Sunday, January 24, 2010

தி மேன் ஃப்ரம் எர்த்பல திரைப்படங்கள் நம்மை பல்வேறு காரணங்களுக்காக பாதிக்கின்றன, நமக்கு அவற்றை பிடித்திருக்கின்றது. நம்மூரில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சதம் அடித்த படங்களும் இருக்கின்றன. ஹாலிவுட்டில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எட்டே எட்டு முக்கியமான கதாபாத்திரங்களை ஒரே ஒரு ரூமில் வைத்து எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான படம் தான் தி மேன் ஃப்ரம் எர்த்.

இந்தப் படம் அமெரிக்காவிலேயே குறைவான தியேட்டர்களில் மட்டுமே 2007ல் ரிலீஸ் ஆகியது. பின் டி.வி.டியில் ரிலீஸ் ஆகியது. அதையெல்லாம் தாண்டி இந்த படம் இன்டெர்நெட்டில் ரசிகர்களால் பல்வேறு ஃபைல் ஷேரிங் தளங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டது (முக்கியமாக பிட் டாரெண்ட்டில்). திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படி இன்டர்நெட்டில் ஷேர் செய்து இந்த படத்தின் பப்ளிசிட்டிக்கு உதவியதற்காக ரசிகர்களுக்கு இந்த படத்தின் ப்ரொடியூசர் நன்றி கூறினார்.

ஹாலிவுட்டின் பிரமாண்டமும், சி.ஜி எனப்படும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸும் பிரதானமாய் வைத்து வரும் பெரும்பாலான சயின்ஸ் பிக்ஷன் படங்களுக்கு மத்தியில் வந்திருக்கும் மிக வித்தியாசமான ஒரு படம். பார்த்த பிறகு ஒரு மணிநேரம் பிரம்மை பிடித்த மாதிரி அசை போட வைத்த அற்புதமான படம். ஸ்க்ரீன் ப்ளேயையும் தாண்டி வசனத்தால் பார்பவரை கட்டிப் போட வைத்திருக்கும் படம்.

சில படங்களின் மேலோட்டமான கதை தெரிந்தாலும் அவற்றின் சுவாரசியம் கொஞ்சமும் குறையாது. இந்தப் படமும் அந்த வகையைச் சார்ந்தது என்பதால் கதையை மேலோட்டமாய் சொல்லி இருக்கிறேன். கதையை தெரிந்து கொள்ள விருப்பமில்லாதவர்கள் இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம்.

ஒரு ப்ரொபசர் ஒருவர் ஊரைக் காலி செய்து கொண்டு வேறு ஊர் போகப் புறப்படுகிறார். அவருக்கு சென்ட் ஆஃப் குடுக்க அவருடன் பணியாற்றிய சக ப்ரொபசர்களும், சில நண்பர்களும் விட்டிற்க்கு வருகின்றனர். "ஏன்யா திடீருன்னு இப்படி சொல்லாம கொள்ளாம ஊர காலி பண்ணிட்டு போற"ன்னு அவர்கள் ஆரம்பிக்க...கொஞ்ச நேரத்துக்கு சப்பைக் கட்டு கட்டுகிறார் ப்ரொபசர். அவர்கள் மேலும் காரணத்திற்காக வற்புறுத்த, மெதுவாய் விளையாட்டாய் ஒரு சயன்ஸ் பிக்க்ஷன் கதை சொல்ல ஆரம்பிப்பது போல் ஆரம்பித்து, கடைசியில் தான் பதினாலாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால் கற்காலம், பனிக்காலாத்திற்கெல்லாம் முன் தோன்றிய மனிதன் என்றும், தனக்கு வயோதிகமே கிட்டாமலும் மரணமும் இல்லாமலும் இன்று வரை தொடர்வதாயும், இதை யாரும் கண்டுபிடித்துவிடக் கூடாது என்று பத்து வருததிற்க்கு ஒரு தரம் ஊரை மாற்றி விடுவதாயும் சொல்ல கதை சூடு பிடிக்கிறது.

