Sunday, October 31, 2010

லவ் லெட்டர்

சாமஜ வர கமனாவோ, அலைபாயுதேவோ கேட்டுக்கொண்டே கேசரி பஜ்ஜியை அலேக்காய் லவட்டிட்டு, பில்டர் காப்பியை சுர்ர்ர்ன்னு உறிஞ்ஜி விட்டு, "எங்க சௌம்யா வத்தக்குழம்பு வைச்சா அடுத்த தெரு வரைக்கும் மணக்கும்" டயலாக்கையெல்லாம் கேட்டுவிட்டு, சவுகரியமாய் ஊருக்குப் போய் கலந்து கேட்டு லெட்டர் போடறோம்ன்னு பழைய சினிமாவில் வருவது மாதிரியோ, இல்லை தமிழ் மேட்ரிமோனி டாட் காம்மில் போட்டோஷாப்பில் டச் செய்த போட்டோவை அப்லோடிவிட்டு "சோ அன்ட் சோ கம்பெனியில் சோ அன்ட் சோ சேலரி ட்ராயிங் மாநிறமான பையனுக்கு...வெள்ளிக்கட்டியாய் சிவந்த நிறமுடைய, பெரியவர்களை மதிக்கும், கடவுள் நம்பிக்கையுள்ள, எந்த தோஷமும் இல்லாத, சாப்ட்வேர் கம்பெனியில் வேலைப் பார்க்கும் பெண் வேண்டும்"ன்னு தகப்பனார் ஜாதாக பரிவர்தனை செய்ய ஆரம்பிப்பதற்கு வெகு முன்னாலேயே எதைத் தின்றால் பித்தம் தெளியும்ன்ன்னு ரெண்டாவது அட்டெம்ப்ட்டில் காதலாகி கசிந்துருகும் என்னை மாதிரி அபாக்கியவான்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவால் - "லவ் லெட்டர்".

அதிலும் முதல் லவ் லெட்டர் இருக்கிறதே மிகப் பெரிய இம்சை. இப்போது மாதிரி கூகிளில் "கத்ரீனா" என்று பாதி டைப் அடிக்கும் போதே "கைஃப்"ன்னு முடித்துக் குடுத்து கூடுதலாய்  "...ஹாட் போட்டோஸ்ன்னு" மிச்சத்தை ப்ராம்ப்ட் செய்யும் உதவி எல்லாம் கிடையாது. , " சார்ட்டர்டே டிஸ்கோவுக்குப் போகலமா"ன்னு திரையுலக பாடலாசிரியர்கள் கூப்பிடாத ஒரு காலத்தில் லவ்வி எக்கச்சக்கமாய் மாட்டிக்கொண்டேன். எனக்குத் தெரிந்த லெட்டர்கள் எல்லாம் நேருமாமா தன் மகள் இந்திராகாந்தி அம்மையாருக்கு எழுதிய கடிதங்கள் தான். அதிலும் அவர் பாட்டுக்கு அந்த நாட்ட பார்த்தியா இந்த நாட்ட பார்த்தியான்னு பக்கம் பக்கமாய் மகளை கொஞ்சி இருப்பார். இப்படியெல்லாம் லெட்டர் போட்டால் "அப்படியே மெட்ராசிலயே ஒழிஞ்சு போன்னு" திரும்ப பதிலுக்கு டெலிகிராமே வந்துவிடும் என்று தீர்மானமாய் தெரிந்தால் எதுக்கு வம்பு என்று ரொம்ப நாள் லெட்டரே போட்டவில்லை.

மெட்ராஸ் பட்டிணம் ஒரு கெட்டுக் குட்டிசுவரான ஊர். லவ் பண்ணுபவரக்ள் அம்மாவாசை பௌரணமியானால் காதலிக்கு குரங்கு பொம்மையோ கழுதை பொம்மையோ வாங்கி கழுத்தில் பட்டுக் குஞ்சலம் ஒன்றை கட்டி "ஐ லவ் யூ" என்று எழுதி பிங்க் கலரில் உதடு படம் ஒன்றை போடவேண்டும் என்று கோட்பாடு வைத்திருக்கிறார்கள். தங்கமணி வீட்டுக்கு இந்த மாதிரி எல்லாம் அனுப்பினால் "இந்தம்மாக்கு இதெல்லாம் வராதே"ன்னு போஸ்ட்மேனே திறந்து பார்த்து அங்கே டோர் டெலிவரி செய்வதற்கு பதிலாக நேர எங்க வீட்டில் போய் வாழ மட்டையை கொழுதினாற் போல் நல்ல புகைய விட்டு, மாமா காதில் மேட்டரை டெலிவரி செய்து,  "நல்லாத் தானேடா உன்னை வளர்த்தேன்"ன்னு மாமா மெட்ராஸுக்கு தேடி வந்துவிடுவார் என்பதால் இந்த ரிஸ்க் எடுக்க தெகிரியம் வரவே இல்லை.

