகத்துக்கு வராத இந்திய நேஷனல் காங்கிரஸ் ஆரம்பித்த தேதி முதற்கொண்டு புலப்பட்டதே தவிர இதற்கெல்லாம் வழியே தெரியவில்லை. அடுத்து மாமனார் மாமியாரின் கல்யாண நாள் கேட்டிருந்தார்கள். சரிதான்..இதெல்லாம் ஒரு மார்க்கமாய் போகிறது..நமக்கு ஆவுறதுக்கில்லை என்று எனக்கு தெரிந்து விட்டது. சரி வழக்கம் போல நம்ம திறமைய காட்ட வேண்டியதுதான்னு பக்கத்துல உட்கார்ந்திருந்தவனப் பார்த்து பிட் அடித்துவிட்டேன்.

காதல் பண்ணிக்கொண்டிருந்த ஜோடியைத் தவிர என்னை மாதிரி கல்யாணமான கபோதிகள் எல்லாரும் திரு திரு தான். போட்டி நடத்துபவர்கள் இந்த சங்கடங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் "டைம் அவுட்" சொல்ல, அதான் கல்யாணமான அன்னிக்கே தெரியுமேன்னு பேப்பரை கொடுத்துவிட்டேன்.போட்டி நடத்தினவர்கள் ஏதோ பொழச்சு போகட்டும்ன்னு விடாமல் எல்லார் விடைகளையும் மைக்கில் கப்பலேத்த ஆரம்பித்துவிட்டார்கள். நல்லவேளை தங்கமணியும் என்னை மாதிரி சுதந்திர தின தேதிகளை போட்டிருந்ததால் தப்பித்தேன். ஆனால் அடுத்த ரவுண்டில் தங்கமணிக்கு பிடித்த கலரென்ன...தங்கமணியிடம் எத்தனை ஜோடி செருப்பு இருக்குன்னுலாம் ரொம்ப டெக்னிக்கலாய்ப் போய்விட்டார்கள். செருப்பு ஜோடி பிரச்ச்னையில் மேடையிலேயே "அடி செருப்பால" ரெண்டு மூனு ஜோடி தகராறு ஆரம்பித்துவிட்டது. அடேய் எங்கப்பா!! இந்த மாதிரி போட்டியில முக்கியமான இடத்துல தப்பு விட்டோம்ன்னா பெண்டாட்டிகள் அப்பிடியே சிரித்துக்கொண்டு கண்ணால் ஒரு பார்வை பார்ப்பார்கள் பாருங்கள், பிரகாஷ் ராஜெல்லாம் பிச்சைவாங்கணும்.

இங்கே லண்டனிலும் போன பொங்கல் பார்ட்டியில் இந்த மாதிரி ஒரு போட்டியை தோழி உமா அண்ட் தீபா நடத்தினார்கள். ஜாலியாக இருந்தது(உஷாராக அவர்கள் இரண்டு பேரும் கல்ந்து கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்). முதல் இரண்டு ரவுண்டுகள் சேர்ந்து பலூன் ஊதுவது, பொட்டு வைப்பது என்று ஈஸியாக இருந்தது. அதெல்லாம் இடது கையாலயே அசால்ட்டா செய்வோம்ல. டாப் ஐந்தில் தேறி ஒரு வேளை நமக்கும் ஜோடிப் பொருத்தம் இருக்கிறதோ என்று எங்களுக்கே சந்தேகம் வந்துவிட்டது. அடுத்த ரவுண்டில் மனைவி கணவனுக்கு டையும், கணவன் மனைவிக்கு புடவையும் கட்டி விட வேண்டிய சேலஞ்சிங்கான ரவுண்ட். (புடவை - ஏற்கனவே அணிந்திருக்கும் ஆடைக்கு மேல் தான்யா). புடவை கட்டத் தெரியுமென்றாலும் அனுபவம் ப்ளீட் வைப்பது வரை தான் என்பதால் புட்டுக்கிச்சு. நல்ல வேளை தப்பித்தோம் அடுத்த ரவுண்டில் உங்கள் மனைவியை நீங்கள் முதன் முதலாக சந்தித்த போது என்ன கலர் நெயில் பாலீஷ் போட்டுக்கொண்டிருந்தார் போன்ற ஆப்பு வைக்கும் கேள்விகள் கேட்டு பெண்ட் நிமிர்த்திவிட்டார்கள். ஏற்கனவே இன்னமும் வீட்டில் அதெப்படி "சலங்கை ஒலி" ஜெயப்பிரதா புடவை கலர் மட்டும் நியாபகம் இருக்கும்? ஆனா நீங்க வாங்கிக் கொடுத்த தலை தீபாவளி புடவைக் கலர் மட்டும் மறந்து போகும்?"ன்னு ட்ரில் வாங்கிக் கொண்டிருக்கிறது. நமக்கெல்லாம் விட்டுலயே டெய்லி ஜோடிப் பொருத்தம் டெஸ்ட் தான்.

பி.கு - வருத்தப்படாத வாலிபர் சங்கம், கவலைப் படாத காரிகையர் சங்கம், பயமறியா பாவையர் சங்கம்ன்னு எல்லோருக்கும் சங்கம் இருக்கு. ஹூம் நானும் "கல்யாணமான கபோதிகள் சங்கம்"ன்னு ஒன்னு ஆரம்பிக்கலாமான்னு யோசிக்கிறேன். என்ன சொல்றீங்க?

