Friday, January 25, 2013

விஸ்வரூபம்

மு.கு - இது முழுக்க முழுக்க பட விமர்சனம் அல்ல. விமர்சனம் ஒரு பகுதி அவ்வளவே. நீங்கள் இந்தப் படத்தின் ட்ரைலரைப் பார்த்திருப்பீர்களயானால், அதை வைத்து விஸ்வரூபம் படத்தின் சில அடிப்படை கதை கட்டமைப்புகளை  யூகித்திருப்பீர்களேயானால்  இந்தப் பதிவை தாராளமாகப் படிக்கலாம். இல்லை விஸ்வரூபம் - விஷாலா விஜயான்னு கேட்கும் பச்சைக் குழந்தையாக இருந்தால் ப்ளீஸ் அப்படியே அப்பீட்டு, ஏன்னா இந்தப் படம் தமிழ்ப் படம், இதில் கமல் நடித்திருக்கிறார் போன்ற பல ஸ்பாயிலர்கள் இருக்கின்றன.

படத்தைப் பற்றி பேசுவதற்கு முன்னால் இந்தப் படத்தின் மீதான தடை பற்றி. படம் பார்ப்பதற்கு முன்பாகவே, ஒரு கமல் ரசிகனாக அல்ல- ஒரு திரைப்பட ரசிகனாய் எனக்கு இதில் சுத்தமாய் உடன்பாடு இல்லை. படம் பார்த்த பிறகு கேட்கவே வேண்டாம். என்னைப் பொருத்தவரை படத்தில் முஸ்லீம்களையோ இஸ்லாமையோ குறை சொல்வது மாதிரி காட்சிகள் எதுவும் இல்லை. படத்தின் டைட்டில் முதல் அரபிக் மொழி மாதிரி டிசைன் செய்திருக்கிறார்களே என்று தோன்றலாம். கதை ஆப்கானிஸ்தானில் ஆரம்பிப்பது மாதிரி இருக்கிறது. ஆப்கானிஸ்தான்காரர்களையெல்லாம் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் லுங்கியுடன் அலைவது மாதிரி காட்டமுடியாது அல்லவா அது போன்று தான் படம் நெடுகவே தவிர, எதையும் திணித்ததாய் தோன்றவில்லை. ஆட்சேபம் தெரிவிக்கும் குழுவினரும் நண்பர்களும் ஒரு முறை படத்தைப் பார்த்தால் இது உறுதியாகி, இதற்காகவா இவ்வளவு சவுண்டு விட்டோம் என்று நினைக்கத் தோன்றும்.

அமெரிக்காவையும் இன்ன பிற நாடுகளையும், இஸ்லாம், கிறுத்துவம் உட்பட பல மதங்களையும் வறுத்து, துவைத்து தொங்கப் போடும் ஆவணப் படங்களும், திரைப்படங்களும் ஆயிரம் இருக்கின்றன. சொல்வது அவர்கள் படைப்புரிமை, எடுத்துக் கொள்வதும் கொள்ளாததும் நமதுரிமை என்ற கோட்பாடில் மற்ற நாடுகளில் இதை freedom of experssionஆகவே எடுத்துக் கொள்கிறார்கள். இந்த freedom of expression- க்கும் ஒரு வரையறுக்கப் படாத ஒரு நாகரிக எல்லை இருக்கிறது. அதைத் தாண்டும் போது பார்ப்பவர்களுக்கான வயதை நிர்ணயம் செய்வதுடன், சொல்லப்படுவது ஆட்சேபமாய் இருக்கும் பட்சத்தில் அதையும் மட்டுறுத்துவதற்காகத் தான் சென்சார் போர்ட் இருக்கிறது. திரும்பவும் சொல்கிறேன் இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய அளவுக்கெல்லாம் காட்சிகளே இல்லை. மாறாக நான் வுட்டாலக்கடி விடுவதாக நீங்கள் நினைத்தாலும் சரி, படத்தைப் பார்த்து எனக்கு சில இஸ்லாமிய பழக்கங்களின் மீது மதிப்புத் தான் வந்தது. தமிழ் சினிமாவில் சிறுவர் சிறுமியர் பார்க்கும் காட்சிகளில் அவர்கள் வயதுக்குத் தகாத தொப்புளும் மாரும் தெரிய உடையோடு வெளிப்படையாய் புணரும் காட்சிகளுக்கு இருக்கும் tolerance கூட freedom of expression க்கு இல்லை என்பது மிக வருத்தமான விஷயம். இப்படியே போனால் அப்புறம் தமிழ் திரைக்காவியங்களில் அல்கொய்தாவுக்கு தலைவராக ஐயரை அப்பாயிண்ட் செய்து அக்னிஹோத்ரம் தான் வளர்க்க வேண்டி வரும். எப்படியோ வாரயிறுதியில் பார்க்கலாம் என்று ஆபிஸ் விட்டு வரும் வழியில் முடி வெட்டிக் கொண்டிருந்தவனை, இன்னும் ஒரு மணி நேரத்தில் படம் என்று தெரியவந்து புடுங்கினது போதும் என்று அரக்கப் பரக்க முதல் நாளே பார்க்க வைத்த பெருமை இந்த சர்ச்சைக்கே சேரும்.

