Tuesday, January 29, 2008

வாழ்க்கை கல்வி

"பருவ மலர்" இது தான் நான் படித்த முதல் மேட்டர் புஸ்தகம். "டேய் அந்த மாமா 'சுகு' போட்டுடார்டா"ன்னு கோட் வேர்ட்டில் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கும் - மேட்டர்ன்னா என்னான்னே தெரியாத வயதில் இந்த புஸ்தகம் கையில் மாட்டியது.
பாலமித்ரா, இரும்புக்கை மாயாவி, அம்புலி மாமாவெல்லாம் ஆர்வமாய் படிக்கும் வயது அது. மாமா கூட இசக்கி தாத்தாவின் சந்திரா சலூனுக்கு முடி வெட்டிக் கொள்ளப் போயிருந்தேன். இசக்கி தாத்தா கடை பற்றி ரொம்ப நாள் முன்னாடி பதிந்திருக்கிறேன். இசக்கி தாத்தா நம்ம தலையில் தான் முதலில் கச்சேரி நடத்திவிடுவார்.அதறகப்புறம் மாமாவுக்கு தலையில் அறுவடையாகிக் கொண்டிருக்கும் போது சும்மா இராமல் ஒரு மேஜை ட்ராயரை நோண்டி ஒரு அட்டை பக்கமில்லாத புஸ்தகத்தை எடுத்து விட்டேன். இசக்கி தாத்தா கடையில் பொதுவாக தினமலர் வாரமலர் தான் இருக்கும். அதில் முக்காலேவாசி - பன்னிரெண்டாம் பக்கத்திலோ, இருபதாம் பக்கத்திலோ மூனுக்கு ஆறு கட்டத்தில் ஔவையார் மாதிரி குனிந்து கொண்டு போஸ் குடுக்கும் நடிகைகள் போட்டோ இருக்கும் துணுக்கு முட்டை தவிர்தலாக மற்றவற்றைப் படிப்பேன். அதே மாதிரி நடுப்பக்கத்தில் கீழே யாரோ தரையை பெருக்கிற மாதிரி காலை தூக்கி வைத்துக் கொண்டு சம்பந்தமே இல்லாமல் குடத்தையோ, திராட்சைப் பழக் கொத்தையோ, விளக்குமாத்தையோ வைத்துக் கொண்டு மார்க்கமாய் இருக்கும் நடிகையின் புல் ப்ளோ-அப்பையும் (அந்த வயதில்) ரொம்ப பார்க்க மாட்டேன். இப்பக் கூட இந்த மாதிரி படங்கள் எதாவது இருந்தால் "ச்சீ என்ன படம் போட்டிருக்கான்"ன்னு அந்த பக்கத்தை சட்டென்று திருப்பிவிடுவேன். அப்புறம் சுத்தி முத்தி யாரும் நம்மளைப் பார்க்கவில்லை என்று உறுதிப் படுத்திக்கொண்டு ரீவிசிட் செய்யும் வழக்கம் தான் இன்னிக்கு வரைக்கும்.
இப்படி சத்யசீலனாய் இருந்த காலத்தில் இசக்கி தாத்தா கடையில் பருவமலர் மாட்டிய போது அதுவும் வாரமலர் மாதிரி என்று படிக்க ஆரம்பித்துவிட்டேன். நான் திறந்த பக்கத்தில் ஜோக்ஸ் இருந்தது. ஜோக்ஸ் ரொம்பப் பிடிக்கும் என்பதால் படிக்க ஆரம்பித்து, கொஞ்ச நேரத்திலேயே என்னாடா இந்த புஸ்தகத்தில் ஜோக்ஸ்லாம் ஒரு மாதிரியா ஓப்பனா இருக்கேன்னு என்று நினைப்பதற்க்குள் இசக்கி தாத்தாவின் வளர்ந்த பையன் எங்கிருந்தோ வந்து புஸ்தகத்தை பிடுங்கிக் கொண்டு போய்விட்டான். இசக்கி தாத்தாவிம் பிரச்சனையை எஸ்கலேட் பண்ணியதில் "பரவாயில்லையே அம்பி புஸ்தகமெல்லாம் படிக்கிறாரே..எலே சம்முவம் புஸ்தகத்த குடுறா அம்பி படிக்கட்டும்"ன்னு திரும்ப வந்த புஸ்தகம் ஒரிஜினல் வாரமலராக மாறியிருந்தது. "தொட்டனைத்தூறும் மணற்கேணி..மாந்தர்க்கு.." என்று மாமா படிப்பைப் பற்றி இசக்கி தாத்தாவிடம் ஸ்லாகித்துக் கொண்டிருந்த போது, நான் திரும்பி வந்த புஸ்தகத்தில் பாதியில் விட்டுப் போன ஆபிஸ் ஸ்டெனோ ஜோக்கைத் தேடிக்கொண்டிருந்தேன். அதில் தேடி பார்த்தும் அந்த பழைய மாதிரி ஜோக்கிலாதது எனக்கு ஆச்சரியமாயிருந்தது. ஆனாலும் பள்ளிக்கூட்டத்தில் வாத்தியார்கள் அடிக்கடி சொல்லும் "பசுமரத்தாணி" போல் முழுதாய் படித்த அந்த ஜோக் மனதில் பதிந்துவிட்டது.