முதலில் விளையாட்டு என்று நம்பி எல்லாரும் சும்மா கிண்டிக் கொடுத்து கேள்விகள் ஆரம்பிக்க, அப்புறம் இது அவர் நம்பிக் கொண்டிருக்கும் மனோவியாதி என்று தியரியை உடைக்க வேண்டுமென்று கேள்விகள் தொடுக்க அதுவே மனித இனத்தின் பல்வேறு நம்பிக்கைகளின் அஸ்திவாரத்தை ஆட்டுகின்றது. இந்த இடங்களிலெல்லாம் கதை மற்றும் வசன கர்தா ஜெரோம் பிர்க்ஸ்பி பின்னி பெடெலெடுத்திருக்கிறார். கதை நெடுக அவரின் கற்பனை வளம் பிரமிக்க வைக்கிறது. கதை இந்தியா வரை தொடுகின்றது.

ஒரே ஒரு ரூமில் காமிராவை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் மற்றுமே மாற்றி எடுத்தால் அந்த கால சென்னை தூர்தர்ஷன் செவ்வாய் கிழமை நாடகம் என்ற எனது நையாண்டியை உடைதெரிந்து விட்டிருக்கிறது இந்த படம். ஸ்கிரீன் ப்ளேய் மிக சிறப்பாக இருந்தாலும் அதையும் தாண்டி வசனங்கள் நம்மை அப்படியே கட்டிப் போடுகின்றன.

கதை மிக மிக வித்தியாசமான ஒரிஜினாலிட்டி உள்ள கதை. ஒரு ப்யாலஜிஸ்ட், ஒரு ஆந்திரபோலஜிஸ்ட், ஒரு ஹிஸ்டோரியன், ஒரு சைக்கியாரிஸ்ட், ஒரு ஆர்கியாலஜிஸ்ட் மற்றும் ஒரு ஸ்டூடென்ட் என்று மிக அழகாய் பாத்திரங்களை செதுக்கி அவர்கள் செய்யும் தர்கத்திற்க்கு சரியான வலூட்டியிருக்கிறார் கதாசிரியர். அவர்கள் கேட்க்கும் கேள்விகளிலும், பதில்களிலும் லாஜிக் இடிபடாமல் ஆத்தென்டிக்காய் வடிவமைத்திருக்கிறார். கதாசிரியரின் தந்தையும் கதாசிரியரும், தந்தையின் காலத்தில் டிஸ்கஸ் செய்த கதைக் களமாம் இது. நடித்த அத்துனை நடிகர்களும் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். பட்ஜெட் பிரதானமே இல்லை...கதையும், திரைக் கதையும், வசனமும் அதை குடுக்கிற விதமும் கரெக்டாய் இருதால் மேட்டர் மேட்டரே இல்லை என்று என்னைப் போன்றவர்களுக்கும் மிக நம்பிக்கை அளிக்கும் விதமாய் குடுத்திருக்கிறார் டைரக்டர் ரிச்சர்ட் ஷெங்மேன்.

துப்பாக்கி, குலுக்கு நடனம் மற்றும் கண்ணாடியை உடைத்துக் கொண்டு விழும் சண்டைக் காட்சிகள் இல்லாமல் படம் பார்க்க தயாராய் இருந்தால் - கண்டிப்பாய் பாருங்கள். வெரி ஹைலி ரெக்கமெண்டட்.

Wednesday, January 13, 2010

ப்ளாக் தத்துவம் தொள்ளாயிரத்து முப்பத்தி சொச்சம்

"நீங்க என்ன பெரிய சுஜாதாவா நீங்க என்ன பெரிய மணிரத்னமா?"ன்னு என்கிட்ட மட்டும் தான் தான் கேட்க முடியும். சுஜாதாகிட்டயோ மணிரத்னம் கிட்டையோ போய் "நீங்க என்ன பெரிய டுபுக்கா?"ன்னு கேட்க முடியுமோ.?? - அதுதான் வாழ்க்கை.
(இல்ல கேட்டுத் தான் பாருங்களேன் :)) )


