Tuesday, November 29, 2005

லவ் டுடே

அஷ்வினுக்கு ரொம்பவே எரிச்சலாக இருந்தது. ஒரு வாரமாக அவனுக்கும் திவ்யாவுக்கும் சண்டை. கொஞ்ச நாளாகவே ஒத்துப் போகவில்லை என்றாலும் நேற்று ரொம்பவே ஆகிவிட்டது.

"எல்லாம் அப்பாவைச் சொல்லனும் அவரால் தான் இப்பிடி அவசரப்பட்டு திவ்யாவை கல்யாணம் பண்ணிக்கொண்டேன். இல்லாவிட்டால் ப்ரீத்தியிடம் பேசிப் பார்த்திருக்கலாம் " அவனுக்கு நினைக்க நினைக்க பற்றிக் கொண்டு வந்தது. திவ்யாவுக்கு ரொம்ப பிடிவாதம் இருக்கிறது கூடவே திமிர் வேற...என்ன வேணா செய்யட்டும். ஆபிஸ் விஷயமாக என்று சொல்லி ஒருவாரம் வேறு மாகாணத்திற்கு வந்திருக்கிறான். ஹோட்டலில் வந்ததிலிருந்தே இதே நினைப்பாக இருந்தான்.

"நாளைக்குப் பொண்ணு பார்க்கப் போறோம்...பிடிச்சுதுன்னா நீ யூ.எஸ். திரும்பி போகறதுக்குள்ள கல்யாணம்"

அப்பாவின் பிடிவாதம் அவனுக்குப் புதிதல்ல என்றாலும் கல்யாண விஷயத்தில் இவ்வளவு அவசரப்படுத்தியது ரொம்பவே கோபம் அவனுக்கு.

கேரியர் கூரியர் என்று என்னல்லாமோ காரணம் சொன்னாலும் உண்மையான காரணம்...புதிதாக அப்போது தான் இன்டெர்னெட் சேட்டில் பிரண்டாகியிருக்கும் ப்ரீத்தி. இப்போது தான் நன்றாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள், எல்லா விஷயங்களும் அவர்களுக்குள் ஒத்துப் போகின்றன...பார்ததில்லையே தவிர ரொம்ப அழகாக இருப்பாள் என்று சொல்லியிருக்கிறாள். அவனுக்கு அவளை ரொம்ப பிடித்திருந்தது. ப்ரீத்தியிடம் இன்னும் சொல்லவில்லை ஆனாலும் மறைமுகமாக சொல்லிவைத்திருக்கிறான். அவளும் கோபிக்கவில்லை. அடிக்கடி சேட் செய்ய ஆரம்பித்திருந்தார்கள்.

அவளை நேரில் பார்க்கலாம் என்ற ஆசையில் ஊருக்கு வந்த நேரத்தில் அப்பா இப்பிடி குண்டைப் போடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. அப்பாவிடம் இன்டெர்நெட் சாட் என்று சொல்வதற்கெல்லாம் தைரியம் வரவில்லை. சரவண பவனில் டிபன் சாப்பிடுவதற்குப் பதிலா இங்க போய் சாப்பிட்டுவிட்டு பெண் பிடிக்கவில்லை என்று சொல்லவிட்டு வந்தால் போச்சு என்று தான் ஒத்துக்கொண்டான். ஆனால் திவ்யாவைப் பெண் பார்த்த போது அவள் அழகில் திணறிவிட்டான் என்று தான் சொல்லவேண்டும். நோ சொல்ல முடியவில்லை. தனியாக பேசிய போதும் மணிரத்னம் படத்தில் வருவது போல திக்கித் திக்கித் தான் பேசினான்.

"பிடிச்சிருக்காடா இல்ல அப்பாவுக்காக சொல்லறியா?" தாம் தூம்ன குத்தித்த பையனா இப்பிடி உடனே ஒத்துக்கொண்டான் - அம்மாவால் நம்பவே முடியவில்லை.

கல்யாணம் ஆகி யூஸ் கூட்டி வந்து ஹாலிவுட்டை சுத்திக் காட்டி, நயாக்ரா போய் போட்டோ எடுத்துக் கொண்டு, வெங்கடாசலபதி கோவிலில் வேஷ்டி கட்டிக் கொண்டு அர்சனை வைத்து, வால் மார்ட்டில் எப்பிடி புளி பருப்பு வாங்கவேண்டும் என்று சொல்லிக்கொடுத்து, டெலிபோன் கார்டு தந்திரங்கள் கற்றுக்கொடுத்து மோகம் முப்பது நாளுக்குப் பதிலாக அவர்களுக்குள் நாற்பத்தைந்து நாள் நீடித்தது.

திவ்யாவுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. பார்த்து பார்த்து சொல்லிக்குடுத்த அஷ்வினா இப்பிடி திடீரென்று மாறிவிட்டான். மாறிவிட்டானா இல்லை குணமே இது தான? எவ்வளவு நானும் பார்த்துப் பார்த்து செய்திருப்பேன்? முடியாமல் தோசையும் தக்காளிச் சட்னியும் செய்து குடுத்துவிட்டு ஆபிஸில் லிஸி முதற்கொண்டு எத்தனை பேருக்கு பிடித்தது? ராஜனுடைய அம்மா கூட கேள்விப்பட்டு கோவிலில் வைத்து "யூ.எஸில் தோசையெல்லாம் செய்கிறாளே உன் பெண்டாட்டி" என்று பாரட்டவில்லையா...ஆபிஸ் வேலையென்று சும்மா சொல்லிவிட்டு போகிறான். என்னை பிரிந்திருக்கவேண்டும் என்பது தான் அவன் நோக்கம். தெரியாதென்று நினைத்துக் கொண்டிருக்கிறான் போகட்டும் ஒரு வாரம் தொலையட்டும். பார்க்காமல் இருந்தால் தான் பெண்டாட்டி அருமை தெரியும்.

அவளுக்கு தாந்தான் எல்லாம் என்ற நினைப்பு. ஏர்போர்டில் இறங்கியதிலிருந்து பெக்க பெக்கவென முழித்துக் கொண்டிருந்தவளுக்கு எவ்வளவு சொல்லி குடுத்திருப்போம்? கார் ஓட்ட சொல்லிக்கொடுக்க எவ்வளவு சிரமப்பட்டிருப்பேன்? ஊரில் இல்லாத தோசையும் தக்காளிச் சட்னியும்...அம்மா இதை விட எவ்வளவு அருமையாகச் செய்வாள். ப்ரீத்தி கூட நல்ல சமைபாள் என்று சொல்லி இருக்கிறாளே அஷ்வினால் ப்ரீத்தியின் நினைவுகளை உதறமுடியவில்லை. எவ்வளவு நல்ல தோழியாக அனுசரனையாக இருந்தாள்.
"ஹாய் ப்ரீத்தி, நாந்தான், என்னடா இவ்வளவு நாள் ஆளக் காணோம் திடீரென்று மெயில் பண்ணறானேன்னு நினைகாத..நடுவில் என் வாழ்வில் நிறைய நிகழ்வுகள். எனக்கு திடிரென்று கல்யாணம் ஆகிவிட்டது. உடனே கங்கராட்ஸ் சொல்லாதே...கல்யாண வாழ்க்கை நான் நினைச்ச மாதிரி அவ்வளவு நல்ல போகல. கொஞ்சம் வருத்தமா இருக்கு உன்ன மிஸ் பண்ணிட்டேனோன்னு...என்ன செய்ய என் மனைவிக்கும் எனக்கும்..." ப்ரீத்திக்கு மெயில் அனுப்பிய பிறகு தான் அவனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

"....இருந்தாலும் கவலப்படாதே...எல்லாருக்கும் நினைச்ச மாதிரியா வாழ்க்கை அமையுது...நான் மேலே சொன்ன வழிமுறைகளை முயற்சி செஞ்சு பார்..நான் போன மெயிலில் சொன்ன மாதிரி என் வாழ்கைய பார்க்கும் போது உன் வாழ்க்கை அவ்வளவு மோசமில்லை என்று தான் தோன்றுகிறது. உன் வாழ்க்கை நல்ல படியா அமைய என் வாழ்த்துக்கள்" - கண்ணீரைத் துடைத்த படி பதிலை எழுதி முடித்தாள் ப்ரீத்தியாகிய திவ்யா தருணாகிய அஷ்வினுக்கு.

