Tuesday, March 28, 2006

நான்கெட்டு நீகெட்டு கிரிகெட்டு - 3

For previous parts -- > Part1    Part2இப்படி தெரு மாமிகளுடன் நாங்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த காலகட்டத்தில், கிச்சா புண்ணியத்தில் மேட்ச் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தோம். கிச்சாவுக்கு வடக்குத் தெரு. நான் வடக்குத் தெருவிலும் அன்றாட கிரிக்கெட் விளையாடுவேன் என்பதால் ஒரு நாள் வடக்குத் தெரு Vs சன்னதித் தெரு மேட்ச்சுக்காக நூல் விட்டான். அன்றே சன்னதித் தெரு கிரிக்கெட் போர்ட்டை கூட்டியதில், எங்கள் டீமுக்கு இணையாக சொதப்புவதற்கு வடக்குத் தெரு டீமினால் மட்டும் தான் முடியுமென்றும் நாமும் மேட்சில் ஜெயித்தோம் என்று சொல்ல வேண்டுமென்றால் இதை விட்டால் சான்ஸே இல்லை என்றும் பந்துலு வீராவேசமாக பேசினான். பேசினதோடு இல்லாமல் என்றைக்கும் இல்லாத அதிசயமாக ஓப்பனிங் அக்கவுண்டாக இருபத்தைந்து பைசாவையும் பிச்சாத்து காசு என்று விட்டெறிந்து விட்டான்.

பந்துலுவே காசு குடுத்துவிட்டானே என்று கல்லா மட மடவென நிரம்பிவிட்டது. தெரு கவுன்டி மேட்சுக்கெல்லாம் பந்தயம் "அப்பு" பிராண்ட் ரப்பர் பந்து அல்லது இரண்டு ரூபாய். கிச்சா ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டான் இரண்டு ரூபாய் தான் பந்தயம் என்று. இந்தமாதிரி மேட்சுக்கெல்லாம் எல்லாம் ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் நாலு மணிக்குத் தான் முஹூர்த்தம். கிரவுண்டில் மாமிகளும் இல்லாததால் எங்களுக்கு பவுலிங் சரியாக வரவில்லை. வந்த பந்தை எல்லாம் கிச்சா அன்ட் கோ விளாசித் தள்ளியது. பெயரை மட்டும் 'பந்துலு' என்று வைத்துக்கொண்டு வந்த பந்தை எல்லாம் பந்துலு கோட்டைவிட்டான். கன்னுக்குட்டி கணேசன் எலிக்குட்டி மாதிரி அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டே இருந்தானே ஒழிய பந்தைப் பிடிக்கவே இல்லை. இந்தியாவை விட கேவலமாக தோத்துவிட்டு வந்தோம். கிச்சா அண்ட் கோ எங்கள் முன்னாடி பந்தய பணத்தைப் பங்கு பிரித்துக் கொண்டு கடலை மிட்டாய் வாங்கித் தின்றது. அப்புறம் கிச்சாக்கு கடலை மிட்டாய் அரிப்பு எடுக்கும் போதெல்லாம் எங்களை மேட்சுக்கு கூப்பிட ஆரம்பித்தான். எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். அப்புறம் நாங்களும் கடலை மிட்டாய் சாப்பிட ஆரம்பித்தோம். இப்பிடி எங்கள் டீம் உள்ளூரில் பிரபலமாக ஆரம்பித்த போது ஒரு நாள் கல்லிடையிலிருந்து மேட்சுக்கு தூது வந்தது.

இங்கே கல்லிடையைப் பற்றி சொல்லிவிட வேண்டும். கல்லிடை குரங்குகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் எங்களுக்கெல்லாம் ஒரு வால் கம்மி தான். அங்கே சில தெருக்கள் நாலு தேர் ஓடுமளவுக்கு ரொம்ப அகலம். சில தெருக்களில் சைக்கிள் அகலத்தில் தான் ஆட்டோ ஓடவேண்டும். கொல்லைப்புறத்திலிருந்து ஓடி வந்தால் நிற்பதற்குள் எதிர்த்த வீட்டுக்குள் போய் விடுவோம். இப்படி பல்வேறு தரப்பட்ட தெருக்களில் விளையாடி கொரில்லா டிரெயினிங் எல்லாம் எடுத்திருப்பார்கள். கிரிக்கெட்டில் டகால்டி வேலைக்குப் பெயர் போனவர்கள். பாய் கடையில் ரொட்டி சால்னா(பரோட்டா) சாப்பிட்டுவிட்டு சினிமா போவதற்காக கிரிக்கெட் மட்டையை கையிலெடுத்த கூட்டம் அது. விளையாட ஆரம்பித்தால் ரொட்டி சால்னா வெறி கண்ணில் தெரியும். ஆளுக்கு இத்தனை ரொட்டி என்று கணக்குப் போட்டுத் தான் பந்தயப் பணத்தையே நிர்ணயம் செய்வார்கள்.

எப்படியோ எங்களை மோப்பம் பிடித்து இரண்டு பொடியன்கள் தான் சைக்கிளில் முக்கால் பெடல் போட்டுக் கொண்டு மேட்ச் பேச வந்தார்கள். பசங்களைப் பார்த்ததும் பந்துலுக்கு உற்சாகம் தாளவில்லை. " நான் நோண்டி நோண்டி கேட்டாச்சு ..இவா தான் டீமில் சீனியராம்...பிஸ்கோத்து டீமாகத் தான் இருக்கும்னு நினைக்கறேன்...நாமும் எத்தனை நாள் தான் கடலை மிட்டாய் சாபிடுவது...சக்தி தியேட்டரில் உம்மாச்சிப் படம் போட்டிருக்கான்...எல்லாரும் டீமா சேர்ந்து பார்த்துட்டு வரலாம்"னு இருபது ரூபாய் பந்தயம் பேசிவிட்டான்.

மேட்ச் பெரிய கிரவுண்டில் காலை பதினொன்றுக்கு என்று பேச்சு. காலையில் வெய்யிலில் எல்லாம் எங்கள் வீட்டில் மாமா மேட்சுக்கு விட மாட்டார். அந்தக் காலத்தில் தூக்குச் சட்டியில் புளியோதரை, தயிர் சாதம்மெல்லாம் கட்டிக் கொண்டு வயக்காட்டில் எப்படி கிரிக்கெட் விளையாடினார் என்று சிலாகித்து சொல்லிவிட்டு "கிரிக்கெட்டை விட படிப்பு தான் நமக்கு முக்யம்" என்று மாரல் ஆஃப் த ஸ்டோரி ஒன்று சொல்லிவிட்டு படிக்கப் போகச் சொல்லிவிடுவார். அதனால் நானும் ட்யூஷன் ஸ்பெஷல் க்ளாஸ் என்று சொல்லிவிட்டு இந்த மாதிரி மேட்ச்சுக்குப் போவேன் (நல்லவேளை மாமா ப்ளாக் படிக்க மாட்டார்).

மேட்ச் தினத்தன்று பந்துலுவும் மொட்டை மணியும் திகிலோடு வந்தார்கள். "டேய் மோசம் போய்ட்டோம்டா...மேட்ச் பேச வந்தது தான் பொடிப் பசங்க...இப்ப மேட்சுக்கு எல்லாம் மாக்கான் மாக்கானானா வந்திருக்காங்கடா" என்று ஓலை வாசித்தார்கள். முக்கால் பெடல் போட்டு வந்த பொடியர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே அவுட் சோர்ஸிங் செய்யப்பட்டிருந்தார்கள். கன்னுக்குட்டி பிடிப்பவனையும், அஜீத் ஹிட் படம் குடுக்கற மாதிரி விளையாடும் காட்டான் கணேசனையும் வைத்துக் கொண்டு விளையாடுவதை விட இருபது ரூபாயை தட்டில் வைத்து தட்சிணையாக கொடுத்துவிட்டு வந்துவிடலாம். அவர்களை கிரவுண்டுக்குப் போகச் சொல்லிவிட்டு நாங்களும் அவுட் சோர்ஸிங்கை ஆரம்பித்தோம். கையில் காலில் விழுந்து கிச்சா டீமிலிருந்து நல்லதாக நாலு பேரையும், இன்னும் வேறு ஒரு டீமிலிருந்து நாலு பேரையும் பொறுக்கி எடுத்துக் கொண்டு போனோம்.