சரி நம்ம படத்துக்கு வருவோம்.இந்த தடை சர்சை காரணங்களால் ஒரு கமல் ரசிகனாய் படம் எப்படியிருந்தாலும் சூப்பர் என்று தான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது கமல் ரசிகனாய் எனக்கே ஒவ்வாது. படத்தின் ப்ரொடெக்க்ஷன் வேல்யூ சும்மா அதிரடி. அதாவது செய்த செலவுக்கு கொடுத்திருக்கும் பிரமாண்டம் அருமை, ஹாலிவுட் ரகம். சங்கருக்கே பாடம் எடுக்கும் அளவுக்கு தமிழுக்கு புதிய உச்சம். ஆஃப்கானிஸ்தான் குகைகளாகட்டும், அடிச்சு தூள் கிளப்பும் சண்டைக் காட்சிகளாகட்டும் அவற்றில் செய்திருக்கும் சி.ஜி.ஐயாகட்டும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். ஒரு டைரக்டராக, ப்ரொடியூசராக கமல் இந்த இடங்களில் ஜொலிக்கிறார்.  படம் ஆரம்பித்து முதல் அரை மணி நேரம் படம் படு விறுவிறுப்பாய் போகிறது. கமலின் பெரிய பலவீனமே அவரின் பலவீனம் தெரியாமல் இருப்பது தான். அவரின் வசனங்கள் பல காமெடி தருணங்களில் கிச்சு கிச்சு மூட்டுவதாய் நினைத்து எழுதப்பட்டிருக்கிறது ஆனால் எனக்கு கொஞசம் கடியாக இருந்தது. கம்யூனிகேஷன் என்பது காம்ப்ளிகேட்டடாகத் தான் இருக்கவேண்டும் என்பது இல்லை. சொல்ல வந்த விஷயத்தை என்னதான் ஜார்கனெல்லாம் போட்டாலும், தெளிவாகச் சொல்லும் பட்சத்தில் "என்னம்மா சொல்லியிருக்கார்பா  கலக்கிட்டார் இல்ல" என்று சொல்லவைக்கும். "அண்ணன் என்னண்ணே சொல்ல வராரு" என்று பக்கத்திலிருப்பவரை பிராண்ட வைக்காது. படத்தில் பல இடங்களில் சொல்வது புரிந்தாலும் என்ன/எதுக்கு சொல்ல வருகிறார்கள் என்று யோசிக்க வேண்டியிருந்தது.

ராக்கெட் லாஞ்சர் ஹெலிகாப்டர் சகிதம் போடும் சண்டைக் காட்சிகள் கலக்கலாய் எடுக்கப் பட்டிருந்தாலும் அவற்றை சுற்றி வரும் திரைக்கதை சில இடங்களில் பலத்த தொய்வுடன் பின்னப் பட்டிருக்கிறது.ஆன்டிரியா படத்தில் எதுக்கு என்றே தெரியவில்லை. ரெண்டு ஹீரோயின் இருந்தா க்ளாமரா இருக்கும்ன்னு நினைச்சுட்டாரோ தலை? பூஜா குமார் நாக்கைச் சுழட்டி சுழட்டி பேசும் NRI ஐயர் தமிழ் சரியான கொடுமை. பல இடங்களில் ப்ரேக் போடுகிறது. இந்த இடங்களில் ஒரு எழுத்தாளராய், டைரக்ட்டராய் கமல் தவறிவிட்டார். இடைவேளைக்கு முன்னால் கொஞ்சம் கொட்டாவி வருகிறது. நல்ல திரைப் பின்னணி இசை என்பது பல இடங்களில் மௌனமாகவே வரும் என்பது ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம் தான். ஆனால் இந்தப் படத்தில் ரொம்ப ஓவராகவே மௌனமாக இருந்து பல காட்சிக்குத் தர வேண்டிய டெம்போவை கொடுக்கத் தவறியிருக்கிறது என்று நினைக்கிறேன்.இரண்டாம் பாதியில் கொஞ்சம் திரும்ப உட்கார வைக்கிறது.


எடிட்டிங்கில் கமல் நிறைய மூக்கை நுழைத்திருப்பார் என்பது எனது திண்ணமான எண்ணம். கொஞ்சம் கத்தரி போட்டு டைட்டாக திரைக்கதையை நகர்த்தியிருந்தால் குருதிப் புனலை விட பத்து மடங்கு சூப்பர் ஆக்‌ஷன் படமாய் வந்து பிச்சு உதறியிருக்கும். ஆனால் திரைக்கதை தொய்வினால் அந்த அளவிற்கு இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

இந்த குறைகள் எல்லாம் இருந்தாலும் இந்த பிரமாண்டமான, ஹாலிவுட்டுக்கு நிகரான முயற்சிக்கு கமலுக்கு ஒரு ஷொட்டு. தமிழ் சினிமா வரவேற்க வேண்டிய முயற்சி.