பின்னொரு நாளில் அரும்பு மீசை வயதில் பருவமலர் மீண்டும் ஏடாகூடமாய் அறிமுகமாயிற்று. தெருவில் சாயங்காலம் பொதிகை மலைக் காற்று இதமாக அடிக்கும் என்பதால் பெரிசுகள் எல்லாம் ஈ.ஸி சேர் போட்டு வீட்டு வாசலில் உட்காருவார்கள். இதமான இயற்கை காற்றில் ஈஸிசேரில் படுத்துக்கொண்டு, தெருவிளக்கு வெளிச்சத்தில் (நல்ல) புஸ்தகம் படிப்பது போன ஜென்ம குடுப்பினை. ஒன்பது மணி வரை மாமா சீனாதானா மாமாவோடு ஈ.சிசேரில் படுத்துக்கொண்டு பேசிக்கொண்டிருப்பார். ஒன்பது மணிக்கு மேல் அவர் சாப்பிட எழுந்து போய்விடுவார் என்பதால் சனி ஞாயிறுகளில் எனக்கு ஈசி சேர் கிடைக்கும். மாமியும் சிலநாள் என்னுடன் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு மிச்சம் இருக்கும் புஸ்தகத்தில் எதாவது ஒன்று எடுத்துக்கொண்டு படிப்பார். சுஜாதா, தமிழ்வாணன் எல்லாரையும் போட்டி போட்டுக்கொண்டு படித்துக் கொண்டிருந்த காலமது.

தெருவில் இருந்த பப்ளிக் லைப்ரரி எங்கள் செட்டுக்கு இன்றியமையாத வரப்பிரசாதம். ஒருவருக்கு ஒரு புஸ்தகம் தான் எடுக்கலாம் என்பதால் கிடைக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட நல்ல புஸ்தகங்களை வரலாறு ரேக்கில் ஒளித்துவைத்துவிட்டு கூட்டாளிகளிடம் சொல்லி எடுத்துவந்து மாற்றிக்கொள்வது அன்றாடப் பழக்கம். அதனால் எடுத்துவந்த புஸ்தகத்தை முடித்துவிட்டு இரண்டாவது வீட்டில் இருக்கும் கிங்பெல்லிடம் குரல் குடுத்தால் எங்கெல்லாமோ இருந்து புரட்டி வைத்திருக்கும் நாலு புஸ்தகங்களை குடுப்பான். கிங்பெல்லின் திறமை அசாத்தியமானது. ஒடிசலாய் மார் தெரிய அட்டைப்படம் போட்டிருக்கும் புஷ்பா தங்கத்துரை புஸ்தங்களுக்கு அட்டைப்படம் போட்டு படிக்கும் தில் தெருவிலேயே கிங்பெல்லுக்கு மட்டும் தான் உண்டு.