Tuesday, May 08, 2007

சொல்ல மறந்த கதை

பிரேமலதாவின் இந்தப் பதிவைப் பார்த்ததும் வழக்கம் போல் டார்ட்டாய்ஸ் சுத்தல் தான். நான் நல்லா படிச்சு பர்ஸ்ட் ரேங்க் எடுக்கனும்னா ட்ராவெல்லாம் வைத்த ஒரு கோத்ரேஜ் டேபிளெல்லாம் வாங்கித் தரவேண்டும் என்று மாமாவிடம் ரொம்ப நாளாக வேண்டுதல் இருந்தது. ஊரில் ஒரே ஒரு கடையில் தான் அந்த மாதிரி டேபிளெல்லாம் வைத்திருந்தார்கள். மாமியுடன் கடை தெருவுக்கு போகும் போதெல்லாம் அந்தக் கடைக்குப் போய் ஆசையாய் ட்ராவெல்லாம் திறந்து பார்த்துவிட்டு விலை கேட்டுவிட்டு வருவேன். கடைக்காரரும்.."என்னிக்கு வேணா வாப்பா...இதே விலை தான் உனக்கு..விலைய ஏத்தவே மாட்டேன்" என்று சிரித்துக் கொண்டே சொல்லுவார். நான் அரிப்பது போறாது என்று மாமியும் கூட சேர்ந்து அரித்ததில் மாமா அரிப்பு தாங்காமல் ஒரு வழியாக வாங்கிக் கொடுத்துவிட்டார்.

அதை மாடிப் படிக்கு கீழே வைத்து அப்பா வீட்டிலிருந்து ஒரு பழைய டேபிள் லாம்ப் லவுட்டிக் கொண்டு வந்து, மணிரத்னம் பட எபஃக்ட்டில் வைத்து படித்துக் கிழிக்கிற மாதிரி டேபிள் ஃபேன் எல்லாம் செட் செய்து வைத்தேன். ஐய்யோ பாவம் மாமாவும் பையன் இனிமே படித்து பர்ஸ்ட் ராங்க் வாங்கிவிடுவான் என்று நம்பினார். அது என்னம்மோ தெரியவில்லை மணிரத்னம் எப்ஃக்ட்டில் லைட்டை வைத்ததாலோ தெரியவில்லை டேபிளில் உட்கார்ந்தாலே ஃபேன் போடாமலே நல்ல தூக்கம் வரும். சததம் வரவில்லை என்றால் மாமியும் அடுத்த ரூமிலிருந்து "கோந்தே படிக்கிறியா" என்று குரல் குடுப்பார். "ம்ம் நோட்ஸ் எழுதிண்டு இருக்கேன்" என்று கூசாமல் கதை விடுவேன். நானும் டேபிள் லாம்ப் மாதிரி மணடையை கவுத்தி பதினோரு மணி வரை அங்கு தூங்கிவிட்டு அப்புறம் படுக்கைக்கு வந்து தூக்கத்தை கண்டினியூ செய்வேன். சில சமயம் மாமியே நான் மண்டைய கவுத்தி படிப்பதை பார்த்துவிட்டால் "சரி போய் படுக்கை விரிச்சு படுத்துக்கோ நாளைக்கு எழுந்து படிக்கலாம்" என்று சொல்லிவிடுவார்.

இப்படி படிச்சு பர்ஸ்ட் ரேங்க் எடுக்க வாங்கிய டேபிள் அதைத் தவிர எனக்கு பலவிதத்திலும் உபயோகப் பட்டது. குறைச்சு மார்க் வாங்கிய டெஸ்ட் பேப்பர், கதை புஸ்தகங்கள் இவற்றையெல்லாம் ஒளித்து வைத்தால் நான் மட்டும் தான் கண்டு பிடிக்க முடியும். ஸ்கூலில் நான் பிறந்த அதே தேதியில் பிறந்த குரங்கு ஒன்று என் கூட படித்துவந்தது. ஒரு நாள் பொழுது போகாத டீச்சர் ஒருவர் எல்லோரையும் பிறந்த நாள் பிரகாரம் வரிசையாக உட்காரவைத்துவிட்டதால் அந்த குரங்கும் நானும் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து ராசியாகிவிட்டோம். அப்புறம் எல்லாக் க்ளாசிலும் சேர்ந்தே உட்கார ஆரம்பித்தோம்.

இந்தக் குரங்கு தான் பின்னாளில் "டேய் அவ அடிக்கடி உன்ன பார்க்கிறாடா"ன்னு என்னை ஏத்திவிட்டு வடை வாங்கிக் கொடுத்து ஒரு ஃபிகர் பின்னாடி அலைய விட்டது. ஹிஸ்டரி க்ளாசில் வாத்தியார் பானிபட் யுத்ததில் பாபர் எப்படி ஜெயித்தார் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது "பாபர் கிடக்கான் மூதேவி...இப்படி சண்டை போட்டு போட்டே மண்ணோடு மண்ணாப் போய்..பொதைச்ச இடத்துல புல் முளைச்சு மரமாயிடிச்சி...நீ சாயங்காலம் வடை வாங்குறதுக்கு காசு எப்படி தேத்தலாம்னு யோசிச்சியா?"ன்னு நம்ம கடமையுணர்ச்சியை அடிக்கடி தூண்டுவார். நானும் அன்றாட நிகழ்வுகளை இந்தக் குரங்கிடம் தான் பகிர்ந்துகொள்வேன்.இதுல நான் ரூட்டு விட்டுக்கொண்டிருந்த பொண்ணு வேறு எனக்கு ஒரு வருடம் சீனியர் (என்ன பண்றது இதெல்லாம் நாபிக் கமலத்துலேர்ந்து அப்பிடியே வரது தானே)
நம்ம ஐடியா அய்யாச்சாமி..."டேய் அந்தப் பொண்ணு கிட்ட போய் மேத்ஸ் புஸ்தகம் கடன் கேளுடா...கேட்டா இப்பவே அடுத்த வருஷ சிலபஸ் படிக்கிறேன்னு சொல்லிடு"ன்னு அடிக்கடி ஐடியா கொடுப்பார். எங்க...எனக்கு நான் படிக்கிற சிலபஸுக்கும் அடுத்த வருஷ சிலபஸுக்கும் யாராவது சொன்னாத்தான் வித்தியாசமே தெரியும் - படிப்புல அவ்வளவு சூரப்புலி. இருந்தாலும் குரங்கு சொன்னதே என்பதற்காக போய் புஸ்தகத்தை வேறு கேட்டுவைத்தேன். அந்தப் பொண்ணுக்கும் நம்ம மேல ஒரு இது (என்று நான் நம்பியதால்) என்பதால் கொடுத்து உதவினாள். இதில் அந்தக் க்ளாசில் இருப்பவர்களுக்கு ஏகத்துக்கும் குறை.