Wednesday, January 16, 2013

ஜில்பான்ஸ் - 160113

சமீபத்திய சினிமா -  நீ தானே என் பொன்வசந்தம். படம் வந்த அடுத்த நாளே போய்ப் பார்த்தேன்.எனக்கு படத்தை விட சமந்தாகிராபி மிகவும் பிடித்தது. சும்மா சொல்லைங்க, படத்துல சமந்தாவின் சின்ன சின்ன ரியாக்‌ஷன்லாம் அப்படியே கண்ணுல நிக்குது. வழக்கமாக கதாநாயகிகளுக்கு டப்பிங் கொடுக்கும் வாய்ஸ் ஸ்பெலிஸ்டுகளை கொடுக்க வைக்காமல், ஒரு மாதிரி உடைந்த குரலில் மெட்ராஸ் பொண்ணுங்களின் ஸ்லாங்கில்,அவருடைய சொந்தக் குரலிலேயே பேசவைத்திருந்தது மிகவும் பிடித்திருந்தது.ஆளும் அத்தனை பாந்தம். ஜீவாவும் படத்தில் நடித்திருக்கிறார்ன்னு கேள்விப் பட்டு படத்தை அஃபீஷியலாய் இரண்டாவது முறை பார்த்தால் அட ஆமாம் அவரும் மிக நன்றாக நடித்திருந்தார். க்ளைமாக்ஸ் கொஞ்சம் மேல் சாவனிஸ்டிக்காவே பட்டது. எதற்காக சமந்தாவை மன்னிப்பெல்லாம் கேட்க வைக்கவேண்டும் என்று புரியவே இல்லை.இணையத்திலே இந்தப் படத்தை குப்பை என்று ஒதுக்குபவர்கள் ஒரு கட்சி. ஆஹா படம் சூப்பர்யான்னு கொண்டாடுபவர்கள் ஒரு கட்சி. இந்த இரண்டாவது கட்சியில் இளையாராஜா என்னம்மா இசையமைத்திருக்கார்ன்னு மோன நிலையில் வாதாடும் ஒரு பெரும்பாண்மை வேறு. எனக்கென்னமோ இளையராஜாவின் இசை கொஞ்சம் let downனாகப் பட்டது. இதையெல்லாம் விட மொட்டை எவ்வளவோ சூப்பராய் இசையமைத்திருக்கிறார். ஆனால் எனக்கிருக்கிற டவுட்டு என்னான்ன...இந்த படம் சூப்பர் கட்சில ஏன் சார் எல்லாம் ஓவர் பெரிசுங்களாகவே இருக்காங்க? (நல்லா கவனிங்க நான் படம் சூப்பர்ன்னு சொல்லவே இல்லை;) )

மேலே சொன்ன படத்தை இன்னும் கொஞ்சம் விலாவாரியா எழுதலாம் என்றிருந்த போதுதான் Life of Pi பார்த்தேன். ரொம்பவே பிடித்திருந்தது. அதுவும் உட்பொருள் வேறு எனக்கு மிக மிக பிடித்த ஒரு விஷயம் - கடவுள். (அது பற்றி இன்னொரு நாள் - ஆனால் அது பற்றி எழுதுவதை விட, எந்த எமோஷனோ செண்டிமெண்ட்டோ இல்லாத நியூட்ரல் நபர்களிடம் நேரில் விவாதிப்பதே எனது விருப்பம்). படத்தை நான் இன்னமும் முழுதாக உள்வாங்கவில்லை என்ற உணர்வே இருக்கிறது. அதனாலேயே படத்தை இன்னொரு முறை பார்க்கவேண்டும் என்று விருப்பம். செத்தால் தான் சுடுகாடு தெரியும் என்றில்லாமல் கடல், புயல, கடல் வாழ் உயிரினங்கள் என்று பலவற்றையும் அருகில் இருந்து உணர வைத்த சினிமேட்டோகிராஃபிக்கு ஒரு சபாஷ். இந்த மாதிரி உணர்வு சினிமாவில் கிடைப்பது அபூர்வம். நேரில் அனுபவித்தால் கூட இந்த உணர்வை பெற்றிருக்க முடியுமா என்று தெரியவில்லை. 3D-யில் நான் ரொம்ப ரசித்த சமீபத்திய படம் இது. சான்ஸ் கிடைத்தால் 3D-யில் பெரிய ஸ்க்ரீன் உள்ள தியேட்டரில் பாருங்கள்.

மேலே சொன்னதையே இன்னும் கொஞ்சம் விலாவாரியா எழுதலாம் என்றிருந்த போதுதான் ரொம்ப நாளாய் பார்க்கவேண்டிய லிஸ்டில் இருந்த ஆரண்யகாண்டம் பார்த்தேன். ஆஹா என்னன்னு சொல்ல...பின்னிப் பெடெலெடுத்திருக்கிறார் இயக்குனர்.தமிழில் இதான் முதல் neo noir என்கிறார்கள். அட இதுக்கு முன்னாடி வந்ததில்லையா? வழக்கமான ஜாம்பவான்களுக்கிடையில் காளையானாய் நடித்திருக்கும் குரு சோமசுந்தரமும், கொடுக்காபுளியாய் நடித்திருக்கும் மாஸ்டர் வசந்தும் சும்மா புகுந்து விளையாடுகிறார்கள்.தமிழில் இந்த மாதிரி ஒரு அருமையான நடிப்பை ரொம்ப நாள் கழித்து பார்க்கிறேன்.ரத்தத்தைப் பார்த்து அருவருக்கும் நபர்களுக்கோ,குழந்தைகளுக்கோ  இந்தப் படம் உகந்ததல்ல.

