Wednesday, October 12, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...8

For previous Parts -- >Part 1      Part 2     Part 3     Part 4    Part 5    Part 6    Part 7

கல்லூரி நாட்கள் பெரும்பாலும் எல்லோருக்குமே இனிமையாகத் தான் இருந்திருக்கவேண்டும். எனக்கும் தான். அதிலும் கல்லூரி நாட்களில் "யூத் பெஸ்டிவல்" என்று அழைக்கப்படும் கலை நிகழ்சிகள் நிறைந்த விழாக்களின் பெயரால் அடித்த கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமில்லை. அட்டென்டன்ஸ் விழுந்துவிடும் என்பதால் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னாலேயே பயிற்சி என்ற பெயரிலே வால்தனத்தை ஆரம்பித்துவிடுவோம். நான் பள்ளிக் காலங்களிலிருந்தே பேச்சுப் போட்டி, மிருதங்கம், டம்ப் சேரட்ஸ், அந்தப் போட்டி, இந்தப் போட்டி என்று கோட்டி பிடித்து அலைந்து கொண்டிருப்பேன். எல்லாக் கல்லூரிகளிலும் இந்த மாதிரி போட்டிகளுக்குப் போவதற்கென்றே ஒரு டீம் இருக்கும். நான் முதல் வருடம் படித்த போது எங்கள் கல்லூரியில் அந்த மாதிரி ஒருத்தரும் இல்லை. பேச்சுப் போட்டி பொறுப்பை மட்டும் ஒரு ஆசிரியர் பார்த்துக் கொண்டிருந்தார். அவரை நச்சரித்துப் புடுங்கி ஸ்பான்சர்ஷிப்பை பேச்சுப் போட்டியிலிருந்து மெதுவாக மிருதங்கப் போட்டிகளுக்கும் விஸ்தரிப்பு செய்தேன். ஆனாலும் நான் மிருதங்கத்தை சுமந்து கொண்டு வந்தால்
"வந்துட்டியா வா..என்னடா காணோமே பார்த்தேன். இன்னிக்கு எங்கப்பா கொட்டடிக்கப் போற?" என்று எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்குகிற ரீதியில் தான் பேசுவார். கொஞ்ச நாளில் பொறுப்பு இன்னோர் சங்கீத ஞானம் நிறைந்த வாத்தியார் கையில் போயிற்று. அவர் கொஞ்சம் பரவாயில்லை. கலைத்துறையில் உறுப்பினராய் இருந்ததால் போட்டிகளுக்கு போவதற்கு நிறைய ஊக்குவிப்பார். ஆனால் அவரிடம் இம்சைகள் வேறு விதமாய் இருக்கும்.

"தம்பி இன்னிக்கு நம்ம பெருமாள் கோவில்ல எனக்குத் தெரிஞ்ச ஒரு அம்மா பாட்டுப் பாடறாங்க நல்ல பாடுவாங்க...மிருதங்கம் வாசிக்க ஒரு ஆள் வேணும்ன்னு கேட்டாங்க...நான் தான் நீயிருக்கன்னு சொல்லியிருக்கேன்...சாயங்காலம் வீட்டுக்குப் போயிடாத என்ன ..". மனுஷன் உசிர விட்டு வாசிச்சா கடைசியில் ரெண்டு தேங்காய் மூடியும், லொளு லொளு பழமும் தருவார்கள். கூடக் கொஞ்சம் சுண்டல் கிடைக்கும். மாமியிடம் தேங்காய் மூடியைக் கொடுத்தால் அடுத்தநாள் இட்லிக்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி கிடைக்கும்.

இந்த தேங்காய் மூடிக் கச்சேரி அடிக்கடி நடக்காதென்பதால் பொறுத்துக் கொள்வேன். முதலில் யூத் பெஸ்டிவல்களுக்குத் தனியாக போய்க்கொண்டிருந்தேன். எல்லா யூத்பெஸ்டிவல்களிலும் கல்லூரிகளிலும் வரவேற்பதற்கும், ரெஜிஸ்டிரேஷனுக்கும் இருப்பதிலே நன்றாக இருக்கும் மூன்று பெண்களும் அவர்களிடம் கடலை போட்டவண்ணம் இரண்டு ஆண்களும் இருப்பார்கள். இவர்கள் தான் பெயர் சரி பார்த்து, பதிந்து, தங்கும் வசதிகள் பற்றி சொல்லி, அடையாள அட்டை வழங்குவார்கள். பதிவு செய்யும் போது அந்தப் பெண்களிடம் கூட இரண்டு வார்த்தை பேசிவிட்டால் அவ்வளவு தான், கூட இருக்கும் கடலைப் பார்ட்டிகளுக்குப் பொறுக்காது. நான் தனியாக போகும் காலத்தில் இவர்களிடம் ரொம்ப வைத்துக்கொள்ள மாட்டேன். ஓரமாக உட்கார்ந்து கண்ணோடு கான்பதெல்லாமோடு சரி.