Friday, November 25, 2005

மலரினும் மெல்லிய...

வா..டா என் கழுத்தை வளைத்து - அதில்
முகத்தை நுழைத்து ஒரு தேடல் செய்

அன்று அந்தப் பாடல் கேட்டதிலிருந்தே அடிக்கடி முனுமுனுத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் மனதிற்குள் ஆசைதான். "உனக்கென்னடி கிளி மாதிரி இருக்க கொத்திக்கிட்டுப் போயிடுவான்" அத்தை சொல்லும் போதெல்லாம் "போ அத்தை உனக்குப் எப்பவும் இதே பேச்சு தான்" சும்மா ஒப்புக்குத் தான் சொல்லுவாள். உள்ளே மனதில் கனவுலகம் விரியும் அவளை அறியாமலே உதட்டின் ஓரத்தில் ஒரு மெல்லிய முறுவல் பூக்கும். "அடிக்கள்ளி எல்லாம் எனக்குத் தெரியும்டி நானும் உன்வயசக் கடந்து வந்தவ தான் " அத்தை விடமாட்டாள் வம்பு வளர்ப்பாள். இவளுக்கு இன்ப அவஸ்தையாக இருக்கும்.

அத்தையைவிட நிர்மலா அக்கா கொஞ்சம் பரவாயில்லை, கிண்டல் அடிப்பதோடு அவளும் ஜாலியாக சேர்ந்து கொள்வாள். "கஜினி சூர்யா மட்டும் சரி சொல்லட்டும்...இந்த ஆள இப்பிடியே விட்டுட்டு அவனோடு ஓடிப்போயிறுவேன். சிக்க மாட்டேங்கறானே..கடங்காரிங்க அம்புட்டு பேரும் அப்பிடியேல்ல போய் அப்புறாளுங்க "

சூர்யா லெவலுக்கெல்லாம் வேண்டாம் இவளைப் புரிந்து கொண்டு அன்பு அனுசரனையாக இருப்பவன் போதும் இவளுக்கு. நிறைய யோசித்து வைத்திருந்தாள். சனிக்கிழமையானால் நல்லெண்ணைய்யில் மிளகு போட்டு அவனுக்கு தேய்த்து குளிக்கச் சொல்லவேண்டும், குளித்து வந்தவுடன் காரமாக பூண்டு வத்தக்குழ்ம்பு வைத்துக்குடுக்க வேண்டும். சாய்ங்காலம் காலாற நடந்து, ராத்திரி அவன் தோளில் சாய்ந்து கொண்டு பாட்டு கேட்கவேண்டும்.

"ஆச்சாம்மா?" உள்ளேயிருந்து அத்தையின் குரல் தான்.

"இதோ இன்னும் பத்து நிமிஷம் ஆயிரும்"

"சீக்கிரம்மா கவிதா நேத்திக்கே வந்தா...நான் தான் இன்னிக்கு வரச் சொல்லியிருக்கேன்...புள்ளைய ஸ்கூலுல விட்டுட்டு வரேன்னு சொல்லியிருக்கா...அதுக்குள்ள முடிச்சுறும்மா"

அவளுக்கும் தெரியும் விரல்கள் வேகமாகப் பின்ன ஆரம்பித்தன. அழகாக சின்னக் கூடைகள் பின்னுவாள். வீட்டில் சும்மா இருக்கும் போது அது தான் அவளுக்கு பொழுது போக்கு. இதைக் கற்றுக் கொடுத்ததே கணேஷ் தான். நல்ல பையன். இவளுக்கு ரொம்ப பிடிக்கும். கற்றுக் கொடுக்கும் போது சில சமயம் கைகள் உரசிக் கொள்ளும். இவளுக்கு சிலிர்ப்பாக இருக்கும். ஆழ்மனதில் பத்திரமாக பூட்டி வைத்திருந்தாள் அந்த நினைவுகளை.

"ஏங்க..."

கணேஷ் தான். அதெப்பிடி கரெட்டாக சொல்லிவைத்த மாதிரி வந்தான்?

"பக்கத்து தெரு வரைக்கும் போயிட்டு வந்துறேன். அக்கா வந்தா சாவிய குடுத்திருங்க"

ஆயுசு நூறுடா உனக்கு. உன்னைக் கட்டிக் கொண்டால் நான் தீர்க சுமங்கலி தான்.

"ஏங்க சிரிக்கிறீங்க...?"

"...ம்..இல்லையே..சரி குடுத்திடறேன்"

நல்ல வேளை மேலும் நோண்டிக் கேட்கவில்லை..போய்விட்டான். முகம் காட்டிக்குடுத்திருக்கும். சிரிப்பை அடக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். இதுவே கல்யாணமாகியிருந்தால் இதுக்கெல்லாம்...

"என்னம்மா இன்னிக்கு என்னாச்சு இன்னும் முடியலையா? உடம்புக்கு எதாவது பண்ணுதா? நான் வேற குளிக்க வெந்நீர் போட்டிருக்கேன்..."

"இல்ல அத்தை ஆயாச்சு..உடம்புக்கெல்லாம் ஒன்னும் இல்ல..இந்தக் கத்திரிக்கோல எங்க வைச்சேன்னு தெரியல அதான் தேடிக்கிட்டு இருக்கேன்.." மெல்லக் கையை வைத்து துளாவ ஆரம்பித்தாள்.

"அது இங்க இருக்கும்மா...என் கால் பட்டிருக்கும் அதான் தள்ளி வந்து கிடக்கு...நீ குளிக்க போ...நான் முடிச்சுக்கிறேன்..."

அவள் மெல்ல சுவற்றைப் பிடித்துக்கொண்டு எழுந்து தன் குச்சியால் மெல்ல தட்டிக் கொண்டே குளியலறைக்குப் போகலானாள்...

வா..டா என் கழுத்தை...வளைத்து...அதில்

Thursday, November 24, 2005

லண்டனிலிருந்து கனடா வரை ஜொள்ளு....

உங்கள் வாய் முஹூர்த்தம் பலித்துவிட்டது. ஜொள்ளித் திரிந்த காலம் பேப்பரில் வந்து கொண்டிருக்கிறது. ஆமாம் கடந்த ஒரு மாத காலமாக வந்து கொண்டிருக்கிறது. எனக்கே நேற்று தான் தெரியும். நண்பர் பாஸ்கர் பாலனுக்கு சொல்லி என் கவனத்துக்கு வந்தது. பிரேமலதா "ஏங்க எங்கிட்ட சொல்லவே இல்லையே" என்று அங்காலாய்த பொழுது எனக்கும் அதே வருத்தம் தான் இருந்தது பேப்பர்காரர்கள் நம்மிடம் சொல்லவேஇல்லையே என்று. லண்டன் மற்றும் கனடாவில் வெளியாகும் "ஒரு பேப்பர்" (பேப்பர் பெயரே அதாங்க) என்ற லோக்கல் நியூஸ் பேப்பர் தான் சத்தம் போடாமல் வெளியிட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். தனியாக ஒரு செக்க்ஷன் குடுத்து தொடராக வந்து கொண்டிருக்கிறது.

