Wednesday, October 10, 2012

ஜில்பான்ஸ் - 101012

ரொம்ப நாள் கழித்து ஜில்பான்ஸ் எழுதுகிறேன்.

சமீபத்திய சினிமா பர்ஃபி, சுந்தரபாண்டியன் என்று சகட்டு மேனிக்கு எவ்வளவோ படங்கள் பார்த்தாலும் சில படங்கள் மட்டுமே இதை எப்படியாவது நியாபகம் வைத்து ப்ளாகில் போட்டால்,நம்மையும் ரவுடி என்று ஊர் ஒத்துக்கொள்ள உத்தரவாதம் அளிக்கும். அந்த வரிசையில் இங்கே வீடு காலி செய்து ஊருக்கு கிளம்பிய நண்பரிடம் ஆட்டையைப் போட்டு பார்த்த படம் தான் "Valkyrie". இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்களே அவரை போட்டுத் தள்ளப் பார்த்து தோல்வியில் முடிந்த ஒரு நிகழ்வைப் பற்றிய படம். ஹிட்லரை, இத்தோடு சேர்த்து அவர் ஆட்களே மொத்தம் பதினைந்து முறை போட்டுத் தள்ள முயற்சி செய்திருக்கிறார்கள். அவற்றில் இதுவே கடைசி முயற்சி. நிகழ்வு உண்மையென்பதாலும், படத்தில் தடாலடி திருப்பங்களுக்காக மசாலா ரொம்ப சேர்க்காமல் குடுத்திருந்ததாலும் இந்தப் படம் ரொம்பவே பிடித்திருந்தது. டாம் க்ரூய்ஸ் பாத்திரமாகவே மாறிவிட்டார், கரண்டியாகவே மாறிவிட்டார் என்று விமர்சன ஜல்லியடிக்குமளவிற்கு குடுத்த காசுக்கு குறைவில்லாமல் நடித்திருக்கிறார். அதை விட சுவாரசியமான ஒரு விஷயம் அவர் நடித்த அந்த கலோனல் Claus von Stauffenberg  - ஒரிஜினலாகவே சைட் போஸில் டாம் க்ரூஸ் மாதிரி தான் இருக்கிறார். இதற்காகவே டாம் க்ரூஸ் இந்த வேஷம் கட்ட ஒத்துக்கொண்டதாகவும் சிலர் கூறுகிறார்கள். ஹாலிவுட்டில் சோபாவில் இழுத்துப் போட்டு திகட்ட திகட்ட ஆகிருதியை காட்டும் காட்சிகள் இல்லாமல் ஒரு நிஜ நிகழ்வை படமாக்கும் போது ஆவணப் படமாய் உணர்வதற்கான சாத்தியக்கூறுகள் ஏராளம். அதையும் தாண்டி படத்தை விறுவிறுப்பாக்கும் விஷயத்தைத் தான் "குட் ஸ்க்ரீன்ப்ளே" என்று வெள்ளைக்காரன் விளிக்கிறான். அந்த குட் ஸ்க்ரீன் ப்ளே இந்தப் படத்தில் கலையோடு கூட்டணி போட்டு நம்பகத்தன்மையை வெகுவாய் கூட்டி நம்மை ஜெர்மனியில் ஹிட்லரோடு பிரயாணிக்க வைக்கிறது. உலகை கலக்கிய ஒரு சர்வாதிகாரிக்கு எவ்வளவு பாதுகாப்பு இருந்திருக்கும், அவரை போட்டுத் தள்ளி ஆட்சியைப் பிடிப்பதென்பதற்கு எவ்வளவு மெனெக்கெட வேண்டும். அந்த நுணுக்கங்களையெல்லாம் அழகாக படம் எடுத்துக் காட்டுகிறது. சொல்வதற்கு நம்மால் முயற்சி கூட எடுக்க முடியாத அளவுக்கு பெயரில் ஸ்பெல்லிங் உடைவர்கள் எல்லோரும் ஹிட்லரை கொல்ல செய்யும் இந்த ஆப்பரேஷன் "Valkyrie" தோல்வியாகி முயன்றவர்கள் எல்லாரும் போட்டுத் தள்ளப்படுகிறார்கள். இதில் பெரிய சோகம் என்னவென்றால் அடுத்த பதினோராவது மாதத்தில் ஹிட்லர் அவரே தூக்கு போட்டு சுட்டுக் கொண்டு இறந்துவிட்டார். "(ஹிட்லரை கொல்ல முயற்சித்ததின் மூலம்) நீங்கள் அவமானத்தைக் கொண்டு வரவில்லை, (சர்வாதிகாரத்தை) எதிர்த்து உங்கள் உயிரைக் குடுத்து சுதந்திரத்திற்கும், நீதிக்கும் ஒரு அடையாளத்தை கொண்டு வந்தீர்கள்" என்று நச்சென்று படம் முடியும். வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள் இந்த வரலாற்று த்ரில்லர் உங்களுக்கும் பிடிக்கும்.

