அலுவகத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது அவர்களை பார்த்தேன். வயது பத்தோ பதினொன்றோ தான் இருக்கும். சற்று ஒதுக்கு புறமாக இருட்டான இடதில் நின்று கொண்டு அனயாசமாக புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள். போலீஸ் பார்த்தால் பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள் என்ற பயமாக இருக்கலாம்.இரண்டு பையன்கள்கள்,மூன்று பெண்கள் மொத்தம் ஐந்து பேர். பையன்களுக்கு தொட்டு கொள்ள ஊறுகாய் போல இரண்டு பெண்களும் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். மூன்றாவது பெண் 'தேமே'ன்று கருமமே கண்ணாக ஊதிக் கொண்டிருந்தாள்.
எனக்கு நான் முதன் முதலில் கையில் பிடித்த சிகரெட் தான் நினைவுக்கு வந்தது. நான் முதலும் கடைசியுமாக பிடித்த சிகரெட் அது தான்.11வது படிக்கும் போது என்று நினைக்கிறேன். பக்கத்து வீட்டு நண்பனின் அக்காவுக்கு கல்யாணம். கேரளாவில் இருந்து அவன் சித்தப்பா பையன் வந்திருந்தான். அவனுக்கும் எனது வயது தான். அவன்,நான்,நணபன் முன்று பேருமாய் சேர்ந்து சிகிரெட் பிடிக்க முயற்சிக்க முடிவாயிற்று. இரவு 9.30 மணிக்கு முஹுர்த்தம் குறித்தாயிற்று.கல்யாண கூட்டத்தில் மாமா என்னை தேட மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு.
சிகரெட் வாங்க நான் வரமாட்டேன் என்று தீர்மானமாக சொன்னேன். உள்ளூர் கடைக்காரர்களை பற்றி நன்றாக தெரியும், மாமாவுடன் கடைக்கு போகும் போது "என்ன அம்பி அன்னிக்கு சிகரெட் வாங்கி போனீங்களே நல்லா இருந்துச்சா?" என்று வசமாக போட்டு குடுத்து விடுவார்கள்.
'மம்மூட்டி பிடிக்கற மாதிரி பீடி பிடிப்போம்டா' என்றான் கேரளாக்காரன்.
'அதெல்லாம் வேண்டாம் பஞ்சு வெச்ச சிகரெட் தான்' என்று முடிவு செய்தான் நண்பன்.
கேரளாக்காரனை சிகரெட் வாங்கி வர அனுப்பினொம். டூயூப் லைட்டு வெளிச்சம் இல்லாத, பன்றிகள் சரணாலயம் போல இருக்கும் ஒரு குட்டி முடுக்கை (திருநெல்வேலி வழக்கு - குட்டி தெரு) தேர்ந்தெடுத்தோம். நணபன் தான் முதலில் முயற்சி செய்தான். கண்ணில் ஜலம் வர இருமினான். கேரளாக்காரன் கைதேர்ந்வன் போல புகையை ஊதினான் (முன்னாலெயே பழக்கம் உண்டென்று அப்புறம் ஒத்துக் கொண்டான்). என் முறை வந்த போது கையெல்லாம் நடுங்க ஆரம்பிதது. வாய் தந்தி அடித்தது. பயத்தில் சிகரெட்டை வாயில் வைத்து உள்ளே இழுப்பதற்கு பதிலாக ஊதினேன். கேரளாக்காரன் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான். என்னிடமிருந்து சிகரெட்டை பிடிங்கி இன்னும் ரென்டு இழுப்பு இழுத்துக் காட்டினான்.
'இப்பிடித்தான் பிடிக்கனும் தெரிஞ்சுதா?'
'எல்லாம் எங்களுக்கு தெரியும் இங்க கொண்டா' - வெட்கத்தில் அவனிடமிருந்து பிடுங்கினேன்.
'எலே அங்க எவம்லே சிகரெட் ஊதறது, இங்க வாங்கலே மூஞ்சிய பார்போம்' - இருட்டில் எங்கிருந்த்து குரல் வந்தது தெரியவில்லை யாரோ பெரியவரின் முரட்டு குரல். அவ்வளவு தான் ஆளுக்கொரு பக்கமாக் சிதறினோம். நான் இருட்டில் படுத்திருந்த பன்றிகளையெல்லாம் மிதித்துக் கொண்டு திரும்பி பார்காமல ஓடினேன். ஊரெல்லாம் சுற்றி வீட்டிற்கு வரும் போது மாமி காத்திருந்தாள்.
'எஙகடா போனே கோந்தே, கானோமேனு பார்த்துண்டு இருக்கேன். இதென்ன காலெல்லாம் சாக்கடை சகதி?' மாமி மிகுந்த ஆதங்கத்துடன் கேட்டாள் .
'ம்ம்ம்...ராமன் மாமாக்கு பாக்கு வாங்க போனேன்,வர்ர வழியில பன்னி முடுக்குல நாய் துரத்தித்து அடிச்சு பிடிச்சு ஓடி வர்ரென் அதான்'.
'ஓ..இனிமே அந்த வழியா வரதேடா கோந்தே' மாமி என்னை முழுதாக நம்பினாள்.
அது தான் நான் முதலும் கடைசியுமாக பிடித்த சிகரெட்.
Thursday, January 22, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment