என்சான் உடம்புக்கு சிரசே பிரதானமாக இருந்த காலம் அது.நான் சொல்வது தலை முடி ஸ்டைலை பற்றி. எனக்கு அதில் விஷேசமான ஆர்வமெல்லாம் கிடையாது. எனது ஆரம்பகால முடி திருத்தும் சரித்திரம் அப்படி. வீட்டுக்கு ரொம்ப அடங்கின பிளளை நான். மாமா வீட்டில தான் வளர்ந்தேன். மாமா மிக கண்டிப்பானவர். அவருக்கு தலை வழுக்கையானாலும் மாதா மாதம் இசக்கியின் 'சந்திரா சலூனில்' முடி வெட்டிக் கொள்ள செல்ல வேண்டும். அப்பாவுடன் முடி வெட்டிக்கொள்ள செல்வதென்றால் ஜாலி. கையில் 50 பைசா தருவார். ஆனால் மாமா வீட்டிலே வளர்ந்ததால் அந்த சந்தர்பம் எப்போவாவது தான் கிடைக்கும். மாமா ஸ்கூல் ஹெட்மாஸ்டர். இசக்கியின் மகன்கள் மாமாவின் ஸ்கூலிலே படித்து வந்தார்கள்.அதற்காக மாமா சொல்வதை விட தாராளமாகவே முடி -வெட்டுவார் இசக்கி.அவர் தான் எங்களுடைய ஆஸ்தான முடி திருத்துபவர் என்பதால் அளவுகள் நன்றாக தெரியும்.
முதலில் எனக்கு வெட்ட சொல்லி விட்டு மாமா பேப்பர் படிப்பார்.நடுவில் இரு தரம் இசக்கி நன்றாக வெட்டுகிறாரா என்று பார்பபதற்காக 'இசக்கி...' என்று குரல் கொடுப்பார்.இசக்கி உடனே கத்தரி கோலை தட்டையாக வைத்துக் கொண்டு உச்சந் தலையில் தட்டி காண்பிப்பார். முடி கத்தரி கோலுக்கு மேலே வரக்கூடாது. அது தான் அளவு. பின் தலையில் நனறாக மெஷின் கட்டிங் செய்து நல்ல புல் தரை போல் இருக்க வேண்டும். முடி வெட்டிக் கொண்டு கண்ணாடியில் பார்தால் எனக்கே அடையாளம் தெரியாது. எனக்கு அப்புறம் மாமாவுக்கு இல்லாத முடியை தேடி தேடி இசக்கி பொறுமையாக வெட்டுவார்.
முடி வெட்டிக் கொண்டு ஆத்தங்கரைக்கு போகும் வழியில் வெட்கம் பிடுங்கி தின்னும். பெண்கள் எல்லாம் சிரிக்கிறர்களா என்று ஒரு முறை நிமிர்ந்து பார்பேன். அன்றைக்கு தெரிந்தவர்கள் எல்லாரும் ."என்ன அறுவடை ஆயாச்சு போல.." என்று பின்ன்ந் தலையில் தடவிப் பார்பார்கள். குறுக வெட்டியிருந்தால் அப்படி செய்யும் போது கையில் கிச்சு கிச்சு மூட்டுவட்து போல இருக்கும். ஸ்கூலில் அன்று முழுவதும் பின்னால் உட்கார்ந்து இருக்கும் பையன் தொல்லை தாங்க முடியாது..தலையை அடிக்கடி தடவிக் கொண்டே இருப்பான். சில வம்பு பிடிதவர்களும் அவ்வப்போது வந்து தடவி வம்பு செய்வார்கள். அப்போதெல்லாம் மனதில் இசக்கியை திட்டுவேன். ஸ்டெப் கட்டிங் வெட்டிக் கொண்டு வரும் நண்பர்களை ஆதங்கத்துடன் பார்த்த நாட்கள் அவை. இசக்கியை பொறுத்த வரை ஸ்டெப் கட்டிங்கெல்லாம் காலி பசங்கள் தான் வைத்துக் கொள்வார்கள். மாமாவிடம் இதை பற்றி கேட்டது கூட கிடையாது.
நான் காலேஜ் வந்த போது இசக்கிக்கு வயதாகி கடையை மூடி விட்டார். கொஞ்சம் தைரியம் வந்த காலம் அது. ஸ்டெப் கட்டிங் நண்பன் தான் புது கடையை அறிமுகம் செய்தான். தனியாக சென்று முடி வெட்டிக் கொள்வேன். மாமா ஆத்தங்கரைக்கு போன பின் தெரியாமல் மாமியிடம் சொல்லி விட்டு கடைக்கு செல்வேன். வெட்டிக் கொண்டு திரும்ப வந்ததும் மாமா கேட்பார் ...'காடா முடி வளர்திருக்கே ..வெட்டிக்க வேண்டாமா...?' மாமி மாமாக்கு தெரியாமல் என்னை பார்த்து சிரிப்பாள். நான் பதிலே சொல்ல மாட்டேன்.மாமி தான் எதாவது சொல்லி சமாளிப்பாள். பிறகு கொஞ்ச நாளில் மாமாவுக்கும் தெரிய ஆரம்பித்த போது தண்ணி தெளித்து விட்டு விட்டார்.