இப்படியாக சர்வயோகமும் கூடிய ஒரு சனிக்கிழமை நன்னாளில் ஈ.ஸி சேரில் படுத்துக்கொண்டு இரண்டாவது வீட்டிலிருந்த கிங்பெல்லிடம் குரல் குடுத்த போது சுஜாதா உட்பட ஒரு நாலு புஸ்தகளைக் ஓடி வந்து கையில் திணித்துவிட்டு அவசரமாய் ஓடிவிட்டான். நான் சுஜாதவை எடுத்துக்கொண்டு மீதி புஸ்தங்களை மாமியிடம் குடுத்துவிட்டேன். மாமி படிக்கும் கண்ணாடியில்லாததால் படிக்காமால் சிறிது நேரம் கழித்து உள்ளே போய்வரும் போது கண்ணாடியை எடுத்துவரக் காத்திருந்தார். இதற்குள் ராத்திரி அரட்டைக்கு வானரப் படை கூடியிருந்ததால் நான் சுஜாதாவை கிடப்ப்பில் போட்டுவிட்டு அரட்டைக் கச்சேரிக்குப் போய்விட்டேன்.

சிறுது நேரத்தில் அரட்டை ஜோதியில் ஐக்கியமான கிங்பெல் "என்னடா கபாஸ்கர், புஸ்தகமெல்லம் எப்படி இருந்ததுன்னு கண்ணடித்துக் கொண்டே கேட்க, சுஜாதா புஸ்தகத்தில் தான் மேட்டர் இருக்கு போலன்னு "இன்னும் ஃபுல்லா படிக்கல டா...ரஞ்சித் இன்னும் துப்பாக்கி வாங்கிக் கொண்டிருக்கிறான்...அவ இப்பதான் நாயவே கொஞ்ச ஆரம்பிச்சிருக்கா..."ன்னு சின்சியர் சிகாமணியாய் பதில் சொல்ல கிங்பெல் டென்ஷனாகிவிட்டான்.

"டேய் நான் வாரமலர் மாதிரி ஒன்னு குடுத்தேனே அத படிக்கலையா..அத பத்திரமா வைச்சு யாருக்கும் தெரியாம படிடா"ன்னு கிங்பெல் சொல்லிக்கொண்டிருந்த போது நான் வீட்டுக்கு தலை தெரிக்க ஓடிக்கொண்டிருந்தேன். நல்ல வேளை மாமி கண்ணாடி இல்லாததால் புஸ்தகங்களை என்னுடைய மேஜையில் அப்பிடியே வைத்துவிட்டு தூங்கப் போயிருந்தார். இல்லாவிட்டால் அன்றைக்கு வீட்டில் என் மண்டையை உடைத்து மாவிளக்கு ஏற்றி இருப்பார்கள்.

இப்படியாக கிங்பெல் என் வாழ்வில் அறிவுக்கண்ணை திறந்து வைத்தான். முதல் முறை படிக்கும் போது சில விஷயங்கள் ஒரு மன்னும் புரியவில்லை. எல்லாக் கதைகளிலும் கரு(??!!) ஒரே மாதிரி தான் இருந்தது என்றாலும், இதுக்கெல்லாம் யார்கிட்ட போய் விளக்கம் கேட்பது? 'தொட்டனைத்தூறும் மணற்கேணி' - படிக்கப் படிக்கத் தான் அறிவு வளரும் என்று மாமா அடிக்கடி சொல்லும் திருக்குறள் விளக்கத்தை நியாபகப்படுத்திக் கொண்டு மனதை தேற்றிக் கொண்டேன்.

ஆனாலும் அதற்காக (நீங்கள் நினைப்பது மாதிரி) அடிக்கடி இந்த மாதிரி புஸ்தகமெல்லாம் படித்துவிடவில்லை. தெருவில் அப்பிடி கிடைக்கவும் செய்யாது. ஏதோ கிங்க்பெல் புண்யத்தில் ஒரு புஸ்தகம் கிடைத்தது என்றாலும் அதைப் பற்றி மத்த பையன்களிடம் கூட சொல்லவில்லை. அவர்களுக்கு கிடைக்கவில்லையே என்று சில அகராதிகள் ஜனாதிபதி அவார்ட் வாங்கின ரேஞ்சில் பேசிவிடுவார்கள் என்ற பயம் இருக்கும். அது ஒரு பயங்கரமான இம்சை. தெரு பசங்களாவது பரவாயில்லை. நான் படித்த பள்ளிக்க்கூடம் கான்வென்ட் ரேஞ்சுக்கு பந்தா இருக்கும். பசங்கள் நம்மைப் பற்றி "சீ"ன்னு நினைத்து விடுவார்களோன்னு ஒருவரிடமும் கொஞ்ச நாள் இதைப் பற்றி மூச்சே விடவில்லை.