-ஐடியா மணி சிந்தனையை தூண்டியவர் தானைத் தலைவி பொற்கொடி

Sunday, January 10, 2010

வயலின்

வயலின் இசை கேட்டிருக்கிறீர்களா? மனதை என்னவோ செய்யும். வயலின் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாளாய் ஆசை. நீரோ மன்னன் ரோம் பற்றிக் கொண்டு எரிந்த போது வயலின் வாசித்ததில் எனக்கு அப்படி ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. அந்த வாத்தியம் அப்படி, அதில் எழும் நாதம் அப்படி. இளையராஜா இசையில் வயலின் கேட்டிருக்கிறீர்களா? மனுஷன் பின்னிப் பெடெலெடுப்பார். இசை காது மடல் துடிக்க உள்ளே போய் நரம்பெல்லாம் அப்படியே ஜிவ்வுன்னு இருக்கும். ஹை டு நேம் இட் கேட்டிருக்கிறீர்களா? வயசுப் பெண்ணை வித விதமாய் கொஞ்சுவது மாதிரி இருக்கும். அனேகமாய் ராஜாவின் பேவரிட் வாத்தியம் வயலினாய் தான் இருக்கும். அதிலும் "மேட் மூட்.." டெய்லி கேட்டால் தான் எனக்கு நாளே ஆரம்பிக்கும். புகுந்து விளையாடி இருப்பார்.

எனக்கும் வயலின் கற்றுக் கொள்ளவேண்டும் என்று க்ளாஸ் சேர்ந்துவிட்டேன். மூன்றே பேர் தான் க்ளாசில். சௌகரியமாய் இருக்கிறது. 'ச.ரி.க.மா.'-வில் ஆரம்பித்திருக்கிறோம். அடுத்தது கட்டம் 'சரி சரி சரி கமா'. இரண்டாம் கட்ட வேகத்தில் வாசிக்கும் போது நுனி விரலில் கொஞ்சம் நரம்பு அறுக்கிறது. போகப் போக சரியாகிவிடும் என்று டீச்சர் சொல்லி இருக்கிறார். "உனக்காவது கொஞ்சம் விரல் தான் அறுக்கிறது நீ வாசித்தால் எங்களுக்கு கழுத்தே அறுந்து வந்துவிடும் போலிருக்கு"ன்னு கணேஷ் ஏகப்பட்ட ஊக்குவிப்பு. கணேஷ் என் ரூம்மேட். சுத்த ஞான சூன்யம். விவேகானந்தரை ஆராதித்து லோக தத்துவ விசாரங்களை விவாதிக்கும் எக்சப்ஷன் கேட்டகரி. எல்லாத்துக்கும் ஒரு விளக்கம் இருக்கும் கணேஷிடம். தெரியாவிட்டாலும் தேடி ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து விவாதிக்கும் டைப். "விவேகானந்தருக்கு வயலின் பிடிக்குமா..?" என்ற கேள்விக்கு மட்டும் இன்று வரை பதில் இல்லை. ரொம்ப தொனத் தொனவென்றால் இந்தக் கேள்வியைத் தான் கேட்பேன். அப்படியே ஆஃப் ஆகிவிடுவான்.

லால்குடியின் "வல்லபா நாயகா" மனதை என்னவோ செய்யும். குன்னக்குடி "துன்பம் நேர்கையில்" கேட்டு நானும் ஒரு தரம் அது மாதிரி ரூமில் சாதகம் செய்து பார்த்தேன்.

"என்னடா எதாவது பாட்டு வாசிக்கிறீயா?"

"ஆமா 'துன்பம் நேர்கையில்'"

" கரெக்ட்டு தான் "

"சரியா வருதா..."

"நான் சிச்சுவேஷன சொன்னேன்.."

"நம்ம வாசிப்பு எப்படி இருக்கு.."

"கரெண்டு கம்பத்துல கோழி சிக்கிக்கிட்ட மாதிரி இருக்கு...நீ திருந்தவே மாட்டியா"

"போடா போய் நான் கேட்ட கேள்விக்கு பதிலக் கண்டுபிடிக்கிற வழியப் பாரு.." வயலின் வாசிப்பில் ஒரு நளினம் இருக்கு. அந்த டெக்னிக்கை மட்டும் கரெக்டா பிடிச்சிட்டோம்னா அவ்வளவு தான். ஒரு நாள் நானும் வல்லப நாயக்கா வாசிக்கத் தான் போறேன். சவால் விட்டிருக்கிறேன்.