முடி வெட்டிக்கொள்ள இங்கிலாந்தில் குறைந்தது 7 பவுண்டுகள் ஆகும் என கிள்ம்பும் முன் அங்கிருந்த உயிர் நண்பன் சொன்னான். கணக்கு போட்டு பார்த்தேன் கிட்டத்தட்ட 520 ரூபாய் !!!.
'இன்னும் கிளம்புவதற்கு ஒரு மணி நேரம் தான் இருக்கு இப்போ எங்க போற??' அண்ணன் தடுத்த போதும் கடைக்கு சென்று முடி வெட்டிக் கொண்டேன். 'நல்லா close ஆ வெட்டுப்பா..' - மூணு தரமாவது சொல்லியிருப்பேன் கடைக்காரரிடம். ஏர்போட்டிற்கு வழி அனுப்ப வந்தவர்கள் அனைவரும் மனதிற்குள் சிரித்தார்கள்.
இங்கிலாந்து வந்து 2 மாதம் கழித்து மீண்டும் இந்த படலம் ஆரம்பித்தது.இருப்பதிலேயே குறைச்சலாக எங்கே முடி வெட்டிக் கொள்ளலாம் என்று நண்பர் பட்டாளம் ஆராய்ச்சி செய்து வைதிருந்தது. எல்லாத்துக்கும் மெஷின் வைத்திருந்தார்கள்.இசக்கியின் கத்தரி கோல் அளவு மாதிரி இங்கே 1,2,3,4 என்று அளவு வைத்திருந்தார்கள். கம்பளி ஆட்டிலிருந்து கம்பளி எப்படி எடுக்கிறார்கள் என்று discovery channel லில் பார்திருக்கிறேன். அதே தான் நடந்தது இங்கே. இசக்கி மாதிரி இவனும் அடையாளம் தெரியாமல் ஆக்கி இருந்தான். இந்த முறை என் 2 வயது குழந்தைக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை. மனைவி மற்றும் நண்பர்களின் பரிகாசம் தாங்க முடியவில்லை. இனிமேல் இந்த் ஊர் கடையில் முடி வெட்டிக் கொள்ள கூடாதென்று மங்கம்மாள் போல நானும் சபதம் செய்தேன். கடை தெருவுக்கு சென்று உபகரணங்கள் வாங்கி வந்தேன்.திரும்பவும் பிரச்சனை. எனக்கு நானே எப்படி வெட்டிக் கொள்வது?
மனைவியிடம் கெஞ்சினேன். நீண்ட கோரிக்கை பட்டியல் படித்தாள். கடையில் ஆவதை காட்டிலும் ஜாஸ்தியாக இருந்தது. மங்கம்மாளுக்கு அவலம் வேண்டாமென்று உடன் படிக்கைகு தயாரானேன். முடி வெட்டுவதில் ஆராய்சி செய்த்வன் போல நுணுக்கங்கள் சொன்னேன். செயல் முறை விளக்கத்திற்காக ஒரு நண்பனை ஆசை காட்டி (மோசம் செய்து) என்னிடம் முடி வெட்டிக் கொள்ள சம்மதிக்க வைத்து சிரத்தையாக முடி வெட்டினேன். நனறாக வந்திருக்கிறது என்று பல முறை சொல்லியும் அவனுக்கு நம்பிக்கை வரவில்லை. மனைவியை தயார் படுத்தி நானும் ஒரு வழியாக முடி வெட்டிக் கொண்டேன். 'அப்போ நான் கேட்ட லிஸ்ட்? ' மனைவி கேட்ட போது வீரப்பா சிரிப்பு சிரித்தேன். 'இப்பிடி ஏமாத்தறதுக்கு உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்' மனைவி மனதார வாழ்த்தினாள்.
அடுத்த நாளே ஆபீஸில் கிடைத்தது. 'கரிச்சான் குஞ்சு மாதிரி இருக்கடா ' - நண்பன் அன்போடு சொல்ல , மற்றவர்கள் சந்தோஷமாக வ்ழி மொழிந்தார்கள். சொன்ன லிஸ்டை பேசாமல் வாங்கி கொடுத்து விட்டு அடுத்த முறை 'காக்க காக்க சூர்யா' ஸ்டைலில் வெட்டிக் கொள்ளலாம் என்று மனதை தேற்றிக்கொன்டேன். "நான் என்ன மாங்கா மடைச்சியா? கடையிலேயே வெட்டிக்கொள்ளுங்கள்" என்று மனைவி சொல்லி விட்டாள். :(
இப்போதெல்லாம் மாதத்திற்கு ஒரு முறை 'கரிச்சான் குஞ்சு' கூத்து நடந்து கொண்டிருக்கிறது.
Friday, January 16, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment