Thursday, December 20, 2007

இவனுங்க திருந்தவே மாட்டானுங்க

டீ.வியில் "குரு" படம் ஓடிக்கொண்டிருந்தது. "நான் வணங்குகிறேன்...சபையிலே" - துணிப் பஞ்சத்தில் அடிப்பட்ட ஸ்ரீதேவி ஆடுகிற குத்தாட்டத்துக்கு என்னம்மோ பரதநாட்டியம் மாதிரி நடராஜர் சிலையெல்லாம் வைத்திருந்தார்கள். நடராஜர் கையில் இருக்கிற உடுக்கையை கீழே வைத்துவிட்டு கண்ணைப் பொத்திக்கொள்ளாமல், என்னை மாதிரி நைஸா ஜல்சா டேன்ஸ் பார்த்துக்கொண்டிருந்தார்.

சாய்பாபா மாதிரி முடியை வைத்துக்கொண்டு ஒரு வில்லன் ஜன்னலிலிருந்து துப்பாக்கியால் கமலை குறிவைத்துக் கொண்டிருந்தான். ஸ்ரீதேவி பூவெல்லாம் நடராஜர் மேல் போட.. நடராஜர் இப்பவும் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் கண்ணை பொத்திக் கொள்ளாமல் கவுண்டமணி மாதிரி "ஹ.. லெப்ட்ல பூசு ஹ...ரைட்டுல பூசு இங்க பார் இங்க பூசு"ன்னு போஸ் குடுத்துக் கொண்டிருந்தார்.

நடராஜரே கண்ணை முடிக்கவில்லை...இந்தப் படத்தை பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி பார்த்த போது நான் எதுக்காக கண்ணை மூடிக்கொண்டேன் என்று இப்ப வருத்தமாக இருந்தது.

"மாடியில குழந்தை குளிச்சிண்டு இருக்கா துண்டு எடுத்துக் குடுத்துட்டு வாங்க" அடுக்களையில் இருந்து குரல் வந்தது. அதானே...அதெல்லாம் கரெக்டாக மூக்கில வேர்த்திரும்.

ஸ்ரீதேவியைப் (இப்ப) பிடிக்காவிட்டாலும் பாட்டு நல்ல பாட்டே என்று கேட்டுக் கொண்டிருந்தேன். "ஒரு நிமிஷம் இரும்மா...நானே இங்க கணக்கு டேலியாகாம மணடைய பிச்சிக்கிட்டு இருக்கேன்.." என்ன கணக்குன்னு அடுத்து குடைச்சல் கேள்வி வராது என்ற நம்பிக்கையில் அடிச்சிவிட்டேன். மனுஷனுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை ரொம்ப முக்கியம்ன்னு சுவாமி சுகபோதானந்தா சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே கணக்கு குழப்பத்திலிருப்பவன் மாதிரி குரல் குடுத்ததால் இரண்டு நிமிடம் தாக்குப்பிடித்தது. ஆனால் இரண்டே நிமிடம் தான்...பாட்டு நாலரை நிமிடம். ஸ்ரீதேவி இன்னும் எனர்ஜி லெவெல் குறையாமல் ஆடிக்கொண்டிருந்தார். பாட்டும் நல்ல பாட்டு வேற.

"இப்ப என்ன கணக்கு?" வந்தே விட்டாள். பெண்களுக்கு பொறுமை இல்லை என்று எந்த மஹானுபாவர் கண்டுபிடித்தார்? கைக்கு கிடைத்த மகளின் ஹோம்வொர்க்கை கையில் திணித்து விட்டு..."எல்லாம் கரெக்டாக செஞ்சிருக்கான்னு பாரு...மேத்ஸ்ல இந்த தரம் எப்படியும் சென்டம் வாங்க வைச்சிரனும்...போன தரம் மாதிரி கோட்டை விட்டுரக்கூடாது என்ன.. அதான் டேலி பண்ணிகிட்டு இருக்கேன்...கவனமா எல்லாம் கரெக்டா இருக்கான்னு பாரு" துண்டெடுக்க நாலு கால் பாய்ச்சலில் மாடிக்கு போயேவிட்டேன். இல்லாவிட்டால் கணக்கு கணக்குன்னு ஸ்ரீதேவியக கணக்கு பண்றேன் என்று தவறாக அனர்த்தம் ஆகிவிடும் பாருங்கள் அதான்.