கணேஷ் இரண்டு வாரம் பாண்டிச்சேரிக்கு அன்னை இல்லத்திற்கு போயிருந்தான். திரும்பி வந்தவனுக்கு ஷாக் ஆஃப் ஹிஸ் லைப்.

"டேய் இதென்ன கலாட்டா...அதுவும் ரெண்டு வார கேப்புல..."

"பாருடா இன்னும் மூனு வாரம் தான் அசந்தே போயிடுவ.."

"டேய் நான் அல்ரெடி அசந்தாச்சு... வயலின் எங்க..? இதென்ன புதுசா ப்ளூட்...? ரூம்ல மருந்துக்கு கூட வயலின் வாசனையே அடிக்கலையேடா...ஏதோ வல்லப நாயக வாசிக்கப் போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தியே...என்னாச்சு..."

"இல்ல இனிமே ப்ளூட் தான்...நீ புல்லாங்குழல் இசை கேட்டதே இல்லையே..அதுவும் ஹரிப்பிரசாத் சௌரேஷ்ஷியான்னு ப்ளூட் மேதை வாசிச்சு கேட்டதில்லையே...மூனாவது ட்ரால அவரோட சி.டி ஒன்னு இருக்கு போடறேன் கேட்டு பாரு"

"வாட்...!!!"

"மனுஷன் தொன்னூறுகளிலேயே என்னமா வாச்சிச்சிருக்கார் தெரியுமா..."

"டேய்ய்ய்ய்ய்ய்!!!....வயலின் என்னாச்சு..?.வல்லப நாயக என்னாச்சு....? ஆன்சர் மீ !"

".....நானும் எவ்வளவோ ட்ரை பண்ணிப் பார்த்தேன்...உனக்கும் தான் தெரியுமே நான் எவ்வளவு கஷ்டப் பட்டேன்னு...எல்லாம் வேஸ்டாப் போச்சு...போன வாரம் போனா எனக்கு கல்யாணம் நிச்சியமாகிடிச்சுன்னு பத்திரிக்கை வைக்கிறாங்க டீச்சரம்மா...சே நான் முந்திக்கிறதுக்குள்ள எவனோ டெல்லி ம்யூசிக் காலேஜ் ப்ரொபசராம்...முந்திக்கிட்டான்...பார்த்துக்கிட்டே இரு இதே வல்லப நாயகவை ப்ளூட்டுல வாசிக்கிறேன்..."

"...!!!"

"இந்த தரம் தெளிவா கேட்டுட்டேன்...இவங்க பெங்காலி இன்னும் மூனு வருஷம் கழிச்சு தான் கல்யாணம்ன்னு தெளிவா இருக்காங்க... அதுக்குள்ள வல்ல்ப நாயகவை..."

"டேய் உனக்கு வெட்கமே இல்லையாடா..வாழ்க்கையில..ஒரு."

விவேகானந்தருக்கு ப்ளூட் பிடிக்குமான்னு கேட்டதற்க்கு அப்புறம் கணேஷ் என்னை தொந்தரவே செய்யவில்லை. ப்ளூட் ஒரு அற்புதமான வாத்தியம். ராத்திரி ஊரடங்கி ஓசையெல்லாம் ஒய்ந்த அப்புறம் ரூமில் ஒரு ஊதுபத்தி ஏத்திவிட்டு காதில் வாக்மேனை போட்டுக்கொண்டு ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ப்ளூட் இசை கேட்டுப் பாருங்கள்....சொக்கிப் போய்விடுவீர்கள். மனுஷன் பின்னிப் பெடெலெடுப்பார். இசை காது மடல் துடிக்க உள்ளே போய் நரம்பெல்லாம் அப்படியே ஜிவ்வுன்னு இருக்கும். அனேகமாய் ரஹ்மானின் பேவரிட் வாத்தியம் ப்ளூட்டாய்த் தான் இருக்கும்.