தற்போதைய பயம்
இந்த இண்டர்நெட் யுகத்தில் "உலகம் ரொம்பவே சின்னதுங்க" என்று கலிலியோ மாதிரி நிறைய பேர் ஸ்டேட்மெண்ட் விட்டுக் கேட்டிருக்கிறேன். நானும் "wow world is so small " என்று நிறையவே தோளைக் குலுக்கியிருக்கிறேன். சரி மேட்டருக்கு வருகிறேன்.
ஒரு நாளைக்கு நீங்க கண்டிப்பா மூன்று வேளையும் சாப்பாடுக்கு முன்னால் பேஸ்புக் பார்க்கணும், இல்லாட்டா பை பாஸ் சர்ஜரி செய்ய வேண்டியிருக்கும் என்று டாக்டர் சொல்லியிருப்பதால் அடிக்கடி பேஸ்புக்கில் உலக அமைதிக்கு என்னாலான பிரார்த்தனைகளைச்  செய்வேன். என் சேவையை பாராட்டி பேஸ்புக்கும் இவரை உனக்குத் தெரியுமா பாரு என்று என் மனைவி ப்ரொபலை பிரெண்ட் சஜெசன் என்று காட்டும். எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்து நானும் அதை டிஸ்மிஸ் செய்வேன். பேஸ்புக்குக்கே போரடித்துவிட்டது போல, சமீபத்தில் வேறொரு பெண்ணுடைய ப்ரொஃபைலை காட்டியது . பெயர் எங்கயோ கேள்விப் பட்டது மாதிரி இருக்கே என்று க்ளிக் செய்து ஃபோட்டோவைப் பார்த்தால்...ஆத்தாடீ.... நான் ஜொள்ளித் திரிந்த காலத்தில் எழுதிய  "குத்துவிளக்கு"  . தலை தெறிக்க ஓடியே வந்துவிட்டேன். கொஞ்ச நாள் முன்னாடி தான் "எங்களப் பத்தி ப்ளாக்ல போஸ்டாடா போடுற"ன்னு ஒரு கும்பல் தொரத்தித் தொரத்தி அடிப்பது மாதிரி கனாக் கண்டேன். நிறைவேறுகிற நாள் ரொம்ப தொலைவில் இல்ல போல.