கிறுக்குப் பயலுங்க...இந்தப் படமெல்லாம் இப்பத் தான் போடுவானுங்க...ராத்திரி தேவுடு காத்திட்டு உட்கார்ந்திருந்தா "கும்பமேளா"ன்னு கஞ்சா அடிக்கிற சாமியார்களைப் பற்றி டாக்குமென்டரி போடுவானுங்க. இடியட் பாக்ஸுன்னு சும்மாவா பேருவைச்சிருக்காங்க.

"இங்க வா என்ன அவசரம்..?...பாரு தலையெல்லாம் இன்னும் ஈரமா இருக்கு...நல்ல துவட்டு ஜலதோஷம் பிடிச்சிக்கும்" - கீழே இந்நேரம் கண்டுபிடித்தாகியிருக்கும். உடனே போய் மாட்டிக்கிறதுக்கு நான் என்ன மெகா சீரியல் புருஷனா. "...என்ன துவட்டியிருக்க...நல்ல ஈரம் போகவேணாமா...அந்த ஹேர்டிரையர எடு...போட்டுவிடறேன்"

"சாப்பாடு ரெடி டயமாச்சு...கீழவாங்க ரெண்டு பேரும்" சவுண்டு விடறது எனக்குத் தான். வீரனுக்கு இதெல்லாம் அழகில்லை..."சரி வா கீழ போய் சாப்பிடலாம்"

"என்ன சாப்பாடு சாப்பிடற...? ஊர்ல எல்லாரும் தென்னாலிராமன் குதிரை வளர்த்த மாதிரி வளர்த்திருக்கான்னு சொல்றாங்க...இங்க வா நான் ஊட்டிவிடறேன்...என்ன சாதம் போட்டிருக்க குழந்தைக்கு...கூட கொஞ்சம் போடு " எதிராளி அடி போடறதுக்கு டயமே குடுக்கக் கூடாது நாம் முதல் அடி போட்டுறனும் புதுப்பேட்டையில் செல்வராகவன் சொல்லியிருக்கார்.

"நல்ல காய்கறியெல்லாம் சாப்பிடனும். அதான் ஹெல்தி. யோகா சொல்லித் தரேன் அப்பா புக்குல நிறைய படிச்சிருக்கேன்...முதல்ல பிரீதிங் எக்ஸர்சைஸ்...அப்புறம்..."

"இன்னும் கூட கிழியும் காது தடுக்கும்.." பாட்டு அடுக்களையிலிருந்து வந்தாலும் மெசேஜ் எனக்குத் தான். கண்டுக்கவே கூடாது. இருக்கானோ இல்லையோ ஸ்கீரினப் பார்த்து "என்கிட்ட வம்பு வைசுக்காதேன்னு..அப்புறம் அதாகிடுவ இதாகிடுவன்னு" ஹீரோக்கள்லாம் சவுண்டு குடுக்கற மாதிரி எதாவது உளறிக்கிட்டே இருக்கனும். இல்ல எதிராளி சுதாரிச்சிக்குவாங்க.