Sunday, January 03, 2010

தீர்த்தவாரி

"தண்ணி என்றால் என்ன...கிக்கு என்றால் என்ன"ன்னு பழனியாண்டவர் மாதிரி கையில் ஆரஞ் ஜூஸை வைத்துக் கொண்டு நானும் தண்ணியடிக்கும் தர்மவான்களுக்கு கிக்கு ஏறவிடாமல் நிறைய மொக்கை போட்டிருக்கேன். "யூ நோ...கிக்கு மீன்ஸ் கிக்கு......"ன்னு சில துரைமார்கள் மெனெக்கெட்டிருக்கிறார்கள். "தம்பீ...இதெல்லாம் கலர் மலையாளப் படம் மாதிரி...ஒரு மகோன்னத அனுபவம்...யாராலயும் சொல்லி புரிய வைக்க முடியாது"ன்னு நிறைய உஷார் மாக்கான்கள் நழுவியிருக்கிறார்கள்.

"அந்த கன்றாவில அப்படி என்னதான் இருக்குன்னு பார்த்துடனும்"ன்னு ரொம்ப நாளாகவே பீடிகை போட்டு வந்தேன். மெட்ராஸில் டூ வீலர் லைசன்ஸ் மாதிரி சப்பையாய் முடிய வேண்டிய மேட்டர், கல்யாணமாகி பத்து வருஷம் நல்லவனாய் நடித்ததில் நேஷனல் பெர்மிட் மாதிரி கொஞ்சம் இழுத்தடித்துவிட்டது. இதில் இரண்டு குழந்தைகளுக்கு வேறு பொறுப்பான அப்பாவாக ஆக்ட் குடுத்துக் கொண்டிருப்பது விஷயங்களை மேலும் சிக்கலாகிவிட்டது.

2012-ல வேற உலகம் அழியப் போகுதுன்னு சொல்லிட்டாங்களேன்னு பிரஷர் ஏற ஆரம்பித்து, ஏதோ ஒரு நல்ல நாளில் ஆரம்பிக்கலாமேன்னு நாளும் குறித்தாயிற்று.

முன்ன பின்ன செத்தா தானே சுடுகாடு தெரியும்ன்னு ஆபிஸில், பக்கத்திலிருந்து ஆளிடம் பேச்சு வாக்கில் "எப்பா ராசா வெள்ளிக்கிழமையானா பாருக்கு கோலம் போடப் போகறியே எங்கூர்லன்னா டாஸ்மார்க்...இந்தூர்ல எந்த ப்ராண்ட்யா நல்லாயிருக்கும்"ன்னு கேட்க அம்புட்டு தான் ஆபிஸ் இருந்த அத்தனை பேரும் ஆளுக்கு ஆள் வந்து ரவுண்டு கட்டி அட்வைஸ் குடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் ஏதோ டபுள் டீர் பிராண்ட் பாஸ்மதி அரிசி மாதிரி ஒரு பெயர சொல்லுவான் கடைக்குப் போய் அதுல ஒரு பாட்டில் பேப்பர் சுத்தி குடுங்கன்னு வாங்கிட்டு வந்துடலாம்ன்னு பார்த்தா...விஷயம் ஏகத்துக்கும் காம்ப்ளிகேட்டாய் இருந்தது.

"பீர்லாம் வேண்டாம் முதல் தரம் பிடிக்கவே பிடிக்காது...வைன்ல ஆரம்பி அதான் உடம்புக்கு நல்லது"

"ஒக்கே...எந்த ப்ராண்ட்..."

"ப்ராண்ட்..ஓ யூ மீன் ஒயிட் ஆர் ரெட்..? .ரெட் வொயின் ஆரம்பி அதான் உன்னை மாதிரி கத்துக் குட்டிக்கெலாம் வாடை குறைய இருக்கும்..."

"ஓ அப்படியா...சரி...(இந்த மரமண்டையனுக்கு ப்ராண்ட்ன்னா தெரியல போல) ...ஓக்கே ரெட் வைன் புரிஞ்சுது ஆனா அதுல எந்த ப்ராண்ட்..ஐ மீன் லேபிள்..."

"லேபிள்...?? ரெட் லேபிள், ப்ளூ லேபிள் அதெல்லாம் விஸ்கில தான் ...வைன்ல கிடையாது...வைன்ல வருஷம் தான் கணக்கு.."