சமீபத்திய வருத்தம்
இன்னும் என்னால இந்த வருத்தத்தை ஜீரணிக்கவே முடியவில்லை. இப்ப கொஞ்ச நாள் முன்னாடி சில பல பிரச்சனை என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அந்த சமயத்தில் நடந்தது இது. இங்கே லண்டனில் ஒரு தோழி இருக்கிறார். தோழி என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்று தொணிக்குமளவுக்கு இசைத் திறமை வாய்ந்த ஒரு வி.ஐ.பி. ஐரோப்பாவில் பல பெரிய பெரிய உலக நிகழ்ச்சிகளிலெல்லாம் பெர்பார்மென்ஸ் குடுப்பவர். இவருக்கு நம்ம இசைஞானி இளையராஜா மிக நெருக்கும். "நீ தானே என் பொன்வசந்தம்" இசைக்கு இங்கே லண்டன் வந்திருந்த போது தோழி தான் கூடவே இருந்து இசையமைப்பில் உதவிகள் செய்து வந்தார். ராஜா சாரும் தோழியும் சேர்ந்து ஒரு வித்தியாசமான இசை நிகழ்ச்சி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. "எப்படியாவது ஒரு நாள் மீட் பண்ணணும் ஏதோ பார்த்து செய்யுங்க" என்று பிட்டைப் போட்டுவைத்திருந்தேன். "உங்களுக்கில்லாமலா, கவலையே படாதீர்கள் என்று சொல்லி வைத்திருந்தார். பார்க்கும் போதெல்லாம் நீ.தா.என்.போ.வ இசையமைப்பில் நடந்த விவரங்களையெல்லாம் சொல்லுவார் (ஃபோனில் ஒரு பாட்டின் ரெக்கார்டிங்கையும் கூட பார்த்தேன்). ஒரு அசுபயோக தினத்தில், எனக்கிருந்த ஆயிரத்தெட்டு பிரச்சனையில் ஒரு பிரச்சனையின் உச்சகட்டம். இதன் காரணமாக ஆபிஸில் காலை லீவு சொல்லி எல்லா மீட்டிங்களையும் மதியத்திற்கு தள்ளிப் போட்டு வைத்திருந்தேன். மதியம் சரியாய் மீட்டிங்கிற்கு உள்ளே போகப் போகும் போது தோழியிடம் இருந்து ஃபோன். "டுபுக்கு அப்படியே கிளம்பி வாங்க, ராஜா சார், கவுதம் மேனன் எல்லாரும் இங்க இருக்கோம். ராஜா சாருக்கு லண்டன்ல ஷாப்பிங் போனுமாம், என்னைக் கூட்டிப் போகச் சொல்லுகிறார், நீங்க வந்தீங்கண்ணா இன்னிக்கு முழுவதும் எங்க கூட சேர்ந்து இருக்கலாம்னு" அழைப்பு. எனக்கோ உள்ளே மீட்டிங் ரூமில் ஆட்களை வைத்துக் கொண்டு போகவே முடியாத சூழ்நிலை. அப்புறம் தோழியே அவருடைய காரை எடுத்துக்கொண்டு போய் வந்து அன்று நடந்த கதையெல்லாம் சொல்லி ...விடுங்க வயத்தெரிச்சல் இன்னும் தாங்கல. நம்மளுக்குன்னு வந்து சேருமே. பார்ப்போம் அடுத்த வருஷமாவது அதிர்ஷ்டம் இருக்கான்னு.

இந்த வார கேள்வி

sh... கும்கி என்றால் என்ன என்ற ஒரு அருமையான கேள்வியை மயிருலு பதிவில் கேட்டார். "வெரி குட் கொஸ்டின்.. உங்க ஆர்வத்த நான் பாராட்டுறேன்" என்று நைஸாக வாய்தா வாங்கிக்கொண்டு தேடிப் பார்த்ததில் - காட்டு யானைகளை வேலை வாங்கும் போதோ பழக்கப் படுத்தும் போதோ, இல்லை அவை மனித குடியிருப்பு பகுதிகளில் வந்துவிட்டால் அவற்றை எல்லாம் அடக்க /வழிகாட்ட ஒரு பழகிய யானை வைத்திருப்பார்கள். அந்த யானைக்குப் பெயர் தான் கும்கி. இப்படி கேள்வி கேட்டு நானும் விஷய்ம் அறிந்து கொள்ள உதவிய sh...க்கு மிக்க நன்றிங்கோவ்.