எடிட்டரிடம் தொலைபேசியில் பேசினேன்...முதலில் இ.மெயில் அட்ரெஸ் கிடக்கவில்லை என்று ஜல்லியடித்தார். பின்னூட்டத்திலாவது தகவல் தெரிவித்திருக்கலாமே என்று மடக்கிய பிறகு சரியாக நாலரை முறை வருத்தம் தெரிவித்தார்.

"அடிக்கடி அனானிமஸ் பெயரில் சீக்கிரம் ஜொள்ளித் திரிந்த காலம் எழுதுங்கன்னு அவசரப்படுத்தியது நீங்கதானா " என்று கேட்டதற்கு சிரித்து சமாளித்துவிட்டார். இந்திய ஹைகமிஷன் பற்றியது மற்றும் பல பதிவுகளை வெளியிட்டிருப்பதாக நிறைய தகவல் சொன்னார். அட்ரெஸ்ஸை வாங்கிக் கொண்டு இதுவரை சுட்டு இட்ட பதிவுகளை தபாலில் அனுப்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார். (அனுப்பிருவீங்க தானே சார்?)

என்னம்மோ போங்க ஜொள்ளு விட்டது கனடா வரைக்கும் போய்க்கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் இந்தப் பேப்பர் சென்னை தோசாவிலும் இருக்கிறதாம். இத்தனை நாள் பார்க்கவே இல்லை.

பலசரக்கு கடையில் வேலை பார்ப்பவர் நன்றாகப் பேசுவார். அவரிடம் லேசாக சொன்னேன் (சொன்னாலாவது கூடக் கொஞ்சம் கறிவேப்பிலை தருவார் என்ற நம்பிக்கையில் தான்).

"யாரு நீங்களா?? பத்திரிக்கையிலயா"

"அட ஆமாங்க"

"என்னத்தப் பத்தி எழுதறீய?"

"...அது வந்து... ஜொள்ளுவிடறதப் பத்தி.."

"ஹா ஹா எது இந்தப் பொட்டப் புள்ளகளைப் பார்த்து இளிக்கறதையா...? சும்மா உடாதீங்க......உங்க பெயர் போட்டிருக்குமா..?"

"...போட்டிருக்கும்...ஆனா டுபுக்குன்னு போட்டுருப்பாங்க..."

"டுபுக்கா?..இதென்ன பெயரு? ..ம்ம்ம்ம் என்ன பேப்பர்ல வருது?"

"...அது வந்து "ஒரு பேப்பர்"..."

"...உங்கள மாதிரி இன்டெர்நெட் பார்க்கறதுக்கு எங்களுக்கு சம்பளம் குடுக்கறான்னு நினைச்சீங்களா...சும்மா வேலை நேரத்துல விளையாடாதீங்க..."

சொக்கா....சொக்கா....

"ஒரு பேப்பர்" லிங்க் இங்கே ஆரம்பித்து...இங்கே இங்கே இங்கே

Tuesday, November 22, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...12

For previous Parts -- >Part 1      Part 2     Part 3     Part 4    Part 5    Part 6    Part 7    Part 8    Part 9    Part 10    Part 11

காவியம் படைத்து விடவில்லை, ஆனாலும் என்னம்மோ பெரிய எழுத்தாளர் மாதிரி உங்களுக்கு நன்றி நவில்தலுடன் முடிவுரை எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. (உங்களுக்கு நன்றி சொல்லாட்டா அடுத்த ஜென்மத்துல ஒரு பெண்ணும் என்ன திரும்பி கூட பார்க்கமாட்டான்னு என்னமோ உள் மனசு சொல்லுது) ஜொள்ளித் திரிந்த காலம் எழுதுவதற்கு முன் கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஏற்கனவே நமக்கு ரொம்ப நல்ல பெயர், இதுல இதவேற எழுதலாமா என்று ஒரு குழப்பம். சொன்னால் நம்புவீர்களா தெரியவில்லை(நான் எதைச் சொல்லி நம்பியிருக்கிறீர்கள்?). இதை எழுத வேண்டும் என்று நினைத்து குமைந்து கொண்டிருந்தது நான்கு ஐந்து மாதங்களுக்கு முன்னால். முன்னுரை எழுதி தூங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள் எதோ ஜாலியான பாட்டைக் கேட்டுக் கொண்டே ட்ரெயினில் தூசி தட்டி முதல் பதிவையும் போட்டுவிட்டேன். நீங்கள் குடுத்த உற்சாகத்தைப் பார்த்த போது கொஞ்சம் மலைப்பாக இருந்தது ரொம்ப பில்டப் குடுத்துவிட்டேனோ என்று. ஏதோ சமாளித்து விட்டேன் என்று நினைக்கிறேன். சில பதிவுகள் நாளாச்சே போடவேண்டுமே என்று அவசரமாக எழுதியிருக்கிறேன் தரம் (??!!) குறைந்து இருக்கலாம். ஒரு பதிவில் நீங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய போது கண் திறப்பாக இருந்தது. அப்புறம் கொஞ்சம் கவனமாக இருந்தேன். மிக்க நன்றி. (இதில் எழுதி என்னம்மோ திருப்தி இல்லாமல் ஒரு பதிவை வேறு ஓரம் கட்டிவிட்டேன் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறது)

வூட்டுல நாள் ஜொள்ளுவிட்டத அடிக்கடி கேட்டாலும் லேசாகத் தான் சொல்லுவேன். ஒரு விஷயத்தை எப்பவோ சொல்லி இன்னமும் கிண்டல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதிலேர்ந்து உஷாராயிட்டேன். ஆனாலும் பதிவைப் படித்துவிட்டு குடை குடைன்னு குடையாம எதோ பொழச்சு போறான்னு விட்டுட்டாங்க( அப்பிடி தானே?.. இல்ல முடியட்டும்ன்னு மொத்தமா கேட்டுக்கலாம்னு காத்திருக்கீங்களா?) உங்களுக்கும் நன்றி. நன்றி எல்லாம் சொல்லியிருக்கேன் தங்கமாளிகை பில்ல பார்த்து போடுங்கம்மா எதோ புள்ளகுட்டிக்காரன்.

ரொம்ப ஜொள்ளுப் பார்டி இவன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் இருக்கனும்ன்னு உங்களில் நிறைய பேர் நினைத்து விடுவீர்களோ என்று வேறு உதறலாய் இருந்தது. ஆனால் நிறைய பேர் பெண்கள் பின்னூட்டத்திலும் மெயிலிலும் ஆதரவு அளித்த பின்பு தான் கொஞம் நிம்மதியாக இருந்தது. தீபாவளிப் பார்டியிலும் சகஜமாகப் பேசினீர்கள்.உங்களுக்கும் என் நன்றி.

என்னடா ஆம்பளைகளுக்கு நன்றி சொல்லலையேன்னு நினக்காதீங்க (புத்தியக் காட்டிட்டான்யா). பின்னூட்டத்தில் உற்சாகம் அளித்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.உங்களில் சிலபேர் யூ.எஸ்லிருந்து போன் பண்ணி வேறு உற்சாகம் அளித்தீர்கள். கோடானு கோடி நன்றியையா..

என்னடா பெயரைச் சொல்லாமல் தேர்தலில் ஜெயிச்சமாதிரி மொத்தமா அறிக்கை விடறானேன்னு நினைக்காதீங்க...நான் கெமிஸ்ட்ரியில கொஞ்சம் வீக் யார் பெயரையாவது விட்டுவிடுவேன் அதான்.