"கிழிஞ்சுது போ...ஓ இது அரிசி மாதிரியா..ஓக்கே பாத்துக்கறேன்..."ன்னுய் நழுவினாலும் விடவில்லை. இந்த வைன் இந்த சாப்பாடு கூட சாப்பிடனும் அந்த வைன் அந்த சாப்பாடோட சாப்பிடனும்ன்னு ஏகத்துக்கு குழப்பினார்கள். எங்கூர் தரமணி டாக்கிஸில் எல்லாத்துக்கும் கொண்டக் கடலை சுண்டலும், அவிச்ச முட்டையும் தானே சைட் டிஷ் வைப்பாங்க...அப்போ ஏமாத்திட்டாங்களான்னு எனக்கு ஏகத்துக்கும் டவுட்டு.

இதுல வைனை எடுத்து அப்படியே மடக்குன்னு குடிக்கக் கூடாதாம். வாயில விட்டு வெல்லப்பாகை சப்புக் கொட்டி சாப்பிடுவது போல மெதுவாய் நாக்கில் படுகிறமாதிரி பதமாய் டேஸ்ட் செய்ய்வேண்டுமாம். போ போ போய்டே இரு...நான்லாம் பரம்பரை ரவுடி...பாட்டில கவுத்தினேன்னா...பாட்டில் வழியா வானம் தெரிஞ்சாத் தான் பாட்டில கீழ இறக்குவேன்னு அப்படியே அவனை விரட்டிவிட்டேன்.

"ஓக்கே ஓக்கே...சூதனமா இருந்துக்கோ...குடிக்கும் போது ஏதாவது டவுட்னா எனக்கு ஒரு போன போடு, நான் க்ளியர் பண்ணறேன்னு ரெண்டு மூனு பேர் ஏகத்துக்கும் நல்லவன்களாய் இருந்தார்கள்.

டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா... கடைக்குப் போய் "அண்ணாச்சி ரெட் கலர்ல ஒரு வைன் குடுங்க"ன்னா குடுத்துட போறாரு. ஆபிஸில வேலைல சந்தேகம்னா ஒரு பயலும் திரும்பிக் கூட பார்க்காதீங்க....இப்படி ஒரு நல்லவன குடிச்சிக் கெடுக்கனும்ன்னா அடுத்த டிப்பார்ட்மென்ட் பெண்மணிகள் முதற்கொண்டு வந்து அட்வைஸ் பண்ணுங்கடான்னு எனக்கு ஏகத்துக்குப் பெருமை.

இருந்தாலும் விஷயம் இன்னும் குழப்பமாய் இருந்ததால், பொறுமை அதிகமாயிருக்கும் கலயாணமாகாத பேச்சிலர் பசங்களில் ஒருத்தனைப் பிடித்து "என்னய்யா குழப்புறாய்ங்க...என்னம்மோ ஐ.ஏ.எஸ் பரிட்சை மாதிரி ஆயிரத்தெட்டு சிக்கல பின்னுறாங்க..."ன்னு புலம்பியதில், நம்ம பேச்சிலர் பல நாடுகளில் இருந்தும் வரும் சரக்குகள் பற்றியும் திராட்சைகள் பற்றியும் அவற்றின் தாத்பரியங்களை பற்றியும் விலாவாரியாக எடுத்துரைத்தார்.

"ஏற்கனவே உங்களுக்கு தலை கால் தெரியாது இதுல முதல் தரம் வேற வைன்லாம் வெளில வெச்சு எங்கயாவது குடிக்கவேண்டாம் முதல்ல வீட்ல கொஞ்சமா ட்ரை பண்ணிப் பாருங்க"ன்னு தங்கமணி ஏக கரிசனம்.

அதுவும் சரிதான் நாம ஏற்கனவெ ரொம்ப பெரிய ரவுடி இதுல சரக்கு உள்ள போச்சுன்னா அப்புறம் எவன் அடிச்சான்னு கூட சொல்லத் தெரியாதுன்னு தலையாட்டிவிட்டேன்.அடுத்த வாரம் டெஸ்கோவிற்க்கு போன போது ஒரு சரக்கு ஆபரில் போட்டிருந்தார்கள். நம்ம பேச்சிலரிடம் நெட்டுறு போட்டதில் எனக்கு சரஸ்வதி சபதம் சிவாஜி மாதிரி "அ..அம்மா...ஆ....ஆடு...இ..இலைன்னு" உடம்பில் நரம்புகள் முறுக்கேறி பட்டென்று வாங்கி வந்துவிட்டேன்.