நல்ல அருமையான பாதாம் அல்வாவும் தூள் பக்கோடாவும் சாப்பிட்டு விட்டு சுவையை அசை போட்டுக்கொண்டிருக்கும் போது அழுகின வேர்கடலை பல்லுக்கிடையில் சிக்கினால் எப்படி இருக்கும். அப்படித் தான் Life of Piபார்த்து விட்டு நான் பார்த்துத் தொலைத்த படம் அலெக்ஸ் பாண்டியன். ஸப்ப்பா...மரண கடிடா சாமி. முதல் சீனில் சந்தானபாரதி வருகிறார். அப்புறம் ஆள் அப்பீட், எதுக்கு வந்தார்ன்னே தெரியலை. அப்புறம் 20நிமிஷத்திற்கு ஒரு முறை புதுசு புதுசாய் வில்லன்களும் நடிகைகளும் அறிமுகம் ஆகிறார்கள். அடுத்த படத்துல நீங்க கண்டிப்பா இருக்கீங்கன்னு டைரக்ட்டர் ஏகப்பட்ட நபர்களிடம் வாக்குறுதி குடுத்திருந்தாரா தெரியவில்லை. படத்த சீக்கிரம் முடிங்கப்பா, கார் பார்க்கிங் காசாவது மிச்சமாகும் என்று என்னை நினைக்க வைத்த ரெக்கார்ட் படம் இது. ரொம்ப நாளாய் பழிவாங்க நினைத்திருந்த நண்பர் ஒருவருக்கு சிபாரிசு செய்திருக்கிறேன். கார்த்தி டான்ஸ் ஆடும் போதும், ஓடி வரும் போதும் "சார் டெய்லி வூட்டுல டிபன் - பொங்கலும் பூரி செட்டுமா"ன்னு கேட்கத் தோன்றுகிறது, தொப்பை தொப்பை.

சமீபத்திய வாசிப்பு - உள்ளூர் லைப்ரரியில் சமீபத்தில் மாட்டிய புத்தகம் நிலா எழுதிய "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" நாவல். பின் பக்க அட்டையில் கதை அறிமுகத்தை படித்து எடுத்ததில் ஏமாற்றவில்லை. கொஞ்சம் ஒட்டாத ஒரு சந்தர்ப்பத்தில் கதையின் நாட்டை வைத்திருந்தாலும், துள்ளலான நடையும் சொன்ன விதமும் கதையை அருமையாய் நகர்த்திச் செல்கின்றன.

இந்த வார கேள்வி- ரயில்வே ட்ராக்கில் எதற்காக இவ்வளவு சரளைக் கற்களை போட்டு வைத்திருக்கிறார்கள்? - எனக்கு அடிக்கடி தோன்றும் ஒரு கேள்வி. உங்களுக்கும் தோன்றியிருக்கலாம். எல்லா நாடுகளிலும் இந்தப் பழக்கம் இருக்கிறது. கொஞ்சம் நோண்டிப் பார்த்ததில் அட இவ்வளவு இருக்கிறதா என்று தெரிய வந்தது. என்ன தான் திடமான மண்ணில் தண்டவாளங்களைப் போட்டிருந்தாலும் ரயில் போக வர காலக்கட்டத்தில் ஸ்லீப்பர் கட்டைகள் அழுந்த அழுந்த தண்டவாளத்திற்க்கு கீழே பள்ளம் விழுந்து விடுமாம். ஆனால் இந்த சரளைக் கற்கள் லூஸாய் போட்டிருப்பதனால் அந்த மாதிரி நிகழாதாம். தண்டவாளங்களின் கீழே பள்ளம் வராமலும், ரயில் தண்டவாளங்களில் ஸ்மூத்தாய் பயணிப்பதற்கு இவை மிக உதவியாய் இருக்கின்றன. ஆனால் இதை விட முக்கியமான இன்னொரு உபயோகம் இந்த சரளைக் கற்கள் மழைத் தண்ணீரை கீழே மண்ணுக்கு ட்ரயின் செய்து தண்டவாளங்களில் ஈரப் பதம் தாக்காமல் காக்கின்றன. மண் ஈரப் பதத்தை நீண்ட காலம் வைத்திருக்கும். பழைய காலத்தில் சில இடங்களில் ஸ்லீப்பர் கட்டைகள் மரத்தில் வேறு இருந்ததைப் பார்த்திருக்கலாம். அத்தோடு இவை தண்டவாளங்களின் உயரத்தை ஈஸியாய் கூட்டிக் குறைக்கவும் உபயோகப் படுகின்றன. அடிக்கடி மாற்றுவதற்கும், திரும்ப ரொப்புவதற்க்கும் ஏதுவாய் வேறு இருக்கும்.