மொத்ததில் நிறைய நண்பர்களும் உற்சாகமும் கிடைத்திருக்கிறது. You all gave me excellent support. இந்த முயற்சியில் உங்களின் உதவியால் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். தெம்பாக இன்னும் எழுதுவேன் என்று நினைக்கிறேன். உங்கள் ஆசிர்வாதத்துடன் கூடிய சீக்கிரம் அடுத்த தொடரை ஆரம்பித்துவிடுவேன். (போச்சுடா..ஒரு பேச்சுக்கு சொன்னா.கிளம்பிட்டான்யா)

உங்கள் எல்லோருக்கும் மீண்டும் நன்றி நன்றி நன்றி!!

-இத்துடன் (அஃபீஷியலான) ஜொள்ளு முற்றும்.

Monday, November 21, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...11

For previous Parts -- >Part 1      Part 2     Part 3     Part 4    Part 5    Part 6    Part 7    Part 8    Part 9    Part 10

ஜொள்ளு விடுகிற குரங்குகள் பலவிதமான ஸ்ட்ரேடிஜி வைத்திருப்பார்கள். எனக்கு மிருதங்க ரவை எப்பிடி உபயோகமாக இருந்ததோ அது மாதிரி. நானெல்லாம் ஜுஜுபி. சில புத்திசாலி குரங்குகள் தாவறதும் குதிக்கிறதும் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். இப்பிடி தான் ஹாஸ்டல் என்றாலே திருட்டு பீர், தம், சரோஜாதேவி புத்தகங்கள் (தெரியாதவர்கள் விட்டுவிடவும் இதற்கு ஏன் இந்த கோட்வேர்ட் எனக்கும் தெரியாது) என்று மலிந்து கிடக்கும் இடத்தில் ஒரு குரங்கு மட்டும் சமத்தாக வாழ்க்கை ஜோஸியம், கைரேகை சாஸ்திரம் என்று குடைந்து கொண்டிருந்தது. அடுத்த யூத் பெஸ்டிவலில் அந்தக் குரங்கு ஜிகிடிகள் கையைப் பிடித்து ஜோஸியம் சொல்ல ஆரம்பித்துவிட்டது. அப்புறம் எல்லாக் குல்லாக் குரங்குகளும் கொஞ்ச நாளைக்கு கரேகை ஜோதிட பூஷணமாக அலைந்து கொண்டிருந்தார்கள். ஆனால் என்னதான் குதித்தாலும் தாவினாலும் "Survival for the fittest" தத்துவம் தான். அதுக்கப்புறம் என்ன தான் எண்ணைய தடவிக் கொண்டு மண்ணில் உருண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும்.

இப்பிடியாக நான் யூத் பெஸ்டிவல்களில் வாழ்க்கை கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்தில் எங்கள் காலேஜ் டீமில் ஒரு பெரிய யூத் பெஸ்டிவலுக்கு பெரிய டீமாக அனுப்ப முடிவு செய்தார்கள். அதற்காக ஆட்களை தேர்வு செய்ய ஒரு மீட்டிங் ஏற்பாடாகி இருந்தது. இந்த மீட்டிங்க்கு நம்மள விட்டா யாரு வரப்போறா என்ற தெனாவெட்டில் போன எங்க கோஷ்டிக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. உலக மகா அதிசயமாக அந்த கூட்டத்திற்கு கொஞ்சம் பெண்கள் வந்திருந்தார்கள். பி.ஜியிலிருந்து இரண்டு மூன்று சீனியர்களும் யு.ஜியிலிருந்து இரண்டு பேரும் வந்திருந்தார்கள். டீமெல்லாம் செலெக்டாகி பார்த்தால் டம்ப் சேரட்ஸ் டீமில் என்னுடன் ஒரு பி.ஜி. சீனியர். அன்றிலிருந்து அவர்கள் அக்காவாகி விட்டார்கள். டீம் ப்ராக்டீஸுக்கு அவர்களுடன் இன்னொரு அக்காவும் வருவார்கள். நாங்கள் அப்புறம் எல்லோரும் பாசமலர்களாகி விட்டதால் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் போய் வர ஆரம்பித்தோம். இப்பிடியாக நான் அந்த ப்ரெண்டு அக்கா வீடிற்கு போய் வந்த காலத்தில் தான் எனக்கு வாழ்கையில் முக்கியத் திருப்பம் ஏற்பட்டது. கடவுள் இவன் பிரம்மச்சாரியாக இருந்து ஜொள்ளு விட்டதெல்லாம் போதும் என்று முடிவு கட்டிய நேரமது.

அந்த அக்காவின் வீட்டில் ஓரளவுக்கு பழக்கமான போது தான் அந்தப் பெண் அறிமுகமானாள். அக்காவின் சித்தப்பா பெண். ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடு. உண்ட வீட்டிற்கு ரெண்டகம் நினைக்கும் பழக்கமில்லையாதலால் அந்தப் பெண்ணைப் பார்த்த போது எந்த விதமான எண்ணமும் உண்டாகவில்லை. அவர்கள் உறவினர் பையன் ஒருவன் மிருதங்கம் கற்றுக் கொண்டிருந்தான். என் மிருதங்கம் வார் கொஞ்சம் இழுத்துக் கட்ட வேண்டியிருந்ததால் அவனிடமிருந்து போட்டிகளுக்கு மிருதங்கம் கடன் வாங்கிக் கொள்வேன். இது போக அவர்கள் வீட்டில் வாசிக்க சொல்லி அங்கே வேறு அடிக்கடி கச்சேரி நடக்கும். கூட்டுக் குடும்பமாகையால் எல்லோரும் கூட்டமாக உட்கார்ந்து கேட்பார்கள். வாசித்து முடித்தால் தேங்காய் மூடிக்குப் பதிலாக "சபாஷ்" என்று சொல்லி தோசையும் புளிக்காத தயிரும் டிபன் கிடைக்கும். வெட்கப்பட்டுக் கொண்டே நாலு தோசையை சத்தம் போடாமல் சாப்பிட்டுவிட்டு வருவேன்.

நாளாக நாளாக எதோ மாற்றத்தை உணர முடிந்தது. இந்தப் பெண்ணின் அப்பா அம்மாவிற்கு என்னை மிகவும் பிடித்திருக்கிறது என்பதை உணர முடிந்தது. மிருதங்கம் வாசிக்காமலே சில நாள் தோசை டிபன் எல்லாம் கிடைக்கும். இந்தப் பெண்ணும் கொஞ்சம் துறுதுறுப்பாக உலாவிக் கொண்டிருக்கும். ஒரு நாள் வழக்கம் போல் அவர்கள் வீட்டில் (ஓசி) மிருதங்கக் கச்சேரி. ஊரிலிருந்து அத்தை வந்திருந்தார்கள் இதுபோக சமையல் எல்லாம் முடிந்து அவர்கள் வீட்டுப் பெண்கள் கூட்டம் வேறு. சும்மாவே நல்ல வாசிப்போம் இப்பிடி கோபியர் ரமணனாக பொம்மனாட்டிகள் படை சூழ வாசிக்க சொன்னா கேட்கவா வேண்டும். சிவாஜி சொல்கிற மாதிரி நாபிக் கமலத்திலேர்ந்து புறப்பட்டு சும்மா பிச்சு உதறிட்டேன். தனியாவர்தனம் வாசித்து முடிச்சாச்சு யாருக்கும் எழுந்து போக மனசில்லை. மிருதங்கம் வாசிச்ச புள்ளையாண்டனுக்கு பசிக்குமே சட்னியோடு தோசை வார்த்துப் போடலாமே என்று தோணாமல் "பாட்டோடு மிருதங்கம் வாசிச்சா நன்னா இருக்கும், அவளே பாடு இவளே பாடு" என்று ஏலம் நடந்து கொண்டிருந்தது. போடுகிற நாலு தோசைக்கு இதெல்லாம் கொஞ்சம் ஒவர் என்று இன்னிக்குத் தோன்றுகிறது, அன்னிக்குத் தோணலை, வயசு அப்பிடி. கடைசியில் இந்தப் பெண் நல்லாப் பாடுவாள் என்று இவளிடம் வந்து நின்றது. இந்தப் பெண்ணுக்கு கொஞ்சம் வெட்கம். பிகு பண்ணிக்கொண்டிருந்தாள். ஒரு பாட்டி சும்மா இருக்காமல் "ஏண்டியம்மா எதுக்குடி வெட்கம் அண்ணா மாதிரி தானே சும்மா பாடு " என்று கொளுத்தி போட்டுவிட்டார்.