வெள்ளிக்கிழமை மஹாலெட்சுமிக்கு உகந்த நாள் என்று தங்கமணி தடா போட்டதில் தண்ணி முஹூர்த்தம் சனிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சனிக்கிழமை மகள்களை அப்படி இப்படி என்று தாஜா காட்டி தூங்கப் போக சொல்லிவிட்டு பாட்டிலை உதறலோடு கையில் எடுத்த போது மணி இரவு பதினொன்று. "ஐயா முதல் தரம் பூஜை போடப் போறேன்...சைட் டிஷெல்லாம் அமர்களப் படுத்திடனும் என்ன...கொண்டக் கடலை சுண்டல், சிப்ஸ் வித் சல்சா டிப்பிங்...ஸ்பைசி கேஷ்யூநட்ஸ், காரமாய் பரோட்டா குருமா..எல்லாம் கரெக்டா இருக்கனும்...சரக்கு உள்ள் போச்சுன்னா அப்புறம் என் பேச்சை நானே கேட்கமாட்டேன் பேஜாராகிடும்"ன்னு தங்கமணிக்கு ஏகப்பட்ட பில்டப் வேறு குடுத்திருந்தேன்.

எத்தனை படங்களில் ட்யூஷன் எடுத்திருப்பார்கள்...பாட்டிலை தலையில் ஒரு தட்டு தட்டி, அடியில் ஒரு தட்டு தட்டி ஸ்க்ரூவை முறுக்கினால் ஈ.ஸியாய் திறக்கலாம்...ன்னு சீலை உடைத்தால் "கார்க்" பெப்பரப்பேன்னு முழித்துக் கொண்டிருந்தது. பாழாய்போன பரதேசி பேச்சிலர் கார்க் போட்டு மூடியிருபார்கள் என்று சொல்லாமல் விட்டு விட்டான்.எங்க வீட்டில் சென்னா டின் ஒப்பன் பண்ணும் டின் ஓப்பனர் மட்டுமே.

விட்ட சைட் டிஷ் அலப்பரையில் தங்கமணி ஏற்கனவே செம டென்ஷனாகியிருந்தார். இதுக்குத் தான் இந்த பில்டப்பான்னு காறித் துப்பி விடுவார்ன்னு ராத்திரி அவசரமாய் அலைந்து பக்கத்து கடையில் "வீட்டுல கிச்சன் சிங்க் பைப் புட்டுக்கிச்சு அதை சரி பண்ண அவசரமா கார்க் ஒப்பனர் வேணும்ன்"னு வாங்கி வந்து ஓப்பன் செய்தால் ஒயின் நாற்றமான நாற்றம். நான் வேற பந்தாவா முக்கால் க்ளாஸ் ஊற்றிக் கொண்டுவிட்டேன். இந்த இழவையா குடிக்கப் போறீங்கன்னு தங்கமணிக்கு ஏக சிரிப்பு. "இதெல்லாம் கனவான்கள் குடிக்கிற சோமபானம்"ன்னு அரை க்ளாஸ் உள்ளே போவதற்க்குள் முழி பிதுங்கி இருந்த சைட் டிஷெல்லாம் காலி.

"சும்மா சைட் டிஷ்ஷை மட்டுமே சவசவன்னு மென்னு காலி பண்ணிட்டீங்க..கோட்டா ஓவர் .திரும்பலாம் கிடைக்காது"ன்னு தங்கமணி கறாராய் சொல்லிவிட்டார். இருந்தாலும் நான் குடித்துவிட்டு ஏதாவது கோமாளிக் கூத்தடிப்பேன் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்.

என்னாடா நாம புதுசா இருந்தாலும் அரைக் க்ளாஸ் அல்ரெடி அடிச்சாச்சு...இருந்தும் இந்த கிக்கு ஒன்னும் வரலையே ஒரு வேளை சோடா கலக்கனுமோ..நம்மாள் சிலபஸ்ல அதெல்லாம் சொல்லலையேன்னு எனக்கும் கவலை வர ஆரம்பித்தது.

"என்னங்க ஏதாவது ஏறிச்சா"ன்னு தங்கமணி வேற கார்பரேஷன் தண்ணி டேங்கில் ஏறியாச்சா தொனியில் அடிக்கடி வினவிக்கொண்டிருந்தார்.