"டேய் வடையேழு வள்ளல்...நீ எங்க சிலபஸ ரொம்ப படிக்கிறியாமே...முதல்ல உன் புஸ்தகத்த ஒழுங்கா படிடா அப்போதான் பாஸ் பண்ணி அடுத்தவருஷம் இத படிக்கமுடியும்"ன்னு அடிக்கடி மிரட்டுவார்கள்.

"சரிங்க ஆபிஸர்ஸ்"ன்னு நானும் ஒரு கும்பிட போட்டுட்டு என்பாட்டுக்கு வடை வாங்கிக் கொடுத்துக்கொண்டிருப்பேன். இந்தக் குரங்கு கொடுத்த ஐடியா மூலமாக அந்தப் பொண்ணு கூட மேத்ஸ் புஸ்தக கொடுக்கல் வாங்கல் நடந்துவந்தது. ஒருநாள் பி.டி பீரியட் முடிந்து வரும் போது இந்தப் பெண் "உன் இடத்தில் புஸ்தகத்தை வைத்கிருக்கிறேன் எடுத்துக்கோ" என்று சொல்லிப்போனது. அந்த மாதிரி கொடுப்பது அது தான் முதல் முறை. ஆஹா வாங்கிக் கொடுத்த வடைக்கு இம்புட்டு விசுவாசமா இருக்காளே பயபுள்ளன்னு...யாரும் பார்ப்பதற்கு முன்னால் புஸ்தகத்தை உள்ளே எடுத்து வைத்துக்கொண்டுவிட்டேன்.

ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்து படிக்கிற மாதிரி நடிக்கிறதுக்கு அவளோடு மேத்ஸ் புஸ்தகத்தை எடுத்து திறந்தால் ஒரு அழகான பர்த்டே கார்டு. நமக்கு எந்த கிறுக்குப் பயலும் பர்த்டே கார்டு அனுப்பமாட்டானே என்று தெனவெட்டாய் பார்த்தால்...எனக்கே தான். என் பெயர் போட்டு அடியில் வித் லாட்ஸ் ஆஃப் லவ்ன்னு இந்தப் பெண்ணோட கையெழுத்து. இந்தப் பெண்ணின் கையெழுத்து எனக்கு அத்துப்படி என்பதால் எனக்குத் தலையை சுத்த ஆரம்பித்தது. என்னால் நம்பவே முடியவில்லை கையெழுத்து தெரியுமாதலால் நம்பாமலும் இருக்கமுடியவில்லை. அடுத்த நாள் என்னோட பிறந்தநாள் வேறு.

அடுத்த நாள் ஸ்கூலுக்குப் போய் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அந்தப் பெண்ணை பார்ப்பதற்கே பயமாய் இருந்தது, அன்றைக்கு வடை வழங்கும் விழாவையும் கேன்சல் செய்துவிட்டேன். கூட வந்த நம்ம குரங்குக்கு ஒரே சந்தேகம். குடை குடைன்னு குடைந்தெடுத்து விட்டது. எனக்கும் சொல்லி அழ வேறு எந்தக் குரங்குமில்லாததால் அவனிடம் எல்லாத்தையும் கொட்டித் தீர்த்து கார்டையும் காட்டினேன். ராஜ் டீவியில் வரும் ஸ்கலித பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் டாக்டர் மாதிரி கொஞ்ச நேரம் யோசித்து விட்டு "இத கொஞ்சம் கேர்புல்லா ஹேன்டில் பண்ணு, நேர போய் கேட்டு மாட்டிக்காத...இரு நானும் இதப் பத்தி கொஞ்சம் டீட்டெய்ல்ஸ் கலெக்ட் பண்றேன்"ன்னு நாட்டாமை தீர்ப்பை தள்ளி போட்டுவிட்டார்.

அடுத்த நாள் அங்க இங்க பிச்சையெடுத்து அந்தப் பெண்ணின் கையெழுத்தை சரிபார்ப்பதற்கு கொஞ்சம் தேத்தி வந்தான். ரிசர்வ் வங்கியில் கூட அப்பிடி சோதனை செய்திருக்க மாட்டார்கள் அப்படி கையெழுத்தை நோண்டி நொங்கெடுத்தோம். எல்லாம் ரொம்ப கரெக்டாக இருந்தது. சந்தேகமே இல்லைடா அவளே தான்னு தீர்ப்பாகியது. எனக்கு அதுக்கப்புறம் ஒரே உதறல்.

மாமா வேற படிப்பு தான் முக்கியம்ன்னு பெப்ஸி உமா மாதிரி அடிக்கடி அட்வைஸ் பண்ணுவாரே இதெல்லாம் நமக்குத் தேவையா...பத்தாம் க்ளாஸ் படிசதுக்கெல்லாம் எவனாவது வேலை குடுப்பானா...வடை வாங்கிக் கொடுத்த காசுக்கு ஒரு கிரைண்டரே வாங்கியிருக்கலாமேன்னு நான் புலம்பிக் கொண்டிருந்த போது இந்த குரங்கு முதேவி அந்தப் பொண்ணு என்னைத் தேடிக் கொண்டிருந்தாக சேதி கொண்டுவந்தது.

ஆஞ்சனேயா இந்தப் பிரச்சனைலேர்ந்து எப்படியாவது காப்பாத்துப்பா உனக்கு வடமாலை சாத்றேன்னு வேண்டிக்கொண்டு ஆஞ்சனேயர் மேல வடையப் போட்டுட்டு ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டேன். டேபிள் லாம்ப்பை போட்டுக்கொண்டு யோசித்ததில் வேற வழியே இல்லை அந்தப் பெண்ணிடம் நேர போய் பேசிவிடுவது தான் சரி..என்று முடிவு செய்தேன். அடுத்த நாள் குரங்கிடம் இந்த முடிவைச் சொல்லிக் கொண்டிருந்தபோது அவள் என்னை நோக்கி வந்தாள். கூட குரங்கை கழட்டிவிட்டு மேதுவாக பேச்சை ஆரம்பித்தேன். அவளுக்கு க்ளாசில் டெஸ்ட் வைத்திருக்கிறார்கள் என்று அவளும் பேச்சை ஆரம்பித்தாள். ஏன் உன்னை நேற்று காணவில்லை என்று கேட்ட போது ..சரி இனிமேல் உடைத்துவிட வேண்டியது தான் என்று முடிவு செய்து பேச்சை ஆரம்பித்தேன்.