ரொட்டி சால்னா வெறிக்கு முன்னால் ஏதாவது நிற்க முடியுமா? கல்லிடை காட்டான்கள் பொளந்து கட்டி விட்டான்கள். இருவத்தைந்து ஓவரில் நூற்றி அறுபது ரன்கள் எடுக்கவேண்டும். கிச்சாக்கு டகால்டி வேலையில் நிறைய பரிச்சயம் உண்டு. அவனை ஸ்கோரராகப் போட்டோம். இந்த மாதிரி மேட்சில் பேட்டிங் ஸைட்டிலிருந்து தான் அம்பயர் என்பது வழக்கம். ரொம்ப நடுத்தரம் மாதிரி நடிக்கும் இரண்டு பேர்கள் தான் இருப்பார்கள். க்ளீன் பவுல்ட்டுக்கு மட்டும் தான் அவுட் என்று கொஞ்சம் வெவரமாக உளத்த தெரிந்திருக்கவேண்டும். கிச்சா டீமில் இது மாதிரி ஒருத்தன் உண்டு. என்ன கத்தி அப்பீல் கேட்டாலும் அசைந்தே குடுக்கமாட்டான். விடிய விடிய கதை கேட்டு சித்திக்கு சரத்குமார் சித்தப்பா என்று அசால்டாக வாதாடுவான். அவனையும் அம்பயராகப் போட்டோம். காட்டான் கணேசன் அஜீத் நாக்கைச் சுழட்டி பேசுவது மாதிரி பேட்டை சுழற்றி கொஞ்சம் ரன்கள் குவித்தான். என்னையும் சேர்த்து மற்றவர்களும் சுமாராக விளையாடினோம். கிச்சா ஸ்கோரில் அருமையாக விளையாடினான். காட்டான்களும் நிறைய எக்ஸ்ட்ராஸ் குடுக்க கடைசி ஓவரில் ஒரு விக்கட் மிச்சம் இருக்க...ஒரு எல்.பி.டபிள்யூவிற்கு ஆக்ரோஷமான அப்பீல். எதற்கும் அசையாத நம்ம அம்பயர் ஏதோ நியாபகத்தில் ஒரு விரல் கிருஷ்ணாராவாகி அவுட் என்று நெற்றி வரை கொண்டுவந்து விட்டான். சக்தி தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த "உயரான் ஒருமிக்கான்" (மலையாள கலர்) உந்துதலில் எங்கள் டீம் "நாட் அவுட்" என்று உயிரை விட்டு எதிர் குரல் குடுக்க, அம்பயர் முழித்துக் கொண்டான். என்ன சொல்லப் போகிறான் என்று எல்லாரும் அவனையே திகிலுடன் பார்த்துக்கொண்டிருக்க... உச்சா வருது என்பது போல் வைத்துக்க்கொண்டிருந்த விரலுடன் "ஒன் மோர் பால் டு கோ" என்றானே பார்ப்போம். அதற்கப்புறமும் அந்த மேட்சில் ஜெயிக்காமல் இருப்போமா?

"உயரான் ஒருமிக்கான்" படம் போவதற்கு எனக்கு அப்போது அவ்வளவு தில் இல்லை . காட்டான் கணேசன் தலமையில் வானரப் படை போய் வந்தது. நான் டியூஷன் போகும் "அழகர் ராஜன்" சாரும் உயரான் ஒருமிக்கானை காண வந்திருந்தார் என்று மொட்டை மணி சொன்னான். அவரிடம் கேட்க எனக்கு தைரியமில்லாதலால் நானும் அதை உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை.ஆனால் அந்த அம்பயர் வெறும் ராஜாவிலிருந்து "அம்பயர் ராஜா"வாகி சுற்றுவட்டாரத்தில் மிக பிரபலாமாக ஆகிவிட்டான். எந்த மேட்சானலும் அவனை கூட்டிப் போக சைக்கிளில் ஆள் வரும்.

பி.கு - இந்த சம்பவத்தை நான் ப்ளாக் ஆரம்பித்த புதிதில் ஆங்கிலத்தில் பதிந்திருந்தேன். உங்களில் சிலர் படித்திருக்கலாம்.

இந்தத் தொடருக்குப் பொருத்தமான படத்தை எங்கிருந்தோ சுட்டு அனுப்பிவைத்த லண்டன்காரருக்கு நன்றி

Wednesday, March 22, 2006

நான்கெட்டு நீகெட்டு கிரிகெட்டு - 2

For previous parts -- > Part1


தெரு கிரிக்கெட்டில் முதல் சவால் எங்கே ஸ்டெம்ப் நடுவது என்பது தான். ஒரே இடத்தில் டெய்லி விளையாடினால் அந்த வீட்டு மாமிக்கு சாமியேறி ஸ்டெம்ப் வெந்நீர் அடுப்புக்கு போய்விடும். முதலில் பையன்கள் ஒரு கூட்டமாக நின்று விளையாடாமல் 'கொச கொச'வென்று பேசி ஒரு முன்னோட்டம் நடக்கும். பிரச்சனை வருவதென்றால் இதற்குள் மூக்கில் வேர்த்து "குச்சியை இங்க நட்டேள் தெரியும் சேதி" என்று ஆரம்பித்து "பாய்ஞ்சு அடிக்கிறதுல பல்லி...பாயாம அடிக்கிறதுல வில்லி" என்று சிவகாசி விஜய் டயலாகெல்லாம் பேசி முடிப்பதற்குள் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்துவிடுவோம். ஆனால் அத்தோடு ஓயாது. அந்த மாமியும் அதற்கப்புறம் பீல்டிங்க்கில் இருப்பார்கள். பந்து தப்பித் தவறி அந்தப் பக்கம் போனது என்றால் லபக் தான். இதுல் கூட்டணியெல்லாம் வேறு சேர்ந்துகொள்வார்கள். காப்பிப் பொடி கடன் சண்டையெல்லாம் மறந்து கூட்டணி சேர்ந்து, கிரிக்கெட் நிறய தரம் ரக்பியான கதையெல்லாம் நடந்ததுண்டு.

விளையாடும் போது சில சமயம் பந்தை தூக்கி அடித்தால் போச்சு. யார் வீட்டு முற்றத்திலாவது, கொல்லைப்புறத்திலாவது விழுந்துவிடும்.தெருவில் வெகு சில வீடுகளில் மட்டுமே பந்து இந்த மாதிரி விழுந்தால் திருப்பி தருவார்கள். அனேகமாக அவர்கள் வீட்டு குரங்கு எங்கள் டீமில் இருக்கும். ஆனாலும் "பந்துலு"வின் சித்தி வீட்டில் மட்டும் தரமாட்டார்கள். பந்துலுவை நாங்கள் முறுக்கிற முறுக்கில் எதாவது டகால்டி வேலை செய்து பந்தைக் கொண்டுவருவான். அவ சித்தி விடாமல் தெருவில் வந்து எங்களை தெலுங்கில் திட்டுவார்கள். நாங்களும் பதிலுக்கு "ஏமி எக்கட போயிந்தி எருமைமாட்டுக்கு வாலுந்தி" என்று ஒரு கோரஸ் பாட்டு பாடுவோம். பந்துலு வீட்டுக்குப் போய் எங்களுக்கும் சேர்த்து வாங்கிக்கட்டிக் கொள்வான். மற்ற வீடுகளிலெல்லாம் தட்டோட்டி (மொட்டை மாடி) வழியாக ஏறிக் குதித்து தான் பந்தை மீட்கவேண்டும் . டீமில் உள்ள அனைவரும் மொட்டை மாடி ஏறுவதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.