"சும்மா தொனதொனக்காத மனுசனை ஒரு ஃபீலிங்காய் இருக்கவிடு இப்பத் தான் ஏறிகிட்டு இருக்கு"ன்னு சமாதானம் சொன்னாலும் கிக்கு ஏன் ஏறவில்லை, ஒரு வேளை டூப்ளிகேட் சரக்கா இருக்குமோன்னு கவலையாயிருந்தது.

"ஒரு வேளை உங்களுக்கு தெரியாம அல்ரெடி கிக்கு ஏறியிருக்கும்...மாடிப் படில ஏறிப் பாருங்க...ஸ்டெடியா இல்லைன்னா தெரிஞ்சிடும்"ன்னு தஙகமணி சொன்ன போது ஏதோ ஹிட்டன் அஜென்டா இருக்கும் என்று உள்மனசு சொன்னாலும் ஏறித் தான் பார்ப்போமே கழுதை ஸ்டெடியா இருகோமான்னு தெரிஞ்சிடப் போகுதுன்னு ஏறியதில்,அபடியே அங்க உணர்த்தி இருக்கும் நைட் டெரெஸ்ஸை எடுத்துக் கொண்டும் வரும் ஆர்டர் தேறியது தான் மிச்சமே தவிர கிக்கு ஒன்னும் ஏறியது மாதிரி தெரியவில்லை.

ரைட்டு நம்ம ஆர்நால்ட் பாடிக்கு அரை கிளாஸெல்லாம் போதாது போலன்னு இன்னும் ஒரு கால் க்ளாஸ் ஏத்தியதில் காய்ச்சல் வந்தால் லேசாய் கண்கள் கணக்குமே அது மாதிரி இருந்தது. வந்தாச்சு...வந்தாச்சு...கிக்கு வந்தாச்சுன்னு மாப்பிள்ளை வீட்டு காரார்கள் வந்த மாதிரி சவுண்டு விட்டதில் தங்கமணி லேசாய் அரண்டு விட்டார். உண்மையிலேயாவா இது எத்தனை சொல்லுங்க..ன்னு விரலெல்லாம் காட்டிக் கேட்க ஆரம்பித்துவிட்டார். நானும் இதான் சாக்குன்னு "மீனா வந்து சரக்கு வைச்சிருக்கேன் இறக்கி வைச்சிருக்கேன் பாட்டு பாடனும்ன்னு" தெகிரியமாய் கோரிக்கை வைக்க...தங்கமணி எனக்கு உண்மையிலேயே ஏறிவிட்டது என்று முடிவுகட்டி "உங்களுக்கு ஏறியாச்சு இதோட போதும்"ன்னு மங்களம் பாடிவிட்டார். அதுக்கு மேல ரவுசு விட்டால் தங்கமணியிடமிருந்து வேற மாதிரியான நிஜ கிக்கு வரும் என்பதால் நானும் மலையேறிவிட்டேன்.

அட கருமாந்திரமே காய்ச்சல் வந்த மாதிரி இருக்கிற இந்த இழவுக்கா குடிக்கிறாங்க இதான் கிக்கா இதுக்கு ரெண்டு பாராசிட்டமால் மாத்திரை போட்டாலே போதுமேன்னு ஏமாற்றமாய் இருந்தது.

பின்னொரு நாளில் சில நெருங்கிய நட்பு வட்டத்தின் ஆன்சைட் ஹெல்ப்புடன் கிக்கு என்றால் என்ன என்று கண்டிப்பாய் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கைடன்ஸுடன் திரும்ப பால பாடம் எடுத்து அஙகேயே ஏத்து ஏத்துன்னு ஏத்தியதில் தலை சுத்தி ஒரு வழியாய் கிக்கு வந்து தொலைத்தது. அதிலும் நட்பு வட்டத்துடன் அடித்த கோமாளிக் கூத்து தான் ரொம்ப ஜாலியாய் இருந்ததே தவிர கிக்கு ஒன்னும் அப்படி ரொம்ப சொல்லிக்கிற மாதிரி இல்லை.

Saturday, January 02, 2010

புத்தாண்டு வாழ்த்துகள்

அனைவருக்கும் மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !!!

"கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்"