"...இல்ல...உன்கூட கொஞ்சம் தனியா பேச வேண்டும். இன்னிக்கு தொண்டைல ஜுரம்...நாளை பேசுகிறேன்"ன்னு சொல்லி வாய்தா வாங்கிட்டேன். அவளும் ஜோதிகா மாதிரி ஒரே நேரத்தில் ரெண்டு மூனு ரியாக்ஷன் காட்டிவிட்டு போய்விட்டாள்.

அடுத்த நாள் வழக்கம் போல் குரங்காலோசனை நடத்தினால் குரங்கு சினிமால வர்ற பெருசு மாதிரி எதுக்கும் நல்ல யோசனை பண்ணிக்கோ....பிரின்சிபாலிடம் போட்டுக் குடுத்துடுவா...அப்புறம் சொல்லலையேன்னு சொல்லாத ...நாள் பாரு நட்சத்திரம் பாருன்னு என் கதையை மெகா சீரியலாக்கப் பார்த்தது. நான் வேற அதுக்குள்ள் தனியா பேசனும்ன்னு சிக்கலாக்கிவிட்டிருந்தேன். பேச்சு வளர்ந்து பொறி தட்டி கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு அவன் மேல சந்தேகம் திரும்ப ஆரம்பித்தது. கடைசியில் நான் என்னம்மோ பிரின்சிபாலை லவ்ஸ் விடுவது மாதிரி "அப்பிடின்னா இந்த லெட்டரை பேசாம பிரின்சிபாலிடமே கொடுத்திடறேன்னு" பூச்சாண்டி காட்ட...குரங்கு ஒருவழியாக உண்மையை ஒத்துக்கொண்டது. என் பெயர் மாதிரியே ஆரம்பிக்கும் அவளுடைய தோழிக்கு அவள் குடுத்த பர்த்டே கார்டை லவட்டிக் கொண்டு வந்து டகால்ட்டி வேலை காட்டி என்னை சும்மா ஏத்திவிடலாமென்று நினைத்திருக்கிறான். விஷயம் தெரிந்ததற்கப்புறம் எனக்கு உண்மையைச் சொல்லவேண்டுமானால் நிம்மதியாயிருந்தது. எங்கே அவ பாட்டுக்கு நம்ம பெர்சனாலிட்டியப் பார்த்து மயங்கி லெட்டரக் குடுத்து அப்புறம் நாம கமிட்டாகி, அப்புறம் அவளுக்கும் பர்ஸ்ட் ரேங்க் எடுக்க டேபிள் வாஙக மாமாவை அரிக்க வேண்டியிருக்குமேன்னு யோசித்து பயந்து போயிருந்தேன். அத்தோடு அந்தப் பெண் வேறு கொஞ்சம் பூசின மாதிரி இருக்கும். ஓமகுச்சி மாதிரி என் உடம்பை வைத்துக் கொண்டு அதை சைக்கிளில் பின்னாடி வைத்து ஸ்கூலுக்கு மிதிப்பதெல்லாம் நடவாத காரியம். நல்லவேளை அப்படி எதுவும் நடக்க வில்லை. அப்புறம் அந்த கார்டை வைத்துக் கொண்டு ரெண்டு நாளைக்கு டேபிளில் யோசித்துக் கொண்டிருந்தேன். மூன்றாவது நாளிலிருந்து மண்டையைக் கவுத்தி வழக்கம் போல படிக்க அரம்பித்துவிட்டேன்.

அந்த கார்ட்டு இன்னமும் என் டேபிள் ட்ராவில் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படியாக முதல் லவ்ஸ் ட்ராஜடியில் முடிந்தது. அப்புறமும் தேமேன்னு இராமல் இரண்டாவதாக ஒரு பெண் பின்னால் போய் லவ்ஸ் விட்டு அது இதை விட பெரிய ட்ராஜ்டியில் முடிந்து கல்யாணமாகி ரெண்டு குழந்தைகளும் ஆயாச்சு.. ஹூம்....

பி.கு. - தலைப்பு உங்களுக்கு இல்லை ஹி ஹீ தங்கமணிக்கு..(இன்னிக்கு இருக்கு எனக்கு)

Tuesday, March 27, 2007

டிஷ்வாஷர்

"பாத்திரங்கள் பளபளக்க கண்ணாடி பீங்கானும் மினுமினுக்க ஏ1 க்ளீனிங் பவுடர்" என்று மழைக் காலத்தில் ச்சூச்சாவை அடக்கி வைத்துக்கொண்டு டாய்லெட்டுக்கு ஓடுகிற அவசர கதியில் ரேடியோவில் ஒரு மாமாவும் மாமியும் பாட்டு பாடுவார்கள். இது தான் எனக்கு நியாபகம் இருக்கும் முதல் பாத்திரம் கழுவும் பவுடர் விளம்பரம். அப்புறம் டீ.வி. வந்ததற்கு அப்புறம் இந்தப் பக்கம் ஒரு அம்மணி நான் பால்கோவா கிண்டுகிறேன் என்று தீய்ச்ச சட்டி மாதிரி ஒன்றை வைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருப்பார். அந்தப் பக்கம் இன்னொரு அம்மணி புத்தம் புதிய தட்டை சோப்பு நுரையில் நிறைத்து அதை லேசாக தடவிக் கொடுத்து தண்ணீரில் காட்டி நோகாமல் நொங்கெடுத்துக் கொண்டிருப்பார். பின்னணிக் குரலில் ஒரு கெய்தான் அங்கிள் நீங்களும் இத மாதிரி ஒரு புதுப் பாத்திரத்தை வாங்கி இந்த ப்ராண்ட் வாஷிங் பவுடரை உபயோகித்தால் இதே மாதிரி பளபளவென்று வரும் என்று பீலாவுட்டுக் கொண்டிருப்பார்.