ஒரு முறை பந்தை எவனோ தூக்கி அடிக்க பந்து ஒரு ரக்பி மாமி வீட்டின் முற்றத்தில் போய் விழுந்துவிட்டது. ரக்பி மாமி, தெருவில் இருந்த ஒரு கோவிலுக்கு போயிருந்தார்கள். ரக்பி மாமி திரும்பி வருவதற்குள் பந்தை எடுக்க வேண்டுமே என்று என்னையும் சேர்த்து மூன்று பேர் கொண்ட மீட்புப் படை தயாரானது.(நிறைய பேர் மொட்டைமாடியில் ஏறினால் பக்கத்து வீடுகளில் மாட்டிக்கொள்வோம்)

ரக்பி மாமி வீட்டு முற்றம் கொஞ்சம் கஷ்டமானது. மற்ற வீடுகளில் சிமிண்ட் தொட்டி இருக்கும் கால் வைத்து இறங்கிவிடலாம். ஆனால் இவர்கள் வீட்டில் சிமிண்ட் தொட்டி கிடையாது. ப்ளாஸ்டிக் தொட்டி தான் உண்டு. எப்பிடி இறங்க என்று யோசித்து, எடை குறைய என்பதால் தண்ணி பிடிக்க வைத்திருந்த ஹோஸ் டியூப்பை கயிறு மாதிரி உபயோகப் படுத்தி பந்தாங்கொள்ளி பாலாஜியை முற்றத்தில் இறக்கிவிட்டோம். பயந்தாங்கொள்ளி பந்தை எடுத்து போட்டது. அதற்குள் மாமி கோவிலில் இருந்து கிளம்பியாச்சு என்று தகவல் வர..பயந்தாங்கொள்ளி பாலாஜி ரொம்பவே பயந்துவிட்டான். பயத்தில் ஹோஸ் டியூப்பை பிடித்து திரும்ப ஏறமுடியவில்லை. வாளியில் ஏற முயற்சித்து பிடித்து வைதிருந்த தண்ணியை வேறு கொட்டிவிட்டான். இதற்க்குள் மாமி கதவை திறக்கிற சத்தம் கேட்க ஆரம்பித்தது. பயந்தாங்கொள்ளி பதறி அடித்துக் கொண்டு வேறு வழியில்லாமல் முற்றத்துக்கு பக்கதிலிருந்த டாய்லெட்டில் போய் ஒளிந்து கொண்டான். எங்க நேரம், மாமிக்கும் அந்த நேரம் பார்த்து தானா வரணும்.. சொல்லி வைத்த மாதிரி நேராக டாய்லெட்டுக்குப் போய் கதவை திறக்க உள்ளே குத்த வைச்ச குரங்காய் பயந்தாங்கொள்ளி ஒளிந்துகொண்டிருக்க...அவனைப் பார்த்து திருடன் என்று நினைத்து மாமி "திருடன் திருடன்" என்று சத்தம் போட..ஒரே அமளி துமளி ஆகிவிட்டது. அப்புறம் வேலை வெட்டி இல்லாத நாலு பேர் சேர்ந்து பஞ்சாயத்து சொல்லி சமாதானப் படுத்தினார்கள். (தண்ணி கொட்டிவிட்டதே அப்புறம் அந்த மாமி எப்பிடி போனா? என்று பின்னூட்டத்தில் சந்தேகம் கேட்காதீர்கள்...ஊரில் எல்லா வீட்டிலும் கிணறு உண்டு :) )

எங்கள் தெரு பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கம் என்பதால் வழிப்போக்கர்கள் தொல்லை வேறு ரொம்ப உண்டு. ஒரு முறை காட்டான் கணேசன் பேட் வழக்கம் போல் செய்து கொண்டிருந்தான். "டேய் காட்டான் ...ரொம்ப வெக்கையா இருக்கு இந்தப் பக்கம் காத்து வர மாதிரி பேட்ட வீசுடா"ன்னு பசங்கள் வெறுப்பேத்த அவனுக்கு வேகம் வந்து பேட் மாதிரி மரத்தில் செதுக்கின ஒரு வஸ்துவை(அது தான் லக்கி பேட் என்று வேறு சொல்லிக்கொள்வான்) சுத்தின சுத்தில் பந்து மீட்டாகி வந்து கொண்டிருந்த ஒருத்தர் நெஞ்சை உண்மையிலேயே நக்கி ஆள் அந்த இடத்திலேயே மயக்கமாகிவிடார். எஸ்.வீ.சேகர் டிராமாவில் வருவது மாதிரி நாங்கள் எல்லோரும் மறைந்துவிட விட்டோம். நான் அடுத்த தெருவிலிருந்த இன்னொரு வீட்டுக்குப் போய் சட்டை மாத்திக் கொண்டு டியூஷனிலிருந்து திரும்ப வருவது மாதிரி நோட்டெல்லாம் எடுத்துக் கொண்டு நல்ல பையனாய் வந்தேன். அதற்குள் அந்த ஆளை உட்கார வைத்து...காட்டான் கணேசனின் சொந்தக்காரரின் ஹோட்டலில் இருந்து காபி வாங்கிக் கொடுத்து ஆசுவாசப் படுத்தி ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். அப்புறம் தான் தெரிந்தது..அவருக்கு லோ பிரஷராம், அதனால் தான் மயக்கமாம் பந்து அடித்ததால் அல்ல என்று. விஷயம் தெரிந்த அப்புறம் காட்டான் கணேசன் தைரியமாய் தெருவில் தலையை காட்டினான். அதற்கப்புறம் அந்த லக்கி பேட்டை அவன் உபயோகப் படுத்துவதை நிப்பாட்டிவிட்டான்.

Monday, March 20, 2006

நான்கெட்டு நீகெட்டு கிரிகெட்டு

மூக்கை ஒழுக்கிக் கொண்டு யாராவது பார்க்கிறார்களா என்று சுத்திப் பார்த்துவிட்டு அதை அப்பிடியே டிரவுசரில் தொடைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த விளையாட்டு எங்க ஊரில் பிரபலமாயிருந்தது. கோலி, பம்பரம், லக்கோரி(கேள்விப் பட்டதுண்டா?), கிட்டிப்புல் (கில்லியை நெல்லை ஜில்லாவில் இப்பிடித் தான் சொல்லுவோம்) லிஸ்டில் கிரிக்கெட்டும் சேர்ந்து கொண்டது. தெருவில் எதாவது ஒரு இ.வ.வை ஏத்தி விட்டு, அது அவங்க அப்பாவை அரித்துப் புடுங்கி பேட் வாங்கும், அதை நாங்கள் எல்லாரும் சேர்ந்து பஜனை பாடுவோம். ஸ்டம்ப் செட் இல்லாத கால கட்டத்தில் நாய் மாதிரி தெருவில் ஒரு போஸ்டை விட மாட்டோம். கொஞ்ச நேரத்தில் அந்த வீட்டு மாமி கண்டன அறிக்கை வாசிப்பார்கள், அடுத்த போஸ்டுக்கு போய்விடுவோம்.

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சன்னதித் தெருவில் என்றாலும் மாமாவுக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தினால் அவர்கள் வீட்டில் தான் பத்து வயதிலிருந்து வளர்ந்தேன். மாமா வீடு வடக்குத் தெரு. வடக்குத் தெரு சன்னதித் தெருவை விட இரண்டு மடங்கு பெரிது. அங்கு பையன்கள் கொஞ்சம் விவரம். சன்னதித் தெருவில் அவ்வளவு போறாது என்பதால் என்னை கேப்டனாக போட்டு ஒரு டீம் ஆரம்பித்தோம். "லகான்" டீம் மாதிரி தான் எங்கள் டீமும். டீமில் நானும் இன்னும் மூன்று பேரும் தான் விஷயம் தெரிந்த மாதிரி பந்தா விட்டுக் கொள்வோம். மத்ததெல்லாம் வேனில் பிடித்து வந்த மாதிரி தான் இருக்கும்.

