"வா சாமியாண்டி, அய்யா உன்னையத் தான் காலையிலேர்ந்து கேட்டுக்கிட்டிருக்காரு"
"பொண்ணுக்கு மாசம்ங்க..பொஞ்சாதிய வுடப் போயிருந்தேனுங்க...இப்பத் தான் சேதி கிடைச்சுது அய்யா கூப்பிடாங்கன்னு அப்பிடியே போட்டுட்டு ஓடியாறேன்"
ஒருமையில் அழைக்கப்பட்ட சாமியாண்டிக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். கண்கள் லேசாக பஞ்சடைய ஆரம்பித்திருந்தது. ஒல்லியான தேகம், கருத்துச் சுருங்கிய ஒட்டாத தோல், நெற்றியில் அழிந்தும் அழியாமலும் காலையில் பூசிய திருநீர். போட்ட கூழைக் கும்பிடு போலீஸ் மீதிருந்த பயத்தையும் மரியாதையும் பறை சாற்றியது.
"சாமியாண்டி பத்து வருஷத்துக்கப்புறம் நம்ம ஜெயிலுல ஒரு தூக்குத் தண்டனை தீர்ப்பாயிருக்கு. நீதான் முன்னாடி இதெல்லாம் பார்த்துக்கிட்டனு ரெக்கார்டு இருக்கு..இதையும் நீ தான் கூட இருந்து முடிச்சு குடுக்கனும் என்ன..."
"பெரிய மனசு பண்ணி சமூகம் என்னை மன்னிக்கனும்...உசுர எடுத்துட்டு வூட்டுல கால் வைக்காதன்னு பொஞ்சாதி கறாரா சொல்லி அந்த தொழில வுட்டு நாளாச்சுங்க..இப்போ திரும்பவும்..எப்படிங்க..அய்யாகிட்ட மாப்பு கேட்டுக்கிறேனுங்க"
"அதெல்லாம் ஒன்னும் பேசக்கூடாது...நீ கூட இருந்து கயிறு போடறத மட்டும் பார்துக்கிடாப் போதும்...மத்ததுக்கெல்லாம் ஆள் இருப்பாங்க.. நாங்கென்ன டெய்லியா கூப்பிட்டுக்கிட்டிருக்கப் போறோம்? எனக்கே என் சர்விஸ்லயே இது தான் முதல் தரம்னா பார்த்துக்கோ...பொஞ்சாதிக்கெல்லாம் சொல்லக்கூட வேண்டாம்... பிரபாகர்...சூப்பரிண்டன்ட் கிட்ட சொல்லி சாமியாண்டிக்கு ஆயிரத்தைநூறுன்னு சொல்லிடுங்க...ஐந்நூறு இப்போ கைல குடுக்கச் சொல்லுங்க, மீதிய விஷயத்த முடிச்சுட்டு வாங்கிக்க,...பேப்பர்ல வேண்டாம் நான் சொன்னேன் சொல்லிடுங்க...சாமியாண்டி...விஷயம் வெளியே போகாது...நீயும் இதப் பத்தி வெளில மூச்சு விட வேண்டாம்..என்ன சரியா...கூட்டிக்கிட்டு போய் ஆகிறதப் பார்க்கச் சொல்லுங்க"
சாமியாண்டியின் சம்மததுக்கெல்லாம் அங்கு யாரும் காத்திருக்கவில்லை. சாமியாண்டி அங்கேயே பென்ஞ்சில் உட்கார்ந்து கொண்டார். மனது மிகவும் குழப்பமாக இருந்தது. வெட்டியானாக இருந்த தனது தந்தையின் தொழிலை தான் ஏற்று நடத்தி..காசுக்காக தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதையும் ஏற்றுக்கொண்டு...அந்த தெம்பெல்லாம் இப்போது மனதில் கொஞ்சம் கூட இல்லை. அத்தோடு நல்லது கெட்டது குழப்பம் வேறு. "செத்து வர்ற பொணம் மாதிரி வேற..உசுரோடு இருக்கறப்பவே .துணியப் போட்டு முவத்த மூடறதுங்கிறது வேற..அவங்க மனசு என்ன பாடு படும்.. போகிற ஆத்மா சாவம் நமக்கு வேணாம்சாமி...இல்ல நீ காசு தான் முக்கியம்ன்னு இந்தப் பொழப்பு பாக்கிறதா இருந்தாச் சொல்லு நானும் என் புள்ளையளும் சுள்ளி பொறுக்கி கஞ்சியாக்கிக்கிறோம்...எங்கள்வுட்ரு சாமி" இசக்கியம்மா சொன்னதற்காக ஊரைவிட்டு ஊர் போய் நாலு வருஷம் இருந்துட்டு எல்லாம் முடிந்தது என்று திரும்ப வந்தால், ஆறு வருடங்களுக்கப் பிறகு இப்போ திரும்பவும் இது.