இதுக்கெல்லாம் எங்க தெரு மாமிகள் அசந்ததே கிடையாது. எனக்குத் தெரிந்து சமீப காலம் வரை ரயில் மார்க் புண்ணாக்கு பொடியில், கோலிக்காய் சைஸ் புளி உருண்டையை போட்டு தேங்காய் சவுரியை வைத்து காட்டுகிற காட்டில் தான் பாத்திரங்கள் பளபளத்திருக்கின்றன. தெருவில் முக்கால் வாசி வீட்டில் இதே டெக்னிக் தான். இருந்தாலும் பாத்திர பளபளப்பு முக்கியமான விஷயம். நாளும் கிழமையுமாய் ஏதாவது திண்பண்டங்கள் கொடுக்கல் வாங்கல் இருக்குமாகையால் இது பெரிய மானப் பிரச்சனை. லேசாக டல்லடித்தால்..."ஏண்டியம்மா...பாத்திரம்னா பாரு பாருன்னு முகம் பார்க்கிற மாதிரி சுண்டி இழுக்க வேண்டாமோ இப்படியா டல்லடிச்சுண்டு இருக்கும்..?" என்று தொங்கவிட்டு தோரணம் கட்டிவிடுவார்கள்.

மாமிகளின் இந்தப் போட்டி மனப்பான்மையை கரெக்ட்டாய் பிடித்து பொழப்பு நடத்தியது காஸ் மெக்கானிக் கைலாசம் ஒருவன் தான். பத்தாவது ஃபெயிலாகி மேலே படிக்காமல் கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி பாயாக இருந்தவன், கொஞ்ச நாளில் காஸ் அடுப்பை கழட்டி அழுக்கை துடைத்து ஓவராயில் செய்கிற மெக்கானிக் கைலாசமாகிவிட்டார். அடுப்பை கழட்டி மாட்டுகிறதில் கொஞ்சம் எக்ஸ்பீரயன்ஸ் போட்டுவிட்டு நமக்கு நாமே திட்டத்தில் மெக்கானிக் கைலாசம் இஞ்சினியர் கைலாசமாகி, நாங்களெல்லாம் தலையிட்டு அப்புறம் திரும்பவும் மெக்கானிக் கைலாசமானார்.

கைலாசம் காஸ் அடுப்பை கழட்டி மாட்டுகிற வேலையை வெறுமென செய்யமாட்டார். "மாமி என்ன தான் சொல்லுங்க...இந்த தெருவிலேயே உங்க வீட்டுல மட்டும் தான் எவெர்சில்வர் அடுப்பு எவர்சில்வரா பள பளன்னு இருக்கு..மத்த வீடுகள்ல்ல சொன்னாத் தான் எவர்சில்வர்ன்னு தெரியுது...மத்தபடி ஈயத்துல செஞ்சா மாதிரித்தேன் இருக்கு"ன்னு கொளுத்திப் போட்டுவிடுவார். அவ்வளவு தான் அந்த விட்டு மாமிக்கு பாத்திரம் தேய்ப்பதில் எம்.டெக் பட்டம் வாங்கியது மாதிரி அப்பிடியே அள்ளிக்கொண்டு போய்விடும்.

"கேஸ் மெக்கானிக் கைலாசமே சொல்லிட்டான்..எங்காத்துல பளபளக்கிறது மாதிரி யாராத்துலயும் இல்லையாம்" என்று கைலாசம் கொடுத்த எம்.டெக் பட்டத்துக்கு பப்ளிசிட்டி கொடுத்துவிடுவார். மற்ற மாமிகளுக்கு உடனே Peer Pressure அதிகரித்துவிடும். உடனே அடுப்பில் எண்ணைய வெண்ணைய கொட்டி கைலாசம் விசிட்டுக்கு ஏற்பாடாகிவிடும். இப்படியாக பத்தாவது ஃபெயிலான "நடமாடும் பல்கலைக்கழகம்" கேஸ் மெக்கானிக் கைலாச வள்ளல், பாத்திரம் தேய்பதில் எம்.டெக் பட்டத்தை மாமிகளுக்கு சுழல் முறையில் வழங்கி கல்லாவில் காசு பார்த்துவிடுவார்.

சென்னையில் இருந்த போது ஸ்காட்ச் ப்ரைட் என்று தேய்பதற்கு ஒரு ஸ்கரப்பர் வந்தது. வந்த புதிதில் சன் டீவியில் அவன் விடுகிற பீலாவில் வீட்டில் தங்கமணி மயங்கி "சூப்பரா இருக்காம்...இப்போ போய் வாங்கிட்டு வாங்ன்னா வாங்கிட்டு வாங்களேன்"ன்னு இதயம் நல்லெண்ணை மாதிரி விரட்டிவிட்டார். கடைக்குப் போய் விலையைக் கேட்டால் தலையைச் சுற்றியது. இந்த தொத்தல் ஸ்கரப்பருக்கு போய் எவனாவது நாற்பது ரூபாய் குடுப்பானா என்று வீட்டுக்கு வந்து வழக்கம் போல ஸ்டாக் இல்லையாம் என்று சொல்லிவிட்டேன். எவ்வளவு நாள் தான் தாக்குபிடிப்பது..."என்ன பெரிய ஸ்காட்ச் பிரைட்.பிச்சாத்து ..இதுக்கு போய் எந்த இளிச்சவாயனாவது நாற்பது ரூபாய் குடுப்பானா . எல்லாம் நாம தேய்க்கிறதுல தான் இருக்கு இங்க கொண்டா இப்படி, இப்படி கர கரன்னு தேய்ச்சா எப்படி பளபளன்னு இருக்கு பாருன்னு ஒரு டெமோ காட்ட.."ஆஹா நீங்க சொன்னது கரெக்ட்டுத் தாங்க சூப்பரா இருக்கு இதுக்கு போய் எவனாவது நாற்பது ரூபாய் குடுப்பானா அதுவும் நீங்க இருக்கும் போது... நீங்களே இனிமே டெய்லி இதே மாதிரி கர கரன்னு தேய்ச்சு பளபளன்னு ஆக்கி வைச்சிருங்க"ன்னு டெக்னிக் பேக் ஃபய்ராகி விட்டது. அப்புறம் "நீ சொன்னது கரெக்ட்டு தான்மா..இப்போ தான் இத ஸ்காட்ஸ் ப்ரைட் பத்தி பேப்பர்ல படிச்சேன் சூப்பராத்தேன் இருக்கு ...இதுல லேசுல தேயாத நைலான் பைபர் இருக்காம் பிசுக்கெல்லாம் நல்லா போகுமாம் அதுனால தான் இவ்வளவு விலையாம். நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை..நாயகன் மாமா சொல்லி இருக்கார்" என்று ஏகப்பட்ட கதை விட்டு தப்பிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