"கன்னுக்குட்டி" கணேசன்- மஞ்சு விரட்டில் கன்னுக்குட்டியை பிடிப்பது மாதிரி தான் பந்தை பிடிப்பான். பந்து அவனை நோக்கி வந்தாலும் எதிர் கொண்டு பிடிக்கமாட்டான். பந்தைப் போக விட்டு விரட்டிப் பிடிப்பதற்கு தயாராய் ஒரு பக்கமாய் திரும்பி ரெடியாய் நிற்பான். சில சமயம் பந்து அவனை தாண்டுவதற்கு முன்னாடியே ஓட ஆரம்பித்துவிடுவான். கையை கன்னுக்க்குட்டியை பிடிப்பது மாதிரி வைத்துக் கொள்வான். "குட்டி மணி" ஸ்டெம்ப் உயரம் தான் இருப்பான். எண்ணிக்கைக்கு சேர்த்துக் கொண்ட பார்ட்டி. "பயந்தாங்கொள்ளி பாலாஜி" குட்டி மணியை விட கொஞ்சம் உசரம். ஆனால் தெனாலி மாதிரி ஸ்டம்ப், பந்து, பேட் என்று எல்லாத்துக்கும் பயப்புடுவான். பேட்டிங் போது ஸ்லோகமெல்லாம் சொல்லுவான். "காட்டான் கணேசன்" - பேட்டை சுற்றுவதைப் பார்த்தால் எல்லோருக்கும் பயமாய் இருக்கும். பந்து பேட்டில் பட்டால் சிக்ஸர் தான் ..ஆனால் பாதி நேரம் நல்ல ஜோராய் காத்து வரும். மீதி நேரம் பந்துக்கு பதிலாக பேட் தான் அவன் கையிலிருந்து பவுண்டரிக்குப் போகும். "வயித்த வலி" சேது - பீல்டிங் போது மட்டும் இவனுக்கு வயித்த வலி வரும். ஓரமாய் மர நிழலிலிருந்து தான் பீல்டிங் பண்ணுவான். வெய்யிலில் வேறு எங்கயாவது ஃபீல்டிங் செய்யச் சொன்னால் வயித்தவலி ஜாஸ்தியாகி விடும். "பேட்டிங் பாபு" - இவன் பேட்டிங்க் பண்ணி முடிந்தவுடன் கரெக்டாக வீட்டிலிருந்து "அம்மா கூப்பிட்டா" என்று ஆள் வரும், பீல்டிங் மொக்கை போட்டுவிட்டு சமர்த்தாக போய்விடுவான். "செட்டு" சுப்பிரமணி - இவனை நாங்கள் எத்து ஏத்துன்னு ஏத்திவிட்டதின் பலனாக அவன் அவங்க டெல்லி மாமாவிடம் சாமியாடி கிரிக்கெட் செட் வாங்கியவன். அதை டீமுக்கு தாரை வார்த்த வள்ளல். ஆனால் வள்ளல் க்ளீன் பவுல்ட் ஆனால் தான் ஒத்துக்கொள்வார் மத்ததெல்லாம் அவுட் இல்லை. எதிர் கேள்வி கேட்டால் செட்டை எடுத்துக் கொண்டு பேக்கப் சொல்லிவிடுவான் அதனால் இவன் பேடிங்க் பிடிக்க ஆரம்பித்தால் போல்ட் ஆகவேண்டும் என்பது தான் எங்கள் வேண்டுதலாக இருக்கும். "மொட்டை" மணி - நல்ல உளத்துவான்(ஏமாற்றுவான்). கீழே உருண்டு போன பந்தையும் கேட்ச் பிடித்தேன் என்று அவுட் கேட்பான். எப்பவோ மொட்டை அடித்துக் கொண்டதால் மற்ற மணிகளிடமிருந்து வித்தியாசப் படுத்துவதற்காக நிரந்தர மொட்டை மணியானான். "பந்துலு" - பிள்ளையாண்டன் தெலுங்கு மணவாடுலு.. ஆளுக்கு இருபத்தைந்து பைசா போட்டு தான் பந்து வாங்குவோம். ஆனால் பந்துக்கு பைசா பிரிக்கும் போது மட்டும் "பந்துலு" கரெக்டாக காணாமல் போய்விடுவான். கேட்டால் "நைனா சூப்பிஞ்சு" என்று தெலுங்கில் கதை விடுவான். இந்த பசங்களை தவிர இன்னும் மூனு நாலு ஏனோ தனோ அதோடு பந்தா விடுவதற்கு நாங்கள் மூன்று பேர் வேறு.

தெருவில் கிரிக்கெட் விளையாடுவதற்கு தனி தில்லு வேண்டும். கிரிகெட் என்றாலே மாமிகளுகெல்லாம் ஆகாது. மாமிகள் என்றால் சினிமாவில் மடிசார் கட்டிக் கொண்டு பாட்டுக்கு பின்னால் குடையை பிடித்துக் கொண்டு ஆடுவார்களே அந்த மாதிரியெலாம் கிடையாது. "எங்கம்மா உங்கம்மா நம்ம சேர்த்து வைப்பாளா"ன்னு பாட்டு பாடினா முகரக் கட்டைய பெயர்த்துவிடுவார்கள். அதுவும் பந்து அவர்கள் மேலே பட்டுவிட்டது என்றால் அவ்வளவு தான் அப்பிடியே ஓடிவிட வேண்டும். இருட்டின அப்புறம்தான் வீடு திரும்ப முடியும். அதற்குள் அந்த மாமி பந்தை அருவாமனையில் ரெண்டாக கிழித்து வீட்டில் கொடுத்து நம்மளப் பத்தி நல்லதா நாலுவார்த்தை சொல்லிவிட்டுப் போயிருப்பார். சில மாமிகள் வீட்டிற்கு முன்னால் கிரிக்கெட் விளையாட கூடாதென்று நிரந்தர ஸ்டே ஆர்டர் இருக்கும். இதையெல்லாம் மீறி விளையாடுவதில் ஒரு தனி த்ரில் இருக்கும். ஊரில் தெருக்களெல்லாம் கோமணம் மாதிரி நீளமாக தான் இருக்கும். அகலம் அவ்வளவாக இருக்காது. வீடுகளுக்கு உள்ளே அடிக்காமல் நேரே பவுண்டரி ஷாட் அடிப்பது என்பது தனிக் கலை. இதில்லாமல் எதாவது மாமி வீட்டில் அடித்து பந்து போச்சு என்றால் அடித்தவன் தான் மீட்பு பணியில் இறங்கவேண்டும். ஒரு வேளை மாமி பந்தை கைப்பற்றி "அருவாமனையேஸ்வரா" என்றால் அடித்தவன் தான் கைக்காசு போட்டு பந்து வாங்கவேண்டும்.

-தொடரும்

Thursday, March 09, 2006

நாய்ப் பொழப்பு

நாய்ப் ப்ரியர்களைப் பார்த்தால் எனக்கு சில சமயம் ஆச்சரியமாகவும் பொறாமையாகவும் இருக்கும். எனக்கு நாய் ராசி அத்தனை சுமூகமாக இல்லை. இப்போதும் நாயைப் பார்த்தாலே கொஞ்சம் அல்ர்ஜியாக இருக்கும்.(கல்யாணமானதிலிருந்து பயத்தை இப்படித் தான் அலர்ஜி என்று ஸ்டைலா சொல்லிக்கறது. நிறைய இருந்தாலும் கொஞ்சம் என்று சொல்லிக் கொள்வது ஸ்டையில் இல்லை பேஷன்).