"அதெல்லாம் மாறியாச்சுடா…இப்போலாம் கவருமெண்டுலயே இதுக்கெல்லாம் ஆள் இருக்காங்க" என்று சாமிநாதப் பிள்ளை சொன்னதெல்லாம் உண்மையில்லையா? இல்ல பேப்பருல வேணாம்ன்னு அய்யா சொன்னது இதத் தானா?
“ தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி.”..சாமியாண்டியின் உதடுகள் அவரையும் அறியாமல் முனுமுனுத்துக் கொண்டிருந்தன
"சாமியாண்டி...வந்து பணத்த வாங்கிக்க...அடுத்த வாரம் புதன்கிழமை..செவ்வா ராவே வந்துறனும். பொஞ்சாதிக்கிட்ட என்ன சொல்லனுமோ சொல்லிக்கோ...காலைக் கருக்கல்லயே போயிடலாம்...என்ன"
"என்னவே டவுண் ஆஸ்பதிரிக்காக பொஞ்சாதிய பொண்ணு வீட்டுலயே வுட்டுட்டு வந்துட்டிராமே நம்மூர் மருத்துவச்சி பாக்காத பிரசவமா?" சோலையப்பன் குரல் கேட்டுத் தான் தன்நினைவே வந்தது சாமியாண்டிக்கு. வீட்டுக்கு எப்படி நடந்து வந்தோம் என்றெல்லாம் நினைவே இல்லை. இரவெல்லாம் தூக்கமில்லாமல் புரண்டு புரண்டு படுத்தார். வயது தான் மனதில் எவ்வளவு மாற்றங்களை கொண்டு வருகிறது. பத்து வருஷத்துக்கு முன்னால் சேதி வந்தால் துள்ளிக் குதித்து காரியங்கள் நடத்தியது என்ன, முன்பணம் வாங்கி சீலை துணிமணி வாங்குவதென்ன...இதோ வாங்கிய பணம் விளக்குப்பிறையில் சீண்டுவாரில்லாமல் காற்றில் தளர்ந்து கிடக்கிறது.
"சாம்பல் பூசிய சிவனான்டி சொரூபம் டா" என்று ஊரில் காத்து கருப்பு அண்டியவர்கள், வயதுக்கு வந்தவர்கள் என்று சாமியாண்டியிடம் தான் திருநீரு போட்டுக்கொள்வார்கள். கௌரவமாய் இருந்திருக்கிறது. ஆனால் இன்று ..? ஜெயில் பொழப்பு கொலை செய்வது மாதிரி இருக்கிறது. நான் என்ன கொலையா செய்கிறேன்...அரசாங்கம் சொல்லித் தான் செய்கிறேன் அத்தோடு தூக்கில போடுறவனெல்லாம் என்ன மகாத்மாவா? வேண்டாமென்று சொன்னால் விட்டுவிடுவார்களா? வட்டாரத்திலேயே அவனை விட்டால் இந்தத் தொழிலுக்கு ஆள் கிடையாது. தெரியாமலா தேடிப் பிடித்துக் கூப்பிட்டிருக்கிறார்கள்.
"அய்யா முட்டை, விளெக்கெண்ணை கொண்டாந்திருக்கேன்...கயிற கொடுத்தீங்கீன்னா..ஊறப் போட்டிருவேன்..முடிச்சு சுளுவா இறுகிடும்...நோவாத காரியம் ஆயிடும்" - சாமியாண்டி திரும்ப ஜெயில்லுக்குப் போன போது தெளிவு இருந்ததாக சொல்லமுடியவில்லை.
"அய்யா அப்பிடியே அந்தாளை கொஞ்சம் பார்க்கலாமுங்களா? மனசு கேக்கமாடேங்குதுங்க ரெண்டு வார்த்தை பேசனுங்க.."
"யோவ் அதெல்லாம் வழக்கம் கிடையாதுயா...அதுவும் இன்னும் ரெண்டு நாள்ல டேட்ட வைச்சிகிட்டு... ஒன்னுகிடக்க ஒன்னாச்சுன்னா நாங்க பதில் சொல்லி மாளாதுயா..அவன் கிட்ட போய் இன்னா பேசப் போற? வேணும்னா ஒரு நிமிஷம் தான்...தள்ளியிருந்து பார்த்துட்டு கரெக்டா வந்துரனும்...எதாவது சொல்லி கில்லி வைக்காத...அவனே கிலியடிச்சு சோறு வேண்டாம் தண்ணி வேண்டாம்ன்னு கிடக்கான்..பதமா நடந்துக்கோ"
சாமியாண்டி அந்த செல்லை நெருங்கிய போது அவன் விட்டத்தைப் பார்த்த மேனியாக படுத்திருந்தான். கண்களில் பாவை சலனமில்லமால் வெறித்துக் கொண்டிருந்தது. வைத்த சாப்பாடு சீண்டாமல் "ஈ" மொய்த்துக் கொண்டிருந்தது. முப்பத்தைந்து வயதிருக்கலாம். கண்களின் ஓரத்தில் ஈரம் மண்டிப் போயிருந்தது.