இங்கே லண்டன் வந்தும் நமக்கு நாமே திட்டம் தான் இவ்வளவு நாளாக ஓடிக் கொண்டிருந்தது. போன வருடம் கொழுக்கட்டை பண்ணுகிறேன் பேர்வழி என்று அடுப்பில் தண்ணீர் வைக்காமல் கொழுக்கட்டையை வைத்துவிட்டு இந்தப் பக்கம் வந்துவிட்டேன். நம்ம நேரம் அடுப்பில் கொழுக்கட்டை கரிக்கட்டையாகி புகைந்து அடுக்களை எல்லாம் ஒரே புகைமயமாக்கிவிட்டது. "ஓட்டப்பம் தானே வீட்டைச் சுடும்ன்னு பட்டினத்தார் சொன்னார்...கொழுக்கட்டையெல்லாம் சொல்ல்வில்லையேன்னு பட்டினத்தார் மீது பழி போட்டுப் பார்த்தேன், ம்ஹூம் வீட்டில் மீரா ஜாஸ்மின் மீதிருந்த துவேஷம் எல்லாம் அன்று என் தலையில் தான் விடிந்தது.

இப்போ விட்டில் ஏகப்பட்ட (உண்மையான) ஆணி புடுங்குவதால் டிஷ்வாஷரும் வாங்கி மாட்டிவிட்டோம். பிச்சாத்து பாத்திரம் தேய்கிறதுக்கு ஒரு மிஷின். ரயில் மார்க்க் புண்ணாக்கு பொடியெல்லாம் ஒத்துக்காதாம்..அதுக்கு கடையில போய் கேட்டால் டூ இன் ஒன், திரீ இன் ஒன்...என்று பைவ் இன் ஒன் வரை மாத்திரை விக்கிறார்கள். என்ன டூ இன் ஒன்னுன்னா பாட்டு பாடிகிட்டே பாத்திரம் தேய்க்குமான்னு அங்கதம் ட்ரை பண்ணி பார்த்தேன், "நீயெல்லாம் டிஷ்வாஷர் வாங்கிட்டியா விளங்கினாப்ப்ல தான்"னு லுக்கு தான் கிடைத்தது. இது போக சால்ட், ரின்சிங் லிக்விட்ன்னு ஆயிரெத்தெட்டு வாங்கி கடைசில பாத்திரம் தேய்கிறதுக்கு பில்லைப் பார்த்தா பிச்சை பாத்திரம் தான் மிஞ்சும் போல தெரிந்தது. ஹும் இந்த விலைக்கு பாத்திரம் தேய்கிறதுக்கு அழகா ஒரு வெள்ளக்காரிய வேலைக்குப் போட்டிருக்கலாம்.

சரி வாங்கினது தான் வாங்கியாச்சு...சட்டு புட்டுன்னு பாத்திரத்த தேய்ச்சுக் கொடுக்குதா? பாத்திரத்த அதுல போடறதுக்கு முன்னாடி ஒரு தரம் கழுவனுமாம். ரொம்ப லட்சணம் தான் இந்த் இழவுக்குத் தான் இம்புட்டு பைசாவான்னு நொந்து கொண்டே அடுக்கி வைக்க நம்மூர் இலுப்புச் சட்டியெல்லாம் அவ்வளவு தோதாக வைக்கமுடியவில்லை. நீ அந்தப் பக்கம் நகரு நமக்கு கம்ப்யூட்டர்ல நிறைய கட் அன்ட் பேஸ்ட் அனுபவம் இருக்குன்னு சாஃப்டுவேர் பிரதாபத்தையெல்லாம் காட்டி தங்கமணியை அந்தாண்ட போகச் சொல்லி எல்லாவற்றையும் அடுக்கி வைத்து சுவிட்சைப் போட்டு சிவனேன்னு தேவுடு காத்தோம். எல்லாம் முடிஞ்சு திறந்து பார்த்தா நான் நிமிர்த்தி வைத்திருந்த இரண்டு இலுப்புச்சட்டியில் கரி அப்பிடியே இருக்க சோப்பு வெந்நீரை நிரப்பி வைத்திருந்தது. என்னாங்கடா டிஷ்வாஷருக்கு பதிலா வெந்நீர் போடற மிஷின அனுப்பிட்டானான்னு நான் குழம்ப தங்கமணி வந்து தலையில் ரெண்டு போட்டு பாத்திரங்களை கவுத்தி வைக்கனும்ன்னு உரைக்கச் சொல்ல...இப்போ சிலபஸ மாதியிருப்பானுகன்னு சமாளிக்க வழக்கம் போல அதுவும் ஊத்திக்சிச்சு.

இப்போல்லாம் "என்ன தான் சொல்லு நீ தேய்க்கிறமாதிரி இந்த மிஷின் தேய்க்கமாட்டேங்குது"ன்னு காஸ் மெக்கானிக் கைலாசம் டெக்னிக்தான் அடிக்கடி ஓடுது வீட்டுல.