Wednesday, October 03, 2012

என் பாட்டு உன் பாட்டு

பெரிய மகளை நான் தான் நிதமும் ஸ்கூலுக்கு கூட்டிப் போவேன். குறுக்கு வழியில் ஒரு பெரிய பார்க் வழியாக நடந்து செல்லலாம் என்றாலும், அந்த ஆள் அரவமற்ற பாதையில் காலையில் அவள் தனியாய் செல்ல வேண்டாமே என்று நான் காரில் ட்ராப் செய்வேன். இதற்காகவே சீக்கிரம் எழும்ப வேண்டிய கட்டாயம். ராத்திரி முழுவதும் கூட தூங்காமல் இருக்க முடியும், ஆனால் படுத்தால் இந்த அதிகாலையில் எழுந்திருப்பது என்பது இன்னமும் ரொம்பவே கஷ்டமான செயலாக இருக்கிறது. அதிகாலையில் எழுந்து ட்ராக் சூட், ஹெட்ஃபோன் சகிதம் ஜாங்கிங் போகவேண்டும் என்பது சின்ன வயதிலிருந்தே ரொம்ப ஆசை. முதலில் ரெண்டு நாள் தங்கமணி எழுப்பிப் பார்த்தார். நடுங்கும் குளிரில் "இல்ல நான் இப்படியே போர்வைக்குள்ளேயே படுத்துக்கொண்டே ஸ்டைலாய் ஜாங்கிங் போய் கொள்கிறேன்" என்று ஆரம்பித்து, டெய்லி ஜாங்கிங் மிஸ் பண்ணவே மாட்டேன். பாதி ஜாங்கிங் போய்க் கொண்டிருக்கும் போது "ஸ்கூலுக்கு நேரமாயிடும் எழுந்திரிங்க" என்று முதல் அலாரம் ஆறரை மணிக்கு அடிக்கும். . "தோ...இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம்" என்று வாய்தா வாங்கினால், ஆறே முக்காலுக்கு பெரிய மகள், தங்கமணி அவளை எழுப்பிய கடுப்பில், போர்வையைப் பிடுங்கி "தூங்கினது போதும், போய் குளிக்கப் போப்பா"ன்னு ரெண்டாவது அலாரம் அடிப்பாள். "இந்த வீட்டுல யாரு குழந்தைன்னே தெரியலை எல்லாமே உல்டாவா இருக்கு"ன்னு வீடே ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனமாகிக் கொண்டிருக்கும் போது, அப்படியே கண்ணையும் போர்வையையும் மூடிக்கொண்டு அசையாமல் ஒரு பதினைந்து நிமிடம் தியானம் செய்தால், ஏழு மணிக்கு எழுந்து குளித்து அரக்கப் பரக்க ஓடுவதற்கு சரியாய் இருக்கும். அதென்னமோ தெரியவில்லை இந்த காலை ஆறிலிருந்து எட்டு வரை உள்ள இரண்டுமணி நேரம் மட்டும் அரைமணி நேரத்திலேயே ஓடிவிடும். ஆனாலும் இவ்வளவு அதகளத்திலும் டை கட்டிக் கொள்ளும் நாட்களில் மட்டும், ஜன்னல் பக்கம் நின்று கொண்டு மிதப்பாய் ஸ்லோமோஷனில் ஹாட் சாக்லேட்டை குடித்தால் தான் ஜீரணமாகும். மகள் ஸ்கூல் எட்டு மணிக்கென்றால் ஏழு அம்பதுக்கே ஸ்கூலில் இருக்கவேண்டும் என்று அடம் பிடிப்பாள். "ஒரு வேளை ஆஸ்பத்திரில மாத்திட்டாய்ங்களோ"ன்னு சந்தேகம் வருமளவுக்கு நேரம் காப்பதில் பொறுப்பாய் இருப்பாள்.(இந்த விஷயத்தில் அப்படியே தங்கமணி)