"சாமீ..." சாமியாண்டி குரல் கரகரத்தது.
அவன் உடம்பில் அசைவு இல்லை. கண்கள் மட்டும் குரல் வந்த திக்கை நோக்கின.
"சாமீ...இந்தப் பாவப்பட்டவன் தான் புதன்கிழமை உங்களுக்கு...." கம்மலாக வந்த குரலும் அதற்கு மேல் சாமியாண்டிக்கு வரவில்லை.
"சிவன் கோயில் துன்னூறு இருக்கு தரட்டுமா?" திருநீரை எடுத்து தனக்கும் இட்டுக்கொண்டு அவனைப் பார்த்தார். அவனிடம் இன்னமும் சலனமில்லை.
"ஏழப் பொழப்பு…பாவப்பட்ட பொழப்பு...மவ மாசமா கிடக்கா, மூத்தது பொட்டப் புள்ள...தாயில்லா புள்ளையா ஆகிடக்கூடாதுங்க...சாமீ பாவத்துக்கு நாங்க ஆளாகக் கூடாதுங்க..." அவன் எதிர்பார்க்காத தருணத்தில் கம்பிகளுக்கு வெளியே தலைக்கு மேல் கைகளைத் நீட்டித் தூக்கி கும்பிட்டு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் சாமியாண்டி. "திருச்சிற்றம்பலம்...திருச்சிற்றம்பலம்..தரையை முட்டிய நெற்றியுடன் சாமியாண்டியின் குரல் மட்டும் தழுதழுப்பாக வந்துகொண்டிருந்தது. அவன் எழுந்து உட்கார்ந்தான்.அவன் அதை எதிர்பார்க்கவில்லை.
செவ்வாய் இரவு சாமியாண்டிக்குத் தூக்கம் இல்லை. அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் ஜெயிலிலேயே குளித்து திருநீரணிந்து கொண்டு கிழக்கு பார்த்து கும்பிடு போட்டு வணங்கினார். நான்கு மணிக்கெல்லாம் தூக்கு மேடைக்கு போய் எல்லாவற்றையும் ஒரு முறை சரி பார்த்தாகிவிட்டது.
அவனை இரண்டு காவலர்கள் கூட்டி வந்த போது சாமியாண்டிக்கு தொண்டை அடைத்தது. கூட்டி வரும் போது அவன் கால்கள் தள்ளாடிய மாதிரி இருந்தது. அவன் முகத்தில் கருப்புத் துணி போர்த்த அதிகாரி பணித்த போது அவன் கைகள் நடுங்குவதாக சாமியாண்டிக்கு பட்டது. அவன் கண்களில் இப்போதும் சலனமில்லை. துணி போடு மூடும் போது இருவர் விழிகளும் சந்தித்துக் கொண்டன. ஒரு வினாடி தான், அதற்கு மேல் சாமியாண்டியால் அதை நேர் கொள்ள முடியவில்லை. "என்னப்பனே...நோவாம நொடியில இந்த உசிரு பிரிஞ்சிரனும்..அருள் புரியப்பா..." அவர் மனதில் வேண்டிக்கொண்டது அவனுக்கும் கேட்டுக்குமளவுக்கு அவர் இதயத்தில் எதிரொலித்தது. அவன் கைகளை பின்னால் கட்டும் போது அவரையுமறியாமல் ஒரு நொடி ஆதரவாக தடவி பிடித்துக் கொடுத்தார். அவன் கைகள் பதில் சொல்லுவது போல லேசாக அசைந்தது.
அதிகாரி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே கையசைத்தததும், சாமியாண்டி லீவரை இயக்கிவிட்டு கண்களை மூடிக் கொண்டார். உதடு மட்டும் முனுமுனுத்துக் கொண்டிருதது
பரமேது வினைசெயும் பயனேது பதி ஏது
பசுஏது பாசமேது
பக்திஏ தடைகின்ற முத்தியே தருள் ஏது
பாவ புண்யங்கள் ஏது
வரமேது தவமேது விரதமே தொன்றுமில்லை...******
****
இந்த மாத தேன்கூடு போட்டிக் கதை.
****