Wednesday, January 09, 2013

கள்வனின் காதலி

நல்ல சுளீர் காரத்துடன் கூடிய மிக்ஸரோ காராசேவோ,ஒமப்பொடியோ, மசாலா கடலையோ, பஜ்ஜியோ கொறித்துக் கொண்டே சூடாய் டீயோ காப்பியோ குடித்திருக்கிறீர்களா?  கேள்வியே அபத்தம். கட்டாயம் குடித்திருப்பீர்கள்.  இல்லாவிட்டால் திரும்பப் போய் அம்மாவின் கர்பப் பைக்குள்  சௌகர்யமாய் படுத்துக்கொள்ளலாம். பிறந்தே இருக்கவேண்டாம். கொறிக்கும் பலகாரத்தின் காரம் நாக்கில் இறங்கி டீயின் சூட்டோடு ஹாட்டாய் டுயட் பாடும் போது டாப்பாய் இருக்கும். விட்டதா அதோடு. நாக்கு நம நமங்கும். இப்படி சமீபத்தில் எனக்கும் நாக்கு நமநமத்தது. என்றைக்கா... சரியாப் போச்சு, சில பதிவுகளுக்கு முன்னால் பேஸ்புக்கில் குத்துவிளக்கைப் பார்த்தேன் என்று சொன்னேன் அல்லவா அதற்கு ரெண்டு நாள் கழித்து.

விஷயம் இது தான். அன்றைக்கு பொழுதுபோகாமல் ஆட்டோகிராஃப் படத்தை திரும்பப் பார்த்தேன். நீ.தா.என்.பொ.வவையும் ரெண்டாவது தரம் பார்த்தேன்.பார்த்துவிட்டு தேமேன்னு கண்ணை மூடிக் கொண்டு படுத்துக் கொண்டிருந்திருக்கலாம். இப்ப தோன்றுகிறது ஆனால் அன்றைக்கு? நாமும் ஏதாவது ஒரு காது குத்து விசேஷம் வைத்து, ஸ்கூல் படித்துக் கொண்டிருந்த போது வடை வாங்கிக் கொடுத்து ரூட்டு விட்டுக் கொண்டிருந்த பெண்ணை (பார்க்க -1 , பார்க்க -2 ), பத்திரிக்கை குடுப்பது மாதிரி குடுத்து பார்த்து வரலாமா என்ற உள்ளே உறங்கிக் கொண்டிருந்த ஆர்வம் பிராவகமாய் கொப்பளிக்க ஆரம்பித்துவிட்டது. தப்பான எண்ணத்துடன் எல்லாம் இல்லை, சும்மா இப்போது அந்த பெண் எப்படி இருப்பார், அப்படியே தங்கமணிக்கு இதான்  உன்னோட சீனியர், வணக்கம் சொல்லிக்கோமான்னு சும்மா எந்த கல்மிஷமும் இல்லாமல் அந்த நாட்களை கலாய்க்கலாம் என்ற எண்ணம் தான். ஆனால் இந்த மாதிரி ஃபீல் குட் சீனெல்லாம் சினிமாவில் தான் சரிபடும் நேரில் நிச்சயம் உதைபடும் என்ற நிதர்சனம் நிச்சயமாய் தெரிந்ததால், இதயம் முரளி மாதிரி ஒளிந்து கொண்டு பேஸ்புக்கில் ப்ரொபைல் போட்டோவை மட்டுமாவது பார்ப்போம் என்று தேடு தேடு என்று தேடினேன்.

இந்த கூகிள் இருக்கிறதே கூகிள் - இணையில்லா வரப்பிராசதம் - என் எதிரிகளுக்கு. ங்கொய்யால என் பேரை டுபுக்கு என்று மாற்றி வைத்துக் கொண்டாலும் நான் யாரிடமிருந்தெல்லாம் ஒளிந்து கொள்ள நினைக்கிறேனோ அங்கெல்லாம் கரெக்ட்டாய் போட்டுக் கொடுத்துவிடும். ஆனால் பாருங்கள் நானும் மேற்படி ஆளை தேடு தேடுன்னு தேடுறேன் என்ன பெரிய புடலங்கா கூகிள், என்னுடைய வடை சுந்தரியைத் தவிர மற்ற எல்லாரையும் காட்டுகிறது. இதுல சப்பான், கொரியா என்று வேற்று நாட்டு ஆம்பிளைக் கபோதிகளை வேறு காட்டி இவனா பாரு என்கிறது. என்னத்தடா கோட் எழுதியிருக்கீங்க, உங்கள நம்பி யாஹூக்கு வேற துரோகம் பண்ணிட்டேனேடான்னு நான் நொந்து மிக்ஸரை வாயில் அரைத்துக் கொண்டே சூடான டீயை உறிஞ்சிக் கொண்டிருக்கும் போது தான் பொறி தட்டியது. மேற்படி முன்னாளை காலேஜ் படிக்கும் போது எதேச்சையாய் ஒரே முறை ஒருவர் வீட்டில் பார்த்திருக்கிறேன் அவரின் புதல்வி தங்கமணியின் கிளாஸ்மேட். சில பல மனக் கணக்குகள் போட்டு தங்கமணியின் அந்த க்ளாஸ் மேட் நம்மாளின் சொந்தம் என்ற முடிவுக்கு வந்தேன். அது எப்படி என்ற விபரங்களை கம்பேனி சொல்ல முடியாத நிலையில் இருப்பதால் பராக்கப் பார்க்காமல் விஷயத்தை மட்டும் பார்ப்போம்.இப்பேற்பட்ட தருணத்தில் தான் நான் முதல் பத்தியில் சொன்ன மிக்ஸர் காரம் - சூடான டீ விளைவால், தங்கமணியின் க்ளாஸ்மேட் வழியாக என வடை சுந்தரியைப் பற்றி துப்பு கிடைக்கலாம் என்று நாக்கு நமக்க ஆரம்பித்தது.