-தொடரும்

Monday, January 28, 2008

பொட்டி...

மஹா ஜனங்கள் மன்னிக்கனும். ஒரு சில காரணங்களுக்காக எழுதி வைத்திருந்த பதிவுகளும் போட முடியாமல் இருக்கிறது (புத்தம் புதுசா வாங்கின கம்ப்யூட்டர் ஊத்திக்கிச்சு, டிஸ்க் பெயிலியர்). கம்ப்யூட்டர் விலை அதிகம், அதில் இருக்கும் கோப்புகளும் வேண்டுமென்பதால் சும்மா வைப்ஸ் வைத்து நல்ல பளபளன்னு துடைத்து விட்டு "இங்க தான வைச்சேன் ஸ்க்ரூட்ரைவர காணுமேன்னு..." நால் நாளாய் சீன் போட்டு ஓட்டி, டெல் கைல கால்ல விழுந்து நாளைக்கு சர்வீஸ்குக்குப் போகுது. நல்ல ஓவராயில் பண்ணிக் கொடுக்கச் சொல்லியிருக்கேன். பார்ப்போம்.

இல்லாவிட்டாலும் வாரக் கடைசிக்குள் திரும்ப பொட்டி தட்டு ஒரு பதிவாவது போடனும்னு ப்ளான் - ஏழுகுண்டல வாடா நடுவுல புகுந்து கவுத்தாம இருந்தா.

Sunday, January 06, 2008

சேல்

லேட் ஆகுவதற்கு முன்னால்(??!!!) சொல்லிவிடுகிறேன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

கிறிஸ்துமஸ்க்கும் புத்தாண்டுக்கும் நடுவில் ஆபிஸுக்கு மட்டம். இந்த முறை ஒரு மாதத்திற்கு முன்னாலே ஹாலிடேயில் என்ன செய்ய வேண்டும் என்று உருப்படியாக திட்டம் போட்டு அதை வழக்கம் போல் குப்பையாக எல்லா சாமான்களையும் அடைத்துவைத்து உபயோகமே படுத்த முடியாத மாதிரி வைத்திருக்கும் அறையில் வைத்து பூட்டிவிட்டோம்.