சின்ன வயதில் எல்லா வாண்டுகளையும் போல நானும் நாயைக் கண்டால் பயமில்லாமல் தான் இருந்தேன். நாய்க்காக தெருத் தெருவாக நாயாய் பேயாய் அலைந்த காலம் அது. தெருவில் எதாவது ஒரு நாய்க் குட்டி தெரியாமல் வந்துவிட்டால் அதற்கு பிஸ்கெட் போட்டு, ஜிம்மி என்று பெயர் சூட்டி கொஞ்சி, குட்டிக்கரணம் அடிக்க சொல்லிக்கொடுத்து அது கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி கல்யாண ஜானவாசம் மாதிரி தெருத்தெருவாகப் பட்டினப் பிரவேசம் போய், கடைசியில் அப்பா வந்து என் முதுகில் ஒன்று வைத்து அதை ரிலீஸ் செய்வார். சின்ன வயதில் நாய் வளர்க்கவேண்டும் என்ற் ஆசை இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் ஒரு பாழாய்ப் போன குரங்கு வந்து கெடுத்து விட்டது. குரங்கு என்றால் நிஜமான குரங்கு. எங்க ஊருக்கு பக்கம் தான் பாபநாசம், குற்றாலம் என்பதால் சில சமயம் குரங்குகள் கூட்டம் கூட்டமாய் தெருவில் வந்து எங்களுக்குப் போட்டியாக அட்டகாசம் செய்யும். தெருவில் ஒருத்தரையும் நடமாட விடாது. கையில் எதை வைத்திருந்தாலும் பிடுங்கிக் கொள்ளும். மொட்டை மாடியில் வத்தல் வடாம் காயப் போட்டிருந்தால் டேஸ்ட் பார்த்து உப்பு கூடக் குறைச்சல் சொல்லும். சில விவகாரமான குரங்குகள் சினிமா ஹீரோ மாதிரி பாத்ரூமிலிருந்து துண்டை எல்லாம் எடுத்துக் கொண்டு ஓடிவிடும். அந்த வானரப் படையை எங்கள் வானரப் படையால் மட்டுமே சமாளிக்க முடியும் என்பதால், தெருவில் குரங்கு வந்தாச்சு என்றால் "ஏய் குரங்கு வந்தாச்சு போங்கோடா போய் விரட்டுங்கோ..." என்று எங்களை கடமை அழைக்கும். கவுட்டைவில்லு என்றால் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. Y மாதிரி மரக் கொப்பை உடைத்து அதில் சைக்கிள் ட்யூப்பை கத்தரித்து கட்டி செய்யும் அத்தியாவசியமான ஆயுதம். அதில் குறி வைத்து அடிப்பதில் கிராமத்துப் பக்கம் கில்லாடிகளாய் இருப்பார்கள். அதைப் பார்த்தால் மட்டும் தான் குரங்குகள் ஒட்டம் எடுக்கும். ஆனால் இந்த ஆயுதம் இல்லாமலே எங்கள் வானரப் படை சத்தம் போட்டும் சிறிய கல்லை எறிந்தும் அந்த வானரப் படையை ஓட்டி விடும்.(பெரிய கல்லை எறிந்து அந்த வீட்டு ஓட்டைப் பெயர்த்துவிட்டால் அந்த வீட்டில் வசிக்கும் பெரிய குரங்கு பிடித்துக் கொள்ளும் அதனால் தான் சிறிய கல்) ஆனால் என் நேரம் ஒரு நாள் இந்த ஆயுதம் எதுவும் இல்லாமல் நான் குரங்கை விரட்டப் புறப்பட்டேன். வழக்கம் போல் சத்தம் போடாமல் நான் "ட்டூர்ரிங்...ட்டூர்ரிங்" என்று ஒரு டியூனாக சத்தம் போட போக ஒரு தாட்டையன்(பெரிய) குரங்குக்கு என்ன எரிச்சலோ நான் போட்ட அந்த மீசிக் பிடிக்கவில்லை போல, என் மேல் பாய்ந்துவிட்டது. ஹ..யாரு எங்கிட்டயேவா...அலறியடித்துக் கொண்டு ஒரே தள்ளாக அதை தள்ளிவிட்டு ஓடிவிட்டேன். கையில் விரல்களுக்கு மேலே ஒரு விழுப்புண்ணோடு அன்று தப்பித்தேன். பின்னாளில் குரங்குகளுக்கு அந்த மீசிக் போட்டால் கோபம் வருமா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தேன். ஆனால் எங்கம்மா ஏதோ ஒரு பாட்டி சொன்னா என்று குரங்குக் கடி வைத்தியமாக மோரில் வீபூதி மற்றும் இன்ன பிற அயிட்டங்களைப் போட்டு மூன்று வேளை குடிக்கச் சொன்னது அந்தக் குரங்குக் கடியை வாழ்வில் மறக்க முடியாததாகச் செய்துவிட்டது. மருந்தை விட குரங்குக் கடியே எவ்வளவோ மேல். கடிப்பட்டா திரும்ப இந்த மருந்தைக் குடிக்கவேண்டுமே என்று ஆராய்ச்சியை ஐடியாவை மூட்டை கட்டி வைத்தேன்.

அதற்கப்புறம் "உலகத்திலேயே குரங்கு கடி வாங்கியிருக்கிற ஒரே ஆள் நீதாண்டா" என்று ஓட்ட ஆரம்பித்தார்கள். அதற்கு நானும் "ஆமாம் குரங்கு குரங்கையெல்லாம் கடிக்காதாம்" என்று பதில் சொல்வேன். அந்தக் குரங்குக் கடிக்கப்புறம் நாயையும் எனக்குப் பிடிக்காது. எல்லாம் ஒரே கழுதைகள் தான் என்ற நினைப்பு வந்து விழுந்துவிட்டது. கொஞ்சம் வளர வளர இந்த வெறுப்பு பயமாக அதாவது அலர்ஜியாக மாறிவிட்டது. அதற்கு எங்கள் வீட்டுக்குப் பக்கமிருந்த ஒரு திமிரெடுத்த நாய் தான் காரணம். டாக்ஸி டிரைவர்கள் மிச்சச் சாப்பாட்டை சாப்பிட்டு நல்ல கொழுகொழுவென்று இருக்கும். இப்படி குண்டாயிருப்பதாலே அந்த நாய்க்கு மனதில் பெரிய புலி என்ற நினைப்பு. புலி மாதிரி தான் நடக்கும். அதற்கு என்னைக் கண்டால் ஏனோ எகத்தாளம். நான் பாட்டுக்கு தேமேன்னு போயிக்கொண்டிருந்தாலும் விடாது. என் கூட பெரியவர்கள் இருந்தால் உறுமும். ஒரு நாள் நான் தனியாக போன போது துரத்த ஆரம்பித்துவிட்டது. பஸ்ஸ்டாண்டை மூன்று தரம் சுத்திய பின்னும்... விடுகிற வழியைக் காணோம். நாலாவது தரம் ஏதோ ஒரு பஸ் கிளம்ப நான் அதில் ஏறிய பிறகு தான் ஓய்ந்தது. அப்புறம் கையில் காசு இல்லாமல் நாய் துரத்திய கதையை புலம்பி, கண்டக்டர் சிரித்துக் கொண்டே இறக்கிவிட்ட போது ஒட்டு மொத்த நாய் வர்க்கத்தின் மேலும் அதீத அலர்ஜி.

இந்த நாய்களுக்கு என் மேல் இருக்கும் லவ்ஸ் சொல்லி மாளாது. கொஞ்சம் பெரியவனாகி காலை ஆறு மணிக்கு ட்யூஷனுக்குப் சைக்கிளில் போகும் போது வாத்தியார் வீட்டுத் தெருவில் ஒரு வெக்கங் கெட்ட நாய் என்னையே குறி வைத்து துரத்தும். தொடர்ந்து மூன்று சைக்கிளில் நாங்கள் போனாலும் என்னை எப்பிடியாவது பிடித்து விடும். இந்த நாய்க்காவே என்ன தான் முன்று தெருவை நாய் மாதிரி சுத்தி அந்தப் பக்கமாக வந்தாலும் மூக்கில் வேர்த்த மாதிரி கரெக்டாக அங்கேயும் காத்திருக்கும். இதற்காகவே தூரத்திலேயே நல்ல சைக்கிளை விரட்டி விட்டு காலை தூக்கி வைத்துக் கொள்வோம். இருந்த போதும் ஒரு தரம் இந்த இழவெடுத்த நாயக்கு பயந்து கீரைக்காரியின் மேல் சைக்கிளை விட்டு வாங்கிய வசவுகள் நாய்ப் பகையை ஜென்மப் பகையாகிவிட்டது. இவ்வளவு ஆனதுக்கப்புறம் நான் ஜாக்கிரதையாக இருந்ததால், அவை எனக்குப் பயந்து அப்புறம் என்னிடம் ரொம்ப வைத்துக் கொள்ளவில்லை.