நல்ல படம் இல்ல...

ம்ம்ம்

ஸ்னேகா காரெக்டரும் சரி சமந்தா காரெக்ட்டரும் சரி அருமையா சித்தரிச்சிருக்காங்க.

ஹ...அதானே..

இல்ல அது இல்ல..வாழ்க்கைல ப்ரண்ட்ஸ் பெரும் பங்கு வகிக்கிறாங்க இல்ல.

....

ஸ்கூல் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் கூடலாம் டச்சுல இருக்கணும்.ரொம்ப முக்கியம்

ஓகோ..

நான் என் ஸ்கூல் மேட்ஸ், காலேஜ் மேட்ஸ் சில பேர் கூடலாம் இன்னும் நல்ல டச்சுல இருக்கேன்.

ப்ச்..எங்க நான் சில பேர் கூட மட்டும் தான்

அப்படில்லாம் விட்றக்கூடாது

..ம் அப்புறம்..

முயற்சி எடுக்கணும்.

டீ குடிச்சாச்சா...

உன் எல்லா ஃப்ரண்ட்ஸோடயும் நீ டச்சுல இருக்கணும். அதுக்கு நான் உதவி பண்றேன்

ஓகோ...நான் யார் கூடலாம் நான் டச்சுல இருக்கணும்?

பொதுவா சொன்னேன். உன் க்ளோஸ் ப்ரெண்டுன்னு சொன்னியே அவள இப்போதைக்கு கால் பண்ணினயா..?

இன்னும் கொஞ்சம் மிக்ஸர் சாப்பிடுங்க....

குடு குடு...நீ தந்து நான் என்னிக்கு வேண்டாம்னு சொல்லியிருக்கேன்

ம்ம்...அப்புறம்...நான் வேற யார் கூடலாம் டச்சுல இருக்கணும்..

நீ காலேஜ் படிக்கும் போது <<மேற்படி க்ளாஸ்மேட் >> உங்க செட்டு தானே

இல்லியே அவ ஜுவாலஜியாச்சே

இருக்கலாம், வேற க்ரூப்பா இருக்கலாம் ஆனாலும் அவங்க கூட டச்சுல இருந்தா தப்பில்லை. அதான் நட்போட சிறப்பு. முகநகன்னு ஆரம்பிச்சு தகதகன்னு திருவள்ளுவர் நட்பு பத்தி ஒரு குறள் எழுதியிருக்கார் பாரு அப்படியே அசந்துட்டேன்

அடேங்கப்பா....மிக்சரோட அப்படியே சூடா இந்த டீயையும் குடிங்க...ஆறிடப் போகுது

அங்கே தான் தப்பு செய்துவிட்டேன். அந்த டீயைக் குடித்திருக்கக் கூடாது. சும்மாவே உளறுவதற்கு கேட்க வேண்டாம் இதுல தங்கமணி கிவ் அண்ட் டேக் இன்ஷுரன்ஸ் பாலிசி ஏஜன்ட் எனபது தெரியாமல் உளறினால் கேட்க வேண்டுமா.

போன தரம் ஊருக்குப் போயிருக்கும் போது அந்த ஜூவாலஜி பொண்ணப் பார்த்தேன். உங்க வீட்டுக்காரர் எப்படி இருக்கார்ன்னு உங்கள பத்திக் கூட கேட்டா.

ஓ அப்படியா, அவ அப்பாவ எனக்கு நல்ல தெரியும். நல்ல மனுஷன். அவளுக்கு கூட எங்க ஊர்ல சொந்தக்கார பொண்ணு இருந்தான்னு நினைக்கிறேன, என் ஸ்கூல்ல தான் படிச்சாங்கன்னு நினைக்கிறேன்...

தங்கமணிக்கு க்ரோர்பதி அமிதாபச்சன் மாதிரி ஒரு விரலை கன்னத்தில் வைத்துக்கொண்டு என்னையே ஊடுருவி உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.

மிக்ஸர்ல என்ன பருப்பு ஃப்ரை பண்ணிப் போடுவாங்க, கடலப் பருப்பா...

இன்னமும் பார்த்துக் கொண்டிருந்தார்.

ம்ம்...யாரு அநத சொந்தக்கார பொண்ணு, நீங்க வடை வாங்கிக் குடுத்த சுந்தரியா?