இந்தப் பிரச்சனைக்காகவே கல்லூரியில் மெதுவாக யூத் பெஸ்டிவலின் அருமை பெருமைகளைச் சொல்லி ஒரு கலைக் கூட்டத்தைச் சேர்த்தேன். பெரிய கூட்டமெல்லாம் இல்லை மிஞ்சி மிஞ்சிப் போனால் மொத்தம் ஐந்து பேர் இருப்போம். ஒருத்தன் நன்றாகப் பரதநாட்டியம் ஆடுவான். ஒருத்தன் நன்றாக படம் வரைவான். மத்த ரெண்டு பேரும் உப்புக்குச் சப்பாணி கேஸ். சும்மா எதாவது ஒரு போட்டி என்ற பெயரில் வரும் பறவைகளை வாய் பார்க்க வருவார்கள். இந்த போட்டிகளுக்கெல்லாம் திருச்சி வரையிலும் உள்ள கல்லூரிகளில் இருந்து வருவார்கள். நல்ல வேளை மெட்ராஸில் இருந்து வர மாட்டார்கள். வரும் கூட்டத்தின் பந்தாவைப் பற்றி கேட்கவே வேண்டாம். எல்லாரும் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து இப்போது தான் தமிழ்நாட்டுக்கு முதன் முதலில் வருவது மாதிரி தாங்க முடியாமல் இருக்கும். எங்கள் ஐவர் குழுவிற்கு ஃபேஷன் என்றால் வெத்தலபாக்கு வைத்து குடுக்கும் பேஸனைத்(தட்டு) தவிர எதுவும் தெரியாது. அதுவும் மிருதங்கத்தை முதுகில் சுமந்து கொண்டு ரெஜிஸ்டிரேஷனுக்கு போனாலே "கரகாட்டக்காரன்" ராமராஜன் கும்பல் வந்த மாதிரி தான் லுக்குவிடுவார்கள். இருந்தாலும் இதுக்கெல்லாம் அசர மாட்டோம். ஆனால் இந்த கிடார் வைத்திருக்கும் பையன்களின் அலம்பல் தாங்கமுடியாது. சேர்ந்தாப்புல நாலு பெண்கள் வந்தால் போதும் உடனே மரத்தடியில் கடையை விரித்து வாசிக்க ஆரம்பித்து விடுவார்கள். நின்று கொண்டுவாசிப்பான், முட்டி போட்டுக்கொண்டு வாசிப்பான், தலையை சிலுப்பி விட்டுக் கொண்டு வாசிப்பான், ஆடிக் கொண்டே வாசிப்பான் - சேட்டை தாங்க முடியாது.

நானும் ஒருதரம் தில்லானா மோகனாம்பாள் டி.எஸ்.பாலைய்யா மாதிரி மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டு உசிர விட்டு வாசிச்சு பார்த்தேன்...ம்ஹூம் ஒன்னும் தேறல. இருக்கற பெண்கள் கூட்டமெல்லாம் கிட்டார் மரத்தடியில் தான் கூடியது. அப்புறம் நானும் ஒரு கிட்டார் பையனை ப்ரெண்டு பிடித்து அவன் கிடார் வாசிக்கும் போது கிடார் பையை கடன் வாங்கிக் கொண்டு, வெறும் பையை தோளில் மாட்டிக் கொண்டு கிழக்கயும் மேற்கயும் அலைந்து பொண்ணுகளிடம் கடலை தேற்றுவேன். வெறும் கிடார் பையை வைத்துக் கொண்டே அவனோட கடலை சாகுபடியை நான் கெடுக்கிறேன் என்று கடுப்பாகி அந்தப் பையன் அப்புறம் கிடார் பையைக் கடன் குடுப்பதை நிப்பாட்டி விட்டான்.

மிருதங்கம் வாசிப்பதற்கு சில விஷயங்கள் இருக்கிறது. இதை "கொட்டு" என்று யாரவது சொன்னால் எனக்கு கொஞ்சம் கோபம் வரும். மண்டையில் கொட்டிவிடுவேன். மிருதங்கத்தின் இடது கைப் பக்கத்தில் ரவையை (உப்புமா செய்வார்களே அதே சூஜி தான்) தண்ணியில் நனைத்து கோந்து மாதிரி உருட்டி ஒட்ட வேண்டும். இது வாசிப்பதற்கு முன்னால் தான் செய்யவேண்டும். ரொம்ப முன்னாடியே ஒட்டிவிட்டாலோ , பதமாக இல்லாவிட்டாலோ சத்தம் நன்றாக இருக்காது. இதற்காகவே வறுக்காத ரவையை ஒரு சின்ன டப்பாவில் எடுத்துக் கொண்டு போக வேண்டும். ஒரு முறை இந்த ரவை டப்பாவை மறந்து விட்டுப் போய்விட்டேன். போட்டி ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னால் தான் கவனித்தேன். ரவைக்கு எங்கு போவது? இன்னிக்கு கோவிந்தா தான் என்று நினைத்தேன். போட்டியில் பெயர்களை ஒரு அழகான கண்ணாடி போட்ட கிளி மைக்கில் அறிவித்துக்கொண்டிருந்தது. மிருதங்கத்தை முதுகில் தூக்கிக் கொண்டு நேர அவளிடம் போய் நின்றேன்.
"இன்னும் போட்டி ஆரம்பிக்கவில்லை...நான்...உங்கள் பெயரை கூப்பிட்டதுக்கப்புறம் நீங்க வந்தாப்.."
"இல்ல கொஞ்சம் வறுக்காத ரவை கிடைக்குமா?..."
"..."


--இன்னும் ஜொள்ளுவேன்



No comments:

Post a Comment

Related Posts