உலகத் தொலைகாட்சிகளிலேயே முதன் முறையாக எல்லா என்.ஆர்.ஐக்களையும் மாதிரி நாங்களும் பாக்ஸிங் டே சேல்க்கு முதல் முறையாக படையெடுத்தோம். இந்த பாக்ஸிங் டே சேலின் மகிமையே இரண்டு வருடம் முன்னாடி தான் நண்பர்களின் வழியாக உணர்ந்து கொண்டோம். அது வரை நம்ம சேல் அனுபவமெலாம் திருநெல்வேலி போத்தீஸிலோ ஆரமெகேவியிலோ போடும் இரண்டு வைகிங் ஜெட்டி வாங்கினால் ஒரு டின்னர் பவுல் ஃப்ரீ வரை தான். அதிலேயே ஏகப்பட்ட டகால்டி வேலை நடக்கும். திருநெல்வேலியில் போத்தீஸ் ஆரெம்கெவி எல்லாம் மூன்று நான்கு கட்டிடங்களில் இருப்பதால், சும்மானாச்சுக்கும் முதலாளியோட க்ளாஸ்மேட் மாதிரி (எல்லாம் அவங்க குடும்பத்தில் நம்ம வயதில் யாராவது ஒரு ஒரு சின்னப் பையன் இருப்பார் என்ற நம்பிக்கையில்) "முதலாளி இன்னிக்கு இந்தக் கடையில் இருக்காரா இல்ல அங்க இருக்காரா"ன்னு கேட்டால் விற்பனை பிரதிநிதி கொஞ்சம் உதறலோடு "அங்க தான் இருக்கார் சார்"ன்னு சேர் எடுத்துப் போடச் சொல்லி ஒரு லெமன் ஜூஸ் தருவார். திரும்ப பில் கட்டும் போது இதே பிட்டைப் போட்டால் ஜிப் வைத்த மணிபர்ஸ் கேட்காமலே தருவார்கள். சில சமயம் ராங்கி பிடித்த காஷியர்கள் "எந்த முதலாளியக் கேக்கறீங்க"ன்னு கொக்கி போடுவார்கள். நம்ம பாரம்பரியத்தில் தாத்தா பெயர் தான் பேரனுக்கு இருக்கும் என்ற நம்பிக்கையில் "விஸ்வநாதன்.... அதான் விச்சு"ன்னு கேஷுவலாக சொன்னால் "சின்ன ஐய்யா கடைக்கு வரமாட்டாரே..பெரிய ஐய்யா தான் இருப்பார்...மணி, சார முதலாளி ருமுக்கு கூட்டிக்கிட்டு போ"ன்னு கூட ஒரு ஆள் வரும். சில சமயம் வரும் மணி நல்லவராய் இருப்பார். மணியை அப்பிடியே நைஸாக லேடிஸ் ட்ரெஸ் செக்க்ஷனுக்கு கூட்டிக்கொண்டு போய் தஙகமணி எடுத்துவைத்திருக்கும் ஜவுளிக் கடலுக்குப் பில்லைப் போட்டால் "சார் சின்ன ஐய்யாவுக்கு தெரிஞ்சவராம்"ன்னு பில் பத்து பர்ஸன்ட் டிஸ்கவுண்ட் ஆகியிருக்கும். இதுவே ராங்கி பிடித்த மணியாயிருந்தால் முதலாளியே கண்ணாயினாராய் இருப்பார். "விச்சுவ நான் ஃபோனில் பிடிச்சிக்கிறேன்ன்னு "ஹலோ யாரு துபாய் ஷேக்கா? அடுத்த கப்பல்ல முன்னூறு ஒட்டகமும் ரெண்டு எருமை மாடும் வேணும் அனுப்பிருங்க"ன்னு முக்கியமான போனுக்காக மணி கத்தரித்து விடப்படுவார். தங்கமணி நான் என்னம்மோ ரெண்டு தெரு தள்ளியிருக்கும் வீட்டில் யாருக்கோ சொந்தம்ங்கிறமாதிரி திசைக்கே வரமாட்டார். வந்தாலும் நெஞ்சில் சளி கட்டிக் கொண்ட மாதிரி காறிக் காறித் துப்புவார் என்பதால் நானும் கண்டுகொள்ள மாட்டேன்.

இப்படியாக சேலில் வாங்கி வந்ததைப் போட்டுக்கொண்டு பவுலில் ஒரு சூப் குடித்துவிட்டோம் என்றால் சேல் சாபல்யம் அடைந்துவிடும்.

இந்த முறை வீட்டுக்குத் தேவையான முக்கியமான இரண்டு விஷயங்கள் வாங்க வேண்டி இருந்ததால் சேலுக்கு காத்துக்கொண்டிருந்தோம் அப்பிடியே, அப்பிடி என்ன தான் சேல்ன்னு பார்க்கலாம் ஒரு ஆவல். இங்கு லண்டனில் இந்த பாக்ஸிங் டே சேல் ரொம்பப் பிரபலம். சில கடைகள் காலை நாலு மணிக்கு இதற்காகத் திறப்பார்கள். ஒரு மணி நேரத்திற்குள் நல்ல உருப்படிகள் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிடும் என்று நண்பர்கள் பயமுறுத்தி இருந்தார்கள். நாலு மணியெல்லாம் நமக்கு வேலைக்காது என்பதால் பாதி ராத்திரி ஏழரை மணிக்கு எழுந்து, குழந்தைகளையும் கிளப்பிக் கொண்டு வீட்டுக்குப் பக்கத்திலுள்ள மிகப் பெரிய ஷாப்பிங் பார்க்குக்கு ஒன்பது மணிக்கு போய் சேர்ந்தால் இரண்டாயிரம் கார்கள் நிப்பாட்டக் கூடிய கார் பார்க்கில் இடமே இல்லை. அடிச்சுப் பிடிச்சு நிப்பாட்டி விட்டு சேலுக்குப் பிரபலமான ஒரு கடைக்குப் போனால் வெளியிலேயே பெரீய்ய்ய்ய க்யூ. மூன்று மாடிக் கட்டமும் புல்லாம். இனிமே எத்தனை பேர்கள் வெளியே வருகிறார்களோ அத்தனை பேர்கள் தான் உள்ளே போகலாம்ன்னு ரெண்டு கடோத் கஜன்கள் காவலுக்கு இருந்தார்கள்.