சமீபத்தில் லண்டனிலிருந்து புறநகர் ட்ரெயினில் ஒரு நாயைப் பார்த்தேன். அதுவரை கண்ணுக்குட்டி சைஸுக்கு நாய் பார்த்திருக்கிறேன்..இந்த நாய் கரடி சஸுக்கு இருந்தது. இது போததென்று நூறு சத்யராஜும், ராஜ்கிரனும் சேர்ந்தது மாதிரி புஸு புஸுவென முடி வேறு. ஒரு சீமாட்டி கூட்டிவந்திருந்தார். ரொம்ப செல்லம் போல ட்ரெயினில் நாய்க்குப் போரடிக்கக் கூடாதே என்று சாப்பிடுவதற்கு பிஸ்கெட், விளையாடுவதற்கு கிலுகிலுப்பை, படுத்துக் கொள்ள பஞ்சு போன்ற போர்வை என்று எல்லாமே கொண்டுவந்திருந்தார். நாய் இருந்த சைஸுக்கு சீட்டுக்கு நடுவில் நுழைந்து வருவதற்கு ரொம்பவே சிரமப் பட்டது. வழியில் எல்லாரையும் "சௌக்யமா சௌக்கியமா" என்று விசாரித்துக் கொண்டு வந்த நாய் என் மடியில் வந்து தலை வைத்துப் படுத்துக் கொண்டு விட்டது. எனக்கு எங்கம்மா கொடுத்த மருந்துக் கல்வை நியாபகத்துக்கு வந்து முகத்தில் அலர்ஜி அப்பட்டமாக தெரிந்தது. பயத்துல எதாவது மீசிக் போட்டா எசகுபிசகா கடிச்சுத் தொலைஞ்சிருமே என்று பயந்து நடுங்க, நல்லவேளை சீமாட்டி "வாடா ராஜா வா" என்று அடுத்த சீட்டுக்கு கூட்டிக் கொண்டு போய்விட்டார்(நாயைத் தான்).

அப்புறம் "எனக்கு ஃபர் கொஞ்சம் அலர்ஜி " என்று சமாளித்து அடுத்த கம்பார்ட்மென்டுக்குப் போய்விட்டேன். என்னை மாதிரியே இன்னொருத்தியும் குரங்குக் கடி வாங்கியிருப்பாள் போல அவளும் அலர்ஜி என்று சொல்லி கம்பார்ட்மென்ட் மாறிவிட்டாள்.

வீட்டில் இப்போதும் "நாய் வளர்க்கலாம்" என்று அடிக்கடி கூட்டணி சேர்வார்கள். நானே கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு குலைத்துக் காட்டி, ஓடியாடி, சின்ன மகளின் ஓட்டையும் எடுத்துக் கொண்டு மெஜாரிட்டி இல்லையென்று சொல்லி தீர்மானத்தை தள்ளிப் போட்டுவிடுவேன்.

Monday, March 06, 2006

என்ன ஆச்சு டுபுக்குவிற்கு?

       காக்க காக்க கனகவேல் காக்க
      நோக்க நோக்க நொடியில் நோக்க

முன்குறிப்பு - கோபம் வாழ்க்கைக்கு எதிரி. புத்திசாலிகள் கோபப்படமாட்டார்கள். ரௌத்திரம் பழகுவதற்குப் பக்குவம் வேண்டும். பழகிவிட்டால் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது விளங்கிவிடும். அதனால் தான் புத்திசாலிகள் கோபப்படமாட்டார்கள்- சுவாமி சுகபோதானந்தா
----------

சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால் நான் வலைப்பதிய ஆரம்பித்த போது என்று பழங்கதை பேசினால் பொறுமை இருக்காது பளாரென்று அறைந்துவிடுவீர்கள். அதனால் நேராக விஷயத்துக்கு வருகிறேன்.

கொஞ்சம் இல்லை ரொம்பவே பயமாக இருந்தது. அதனால் தான் செவ்வாய்கிழமை என்று சொல்லிவிட்டு இன்றே பதிவைப் போடுகிறேன். பிள்ளையார் பிடிக்க குரங்கில் முடிந்தால் பரவாயில்லை, ஆனால் நான் எலியைப் பிடிக்க எருமைமாடாகி விட்டது.

டுபுக்கிற்கு யார் மீதாவது கோபமா? இல்லை.
எதாவது வருத்தமா? இல்லை.
அப்புறம் ஏன்யா இனி எழுதமாட்டேன் என்று சொன்ன? -நான் எங்க இனிமே எழுத மாட்டேன்ன்னு சொன்னேன்?

என்னய்யா குழப்பற...என்ன தான் சொல்லவர?

ஹீ ஹீ அய்யா பெரியோர்களே தாய்மார்களே அவ்வளவு சீக்கிரம் உங்களையெல்லாம் என் எழுத்து இம்சையிலிருந்து தப்பிச்சு போக விட்டுவிடமாட்டேன். இதுவரை நீங்கள் கொடுத்து வந்த ஆதரவுக்கு ஏதோ பெருந்தன்மையா நன்றி சொன்னா பேக்கப் பண்ணி வீட்டுக்கு அனுபிச்சுருவீங்க போல இருக்கே. மெயில், போன்ன்னு கலக்கிட்டீங்க போங்க. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது உங்க பின்னூட்டததையெல்லாம் பார்த்து ரொம்பவே சென்டியாகிட்டேன். உண்மையாகவே நெஞ்ச டச் பண்ணிட்டீங்க.எனக்கு இப்போ ரொம்ப ஒரு மாதிரியாயிருக்குங்க

அப்போ என்ன தான் மேட்டர்?

ஹீ ஹீ நீங்க இதுவரைக்கும் குடுத்த ஆதரவெல்லாம் பார்த்து...கொஞ்சம் குஷியாகி எனக்கே எனக்குன்னு ஒரு (வெப்)சைட் வாங்கிட்டேன். அதானால இந்த ப்ளாக்குக்கு கொஞ்ச நாள்ல பூட்டு போட்டுவிடுவேன். அப்புறம் அங்கேர்ந்து நம்ம இம்சை தொடரும்.

"எங்களையெல்லாம் என்ன கேனையன்னு நினைச்சியா..ஏன்யா சும்மா கிடக்காம நன்றின்னு பதிவெல்லாம் போட்ட?"

இதென்ன கூத்தா இருக்கு...நீங்க குடுத்த தைரியத்துல கைக் காசெல்லாம் போட்டு வெப்சைட் வாங்கியிருக்கேன்...உங்களுக்கு நன்றி சொல்றது தப்பா? அப்போதானே அங்கேயும் வந்து ஆதரவு தருவீங்க?

"அடப்பாவி...இதச் சொல்றதுக்கு எதுக்கு ரெண்டு நாள் பில்டப் ?"

ஹை...எத்தன நாள் நீங்க இங்க வந்து படிச்சுட்டு கமெண்ட் அடிக்காம போயிருக்கீங்க...நானும் கமெண்ட் வருதா வெறும் காத்து தான் வருதான்னு தேவுடு காத்திருக்கேன்...இப்போ நீங்க மாட்டிக்கினீங்களா?? :P

மவனே நீ மட்டும் கைல மாட்டின...காலிடா
அண்ணே, அக்கா...உங்களுக்காகத் தானே முன்குறிப்பெல்லாம் போட்டிருக்கேன். நீங்களெல்லாம் புத்திசாலிங்க கோவம் வரலாமா?

சரி சரி என்ன சைட்டு சொல்லித் தொலைங்க

www.DubukkuWorld.com இதாங்க புதுசா நான் குடிபோகப் போகிற சைட். (டுபுக்கு டாட் காம் தான் ஆரம்பிக்கனும்ன்னு இருந்தேன். ஆனால் அத ஒருத்தர் ஏற்கனவே போன வருஷம் வாங்கிட்டார். கேட்டுப் பார்த்தேன் தரமாட்டேன்னுட்டார். சரி ஒரு வருஷமா அவரு மனசு மாறுவாரோன்னு காத்திருந்தாகிவிட்டது இனிமேலும் காலம் தாழ்த்த முடியாதுன்னு இது இருக்கட்டும்ன்னு வாங்கிட்டேன்.)

அட அதுக்குள்ள ஆரம்பிச்சாச்சா?