இந்தப் பெண்ணுக்கு வந்ததே கோபம். "அண்ணான்னு சொன்னாலாம் பாட மாட்டேன்" என்று படக்கென்று எழுந்து போய்விட்டாள். எனக்கு தூக்கிவாரிப் போட்டுவிட்டது. உள்ளூர தேன் குடித்த மாதிரி இருந்தாலும் சபையில் விளக்கெண்ணய் குடித்த மாதிரி நெளிந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை அன்றைக்கு எல்லோரும் சீரியலில் வருவது மாதிரி சிரித்து சமாளித்துவிட்டார்கள். அப்புறம் அந்த அக்காவும் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இருந்தாலும் கொஞ்ச நாளைக்கு ரொம்ப நல்ல பையன் மாதிரி படம் போட்டுக் கொண்டிருந்தேன். அது நன்றாகவே வொர்க் அவுட் ஆகி எல்லோருக்கும் ரொம்பவே என்னைப் பிடித்து விட்டது அவர்கள் தெரு நாயைத் தவிர. மொசப் பிடிக்கிற மூஞ்சியை நாய்க்குப் பார்த்தால் தெரியாதோ என்னைப் பார்த்தாலே குரைக்கும். அப்புறம் ஊரில இல்லாத பாலிடிக்கெஸெல்லாம் பண்ணி பையன் சொக்கத் தஙகம், பெண் தங்கத்தில் பதித்த வைரமாக இருப்பாள் ஜோடி நன்றாக இருக்கும் என்று அவர்கள் வீட்டில் எல்லோரையும் நகைக்கடை சேட்டுகள் மாதிரி பேச வைத்துவிட்டேன். பெண்ணை விட அவ அப்பா அம்மாக்கு என் மேலெ லவ்வுஸ் ஜாஸ்தியாயிடுத்து.

ஆனால் எங்கள் வீட்டில் எனது அக்காக்கு என் லட்சணம் தெரியுமாகையால் முதலிலேயே கண்டுபிடித்துவிட்டாள். ஆனால் நான் சரணடர் ஆகி அவளுக்கும் இவளைப் பிடித்துவிட்டதாகையால் ஒன்றும் சொல்லவில்லை. கடைசியாக இவளை எங்கள் வீட்டிற்கு அப்பப்போ சும்மா வருகிற மாதிரி வரச் சொல்லி இவளும் வந்தாள். இவளைப் பார்த்தவுடனேயே எங்கள் வீட்டில் பிடித்துவிடும் என்று போட்ட கணக்கு தப்பவில்லை. கூடவே நானும் யாருக்கு என்ன பிடிக்குமென்று கொஞ்சம் சொல்லிக் கொடுத்திருந்தேனாகையால் விரைவிலேயே எங்கள் வீட்டிலும் எல்லோரும் "நகைக் கடை சேட்டுக்கள்"ளாகினர். அப்புறம் ஒரு சுபயோக சுபதினத்தில் எங்கள் வீட்டில் என்னிடம் "உனக்கு ஒரு பெண்ணைப் பார்த்திருக்கிறோம். உனக்கு பிடித்திருக்கிறதா என்று சொல்" என்று இந்தப் பெண்ணைக் கை காட்ட, நானும் "பெரியவர்கள் நீங்கள் பார்த்து எது செய்தாலும் சரி, எனக்குன்னு எந்த தனி அப்பிப்ராயமும் இல்லை நீங்க என்ன சொலறேளோ அதக் கேக்கறேன்" என்று சொல்ல அவர்களும் "புள்ளயாண்டன்னா இப்பிடினா இருக்கனும்"ன்னு சிலாகிக்க, அப்புறமென்ன டும் டும் டும் கொட்டி ஓடியே விட்டது ஆறு வருடங்கள்.

"ஹூம்...மிருதங்கம் வாசிச்சதுக்கு ஒத்த தேங்காய் மூடி குடுத்து அனுப்பாம தோசையும் போட்டு பொண்ண குடுத்தா பாருங்கோ...எல்லாம் விதி"

"ஹூம்...ஒத்த தேங்காய் மூடியே குடிதிருக்கலாம் சட்னி வைச்சு அடுத்தநாளோடு முடிஞ்சு போயிருக்கும்..."

"ஏன் சொல்லமாட்டேள்...நகை,பட்டுப்புடவை எல்லாம் சூப்பரா செலெக்ட் செய்யறேன்னு எல்லோரும் சொல்றா ஆனா வாழ்கையில முக்கியமான செலெக்க்ஷன்ல கோட்டைவிட்டுடேனே.."

"இதத் தான் Blessing in disguise-ம்பான் என்ன பண்றது ஐஸ்வர்யா ராயோட ஜாதகம் பொருந்தல அவளோட நஷ்டம் உனக்கு பேரதிர்ஷ்டமா அமைஞ்சிருக்கு..."

எல்லாப் புருஷன் பெண்டாட்டிகள் மாதிரியும் நாங்களும் ஊடல்களுக்கு நடுவே இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு சாதனைகள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்.


- அடுத்த பதிவோடு ஜொள்ளுவது நிறைவடையும்.

Tuesday, November 15, 2005

முல்தானி மெட்டி

போன தடவை இந்தியா போன போது கேள்விப் பட்டேன் என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு விளம்பரத்தில் வழக்கம் போல் ஒரு அழகான குட்டி பூப்போல சிரித்துக் கொண்டிருக்க பின்ணனியில் ஒரு கரகர மாமா அந்த சோப்பில் முலதானி மெட்டி இருப்பதால் தான் இந்தக் குட்டி இவ்வளவு சிகப்பாக இருப்பதாக அளந்து விட்டுக் கொண்டிருந்தார். பொதுவாக விளம்பரத்தில் சொல்வதை எல்லாம் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டேன். பாதாம், முந்திரி போட்டு அல்வா செய்தால் பேஷாக இருக்கும் இதையெல்லாம் சோப்பில் போட்டால்? சோப்பையா திங்க முடியும்?

அப்புறம் அடிக்கடி முல்தானி மெட்டி பெயர் டீ.வியில் அடிபட அப்பிடி என்னதான் இது என்று கொஞ்சம் ஆர்வம். வூட்டுல வேற இதுக்கு ஏகப்பட்ட ரெக்கமண்டேஷன்.

"முல்தானி மெட்டி ரொம்ப எஃபெக்டிவ்வா இருக்காம்...என் ப்ரெண்டு சொன்னா...மேனிக்குப் பொலிவு கூடுதாம்..."