உன்னை கேப்டன் டீம்ல சேர்த்தா bagisத்தான் தீவிரவாதி இண்ட்ராகேஷனுக்கு ரொம்ப உதவியா இருப்பன்னு நான் அதற்கப்புறம் அவரை புகழ்ந்ததெல்லாம் எடுபடவே இல்லை. நேராய் சைடாய் எந்த விதமாய் கேட்டாலும் தங்கமணி அசைந்தே கொடுக்கவில்லை. "எனக்கே உங்க கதைய கேக்கிறதுக்கு கேவலமா இருக்கு இதுல உங்க வடை சுந்தரியப் பத்தி இந்த பொண்ணு கிட்ட வேற கேட்கணுமா..எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு"என்று என்னை லோ லோவென்று அலைய விட்டுக் கொண்டிருந்தார். நடுப்பட்ட காலத்தில் என்னவெல்லாமோ செய்து எல்லா சேர்ச் இஞ்சின்லயும் தேடிப் பார்த்தேன் ம்ஹூம் ஒன்னும் சிக்கவே இல்லை. மானஸ்தனாச்சே, அடுத்த நாலு மணி நேரம் நச்சரிக்கவே இல்லை.அதற்கப்புறம் தான் நம்ம பிரம்மாஸ்திரத்தை எடுக்க வேண்டியது தான் என்று முடிவு செய்து "பார்த்துட்டேன் உன் கண்ணுல அந்த பயத்த பார்த்துட்டேன்...கவலப் படாத நான் சும்மா பேச்சுக்குத் தான் கேட்டேன் அவ கிட்ட பேசக் கூட மாட்டேன் ஜஸ்ட் எப்படியிருப்பான்னு ஒரு ஆர்வம் அவ்வளவுதான் ஆனா அதுக்காக உன்ன கைவிட்டுட மாட்டேன்" என்று பிரயோகிக்க, குருதிபுனலில் தலைவர் கமல் சொல்லுவாரே அந்த ப்ரேக்கிங் பாயிண்ட் க்ர்ர்ர் தூ என்று ஒர்க் அவுட் ஆக ஆரம்பித்தது. அப்புறம் கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம் அந்த பயத்தை நினைவூட்டியதில் அடுத்த இரண்டாவது நாள் "இதெல்லாம் ஒரு பொழப்பு" என்று பயந்து "சரி நான் கேட்டுச் சொல்றேன்" என்று கை மேல் பலன்.

மூன்றாவது நாள் தங்கமணி ஃபோனை எடுத்த போது இல்ல வேண்டாம் என்று தடுத்துவிட்டேன்.தங்கமணிக்கு ஒரே ஆச்சர்யம். அவர் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் அந்த வாரம் முழுவதும் என்னை எவ்வளவோ வற்புறுத்தியும் நான் ஒத்துக் கொள்ளவே இல்லை.

இங்கேயே சீனை கட் செய்து எல்லாரும் தியேட்டரைக் காலி செய்து விட்டுப் போனால் நான் தான் கே.டி.குஞ்சுமோனின் ஜெண்டில்மேன்.

ஆனால் என் கதை எனக்குத் தானே தெரியும். ஹூம் ஐபோன் SIRI மாதிரி புதுசா வாங்கின ஆண்ட்ராய்ட் போனில் கூகிள் S-voiceன்னு ஒரு லேடி கம்ப்யூட்டர் அசிஸ்டெண்ட் இருக்கிறது. அவன கால் பண்ணு, இந்த அப்ளிகேஷன ஓப்பன் பண்ணு என்று வாய்ஸ் ரெக்கக்னிஷனில் சொன்னதையெல்லாம் சிரமேற்கொண்டு செய்யும். சும்மா எப்படி ப்ரோக்ராம் பண்ணியிருக்காங்கன்னு டெஸ்ட் பண்ணுவோம்னு "you are too good; will you marry me"ன்னு டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன். "I would rather be your assistant"ன்னு காறித் துப்பிவிட்டது.
 இந்த கம்ப்யூட்டர் பெண்ணே இவ்வளவு தெளிவா இருக்குன்னா நம்ம கிரகம் சரியில்லாம தங்கமணி ட்ரை பண்ணி ஒரு வேளை நம்ம வடை சுந்தரி எனக்கு டுபுக்குன்னு யாரையுமே தெரியாதுன்னு  சூடன அடிச்சு சொல்லிடிச்சுன்னா...அப்புறம் அவ்வ்வ் நான் ஜீப்புல ஏறின ரவுடின்னு வீட்டுல இருக்கிற இமேஜ் என்ன ஆவது, வடை சுந்தரியைப் பற்றி நான் உருகி உருகி இங்கே இன்னும் நான் எழுதவேண்டிய பதிவுகள் என்னாவது..

ஹூம் ஓஷோவோ அப்துல் கலாமோ  சொல்லியிருக்காங்கல்ல  - நம்பிக்கை தானேங்க வாழ்க்கை.