Friday, December 29, 2006

ரெடி ஸ்டார்ட் கேமரா

நான் முடிவெட்டிக்கொண்டால் எதாவது விசேஷமாக நடக்கும். அதுவும் முடித்திருத்துபவர் ரொம்ப மெனெக்கெட்டு திறமையெல்லாம் காட்டி கரிச்சான் குஞ்சு ரேஞ்சுக்கு கரம்பியிருந்தால் அதிவிசேஷமாக சம்பவங்கள் நடக்கும். ரெகுலராக பஸ்ஸில் வரும் லொட லொட பாட்டிக்குப் பதிலாக அழகான வெள்ளைக்கார குட்டி வந்து ஆட்டையாம்பட்டிக்கு வழி கேட்பாள். "இம்புட்டு நாளா எங்கம்மா போயிருந்த...மண்டைய கரம்பிட்டு வந்தவுடனே கரெக்டா வந்துடறீங்களேம்மா.." என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டே வழியைச் சொல்லுவேன்.

இப்பேற்பட்ட கரம்பின முஹூர்த்ததில் ஒரு நாள் பிரபல ஆங்கில சக ப்ளாகர் பெண்மணியிடமிருந்து தொலைபேசி அழைப்பு. விஷயம் இது தான் அந்த அம்மணி என்னுடைய லண்டன் குண்டுவெடிப்பு சம்பவ அனுபவத்தை ஒரு நிமிட டாக்குமென்டரியாக எடுத்து இங்கிலாந்திலுள்ள ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் போட்டிக்கு அனுப்ப ஆசைப்பட்டார். எனக்கு தலைகால் புரியவில்லை. " டாக்குமென்ட்ரியா?..அதுவும் நான் நான் நானே நடிக்கனுமா...என் ஃபோட்டோவ முன்ன பின்ன பார்த்திருக்கீங்களா??ஓ நாம நேர்லயே பார்த்திருக்கோமா..உங்களுக்கு ஓ.கேவா...என்னது நாளைக்கே ஷூட்டிங்கா..." இந்த முறை கரிச்சான் குஞ்சு யோகம் பலமாகவே இருந்தது. இரண்டு வாரம் டைம் கேட்டால் அதுக்குள்ளயாவது மண்டையில் கொஞ்சம் புல் முளைத்துவிடாதா என்று கேட்ட வாய்தாவெல்லாம் தள்ளுபடியாகிவிட்டது. சரி அவங்க கேமரா குடுத்து வைத்தது அவ்வளவு தான்னு நேரம் காலமெல்லாம் குறித்துதாகிவிட்டது.

இருபத்திநாலு மணிநேரம் போதாதா. வீட்டில் அலம்பல் படலம் ஆரம்பமாகியது. போன் அடித்தால் "அனேகமாக மணிரத்னமாகத் தான் இருக்கும்...இந்த டைரக்டர்ஸ் தொல்லை தாங்கமுடியலை...மனுஷன் எவ்வளவு போன் கால்ஸ் தான் அட்டெண்ட் பண்ணுவான்...நீயே எடுத்து அய்யா வீட்டுல இல்லை அவுட்டோர் ஷூட்டிங் போயிருக்கார்ன்னு சொல்லிடு" -ஆரம்ப கட்ட அலம்பல்களுக்கெல்லாம் தங்கமணி கண்ணாலேயே எரித்துக் கொண்டிருந்தார். எதற்கும் இருக்கட்டும் என்று கண்ணாடி முன்னாடி "ஹலோ ஐ ஆம் சஞ்சய் ராமசாமி" டயலாக் பேசி பழகிய போது, அங்கே ப்யூஸ் புடுங்கி காதில் புகை வர ஆரம்பித்துவிட்டது. "எப்படி இருந்த நான்....இப்படி ஆகிட்டேன்..." அசரீரியாக பதில் தாக்குதல் ஆரம்பித்தது.

"இந்த பாரும்மா...நடிப்புல போட்டி இருக்கலாம் பொறாமை இருக்கக்கூடாது...கவலப்படாதே...எனக்கு கதவை திறந்துவிடற மாதிரி ஒரு லேடி காரெக்டர்க்கு ஆள் தேடிக்கிட்டு இருக்காங்க...உன்ன வேணா ரெக்கமெண்ட் பண்ணறேன்.."
****
ஒரு மாலை இளவெய்யில் நேரம்...
அழகான...இலையுதிர்.காலம்..
****

"தோடா....நீங்க போறதே சார் போஸ்ட்ன்னு முதுகு மட்டும் தெரியற போஸ்ட்மேன் காரெக்டருக்கு இதுல என்ன வேற ரெக்கமெண்டா..வேண்டவே வேண்டாம்..நான் இப்படியே இருந்துட்டு போறேன்..."

"அப்பாடா எங்க ஒத்துக்குவியோன்னு கவலையா இருந்தது. கவலபடாத வேற ஏதாவது நல்ல காரெக்டர் மாட்டிச்சினா சொல்றேன். இதுக்கு கனிகாவ கமிட் பண்ணிக்கிறேன்.

"ஐய்யோ.பாவம் கனிகா.."

"ஒரு உலகக் கலைஞன் வேல்யூ தெரியாம பேசாத...என் திறமைய பார்த்து சப்பான்லேர்ந்து சாக்கிசான் கூப்பிட்டாக...பின்லாந்துலேர்ந்து பீட்டர் ஜாக்ஸன் கூப்பிட்டாக..."

"ஆமா...சொல்லமறந்துட்டேனே...காலைல ஸ்பீல்பெர்க் கூப்பிட்டாக ...டைனோசருக்கு டூப்பா நடிக்கிறதுக்கு ஆள் வேணுமாம் உங்கள கேட்டாக..க்க்ர்ர் தூ.."