தோழிகள் சொன்னாலே கொஞ்சம் விவகாரமாகத் தான் இருக்கும். தோழி சொன்னா கோழி சொன்னா...என்று டீ டிகாஷன், காய்ந்த ஆரஞ்சு தோல், முட்டை கரு என்று ஒரு விவஸ்தையே இல்லாமல் எல்லாவற்றையும் கலக்கு கலக்கி தலைக்கு கொஞ்ச நாள் தேய்த்துக் கொண்டிருந்தாள். அந்தக் கலவை பார்ப்பதற்கே ஒரு மாதிரியாக இருக்கும் கப்பு தாங்காது. அதை தேய்த்துக் குளித்துவிட்டு நாத்ததைப் போக்குவதற்கே ஒரு பாட்டில் ஷாம்பு காலியாகிவிடும். நமக்கு ஷாம்பு காலியாகற ரேட்டைப் பார்த்தே கவலையில் கூட கொஞ்சம் முடி வளர்ந்தது.

ஆனால் முல்தானி மெட்டி வடகிந்திய சினிமா நடிகை மாதிரி பெயரே அம்சமாக இருந்ததால் கொஞ்சம் அசந்துவிட்டேன். இதுமாதிரி எது வாங்குவதாக இருந்தாலும் என் மனைவியிடம் ஒரு ப்ரமாஸ்திரம் ஒன்று இருக்கும். "நீங்க கூட யூஸ் பண்ணி பார்க்கலாம்...உங்க முகமும் பளபளப்பாகிவிடும்". அடுத்த தரம் ஊருக்குப் போகும் போது வாங்குவோம்ன்னு சொல்லி வைத்திருந்தேன்.

இந்த முறை இங்குள்ள சூப்பர் மார்க்கெட் டெஸ்கோவிற்கு போன் போது அதை கண்கொத்திப் பாம்பாக கண்டுபிடித்துவிட்டாள். அவ்வளவு பெரிய கடையில் இத மாதிரி சமாச்சாரங்களை பெண்களால் மட்டும் தான் கண்டு பிடிக்கமுடியும்.இந்தியாவிலிருந்து வந்திருந்தது. ஒன்னும் சாக்கு சொல்ல முடியவில்லை. திரும்பவும் "நீங்களும் வேணா.." பாட்டு பாடி ஒன்றுக்கு மூன்று பாக்கெட்டுக்கள் வாங்கியாச்சு.

உன்னால் முடியும் தம்பிக்கு இதெல்லாம் தேவையில்லை என்றாலும்...தீபாவளி பார்டி வருகிறதே..போட்டோ வேறு ப்ளாக்கில் போடுவோமே...கஜினி வேற வெளிவந்துவிட்டதே..மனுஷனுக்கு ஆயிரம் கவலை இருக்காதோ.

"அந்த முல்தானி மெட்டியைக் கொண்டுவா போட்டு பார்ப்போம்..." பந்தாவா சொன்னாலும்...மைசூர்ல இருக்கறவர்களெல்லாம் மைசூர் போண்டோ பண்ண முடியுமா? அம்மா தாயே பாட்டு பாடி மனைவியே போட்டு விட்டார். அசையாமல் அப்பிடியே அரைமணி நேரம் உட்கார வைத்துவிட்டார். முகம் கழுவி கண்ணாடியில் பார்த்த போது அழகுக்கு அழகு சேர்த்த மாதிரி தான் இருந்தது. ஏற்கனவே பொலிவான முகத்தில் கூடக் கொஞ்சம் பொலிவு கூடின மாதிரி தான் இருந்தது.

"சூப்பர் நல்லாத் தான் இருக்கு " என்று பாக்கெட்டில் இருந்த ஒரு துண்டு சீட்டை படித்த போது தூக்கிவாரிப் போட்டது. முல்தானி மெட்டி என்பது ராஜஸ்தானிலிருந்தோ வேற எங்கிருந்தோ வந்த சலிக்கப்பட்ட களிமண் என்று தெளிவாக போட்டிருந்தது.

அடப் பாவிங்களா...ஏற்கனவே மண்டயில தான் களிமண்ன்னு பார்த்தா..இப்பிடி மூஞ்சியிலயும் களிமண்ணப் பூசிட்டீங்களேடா...அப்போ பொலிவு கூடினதா தோணினதெல்லாம் பிரம்மையா...அதானே...ஏற்கனவே களையான முகம் என்பதால் ஏமாந்துவிட்டேன் என்று தோன்றியது.

அதோடு என்னுடைய முலதானி மெட்டி சகவாசம் முடிந்தது. வூட்டுல மட்டும் இன்னமும் ஓடிக் கொண்டு இருக்கிறது.

இப்போவெல்லாம் எதையும் குப்பையில் போடுவதற்கு முன்னால் இது உபயோகப் படுமா என்று மனைவியிடம் கேட்டுவிட்டுத் தான் குப்பையில் போடுகிறேன்.

Friday, November 11, 2005

லண்டன் இந்திய ஹைகமிஷன் ஒரு வெட்கக் கேடு!

இன்று பாஸ்போர்ட் விஷயமாக இந்திய ஹைகமிஷனுக்குப் போக வேண்டி இருந்தது. இதற்கு முன்னமே இரண்டு தடவை போயிருக்கிறேன். சந்தையில் நுழைந்தது மாதிரி தான் இருந்தது. நிலமை இன்னும் மோசமாகியிருக்கிறது. தீபாவளிக்கு சென்னை ரங்கநாதன் தெருவிற்கு போன மாதிரி இருந்தது. முதலில் வெளியில் டோக்கன் வாங்க வேண்டும். ஒரு நாளைக்கு நூறு டோக்கன் தான் த்ருவார்கள். அங்கே பொறுமையாக க்யூவில் நின்று கொண்டிருக்கும் போதே..ஏஜன்ட் என்று சொல்லிக்கொண்டு நாலு சிங் மாமாக்கள் க்யூவையெல்லாம் மதிக்கவே இல்லை. அங்கேயே எனக்கு சாமி ஏறிவிட்டது. ஒரு ஆட்டம் ஆடி டோக்கனை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தால் எள் போட்டால் கீழே விழாத அளவு நெருக்கியடித்துக் கொண்டு கூட்டம்.

ஒருத்தருக்காவது எதற்கு எங்கே நிற்க வேண்டும் என்று தெரியவில்லை. டோக்கன் நம்பர் எல்லாம் விசாவிற்கு வந்திருப்பவர்களுக்குத் தானாம். பாஸ்போர்ட்டுக்கு உம்மாச்சியை வேண்டிக் கொண்டு குலுக்கல் முறையில் ஒரு க்யூவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு நிற்க வேண்டும். கிளம்பும் போது நல்ல வேளையில் கிளம்பி இருந்தால் கரெக்டாக போய்விடலாம். இல்லாவிட்டால் பாதியிலேயே உள்ளே கவுண்டரில் இருப்பவர் தண்ணி குடிக்கவோ, மூச்சா போகவோ எழுந்து போய்விடுவார். அப்புறம் தேவுடா தேவுடா தான். விசா குத்தி பாஸ்போர்ட் வாங்குவதற்கும் ஒரு கவுண்டரில் சுரத்தே இல்லாமல் சின்னதாக ஏலம் போடுவார்கள். நீங்கள் சித்த நேரம் பராக்க பார்த்துக் கொண்டிருந்தீர்களானால் போச்சு திரும்ப கேட்டு அவர் குடுப்பதற்குள் விசா காலாவதியாகிவிடும்.

எங்கேயும் தெரிகிறமாதிரி ஒரு அறிவிப்புப் பலகை இல்லை. கிட்டப் போனால் நெஞ்சில் குத்திக் கொண்டிருப்பது மாதிரி குட்டியா ஒரு நேம் போர்டு. இருக்கிற கூட்டதில் யானைக்கு எலிக் கோமணத்தை கட்டிய மாதிரி இருக்கு. போர்டு இருக்கிறது என்று சொன்னால் தான் தெரியும்.