Thursday, January 03, 2013

செல்போன்

செல்போன் பிரபலாமான ஆரம்பகாலத்தில் ஒரு மோட்ரோலா போன் வைத்திருந்தேன். ஜிம் போக வேண்டிய அவசியம் இல்லாமல் இரண்டரை செங்கல் சைஸுக்கு இருக்கும் அந்த ஃபோனை வைத்தே ஆர்ம்ஸ் ஏத்துவேன். மெட்ராஸ் வெய்யில் மாதிரி அதற்கு ரிங்டோன் வால்யூம் high higher highest என்று தான் இருக்கும். யாராவது அழைத்தால் பக்கத்திலிருப்பவரையும் சேர்த்து பதறவைக்கும். "ஆங் நல்லா இருக்கேங்க..அப்புறம் என்ன விசேஷம்" என்று ஆரம்பிக்கும் போது படக்கென்று கோவித்துக் கொண்டு ஆஃப் ஆகிவிடும். அதனாலேயே சார்ஜ் போட்டுக்கொண்டே பேச வேண்டிய நிர்பந்தம். ஒயர் வேறு நீளமாக வராது குனிந்து கொண்டே பேச வேண்டி இருக்கும். அதை விட கார்ட்லெஸ் ஃபோனிலேயே நடந்து கொண்டு மொபைல் மாதிரி பேசலாம் என்பதால் இந்த சனியனுக்கு நீங்க லேண்ட் லைன்லயே கால் பண்ணுங்கன்னு சொல்லிவிடுவேன். அப்புறம் நோக்கியா வந்து கைகொடுத்தது. செல்லமாய் சத்தமே இல்லாமல் சினுங்கும். பேட்டரியும் ஒரு நாள் முழுக்க வரும். கேமிரா கலர் ஸ்க்ரீன் என்று டெக்னாலஜி வளர்ந்து எங்கேயோ போய் விட்ட போதும் ரொம்ப நாள் ப்ளாக் அண்ட் வொயிட் நோக்கியாவிலேயே இருந்தேன்.

அப்புறம் சோனி,சாம்சங் என்று பலதும் வந்து போனாலும் எல்லா மாடல்களுமே மார்க்கெட்டிற்கு வந்து பழசாகி இரண்டு வருடங்கள் கழித்தே பிராப்தியாகியிருக்கின்றன. இந்த ஃபோனா வைச்சிருகீங்கன்னு துக்கம் கேட்கும் அளவிற்கு சில போன் மாடல்கள் வைத்திருந்திருக்கிறேன். சமீபத்தில் தற்போதைய லேட்டஸ்ட் மாடலான சாம்சங் கேலக்ஸி S3 LTE வாங்கினேன். போன் வந்ததிலிருந்து நீங்க என்ன மாடல் போன் வைச்சிருக்கீங்க என்று பார்ப்பவரை எல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். பத்துக்கு ஆறுபேர் மட்டுமே திரும்பவும் என்னிடம் நீங்க என்ன மாடல் வைச்சிருக்கீங்கன்னு கேட்டு நோக்கத்தை பூர்த்தியாக்குகிறார்கள்.

போன வாரம் பஸ்ஸில் ஒரு நவ நாகரீக நங்கை ஒருவர் பக்கத்தில் அமர்ந்தார். உடனே எனக்கு கால் வந்து "ஹலே துபாயா" என்று பேசவேண்டியதாகிவிட்டது."ஹீ ஹீ மை ப்ரதர் மார்க்" என்று அந்தப் பெண்ணிடம் சமாதானம் சொல்லி முடிக்கும் போது அந்தப் பெண் ஐபோன் 5ஐ கையில் வைத்திருந்தாள். இந்த முறை விடுவதாயில்லை என்று கேலக்ஸி S3 ஐபோனைவிட எப்படி உசத்தி என்று பதினைந்து நிமிடம் போட்டு தாக்கி விட்டேன். அந்த பெண்ணும் பொறுமையாய் கேட்டுக்கொண்டு ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் வைத்துவிட்டார். ஹ..யாரு கிட்ட என்று எனக்குள் பெருமைபட்டிக்கொண்டிருக்கும் போது அந்தப் பெண் அசால்டாய் இன்னொரு பாண்ட் பாக்கெட்டிலிருந்து கேலக்ஸி S3ஐ எடுத்து அதில் அவருக்கு என்ன என்ன பிடிக்கவில்லை என்று பட்டியிலட ஆரம்பித்துவிட்டார்.

அப்புறம் என்க்கு வெறும் காத்து தான் வந்தது என்பதை விட முக்கியமான விஷயம்  - இப்போதெல்லாம் ப்ரதர் மார்க் துபாயிலிருந்து என்னை அழைப்பதே இல்லை.

Tuesday, January 01, 2013

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு ந‌ல்ல‌து வேண்டும்
நெருங்கின‌ பொருள் கைப்பட‌வேண்டும்
க‌ன‌வு மெய்ப்ப‌ட‌ வேண்டும்
கைவ‌ச‌ம் ஆவ‌து விரைவில் வேண்டும்
த‌ன‌மும் இன்ப‌மும் வேண்டும்
த‌ர‌ணியிலே பெருமை வேண்டும்!
க‌ண் திற‌ந்திட‌ வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்கவேண்டும்!
மண் ப‌ய‌னுற‌ வேண்டும்,
வான‌க‌ம் இங்கு தென்ப‌ட‌ வேண்டும்,
உண்மை நின்றிட வேண்டும்
ஓம், ஓம், ஓம், ஓம்!
 
 
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
தீபாவளி, புதுவருஷம்ன்னு தூர்தர்ஷன் சிறப்பு நிகழ்ச்சி மாதிரி நான் போஸ்ட் போடறது ஆகிடிச்சு, இந்த வருஷமாவது நிறைய போஸ்ட் போட அருள் புரிம்மா மகமாயி !!