ம்ஹூம்...எனக்கு காதில விழலையே, ஒரு நடிகனுக்கு கலையுல வாழ்க்கையில இதெல்லாம் ரொம்ப சகஜம் என்று ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய்விட்டேன். லீவு இல்லாததால் ஆபிஸில் பெர்மிஷன் சொல்லிவிட்டு போயிருந்தேன். ஒன்றுக்கு இரண்டு ப்ளாக் உலக பிரபல பெண்மணிகள் - டைரக்டர்ஸ். "கேரவேனெல்லாம் ரெடியா.." என்று லேசாக அலம்பியதில் இதுக்குத் தான் இந்த மாதிரி கேரக்டரையெல்லாம் கூப்பிடாதேன்னு சொன்னேன் - விழியாலே பேசிக்கொண்டார்கள். கிடச்ச சான்ஸும் கோவிந்தா ஆகிடப் போகுதே என்று அப்புறம் நல்ல பிள்ளையாக அவர்கள் சொல் பேச்சு கேட்க ஆரம்பித்தேன். ஒரு அம்மணி அடிக்கடி தெலுங்கில் மாட்லாடிக் கொண்டிருந்ததில் எனக்கு ஒருவேளை இது தெலுங்கு டப்பிங் படமாக இருக்குமோ என்று டவுட் வந்துவிட்டது. தெலுங்கு டாக்குமென்ட்ரியாக இருந்தாலும் சும்மா பேச்சு துணைக்காச்சு என்று இலியானா..கௌஷா இவங்களெல்லாம் வந்திருக்காங்களா என்று ஒருதரம் ஏமாற்றத்தோடு சுத்திப் பார்த்தேன்.

"இப்ப நாம நீங்க ஆபிஸுக்கு ட்யூப்ல போற மாதிரி எடுக்கப் போறோம். நீங்க அப்பிடியே படியில் இறங்கி வர்றத எடுக்கப்போறோம்...கேஷ்வ்லா அப்பிடியே இறங்கிவாங்க..."

"ஓ இவ்வளவு தானா...இந்த மாதிரி இறங்கி வர்றதெல்லாம் அசால்டா இடது கையாலயே பண்ணுவேன்.." என்னுடைய அலம்பலை அவர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. எனக்கு ஏனோ பாரதிராஜா ஷூட்டிங்கில் பளாரென்று கன்னத்தில் அடிப்பார் என்று படித்ததெல்லாம் நியாபகத்துக்குவந்து... "ஹீ ஹீ சும்மா டமாசு....இருங்க நான் இறங்கி வர்றேன்...கரெக்டா இருக்கா பாருங்க" என்று நல்ல பிள்ளையாக நடிக்க ஆரம்பித்தேன்.

அதுக்கப்புறம் நான் வித விதமான படிக்கட்டுகளில் நடித்தேன் நடித்தேன் நடித்துக் கொண்டே இருந்தேன். ஒரு பெரிய படிகட்டில் நான் மேலிருந்து கீழே நடிப்பதாக ஒரு சீன். பயங்கர சேலஞ்சிங்காக இருந்தது. மேலேருந்து கீழே பாதி வழியில் நான் நடித்துக் கொண்டிருந்த போது ஒரு மாமா நடுவில் நாயைக் கூட்டிக்கொண்டு வந்து விட்டார். கட் சொல்லி திரும்ப படிக்கட்டில் மேலேறி நடிக்கச் சொல்லிவிட்டார்கள். அடுத்த முறை ஒரு ட்ரெயின் வந்து கூட்டம் திபு திபுவென வந்து விட்டது. வேற வழி? திரும்பவும் ரிப்பீட்டு. இப்படியே பத்து டேக் வாங்கி ஓகே ஆன பிறகு அந்த அம்மணி கேமராவில் தப்பான செட்டிங் இருப்பதை கண்டு பிடித்தார். எனக்கோ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. ஆப்புள் ஜூஸ் கேட்டால் அந்த அம்மணிகள் கேமரா மேல் இருந்த கடுப்பில் என்னைக் காட்டிவிடுவார்களோன்னு பயந்து கேட்கவேஇல்லை. லண்டன் அண்டர்கிரவுண்டிலேயே திருப்பதி மலை ஏறுவதாக நினைத்துக் கொண்டு இன்னும் நாலு தரம் படிக்கட்டில் நடித்தேன்.

ஒரு வழியாக கடைசியில் படிக்கட்டு நடிப்பு ஓகே ஆகி நான் பெருமூச்சு விட்ட போது...அவ்ளோ தான் வீட்டுக்குப் போலாம் என்று பேக்கப் சொல்லிவிட்டார்கள். என்னது அவ்ளோதானா..என்னங்க இன்னும் டூயட், ட்ரீம் சீக்வென்ஸ்...இதெல்லாம் எடுக்கவே இல்ல என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அதெல்லாம் க்ராபிக்ஸில் அட்ஜஸ்ட் செய்துவிடுவோம் என்று சொல்லிவிட்டார்கள்.

ஹூம் தமிழ்ப்ளாகர் படமெடுத்திருந்தாலாவது போண்டாவோ சமோசாவோ கிடைத்திருக்கும். மீரா ஜாஸ்மின், கனிகா கால்ஷீட் இருந்தால் சொல்லுங்க...போண்டா கூட வேண்டாம்...சும்மாவே நடிச்சுத் தரேன். தெலுங்கு டப்பிங் படங்களுக்கு முன்னுரிமை குடுக்கப்படும்.


பி.கு - படத்தை நான் பார்த்துவிட்டேன். என்னைத் தவிர படத்தில் எல்லாமே நன்றாக இருக்கிறது. படம் இன்னும் போஸ்ட் புரோடக்க்ஷன் ஸ்டேஜ்ஜில் இருக்கிறது. கிராபிக்ஸில் எப்படியாவது எனது பெர்சனாலிட்டியை ஏத்தமுடியுமா என்று கேட்டிருக்கிறேன். படம் ரிலீஸானவுடன் பகிர்ந்து கொள்கிறேன். படத்தை பார்த்தலிருந்து தங்கமணி "அப்படியே நடிச்சுக்கிட்டே மாடிக்குப் போய் வர்ஷாவோட ட்ரெஸ்ஸ எடுத்துக் கிட்டு வாங்க...அப்படியே நடிச்சிக்கிட்டே கடைக்குப் போய் பால் வாங்கிட்டு வாங்க"ன்னு ஏகப்பட்ட சான்ஸ் குடுக்கிறார். ஒரு உலகக் கலைஞன.....ஹூம் சரி வேணாம் விடுங்க...