சானல் சிபிபீஸ்க்கு மாறியிருந்தது. டெலிடப்பீஸ் லூஸு மாதிரி கெக்கபிக்கன்னு சிரித்துக் கொண்டிருந்தது. சதிலீலாவதி எங்க சித்தப்பா பொண்ணு தான்னு பண்ற சதி இது. நாம சேனல திருப்பி மாத்தி நம்மை மறந்து பார்த்துகிட்டு இருப்போம்..வந்து கையும் கள்வுமா மாட்டலாம்ன்னு சதி. "எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்.." பாட்டு கூட நல்லா குன்ஸா தான் இருக்கும். பாட்டு ஆரம்பிச்சிருக்கும் இந்நேரம். மனுஷனுக்கு சகிப்புத் தன்மை ரொம்ப முக்கியம். பிரித்விராஜ் வரும் போது நாங்க இந்த அராஜகமா பண்றோம். இல்ல சித்தார்த் வரும் போது சேனல மாத்துரோமா? எக்கேடும் கெட்டுப் போறான்னு பக்கத்துல இருக்கிற ஜெனிலியாவை பார்த்துகிட்டே சகிப்புத் தன்மை காட்டலையா?

இதாவது பரவாயில்ல ...என்ன ரசனைப்பா...மனுஷனுக்கு ரசனை ரொம்ப முக்கியம். வயசான ஹாலிவுட் தாத்தாக்களையெல்லம் பார்த்து ஜொள்ளுவிட்டுக்கிட்டு....ஜார்ஜ் க்ளூனி, ஷான் கானெரி...ஏன் அவங்க தாத்தாவை ஏன் விட்டுட்டீங்க...? நாங்க மனோரமாவைப் பார்த்து ஜொள்ளு விடறோமா?..அப்பிடி ஒரு கபோதிய மட்டும் என் கண்ணுல காட்டச் சொல்லுங்க.......ரசனை..ரசனை..மனுஷனுக்கு...ரொம்ப முக்கியம்.

"என்ன முனுமுனுப்பு??...சேனல மாத்தனும் போல இருக்குமே...?"

"சே...சே...என் ரசனைய பத்தி என்ன நினைச்சிகிட்டு இருக்க?....உங்கள மாதிரியா ..ஏதோ சூர்யானா கூட ஒத்துக்கலாம்..."

"என்னிக்கு நீங்க சுற்றும் விழிச் சுடரேக்கு ஆடிக் காட்டினீங்களோ அன்னிக்கிலெர்ந்து எனக்கு அவன பிடிக்காம போயிடிச்சு..."

"ஹ...அதெல்லாம் இல்ல...நீங்களெல்லாம் ஓவரா வழிஞ்ச வழிசல்ல மவனே ஒற்றே படம்...அப்படியே ஓய்ஞ்சு போயிட்டான்...இப்ப பாரு விளக்கெண்ணை ஊத்தினா இப்படி எரியும் மண்னெண்ணை ஊத்தினா அப்பிடி எரியும்ன்னு பஸ்ஸடாண்டு பக்கம் பெட்டர்மாஸ்க் விளக்கு வைச்சு லேகியம் விக்கிறவன் மாதிரி டயலாக் பேசிக்கிட்டு திரியறான்".

"இங்க மட்டும் என்ன வாழுதாம்...மீரா ஜாஸ்மினாவது என்ன ஆச்சு?...மல்லிகா கபூர்...அந்த ஒரு படத்துக்கு அப்புறம் தமிழ்ல படத்தையே காணோம்..." இன்னும் பல பெயர்கள் வர ஆரம்பித்தன.

"மனுஷன் கொஞ்சம் நிம்மதியா சாப்பிடட்டுமா...காலைலேர்ந்து பசி உயிரப் போகுது..." வீரம்னா என்ன தெரியுமா பயப்படாத மாதிரி நடிக்கத் தெரிவது குருதிப்புனல்ல தலைவர் சொல்லியிருக்கார்.

ஆய்ஞ்சு ஓய்ஞ்சு கிடைச்ச கேப்ல ரிமோட உஷார் பண்ணி சேனல மாத்தினா....நம்பியார் குழல் புட்டு செய்யற கேனை கையில மாட்டிக்கிட்டு.."மைக் மைக்"ன்னு மைக்கே இல்லாம...பிளாக் அண்ட் ஒயிட் டீவியில சாய்பாபா வில்லன் கமலை காரில் துரத்துவதை பார்த்துக் கொண்டு ரன்னிங் கமெண்ட்ரி குடுத்துக்கிட்டு இருக்கார். கூட இருக்கிற நடிகை வேற ஓவரா ரியாக்ஷன் காட்டுது.