இல்லைங்க உங்களுக்கெல்லாம் சொல்லாம ஆரம்பிப்பேனா...இப்போ தான் மனை வாங்கியிருக்கேன். இன்னும் வெப்சைட் டிசைன் செய்யவில்லை. (யாராவது புண்ணியவான் நேரமும் ஆர்வமும் இருந்தால் சொல்லுங்கள் உங்கள் பெயரையும் நன்றியோடு போடுகிறேன்) இனிமே தான் வீடு கட்டனும். கண்டிப்பா பால்காய்ச்சும் விழாவிற்கு வந்திரணும் இப்போவே சொல்லிட்டேன் ஆமா.

நாங்க என்ன செய்யனும்?

ஹீ ஹீ வெப்சைட்டை ஆரம்பித்த பிறகு வழக்கம் போல உங்கள் ஆதரவை தரனும் (அதுக்குத் தானே அடிக்கடி நன்றியெல்லாம் சொல்றேன்).அதுவரைக்கும் வழக்கம் போல இங்க வாங்க.

நிற்க...என்னுடைய போன பதிவு உங்களுக்கு மனக்கஷ்டத்தை சங்கடத்தையோ ஏற்படுத்தியிருக்குமானால் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். (இது உண்மையாகவே சொல்கிறேன்). உங்களுக்கு என்ன திட்டனும் போல இருந்தா தாராளாமாக பின்னூட்டதிலோ மெயிலிலோ திட்டி விடுங்கள். எதோ (ஸ்கூல் படிக்கிற) சின்னப் பையன் பார்த்து செய்யுங்க...

போடுவடா போடுவ...அப்போ போன பதிவு...

இப்போ பொறுமையா போன பதிவ படிச்சுப் பாருங்க நான் என்ன சொல்ல வரேன்னு தெரியும்.

****
ரொம்ப நாளாகவே யோசித்துக் கொண்டிருந்தேன். குழம்பி குழம்பி இப்போது ஒரு முடிவுக்கு வந்து இருக்கிறேன். - இது வெப்சைட் ஆரம்பிக்கறத பத்தி

இந்த ப்ளாக்கிற்கு கூடிய சீக்கிரம் மங்களம் பாடிவிடுவேன். எனது எழுதும் ஆர்வத்துக்கு ஒரு வடிகாலாக இருக்கட்டும் என்று ஆத்மதிருப்திக்கு ஆரம்பித்து, உங்களில் சில பேரை சிரிக்க வைக்க முடிந்தது என்ற திருப்தி இருக்கிறது. எதாவது கிறுக்கி இருக்கிறேனா என்று நிறைய பேர் ரெகுலராக வந்து பார்க்கிறீர்கள். ரொம்ப நன்றி. உங்களிடம் திடீரென்று சொல்லி அதிர்ச்சி தர விரும்பவில்லை அது உங்கள் ஆதரவிற்கு நான் செய்யும் மரியாதையும் அல்ல.

-இங்கும் வைப்சைட் ஆரம்பிப்பதைப் பத்தித் தான் சொல்லியிருக்கிறேன். முன்னாடியே சொல்லனும்ல அதானே மரியாதை.

Alma மேட்டர் பாதியில் நிற்கிறது. அதை என்ன செய்ய என்று குழப்பமாக இருக்கிறது.
-குழப்பம் Alma மேட்டரை இங்கயே முடித்துவிடுவதா அல்லது அங்கே தொடர்வதா என்று

உங்களில் சில பேருக்கு இந்த முடிவு ஏமாற்றமாகவோ வருத்தமாகவோ(??!!) இருக்கலாம்...இருந்தால் அதற்காக வருந்துகிறேன்.
-ஒரு வழியா டுபுக்கு தொலைஞ்சான் என்று நீங்கள் நினைக்க எனது வெப்சைட் முடிவு பற்றி

வலையுலக ட்ரெண்டின் படி இழுத்து மூடப்போகிறேன் என்று நான் சொல்லுவது "பப்ளிசிட்டி ஸ்டண்டா" என்று நீங்கள் சந்தேகப் படலாம்.

- ஒருவேளை இல்லை என்று நீங்கள் நினைத்திருந்தால் அழித்துவிடுங்கள். சந்தேகமே வேண்டாம் பப்ளிசிட்டி ஸ்டண்டே தான் (அப்புறம் வெப்சைட்டுக்கு எப்பிடி ஹிட்டு சேக்கறதாம்?)

மீண்டும் ஒரு முறை - இது வரை நீங்கள் கொடுத்து வந்த பேராதரவிற்கு நன்றி.
- நன்றியெல்லாம் சொல்லியிருக்கேன் வெப்சைட்ட நியாபகம் வைச்சுக்கோங்க...

இன்னொருதரம் சொல்லிடறேன்...என்னுடைய போன பதிவு உங்களுக்கு மனக்கஷ்டத்தையோ, சங்கடத்தையோ ஏற்படுத்தியிருக்குமானால் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். (இது உண்மையாகவே சொல்கிறேன்). உங்களுக்கு என்னை திட்டனும் போல இருந்தா தாராளாமாக பின்னூட்டதிலோ மெயிலிலோ திட்டி விடுங்கள். எதோ (ஸ்கூல் படிக்கிற) சின்னப் பையன்... பார்த்து செய்யுங்க...
(என் மனைவி நான் தர்ம அடி வாங்கப்போகிறேன் என்று இருபது பவுண்டு பெட் கட்டியிருக்கிறார்)

மற்றபடி உங்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை - எண்ட மலையாள பகவதி மீரா ஜாஸ்மின் மேல் சத்தியம்.

என்றும் மாறாத அன்புடன்
டுபுக்கு
(ஸ்காட்லாந்து யார்ட் இசட் பாதுகாப்புக்குப் பின்னாலிருந்து)

Sunday, March 05, 2006

நன்றி

ரொம்ப நாளாகவே யோசித்துக் கொண்டிருந்தேன். குழம்பி குழம்பி இப்போது ஒரு முடிவுக்கு வந்து இருக்கிறேன். இந்த ப்ளாக்கிற்கு மங்களம் பாடப்போகிறேன். எனது எழுதும் ஆர்வத்துக்கு ஒரு வடிகாலாக இருக்கட்டும் என்று ஆத்மதிருப்திக்கு ஆரம்பித்து, உங்களில் சில பேரை சிரிக்க வைக்க முடிந்தது என்ற திருப்தி இருக்கிறது. எதாவது கிறுக்கி இருக்கிறேனா என்று நிறைய பேர் ரெகுலராக வந்து பார்க்கிறீர்கள். ரொம்ப நன்றி. உங்களிடம் திடீரென்று சொல்லி அதிர்ச்சி தர விரும்பவில்லை அது உங்கள் ஆதரவிற்கு நான் செய்யும் மரியாதையும் அல்ல. Alma மேட்டர் பாதியில் நிற்கிறது. அதை என்ன செய்ய என்று குழப்பமாக இருக்கிறது. உங்களில் சில பேருக்கு இந்த முடிவு ஏமாற்றமாகவோ வருத்தமாகவோ(??!!) இருக்கலாம்...இருந்தால் அதற்காக வருந்துகிறேன்.

வலையுலக ட்ரெண்டின் படி இழுத்து மூடப்போகிறேன் என்று நான் சொல்லுவது "பப்ளிசிட்டி ஸ்டண்டா" என்று நீங்கள் சந்தேகப் படலாம். இதை அவசரமாக எழுதுகிறேன் என்பதால் எனது முடிவின் காரணங்களை விபரமாக தனிப் பதிவில் எழுத முயற்சிக்கிறேன். வேலை நிமித்தமாக வெளியே செல்கிறேன் என்பதால் செவ்வாய்கிழமை பதிய முயற்சிக்கிறேன். ஆனால் உங்கள் வலைப் பதிவுகளையும், இங்கே வரும் பின்னூடங்களையும் வழக்கம் போல் படித்துக் கொண்டிருப்பேன். தேசிபண்டிட்டில் வழக்கம் போல் உங்கள் பதிவுகளை அடையாளம் காட்டும் பணியில் இருப்பேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. மீண்டும் ஒரு முறை - இது வரை நீங்கள் கொடுத்து வந்த பேராதரவிற்கு நன்றி.