வேறு நாட்டு தூதரகத்திற்கெல்லாம் போனால் செக்யூரிட்டி கார்டிடம் கூட அதிர்ந்து பேச முடியாது. இங்கே ஷேர் மார்க்கெட் மாதிரி எல்லாருமே கூவி கூவித் தான் பேசவேண்டும். பாஸ்போர்ட்க்கு வெளியிலே டோக்கன் வாங்கிவிட்டோம் என்று தெனாவெட்டில் இருந்தால் ரப்பரால் அழித்துவிடுங்கள். இங்கே ஒரு க்யூ நிற்கும் அதில் நின்று தான் போகவேண்டும். அப்போ எதற்கு டோக்கன்? என்று தொலைத்து விட்டீர்களானால் க்யூவில் உங்கள் முறை வரும் போது அதை கண்டிப்பாக கேட்பார்கள். இல்லையென்றால் "ர்ர்ர்ர்ரிப்பீட்டு".

வெட்கக் கேடு ஒரு வழிமுறையே இல்லை. ஹை கமிஷனர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை ரூமில் உட்கார்ந்து கொண்டு என்னை மாதிரி ப்ளாக் அடித்துக் கொண்டிருக்கிறாரோ என்னமோ. இதை விட முருகன் இட்லி கடையில் அழகாக டோக்கன் குடுத்து நடத்துகிறார்கள் என்று கேள்விப் பட்டேன். வயிறு பற்றிக் கொண்டு எரிகிறது வெளிநாட்டில் வெளிநாட்டினர்களுக்கு மத்தியிலா இப்பிடி மானம் போகவேண்டும்? இந்தியாவைப் பற்றி தெரியாமல் முதன் முறையாக இங்கு வருபவர்களுக்கு இப்பிடியா அறிமுகம் கிடைக்க வேண்டும்? திரு.அப்துல் கலாமிற்கு தான் எழுத வேண்டும். எந்த முகவரிக்கு எழுத என்று உங்களுக்குத் தெரியுமா? லண்டனில் மட்டும் தான் இப்பிடியா இல்லை மற்ற இடங்களிலும் இப்பிடியா என்று தெரியவில்லை.

Tuesday, November 08, 2005

சில முக்கிய முடிவுகள்...

முடிவு - 1

இன்றிலிருந்து "தமிழ் டுபுக்கு" பக்கத்திற்கு பூட்டு போட்டுவிடலாம் என்றிருக்கிறேன். ஒரே பதிவை இரண்டு தியேட்டரில் ஓட்டுவதை விட இரண்டு பெண்டாட்டிக்காரன் பாடு தேவலாம். இதில் பின்னூட்டம் இடுபவர்கள் வேறு அங்கு இட்டுவிட்டு இங்கு வந்து காணவில்லை என்று என்னைத் திட்டுகிறார்கள். தமிழ் டுபுக்கில் அப்பிடி ஒன்னும் பின்னூட்டங்கள் பிச்சுக் கொண்டு போகவில்லை. இப்போவோ அப்போவோ ஒன்னு ரெண்டு பின்னூட்டங்கள் தான் வருகின்றன. ஆகவே தமிழ் டுபுக்கு பக்கத்தை புக் மார்க் செய்திருப்பவர்களை Dubukkuக்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன். தமிழ்மணத்தில் விபரங்களை கூடிய சீக்கிரம் அப்டேட் செய்கிறேன்.


முடிவு - 2

நானும் மிகவும் பொறுமையாக இருந்து பார்த்துவிட்டேன். பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறதல்லவா? "உன்னால் முடியும் தம்பி" என்று நான் சொல்லிக்கொள்வது நிறைய பேருக்குப் பொறுக்கவில்லை (முக்கியமாக பெண்களுக்கு) . ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். ஒன்று என்னை "உன்னால் முடியும் தம்பி" என்று ஒத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் நான் என் பெயர் அடைமொழியை "சஞ்சய் ராமசாமி" என்று மாற்றிக் கொள்வதாய் இருக்கிறேன். சீக்கிரம் யோசித்து ஒரு நல்ல முடிவைச் சொல்லுங்கள். இந்த இரண்டு பெயரில் எதுவானாலும் எனக்குச் சம்மதம். வேறு பெயர்களையெல்லாம் சொல்லதீர்கள் சொல்லிப்புட்டேன் ஆமா.

Monday, November 07, 2005

தருவியா தரமாட்டியா

தருவியா தரமாட்டியா - தரலேன்னா
உன் பேச்சுக் கா
பம்பரம் நான் விடப்போறேன் - உன்
பாவாடை நாடாவைத் தருவியா

ஆழ்ந்த சிந்தனை, அற்புதமான கருத்துக்கள், ஐய்யப் பாட்டை அகற்றும் அற்புதமான பாடல்...ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிச்சா இப்பிடி தான் பாட்டு வரும். அடிச்சிகறதுக்கு ஆயிரம் கை போதாது. அதுவும் சரத்குமாரும் நமீதாவும் போடும் ஆட்டம் சகிக்கலை. நமீதா நாளுக்கு நாள் சைடு வாக்கில் வளர்ந்து கொண்டிருக்கிறார். இப்போவே ஹீரோக்களெல்லாம் நமீதாவை தூக்கிக் கொண்டு பாட்டுப் பாட எக்ஸ்டிரா பேட்டா கேட்கிறார்களென்று கேள்விப் பட்டேன்....என்னவோ பார்த்துக்கோம்மா அப்புறம் இந்த அண்ணா சொல்லலையேன்னு சொல்லாதே!

Wednesday, November 02, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...10

For previous Parts -- >Part 1      Part 2     Part 3     Part 4    Part 5    Part 6    Part 7    Part 8    Part 9

லிஸ்டில் இருந்த இரண்டு பராசக்திகளை ஏற்கனவே தெரியும். தெரியுமென்றால்..எனக்கு அஸினைத் தெரியும்ங்கற மாதிரி. ரெண்டு மூனு யூத் பெஸ்டிவல்களில் பார்த்திருக்கிறேன் பேசிப் பழக்கம் கிடையாது. காலேஜில் எங்க க்ளாசில் விஷயம் பரவியிட்டிருந்தது. விழா இரண்டு நாட்கள் தொடர்ந்து என்பதால் பையன்கள் வருவதாக சொல்லியிருந்தார்கள்.

"டேய் நீபாட்டுக்கு ஒரு ஓரமா உட்கார்ந்து வாசி..வேணாம்ங்கல ஆனா நாங்க வந்திருக்கற ஜிகிடிகள கவனிக்கணும் அதனால நீ வாசிக்கறத உட்கார்ந்து பார்க்கணும்னு எதிர்பார்க்காத எங்கிருந்தாலும் எங்க கைத்தட்டு உனக்குத் தான்" - அவர்களைச் சொல்லி குற்றமில்லை அவர்கள் வயசு அப்பிடி.

விழா ஆரம்பிப்பதற்கு முந்தின நாள் மாலையே வரச் சொல்லியிருந்தார்கள். என்ன சட்டை போட்டுக் கொள்வது, முடியை எப்பிடி சிலுப்பி வாரிக் கொள்வது, விபூதி இட்டுக்கொண்டு போனால் பழம் என்று நினைத்துவிடுவார்களோ, எப்பிடி அறிமுகப் படுத்திக் கொள்ளலாம் என்று எல்லாமே குழப்பமாக இருந்தது. அதுவும் பெண்கள் மெஜாரிட்டி உள்ள டீமில் வேறு இருக்கிறோம்...அதனாலேயே பயங்கர டென்ஷன். சொந்த மிருதங்கம் வார் இழுத்துக் கட்டவேண்டியிருந்ததால் வேறு ஒரு முக்கியமான இடத்தில்(எந்த இடமென்று வரும் பதிவுகளில் தெரியும்) கடன் வாங்கிக் கொண்டு ஒரு மார்க்கமாகப் போய்ச் சேர்ந்தேன். சென்னை தவிர மொத்த தமிழ்நாட்டுப் பல்கலைகழகங்களிலிருந்தும் குழுமியிருந்தார்கள். நான் கடைசி ஆளாகப் போய்சேர்வதற்குள் திருநெல்வேலிப் பசங்கள் பராசக்திகளிடம் அன்யோன்யமாகியிருந்தார்கள்.