கரும்பு படம் போட்ட ஒரு பொங்கல் வாழ்த்து அனுப்பும் போதே அன்புடன் போட்டு கையெழுத்து போட்டால் தப்பாகிவிடுமோ என்று எனக்கு உதறலெடுக்கும். ஏனென்றால் தங்கமணி வீட்டில் ஏகப்பட்ட காம்ப்ளிகேஷன். இந்தப் பக்க வீடு, அந்தப் பக்க வீடு எதிர்த்த வீடுன்னு ஒரே சொந்தக்காரர்கள் கூட்டுக் குடித்தனம். "மெட்ராஸுலேர்ந்து லெட்டர் வந்திருக்கு ஒரு வேளை ஐ.நா சபைலேர்ந்து கூபிட்டு அனுப்பியிருப்பாளோ என்ன அவசரமோன்னு பிரிச்சு படிச்சேன்....நேக்கில்லாத உரிமையா...கையெழுத்து இன்னும் பிடிச்சு வரனும்...கூட ரெண்டு வரி எழுதப்பிடாதோன்னு"ன்னு அரட்டையரங்கமாகிவிடும் அபாயமாய் எனக்குப் பட்டது. (எனக்குத் தான் அப்படி பட்டது அவர்கள் அப்படியில்லை அப்படியில்லை - தெளிவாக சொல்லிக்கிறேன்.)

எப்போதாவது ஒரு தரம் ஊருக்குப் போகும் போது பார்க்கப் போனால் "சௌக்யமா ஊரில் இருந்து எப்ப வந்த"ன்னு ஒவ்வொருத்தராய் கேட்டு நான் பதில் சொல்லி முடியும் போது - வீட்டுக்கு கிளம்பும் நேரமாகிவிடும். வயசுப் பையன் வந்திருக்கானே...(அவர்களுக்குள்) நிச்சயமான பெண் தானே...ரெண்டு பேரும் அப்படியே போய் ஜாலியாய் ஒரு சினிமா பார்த்துட்டு வாங்களேன்னு சொல்வதற்க்கு ஒருத்தருக்கும் வாய் வராது. இதில் தங்கமணியிடம் நான் என்னத்தை பேச.

இதில் தங்கமணியின் பாசக்கார கூட்டத்தில் ஒன்று "போன வாரம் தான் அவளுக்கு பிறந்தநாள்.. உங்களுக்கு தெரியுமோ இல்லையோ..."ன்னு எடுத்துக்குடுக்கும். "ஓ காந்தி இங்கேர்ந்து தான் தண்டி யாத்திரையை ஆரம்பித்தாரா"ன்னு நான் வழிந்துகொண்டே வியக்கும் போது..."நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்"ன்னு கண்ணாம்பா டயலாக்கை தங்கமணி கண்ணாலேயே டெலிவரி செய்வார்.

இதற்கு நடுவில் ஒரு தரம் ஊருக்கு போவதற்கு ஒரு தரம் கேப் விழுந்துவிட்டது.இதான் சமயம் என்று தங்கமணியின் உறவு வட்டத்தில் ஒருவர் "பிள்ளையாண்டன் வேறு சாஃப்ட்வேரில் இருக்கிறான். அந்த கம்பெனியிலெல்லாம் பசங்களும் பொண்ணுங்களும் திங்கள் டு வியாழன் டெய்லி டேட்டிங்கும் மத்த நாளெல்லாம் க்ளப்பிங்குமாய் ஜெகஜோதியாய் இருப்பார்கள் " என்று கிடைத்த கேப்பில் காட்சிலாவை வெட்டி விட்டார். அடுத்த அப்ரைசலில் தங்கமணி அன்பாய் ஏகப்பட்ட ஃபீட்பேக் குடுக்க..."என்னை மாதிரி மூக்கும் முழியுமாய் இருக்கும் பையன்களுக்கு சமுதாயத்தில் இந்த மாதிரி பிரச்சைனையெல்லாம் இருக்கு ஆனால் நான் நல்லவன்" என்ற வாதமெல்லாம் எடுபடவில்லை.

"கம்யூனிகேஷன் இஸ் த கீ" என்று தங்கமணி குடுத்த செமெத்தியான பீட்பேக்கில் லெட்டர் போடவேண்டும் என்று உந்துதல் ஏற்பட்டு எழுத ஆரம்பித்து...ஆரம்பித்து...ஆரம்பித்தது பித்து. "போன தடவை வந்திருந்த போது உங்க வீட்டில் குடுத்த பால்கோவா நன்றாக இருந்தது...நீயே செஞ்சதா" போன்ற அன்பான விசாரிப்புகள் லவ் லெட்டர் இலக்கணத்தில் வராததால் கொஞ்சம் தெவங்கிவிட்டேன். அப்புறம் உங்க வீட்டு கன்னுக்குட்டி எப்படி இருக்கு? தெரு நாய்க்கு காய்ச்சல் தேவலையா என்று ரீதியில் ஏதோ எழுதி வீட்டில் வேறு யாரிடமும் காட்டவேண்டாம் என்ற அபத்த டிஸ்க்ளெய்மரெல்லாம் போட்டு முடித்தேன். அதற்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் தேறி "கண்மணி அன்போட நான் நான் நான்" என்று தலைவர் படத்து மேற்கோளெல்லாம் போட்டு ரஜினி முத்து பட டயலாக்கையெல்லம் போட்டு முடித்து ஏதேதோ சமாளித்தேன் என்பது சப்ஜெக்ட்டுக்கு தேவையில்லாதது.

இப்பவும் அந்த முதல் லெட்டரை தங்கமணி பத்திரமாய் எடுத்துவைத்திருக்கிறார். "என்ன இருந்தாலும் தலைவன் தலைவிக்கு எழுதிய காதல் திணையல்லவா" என்ற எனது நினப்பில் மண்ணைப் போட்டு என் மகள் பெரியவளானதும் காட்ட வேண்டுமாம். லவ் லெட்டர் எப்படியெல்லாம் எழுதக் கூடாதென்று. அது சரி......இந்த உலகம் இருக்கே உலகம்...