Wednesday, March 01, 2006

Alma மேட்டர் - 6

For previous parts --> part1   part2   part3   part4   part5

அது நட்பு இல்லை ஆனால் அதை என்னவென்று சொல்லுவது. நீல கலர் சாயம் போட்டு, ஆனும் பெண்ணும் சில்க் ஜிப்பா அணிந்து வீட்டுக்கு நீல நிற பெயிண்ட் அடித்து "மயிலிறகே மயிலிறகே" என்று பாட்டுப் பாடும் காதல் இல்லை. வயசுக் கோளாறு. ஆனால் காமம் தெரியாத வயது அது. காமம் கலக்காத இன்பாக்ஷுவேஷன் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். சிலபேருக்கு இந்த வயதில் சிலபேரை பிடிக்கும். எனக்கு அவளைப் பிடித்திருந்தது. ஜில்லை அல்ல "அவளை". இருந்தாலும் அவளிடம் ரொம்ப பேசமாட்டேன். ஜில்லிடம் தான் பேசுவேன். சொல்லுகிற ஜோக்கெல்லாம் இவளுக்காகத் தான் என்றாலும் ஜில்லிடம் தான் சொல்லுவேன். இவளும் சேர்ந்து சிரிப்பாள். சினேகமாக சிரிப்பாள். நானும் பதிலுக்கு சிரிப்பேன் (=வழிவேன்). பஸ்ஸில் அவர்களும் நாங்களும் எதிர் எதிர் சீட்டில் உட்கார்ந்து கொண்டு ஜாலியாக கலாய்த்துக் கொள்வோம். எங்கள் ஸ்கூல் ஜூனியர் ஸ்கூல், சீனியர் ஸ்கூல் என்று ரெண்டு பில்டிங்கில் இருந்தது. ரெண்டும் வெவ்வேறு இடங்களில் இருந்தது. பஸ் 'ஜூனியர் ஸ்கூல்' பக்கத்தில் ஒரு சாராயக் கடை பக்கத்தில் ஒரு ஸ்டாப்பில் நிற்கும். அங்கே ஒரு வடைக் கடை உண்டு. அந்தக் கடையில் எல்லோரும் வடை வாங்குவார்கள். அவள் எங்களுக்கு அடிக்கடி வடை வாங்கித் கொடுப்பாள். நானும் வீட்டிலிருந்து என்னுடைய உண்டியலில் இருந்து அடிக்கடி லவட்டி வந்து வடை வழங்கும் வள்ளலாவேன்.

நாளொரு ஸ்டாப்பும் பொழுதொரு வடையுமாய் போய்க்கொண்டிருந்த பஸ் வாழ்கையில் ஒரு நாள் ஜூனியர் பையன் ஒருத்தன் எங்களுக்கு முன்னாடி வந்து நாங்கள் உட்காரும் இடத்தில் வந்து டேரா போட்டு விட்டான். ஜில்லு சும்மா இருக்காமல் வெறுப்பேத்த என்னுடைய தளபதிக்கு பொறுக்காமல் அந்தப் பையனை சண்டைக்கு இழுத்துவிட்டான். அந்தப் பையன் ஒரு வருஷம் தான் ஜூனியர். பையன் ரொம்ப சூட்டிப்பு வேறு. தளபதிக்கு நல்ல முறைவாசல் மரியாதை நடந்தது. ஜில்லு சும்மாயிராமல் என்னையும் வம்பில் மாட்டிவிட்டு விட்டது. தேமேன்னு உட்கார்ந்திருவனுக்கு அவள் பார்க்கிறாளே என்று இல்லாத ரோஷமெல்லாம் வந்து சிலிர்த்து எழுந்து தளபதியும் நானும் சேர்ந்து அந்தப் பையனை பொளந்து கட்டி விட்டோம். அந்தப் பையன் ராஜ்கிரண் வம்சத்து வீரப் பரம்பரை போல, ஒத்தைக்கு ஒத்தை வர்றீங்களாடான்னு சவால் விட, பதிலுக்கு நானும் எப்பவேனா எங்கவேணா வரேன் ஆனா இப்போ பஸ்ல இவங்க முன்னாடி வேண்டாம் ரத்த பூமியாயிடுமென்று சொல்லிவிட்டு அவனுக்கு முந்தின ஸ்டாப்பிலேயே இறங்கி வீட்டுக்குப் போய்விட்டேன். அந்தப் பையன் வீடு இரண்டு தெரு தள்ளி இருந்தது. கடைக்குப் போகும் போது மீண்டும் ரணகளமாகிவிடக் கூடாதே என்று சுத்தித் தான் போவேன். அந்தப் பையன் அடுத்த நாள் ஸ்கூலுக்கு வரவில்லை. அடுத்த நாள் அந்தப் பையனின் அண்ணன் நாலு பேரோடு எங்கள் தெருவிற்கு வந்து இங்க டுப்புக்கு யாருடான்னு என்னிடமே கேட்டான். "டுபுக்கு என்னும் மகாவீரன் இங்க தான் இருக்கான் நான் போய் கூட்டி வர்றேன்"னு கம்பி நீட்டி விட்டேன். அதற்கடுத்த நாள் அந்தப் பையன் தலையில் ஒரு ப்ளாஸ்திரியோடும் அவ அப்பாவோடும் வந்து ஸ்கூலில் பிரின்ஸ்பாலைப் பார்த்தான். பிரின்ஸ்பால் என்னையும் தளபதியையும் ப்யூனை விட்டு க்ளாசிலிருந்து கூப்பிட்டு காதைத் திருகி பிரம்பால் ஆளுக்குத் தலா இரண்டு அடியும் குடுத்தார். நான் பிரின்ஸ்பால் அருகில் நின்று கொண்டிருந்ததால் திரும்பிப் போகும் போது பிட்டத்தில் எனக்கு கூட ஒரு அடி கிடைத்தது. தளபதிக்கு அதில் ஒரு அல்ப சந்தோஷம்.

எல்லாம் முடிஞ்சுது என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்த போது பி.டி. வாத்தியார் கூப்பிட்டு அனுப்பினார். அந்தப் பையனுடைய அப்பா போகிற போக்கில் பி.டி. வத்தியார் தான் நல்லா தீர்ப்பு சொல்லுவார் என்று கொளுத்திப் போட்டுவிட்டு போய்விட்டார். இந்தமுறை உஷாராக நான் பி.டி.வாத்தியார் பக்கத்தில் நிற்காமல் தளபதிக்குப் பின்னால் போய்விட்டேன். பி.டி. வாத்தியார் கேள்விகளே கேட்காமல் மண்டகப்படியை ஆரம்பித்தார். தளபதிக்கு இரண்டும் எனக்கு ஒன்றும் கண்ணத்தில் நச்சென்று கிடைத்தது. அந்த சமயத்தில் ஸார் என்று யாரோ வந்து குரல் குடுக்க திரும்பினால் "அவள்". வாத்தியார் அடிச்சது முட்டியில் இடித்த சுகமாக இருந்தாலும் முகத்தில் வலியைக் காடிக்கொள்ளாமல் இறுக்கமாக வைத்துக் கொண்டேன். அடித்ததை ஒரு வேளை அவள் பார்த்திருப்பாளோ என்று குழம்பிக் கொண்டிருந்த போது, பாழாய்ப் போன வாத்தியார் வந்தவளுக்கு என்ன வேண்டும் ஏது வேண்டும் என்று கேட்க வேண்டாமோ? போகிற போக்கில் பின்னால் நின்று கொண்டிருந்த எனக்கு மானாவரியாக இன்னொரு அடி குடுத்துவிட்டு போனார்.

அவளும் நேரம் காலம் தெரியாமல் 'க்ளுக்' என்று எனக்கு மட்டும் கேட்குமாறு சிரித்தாள். வடை வாங்கிக் குடுத்ததுக்கு காட்டுகிற நன்றியா இது என்று நான் கோபத்தோடு முறைக்க அவள் டக்கென்று சிரிப்பதை நிறுத்திவிட்டாள்.

--தொடரும்