இனிமே சண்டைக் காட்சி தான். தூ இதெல்லாம் ஒரு படமான்னு டீ.வியை அணைத்துவிட்டேன். இவனுங்க திருந்தவே மாட்டனுங்க...

Tuesday, December 11, 2007

சேலஞ்ச் - நன்றி

என்னாடா சேலெஞ்ச்ன்னு சொல்லி ஓட்டெல்லாம் போடச்சொல்லிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் மாதிரி எஸ்ஸாகிட்டானேன்னு நினைச்சிருப்பீங்க. ஆபிஸ் வேலை பின்னுதுங்க. மெயில் கூட பார்க்கமுடியலை.அது ஒரு பக்கம் இருக்கட்டும், ஸ்கூல் எக்ஸாம்க்கு படிக்கும் போது ஒரு மாசத்துக்கு முன்னாடியே புல்ஸேக்ப் பேப்பர்ல தேதியெல்லாம் போட்டு படிக்கறதுக்கு பளானெலாம் போட்டு, அதையெல்லாம் நாளைக்கு நாளைக்குன்னு அப்பிடியே கேரி பார்வர்ட் செய்து, எக்ஸாமுக்கு முந்தின நாள் ராத்திரி படிக்க ஆரம்பித்து ஹாலுக்குள்ள போகும் வரை படித்து சில முக்கிய கொஸ்டின்களை சாய்ஸில் விட்டுக்கலாம்ன்னு நினைத்துப் போனால், நாம சாய்ஸ்ல விட்ட கேள்விகளெல்லாம் ஒரெ ஆப்ஷன் சாய்ஸில் வரும். அது மாதிரி நான் சாய்ஸில் போயிடும் என்று மசாலாவுக்காக சேர்த்த கஷ்டமான ரெண்டு ஆப்ஷன்களை அதிக வோட்டு போட்டு குடுத்திருக்கிறீர்கள். வோட்டு போட்ட அத்தனை சனத்துக்கும் கோடானு கோடி நன்றியைய்யா !!

இதெல்லாம் இந்த மூஞ்சிக்கு தேவையான்னு அனானி கமெண்ட் வரும் என்று நினைத்தேன். ஆனால் ஓட்டு போட்டு பழி வாங்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஏஞ்ஜலினா ஜோலி எந்த ஊரில் இருக்கிறார் என்பது கூட தெரியாது. பிராட் பிட் நடித்த ட்ராய் படம் பார்த்திருக்கிறேன். தொடையெல்லாம் கும்முன்னு காட்டிக்கொண்டு சண்டையில் பின்னிப் பெடலெடுப்பார். அதே உதறலாய் இருக்கிறது. கனவில் ஏஞ்ஜலினா ஜோலி வருவதை விட பிராட் பிட் தான் அதிகம் வருகிறார் (அவர் உதைப்பது மாதிரி கனவுய்யா...ஓ...அவனா நீயிய்யுன்னுலாம் கேக்காதீங்கப்பூ..என் கவலை எனக்கு :)).

படத்துல நடிக்கிறதப் பத்தி என்ன சொல்ல...அது எனக்கு தண்டனையா இல்ல உங்களுக்கு தண்டனையான்னு என்னால நிச்சியமா சொல்ல முடியலை :)) ஆடுமாடு அண்ணாச்சி உங்களத் தான் மலைபோல நம்பியிருக்கேன்...கைவிட்டுறாதீக...

ஏஞ்ஜலினா ஜோலி ஆப்ஷனுக்கு கள்ள வோட்டு போட்ட அருள் தவிர உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இந்த சேலஞ்சுகளை 2009 புதுவருட பிறப்புக்குள் செய்து முடிக்கப் பார்க்கிறேன். ஏஞ்ஜலினா அம்பாள் அருள் புரியட்டும்.