அரை மணி நேரம் தேவுடு காத்து உள்ளே போனால் களேபரமாக இருந்தது. பெண்கள் எல்லாம் கொல்லைப் புறத்தில் காயப் போட்ட துணியை மழை வந்தால் எடுக்கிற அவசர கதியில் துணிகளை அள்ளிக் கொண்டிருந்தார்கள். முக்கால் வாசி துணி அடுக்குகள் காலியாக பல்லைக் காட்டிக் கொண்டிருந்தது. இதைப் பார்க்கவா வெளியே இந்த மூதேவி க்யூல வரச்சொன்னான்னு எனக்குக் கடுப்பு. பக்கத்து வீட்டு குண்டு இங்கிலீஷ் மாமா இடுப்பு சைஸ்க்கு மட்டும் உள்ளாடை சல்லிசாக கிடைத்தது. அதில் ஒரு காலிலே என் முழு உடம்பும் போய்விடும், அவ்வளவு பெரிய சைஸ். பேசாமல் அதை எடுத்துக் கொண்டு அடுத்த தரம் ஊருக்குகுப் போகும் போது ஊரில் ஆல்டர் பண்ணி எடுத்துவரலாமா என்று தோன்றியது. தங்கமணியிடம் கேட்டால் திரும்பவும் அவருக்கு நெஞ்சில் சளி கட்டிக் கொள்ளும், அத்தோடு அவருக்கு ஒரு துணிமணியும் கிடைக்கவில்லை என்ற எரிச்சலும் என் தலையில் விடியும் என்பதால் "என்ன பெரிய சேல்...எங்கூர்லலாம் ரெண்டு வாங்கினா ஒரு டின்னர் பவுல் குடுப்பாங்க தெரியுமா"ன்னு கிடைத்த குண்டு மாமா மலிவு விலை உள்ளாடையையும் திரும்ப கம்பியில் மாட்டிவிட்டு வந்துவிட்டேன்.

"இந்த இழவ விட்டா உங்களுக்கு வேற எதுவுமே கண்ணுல படாது. வெள்ளக்காரனப் பாருங்கோ என்னம்மா கேர்ல் பிரெண்டுக்கு ட்ரெஸ் எடுக்கிறான். நான் கூட உங்களுக்கு ரெண்டு சட்டை எடுத்திருக்கேன்...இவ்வளவு பெரிய கடையில் உங்களுக்கு வேற எதுவுமே கண்ணுக்கு தட்டுப் படலையா"ன்னு தங்கமணி வேப்பிலையடிக்க ஆரம்பித்துவிட்டார்.

"சரி சரி வருத்தப் படாத நாளைக்கு மெட்லன்ல உனக்கு ஜமாய்ச்சிருவோம், என்னச் சொல்லி குத்தமில்லை..எனக்கு சின்ன வயசிலேயே ஜாதகத்துல கோமணதோஷம் இருக்குன்னு ஒரு ஜோசியர் சொல்லியிருக்கார், பழனியில போய் ஒரு பரிகாரம் பண்ணின்னா எல்லாம் நிவர்த்தியாகிவிடும்"ன்னு கலாய்த்து விட்டு அடுத்த நாள் வீட்டுக்குப் பக்கதிலிருந்த இன்னொரு நல்ல கடைக்கு போய் நிறைய (சரி கொஞ்சமாய்) துணிமணிகள் வாங்கினோம்.
(சே வர வர ப்ளாக் போஸ்டல் கூட சினிமா மாதிரி சுபம் போட ஆரம்பித்துவிட்டேன் :) )