வீட்டிலிருந்து மகளின் ஸ்கூல், காரில் ஐந்து நிமிட பிரயாணம் தான். ஆனால் காரில் ஏறிய முதல் மூன்று நிமிடங்களுக்கு என்ன பாட்டு போடுவது என்று எனக்கும் மகளுக்கும் வாய்க்கா தகறாரு ஆகாவிட்டால் அந்த நாள் இனிய நாளாக அமையாது. இளையராஜா, ஏ.ஆர்.ஆர் மற்றும் இன்ன பிற தமிழ் கோஷ்டிகளுக்கும் நிக்கி மினாஜ், ஷகிரா, ரியானா கோஷ்டிகளுக்கும் தர்ம யுத்தம் நடக்கும். அன்றைக்கு இங்கிலீஷ் பாட்டு தான் தீர்ப்பாகிவிட்டால் ஒரு எழவும் புரியாது. எல்லா பாட்டிலும் கிட்டாரை "ங்கொய்ங் ங்யொங்" என்று காது பக்கத்தில் வைத்து ராவுவம் போது ஊரில் பஜனை கோஷ்டியில் பாட்டு தெரியாவிட்டால் பாட்டு சத்தத்தை குறைத்து ஜால்ரா வால்யூமை ஏத்தும் டெக்னிக் தான் நியாபகத்துக்கு வரும். இதெல்லாம் சரிபட்டு வராது என்று என்ன பாட்டு போடுவது என்பதற்கு சில போட்டிகள் வைத்துக் கொண்டோம். முதலில் "கே.வி.மஹாதேவன் இசையமைத்த முதல் படத்தின் பெயர் என்ன","ஆண்ட்ரியாவும் அநிருத்தும் எந்த பாட்டு பாடி பேமஸ் ஆனார்கள்" போன்ற குவிஸ்களில் தமிழே வெற்றி பெற்று தமிழ் கொடியை நாட்டின. ஆனால் அடுத்த வாரம் மகள் சுதாரித்துக்கொண்டாள். நிக்கி மினாஜ் தலை முடியின் ஒரிஜினல் கலர் என்ன போன்ற எதிர் கணைகள் வர ஆரம்பித்தன. கிழிஞ்சுது கிருஷ்ணகிரி, இந்தப் பெயராவது ஆம்பளையா பொம்பளையான்னு க்ளூ குடுக்கிற மாதிரி இருக்கா. எங்கூர்ல மனோஜ்லாம் ஆம்பிளைகள் தான் வைத்துக்கொள்வோம் என்றாலும் மகள் ஒத்துக்கொள்ளவில்லை. இதையும் மீறி  ஆங்கிலம் அரங்கேறும் போது "இப்போ என்ன பிரச்சனையாம் அவனுக்கு..?"என்ற எனது சரமாரியான நொய்ய நொய்ய நச்சரிப்பில் வெறுத்துப் போய், சில நாட்கள் தமிழ் பாட்டுக்கு மீண்டும் வெற்றி கிட்டும். தமிழ் பாட்டு போடும் போதெல்லாம் "பாட்டு கேட்டா மட்டும் போறாது ஜெனரல் நாலெட்ஜ்ஜையும் வளர்த்துக்கணும்" என்று "இந்த படம் ரிலீசான போது எங்க காலேஜுல ஒரு பொண்ணு இருந்தா..." என்று மகளுக்கு டெக்னிகலாய் நிறைய விஷயங்களை விளக்குவேன். அவளும் நான் பீலிங்காய் புன்முறுவலுடன் கோண பார்வை பார்த்து அசை போட்டுக்கொண்டிருக்கும் போது நைஸாக பாட்டை ரியானாவுக்கு மாற்றி விடுவாள்.

நிற்க நான் பொதுவாய் ஆங்கிலத்தில் ஆம்பளைக் கபோதிகள் பாடுவதையெல்லாம் கேட்பதே இல்லை. பாப் உலகில் பெணகள் தான் தேனாய் பாடுவார்கள் மானாய் ஆடுவார்கள். ஷகிரா மாதிரி ஆடிக்கொண்டே பாடினால் மானே தேனே பொன்மானே அடேங்கப்பா..அடுத்த வீட்டுக்காரன் சொத்த அப்படியே கிரயம் பண்ணிக் குடுத்துவிடலாம். ஆம்பளைக் கபோதிகள் வீடியோவில்லெல்லாம் மொட்டையடித்துக் கொண்டு குரங்கு மாதிரி குல்லா போட்டுக் கொண்டு தாவி குதிச்சு பளிச் பளிச்சுன்னு லைட்ட போட்டு கண்ணை மழுங்கடித்துவிடுவார்கள். கூலிங் க்ளாஸ் போட்டால் தான் பார்க்கவே முடியும் என்பதால் மெனெக்கடவே மாட்டேன். ஆனால் சமீபத்தில் காரில் ஒரு பாட்டு கேட்ட மாத்திரத்திலேயே பிடித்துவிட்டது. கொஞம் தமிழ் டியூன் சாயல் இருப்பதால் கூட இருக்கலாம். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இதோ...