வரி வாங்கப் போன ஜாக்ஸன் துரை மாதிரி "எங்கு வந்தாய் எதற்கு வந்தாய்" ரீதியில் தான் பசங்களிடம் வரவேற்பு இருந்தது. நமக்கு இந்தக் கழிசடைகளைப் பற்றி என்ன கவலை. பராசக்தி ஜிகிடிகள கடைக் கண் காட்டினால் போறாதோ? குலுக்கல் முறையில் ஒரு அதிர்ஷ்டசாலி ஜிகிடியைத் தேர்ந்தெடுத்து நைசாக நூல் விட்டேன். ஜொள்ளாண்டவர் கருணையே கருணை அந்த ஜிகிடி எனது அடுத்த வீட்டு நண்பியின் சினேகிதியாம். இது போறாதா...கருணைக் கதாட்சம் அமோகமாய் இருந்தது. லோகச் ஷேமத்தைப் பற்றி ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தோம். திருநெல்வேலி நண்பர்களுக்கு முதலில் இஞ்சி தின்ற மாதிரி இருந்தது. அப்புறம் போகப் போக எல்லாருமே எல்லோருடன் பேசி பழக்கமாகிவிட்டதால் நல்லதொரு பல்லகலைக்கழகம் குடும்பமானது. என்னென்ன போட்டிகளில் யார் யார் கல்ந்துகொள்வது என்ன பாட்டு பாடுவது டான்ஸ் ஆடுவது என்று அன்றிரவு விடிய விடிய விவாதித்தோம். மொத்தத்தில் ஒரு டீமாக பெரும்பாலான போட்டிகளிலும் கலந்துகொள்ள எங்களைத் தயார் செய்துகொண்டோம். மிருதங்கம், டோலக்கு, டிரம்ஸ் என்று எனக்கு சொத்து பிரித்துக் குடுத்துவிட்டார்கள். இது போல மற்றவர்களுக்கும். டான்ஸ் மட்டும் பராசக்திகள் ஹோல்சேலில் எடுத்துக்கொண்டார்கள்.

பாட்டுக்கும் டான்ஸுக்கும் நான் தான் வாத்தியம் வாசித்தேன். பயிற்சியில் அவர்கள் ஆடும் போது ராஜா பட்ங்களில் வருவது மாதிரி "சபாஷ் சரியான் போட்டி" என்று தனியாளாக தொடையைத் தட்டிக் கொண்டு ரசிப்பதற்க்கு முந்திய ஜென்மத்த்து குடுப்பினை வேண்டும். "இல்லியே இங்க தாளம் தப்பறதே" என்று அங்கங்கே விஷயம் தெரிந்த மாதிரி பந்தா விட்டுக் கொள்வேன். ஜிகிடிகளும் எனக்கென்னவோ எல்லாம் தெரியும்ங்கற மாதிரி "இப்போ சரியா இருக்கா..." என்று திரும்ப பாடியோ ஆடியோ காட்டுவார்கள். கூட இருந்த திருநெல்வேலி பிரகஸ்பதிகளுக்கு வயத்தெரிச்சல் சொல்லி மாளாது. ஆனால் ஒன்று இவ்வளவு அன்யோன்யமாக பழகும் போது மனதில் கல்மிஷம் எல்லாம் ஓடிப் போய்விடும் எனக்கும் அப்பிடி தான் என்று சொன்னால் நீங்களும் நம்பப் போவதில்லை என் மனைவியும் நம்பப் போவதில்லை. எனக்கு இந்தப் பெண்ணை ரொம்ப நல்லாத் தெரியும்ங்கற வெத்து பந்தாக் கேஸ் தான் நான் அப்போதெல்லாம் (இப்போ அதுவும் இல்லாத பரம சாது :) ).

அடுத்த நாள் விழாவிற்கு எங்கள் கல்லூரியிலிருந்து வானரப் படை வந்திறங்கியது. நான் பராசக்தி ஜிகிடிகளோடு அன்யோன்யமாக இருப்பதை அவர்கள் பார்க்க வேண்டுமே என்று எனக்கு கவலை. இந்த மாதிரி விஷயங்களில் தெரியாதவர்களின் வயத்தெரிச்சலை விட தெரிந்தவர்கள் வயத்தெரிச்சலைப் பார்ப்பதே ஒரு தனி ஆனந்தம் பாருங்கள். சங்கராபரணம் மாதிரி ஜிகிடிகள் டான்ஸ் ஆட நான் மட்டும் மிருதங்கம் வாசிக்கும் சுபலக்னத்தில் ஒரு பையனை விட்டு எல்லாரையும் கூட்டி வரச் செய்தேன். கிளம்பிய வயத்தெரிச்சலில் ஒரு ஊரே உலை வைக்கலாம்.

"டேய் எல்லாம் கரெக்டா இருக்கா...எதாவது வேணுமா...ரவையெல்லாம் இருக்கா..நான் வேணா மிருதங்கத்த கொண்டு வரட்டுமா...எதாவது ஹெல்ப் வேணும்னா கூச்சப் படாம கேளு. நம்ம காலேஜ் மானத்த காபாத்திரனும் என்ன" - எங்க டீமில் ஜிகிடிகள் இருந்ததால் காலேஜ் வானரங்கள் கூச்சமே இல்லாமல் பல்டி அடித்ததுகள்.

டீமில் ஜிகிடிகள் இருந்த்தால் மற்ற டீம் ஜிகிடிகளும் சகஜமாக பழகினார்கள். ரவை உப்புமா செய்வதற்கு மட்டுமில்லாமல் மிருதங்கம் வாசிக்கவும் பயன்படும் என்று நிறைய ஜிகிடிகளுக்கு க்ளாஸ் எடுத்தேன். ஜெயச்சந்திரன் ஸ்டோர்ஸ் மாதிரி எதை எடுப்பது எதை விடுவது என்று தெரியாமல் திரும்பிய பக்கமெல்லாம் கடலை சாகுபடி தான்.

போட்டிகளில் பட்டையைக் கிளப்பினோம். பெரும்பாலான போட்டிகளில் வென்று கேடயத்தையும் கைப்பற்றினோம். லோக்கல் யுனிவர்ஸிட்டி, பராசக்தி ஜிகிடிகள் என்பதால் சப்போர்ட்டுக்கு கேட்கவே வேண்டாம். எனக்கு தங்க முலாமில் பூசிய வெள்ளிப் பதக்கம் கிடைத்தது - கடலை போட்டதற்கு அல்ல மிருந்தங்கம் வாசித்தற்கு.

நான் தாளம் வாசிக்க பராசக்தி ஜிகிடிகள் நடனம் ஆடிய விஷயம் போட்டோவுடன் தினமலரில் வந்தது காலேஜில் என்னுடைய பராக்கிரமத்தை பரப்ப உதவியது. அதற்கப்புறம் கடலைப் பருவம் மாறி வாழ்க்கையில் முக்கியத் திருப்பங்கள் நிகழ்ந்தன.


--இன்னும் ஜொள்ளுவேன்